“மோடியை மதவாதி என்று இந்திய புத்திஜீவிகள் சொல்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை”காலம் ஒரு மோசமான வில்லன். எமனுக்கு காலத்தை குறிக்கிற விதமாக காலன் என்று பெயர் வைத்தது எவ்வளவு பொருத்தம். பாழாய்ப்போன நினைவுசக்தி மட்டும் நமக்கு இல்லாமல் போனால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று யோசித்தேன். “வெள்ளைக் காக்கா பறக்கிறது” என்று நம் மனதுக்கு நெருக்கமான எழுத்தாளர் சொல்கிறாரென்றால், “ஆமாம். வானத்தில் பறக்கும் காக்கா, கொக்கு மாதிரி வெள்ளையாகதான் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, அதை நம்பவும் ஆரம்பித்திருப்பேன். எழவு. எல்லாவற்றையும் மறக்கக்கூடிய மனநோய் எனக்கு வந்து தொலைக்கவில்லையே? இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டை மறந்து, அந்நாளைய நினைவுகளை தலைமுழுக முடியவில்லையே?
மிகச்சரியாக பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அந்த கலகக்கார எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வாசித்துவிட்டு சூடான அறிவுகெட்டவர்களில் நானும் ஒருவன். ஒருவேளை அன்று சூடாகியிருக்காவிட்டால், இன்று நரேந்திர மோடியின் வெற்றியை தி.நகர் தாமரை இல்லத்தில் ‘பாரத்மாதா கீ ஜே’ கோஷம் போட்டு, பொதுமக்களுக்கு லட்டு கொடுத்து நானும் கொண்டாடியிருக்கலாம். வளர்ச்சியின் நாயகன் மோடியை பாராட்டி பேஸ்புக்கில் எழுதி ‘லைக்’ அள்ளியிருக்கலாம். அரசியல் சமரசங்களுக்கு உட்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆதரவாளனின் உள்ளம் நாணல் மாதிரிதான். மிக சுலபமாக வளையும். ஆனால் இதுபோன்ற கட்சி சார்பற்ற எழுத்தாளர்களின், சிந்தனையாளர்களின், செயற்பாட்டாளர்களின் கருத்துதான் அவனது உள்ளத்தை வலுவாக்கி, ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்துக்கு ஆதரவான வலுவான சிந்தனைகளை உருவாக்கும்.
எழுத்தாளர் எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘நரேந்திர மோடியும், நாஜி ஜெர்மனியும்’. கட்டுரை இவ்வாறாக ஆரம்பிக்கிறது.
“நாடாளுமன்றத்தில் நடந்து வரும் அமளி துமளி பற்றி சமீபத்தில் இரண்டு பேர் மிகவும் கவலைப்பட்டிருக்கின்றனர். ஒருவர் சோ. இவரது கவலைகள் பற்றி எனக்கு அக்கறை இல்லை”எழுத்தாளர் பிற்பாடு இதே சோ நடத்தும் துக்ளக்கில்தான் நிறம்மாறி எழுதினார் என்பது வரலாற்று சோகம்.
அக்காலக் கட்டத்தில் நாடாளுமன்றத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக நடந்துவந்த அமளிதுமளிகள் நியாயம்தானென்று வலுவான வாதங்களை வைத்து கட்டுரை தொடர்கிறது.
“ஒரு அரசு ஊழியர் நூறு ரூபாய் லஞ்சம் வாங்கினால் அவரை வேலையை விட்டுத் தூக்க முடியும். சட்டம் அத்தனை கடுமையாக உள்ளது. ஆனால், குஜராத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த கலவரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். (இன்றைய தேதியில் எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டியுள்ளது). ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருக்கின்றனர். ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அகதிகளாயிருக்கின்றனர். சொந்த ஊரில் சொந்த நாட்டில் வாழமுடியாத நிலைமை!
இக்பால் ஜாஃப்ரி ஒரு முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அவர் வீட்டில் ஒரு கும்பல் நுழைந்திருக்கிறது. அவர் வீட்டுக்கு பாதுகாப்பாக அங்கே வேன்களில் இருந்த போலீஸ்காரர்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை. எம்.பி.யின் கண் முன்பாகவே அவரது பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு பின்னர் கொளுத்தப்பட்டுள்ளனர். பிறகு இக்பால் ஜாஃப்ரியின் தலை வெட்டப்பட்டு அவரது உடலும் துண்டாடப்பட்டிருக்கிறது.
கலவரக்காரர்களெல்லாம் வெறும் ரவுடிகளோ காலிகளோ அல்ல. மத்திய தர வர்க்கத்தினர். கையில் செல்போன்களுடன் கலவரத்தை ஒருங்கிணைத்திருக்கின்றனர். முஸ்லீம்களின் வியாபார ஸ்தலங்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் நிரப்பப்பட்ட லாரிகளுடன் வந்து கொளுத்தியிருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!
'கோத்ரா ரயில் பெட்டியில் 69 பேர் உயிரோடு எரிக்கப்பட்டதற்கான எதிர்வினையே இது' என்கிறார் மோடி. ஆனால், இரண்டுக்கும் அடிப்படையில் வித்தியாசம் இருக்கிறது. கோத்ரா சம்பவம் திடீரென்று நடந்த ஒன்று. ஆனால், அதற்கு பிறகு நடப்பதெல்லாம் அரசாங்கத்தின் உதவியோடு நடக்கும் திட்டமிட்ட படுகொலை.
நாஜி ஜெர்மனியில் யூதர்களுக்கு நேர்ந்த கொடுமைதான் ஞாபகம் வருகிறது.
ஒரு சம்பவம். மதிய வேளையில் ஒரு தம்பதி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஐம்பது பேர் கொண்ட கும்பல் ஸ்கூட்டரை நிறுத்துகிறது. கும்பலின் கைகளில் வாள், அரிவாள், திரிசூலம், கத்தி போன்ற ஆயுதங்கள். ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபரின் பெயரைக் கேட்கிறது கும்பல். அந்த நபர் ஏதோ ஒரு இந்து பெயரைச் சொல்கிறார். கும்பலுக்கு நம்பிக்கையில்லை. 'பேண்ட்டைக் கழற்று'. அடுத்த கணம் அந்த நபரின் மீது பாய்கிறது திரிசூலம்.
அவர் பெயர் முன்னா பாய். வயது 28. சந்தர்ப்பவசமாகப் பிழைத்துவிட்டதால் இப்போது மருத்துவமனையில் கிடக்கிறார். ஆனால், அவர் மனைவி மும்தாஜ் பானுவுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அந்தக் கும்பல் அவரை நிர்வாணமாக்கி அவரது பிறப்புறுப்பில் தொடர்ந்து கத்தியால் குத்திக் கொன்றுவிட்டது.
மற்றொரு இடம். 5000 பேர் கொண்ட கும்பல். அவர்களுக்கு நடுவே ஒரு பெண். அத்தனை பேருக்கும் எதிரே அப்பெண் பலராலும் தொடர்ந்து வன்புணர்ச்சி செய்யப்பட்டு தீயில் தூக்கியெறியப்படுகிறாள்.
இந்தக் கலவரத்தில் மாட்டிக்கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து சென்னை திரும்பிய என் நண்பர் ஒருவர் சொன்ன சம்பவம்: சுற்றிவர பெட்ரோல் கேன்களுடன் கலவரக்காரர்கள். நடுவில் உயிர்ப் பீதியில் நண்பர். 'நீ யார்? பேர் என்ன?' என்று கேட்டிருக்கின்றனர். பெயரை சொல்லியிருக்கிறார் நண்பர். அவர் களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. வழக்கம்போல் பிறப்புறுப்பை பரிசோதித்த பிறகே அவரை விட்டுச் சென்றிருக்கிறது கும்பல். இதைக் கேட்டதும் நான் நடுங்கிப் போனேன். ஏனென்றால் மருத்துவக் காரணங்களுக்காக நான் Circumcision செய்து கொண்டவன். நண்பரின் இடத்தில் நான் இருந்திருந்தால்... நினைத்தாலே குலை நடுங்குகிறது.
இதுபோல் ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரக்கணக்கான சம்பவங்கள். எல்லாவற்றுக்கும் சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. சில ஆவணப்படங்கள் கூட எடுக்கப்பட்டுள்ளன. மனித உரிமை கமிஷனை சேர்ந்தவர்களும் நேரில் பார்த்துவிட்டு இதைத்தான் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
நான்கு தினங்கள் ஒரு பொந்தில் ஒளிந்து கிடந்து தப்பித்து தில்லிக்கு அகதியாக ஓடிவந்துள்ள ரேஷ்மா பென் என்ற பெண் சொல்லியிருக்கும் சம்பவம் இது:
''முதலில் அவர்கள் ஒரு பத்து வயதுப் பெண்ணை கற்பழித்தார்கள். பிறகு எனக்குத் தெரிந்த கெளஸர் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணை மாற்றி மாற்றி ஒரு கும்பல் கற்பழித்தது. பிறகு அவள் வயிற்றை அரிவாளால் வெட்டினார்கள். வெளியில் வந்து விழுந்த குறைமாதக் கருவை எரியும் தீயில் தூக்கிப் போட்டார்கள். பிறகு அவளையும் கண்டதுண்டமாக வெட்டித் தீயில் போட்டார்கள்.''
தப்பிப் பிழைத்து ஓடிவரும் அகதிகள் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்கிறது. பெண்களின் வயிற்றைக் கத்தியால் கிழித்து எரியும் துணிப் பந்தை அதற்குள் திணிப்பது; கத்தியால் முஸ்லீம்களின் நெற்றியில் 'ஓம்' போடுவது... இதையெல்லாம் முன்னின்று நடத்துவது எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள். உதவி செய்வது போலீஸ்.
எங்கு பார்த்தாலும் கரிக்கட்டையாய் எரிந்து கிடக்கும் சிறுவர்களின் உடல்கள், தலை துண்டிக்கப்பட்ட உடல்கள், எரிந்து போன வாகனங்கள், வீடுகள், கடைகள், மசூதிகள்...
குவியல் குவியலாக மனித உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
நிலைமையை நேரில் கண்ட மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ''வார்த்தைகளால் விவரிக்க முடியாத பயங்கரம்'' என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், பிரதம மந்திரிக்கோ, கலவரம் துவங்கி ஒரு மாதம் வரை நேரில் வர நேரமில்லை. இடையில் கவிதை எழுத வேண்டிய அவசரமான இலக்கியப் பணி. என்ன செய்ய?
ஒரு மாதம் கழித்து வந்து பார்த்து உணர்ச்சி வசப்பட்டு அழுதேவிட்டார்.
ஆனால், மறுநாள் கோவாவுக்கு சென்றவர் பால்கோவா சாப்பிட்டது போல் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்து முஸ்லீம்களைப் பற்றியும் திருவாய் மலர்ந்திருக்கிறார். ''இந்த முஸ்லீம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் அமைதியாக வாழ விரும்புவதில்லை!''
இரண்டு மாதங்களாகியும் இன்னும் குஜராத்தில் கலவரங்கள் அடங்கினபாடில்லை. இவ்வளவுக்குப் பிறகும் குஜராத் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் அமளி துமளி. இந்த அமளியால் வீணாகும் பணத்தைப் பற்றியும், பாராளுமன்றத்தின் புனிதத்தைப் பற்றியும் கவலைப்படும் தமிழ்நாட்டு விமர்சகர்கள்”வாசிக்கும்போதே ஓத்தா, ங்கொம்மா என்று வெறிவருகிறது இல்லையா. எழுதியவருக்கு எவ்வளவு வெறி இருந்திருக்கும்? எனவேதான் அதே வெறியோடுதான் எழுத்தாளர் குஜராத்தை, நாஜி ஜெர்மனியோடு ஒப்பிட்டு எழுதுகிறார்.
“குஜராத் முதல்வர் பதவி விலக வேண்டும்' என்ற கோரிக்கையைப் பார்த்தால் எனக்கு என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. ஹிட்லரை உலக நாடுகள் ராஜினாமா செய்யச் சொல்லியா கோரிக்கை விடுத்தன? குஜராத்தின் இப்போதைய நிலைமை நாஜி ஜெர்மனியுடன் மட்டுமே ஒப்பிடக் கூடியது என்பதில் சந்தேகமேயில்லை”
தான் வாழும் சமூகத்தில் நடந்த சமகால கொடுமைகளை ஓர் எழுத்தாளன் தட்டிக் கேட்பதைவிட அவனுக்கு வேறெதுவும் பெரிய கடமை இல்லை. மிகச்சரியாகவே அந்த எழுத்தாளர் தன் கடமையைச் செய்திருந்தார். எனவேதான் அவரை rebel என்று நம்பி, புதியதாக இலக்கியம் வாசிக்க வந்திருந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் அவரை தலைக்கு மேல் தூக்கிவைத்து கொண்டாடினோம். மன்னிக்கவும். சொம்பு தூக்கினோம். அதனால்தான் எழுத்தாளர் இப்போது நம்மை நோக்கி, “உங்களுக்கு சொம்பு தூக்கும் கலாச்சாரம் மட்டுமே தெரியும்” என்று விமர்சிக்கிறார். அவரது இந்த விமர்சனத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. எனவே அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். அன்று தங்க சொம்பாக இருந்தீர்கள். கவுரவமாக தூக்கினோம்.
ஆனால், அதே எழுத்தாளர் நாஜி ஜெர்மனிக்கு ஒப்பாக குறிப்பிட்ட நரேந்திரமோடியின் ஆட்சியை, ”குஜராத் மக்கள் மதவேறுபாடு இல்லாமல் மோடியை நேசிக்கிறார்கள். இல்லாவிட்டால் முஸ்லிம் மக்களும் மோடிக்கு ஓட்டு போட்டிருப்பார்களா? முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் இவ்வளவு வலுவான அரசை கொடுக்க முடியுமா?” என்று ஈயச்சொம்பாக மாறி கேள்வி கேட்கும்போதும், உங்களை தூக்கிக்கொண்டு திரிந்தால் வரலாறு மறந்த மொக்கையல்லவா நான்? நீங்கள் எழுதிய ‘ஆஸாதி.. ஆஸாதி.. ஆஸாதி’யை ஒருவரி விடாமல் பலமுறை வாசித்த உங்கள் வாசகன் எப்படி மொக்கையாக முடியும்?
மூன்றாம் முறையாக குஜராத்தில் மீண்டும் நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நம் எழுத்தாளர் 2008ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’. நீதி, நேர்மை, சமத்துவம் போன்ற ஜனநாயகத்தின் ஆதாரப் பண்புகளை இழந்துவரும் இந்திய மக்களின் மனம் மசோகிஸ்ட் மனோபாவமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று கவலை கொண்டிருந்தார். யாரை ஹிட்லர் என்று அப்போதெல்லாம் கடுமையாக விமர்சித்தாரோ, அவரையே இன்று ’உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவர்’ என்று ஒப்புக் கொள்கிறாரென்றால், அவரே மசோகிஸ்ட் மனோபாவத்துக்கு மாறிவிட்டாரோ என்றுதான் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது.
சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார் என்று குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டிக் கொண்டிருந்த எனக்கு தேசிய, உலகளாவிய அரசியல் இலக்கிய சிந்தனைகளை, ஆளுமைகளை, கலைகளை அறிமுகப்படுத்தியவர் சாருநிவேதிதாதான். இந்த நன்றியை சாகும்வரை மறக்க மாட்டேன். விஜய், அஜீத் ரசிகர்கள் மாதிரி நடந்துகொள்ளும் சாருவின் சமீபத்திய சொம்புகளுக்கெல்லாம் இந்த பெருமித உணர்வு கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம்தான். ஏனெனில் சாரு காத்திரமான கட்டுரைகளை படைத்து ஒரு மாமாங்கம் ஆகப்போகிறது.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இதுவரை அவரை எங்கும் பொதுவெளியில் விட்டுக் கொடுத்து பேசியதில்லை. இப்படியொரு கட்டுரை எழுதநேருமென கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் ’எப்படியிருந்த நீங்கள், இப்படி ஆகிவிட்டீர்களே’ என்று சுட்டிக் காட்ட வேண்டியது காலத்தின் அவசியமாகி விட்டது. அவரது நிஜமான வாசகன் என்கிற முறையில் இது என்னுடைய கடமையும் கூட. இந்திய தத்துவ விசாரம், குடும்ப முரண்கள், தனிநபர் அகச்சிக்கல்கள் என்று மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டிருந்த தமிழிலக்கியத்தில், வடிவநேர்த்தியிலும் சிந்தனைத்தளத்திலும் புதிய வடிவங்களை உருவாக்கி புலிப்பாய்ச்சல் நடத்தியவர் சாரு. இன்னமும் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. ஒரு வாசகன் என்கிற முறையில் அவரது நூல்கள் அத்தனையையும் காசு கொடுத்து வாங்கி வாசித்தவன்நான். அவரோடு முரண்படக்கூடிய சுதந்திரத்தையும் அவரது எழுத்துகள்தான் எனக்கு கொடுத்தது.
நீங்கள் எழுதியதையெல்லாம் வாசித்துதானே சாரு நாங்கள் இப்படி ஆனோம்? இன்று இந்துத்துவம் வென்றிருக்கலாம். ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் உறங்கிக்கொண்டிருந்த மதவாத மிருகம் கண் விழித்திருக்கலாம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள பலரும் நினைக்கலாம். ஆனால் சராசரிகளோடு மாறுபட்டு விதிவிலக்காக நிற்க வேண்டியது செயற்பாட்டாளர்களின் கடமை. முதன்முறையாக மதவாத சக்திகள் இந்தியாவில் பெரும்பான்மையாக ஆட்சியை கைப்பற்றியபோது அவர்களோடு யாரெல்லாம் இருந்தார்கள், மதச்சார்பற்ற இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்கள் என்பதை வரலாறு பதிந்து வைத்துக்கொள்ளப் போகிறது. வேதனையாகதான் இருக்கிறது. அந்த கருப்புப் பட்டியலில் நீங்களும் இடம்பெறுகிறீர்கள் சாரு. ஆபத்து அறியாமல் மோடி வென்றுவிட்டார் என்று கெக்கே பிக்கே என சிரித்துக்கொண்டு ஸ்டேட்டஸ் போட்டு விளையாடும் இணையமொக்கைகளோடு நீங்களும் சேர்ந்துவிட்டீர்கள் சாரு. உலக இலக்கியத்தை விடுங்கள். தமிழிலக்கிய உலகிலேயே எதிர்காலத்தில் நீங்கள் யாராய் அறியப்படப் போகிறீர்களோ என்கிற கவலைதான் என்னை ஆக்கிரமிக்கிறது.
பி.கு : மேற்குறிப்பிட்ட கட்டுரையில் சாருநிவேதிதா எழுதியிருந்ததாக வரும் பத்திகள் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ஆஸாதி ஆஸாதி ஆஸாதி’ நூலில் இருந்து எடுத்தாளப் பட்டிருக்கிறது. முதல் கட்டுரையில் தமிழ் விமர்சகர்கள் என்று சாரு குறிப்பிடுவது சோ தவிர்த்த இன்னொருவரை சுட்டி. அவர் வெங்கட் சாமிநாதன். குறிப்பிட்ட இந்த இரு கட்டுரைகளையும் முழுமையாக வாசிக்க விரும்புபவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்தால் அனுப்பி வைக்கிறேன்.