14 மார்ச், 2014

ஆயிரத்தில் ஒருவன்

“வெற்றி! வெற்றி!!” என்று முழங்கியவாறே அறிமுகமாகும் அந்த நபரை பார்த்ததுமே பிடித்துவிட்டது.

அப்போது அனேகமாக எனக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். ஓம் பிரகாஷ் மாமா தலைமையில் என்னுடைய ஏகப்பட்ட அண்ணன்களோடு படத்துக்கு போயிருந்தேன். அம்மா, அப்பா இல்லாமல் தியேட்டருக்கு போய் பார்த்த முதல் படம் அதுவாகதான் இருக்கும். நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படமும் அதுதான். மடிப்பாக்கம் தனலஷ்மி திரையரங்கம். ஐந்து ஆண்டு லைசென்ஸில் கூரைக்கொட்டகையில் இயங்கும் தற்காலிக ‘சி’ சென்டர் தியேட்டர். அந்த தியேட்டர் இருந்த இடத்தில் இப்போது ஓர் அப்பார்ட்மெண்ட் இருக்கிறது.

ஆறு மணி படத்துக்கு ஐந்து மணிக்கெல்லாம் போய் வரிசையில் முதலில் நின்றிருந்தோம். ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்கள் கத்திக் கொண்டிருந்தன. டிக்கெட் கிடைத்ததுமே ஆளில்லாமல் ‘ஜிலோ’வென்றிருந்த தியேட்டருக்குள் கத்திக்கொண்டே ஓடினோம். தரை டிக்கெட். சின்னப் பையன் என்பதால் முன்னால் அமருபவரின் தலை மறைக்கும் என்பதற்காக மணலை கூட்டி, எனக்கு கொஞ்சம் ஹெயிட்டான இருக்கை ஏற்படுத்தித் தந்தார் பிரபா அண்ணா. திரையில் நியூஸ் ரீல். கருப்பு வெள்ளையில் காந்தி சத்தியாக்கிரகத்துக்காக ஸ்பீட் மோஷனில் நடந்துக் கொண்டிருந்தார். “ஆனா நம்ம படம் கலருதான்” என்றார் பாலாஜி அண்ணா. அப்போதெல்லாம் தனலஷ்மியில் கருப்பு வெள்ளை படங்கள்தான் அதிகம் திரையிடப்படும்.

அக்கம் பக்கத்தில் அசுவாரஸ்யமாக நிறைய பேர் பீடி வலித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் பக்கம் செம கூட்டம். பெஞ்ச், சேர் என்று எல்லா டிக்கெட்டுகளும் நிறைந்திருந்தது. சட்டென்று புரொஜெக்டர் வண்ணத்தை ஒளிர்ந்தது. திரையில் ‘பத்மினி பிக்சர்ஸின் ஆயிரத்தில் ஒருவன்’. தியேட்டரிலிருந்த அத்தனை பேரும் விசில் அடித்தார்கள். எம்.ஜி.ஆர் பெயர் டைட்டிலில் போடப்பட்டதுமே விசிலின் டெஸிபல் இரண்டு, மூன்று மடங்கானது. காதை பொத்திக்கொண்டேன். கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது. திரையில் வாத்யாரை கண்டதுமே அந்த அச்சம் அகன்று, விவரிக்க இயலா பரவசம் தோன்றியது. எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய தலையலங்காரம், உடையலங்காரம், தினவெடுக்கும் தோள்கள், கருணை பொங்கும் கண்கள், லேசாக ஸ்டைலாக கோணும் வாய், சுறுசுறுப்பான நடை, புயல்வேக வாள்வீச்சு... தமிழின் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டாராக அவர் விளங்குவதில் ஆச்சரியமென்ன? “பூங்கொடி கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆர் வாளால் விளையாடும் காட்சி முடிந்ததுமே தூங்கிவிட்டதாக ஞாபகம். என்னை தூக்கிக்கொண்டு வந்துதான் வீட்டில் போட்டிருக்கிறார்கள். மறுநாள் அப்பா படத்துக்கு போகும்போதும், அவரோடு அடம்பிடித்து போய் ‘சேர்’ டிக்கெட்டில் அமர்ந்து பார்த்தேன். கடந்த முப்பதாண்டுகளில் ஆயிரத்தில் ஒருவனை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கு வழக்கேயில்லை. அந்த முதல்நாள் பரவசம் இன்னமும் ரத்தத்தில் கலந்திருக்கிறது. இப்போதும் பரபரப்பாக இருக்கிறது.
நெய்தல் நாட்டின் பிரபலமான மருத்துவர் மணிமாறன். மனிதாபிமானம் கொண்டவர். அந்நாடு சர்வாதிகாரியால் ஆளப்படுகிறது. இந்த சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடும் புரட்சிக்காரர்களுக்கு மணிமாறன் சிகிச்சை அளிக்கிறார். எனவே அவரும் சதிகாரர் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தீவாந்திர தண்டனைக்கு ஆளாகிறார். கன்னித்தீவு என்கிற தீவுக்கு இவர்கள் அடிமைகளாக அனுப்பப்படுகிறார்கள். அங்கே அடிமைகளின் தலைவனாக உருவெடுக்கிறார் மணிமாறன்.

