‘ஷாப்பிங்’ செய்ய ரங்கநாதன் தெருவிலும், டவுன்ஹால் ரோட்டிலும் லோலோவென்று அலைந்துக்கொண்டிருந்த தமிழர்கள், இப்போது குஷியாக மால்மாலாக திரிகிறார்கள்.
சமீபத்தில் சென்னையில் துவக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய மால் அது. சுமார் இருபத்தைந்து லட்சம் சதுர அடி பரப்பில், சென்னை மாநகருக்குள் ஒரு குட்டி ஹைடெக்நகரமாக உருவாகியிருக்கிறது. சாதாரண துணிக்கடையில் தொடங்கி, ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை ஒரே வளாகத்தில் அமைந்து இருக்கிறது. திருவிழா போல ஜெகஜ்ஜோதியாக அந்த மால் அமைந்திருக்கும் பகுதியே ஜொலிக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, அங்கே ஏதோ மாநாடு நடப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு இம்மாதிரி காட்சி அபூர்வம். பண்டிகைக் காலங்களில் ஒவ்வொரு நகரின் ஏதோ ஒரு தெருதான் பரபரப்படையும். அத்தெருவில் வரிசையாக கடைகள் இருக்கும். ஒவ்வொரு கடையாக ஏறி, இறங்கி நமக்குத் தேவையானதை, திருப்திப்படும் விலையில் கறாராக பேரம் பேசி வாங்குவோம்.
அந்த காலம் மலையேறிவிட்டது. நுகர்வுக் கலாச்சாரத்தின் செல்லப் பிள்ளையாக நகரங்கள் தோறும் மால்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. இந்திய நகரங்களில் நவீன அரண்மனைகளின் வடிவத்தில் புதுசு புதுசாக ஏராளமான மால், கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் –அதே நேரம் பர்ஸை பலமாக பதம் பார்க்கும் நோக்கிலும்- உருவாகிக்கொண்டே இருக்கின்றன. தமிழகத்தில் பெருநகரமான சென்னையை தாண்டி கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை என்று அடுத்தடுத்த மட்டத்தில் இருக்கும் நகரங்களிலும் மால் கலாச்சாரம் பரவி வருகிறது.
ஒரே கூரையின் கீழ் சூரியனுக்கு கீழே இருக்கும் எல்லாமே கிடைக்குமென்ற நம்பிக்கையை மால்கள் உருவாக்குகின்றன. அயல்நாட்டு செண்ட் பாட்டிலில் தொடங்கி, மதுரை மல்லிவரை மாலில் வாங்கலாம். marketing for all என்கிற வார்த்தையே mall என்று சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. விற்பனையை வெறும் வியாபாரமாக அணுகாமல் வாடிக்கையாளர்களுக்கு பொழுதுபோக்கு பாணியில் வழங்குவதுதான் மால்களின் அடிப்படை ஐடியா. இதனால்தான் மால் அனுபவத்தை shoppertainment என்கிற புதிய கலைச்சொல்லை உருவாக்கி குறிப்பிடுகிறார்கள்.
தினம் தினம் பல லட்சம் பேர் மால்களில் குவிகிறார்கள். பல்லாயிரம் கோடிகளில் பணம் புரளுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே சுமார் நூற்றி இருபதுக்கும் புதிய மால்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் கிட்டத்தட்ட நாற்பது மால்கள் மூடுவிழா கண்டிருக்கின்றன என்பதுதான் இங்கே கவனித்தக்க அம்சம்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நகரில் ஆங்காங்கே இயங்கும் கடைகளில் தெருத்தெருவாக ஏறி இறங்கி, மூட்டுவலியால் அவதிப்படும் தங்கள் வாடிக்கையாளர்களை கண்டு கண்ணீர் விட்டு கதறிய வியாபாரிகள் கண்ட தீர்வுதான் ‘மால்’. ஒரே வளாகத்தில் எல்லா கடைகளும் என்கிற இந்த ‘ஐடியா’வுக்கு வயது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள். ரோம் நகரில் கி.பி. நூறாம் ஆண்டு வாக்கில் திறக்கப்பட்ட ‘டிராஜன்ஸ் சந்தை’தான் உலகின் பழமையான மால். ஒரே கட்டிடத்தில் என்றில்லாமல் பக்கத்து, பக்கத்து தெருக்களை இணைத்து ஒரே ஷாப்பிங் வளாகமாய் (நம்மூர் பர்மா பஜார் மாதிரி) உலகெங்கும் நிறைய உருவாகியிருக்கின்றன. இஸ்தான்புல் சந்தை (58 தெருக்களை இணைத்து சுமார் 4000 கடைகள்), பத்து கிலோ மீட்டருக்கு நீளும் டெஹ்ரானின் சந்தை என்று நூற்றாண்டுகள் கண்ட மால்கள் நிறைய உண்டு.
பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில்தான் மழையோ, வெயிலோ படாமல் பாதுகாப்பான ஷாப்பிங் வசதியை உருவாக்கும் எண்ணம் வணிகர்களுக்கு வலுத்தது. பாரிஸ் நகரில் 1628ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மார்ச்சே தே என்பேண்ட் ரோஹ்ஸ், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் நகரில் 1774ல் இயங்கத் துவங்கிய ஆக்ஸ்போர்ட் கவர்ட் மார்க்கெட் போன்ற மால்கள் இன்னும்கூட சேவையை தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 1785ல் துவக்கப்பட்ட கோஸ்தினி த்வார் மால்தான் இன்றைய மால்களின் வடிவத்துக்கு முன்னோடியாக அமைந்தது.
ஸ்பென்ஸர் & கம்பெனி நிறுவனம், சென்னையில் சுமார் எண்பது தனித்தனி பிரிவுக்கடைகளை ஒன்று சேர்த்து, இந்தியாவின் முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோராக துவக்கிய ஸ்பென்ஸர் பிளாஸாதான் நம் நாட்டின் முதல் மால் ஆக கருதப்படுகிறது (1895). தொடங்கப்பட்ட காலத்தில் தெற்காசியாவின் பெரிய ஷாப்பிங் மால் ஆகவும் இதுவே இருந்தது. 1990ல் புனரமைக்கப்பட்டு துவக்கப்பட்ட ஸ்பென்சர் ப்ளாஸா அன்றையக் காலத்தில் சென்னை நகரில் தரிசித்தே தீரவேண்டிய தலமாக இருந்தது.
“படிக்கும் காலத்தில் ஊரைவிட்டு வந்து சென்னையில் தங்கியிருந்தேன். தொண்ணூறுகளின் ஸ்பென்ஸர் பிளாஸா, அல்ஸா மால் போன்றவைதான் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வாரயிறுதிகளின் வேடந்தாங்கல். பெரும்பாலும் வேடிக்கைதான். மாதத்துக்கு ஒரு முறை டீஷர்ட் மாதிரி ஏதாவது வாங்கினால் அபூர்வம். ஒவ்வொரு முறை இந்த மால்களுக்குள் நுழையும்போதும் கண்களை விரித்துக்கொண்டு ஆச்சரியமாக ஆசை ஆசையாக சுற்றுவேன்.
இன்றைய சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியை எல்லாம் பார்க்கும்போது இருபது வருடங்களுக்கு முன்பு நான் கண்டு ஆச்சரியப்பட்ட மால்கள் எல்லாம் மால்தானா அல்லது பெட்டிக்கடைகளா என்று சந்தேகம் வருகிறது. ஷாப்பிங் கட்டமைப்பு, வசதிகள் விஷயத்தில் நாம் மிகக்குறுகிய ஆண்டுகளிலேயே பலநூறு மடங்கு முன்னேறியிருக்கிறோம்” என்கிறார் டெல்லியில் நிம்பஸ் நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரியும் ரவீந்திரன்.
