சினிமாவில் விலங்குகள் கூட
துன்புறுத்தப்படக்கூடாது என்று இந்திய தணிக்கை வாரியம் கடுமை காட்டி வருகிறது.
எனவே விலங்குகள் கதைக்கு தேவைப்படும் காட்சிகளை கூட நிஜ விலங்குகளை
பயன்படுத்தாமல், கிராஃபிக்ஸ் முறையில் காட்சிகளை அமைக்கிறார்கள் படைப்பாளிகள். நிலைமை
இப்படியிருக்கையில் சமீபமாக இந்திய சினிமாவில் பாலியல் காட்சிகளில் குழந்தை நடிகர்களை
நேரடியாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. தணிக்கை வாரியம் தூங்கிக்
கொண்டிருக்கிறதா, சமூக ஆர்வலர்களும், பெண்ணுரிமைப் போராளிகளும் டிவியில் மெகாசீரியல்
பார்த்துக் கொண்டிருக்கிறார்களா?
இந்திய தணிக்கை வாரியத்துக்கு தலைமை
செயல் அலுவலராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட ராகேஷ்குமார் ஒரு பத்திரிகை
பேட்டியில் சொல்கிறார்.
“ஓர் இந்திப்படம்
பார்த்துக்கொண்டிருந்தபோது என்னுடைய ஐந்து வயது மகள் என்னை கேட்டாள். “அப்பா! இந்த
படத்துலே ‘அந்த’ மாதிரி சீன் ரொம்ப ஓவரா இல்லே?”. இன்னொரு படம் பார்க்க அவளோடு
போயிருந்தேன். குழந்தையும் இதை பார்க்கிறாளே என்று பல காட்சிகளில் நெளிந்தேன்.
இனிமேல் UA சான்றிதழ் பெற்ற படங்களைகூட
குழந்தையோடு போய் பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்தேன்”
‘வற்றாத நதியெல்லாம் கடலிடம்
போகும். அந்த கடலே வற்றிவிட்டால் எங்கே போகும்?’ என்று நாமும் சினிமா வசனம்
பேசவேண்டியதுதான். சென்சார் செய்யும் தணிக்கை வாரியத்தின் தலைமை அதிகாரியே சினிமா
பார்த்து நெளியும்போது, நம்முடைய நிலைமை? U/A சான்றிதழ் பெற்ற படங்கள்
மட்டுமல்ல. U சான்றிதழ் பெற்ற படங்களையேகூட
குழந்தைகளோடு பார்க்க முடியவில்லை. ஐந்து வயது குழந்தையோடு சினிமாகூட பார்க்க
முடியவில்லை என்று அவர் குமுறும்போது, குழந்தைகளையே பயன்படுத்தி ‘அந்த’ மாதிரி
காட்சிகள் வருகிறதே. அதை நாம் எப்படி சகித்துக் கொள்வது?
- ‘நடுநிசி நாய்கள்’ என்றொரு படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. டீனேஜைகூட எட்டாத மகனோடு, அவனுடைய அப்பாவே ஓரின பால் உறவு கொள்வதாக
காட்சி. இதன் காரணமாக அந்த சிறுவன் மனநோயாளியாகி, வளர்ந்து பாலியல் வக்கிரம்
நிறைந்தவனாக மாறுவதாக கதை.
- ‘விடியும் முன்’ என்கிற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு படம்
வெளியாகியது. பதினோரு, பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க சிறுமியை, அறுபது வயது
கடந்த ஒரு பெரியவருக்கு ஏற்பாடு செய்து அழைத்து வருகிறாள் ஒரு பாலியல்
தொழிலாளி. அந்த குழந்தைக்கு மேக்கப் செய்து அழகுபடுத்தி தயார் படுத்துகிறாள்.
அப்போது குழந்தை அவளிடம் கேட்கிறாள். “நீ மேக்கப் போட்டுக்கலையா?”. அதற்கு
அவள் சொல்லும் பதில், “இன்னைக்கு நீதான் ராணி”. அந்த குழந்தையிடம் பெரியவர் பாலியல் வக்கிரத்தை காட்டுவதாக அடுத்த
காட்சி.
