4 பிப்ரவரி, 2014

நேர்மையான பெண்மொழி

“நாப்கின் வாங்கவும் பணம் இன்றி நாதியற்றுப் போன நாட்களில்... நானும் பேசாம ஆம்பளப் புள்ளையா பொறந்திருக்கலாம் என நினைத்து அழுதிருக்கிறேன்... என் உள்ளாடைக் கிழிசலைப் போலவே, என் அப்பாவைப் பற்றிய ரகசியமும் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது”

இந்த வரிகளை வாசித்து கடக்க எனக்கு கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பிடித்தது. ஓரிரவு தூக்கம் சிந்தனையிலேயே சிதறியது. ‘ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குதான் தெரியும்’ என்பதெல்லாம் அலங்காரத்துக்கு சொன்னது அல்ல. அம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் என்று எந்தப் பெண்ணைப் பற்றியுமே எந்த ஆணுக்கும் எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. இத்தனைக்கும் நம் வாழ்க்கையில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித காலத்தை குடும்பம், பள்ளி, கல்லூரி, பணியிடம், வெளியிடம் என்று பெண்களோடுதான் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் பெண்ணை பற்றி நமக்கு –அதாவது ஆண்களுக்கு- என்ன மாதிரியான புரிதல் இருக்கிறது?

தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமை ஆனாள்?’ ஓரளவுக்கு தெளிவு கொடுக்கிறது. மனரீதியாக தானே தன்னை பெண்ணாக உணர்ந்தால்தான் அப்படிப்பட்ட ஒரு அற்புத நூலை வரலாறு, உளவியல், சமூகம் என்று அத்தனை பரிமாணங்களையும் உள்ளடக்கி எழுதியிருக்க முடியும்.

அம்மா, பெரியம்மா, அக்கா, தங்கை, சித்தி, அத்தை என்று பிறந்ததிலிருந்தே நிறைய பெண்களின் மத்தியில்தான் வாழ்ந்து வருகிறேன். இப்போதும் என் வீட்டில் ஏழு பெண்கள், இரண்டே இரண்டு ஆண்கள்தான். பெட்டிகோட், நைட்டி, புடவை, பூ, குங்குமம், சாந்து, பொட்டு, சீப்பு, லிப்ஸ்டிக் முதலான மேக்கப் சாதனங்கள் என்று எப்போதும் என் வீட்டில் பெண்வாசனைதான் வீசிக்கொண்டிருக்கும். ஏராளமான அண்ணிகள் (சட்டென்று எண்ணிக்கையே சொல்லமுடியாத அளவுக்கு). கடந்த இருபத்தைந்து வருடங்களாக சீரான இடைவெளியில் அவ்வப்போது எங்கள் குடும்பத்துக்கு ஒரு வெளி பெண் வாழ வந்துக்கொண்டே இருக்கிறார். மொத்தமாக இவர்கள் அத்தனை பேரிடமும் சேர்த்து நான் இதுவரை நூறு வார்த்தைகள் பேசியிருந்தாலே அதிகம். வெளி பெண்களிடம், சக மாணவிகளிடமெல்லாம் எப்படி பழக வேண்டும், பேசவேண்டும் என்றெல்லாம் கண்டிப்பான கட்டுப்பெட்டித்தனமான அறிவுரைகளோடு வளர்ந்திருக்கிறேன். வயதில் சிறிய பெண்களாக இருந்தாலும் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது. நேருக்கு நேராக கண்களை பார்த்து மட்டுமே பேசவேண்டும், தேவையற்ற அரட்டை கூடாது மாதிரி ஏகப்பட்ட நிபந்தனைகளும் விதிமுறைகளும். சிறுவயதில் கூட கல்லாங்கோலோ, தாயக்கட்டையோ அல்லது வேறு விளையாட்டோ விளையாடிக் கொண்டிருக்கும் அக்காக்களை குறிப்பிட்ட சில நாட்களில் தொட்டுப் பேசக்கூடாது என்பார்கள். அப்படி தெரியாமல் தொட்டுவிட்டால் உடனே போய் குளிக்க வேண்டும். ஏன் என்று கேட்டால் பல்லு மேலேயே நாலு போடுவார்கள். என்னை மாதிரிதான் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தில் பிறந்த ஆண்களும். நகரங்களில் மேல்தட்டு மற்றும் கீழ்த்தட்டு குடும்பங்களில் வளர்ந்தவர்களின் பார்வை சற்று மாறுபட்டிருக்கலாம். இப்படியிருக்கையில் பெண்கள் குறித்து எங்களுக்கு என்ன exposure இருக்க முடியும்? மனைவியே கூட கணவனிடம் முழுமையாக தன்னுடைய பிரத்யேகப் பிரச்சினைகளை பேசுவது கிடையாது.

