14 மார்ச், 2014

ஆயிரத்தில் ஒருவன்

“வெற்றி! வெற்றி!!” என்று முழங்கியவாறே அறிமுகமாகும் அந்த நபரை பார்த்ததுமே பிடித்துவிட்டது.

அப்போது அனேகமாக எனக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். ஓம் பிரகாஷ் மாமா தலைமையில் என்னுடைய ஏகப்பட்ட அண்ணன்களோடு படத்துக்கு போயிருந்தேன். அம்மா, அப்பா இல்லாமல் தியேட்டருக்கு போய் பார்த்த முதல் படம் அதுவாகதான் இருக்கும். நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படமும் அதுதான். மடிப்பாக்கம் தனலஷ்மி திரையரங்கம். ஐந்து ஆண்டு லைசென்ஸில் கூரைக்கொட்டகையில் இயங்கும் தற்காலிக ‘சி’ சென்டர் தியேட்டர். அந்த தியேட்டர் இருந்த இடத்தில் இப்போது ஓர் அப்பார்ட்மெண்ட் இருக்கிறது.

ஆறு மணி படத்துக்கு ஐந்து மணிக்கெல்லாம் போய் வரிசையில் முதலில் நின்றிருந்தோம். ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்கள் கத்திக் கொண்டிருந்தன. டிக்கெட் கிடைத்ததுமே ஆளில்லாமல் ‘ஜிலோ’வென்றிருந்த தியேட்டருக்குள் கத்திக்கொண்டே ஓடினோம். தரை டிக்கெட். சின்னப் பையன் என்பதால் முன்னால் அமருபவரின் தலை மறைக்கும் என்பதற்காக மணலை கூட்டி, எனக்கு கொஞ்சம் ஹெயிட்டான இருக்கை ஏற்படுத்தித் தந்தார் பிரபா அண்ணா. திரையில் நியூஸ் ரீல். கருப்பு வெள்ளையில் காந்தி சத்தியாக்கிரகத்துக்காக ஸ்பீட் மோஷனில் நடந்துக் கொண்டிருந்தார். “ஆனா நம்ம படம் கலருதான்” என்றார் பாலாஜி அண்ணா. அப்போதெல்லாம் தனலஷ்மியில் கருப்பு வெள்ளை படங்கள்தான் அதிகம் திரையிடப்படும்.

அக்கம் பக்கத்தில் அசுவாரஸ்யமாக நிறைய பேர் பீடி வலித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் பக்கம் செம கூட்டம். பெஞ்ச், சேர் என்று எல்லா டிக்கெட்டுகளும் நிறைந்திருந்தது. சட்டென்று புரொஜெக்டர் வண்ணத்தை ஒளிர்ந்தது. திரையில் ‘பத்மினி பிக்சர்ஸின் ஆயிரத்தில் ஒருவன்’. தியேட்டரிலிருந்த அத்தனை பேரும் விசில் அடித்தார்கள். எம்.ஜி.ஆர் பெயர் டைட்டிலில் போடப்பட்டதுமே விசிலின் டெஸிபல் இரண்டு, மூன்று மடங்கானது. காதை பொத்திக்கொண்டேன். கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது. திரையில் வாத்யாரை கண்டதுமே அந்த அச்சம் அகன்று, விவரிக்க இயலா பரவசம் தோன்றியது. எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய தலையலங்காரம், உடையலங்காரம், தினவெடுக்கும் தோள்கள், கருணை பொங்கும் கண்கள், லேசாக ஸ்டைலாக கோணும் வாய், சுறுசுறுப்பான நடை, புயல்வேக வாள்வீச்சு... தமிழின் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டாராக அவர் விளங்குவதில் ஆச்சரியமென்ன? “பூங்கொடி கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆர் வாளால் விளையாடும் காட்சி முடிந்ததுமே தூங்கிவிட்டதாக ஞாபகம். என்னை தூக்கிக்கொண்டு வந்துதான் வீட்டில் போட்டிருக்கிறார்கள். மறுநாள் அப்பா படத்துக்கு போகும்போதும், அவரோடு அடம்பிடித்து போய் ‘சேர்’ டிக்கெட்டில் அமர்ந்து பார்த்தேன். கடந்த முப்பதாண்டுகளில் ஆயிரத்தில் ஒருவனை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கு வழக்கேயில்லை. அந்த முதல்நாள் பரவசம் இன்னமும் ரத்தத்தில் கலந்திருக்கிறது. இப்போதும் பரபரப்பாக இருக்கிறது.
நெய்தல் நாட்டின் பிரபலமான மருத்துவர் மணிமாறன். மனிதாபிமானம் கொண்டவர். அந்நாடு சர்வாதிகாரியால் ஆளப்படுகிறது. இந்த சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடும் புரட்சிக்காரர்களுக்கு மணிமாறன் சிகிச்சை அளிக்கிறார். எனவே அவரும் சதிகாரர் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தீவாந்திர தண்டனைக்கு ஆளாகிறார். கன்னித்தீவு என்கிற தீவுக்கு இவர்கள் அடிமைகளாக அனுப்பப்படுகிறார்கள். அங்கே அடிமைகளின் தலைவனாக உருவெடுக்கிறார் மணிமாறன்.