- ‘கோலி சோடா’ என்கிற திரைப்படம் தற்போது வெற்றிகரமாக அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
கடலோரத்தில் ஒரு தனிமையான, இடிந்துபோன தேவாலயம். பத்து வயது மதிக்கத்தக்க
சிறுமி, அங்கே தினமும் பிரார்த்தனைக்கு வருகிறாள். ஒரு நாள் அவள் வரும்போது
சில இளைஞர்கள் மது அருந்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த சிறுமியைப்
பார்த்ததுமே, அவளை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சிக்கிறார்கள்.
வாசிக்கும்போதே காறித்துப்பலாம்
என்று கோபம் வருகிறது இல்லையா?
இதெல்லாம் சாம்பிள்தான். இன்னும் யோசித்துப் பார்த்தால் குழந்தைகளை வைத்து இந்த சினிமாக்காரர்கள் என்னவெல்லாம் அயோக்கியத்தனம் செய்கிறார்கள் என்று நீங்களே சிந்தித்து, இம்மாதிரி படங்களின் காட்சிகளை கொண்டு பெரிய பட்டியல் ஒன்றை தயாரிக்க முடியும். ஒப்பீட்டளவில் பார்க்கப் போனால் தமிழில் இந்த மோசமான போக்கு குறைவு. அப்படியென்றால் மற்ற மொழி படங்களில் எவ்வளவு ஆபாசம் தலைவிரித்து ஆடுமென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்படியெல்லாம் ஒரேயடியாக தீர்ப்பு
எழுதிவிடாதீர்கள் என்கிறார் பெண் இயக்குனரான சந்திரா தங்கராஜ்.
“உலகளவில் எடுக்கப்படும் இதுபோன்ற
திரைப்படங்களை நாம் சமீபமாக நிறைய பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். அந்த படங்களிலும்
குழந்தைகள் பயன்படுத்தப்படுகிறார்கள். அப்படங்களை பார்க்கும்போது நமக்கு வராத
தார்மீக உணர்வு நம் ஊரில் எடுக்கப்படும் படங்களை பார்க்கும்போது மட்டும்தான்
வருகிறது. நம்முடைய பண்பாட்டு, கலாச்சாரப் பின்னணி காரணமாக நம் குழந்தைகளை இதுபோல
காணும்போது சீற்றம் அடைய வைக்கிறது. தமிழ் குழந்தையை திரையில் அப்படி சித்தரிப்பதா
என்று கோபம் வருகிறது.
ஆணோ, பெண்ணொ ஐந்தில் ஒரு குழந்தை
இம்மாதிரி பாலியல் சீண்டலை எதிர்கொள்ளும் மோசமான சமூகத்தில் இருக்கிறோம்.
இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை, எல்லா ஊடகங்களைப் போலவே சினிமாவும்
மக்களுக்கு செய்தாக வேண்டும். ஆனால் இப்பிரச்சினையை கையாளும் படைப்பாளிகளுக்கு
இதுகுறித்த அடிப்படை தெளிவு இல்லாவிட்டால், காட்சிகள் பல்லிளித்துவிடும்.
எனவே, இம்மாதிரி காட்சிகளை தடை
செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லக்கூடாது. அவற்றுக்கான தேவை இருக்கிறது. ஆனால் அது
மிக ஜாக்கிரதையாக கையாளப்பட வேண்டும் என்பதே என் கருத்து” என்கிறார் சந்திரா.
‘விடியும் முன்’ திரைப்படத்தின்
வசனகர்த்தா ஆப்ரகாம் பிரபுவும் இதேமாதிரிதான், அப்படம் மீது குற்றம்சாட்டி
எழுதப்பட்ட ஒரு இணையக் கட்டுரைக்கு பதில் எழுதுகிறார்.
