எண்பதுகளின் மத்தியில் வெளிவந்த ‘க்ரைம் நாவல்’ தமிழ் சமூகத்தில் குறிப்பிடத்தக்க சலனத்தை ஏற்படுத்திய பத்திரிகை. கிட்டத்தட்ட இதே காலக்கட்டத்தில்தான் சிறுசுகளிடையே சக்கைப்போடு போட்ட ராணிகாமிக்ஸில் ஜேம்ஸ்பாண்ட் இடைவிடாமல் (அரைகுறை ஆடை அழகிகளின் துணையோடு) துப்பறிந்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்னாலும், பின்னாலும் துப்பறியும் க்ரைம் கதைகளுக்கு தமிழில் குறைச்சல் இல்லையென்றாலும் இந்த காலக்கட்டத்தை ‘கோல்டன் பீரியட்’ எனலாம். ‘டிடெக்டிவ்’ என்கிற ஆங்கில சொல் தமிழர்களின் காதலுக்குள்ளானது. சென்னையில் திடீரென ஆங்காங்கே ‘டிடெக்டிவ் ஏஜென்ஸிகள்’ முளைத்தன. வளர்ந்து பெரியவன் ஆனேனா ‘டிடெக்டிவ் ஏஜெண்ட்’ ஆவேன் என்று அந்தகால சிறுவர்கள் (நானும்தான்) இலட்சியம் கொண்டார்கள். உண்மையில் நம்மூர் டிடெக்டிவ் ஏஜென்ஸிகள் பெரும்பாலும் தரகர் வேலைதான் பார்த்தன என்பதெல்லாம் வேறு கதை. அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில் போய் பிரைவேட் டிடெக்டிவ்கள் துப்பறிய அப்படியென்ன பெரியதாக கேஸ் கிடைத்து தொலைக்கப் போகிறது?
தெகிடியின் ஹீரோ ஒரு டிடெக்டிவ். எம்.ஏ. கிரிமினலாலஜி படித்தவனுக்கு ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியில் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கிறது. சில தனி மனிதர்களின் ப்ரொஃபைலை அக்குவேறு ஆணிவேறாக அலசி உருவாக்கித் தருவதுதான் அவனுக்கு தரப்படும் அசைன்மெண்ட். இவன் துப்பறிந்த ஆட்கள் ஒவ்வொருவராக மண்டையை போடுகிறார்கள். இது யதேச்சையான ஒற்றுமையல்ல என்று உணருகிறான். பிரச்சினை என்னவென்றால் அவன் பார்த்த கடைசி அசைன்மெண்ட் அவனுடைய காதலியுடையது. அவளும் இறந்துவிடுவாளோ என்கிற அச்சத்தில் ஒட்டுமொத்த கேஸையும் தனிப்பட்ட முறையில் விசாரிக்க ஆரம்பிக்கிறான். கொலையாளிகள் யாரென்பது ‘திடுக்’ க்ளைமேக்ஸ்.
யெஸ். அப்படியே ராஜேஷ்குமார் டெம்ப்ளேட் கதைதான். நீங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட க்ரைம்நாவல்களை வாசித்திருக்கும் பட்சத்தில் திரைக்கதையின் முடிச்சுகளை படம் பார்க்கும்போதே ஒவ்வொன்றாக நீங்களே அவிழ்த்து விளையாடலாம். உங்களுக்குள் ஒரு புத்திசாலித்தனமான டிடெக்டிவ் இருக்கும் பட்சத்தில் க்ளைமேக்ஸ் வில்லன் யாரென்று இடைவேளையின் போதே கூட யூகித்துவிடலாம்.
தமிழுக்கு புதுசு என்றெல்லாம் சொல்ல முடியாது. ஜெயசங்கரில் தொடங்கி எவ்வளவோ சி.ஐ.டி.கள் ஏகப்பட்ட கேஸ்களை நம்முடைய வெள்ளித்திரையில் துப்பறிந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள். க்ளைமேக்ஸில் க்ளப் டான்ஸ், காதில் பூச்சுற்றும் ஆக்ஷன் காட்சிகள் என்றே நம்மூர் துப்பறியும் படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ‘தெகிடி’ இதிலிருந்து மாறுபடுவது, அதன் நம்பகத்தன்மை கொண்ட காட்சிகளால். மொக்கைபீஸான நாமே டிடெக்டிவ்வாக இருக்கும்பட்சத்தில் அதிகபட்சமாக நம்மால் எதை செய்யமுடியுமோ அதைதான் ஹீரோ செய்கிறார். படத்தில் வரும் ஒரே ஒரு ஆக்ஷன் ப்ளாக் கூட, பறந்து பறந்து தூள்பறத்தும் வகையில் அமையாத நார்மலான சண்டைக்காட்சிதான்.

ஹூரோ அசோக்செல்வன் ஜம்மென்று சாஃப்ட்வேர் புரோகிராம்மர் மாதிரி இருக்கிறார். அவருக்கு நுண்னுணர்வு அதிகமென்று நம்பக்கூடிய தோற்றம். ஹீரோயின் ஜனனிக்கு பெரிய சைஸ் கண்கள். முகத்தில் காது, வாய், மூக்கையெல்லாம் விட கண்தான் பளிச்சென்று தெரிகிறது.
க்ரைம் தொடர்கதைகளுக்கு வரையப்படும் ஓவியங்கள் பாணியில் டைட்டில். தேவையான இடங்களில் மட்டும் பாடல்கள். விறுவிறுப்பான பின்னணி இசை. அலட்டலில்லாத இயக்கம் என்று கமர்சியல் காம்ப்ரமைஸ் இல்லாமல் கச்சிதமான படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ். ‘நல்ல படமே தமிழில் வரமாட்டேங்குது’ என்று அலுத்துக்கொள்பவர்கள், திரையரங்கம் சென்று பார்த்து ஆதரிக்க வேண்டிய திரைப்படம்.
க்ரைம் தொடர்கதைகளுக்கு வரையப்படும் ஓவியங்கள் பாணியில் டைட்டில். தேவையான இடங்களில் மட்டும் பாடல்கள். விறுவிறுப்பான பின்னணி இசை. அலட்டலில்லாத இயக்கம் என்று கமர்சியல் காம்ப்ரமைஸ் இல்லாமல் கச்சிதமான படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ். ‘நல்ல படமே தமிழில் வரமாட்டேங்குது’ என்று அலுத்துக்கொள்பவர்கள், திரையரங்கம் சென்று பார்த்து ஆதரிக்க வேண்டிய திரைப்படம்.