17 பிப்ரவரி, 2014

திருப்புமுனை நாயகன்

வனவாசத்தில் இருந்து திமுக மீண்டு ஆட்சியை கைப்பற்றிய 89 தேர்தல்தான் கே.என்.நேருவை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அத்தேர்தலில் திமுக ‘இளைஞர்களுக்கு வாய்ப்பு’ என்கிற கோஷத்தை முன்வைத்து, வேட்பாளர்களை தேர்வு செய்தது. நாற்பது வயதுகூட ஆகாத நேரு தேர்தலில் வென்று அமைச்சரும் ஆனார். இன்று திமுகவின் முன்னணித் தலைவர்களாக இருக்கும் பொன்முடி போன்றவர்கள் அப்போது இளைஞர்களாக இருந்து வாய்ப்பு பெற்றவர்கள்தான். வழக்கமாக ஜீப்பில் வந்து வாக்கு கேட்கும் பண்ணையார்களை கண்டு அலுத்துப்போன லால்குடி மக்கள், என்ஃபீல்ட் புல்லட்டில் புயலென வந்த இளைஞரை தேர்வு செய்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஆரம்பத்திலிருந்தே நேரு களத்தில் இறங்கி பணியாற்றக்கூடியவர். தொண்டர்களின் உணர்வுகளை துல்லியமாக எடைபோடுபவர். கட்சி வேலை என்று வந்துவிட்டால் கவுரவம் பார்க்காமல் கரைவேட்டியை மடித்து கட்டிக்கொண்டு இறங்கிவிடுவார். 91 – 96 அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுகவின் பழைய தலைவர்கள் அதுவரை எதிர்கொண்டிராத அடாவடியான அரசியலை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். அன்பில் குடும்பம் நடத்திய ‘ஜெண்டில்மேன் பாலிடிக்ஸ்’, ‘ஜெ’ காலத்தில் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து, அதிரடி அரசியலை திருச்சி திமுகவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். திமுகவில் நேர்பிளவு ஏற்பட்டு மதிமுக உருவானபோது, மாவட்டமெங்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரில் சென்று, கட்சியின் வலிமையை உறுதி செய்தார்.

96 தேர்தலுக்கு முன்பாக திமுக மாநில மாநாடு நடத்த உத்தேசித்தபோது, உரிமையோடு சண்டை போட்டு திருச்சியில்தான் நடத்த வேண்டும் என்று வெற்றி கண்டார். அப்போது திருநெல்வேலி திமுகவினர் இவர்மீது கொலைவெறி கொண்டார்கள். திருச்சியில் நடந்த அம்மாநாடு திமுகவின் வெற்றியை உறுதி செய்தது. லட்சக்கணக்கான தொண்டர்களை பிரச்சினைகள் ஏதுமின்றி கட்டுக்கோப்போடு மாநாட்டில் பங்குபெறச் செய்த நேருவின் உழைப்பு கலைஞரை கவர்ந்தது. பல பேரணிகளையும், மாநாடுகளையும் பிரும்மாண்டமாக நடத்திக்காட்டிய கலைஞரே, அம்மாநாட்டு ஏற்பாடுகளை கண்டு பிரமித்தார். ‘அஸ்தமித்து விட்டது திமுக’ என்று அலறிக்கொண்டிருந்த தேசிய ஊடகங்கள், திமுகவின் உயிர்ப்பினை ஒப்புக்கொண்டன. சோர்ந்திருந்த அக்கட்சி தொண்டர்களையும் எழுச்சி பெறவைத்த நிகழ்வு அது.