“மூன்று வயது குழந்தையை கூட
பாலியல் வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டி சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துக்
கொண்டிருக்கிறோம். இம்மாதிரி இருண்ட பக்கங்களை புரட்டிப் பார்க்கும் முயற்சி
சினிமாவில் அவ்வப்போது நடைபெறுகிறது. கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று
நாம் நினைக்கக்கூடாது. நிஜங்களை சற்று தைரியமாக அவ்வப்போது உரசிப்பார்க்க
வேண்டும்” என்கிறார் அவர்.
இக்காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள், நாளை பள்ளியிலும் வெளியிடங்களிலும் அவர்களை நோக்கி செய்யப்படும் கேலி கிண்டல்களை எப்படி சகித்துக்கொள்ளப் போகிறார்கள்? சினிமாவில் குழந்தைகளின் உழைப்பு
சுரண்டப்படுவதும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு ஒப்பானதுதான் என்கிறார் பேராசிரியர்
சுமதிஸ்ரீ.
“குழந்தைகளை பணியிடங்களில் பணிக்கு
அமர்த்துவது குற்றம் என்றால், ஊதியம் தந்து சினிமாவில் நடிக்க வைப்பதற்கு மட்டும்
எப்படி விலக்கு அளிக்கமுடியும்? சினிமாக்களில் நம் குழந்தைகள் துப்பாக்கி முனையில்
மிரட்டப்படுகிறார்கள். உயரமான கட்டிடங்களில் இருந்து தூக்கிப் போட்டுவிடுவேன்
என்று வில்லன்களால் பயமுறுத்தப் படுகிறார்கள். அந்தரத்தில் தொங்கியபடியே
கதறுகிறார்கள். நம் கதாநாயகர்களின் வீரபிரதாபத்தை பறைசாற்ற குழந்தைகள் விதம்
விதமாக சித்திரவதைப்படுகிறார்கள்.
போதாதற்கு இப்போது பாலியல்
காட்சிகளிலும் அவர்களை பயன்படுத்தத் தொடங்கியிருப்பது மோசமான ஆரம்பம். வன்புணர்வு
என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத குழந்தைகளை அம்மாதிரி காட்சிகளில்
நடிக்க வைப்பதைவிட மோசமான கலாச்சாரம் வேறெதுவுமில்லை. சினிமாக்காரர்களுக்கு
குறைந்தபட்ச பொறுப்புணர்வாவது வேண்டாமா. ஒரு படத்தில் நடிப்பதோடு அந்த குழந்தையின்
வாழ்வு முடிந்துவிடுகிறதா என்ன. திரைப்படங்களில் வில்லனாக நடித்த நம்பியார்
நிஜமாகவே கெட்டவர்தான் என்று உறுதியாக நம்புகிற சமூகம், ஒரு மாதிரி பாத்திரங்களில்
நடித்த குழந்தைகளை எப்படி நடத்தும். படிப்பு, வேலை, திருமணம் என்று தொடரப்போகும்
வாழ்வில், மோசமான ஒரு பாத்திரத்தில் நடித்த குழந்தை எவ்வளவு பேரை எப்படியெல்லாம்
எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏளனங்களையும், பரிதாபத்தையுமே தொடர்ந்தால்
மனப்பிறழ்வு ஏற்பட்டு விடாதா. தங்களுடைய குழந்தைப் பிராயம் களவாடப்படுவது கூட
தெரியாமல், சினிமாவில் பயன்படுத்தப்படும் குழந்தைகள் இருக்கிறார்கள். சட்டப்பூர்வமாகவே
இந்த அநியாயங்களுக்கு அரசு முடிவு கட்ட வேண்டும்” என்று சூடாகப் பேசுகிறார்
சுமதிஸ்ரீ.