கட்டமைப்பு விஷயமெல்லாம் ஓக்கேதான். ஆனால் உண்மையிலேயே மால்கள் நம் நாட்டில் வெற்றி அடைந்திருக்கிறதா என்றால் சந்தேகம்தான். நெரிசலற்ற பார்க்கிங், முழுக்க குளிர்சாதனம், எஸ்கலேட்டர் வசதி, விழாக்கள் நடத்துவதற்குரிய வளாகம், திரையரங்குகள், டிபார்ட்மெண்ட் கடைகள், அழகு நிலையம், ஆடை விற்பனை அங்காடிகள், வீடியோ கேம்ஸ், உணவகங்கள் என்றெல்லாம் பொழுதுபோக்கையும், ஷாப்பிங்கையும் இணைத்து திட்டமிடுபவர்கள், இதை நடைமுறைக்கு கொண்டுவரும்போது செயல்பாட்டில் கோட்டை விட்டு விடுகிறார்கள். அவர்கள் எதிர்ப்பார்க்கும் விதமாக ‘கலர்ஃபுல் காம்பினேஷனில்’ கடைகள் அமைவதில்லை. ஒரு எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைக்கு, அடுத்து பெண்களின் உள்ளாடை விற்கும் கடை என்பதுமாதிரி எகனைமொகனையாய் அமைந்துவிடுகிறது.
எப்படியாவது துண்டு போட்டு பெரிய மால்களில் இடம்பெற்றுவிடும் சில்லறை விற்பனையாளர்கள் போதுமான விற்பனை செய்யமுடியாமல் அல்லாடுகிறார்கள். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இண்டர்நேஷனல் பிராண்ட் அந்தஸ்துடைய பொருட்களையே வாங்க விரும்புகிறார்கள். இவற்றை விற்கும் ஏற்கனவே பிரபலமாகிவிட்ட பெரிய நிறுவனங்களோடு சரிக்கு சமமாக வளர்ந்துவரும் சிறிய நிறுவனங்களும் போட்டியிட வேண்டியிருக்கிறது. மட்டுமில்லாமல் மால்களில் இயங்கி கிடைக்கும் லாபத்தில் 25 முதல் 35 சதவிகிதம் வரை, இங்கே இருப்பதற்காகவே செலவிட வேண்டியிருக்கிறது என்பது சில்லறை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு பெரிய சுமையாக இருக்கிறது.
சென்னையில் தனியாக கட்டிடம் கட்டி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு சில்லறை விற்பனை நிறுவனம், ஆசை ஆசையாக பிரும்மாண்டமாக கட்டப்பட்ட ஒரு மாலில் இடம்பெற்று குடியேறினார்கள். “எங்களது வழக்கமான வாடிக்கையாளர்களை இழந்துவிட்டோம். பெரிய இடத்தில் வியாபாரம் செய்வதால், விலையை கூட்டி விற்கிறோமோ என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்கள்” என்று அந்நிறுவனத்தின் நிர்வாகி நம்மிடம் கூறினார்.
வாரயிறுதிகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் மால்களில் கூடுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் ‘ஷாப்பிங்’ செய்வதைவிட உணவருந்தவும், பொழுதுபோக்கவும்தான் விரும்புகிறார்கள். சினிமா திரையரங்கங்கள் இடம்பெற்றிருக்கும் மால்களிலேயே கூட்டம் அதிகமாக இருப்பதை நாம் கவனிக்கலாம். ஆனால் அந்த கூட்டமும் குறையத் தொடங்கியிருக்கிறது என்கிறார் சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞர் ரமேஷ்.
“மல்ட்டிப்ளக்சுகளிலேயே இவ்வசதிகள் வந்துவிட்டது. வசதியான சூழலை அனுபவிக்க மாலுக்கு வருபவர்கள் மைனாரிட்டிதான். மற்ற திரையரங்குகளில் டிக்கெட் கிடைக்காத பட்சத்திலேயே மால்களில் இருக்கும் திரையரங்குகளுக்கு கூட்டம் சேருகிறது. ஆனால் திரையரங்குகளில் இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய்தான் பார்க்கிங் கட்டணம். மால்களுக்கு வந்துவிட்டால் மூன்று மணி நேரத்துக்கு 50 ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறது. வாரயிறுதிகளில் இன்னும் கூடுதல் கட்டணம். கார் பார்க்கிங்கெல்லாம் கொள்ளை. படம் பார்க்க டிக்கெட்டுக்கு செலவிடும் காசையே பார்க்கிங்குக்கும் செலவிட வேண்டுமானால் எப்படி? எனவேதான் ஆரம்பத்தில் மால்களில் சினிமா பார்க்க இருந்த ஜோர் இப்போது குறைந்துவருகிறது” என்று லாஜிக்கலாக பேசுகிறார் ரமேஷ்.