கன்னித்தீவை ஆளும் தலைவனின் மகள் கட்டழகி பூங்கொடி. அழகிலும், ஆற்றலிலும், மனிதாபிமானத்திலும் சிறந்துவிளங்கும் மணிமாறனை காதலிக்கத் தொடங்குகிறாள். அவனுக்கு மட்டும் அடிமைத்தளையிலிருந்து சுதந்திரம் கிடைக்க வழி செய்கிறாள். இதை மறுக்கும் மணிமாறன், தன்னுடைய தோழர்கள் அனைவருக்குமே சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறார்.

இதற்கிடையே கடற்கொள்ளையர் கன்னித்தீவை தாக்குகிறார்கள். அடிமைகள் இணைந்து கடற்கொள்ளையரை வென்றால் சுதந்திரம் நிச்சயம் என்று அறிவிக்கிறான் தீவின் தலைவன். ஆனால் வெற்றி கண்டபிறகு துரோகம் இழைக்கிறான். கடுப்பான புரட்சிக்காரர்கள் தீவிலிருந்து கலகம் செய்து தப்பிக்கிறார்கள். சூழ்நிலையின் காரணமாக கடற்கொள்ளையரோடு இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பரபரப்பான ட்விஸ்ட்டுகளை கடந்து பூங்கொடியை கைப்பிடிக்கும் மணிமாறன், தன்னுடைய நாட்டையும் எப்படி சுதந்திர நாடாக்குகிறார் என்பதுதான் கதை.

பார்வைக்கு பரபரப்பான காட்சிகள் மட்டுமின்றி, காதிற்கினிய பாடல்களும் படத்தின் பிரும்மாண்டமான வெற்றிக்கு அடிகோலின. ஜெயலலிதாவின் இளமை, நாகேஷின் நகைச்சுவை, நம்பியாரின் வில்லத்தனம் என்று பல்சுவை விருந்து. காசை தண்ணீராக செலவழித்து பிரும்மாண்டத்தை திரையில் உருவாக்கி காண்பவர்களின் கண்களை ஆச்சரியத்தால் விரியவைத்தார் பந்துலு.

இயக்குனர் பி.ஆர்.பந்துலு முன்பாக தயாரித்து இயக்கிய ‘கர்ணன்’ பல அரங்குகளில் நூறு நாள் ஓடியிருந்தாலும், மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக பலத்த நஷ்டத்துக்கு உள்ளாகியிருந்தார். அதை ஈடுகட்டும் விதமாக வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரை வைத்து ஒரு சூப்பர்ஹிட் படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டார். அதுதான் ஆயிரத்தில் ஒருவன். பந்துலுவின் எல்லா கடன்களையும் ஆயிரத்தில் ஒருவன் அடைத்ததோடு மட்டுமில்லாமல், அவரை மீண்டும் திரையுலகில் தலைநிமிரவும் வைத்தான். ‘கேப்டன் ப்ளட்’ என்கிற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டது இப்படம் என்று எம்.ஜி.ஆரின் பெரும் ரசிகரான கலாப்ரியா எழுதியிருக்கிறார்.
சினிமாத்துறையில் நீண்டகாலம் இயங்கிய ஒவ்வொரு நடிகருக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஒரு படம் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாஸ்டர் பீஸ்களை தந்தவர்களே சூப்பர் ஸ்டார்களாக கருதப்படுகிறார்கள். நாடோடி மன்னனுக்கு பிறகு, அதை மிஞ்சும் வெற்றி எம்.ஜி.ஆருக்கு நீண்டகாலமாக அமையாமல் இருந்தது. இடையில் சிவாஜி ஏகப்பட்ட மாபெரும் வெற்றிப்படங்களாக நடித்துத் தள்ளிக் கொண்டிருந்தார். அம்மாதிரி பெரும் வெற்றியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் ஆபத்பாண்டவன். வசூலில் தன்னை யாராலும் நெருங்கமுடியாத சக்கரவர்த்தியாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில்தான் தன்னை மாற்றிக் கொண்டார் எம்.ஜி.ஆர். இதற்கு பிறகு அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் என்று அவர் படைத்த சரித்திரங்கள் ஏராளம். அவ்வகையில் பார்க்கப் போனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ புரட்சித்தலைவரது பிக்பேங்க் ரீ என்ட்ரி.