சமீபமாக நம் தேசத்தில் பெண்கள்
மீதான பாலியல் வன்முறை சகித்துக்கொள்ள முடியாத குற்றமாக பார்க்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இளைஞர்கள் இதற்கு எதிராக ‘நிர்பயா சம்பவம்’ போன்ற கொடுஞ்செயல்களுக்கு
பிறகாக கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். ஆனால் சமூகத்தின் இந்த உணர்வுக்கு நேர்மாறாக
இந்தியத் திரைப்படங்களில் மட்டும் பாலியல் காட்சிகள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
முத்தமிடுதல், ஆபாச அசைவுகள், கள்ள உறவு, ஐட்டம் பாடல், படுக்கையறைக் காட்சிகள்,
வன்புணர்வு என்று காட்சிகள் இல்லாத படங்களையே விரல்விட்டு எண்ணிவிடலாம். பெண்ணை
போகப்பொருளாக மட்டுமே சினிமா முன்வைக்கிறது என்கிற விமர்சனத்தில் உண்மை இல்லாமல்
இல்லை. இக்காட்சிகளில் இப்போது குழந்தைகளையும்கூட விட்டு வைப்பதில்லை என்பதுதான்
அநியாயம். தலைமை தணிக்கைத்துறை அதிகாரியே கூட தன் குழந்தையோடு படம் பார்க்க
முடியவில்லை என்றால் எப்படிப்பட்ட சீரழிவுக்கு நம் சினிமா ஆளாகியிருக்கிறது?
“நாங்கள் தியேட்டரில் படம்
பார்ப்பதை எங்கள் பெற்றோர் விரும்புவதில்லை. படம் பார்த்துவிட்டு வகுப்பறையில்
வந்து தோழிகள் சொல்லும் கதைகளையும், காட்சிகளையும் கேட்கும்போது, எங்கள்
பெற்றோரின் அச்சம் நியாயம்தான் என்று எண்ண வேண்டியிருக்கிறது” என்கிறார்
சென்னையில் +2 படிக்கும் மாணவியான அபிநயா.
படைப்பாளிகளுக்கும் வணிக நெருக்கடி
இருக்கிறது என்பதும் உண்மைதான். அதற்காக சமூக அக்கறைக்கு எதிரான திசையில் அவர்கள்
பயணிக்கக்கூடாது. அதே நேரத்தில் அரதப்பழசான நம்முடைய தணிக்கை நடைமுறைகளை நவீனப்படுத்த வேண்டிய
காலக்கட்டத்திலும் இருக்கிறோம். தணிக்கையில் அரசியல் தலையீடுகள் இருக்கிறது என்கிற
குற்றச்சாட்டுகளையும் புறந்தள்ள முடியாது. ஒவ்வொரு தரப்பையும் நோக்கி நாம் தனித்தனியாக
விரல் சுட்டி குற்றம் சாட்ட வேண்டியதில்லை. நூற்றாண்டு கண்ட இந்திய சினிமா, ஒட்டுமொத்தமாக
தன்னை கறாரான சுயபரிசீலனை செய்துக்கொண்டு, மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறது.
(நன்றி : புதிய தலைமுறை)
(நன்றி : புதிய தலைமுறை)
அனைத்தும் சரியே ஆனால் இங்கு நமது நாட்டில் குழந்தைகள் வன்புணர்வு என்பது தினம் அரங்கேறிய வண்ணம்தான் இருக்கிறது.அதில் பல வெளியில் தெரிவதில்லை அப்படி வெளி வரும் செய்திகளிலும் நமது ஊடகங்கள் பயன்படுத்தம் விதமும் வார்த்தைகளும் அக்குழந்தைகளின் எதிர்காலத்தை வீண் செய்ய வில்லையா?
பதிலளிநீக்குஅது போன்ற ஒரு சம்பவம் நடந்தேறி விட்டால் கவர் ஸ்டோரி மற்றும் சிரப்புக் கட்டுரைகளின் வாயிலாக அவர்கள் வாழ்வை வீண் செய்வதில்லையா என்ன?மேலும் நீகள் குறை சொல்லும் படங்கள் அனைத்தையும் போற்றி புகழ்வது எது வியாபார நோக்கிற்காக மட்டுமே செயல்படும் ஊடகங்கள்தானே,தினசரி ஏடுகளில் நாம் அன்றாடம் பார்ப்பதுதான் எவ்வளவு மோசமான திரை படங்களாக இருந்தாலும் வெற்றிகரமான வசூல் வேட்டை என்றெல்லாம் விளம்பரப்படுத்திவிட்டு சமூக அக்கறையற்றவர்கள் என்று திரைத்துறை படைப்பாளிகளை மட்டும் குறை சொல்வது எந்த விதத்தில் நடுநிலையாக இருக்கும்.
நமது முன் காலத்தில் சிறந்த இலக்கிய நாவல்கள் திரைப்படங்களாக வந்த காலத்தில் அதே நாவலாசிரியர் திரைப்பட விமர்சகராக மாறும் போது திரைப்படம் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் தவற்றை சுட்டிக்காட்டி சரி இல்லை என்றால் சரியில்லைதான் என்று விமர்சனம் செய்தார்கள் உதாரணம் கல்கி,ஜெயகாந்தன் போன்றோர்.
ஆனால் இன்று நாங்கள் என்றும் நடுநிலை சொல்லிகொள்ளும் முதலாளித்துவ ஊடகங்களே திரைப்படங்களை தயாரிகின்றன,அவைகள் தயாரிக்கும் திரைப்படங்கள் படு பயங்கர குப்பையாக இருந்தாலும் போற்றி தள்ளி விமர்சனங்கள் செய்து மக்கள் மத்தியில் ஒரு மாய பிம்பத்தை எற்ப்படுத்து விடுகின்றான் ,இது மட்டும் சமூக சீர்கேடு இல்லையா என்ன?இன்றைய ஊடகங்கள் தங்கள் சட்டை அழுக்கை பார்க்காது மற்றவர்களுடைய சட்டை அழுக்கை மட்டுமே பார்கின்றன என்பது உங்கள் இந்த விமர்சனம் தெளிவாக தெரிகிறது.
what about the reality shows by children in all the channels across India ???
பதிலளிநீக்குமிக அருமையான அலசல்! சினிமாவை நிஜம் என்றுதான் இன்னமும் 75% பேர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். திரைப்படைப்பாளிகள் யோசிக்க வேண்டும்!
பதிலளிநீக்குஇனியன் ராமமூர்த்தி, ஊடகம் குறித்த உங்கள் விமர்சனம் ‘புதிய தலைமுறை’ வார இதழுக்கு பொருந்தாது. தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் அறிவார்கள். சினிமா குறித்த செய்திகள் புதிய தலைமுறையில் வருவதில்லை.
பதிலளிநீக்குவெங்கி, நிச்சயமாக இதற்கு கட்டுப்பாடுகள் வேண்டும். சினிமாவை போலவே டிவிக்கும் தணிக்கைமுறை கொண்டுவரலாம். ஆனால் ஊடக சுதந்திர மறுப்பு என்றெல்லாம் குரல் எழும் :(
நீங்கள் விமர்சனம் செய்வது போல்,ஒரு படத்தை நீங்கள் தரமுடியுமா?என்கிற சவால் உங்கள் முன்னால் நிற்கும் பொழுது அதை உங்களால் வெல்ல முடியும் என்று நம்புவர்கள்தான் இத்தகைய விமர்சனம் செய்ய வேண்டும்.சினிமாவின் மொழி தெரியாமல் சில விஷயங்களை நீங்கள் அலசுவது ஆதங்கமாகத்தான் படுகிறது.விமர்சனமாகப்படவில்லை.கொஞ்சம் மாற்றி யோசிங்க யுவா.குப்பை சினிமாவுக்கு மத்தியில் இந்த ‘கோலிசோடா’ எவ்வளவோ மேல்.
பதிலளிநீக்குஒரு சிறுமியோ, சிறுவனோ பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறான் என்பதை அவர்கள் இல்லாமல் எவ்வாறு திரையில் காட்டுவது?.
பதிலளிநீக்குStevan spielberg - one scene has come in LOST WORLD movie, the animals attacking a child at beach shore. How he is shown at background , If it is director like Serbian film, SAW , HOSTEL !!!
பதிலளிநீக்கு