போன தலைமுறை புனிதமாய் கருதி பொத்தி பொத்தி பாதுகாத்த காதலையும், கம்யூனிஸத்தையும் பகடிக்கு உள்ளாக்குவது மலையாள இளம் இயக்குனர்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். அதிலும் இந்த வினித் சீனிவாசன் க்ரூப் களமிறங்கிய பின்பு ஒரே அதகளம்தான்.
இயக்குனர் ஜூடே ஆண்டனி ஜோசப்பின் அறிமுகப்படமான ‘ஓம் சாந்தி ஓசண்ணா’ அமர்க்களமான ரொமாண்டிக் காமெடி கமர்சியல். சாஃப்ட்வேர் என்ஜினியராக பொட்டி தட்டிக் கொண்டிருந்த ஆண்டனிக்கு திடீரென ஒருநாள் சினிமாவில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. திலீப் நடித்த ‘கிரேஸி கோபாலன்’ படத்தில் அசிஸ்டெண்ட் ஆக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ம்ஹூம். க்ளாப் அடிக்க கற்றுக் கொண்டதை தவிர வேறெதையும் அங்கே கற்க முடியவில்லை. ஹீரோ திலீப்புக்கு இவரைப் பார்த்து பரிதாபமாகி விட்டது. அடுத்து வினீத் சீனிவாசனை இயக்குனராக அறிமுகப்படுத்தி, ‘மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்’ படத்தை திலீப் தயாரித்தார். அதில் பணிபுரிய ஆண்டனியை, வினீத்திடம் திலீப்பே சிபாரிசு செய்தார். இந்த படத்தில்தான் கேரளாவின் இன்றைய ட்ரீம்பாயான நிவின்பாலி அறிமுகமானார்.தொடர்ச்சியாக வினீத் சீனிவாசின் அடுத்த ப்ளாக் பஸ்டர் படமான ‘தட்டத்தின் மறயத்து’விலும் ஆண்டனி தொழில் கற்றார். போதும். தனிக்கடை போட்டுவிட்டார்.
‘ஓம் சாந்தி ஓசண்ணா’வும் அதே வினீத் ஸ்டைல் தீம் படம்தான். முந்தைய தலைமுறை ‘ச்சோ.. ச்சோ’ கொட்டி ரசித்து ஆராதித்த விஷயங்களை, உலகமயமாக்கலுக்கு பிறகான தலைமுறை எப்படி பார்க்கிறது என்பதுதான். பக்காவான ஸ்க்ரிப்ட். மீடியம் பட்ஜெட். பர்ஃபெக்ட்டான போஸ்ட் புரொடக்ஷன். ஃப்ரேமுக்கு ஃப்ரேம்.. இன்ச் பை இன்ச் ரிச்சான குவாலிட்டி. மலையாளத் திரையுலகில் வீசிக்கொண்டிருக்கும் புதிய அலை இதுதான்.
எண்பதுகளின் மணிரத்னம் பட நாயகிகளை மறக்க முடியுமா? மவுனராகம் சுட்டி ரேவதி, இதயத்தை திருடாதே துறுதுறு கிரிஜா. இவர்களின் நீட்சியாக இந்த படத்தில் நஸ்ரியா. படம் தொடங்கும்போதே நிவின்பாலி தன் ரசிகர்களிடம் (!) விளக்கம் அளிக்கிறார். இந்த படம் ஹீரோயினின் வ்யூபாயிண்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்.
ஸ்கூல் படிக்கும் பூஜா பையன் மாதிரி வளர்கிறாள். ஜீன்ஸ் பேண்ட், டீஷர்ட், ஹீரோ ஹோண்டா பைக்கென்று. இவளது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ஆக்டிவிட்டி என்னவென்றால் ‘ஒயின் டேஸ்டர்’. பூஜாவின் சமூகத்தில் நூறு, இருநூறு சவரன் கொடுத்து ஒரு மொக்கையான பையனுக்கு பெண் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. எனவே தன்னுடைய பெட்டர் ஹாஃபை தானே ‘செலக்ட்’ செய்யவேண்டுமென்று மனதுக்குள் சபதம் எடுக்கிறாள். ஸ்கூலில் சகமாணவன் ஒரு பக்காவாக செட் ஆகிறான். ஆனால் அவனிடம் பெண்கள் விரும்பத்தக்க ரஃப் ஆன ஆண்மை மிஸ்ஸிங் என்று பூஜாவுக்கு தோன்றுகிறது.
பூஜாவின் இடைவிடா தேடுதலில் மாட்டுபவன்தான் நம் தோழர் கிரி. பக்கா கம்யூனிஸ்டான கிரி, பட்டம் படித்திருந்தாலும் ஊரில் விவசாயம்தான் பார்க்கிறான். பாட்டாளி மக்களின் உரிமைகளுக்காக அதிகாரங்களோடு மோதுகிறான். அநீதிகளை தட்டி கேட்கிறான். இது போதாதா. பூஜாவுக்கு காதல் பற்றிக் கொள்கிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த –அதாவது பூர்ஷ்வா ஆன- பூஜாவை கிரி விரும்புவானா என்பதுதான் கேள்வி.
அந்த வருட ஓசண்ணா திருநாளன்றுதான் கிரிக்கு பிறந்தநாளும் வருகிறது. தன்னுடைய காதலை அவனிடம் தெரிவிக்க முயல்கிறாள். கிரியின் சித்தாந்த மூளை இக்காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வர்க்க வேறுபாடுகளை தாண்டி, அவள் பள்ளி மாணவி. தான் பொறுப்பான கம்யூனிஸ்ட் என்பதை சுட்டிக்காட்டி, அவளை ஒழுங்காக படித்து உருப்படுமாறு உபதேசம் செய்கிறான்.
இதற்கிடையே ஒரு காதலை சேர்த்து வைப்பதில் ஏற்படும் பிரச்சினையால், ஒரு பூர்ஷ்வாவின் (ஸ்ஸப்பா) வன்முறை தாக்குதலில் இருந்து தப்பிக்க, மக்கள் சீனத்துக்கு (முடியல) போய் தலைமறைவாகிறான். பூஜாவுக்கு மெடிக்கல் அட்மிஷன் கிடைக்கிறது. அங்கு வரும் புரொபஸர் ஒருவரோடு லேசான ஈர்ப்பு தோன்றுகிறது. ஆனால் அது காதல் அல்ல என்று அவளது மனம் அவளை தெளிவுப்படுத்துகிறது.
அப்படி இப்படியாக ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டது. இப்போது பூஜா டாக்டர். மக்கள் சீனத்திலிருந்து தோழர் கிரி திரும்பிவிட்டார். அதே ஓசண்ணா நாள். அன்றுதான் கிரிக்கும் பிறந்தநாள். என்னவாகிறது இவர்கள் காதல் என்பதை நொடிக்கு நாலு முறை கிச்சுகிச்சு மூட்டி, வயிறு வலிக்க வைக்கும் திரைக்கதை வசனங்களோடு சுடச்சுட கேரளா ஸ்பெஷல் மீல்ஸ் பரிமாறியிருக்கிறார் இயக்குனர்.
ஒருநாள் முழுக்க நண்பர்களோடு சீயர்ஸ் அடித்து ‘சிப்’பி ‘சிப்’பி ஒயின் சாப்பிட்ட போதையை பின்னணி இசையும், பாடல்களும் அளிக்கிறது. திரையின் ஒவ்வொரு பிக்ஸெல்லிலும் இளமையோடு போட்டி போடும் இன்னொரு சமாச்சாரம், கேமரா அள்ளித்தரும் பசுமை. கொஞ்சமும் திகட்டாத கடவுளின் தேசம் கிளியோபாட்ராவின் மேனியைவிட பேரழகு கொண்டது என்பதை மறுக்க முடியாது. கேரளாவில் பிறக்கும் பெண்கள் ஏன் சூப்பர் ஃபிகர்களாக இருக்கிறார்கள் என்று அறிவியல்பூர்வமாக யோசித்துப் பார்த்தால் ஈ ஈக்குவல் டூ எம்சி ஸ்கொயர் என்கிற ஐன்ஸ்டீன் ஃபார்முலாவின் தாத்பரியம் புரியவருகிறது.
திருஷ்யம் பார்த்தாச்சா?.
பதிலளிநீக்குமுடிந்தால் அந்தப் படத்தை பற்றி எழுதுங்கள்...
attagasamana vimarisanam yuvi, 40m namathe katuraiyil rombavum naiyandi seithu eluthirukereergal, vazhthukal boss keept it up
பதிலளிநீக்குOnly saw this yesterday!! Adippoli Padam and superb review!!
பதிலளிநீக்கு