2001ல் படுதோல்வி கண்ட திமுக, 2006 தேர்தலை எதிர்கொள்ளும்போது ‘வெற்றி சூத்திரம் திருச்சியில் இருக்கிறது’ என்று கண்டுகொண்டது. எனவே திரும்பவும் அங்கேயே ஒரு மாநில மாநாடு. நேருவின் மேஜிக் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மிகச்சரியாக மாநாடு நடைபெறும்போது அதுவரை கூட்டணியில் இருந்ததாக நம்பப்பட்ட வைகோ, போயஸ் தோட்டத்துக்கு ‘பூங்கொத்து’ கொடுக்கச் சென்றுவிட்டார். வைகோ வருவார் என்று நம்பி மாநாட்டுக்கு வந்த மதிமுகவினரை அப்படியே அலாக்காக அள்ளி திமுகவுக்கு கொண்டுவந்தார் நேரு. மதிமுக மீது மக்களுக்கு இருந்த நம்பகத்தன்மை முற்றிலுமாக குலைந்தது அந்த சந்தர்ப்பத்தில்தான். வைகோவின் முடிவால் ‘அப்செட்’ ஆகியிருந்த கலைஞரை, ‘கூல்’ செய்தது நேருவின் இரவு பகல் பாராத உழைப்புதான். ‘மீண்டும் ஆட்சி கானல்நீர்தான் போல’ என்று சந்தேகப்பட்ட சில கட்சித் தலைவர்களுக்கு ‘பூஸ்ட்’ கொடுத்தது திமுகவின் ஒன்பதாவது மாநில மாநாடு. பேரணியில் அணி அணியாக திரண்ட தொண்டர்கள் ‘ஆட்சி நமதே’ என்று கட்டியம் கூறினார்கள்.
2011லும் திமுகவை ‘தோல்வி சாபம்’ தொடர்ந்தது. முன்னெப்போதுமில்லாத வகையில் அனைத்துத் தரப்பும் ஆச்சரியப்படும் வகையில் அதிமுகவின் ஆட்சியும், பெரிய புகார்கள் இன்றி சிறப்பாக செயல்படுகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியை இழந்த சோகத்தில் இருந்து தொண்டர்கள் இன்னமும் மீண்டெழ வாய்ப்பே கிடைக்கவில்லை. நேருவுக்கு தனிப்பட்ட சோகம் வேறு. சிறைக்கும், வீட்டுக்குமாக அலைந்துக் கொண்டிருந்தார். அவ்வளவு செல்வாக்கும், அதிகாரமும் மிக்க நேருவின் தம்பியே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டு விட்டார். கிட்டத்தட்ட பொதுவாழ்க்கையில் இருந்து விலகி ‘டை’ அடிக்காத வெள்ளைக்கேசம், தாடியென்று சாமியார் கெட்டப்புக்கு நேரு மாறிவிட்டார். திமுகவும் அப்படிதான் ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஸ்பெக்ட்ரம், அழகிரி என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் இருந்து மீள, திமுகவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்த திருச்சியைதான் தேர்ந்தெடுத்தார் கலைஞர். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கட்சி கொஞ்சம் ‘ப்ரெஷ்’ ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தவிர்த்து நேருவையும் அவரது தனிப்பட்ட சோகத்தில் இருந்து மீளெழச்செய்ய இதைத்தவிர்த்து வேறு உபாயம் கலைஞருக்கு தோன்றவில்லை.

‘திருச்சியில் மாநாடு, நேரு ஏற்பாடு செய்வார்’ என்று கலைஞர் அறிவித்தவுடனேயே, முதல் வேளையாக ‘ஷேவிங்’ செய்தார் நேரு. தன்னுடைய ஸ்பெஷலான கத்தி மீசையை கூராக தயார் செய்தார். தலை முடிக்கு ‘டை’ அடித்துக் கொண்டார். எண்பதுகளில் கட்சி வளர்க்க உதவிய ‘என்ஃபீல்ட் புல்லட்டை’ நல்ல மெக்கானிக்கிடம் கொடுத்து தயார் செய்தார். இருபத்தைந்து ஆண்டு காலத்துக்கு முந்தைய களவீரர் நேரு ரெடி. திருச்சி முழுக்க புல்லட்டில் நகர்வலம். இரண்டு மாத காலமாக இரவு பகல் பாரா உழைப்பு.

மாநாடு மாபெரும் வெற்றியென்று திமுகவின் எதிர்க்கட்சிகளும், எதிர்நிலையில் இருக்கும் ஊடகங்களும் கூட இன்று ஒப்புக்கொள்கின்றன. உடனடியாக வரவிருக்கும் தேர்தலில் இதன் தாக்கம் தெரியுமாவென்று சொல்ல முடியாது. ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலை திமுக ‘தில்லாக’ எதிர்கொள்ள, அக்கட்சியை வலுவாக தயார்படுத்தியிருக்கிறது திமுகவின் பத்தாவது மாநில மாநாடு. எல்லாவற்றுக்கும் மேலாக திருச்சியின் செயல்வீரரான நேரு திமுகவுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறார். கலைஞருக்கு இதுதான் இம்மாநாட்டின் ‘ஸ்பெஷல் போனஸ்’.

12 கருத்துகள்:

  1. நேருவையும் அவரது தனிப்பட்ட சோகத்தில் இருந்து மீளெழச்செய்ய இதைத்தவிர்த்து வேறு உபாயம் கலைஞருக்கு தோன்றவில்லை.
    கலைஞருக்கு இதுதான் இம்மாநாட்டின் ‘ஸ்பெஷல் போனஸ்’.