11 மார்ச், 2014

the female thing

சமீபத்தில் அடுத்தடுத்து காணக்கிடைத்த நான்கு திரைப்படங்களுக்கும் ஒரு யதேச்சையான ஒற்றுமை அமைந்திருந்தது. அவற்றில் ஒன்று தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் வெளியான திரைப்படம். ஒன்று மலையாளம். மற்ற இரண்டும் இந்தி. ஆக, ஒரே நேரத்தில் தேசம் முழுக்க பரவலான, உற்று நோக்கினால் மட்டுமே உணர்ந்துக்கொள்ளக் கூடிய ஒரு மாய அலை அடித்துக் கொண்டிருக்கிறது.

நான்கு படங்களுக்கான ஒற்றுமை என்னவென்றால், ஒவ்வொன்றுமே தனித்துவக் குணம் கொண்ட நான்கு பெண்களை பிரதான கதாபாத்திரமாக கொண்டவை. இப்பெண்கள் யாரும் ‘so called பெண்ணியம்’ பேசவில்லை. அதே நேரம் ஆண்களுக்கு சவால் கொடுக்கக்கூடிய செயல்வேகமும், மனவோட்டமும் கொண்டவர்கள். அவர்களது கதாபாத்திர அமைப்பு ‘ஆணுக்கு பெண் சமம்’ என்கிற பெண்ணிய அடிப்படை சிந்தனையை, பிரச்சாரப் பாணியாக இல்லாமல், கருத்தியல்ரீதியாக ஆண்களை வலுச்சண்டைக்கு இழுக்காமல் (ஒருவேளை நான்கு படங்களின் இயக்குனரும் ஆண் என்பதால் இருக்கலாம்) இயல்பான காட்சிகளால் வெளிப்படுத்துகிறது.