ஏற்கனவே மால்களுக்கு வந்தவர்களை திரும்பத் திரும்ப வரவைப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. ஆனால் அம்மாதிரி திரும்ப வரவைக்கவிடாமல் பார்க்கிங் கட்டணம் பயமுறுத்துகிறது. பொழுதுபோக்கு, உணவு, சினிமா, பேஷன் ஆகிய நான்கும்தான் மால்களின் வெற்றிக்கான கச்சிதமான ஃபார்முலா. இவை சரியான விகிதத்தில் கலந்திருக்கும் மால்கள் மக்களை கவரவே செய்கின்றன. சென்னையில் இருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூக்கு சராசரியாக 70,000 பேர்வரை தினமும் வருகிறார்கள். ஆனால் மால்களுக்கு வருகிற கூட்டத்தை எதையாவது வாங்கச் செய்வது எப்படி என்கிற ரகசியம் புரியாமல்தான் விற்பனையாளர்கள் மண்டையை குழப்பிக் கொள்கிறார்கள்.
மால்களுக்கு வந்துவிட்டு வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு செல்வதை ‘விண்டோ ஷாப்பிங்’ என்கிறார்கள். இதுதான் மால்களின் வெற்றிக்கு அச்சுறுத்தலான விஷயம். “ஷாப்பிங் மால்களுக்கு ஷாப்பிங் பண்ணதான் வரணும்னு இல்லை. வீட்டுலே போர் அடிச்சாலே வந்துடலாம். சும்மா கொஞ்ச நேரம் கடைகளை வேடிக்கை பார்த்துட்டு, டைம்பாஸ் பண்ணலாம். வேணும்னா எதுவாச்சும் சாப்பிட்டுட்டு போகலாம். எதுவும் வாங்கலேன்னு நம்பளை யாராவது போலிஸ்லேயா புடிச்சி கொடுக்கப் போறாங்க?” என்று நக்கலாக கேட்கிறார் சேலத்தை சேர்ந்த சுபாஷ். இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த சமீபத்தில் ரம்ஜான் பண்டிகை நேரத்தில் அகமதாபாத் மால் ஒன்றில், உள்ளே நுழையவே நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறார்கள் என்றதுமே வழக்கமாக வரும் கூட்டமும் கூட சிதறி ஓடியதுதான் மிச்சம்.
மெட்ரோ நகரங்களை தவிர்த்து அடுத்தக்கட்ட நகரங்களிலும் மால்கள் நிறைய திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றுக்கு வரும் கூட்டத்தின் எண்ணிக்கை படுமோசம். மதுரையின் பெரிய மாலான விஷால்-டி-மால் இரண்டரை லட்சம் சதுர அடியில், ஐந்து தளங்களோடு பிரும்மாண்டமாக திறக்கப்பட்டது. வாரநாட்களில் தினத்துக்கு சராசரியாக 500 பேரும், வாரயிறுதிகளில் 800 பேரும்தான் வருகிறார்கள் என்று அங்கே கடை வைத்திருக்கும் ஒருவர் கூறுகிறார். இங்கே ஐனாக்ஸ் தியேட்டர் திரைகள் திறக்க அரசு அனுமதிக்கு காத்திருக்கிறார்கள். ஒருவேளை தியேட்டர் திறந்தபின் கூட்டம் வரலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
“பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க இளைஞர்கள் வருகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடுகிறது. ஆனால் பொருள் வாங்குவது குறைவுதான். அடிக்கடி வர ஆரம்பிப்பவர்கள் வாங்க தொடங்குவார்கள் என்று நம்புகிறோம். அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்” என்கிறார் இந்த மாலின் பொதுமேலாளரான செந்தில்குமார்.