    பதிலளிநீக்கு
  2. உண்மையான் திருப்புமுனை நாயகன்!

    பதிலளிநீக்கு
  3. திமுகவினரின் முகங்களில் நம்பிக்கை ஒளி தெரிவதை திருச்சி மாநாட்டில் காண முடிந்தது , மாநாட்டை சிறப்பாக நடத்திக் காண்பித்த நேரு பாராட்டுக்குரியவர் தான் . கடந்த மாநாட்டில் நேருவை கலைஞர் "இது போன்ற சிறப்பான மாநாட்டை திமுக கண்டதில்லை " என்று பாராட்டியபோது , வீரபாண்டியர் "நான் இருக்கும் ோது தலைவர் இப்படி சொல்ல கூடாது " என்று செல்லமாகக் கடிந்து கொண்டார் .
    ஆனால் சந்தடி சாக்கில் மதிமுகவை வாரா விட்டால் உங்களுக்குத் தூக்கம் வராதா .

    பதிலளிநீக்கு
  4. உங்கள் எழுத்து எனக்கு பழைய ஞாபகங்களை கிளறச்செய்கின்றன. இருபதாண்டுகளுக்கு முன்பான எழுச்சியை, இந்த மாநாட்டில் நேரில் கண்டேன். நா.ம.தேர்தலில் தெரியாவிடினும், 2016'ல் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டுவருமென்பதில் சிஞ்சிற்றும் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
  5. கட்டுரையா இது தமிழகத்தில் பத்திரிகைகாரரை கூட திருத்த முடியாது போலிருக்கு

    பதிலளிநீக்கு
  6. உண்மைலேயே இவர் திருப்புமுனை நாயகன்தான் !

    பதிலளிநீக்கு
  7. saka admk kku kailaignar koduththa meaning sema,,,,,,,,,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
  8. இது பத்திரிக்கை கட்டுரை அல்லவே?

    பதிலளிநீக்கு
  9. முன்னெப்போதுமில்லாத வகையில் அனைத்துத் தரப்பும் ஆச்சரியப்படும் வகையில் அதிமுகவின் ஆட்சியும், பெரிய புகார்கள் இன்றி சிறப்பாக செயல்படுகிறது என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள் தம்பி. இட்லியை 1 ரூபாய்க்கும் தண்ணீரை 10 ரூபாய்க்கும் கொடுப்பது தான் நல்ல ஆட்சியா? சட்டம் ஒழுங்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் மோசம், கொலையும் கொள்ளையும் இல்லாத நாளே இல்லை எனலாம். ஊராட்சி மன்ற தலைவர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை கொலை செய்யப்பட்டவர்கள் ஏராளம். நேற்று முன்தினம் கூட ஆளுங்கட்சியை சேர்ந்த ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை, ஆளுங்கட்சி மேடையிலேயே வெடிகுண்டு, குற்றவாளிகள் எல்லாம் வெளியே சுற்றிக்கொண்டிருக்க அப்பாவிகள் கூட என் கவுண்டருக்கு ஆளாகிறார்கள். வெளியிடப்படும் திட்டங்களெல்லாம் வெற்று அறிவிப்புகள், பணியே நடைபெறாமல் அரசு நிதி கொள்ளைப்போகிறது. கழக ஆட்சியில் கொசுவுக்கு கூட அந்தம்மா போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இவ்வளவு நடந்துக்கொண்டிருந்தும் நமது கழகத்தினர் எங்கும் போராட்டம் நடத்துவதாக தெரியவில்லை. ஏனெனில் கழகத்தில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் பெரும்பாலோர் வியாபாரிகள். அவர்கள் ஆளுங்கட்சியை பகைத்துக்கொள்ளவிரும்பமாட்டார்கள். இதை சரி செய்யாவிட்டால் 2016ல் ஆட்சியை பிடிப்பது வெறுங்கனவு தான்.

    பதிலளிநீக்கு
  10. DMK ALLIANCE WILL WIN ALL FORTY SEATS IN LOKSABHA ELECTIONS.
    DALITH, MUSLIM COMBINATION WILL BRING 30 % VOTES. TRADITIONAL DMK VOTES WILL BRING TO 50%. SO ABSOLUTELY NO CHANCE FOR ANY OTHER ALLIANCE.

    பதிலளிநீக்கு