ஓம் சாந்தி ஓசண்ணா (மலையாளம்) நஸ்ரியா, ஆஹா கல்யாணம் (தமிழ் & தெலுங்கு) வாணிகபூர், ஹசீ தோ பாஸீ (இந்தி) பரினீத்தி சோப்ரா, ஹைவே (இந்தி) அலியாபாட் என்று நால்வருமே குறிப்பிட்டுப் பேசக்கூடிய - ஆண் மொக்கைகளின் - தேவதைகள். இப்படங்களில் இவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்கள், பொதுவான பார்வையில் ‘டிபிக்கல் ஃபார்வேர்ட் இண்டியன் விமன்’ என்கிற சமகால சமூக கருத்தாக்கத்தின் குறியீடுகள்.
நஸ்ரியாவின் பூஜா பாத்திரம் ஆறேழு ஆண்டுகால அவளது வாழ்க்கையை விவரிக்கிறது. ஓம் சாந்தி ஓசண்ணா திரைப்படமே நாயகியின் கதையாடலாக அவளது குரலில் பார்வையாளனுக்கு விவரிக்கப்படுகிறது. பள்ளி மாணவியான பூஜா, தங்கள் சமூக வழக்கம் ஒன்றை காண நேர்கிறது. அதிகளவில் வரதட்சணை கொடுத்து, கல்யாண மார்க்கெட்டில் கொழுத்த மாப்பிள்ளையை பிடிக்கும் அந்த வழக்கத்தில் அவளுக்கு உடன்பாடில்லை. சிறுவயதிலிருந்தே நன்கு படித்த பெற்றோரால் சுதந்திரம் கொடுத்து வளர்க்கப்படும் ஒரே பெண். ஆண் மாதிரி முரட்டுத்தனமாக உடையணிவதும், நடந்துக் கொள்வதும் அவளுக்கு பிடித்த விஷயங்கள். பள்ளிப் பருவத்திலேயே பைக் வாங்கி, பயங்கர ஸ்பீடாக ஓட்டுபவள். தன்னுடைய வாழ்க்கைத்துணையை தானே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வருகிறாள். சா பூ த்ரீ போட்டு அவள் தேர்ந்தெடுப்பது ஒரு கம்யூனிஸ்ட்டை. துரத்தி, துரத்தி அவனை காதலித்தாலும் தன்னுடைய சுயமரியாதையை எங்கும் விட்டுக் கொடுக்காமல் எப்படி இறுதியில் வெற்றி காண்கிறாள் என்பதுதான் கதை. படம் முழுக்கவே ஆண்களை ஜாலியாக கலாய்க்கும் அவளுடைய கமெண்டுகளால் நிறைந்திருக்கிறது. ஆண்கள் எவ்வளவு அபத்தமானவர்கள் என்பதை அடிக்கடி அழுத்திச் சொல்கிறாள். படம் முடியும்போது அவள் சொல்வதுதான் ஹைலைட். “இந்த ஆம்பளைப் பசங்களுக்கு ஒரு கெட்டப் பழக்கம். தனக்கு பொண்ணு பொறந்தா, தன்னோட முதல் காதலியோட பேரைதான் வைப்பானுங்க”. அவள் இந்த வசனத்தை பார்வையாளர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவளுடைய கணவன் தன் குழந்தையை பெயர் சொல்லி (முதல் காதலியின் பெயர்) தூக்கிக் கொஞ்சுகிறான். அவனை பூஜா கேவலமாகப் பார்ப்பதோடு படம் முடிகிறது.
வாணிகபூரின் ஸ்ருதி கேரக்டர் ஒரு லட்சியப்பெண்ணின் வாழ்க்கையை காமெடியாகவும், நெகிழ்ச்சியாகவும் சொல்ல முற்படுகிறது. கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே எதிர்காலம் என்னவென்பதை தீர்மானமாக திட்டம் தீட்டி வைத்திருக்கிறாள். அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு காலக்கட்டத்தையும் அவளே முன்பு திட்டமிட்ட ‘ப்ளூப்ரிண்ட்’ வடிவாகவே நடைபெறவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவள். படித்து முடித்ததுமே பிசினஸ். அந்த பிசினஸுக்கான பயிற்சியை படிக்கும் காலத்திலேயே எடுத்துக் கொண்டவள். ஐந்து ஆண்டுகள் தொழில் செய்துவிட்டு, வெற்றிகரமான தொழில்முனைவோராக ஆனபின்னர், அப்பா அம்மா சுட்டிக் காட்டும் ஆட்டுக்கு மாலையை போட்டு வெட்டுவது என்பதுதான் அவள் திட்டம். எதிர்பாராமல் இந்த திட்டத்துக்குள் குறுக்கீடாக ஒருவன் வருகிறான். அவனை காமெடியனாக பார்ப்பதா, காதலனாக பார்ப்பதா என்று அவளுக்கு குழப்பம். தன்னுடைய லட்சியத்துக்கு இவனால் பாதிப்பில்லை என்று அடையாளம் காணும்போது, அவனோடேயே வாழ்க்கையை தொடரலாம் என்கிற முடிவுக்கு வருகிறாள். இவளது ‘ஃபைனான்ஸோடு, ரொமான்ஸ் மிக்ஸ் ஆகக்கூடாது’ என்கிற தத்துவத்தால் குழம்பிப்போன அவனோ எதிர்மறையாக ரியாக்ட் செய்கிறான். இவளால் அவனை விலக்கவும் முடியவில்லை. சேர்த்துக் கொள்ளவும் முடியவில்லை. இறுதியில் தன்னுடைய மனதை அவனிடம் திறந்துக் காட்டி அவனை காமெடி காதலனாக ஏற்றுக் கொள்கிறாள். தன்னுடைய ஆரம்பகால எதிர்காலத் திட்டங்களை வெற்றிகரமாக தொடரவும் செய்கிறாள்.
பரினீத்தி சோப்ராவின் மீட்டா ஒரு ரோலர் கோஸ்டர் கேரக்டர். அவள் ஒரு பார்ன் இண்டெலிஜெண்ட். ஐஐடி கெமிக்கல் என்ஜினியர். புதுத்தொழில் தொடங்க அப்பாவிடம் லம்பாக முதலீடு கேட்கிறாள். அவர் தயங்கவே, பெரும் பணத்தோடு வீட்டை விட்டு சீனாவுக்கு ஓடிவிடுகிறாள். இதன் காரணமாக அவளுடைய அப்பாவுக்கு மாரடைப்பு வருகிறது. ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் ஊருக்கு வருகிறாள். சீனாவில் சில முதலீட்டாளர்களிடம் இவளது அப்பாவை மாதிரி ‘போர்ஜரி’ கையெழுத்து இட்டு பல கோடிகளுக்கு கடனாளி ஆகியிருக்கிறாள். குறிப்பிட்ட தினங்களுக்குள் அந்த பணத்தை திரும்பத் தராவிட்டால் பெரும் பிரச்சினைக்கு இவளுடைய அப்பா ஆளாகுவார். இங்கே மீட்டாவின் அக்காவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. மீட்டாவின் மீள்வருகையால் தன்னுடைய திருமணம் பாதிக்கப்படலாம் என்று அவளுடைய அக்கா, தன்னை கட்டிக்கொள்ளப் போகும் மாப்பிள்ளையிடம் சொல்லி இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமல் பார்த்துக்கொள்ளச் சொல்கிறாள். மீட்டாவும், அவளுடைய வருங்கால அக்காள் கணவருக்குமான இந்த ஏழு நாட்கள்தான் கதை. சுட்டிப்பெண்ணாக, கிறுக்காக, போதைக்கு அடிமையானவளாக அவனுக்கு அறிமுகமாகும் மீட்டா, எவ்வளவு பெரிய புத்திசாலி என்பதை ஒரு தருணத்தில் அவன் உணர்கிறான். அவளுடைய பிரச்சினைகளை தீர்க்க சம்மதிக்கிறான். அவனும் மீட்டாவை ஒத்த மனோபாவம் கொண்டவன்தான் என்பதால், இந்த ஏழு நாட்களில் இருவருக்குள்ளும் அவர்கள் அறியாமலேயே ‘காதல்’ பற்றிக் கொள்கிறது. குடும்பத்தின் நன்மைக்காக காதலை துறக்க மீட்டா முடிவெடுக்கிறாள். மீட்டாவை இழக்க அவனுக்கு சம்மதமில்லை. இந்த முரணை பாசிட்டிவ்வான முறையில் களையும் உணர்ச்சிகரமான க்ளைமேக்ஸோடு படம் முடிகிறது.
அலியாபட்டின் வீராத்ரிபாதி கொஞ்சம் டார்க்கான லைஃப் பேக்கிரவுண்ட் கொண்ட பெண் பாத்திரம். பெரும் செல்வந்தரின் மகளான இவர், மறுநாள் திருமணம் எனும் நிலையில் தன்னுடைய வருங்கால கணவனோடு ஜாலி ரைட் போகும்போது யதேச்சையாக ஒரு கும்பலால் தேவையே இல்லாமல் கடத்தப்படுகிறாள். இவளது செல்வாக்கான குடும்பப் பின்னணியை பிற்பாடு உணர்ந்த கும்பல் அச்சப்படுகிறது. காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க இவளது கடத்தலுக்கு காரணமானவன் வேறு வேறு இடங்களுக்கு இவளை அழைத்துச் செல்கிறான். சில நாட்களிலேயே கடத்தப்பட்டவளுக்கும், கடத்தியவனுக்கும் பரஸ்பர உள்ளப் பரிமாற்றம் நடக்கிறது. அவளுடைய சிறுவயது அனுபவங்கள், ஒரு குழந்தைக்குரிய அடிப்படை சுதந்திரத்தை அளிக்கவில்லை என்பதை அவன் உணர்கிறான். சொந்தக்காரராலேயே பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டவள் அவள். அதைகூட வெளியே சொல்லமுடியாத கட்டாயம் அவளது குடும்ப கவுரவத்துக்கு இருக்கிறது. பெரும் பணக்காரக் குடும்பத்தில் கூண்டுக்கிளியாக அடைந்துக் கிடந்தவள், இந்த கடத்தல்காரனுடனான இலக்கற்ற பயணத்தில் தன்னுடைய சுதந்திர உணர்வை உணர்கிறாள். ஒரு கட்டத்தில் இவளை திரும்பிப் போகச் சொல்கிறான் கடத்தல்காரன். வீட்டுக்கு திரும்பிச் செல்வது தன்னுடைய சுதந்திரத்தை பறிக்குமென்று இவள் மறுக்கிறாள். ‘ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்’ எழவுதான். ஒரு மலை வாசஸ்தலத்தில் இவர்கள் தங்கியிருக்கும்போது, பின்தொடர்ந்து வரும் போலிஸாரால் அவன் என்கவுண்டர் செய்யப்படுகிறான். பழைய வாழ்க்கையை தொடர விருப்பமில்லை என்று குடும்பத்தாரிடம் மறுத்துவிட்டு, அதே மலைவாசஸ்தலத்தில் அவனுடைய நினைவுகளோடு வாழ்க்கையை தொடங்குகிறாள் வீரா.

நான்கு படங்களுமே இந்திய மேல்தட்டு வர்க்கத்துப் பெண்களின் பிரச்சினைகளை, எதிர்கொள்ளும் நெருக்கடிகளை பேசுபவை. இவை வர்க்கத்தைவிட அவர்களது பாலினத்தை முதன்மைப்படுத்தியிருக்கின்றன என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுக்க பரவலாக ஒரே மாதிரியாக, ஒரே காலக்கட்டத்தில் வெவ்வேறு இயக்குனர்கள் சிந்தித்திருப்பது யதேச்சையான ஒற்றுமையாகதான் இருக்கக்கூடும். அல்லது மல்ட்டிப்ளக்ஸ் வசூல் (வாங்கும் சக்தி பெண்களுக்கு அதிகரித்திருக்கும் நிலையின் பொருட்டு) அவர்களை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறதா என்றும் நாம் ஆராய வேண்டும்.

தமிழில் இம்மாதிரி பெண்களின் உணர்வுகளை பேசும் படங்களுக்கு பெரிய பாரம்பரியம் உண்டு. ஸ்ரீதரில் தொடங்கி பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் என்று ஏராளமான இயக்குனர்கள் ஏற்கனவே இங்கு வலுவாக பேசியிருக்கிறார்கள். அந்த கண்ணி எங்கே அறுந்தது என்று நாம் தேடவேண்டும். கதாநாயகி என்பவர் வெறுமனே கதாநாயகனால் காதலிக்கப்படவும், ஃபாரின் லொக்கேஷனில் குத்தாட்டம் போடவும், மேக்கப் பூசிக்கொண்ட பார்பி பொம்மையாகவும் மட்டுமே பெரும்பாலான திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் போக்கினை இளைய தலைமுறை இயக்குனர்கள் மாற்றுகின்ற போக்கு உருவாக வேண்டும். இந்நான்கு படங்களுமே வணிகரீதியாக வெற்றி கண்டவைதான். குறைந்தபட்சம் வணிகத்தேவைக்காவது நாம் இந்த மாற்றத்தை உருவாக்கியாக வேண்டும்.

3 மார்ச், 2014

தெகிடி

ஷெர்லாக் ஹோம்ஸ், ஜேம்ஸ்பாண்ட், சங்கர்லால், கணேஷ்-வசந்த், விவேக் - ரூபலா, நரேன் - வைஜயந்தி, பரத் –சுசிலா... இவர்கள் எல்லாம் யாரென்று உங்களுக்கு தெரிந்திருந்தால், ‘தெகிடி’ உங்களுக்கான படம்.

எண்பதுகளின் மத்தியில் வெளிவந்த ‘க்ரைம் நாவல்’ தமிழ் சமூகத்தில் குறிப்பிடத்தக்க சலனத்தை ஏற்படுத்திய பத்திரிகை. கிட்டத்தட்ட இதே காலக்கட்டத்தில்தான் சிறுசுகளிடையே சக்கைப்போடு போட்ட ராணிகாமிக்ஸில் ஜேம்ஸ்பாண்ட் இடைவிடாமல் (அரைகுறை ஆடை அழகிகளின் துணையோடு) துப்பறிந்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்னாலும், பின்னாலும் துப்பறியும் க்ரைம் கதைகளுக்கு தமிழில் குறைச்சல் இல்லையென்றாலும் இந்த காலக்கட்டத்தை ‘கோல்டன் பீரியட்’ எனலாம். ‘டிடெக்டிவ்’ என்கிற ஆங்கில சொல் தமிழர்களின் காதலுக்குள்ளானது. சென்னையில் திடீரென ஆங்காங்கே ‘டிடெக்டிவ் ஏஜென்ஸிகள்’ முளைத்தன. வளர்ந்து பெரியவன் ஆனேனா ‘டிடெக்டிவ் ஏஜெண்ட்’ ஆவேன் என்று அந்தகால சிறுவர்கள் (நானும்தான்) இலட்சியம் கொண்டார்கள். உண்மையில் நம்மூர் டிடெக்டிவ் ஏஜென்ஸிகள் பெரும்பாலும் தரகர் வேலைதான் பார்த்தன என்பதெல்லாம் வேறு கதை. அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில் போய் பிரைவேட் டிடெக்டிவ்கள் துப்பறிய அப்படியென்ன பெரியதாக கேஸ் கிடைத்து தொலைக்கப் போகிறது?

தெகிடியின் ஹீரோ ஒரு டிடெக்டிவ். எம்.ஏ. கிரிமினலாலஜி படித்தவனுக்கு ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியில் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கிறது. சில தனி மனிதர்களின் ப்ரொஃபைலை அக்குவேறு ஆணிவேறாக அலசி உருவாக்கித் தருவதுதான் அவனுக்கு தரப்படும் அசைன்மெண்ட். இவன் துப்பறிந்த ஆட்கள் ஒவ்வொருவராக மண்டையை போடுகிறார்கள். இது யதேச்சையான ஒற்றுமையல்ல என்று உணருகிறான். பிரச்சினை என்னவென்றால் அவன் பார்த்த கடைசி அசைன்மெண்ட் அவனுடைய காதலியுடையது. அவளும் இறந்துவிடுவாளோ என்கிற அச்சத்தில் ஒட்டுமொத்த கேஸையும் தனிப்பட்ட முறையில் விசாரிக்க ஆரம்பிக்கிறான். கொலையாளிகள் யாரென்பது ‘திடுக்’ க்ளைமேக்ஸ்.

யெஸ். அப்படியே ராஜேஷ்குமார் டெம்ப்ளேட் கதைதான். நீங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட க்ரைம்நாவல்களை வாசித்திருக்கும் பட்சத்தில் திரைக்கதையின் முடிச்சுகளை படம் பார்க்கும்போதே ஒவ்வொன்றாக நீங்களே அவிழ்த்து விளையாடலாம். உங்களுக்குள் ஒரு புத்திசாலித்தனமான டிடெக்டிவ் இருக்கும் பட்சத்தில் க்ளைமேக்ஸ் வில்லன் யாரென்று இடைவேளையின் போதே கூட யூகித்துவிடலாம்.

தமிழுக்கு புதுசு என்றெல்லாம் சொல்ல முடியாது. ஜெயசங்கரில் தொடங்கி எவ்வளவோ சி.ஐ.டி.கள் ஏகப்பட்ட கேஸ்களை நம்முடைய வெள்ளித்திரையில் துப்பறிந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள். க்ளைமேக்ஸில் க்ளப் டான்ஸ், காதில் பூச்சுற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் என்றே நம்மூர் துப்பறியும் படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ‘தெகிடி’ இதிலிருந்து மாறுபடுவது, அதன் நம்பகத்தன்மை கொண்ட காட்சிகளால். மொக்கைபீஸான நாமே டிடெக்டிவ்வாக இருக்கும்பட்சத்தில் அதிகபட்சமாக நம்மால் எதை செய்யமுடியுமோ அதைதான் ஹீரோ செய்கிறார். படத்தில் வரும் ஒரே ஒரு ஆக்‌ஷன் ப்ளாக் கூட, பறந்து பறந்து தூள்பறத்தும் வகையில் அமையாத நார்மலான சண்டைக்காட்சிதான்.
ஹூரோ அசோக்செல்வன் ஜம்மென்று சாஃப்ட்வேர் புரோகிராம்மர் மாதிரி இருக்கிறார். அவருக்கு நுண்னுணர்வு அதிகமென்று நம்பக்கூடிய தோற்றம். ஹீரோயின் ஜனனிக்கு பெரிய சைஸ் கண்கள். முகத்தில் காது, வாய், மூக்கையெல்லாம் விட கண்தான் பளிச்சென்று தெரிகிறது.

க்ரைம் தொடர்கதைகளுக்கு வரையப்படும் ஓவியங்கள் பாணியில் டைட்டில். தேவையான இடங்களில் மட்டும் பாடல்கள். விறுவிறுப்பான பின்னணி இசை. அலட்டலில்லாத இயக்கம் என்று கமர்சியல் காம்ப்ரமைஸ் இல்லாமல் கச்சிதமான படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ். ‘நல்ல படமே தமிழில் வரமாட்டேங்குது’ என்று அலுத்துக்கொள்பவர்கள், திரையரங்கம் சென்று பார்த்து ஆதரிக்க வேண்டிய திரைப்படம்.

27 பிப்ரவரி, 2014

ஆஹா கல்யாணம்

ஆதித்யா சோப்ராவின் யாஷ்ராஜ் பிலிம்ஸின் முதல் தென்னிந்திய பிராஜக்ட். மொத்தமாக முப்பத்தைந்து கோடியை போட்டுவிட்டு, ரிசல்ட்டுக்காக நகம் கடித்துக் கொண்டிருந்தார்களாம். ‘ஏ’ சென்டர் தியேட்டர்களில் நல்ல ரிசல்ட். தமிழ், தெலுங்கு இரண்டிலும் சேர்த்து ஈஸியாக ஃபிப்டி சி தாண்டிவிடும் என்று மார்க்கெட்டில் சொல்கிறார்கள். இனி இந்தியில் ஹிட் அடிக்கும் படங்களை டப் அடிக்காமல், இதுபோல தென்னிந்திய நடிகர்களை வைத்து பை-லிங்குவலாக ஏகப்பட்ட படங்கள் நம்மூர் தியேட்டர்களை நோக்கி காவடி தூக்க போகின்றன. முன்பு நம்மூர் ஜெமினி வாசன்களும், ஏவிஎம்களும், சித்ராலயா ஸ்ரீதர்களும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்த பிசினஸ் இது. இப்போது வட இந்திய பனியாக்களின் டர்ன்.
ஹீரோ நானியை விடுங்கள். ஹீரோயின் வாணிகபூர் ஓர் அட்டகாசமான வரவு. சாமுத்ரிகா லட்சணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த அம்சங்களுக்கும் கட்டுப்படாத காட்டுத்தனமான அழகு. ஜெயப்பிரதாவையும், அனுஷ்காவையும், ஸ்ருதிஹாசனையும் பிசைந்துசெய்தது மாதிரி அசாதாரணமான காம்பினேஷனில் பிரமிக்கவைக்கும் பேரெழில். கழுத்துக்கும், கழுத்துக்கு கீழான பிராப்பர்ட்டிக்கும் இடையில் மட்டுமே ஒண்ணு, ஒன்றரை அடி கேப் இருக்கும் போலிருக்கிறது. தமிழர்கள் அகலமான முதுகுக்கே ஆவென்று வாயைப்பிளப்பார்கள். முன்புறத்தில் செக்கச்செவேலென்ற நீண்ட, அகன்ற கழுத்தை பார்த்து மெண்டலாகி திரியப் போகிறார்கள். வாணியின் கழுத்தழகை ‘பளிச்’சிடவென்றே பர்ஃபெக்டான காஸ்ட்யூம்கள். போலவே அவரது மத்திய இடைப்பிரதேசத்தின் நீளம், அகலமும் ஜாஸ்தி. இடுப்பை அப்படியும் இப்படியுமா ஆட்டி, ஆட்டி டேன்ஸ் ஆடும்போது தியேட்டரில் ஏகப்பட்ட விக்கெட்டுகள் டொக்காகின்றன. இண்டர்வெல் ப்ளாக்கில் சூடான லிப்லாக் சீன் வேறு. பெரிய ராட்டிணத்தில் ரவுண்ட் அடித்து கோலிவுட் + டோலிவுட்டின் அடுத்த சில ஆண்டுகளை ஆளப்போகிறார் இந்த தேவதை.

பெரும்பாலான காட்சிகள் அனைத்திலும் நாயகன், நாயகி இருவருமே இருக்கிறார்கள். அல்லது இவர்களில் ஒருவர் இடம்பெறும் காட்சிகள் மட்டும்தான். வேறு கிளை பாத்திரங்களோ, கிளைக்கதைகளோ, தனியாக காமெடி டிராக்கோ இல்லவே இல்லை. ஏகப்பட்ட பாத்திரங்கள் இருந்தும் இரண்டே இரண்டு கேரக்டர்களை மட்டுமே மையப்படுத்தி அறுபத்தஞ்சி சீன் எழுதுவது எப்படியென்று, உதவி இயக்குனர்கள் இப்படத்தின் திரைக்கதை கட்டுமானத்தை பாடமாக படிக்க வேண்டும். இடைவெளி இன்றி அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் இருந்தும் காட்சிகள் சலிக்கவேயில்லை. லேசான டப்பிங் வாசனைதான் பெரும் குறை. மற்றபடி பக்காவான மல்ட்டிப்ளக்ஸ் மூவி. கம்ப்ளீட் ஃபேமிலியோடு ஜாலியாக பார்க்கலாம்.

ஆஹா ஓஹோ கல்யாணம்!

25 பிப்ரவரி, 2014

வி.ஐ.பி.களின் காலர் ட்யூன்!

மாதத்துக்கு முப்பது ரூபாய் செலவழித்தால் போதும். நமக்கு போன் செய்பவர்களின் காதில் ‘ட்ரிங் ட்ரிங்’குக்கு பதிலாக நாமே தேர்ந்தெடுக்கும் பாடல் இசைவெள்ளமாய் பாய்கிறது. சாமானியர்களுக்கு மட்டும்தான் இந்த ‘காலர் ட்யூன்’ வசதியா. அரசியல் புள்ளிகளும் அசத்தலாமே. ஒய் நாட்? வி.ஐ.பி.களின் தற்போதைய ‘மூடு’க்கேற்ப நம்முடைய தாழ்மையான பரிந்துரைகள்...

அஞ்சா நெஞ்சன் :
“அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை...
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை?”
தளபதி :
“முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி
பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக 
அன்பாலே இணைந்து வந்தோம் 
ஒண்ணுக்கு ஒண்ணாக” 

(சோக வெர்ஷன் பாடல்) 
கலைஞர் :
“கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்த காலமே...
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே...
என் தேவனே ஓ தூக்கம் கொடு 
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு 
பாலைவனம் கடந்து வந்தேன் 
பாதங்களை ஆறவிடு” 
புரட்சித்தலைவி :
“பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குதான்
என எண்ண வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் 
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்”

டாக்டர் அய்யா & சின்ன அய்யா :
“மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
திண்டிவனத்து மாம்பழம்
அழகான மாம்பழம் 
அல்வா போன்ற மாம்பழம் 
உங்களுக்கும் வேண்டுமா 
ஓடி இங்கே வாருங்கள் 
பங்கு போட்டு தின்னலாம் 
பரவசமாய் பாடலாம்” 
(ரைம்ஸ்) 
கேப்டன் :

பாஜகவோடு கூட்டணி அமைந்தால் :

“தாமரைப் பூவுக்கும்
‘தண்ணிக்கும்’ என்னிக்கும்
சண்டையே வந்ததில்லை
மாமனை அள்ளி நீ
தாவணி போடுக 
மச்சினி யாருமில்லை”


காங்கிரஸோடு கை கோர்த்தால் :

“கை, கை, கை வெக்கிறா வெக்கிறா
கைமாத்தா என் மனசை கேக்குறா கேக்குறா”


தனித்து நின்றால் :

“தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமையும் இழந்தோம் 
உடமையும் இழந்தோம் 
உணர்வை இழக்கலாமா?” 
அண்ணியார் :

“வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும்
துக்கத்திலே நீ இருந்தா
கரை சேரும் காலம் எப்போ?”
எழுச்சித் தமிழர் : 

“வருது வருது – அட
விலகு விலகு
சிறுத்தை வெளியே வருது
சிறுத்தை நான்தான்
சீறும் நாள்தான்” 

செந்தமிழன் :

“நான் யாரு
எனக்கேதும் தெரியலியே
என்னைக் கேட்டா
நான் சொல்ல வழியில்லையே
என்னை இந்த பூமி 
கொண்டு வந்த சாமி 
யாரைதான் கேட்டானோ?” 
பொன்னார், புரட்சிப்புயல், பாரிவேந்தர், நீதிக்காவலர் மற்றும் கொ.மு.கவின் எல்லா பிரிவு தலைவர்களுக்கு சேர்த்து க்ரூப் ட்யூன்!

“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளிக்கூட்டம் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்”
தா.பா, ஜி.ரா மற்றும் பிரகாஷ்காரத், பரதன் உள்ளிட்ட அகில இந்திய கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் அனைவருக்கும் சேர்த்து க்ரூப் ட்யூன்!

“அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
புரட்சித் தாயன்றி வேரொன்று ஏது?”