கன்னித்தீவை ஆளும் தலைவனின் மகள் கட்டழகி பூங்கொடி. அழகிலும், ஆற்றலிலும், மனிதாபிமானத்திலும் சிறந்துவிளங்கும் மணிமாறனை காதலிக்கத் தொடங்குகிறாள். அவனுக்கு மட்டும் அடிமைத்தளையிலிருந்து சுதந்திரம் கிடைக்க வழி செய்கிறாள். இதை மறுக்கும் மணிமாறன், தன்னுடைய தோழர்கள் அனைவருக்குமே சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறார்.

இதற்கிடையே கடற்கொள்ளையர் கன்னித்தீவை தாக்குகிறார்கள். அடிமைகள் இணைந்து கடற்கொள்ளையரை வென்றால் சுதந்திரம் நிச்சயம் என்று அறிவிக்கிறான் தீவின் தலைவன். ஆனால் வெற்றி கண்டபிறகு துரோகம் இழைக்கிறான். கடுப்பான புரட்சிக்காரர்கள் தீவிலிருந்து கலகம் செய்து தப்பிக்கிறார்கள். சூழ்நிலையின் காரணமாக கடற்கொள்ளையரோடு இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பரபரப்பான ட்விஸ்ட்டுகளை கடந்து பூங்கொடியை கைப்பிடிக்கும் மணிமாறன், தன்னுடைய நாட்டையும் எப்படி சுதந்திர நாடாக்குகிறார் என்பதுதான் கதை.

பார்வைக்கு பரபரப்பான காட்சிகள் மட்டுமின்றி, காதிற்கினிய பாடல்களும் படத்தின் பிரும்மாண்டமான வெற்றிக்கு அடிகோலின. ஜெயலலிதாவின் இளமை, நாகேஷின் நகைச்சுவை, நம்பியாரின் வில்லத்தனம் என்று பல்சுவை விருந்து. காசை தண்ணீராக செலவழித்து பிரும்மாண்டத்தை திரையில் உருவாக்கி காண்பவர்களின் கண்களை ஆச்சரியத்தால் விரியவைத்தார் பந்துலு.

இயக்குனர் பி.ஆர்.பந்துலு முன்பாக தயாரித்து இயக்கிய ‘கர்ணன்’ பல அரங்குகளில் நூறு நாள் ஓடியிருந்தாலும், மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக பலத்த நஷ்டத்துக்கு உள்ளாகியிருந்தார். அதை ஈடுகட்டும் விதமாக வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரை வைத்து ஒரு சூப்பர்ஹிட் படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டார். அதுதான் ஆயிரத்தில் ஒருவன். பந்துலுவின் எல்லா கடன்களையும் ஆயிரத்தில் ஒருவன் அடைத்ததோடு மட்டுமில்லாமல், அவரை மீண்டும் திரையுலகில் தலைநிமிரவும் வைத்தான். ‘கேப்டன் ப்ளட்’ என்கிற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டது இப்படம் என்று எம்.ஜி.ஆரின் பெரும் ரசிகரான கலாப்ரியா எழுதியிருக்கிறார்.
சினிமாத்துறையில் நீண்டகாலம் இயங்கிய ஒவ்வொரு நடிகருக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஒரு படம் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாஸ்டர் பீஸ்களை தந்தவர்களே சூப்பர் ஸ்டார்களாக கருதப்படுகிறார்கள். நாடோடி மன்னனுக்கு பிறகு, அதை மிஞ்சும் வெற்றி எம்.ஜி.ஆருக்கு நீண்டகாலமாக அமையாமல் இருந்தது. இடையில் சிவாஜி ஏகப்பட்ட மாபெரும் வெற்றிப்படங்களாக நடித்துத் தள்ளிக் கொண்டிருந்தார். அம்மாதிரி பெரும் வெற்றியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் ஆபத்பாண்டவன். வசூலில் தன்னை யாராலும் நெருங்கமுடியாத சக்கரவர்த்தியாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில்தான் தன்னை மாற்றிக் கொண்டார் எம்.ஜி.ஆர். இதற்கு பிறகு அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் என்று அவர் படைத்த சரித்திரங்கள் ஏராளம். அவ்வகையில் பார்க்கப் போனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ புரட்சித்தலைவரது பிக்பேங்க் ரீ என்ட்ரி.

11 கருத்துகள்:

  1. அரசியலுக்கு் அப்பாற்பட்டு ்நேர்மை யான விமர்சனம் தந்த யுவாவிற்குநன்றி. இப்போது தான் ஒரிஐனல் யுவாவை காண முடிகிறது.

    பதிலளிநீக்கு
  2. Aayirathil Oruvan came after Anbee Vaa and Enga Veettup Pillai. This is just an information.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா5:42 PM, மார்ச் 14, 2014

    no.. yuva is correct.. please see the link :

    http://en.wikipedia.org/wiki/M._G._Ramachandran_filmography

    www.abimanyuonline.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. உணர்ச்சி பூர்வமான விமர்சனம், தன் சுய சரிதையோடு..

    பதிலளிநீக்கு
  5. RS, Anbe vaa came after Aayirathil oruvan. But you are right about Enga veetu pillai- that came earlier

    பதிலளிநீக்கு
  6. ஓடும் மேகங்களே பாடலில் ஒளிப்பதிவுக்கருவி விளையாடியிருக்கும் பாருங்கள் அற்புதமாயிருக்கும். அந்த காலத்திலேயே ஆங்கில படங்களுக்கு இணையாக இருக்கும்.

    இதன் ஒருசில கோனங்களை செந்தூரப்பூவே உந்தன் தேன் சிந்த வா வா பாடலில் நகலெடுத்து இருப்பார்கள்.

    ஒளிப்பதிவு கோணங்‌களின் மூலமும் மனங்களை கவரமுடியும் என்று இந்த இரண்டு பாடல்கள் மூலமாகத்த்தான் தெரிந்து கொண்டேன்.

    சினிமாவின் ஒவ்வொரு அம்சமும் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் வித்ததில் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா11:00 AM, மார்ச் 17, 2014

    ஆபத்பாந்தவன்.பாண்டவன் இல்லை.
    -ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா4:38 PM, மார்ச் 17, 2014

    Because of Jeyalalitha.......

    பதிலளிநீக்கு
  9. “பூங்கொடி கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆர் வாளால் விளையாடும் காட்சி முடிந்ததுமே தூங்கிவிட்டதாக ஞாபகம். என்னை தூக்கிக்கொண்டு வந்துதான் வீட்டில் போட்டிருக்கிறார்கள்..........This will be the highlight of movie

    பதிலளிநீக்கு
  10. "ஓடும் மேகங்களே" is still my in favorite list..

    பதிலளிநீக்கு
  11. No body has said anything about "Atho antha " song, this was very popular even during my college days

    பதிலளிநீக்கு