பெங்களூரை சேர்ந்த ஏசியாபேக் என்கிற நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, நாட்டில் நாற்பது சதவிகித மால்கள் வெற்றிகரமாகவே இயங்குகின்றன. பெரிய மால்கள் உடனடியாக வெற்றி காண்பது சாத்தியமில்லை. ஆனால் அடுத்த சில வருடங்களில் ‘மால் ஷாப்பிங்’ சொகுசை அனுபவிப்பவர்களால் இந்த கலாச்சாரம் பெருகும் என்று நம்பலாம்.
2005-06 ஆண்டுகளில் உத்தேசிக்கப்பட்ட மால்களே இப்போது ஆங்காங்கே துவக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதியதாக மால்களை உருவாக்க யாரும் இப்போது திட்டமிடுவதில்லை. ஏற்கனவே திறக்கப்பட்ட மால்களில் கூட கடைகள் காலியாகவே இருப்பதால், அதை குடியிருப்பாகவும், அலுவலகத்தேவைக்காகவும் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போதைய தேக்கநிலைக்கு நாட்டின் பொருளாதார மந்தநிலையும் ஒரு காரணம். தவிர்த்து சில்லறை விற்பனை முறைகளில் நாம் இன்னும் புதியதொழில்நுட்பங்களுக்கு மாறாத நிலையும் பிரதான காரணம். நம் மக்கள்தொகை மற்றும் இன்றைய நகரமயமாக்கல் வளர்ச்சியை கணக்கிடும்போது இந்தியாவில் இரண்டாயிரம் மால்கள் வரை இயங்க முடியும். சில்லறை விற்பனையில் அந்நிய முதலீடு குறித்த மத்திய அரசின் சமீபத்திய கொள்கை முடிவு, மந்தமாகிவிட்ட மால் கலாச்சாரத்தை சரிக்கட்டிவிடும் என்றொரு நம்பிக்கை உருவாகியிருக்கிறது.
இப்போதைக்கு கொஞ்சம் பணம் வைத்திருப்பவர்கள் வசதியாக ‘ஷாப்பிங்’ செய்ய மால்களை நாடுகிறார்கள். நடுத்தர வர்க்கம் ‘விண்டோ ஷாப்பிங்’குக்காக மால்களில் குவிகிறார்கள். ஏழைகள் அண்ணாந்து பார்த்துக்கொண்டே பெருமூச்சு விடுகிறார்கள். இந்த நிலை மாறினால்தான் மால்கள் வாழமுடியும். இதற்கு மால் நடத்துபவர்களும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அயல்நாடுகளில் மால்கள் எப்படி இயக்கப்படுகின்றனவோ, அதே முறையை அப்படியே இங்கும் காப்பி & பேஸ்ட் செய்யக்கூடாது. நம் மண்ணுக்கேற்ற முறையில் சில மாற்றங்களை சிந்திக்க வேண்டும். வேடிக்கை பார்க்கவரும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணமான விற்பனைமுறைகளை விற்பனையாளர்கள் முயற்சிக்க வேண்டும். பார்க்கிங் கொள்ளை கட்டணத்தை நிறுத்த வேண்டும். இதெல்லாம் நடக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை நாமும் ‘விண்டோ ஷாப்பிங்’ செய்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
ஆரம்பத்தில் கோயில்கள். பின்னர் சுற்றுலாத் தளங்கள், பீச், பார்க், கண்காட்சிகள், மியூசியங்கள், சினிமா, தீம்பார்க். இப்போது மால்கள். நாம் வேடிக்கை பார்க்கவும், பொழுதைப் போக்கவும் எப்போதும் ஏதாவது ஒன்று தயாராகதான் இருக்கிறது. ஆனால் இப்போது பொழுதுபோக்கு கொஞ்சம் கொஞ்சமாக காஸ்ட்லி ஆகிக் கொண்டிருக்கிறது. அதுதான் திருவள்ளுவர் தீர்க்கதரிசனத்துடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிவிட்டார். “பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை”