21 மே, 2014

ஒரு சொம்பு தூக்கியும் வெள்ளைக் காக்காவும்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக, நான் முன்பு பணியாற்றிய நாளிதழில், முன்பு கலகக்காரர் என்று தவறாக நினைத்துவந்த எழுத்தாளர் ஒருவர் பின்வருமாறு எழுதியிருந்தார்.
“மோடியை மதவாதி என்று இந்திய புத்திஜீவிகள் சொல்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை”
காலம் ஒரு மோசமான வில்லன். எமனுக்கு காலத்தை குறிக்கிற விதமாக காலன் என்று பெயர் வைத்தது எவ்வளவு பொருத்தம். பாழாய்ப்போன நினைவுசக்தி மட்டும் நமக்கு இல்லாமல் போனால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று யோசித்தேன். “வெள்ளைக் காக்கா பறக்கிறது” என்று நம் மனதுக்கு நெருக்கமான எழுத்தாளர் சொல்கிறாரென்றால், “ஆமாம். வானத்தில் பறக்கும் காக்கா, கொக்கு மாதிரி வெள்ளையாகதான் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, அதை நம்பவும் ஆரம்பித்திருப்பேன். எழவு. எல்லாவற்றையும் மறக்கக்கூடிய மனநோய் எனக்கு வந்து தொலைக்கவில்லையே? இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டை மறந்து, அந்நாளைய நினைவுகளை தலைமுழுக முடியவில்லையே?

மிகச்சரியாக பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அந்த கலகக்கார எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வாசித்துவிட்டு சூடான அறிவுகெட்டவர்களில் நானும் ஒருவன். ஒருவேளை அன்று சூடாகியிருக்காவிட்டால், இன்று நரேந்திர மோடியின் வெற்றியை தி.நகர் தாமரை இல்லத்தில் ‘பாரத்மாதா கீ ஜே’ கோஷம் போட்டு, பொதுமக்களுக்கு லட்டு கொடுத்து நானும் கொண்டாடியிருக்கலாம். வளர்ச்சியின் நாயகன் மோடியை பாராட்டி பேஸ்புக்கில் எழுதி ‘லைக்’ அள்ளியிருக்கலாம். அரசியல் சமரசங்களுக்கு உட்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆதரவாளனின் உள்ளம் நாணல் மாதிரிதான். மிக சுலபமாக வளையும். ஆனால் இதுபோன்ற கட்சி சார்பற்ற எழுத்தாளர்களின், சிந்தனையாளர்களின், செயற்பாட்டாளர்களின் கருத்துதான் அவனது உள்ளத்தை வலுவாக்கி, ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்துக்கு ஆதரவான வலுவான சிந்தனைகளை உருவாக்கும்.

எழுத்தாளர் எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘நரேந்திர மோடியும், நாஜி ஜெர்மனியும்’. கட்டுரை இவ்வாறாக ஆரம்பிக்கிறது.
“நாடாளுமன்றத்தில் நடந்து வரும் அமளி துமளி பற்றி சமீபத்தில் இரண்டு பேர் மிகவும் கவலைப்பட்டிருக்கின்றனர். ஒருவர் சோ. இவரது கவலைகள் பற்றி எனக்கு அக்கறை இல்லை”
எழுத்தாளர் பிற்பாடு இதே சோ நடத்தும் துக்ளக்கில்தான் நிறம்மாறி எழுதினார் என்பது வரலாற்று சோகம்.

அக்காலக் கட்டத்தில் நாடாளுமன்றத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக நடந்துவந்த அமளிதுமளிகள் நியாயம்தானென்று வலுவான வாதங்களை வைத்து கட்டுரை தொடர்கிறது.
“ஒரு அரசு ஊழியர் நூறு ரூபாய் லஞ்சம் வாங்கினால் அவரை வேலையை விட்டுத் தூக்க முடியும். சட்டம் அத்தனை கடுமையாக உள்ளது. ஆனால், குஜராத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த கலவரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். (இன்றைய தேதியில் எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டியுள்ளது). ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருக்கின்றனர். ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அகதிகளாயிருக்கின்றனர். சொந்த ஊரில் சொந்த நாட்டில் வாழமுடியாத நிலைமை!
இக்பால் ஜாஃப்ரி ஒரு முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அவர் வீட்டில் ஒரு கும்பல் நுழைந்திருக்கிறது. அவர் வீட்டுக்கு பாதுகாப்பாக அங்கே வேன்களில் இருந்த போலீஸ்காரர்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை. எம்.பி.யின் கண் முன்பாகவே அவரது பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு பின்னர் கொளுத்தப்பட்டுள்ளனர். பிறகு இக்பால் ஜாஃப்ரியின் தலை வெட்டப்பட்டு அவரது உடலும் துண்டாடப்பட்டிருக்கிறது.
கலவரக்காரர்களெல்லாம் வெறும் ரவுடிகளோ காலிகளோ அல்ல. மத்திய தர வர்க்கத்தினர். கையில் செல்போன்களுடன் கலவரத்தை ஒருங்கிணைத்திருக்கின்றனர். முஸ்லீம்களின் வியாபார ஸ்தலங்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் நிரப்பப்பட்ட லாரிகளுடன் வந்து கொளுத்தியிருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!
'கோத்ரா ரயில் பெட்டியில் 69 பேர் உயிரோடு எரிக்கப்பட்டதற்கான எதிர்வினையே இது' என்கிறார் மோடி. ஆனால், இரண்டுக்கும் அடிப்படையில் வித்தியாசம் இருக்கிறது. கோத்ரா சம்பவம் திடீரென்று நடந்த ஒன்று. ஆனால், அதற்கு பிறகு நடப்பதெல்லாம் அரசாங்கத்தின் உதவியோடு நடக்கும் திட்டமிட்ட படுகொலை.
நாஜி ஜெர்மனியில் யூதர்களுக்கு நேர்ந்த கொடுமைதான் ஞாபகம் வருகிறது.
ஒரு சம்பவம். மதிய வேளையில் ஒரு தம்பதி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஐம்பது பேர் கொண்ட கும்பல் ஸ்கூட்டரை நிறுத்துகிறது. கும்பலின் கைகளில் வாள், அரிவாள், திரிசூலம், கத்தி போன்ற ஆயுதங்கள். ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபரின் பெயரைக் கேட்கிறது கும்பல். அந்த நபர் ஏதோ ஒரு இந்து பெயரைச் சொல்கிறார். கும்பலுக்கு நம்பிக்கையில்லை. 'பேண்ட்டைக் கழற்று'. அடுத்த கணம் அந்த நபரின் மீது பாய்கிறது திரிசூலம்.
அவர் பெயர் முன்னா பாய். வயது 28. சந்தர்ப்பவசமாகப் பிழைத்துவிட்டதால் இப்போது மருத்துவமனையில் கிடக்கிறார். ஆனால், அவர் மனைவி மும்தாஜ் பானுவுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அந்தக் கும்பல் அவரை நிர்வாணமாக்கி அவரது பிறப்புறுப்பில் தொடர்ந்து கத்தியால் குத்திக் கொன்றுவிட்டது.
மற்றொரு இடம். 5000 பேர் கொண்ட கும்பல். அவர்களுக்கு நடுவே ஒரு பெண். அத்தனை பேருக்கும் எதிரே அப்பெண் பலராலும் தொடர்ந்து வன்புணர்ச்சி செய்யப்பட்டு தீயில் தூக்கியெறியப்படுகிறாள்.
இந்தக் கலவரத்தில் மாட்டிக்கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து சென்னை திரும்பிய என் நண்பர் ஒருவர் சொன்ன சம்பவம்: சுற்றிவர பெட்ரோல் கேன்களுடன் கலவரக்காரர்கள். நடுவில் உயிர்ப் பீதியில் நண்பர். 'நீ யார்? பேர் என்ன?' என்று கேட்டிருக்கின்றனர். பெயரை சொல்லியிருக்கிறார் நண்பர். அவர் களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. வழக்கம்போல் பிறப்புறுப்பை பரிசோதித்த பிறகே அவரை விட்டுச் சென்றிருக்கிறது கும்பல். இதைக் கேட்டதும் நான் நடுங்கிப் போனேன். ஏனென்றால் மருத்துவக் காரணங்களுக்காக நான் Circumcision செய்து கொண்டவன். நண்பரின் இடத்தில் நான் இருந்திருந்தால்... நினைத்தாலே குலை நடுங்குகிறது.
இதுபோல் ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரக்கணக்கான சம்பவங்கள். எல்லாவற்றுக்கும் சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. சில ஆவணப்படங்கள் கூட எடுக்கப்பட்டுள்ளன. மனித உரிமை கமிஷனை சேர்ந்தவர்களும் நேரில் பார்த்துவிட்டு இதைத்தான் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
நான்கு தினங்கள் ஒரு பொந்தில் ஒளிந்து கிடந்து தப்பித்து தில்லிக்கு அகதியாக ஓடிவந்துள்ள ரேஷ்மா பென் என்ற பெண் சொல்லியிருக்கும் சம்பவம் இது:
''முதலில் அவர்கள் ஒரு பத்து வயதுப் பெண்ணை கற்பழித்தார்கள். பிறகு எனக்குத் தெரிந்த கெளஸர் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணை மாற்றி மாற்றி ஒரு கும்பல் கற்பழித்தது. பிறகு அவள் வயிற்றை அரிவாளால் வெட்டினார்கள். வெளியில் வந்து விழுந்த குறைமாதக் கருவை எரியும் தீயில் தூக்கிப் போட்டார்கள். பிறகு அவளையும் கண்டதுண்டமாக வெட்டித் தீயில் போட்டார்கள்.''
தப்பிப் பிழைத்து ஓடிவரும் அகதிகள் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்கிறது. பெண்களின் வயிற்றைக் கத்தியால் கிழித்து எரியும் துணிப் பந்தை அதற்குள் திணிப்பது; கத்தியால் முஸ்லீம்களின் நெற்றியில் 'ஓம்' போடுவது... இதையெல்லாம் முன்னின்று நடத்துவது எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள். உதவி செய்வது போலீஸ்.
எங்கு பார்த்தாலும் கரிக்கட்டையாய் எரிந்து கிடக்கும் சிறுவர்களின் உடல்கள், தலை துண்டிக்கப்பட்ட உடல்கள், எரிந்து போன வாகனங்கள், வீடுகள், கடைகள், மசூதிகள்...
குவியல் குவியலாக மனித உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
நிலைமையை நேரில் கண்ட மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ''வார்த்தைகளால் விவரிக்க முடியாத பயங்கரம்'' என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், பிரதம மந்திரிக்கோ, கலவரம் துவங்கி ஒரு மாதம் வரை நேரில் வர நேரமில்லை. இடையில் கவிதை எழுத வேண்டிய அவசரமான இலக்கியப் பணி. என்ன செய்ய?
ஒரு மாதம் கழித்து வந்து பார்த்து உணர்ச்சி வசப்பட்டு அழுதேவிட்டார்.
ஆனால், மறுநாள் கோவாவுக்கு சென்றவர் பால்கோவா சாப்பிட்டது போல் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்து முஸ்லீம்களைப் பற்றியும் திருவாய் மலர்ந்திருக்கிறார். ''இந்த முஸ்லீம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் அமைதியாக வாழ விரும்புவதில்லை!''
இரண்டு மாதங்களாகியும் இன்னும் குஜராத்தில் கலவரங்கள் அடங்கினபாடில்லை. இவ்வளவுக்குப் பிறகும் குஜராத் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் அமளி துமளி. இந்த அமளியால் வீணாகும் பணத்தைப் பற்றியும், பாராளுமன்றத்தின் புனிதத்தைப் பற்றியும் கவலைப்படும் தமிழ்நாட்டு விமர்சகர்கள்”
வாசிக்கும்போதே ஓத்தா, ங்கொம்மா என்று வெறிவருகிறது இல்லையா. எழுதியவருக்கு எவ்வளவு வெறி இருந்திருக்கும்? எனவேதான் அதே வெறியோடுதான் எழுத்தாளர் குஜராத்தை, நாஜி ஜெர்மனியோடு ஒப்பிட்டு எழுதுகிறார்.
“குஜராத் முதல்வர் பதவி விலக வேண்டும்' என்ற கோரிக்கையைப் பார்த்தால் எனக்கு என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. ஹிட்லரை உலக நாடுகள் ராஜினாமா செய்யச் சொல்லியா கோரிக்கை விடுத்தன? குஜராத்தின் இப்போதைய நிலைமை நாஜி ஜெர்மனியுடன் மட்டுமே ஒப்பிடக் கூடியது என்பதில் சந்தேகமேயில்லை”
தான் வாழும் சமூகத்தில் நடந்த சமகால கொடுமைகளை ஓர் எழுத்தாளன் தட்டிக் கேட்பதைவிட அவனுக்கு வேறெதுவும் பெரிய கடமை இல்லை. மிகச்சரியாகவே அந்த எழுத்தாளர் தன் கடமையைச் செய்திருந்தார். எனவேதான் அவரை rebel என்று நம்பி, புதியதாக இலக்கியம் வாசிக்க வந்திருந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் அவரை தலைக்கு மேல் தூக்கிவைத்து கொண்டாடினோம். மன்னிக்கவும். சொம்பு தூக்கினோம். அதனால்தான் எழுத்தாளர் இப்போது நம்மை நோக்கி, “உங்களுக்கு சொம்பு தூக்கும் கலாச்சாரம் மட்டுமே தெரியும்” என்று விமர்சிக்கிறார். அவரது இந்த விமர்சனத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. எனவே அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். அன்று தங்க சொம்பாக இருந்தீர்கள். கவுரவமாக தூக்கினோம்.

ஆனால், அதே எழுத்தாளர் நாஜி ஜெர்மனிக்கு ஒப்பாக குறிப்பிட்ட நரேந்திரமோடியின் ஆட்சியை, ”குஜராத் மக்கள் மதவேறுபாடு இல்லாமல் மோடியை நேசிக்கிறார்கள். இல்லாவிட்டால் முஸ்லிம் மக்களும் மோடிக்கு ஓட்டு போட்டிருப்பார்களா? முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் இவ்வளவு வலுவான அரசை கொடுக்க முடியுமா?” என்று ஈயச்சொம்பாக மாறி கேள்வி கேட்கும்போதும், உங்களை தூக்கிக்கொண்டு திரிந்தால் வரலாறு மறந்த மொக்கையல்லவா நான்? நீங்கள் எழுதிய ‘ஆஸாதி.. ஆஸாதி.. ஆஸாதி’யை ஒருவரி விடாமல் பலமுறை வாசித்த உங்கள் வாசகன் எப்படி மொக்கையாக முடியும்?

மூன்றாம் முறையாக குஜராத்தில் மீண்டும் நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நம் எழுத்தாளர் 2008ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’. நீதி, நேர்மை, சமத்துவம் போன்ற ஜனநாயகத்தின் ஆதாரப் பண்புகளை இழந்துவரும் இந்திய மக்களின் மனம் மசோகிஸ்ட் மனோபாவமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று கவலை கொண்டிருந்தார். யாரை ஹிட்லர் என்று அப்போதெல்லாம் கடுமையாக விமர்சித்தாரோ, அவரையே இன்று ’உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவர்’ என்று ஒப்புக் கொள்கிறாரென்றால், அவரே மசோகிஸ்ட் மனோபாவத்துக்கு மாறிவிட்டாரோ என்றுதான் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது.

சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார் என்று குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டிக் கொண்டிருந்த எனக்கு தேசிய, உலகளாவிய அரசியல் இலக்கிய சிந்தனைகளை, ஆளுமைகளை, கலைகளை அறிமுகப்படுத்தியவர் சாருநிவேதிதாதான். இந்த நன்றியை சாகும்வரை மறக்க மாட்டேன். விஜய், அஜீத் ரசிகர்கள் மாதிரி நடந்துகொள்ளும் சாருவின் சமீபத்திய சொம்புகளுக்கெல்லாம் இந்த பெருமித உணர்வு கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம்தான். ஏனெனில் சாரு காத்திரமான கட்டுரைகளை படைத்து ஒரு மாமாங்கம் ஆகப்போகிறது.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இதுவரை அவரை எங்கும் பொதுவெளியில் விட்டுக் கொடுத்து பேசியதில்லை. இப்படியொரு கட்டுரை எழுதநேருமென கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் ’எப்படியிருந்த நீங்கள், இப்படி ஆகிவிட்டீர்களே’ என்று சுட்டிக் காட்ட வேண்டியது காலத்தின் அவசியமாகி விட்டது. அவரது நிஜமான வாசகன் என்கிற முறையில் இது என்னுடைய கடமையும் கூட. இந்திய தத்துவ விசாரம், குடும்ப முரண்கள், தனிநபர் அகச்சிக்கல்கள் என்று மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டிருந்த தமிழிலக்கியத்தில், வடிவநேர்த்தியிலும் சிந்தனைத்தளத்திலும் புதிய வடிவங்களை உருவாக்கி புலிப்பாய்ச்சல் நடத்தியவர் சாரு. இன்னமும் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. ஒரு வாசகன் என்கிற முறையில் அவரது நூல்கள் அத்தனையையும் காசு கொடுத்து வாங்கி வாசித்தவன்நான். அவரோடு முரண்படக்கூடிய சுதந்திரத்தையும் அவரது எழுத்துகள்தான் எனக்கு கொடுத்தது.

நீங்கள் எழுதியதையெல்லாம் வாசித்துதானே சாரு நாங்கள் இப்படி ஆனோம்? இன்று இந்துத்துவம் வென்றிருக்கலாம். ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் உறங்கிக்கொண்டிருந்த மதவாத மிருகம் கண் விழித்திருக்கலாம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள பலரும் நினைக்கலாம். ஆனால் சராசரிகளோடு மாறுபட்டு விதிவிலக்காக நிற்க வேண்டியது செயற்பாட்டாளர்களின் கடமை. முதன்முறையாக மதவாத சக்திகள் இந்தியாவில் பெரும்பான்மையாக ஆட்சியை கைப்பற்றியபோது அவர்களோடு யாரெல்லாம் இருந்தார்கள், மதச்சார்பற்ற இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்கள் என்பதை வரலாறு பதிந்து வைத்துக்கொள்ளப் போகிறது. வேதனையாகதான் இருக்கிறது. அந்த கருப்புப் பட்டியலில் நீங்களும் இடம்பெறுகிறீர்கள் சாரு. ஆபத்து அறியாமல் மோடி வென்றுவிட்டார் என்று கெக்கே பிக்கே என சிரித்துக்கொண்டு ஸ்டேட்டஸ் போட்டு விளையாடும் இணையமொக்கைகளோடு நீங்களும் சேர்ந்துவிட்டீர்கள் சாரு. உலக இலக்கியத்தை விடுங்கள். தமிழிலக்கிய உலகிலேயே எதிர்காலத்தில் நீங்கள் யாராய் அறியப்படப் போகிறீர்களோ என்கிற கவலைதான் என்னை ஆக்கிரமிக்கிறது.

பி.கு : மேற்குறிப்பிட்ட கட்டுரையில் சாருநிவேதிதா எழுதியிருந்ததாக வரும் பத்திகள் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ஆஸாதி ஆஸாதி ஆஸாதி’ நூலில் இருந்து எடுத்தாளப் பட்டிருக்கிறது. முதல் கட்டுரையில் தமிழ் விமர்சகர்கள் என்று சாரு குறிப்பிடுவது சோ தவிர்த்த இன்னொருவரை சுட்டி. அவர் வெங்கட் சாமிநாதன். குறிப்பிட்ட இந்த இரு கட்டுரைகளையும் முழுமையாக வாசிக்க விரும்புபவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்தால் அனுப்பி வைக்கிறேன்.

16 கருத்துகள்:

  1. அவர் எப்போதும் இப்படித்தான். தான் செய்ததுதான் சரி என்பார். யாராவது எதிர்வினை ஆற்றினால் உடனே திட்ட ஆரம்பித்துவிடுவார். (விதிவிலக்கு அவரது சொம்பு தூக்கிகள்) இப்பொழுது உங்களை. அடுத்த மாதம் யாரோ?

    பதிலளிநீக்கு
  2. காலம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது?!

    பதிலளிநீக்கு
  3. 2007 இல் தினகரன் விவகாரத்தில் மூன்று பேரை எரித்துக் கொன்ற கும்பல் ஆட்சி செய்த பொது, இதே யுவ கிருஷ்ணா எங்கே போனார்?

    இவ்வளவு நீண்ட கட்டுரை எழுதியதற்குப் பதிலாக, மோதி PM ஆவதை விரும்பவில்லை என்று ஒற்றை வரியில் எழுதி முடித்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. யுவா நாங்க நித்தியானந்தா விசயத்துலையே உஷார் ஆயிட்டோம்.. நீங்கதான் பாவம்..

    பதிலளிநீக்கு
  5. I don't know about writer Saru much, but he seems right according to the time.
    "Change is the law of the universe", Don't keep your energy on the past where no body was right. Write on the flow where you get more energy. I liked your writing style, magical power of words.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா11:17 PM, மே 21, 2014

    அண்ணா, திருவாளர் சாருநிவேதிதா அவர்கள் கூறியது சிறு பொறி, அது தங்கள் நெஞ்சினில் கனன்று கொண்டிருந்ததை மேலும் பற்றி எரியச் செய்துவிட்டது. தங்களின் கோபம் எழுத்தாளர் பாலல்ல, திமுக படுதோல்வி அடைந்துவிட்டது, (ஹிந்து)மதச் சார்பற்ற அணி மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது, மேலும் தாங்களைப்போன்றவர்கள் விரும்பாத பாஜக, திருவாளர் மோடியின் அவர்களின் தலைமையில் வரலாற்று வெற்றியுடன் ஆட்சி பீடத்தில் அமரப்போகின்றது... என்பதே. திருவாளர் மோடி அவர்கள் எவ்விதத்திலும் குஜராத் கலவரத்தில் குற்றவாளியாக கருதுவதுற்க்கு இடமில்லையென உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த நிலையில், தாங்கள், பாரதப் பிரதமரை அவமதிக்கும் விதத்திலே ஏதோ ஒரு மேற்கோள் காட்டுகிறீர்கள். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், சத்தியம் வெல்லும், பாஜக வென்றது.

    தங்கள் தலைவர் திருவாளர் கலைஞர்அவர்கள், பிரதமர் மோடி அவர்களை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டது ஏன்? மதசார்பற்ற தன்மை நீர்த்துப்போய் ஏழைகள் பால் ஏனிந்த திடீர் அக்கறை.... 2ஜி சுழற்றி அடிக்கிறது, பாவம் தள்ளாத வயது.... சீச்சீ வெட்கக்கேடு, ஏழைகள் பால் அக்கறை உள்ளவர்!!!!! - சர்க்காரியா கமிஷன், குடும்ப 2ஜி ஊழல்..... பச்சோந்தி.....