தங்கள் பிரச்சினைகளாக பெண்கள் இதுகாறும் எழுதியவை அவர்களது நிஜமான பிரச்சினைகளே அல்ல. அவர்களது உள்ளாடைக் கிழிசல் யாருக்கும் தெரியாததை போல, அவர்களும் அவர்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. மாறாக ஆணோ அவன் அன்று உள்ளாடை அணிய மறந்ததை கூட பெருமையாக நாலு பேரிடம் சத்தம் போட்டு சிரித்துக்கொண்டே சொல்கிறான். ஓரளவுக்கு நேர்மையான பெண்மொழி கடந்த கால் நூற்றாண்டுகளாக புதிய தலைமுறை பெண் படைப்பாளிகளிடமிருந்து தீவிரமான வீச்சில் வெளிப்படுகிறது. அதற்கு முன்பெல்லாம் பலகீனமான குரலாக வெளிப்பட்டு, விரைவிலேயே அடக்கப்படும் நிலைதான் இருந்தது. அல்லது ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் பெண்ணியத்தை, ஆண்களும் சேர்ந்து ஆராதித்தார்கள். வழக்கமான முரணற்ற பாரதியார் பாட்டு வாதங்களும் பட்டிமன்றங்களும், கலகம் செய்ய வாய்ப்பில்லாத மேம்போக்கான எழுத்துகளும், பேச்சுகளுமாகதான் பெண்ணிய சடங்கு நம் மண்ணில் அரங்கேறியது. நம் பெண்கள் அவர்களுக்கு வசதியான மேக்ஸி, நைட்டி போன்ற ஆடைகளுக்கு மாறவே இருநூறு, முன்னூறு வருஷம் ஆகியிருக்கிறது. இன்றைய உடைப்பின் பெருமை தமிழக அளவில் திராவிட இயக்கங்களையும் (பெரியாரிய சிந்தனைகளின் நடைமுறையாக கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை அடிப்படையில்), தேசிய அளவில் பொதுவுடைமை இயக்கங்களையுமே (இண்டு இடுக்கு விடாத தீவிரப் பிரச்சாரம்) சாரும்.
இச்சூழலில்தான் சுமதிஸ்ரீ எழுதியிருக்கும் ‘என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்’ முக்கியத்துவம் பெறுகிறது. முன்னாள் தமிழ்த்துறை விரிவுரையாளரான இவர் பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர் என்று பல களங்களில் செயல்படுகிறார். சினிமாவிலும் பாட்டு எழுதியிருக்கிறாராம். காந்திய மக்கள் இயக்கத்தில் மாநில அணி இலக்கியத்தலைவர்.

எங்கள் குடும்பத்தில் யாருக்காவது குழந்தை பிறக்கப் போகிறது என்றால் “மங்கம்மா (எங்கள் குலதெய்வத்தின் பெயர்) வந்து நல்லபடியா பொறக்கணுமுன்னு வேண்டிக்குங்கப்பா” என்றுதான் பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு ஏற்றாற்போல பெரும்பாலும் எங்கள் அண்ணன், தம்பிகளுக்கு பிறந்ததெல்லாம் மங்கம்மாக்கள்தான். எனக்கும் இரண்டு மங்கம்மா பிறந்திருக்கிறார்கள். இதற்காக யாரும் விசனம் கூட பட்டதில்லை. பெண் குழந்தை பிறந்தால் மகாலட்சுமி பிறந்ததாக மகிழும் ஒரு நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது. கள்ளிப்பால் எல்லாம் எங்கள் ஊரில் நூற்றாண்டுகளாக கேள்விப்படாத சமாச்சாரம். இதற்கு நேரெதிரானது சுமதிஸ்ரீயின் கதை.

ஆண்குழந்தை பிறக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பில் இருந்த சுமதிஸ்ரீயின் அப்பா, இவர் பிறந்ததால் ஒருமாதிரி விரக்திநிலையில் இவரை வெறுக்கத் தொடங்கியிருக்கிறார். துரதிருஷ்டமாக அடுத்து பிறந்ததும் மகள்தான். எதற்கெடுத்தாலும் அடி. முதல் ரேங்க் எடுக்காதற்காக. சோறு குழைந்ததற்காக. தோழியை வீட்டுக்கு அழைத்து வந்ததற்காக. கவிதை எழுதியதற்காக. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சுமதியை அடிக்க வேண்டும் அவ்வளவுதான். வயசுக்கு வந்தால் அடிக்க மாட்டார்கள் என்று ஏதோ சினிமாவில் டயலாக் கேட்டுவிட்டு, சீக்கிரமாக வரணும் என்று கடவுளை பிரார்த்திக்குமளவுக்கு கொடுமை.

ஒன்பது வயதிலேயே ஒரு முறை வீட்டை விட்டு ஓடியிருக்கிறார். திரும்ப பிடித்துவந்து முன்பைவிட மோசமாக சித்திரவதை. ஓரளவுக்கு வளர்ந்தபிறகு ஒருமுறை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது “நான் இல்லன்னா, உன்னால இப்படி ஒருவேளை சோறு திங்கமுடியுமா?” என்று சொல்லில் நெருப்பை கொட்ட, முழுமையாக வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஸ்பான்ஸர் பிடித்து கல்லூரியில் சேர்ந்து, கட்டணம் கட்டாததால் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டு, சாப்பிட பணம் கட்டாதவர்கள் பட்டியல் என்று மெஸ் போர்டில் பெயர் எழுதி அவமானப்பட்டு, நல்ல சாப்பாடு சாப்பிட ஒரு விருந்துக்கு சென்று அங்கிருந்தவர்கள் கேலி கிண்டலால் அழுதுக்கொண்டே ஓடி, பிற்பாடு வேலைக்கு சேர்ந்த இடத்துக்கு எல்லாம் சொந்த அப்பாவால் தாறுமாறாக புகார் சொல்லப்பட்டு, காதலித்து மணந்த கணவனின் புகுந்த வீட்டிலும் அப்பாவே வந்து பிரச்சினையென்று பராசக்தி கல்யாணியைவிட வாழ்க்கையின் ஓரத்துக்கு அதிவேகத்தில் ஓடியிருக்கிறார் சுமதிஸ்ரீ. பிற்பாடு ஓர் ஐடியல் அப்பா எப்படியிருக்க வேண்டும் என்று சுமதிஸ்ரீ எழுதிய ‘தகப்பன்சாமி’ என்கிற கவிதை அவருக்கு பலரிடம் பாராட்டும், விருதுகளையும் பெற்றுத்தந்தது. ஆனால் அந்த கவிதையின் ஒரு சொல்லில்கூட அவரது சொந்த அப்பா இல்லை.

வாசிக்கும்போது நம்பமுடியாததாகவும், மிகையானதாகவும் தோன்றும். ஆனால் இதற்கெல்லாம் சாட்சியான மனிதர்கள் –குறிப்பாக சுமதியின் அப்பா- இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். நூலில் இடம்பெற்றிருக்கும் இந்த ‘என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்’ மிகவும் அழுத்தமான, ஆழமான கட்டுரை. கோடிக்கணக்கான தமிழ்ப் பெண்களின் பிரதிநிதியாக சுமதிஸ்ரீயின் வாழ்வியல் வாக்குமூலம். பச்சாதாபத்துக்காக சுயகழிவிரக்கம் தேடும் நோக்கிலான மிகைத்தன்மை இல்லாமல், இயல்பான பகிர்தலாக, நேருக்கு நேர் பேசும் நேரடி மொழியில் எழுதப்பட்டிருக்கும் பதிவு. சுமதிஸ்ரீ குறிப்பிடும் இச்சம்பவங்கள் கடந்த முப்பது வருடங்களுக்குள்ளாகதான் நடந்திருக்கிறது. ஏதோ குக்கிராமத்தில் பாமரக் குடும்பத்தில் நடந்த விஷயமுமில்லை. பட்டறிவும், பகுத்தறிவும் பெற்றவர்கள்கூட இப்படிதான் நடந்துக் கொள்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்று நம்புபவர்களும் நம்மூரில்தான் இருக்கிறார்கள். குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டதாலேயே தன்னுடைய ரத்தம் என்றும் பாராமல் சித்திரவதைக்குள்ளாக்குபவர்களும் இங்குதான் இருக்கிறார்கள்.

நூலின் மற்ற கட்டுரைகள் எல்லாமே the girl thing தான். பட்டுப்புடவை மீது மோகம், முதல் விமானப் பயணம், பள்ளி கல்லூரி கலாச்சார விழாக்களில் நடனம், வளைகாப்பு, சினிமாவில் பாடல் எழுதிய அனுபவம், தன்னுடைய குழந்தைக்கு கடிதம் என்று தான் கடந்துவந்த அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.

சுமதிஸ்ரீயின் எழுத்துகளில் வெளிப்படும் பெண்ணியம் முற்போக்கானது என்று சொல்ல மாட்டேன். நீயும் நானும் சமம்தானே, நீ தம் அடித்தால் நானும் அடிப்பேன், நீ தண்ணி அடித்தால் நானும் அடிப்பேன் என்கிற மாதிரி வகை அல்ல. பெண்ணடிமைத்தனத்தை ஒரு வடிவமாகவே அமைத்து வைத்திருக்கும் சமூக அமைப்பையே புரட்டி போடவேண்டும் என்கிற எண்ணங்கள் எதுவும் அவரது எழுத்தில் வெளிப்படுவதாகவும் தோன்றவில்லை. ஆனால் விதிக்கப்பட்ட சமூகத்தில் தன்னுடைய பங்கினை போராடி, சண்டை போட்டாவது வாங்கும் முனைப்பு அவரது எழுத்துகளில் வெளிப்படுகிறது.

இந்நூலை வாசிக்கும் ஆண், பெண் குறித்த தன்னுடைய புரிதலை கொஞ்சம் மீளாய்வு செய்து அப்டேட் செய்துக்கொள்வான். பெண்கள் தங்களுடைய சக பயணியின் அனுபவங்களை வாசித்து, தங்களையும் ஒப்பிட்டுக் கொள்ள முடியும். சிந்தனையை கிளறும் சுவாரஸ்யமான, நேர்மையான எழுத்து. வளமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள் சுமதிஸ்ரீ!
நூல் : என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்
எழுதியவர் : சுமதிஸ்ரீ
பக்கங்கள் : 96
விலை : ரூ.80
வெளியீடு : விகடன் பிரசுரம்
757, அண்ணா சாலை, சென்னை-600 002.
போன் : 044-42634283/84

10 கருத்துகள்:

  1. நடராஜ் சிதம்பரம்2:13 PM, பிப்ரவரி 04, 2014

    கலகம் செய்ய வாய்ப்பில்லாத மேம்போக்கான எழுத்துகளும், பேச்சுகளுமாகதான் பெண்ணிய சடங்கு நம் மண்ணில் அரங்கேறியது.உங்கள் எழுத்துக்கள் ஒரு மிகச்சிறந்த தரத்திற்கு நகர்ந்து கொண்டிருகிறது yk சபாஷ்.

    பதிலளிநீக்கு
  2. Excellent post Mr.Yuvakrishna. But, i've one doubt. Did you read this book or read some other book to write this post.

    Like - Jilla. Anyway I need this book. thanks for sharing.

    பதிலளிநீக்கு
  3. இணையத்தில் வாங்க... http://www.wecanshopping.com/products/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html

    பதிலளிநீக்கு
  4. புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது உங்கள் எழுத்து. ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை. பெண்கள் , அவர்களது வலிகளைப் பற்றி இவ்வளவு ஆதங்கத்துடன் எழுதும் உங்களால் எப்படி அரைகுறை ஆடைப் பெண்களின் புகைப்படங்களை முகநூலில் பதிப்பித்தும் , கிண்டலாகவும் எழுத முடிகிறது? ஒருவேளை அது வேற department ஆ?

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் எழுதிய கட்டுரைகளிலேயே இதுதான் மிகச்சிறந்த கட்டுரை யுவா...

    இந்த புத்தகத்தை அறிமுகப்படித்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. @Anonymous7:33 PM, February 04, 2014

    எழுத்தை படியுங்கள்... எழுத்தை வைத்து எழுத்தாளனை படிக்காதீர்கள்...

    பதிலளிநீக்கு
  7. சுமதிஸ்ரீயைப் போன்று துன்புற்றவர்கள், துன்புறுபவர்கள், நிறையவே இருக்கிறார்கள் நம் சமூகத்தில் என்பது புரிகிறது. இந்தப் புரிதல் மூலம் ஆண் மனம் பெண்ணைக் கனிவோடு, கண்ணியத்தோடு பார்க்க, நடத்தக் கற்றுக்கொண்டால் சமூகத்துக்கே அது நலம் பயப்பதாக இருக்கும்.
    சுமதிஸ்ரீயால் அநீதியை எதிர்க்க முடிந்தது; தனக்கெனப் பாதை ஒன்று வகுத்துக்கொண்டு முன்னேற முடிந்தது. எழுத்தில் தன் அனுபவத்தைக் கொணரவும் இயன்றிருக்கிறது. எத்தனை அப்பாவிப் பெண்களால் இதெல்லாம் முடியும்? அவர்கள் கதி?
    உங்கள் கட்டுரை அவரின் புத்தகத்திற்கு ஒரு அறிமுகமாக, ஒரு முன்னுரை போன்று
    அமைந்துள்ளது. நன்றி.

    -ஏகாந்தன்
    aekaanthan.wordpress.com

    பதிலளிநீக்கு
  8. தலைப்பைப் பார்த்ததும் இது அந்த டேப்மொழியோன்னு நினைச்சேன். ஹிஹி.

    பதிலளிநீக்கு
  9. ஏற்றுக் கொள்ள முடியாத வாதம் திரு. வினோத். எழுதுவது ஒன்றாகவும் , வாழ்க்கை முறை ஒன்றாகவும் இருந்தால் எழுத்துக்களுக்கு மதிப்பிருக்காது. எண்ணம், சொல், செயல் ஒன்றாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. சுமதிஶ்ரீ அவர்கள் பற்றி அவர்கள் கடந்து வந்த காலம் பற்றி சொன்னது கனக்கிறது. புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் வலுக்கிறது.

    பதிலளிநீக்கு