    பாஜக மதவாத கட்சியென்றால், திமுகவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ கட்சிகள் மதசார்பற்றவையா ?

    பொது உரிமையியல் சட்டத்தினை (CommonCivilCode) எதிர்க்கும் நீங்கள் ஷரியத் சட்டத்தினைப் பற்றி வாய் திறவாதது ஏன்? இப்ரசினையே ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் உள்ளதை தாங்கள் அறிவீர்கள்; இந்நிலையில் ஏனிந்த கட்சி சார்ந்த கருத்து வெளியீடுகள்.....

    ஓர் எழுத்தாளன் என்பவன், அறம் சார்ந்தும், மக்கள் நலம் சார்ந்தும் சிந்திக்க வேண்டுமன்றோ......

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா4:41 AM, மே 22, 2014

    Dear Yuva
    you have the answer written on the right side top of your blog who you are, then why you are wasting your time.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா12:32 PM, மே 22, 2014

    very shameful article. why karuna did not come out from NDA in 2002. why you did not demand from karuna? There was SIT, high court and supreme court to deal with 2002 riots.
    if you think you are bigger than all these courts, you are desrved to be a big chombu for karuna.
    Do you have any information about sonia and rahul?
    are you having guts to write in your blog?
    can you say where your leader rahul went after election campaign?
    Are you having guts to write about any terrorists?
    are you not shameful for your opinion?


    பதிலளிநீக்கு
  9. It shows your immaturity and tactics to get more attention. In kodra you people are easily forgetting about those 60 hindus who have been burnt.In 1000 A.D. one muslim looter kajini looted Somanathar temple and killed more than 1 lakh people obviously all are hindus..Aladin Gilgi destroyed so many hindu temples.According to you if some thing to be remembered forever..then how can we forget those issues.
    But our hindus forget things and moving friendly with minority people( Always there are some exceptions)..Dr.Karunanithi supported BJP for full five years and enjoyed all benefits. You easily write one side..And thinking all are just fools.. What do you know about hindusm?.. In Pakistan recently they destructed one hindu temple..no sound has from there. But here one Baba masjit destructed..still noises are arising...According to you , after kodra train all hindus should remind silent and should give more chances to them to burn more and more. T
    Thiruppi adiccha periya thappaa?...But still it is a committed mistake. And we should hope Modi changed a lot and really he tried to do something for country. Or if you cannot forget 2002 then we also cannot forget 1000 A.D.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா6:02 PM, மே 22, 2014

    Hi,

    I don't know what really happened at time of 2002 in Gujarat since I was a kid at that time. But one things I can says that, if Modi is against other religion , then obviously he wouldn't get majority in this election, that is true. today, people are very much clear about their decision ,there are very much tired for last 10 years, with lot of problems. Now the Question for you is, are you against to the writer or Modi? Please be straight , think about it.. India need a change...

    பதிலளிநீக்கு
  11. I think you just wanted to divert the readers,you didnt want them to ask questions on your predictions on the poll results..so you used a sensitive issue and charu..you know the pulse of the people..

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா4:27 AM, மே 24, 2014

    We had two options, (i) Congress who supported the killing of tamils and sikhs and (ii) BJP who supported the killing of muslims. The ineffective governance of congress was additional negative that prompted people to support BJP. It is as simple as that.

    பதிலளிநீக்கு
  13. கட்டுரையை விட பின்னுட்டங்களில் தெளிவும், நேர்மையும் உள்ளது

    பதிலளிநீக்கு
  14. ஃபாசிஸம்31% ஓட்டுக்களே பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அது அஸ்ஸாமில் வங்காளிகளை துறத்த ஆரம்பித்திருக்கிறது. மங்கோலிய முகச்சாயல் உடையவர்களை சீசீனர்களென துரத்தும் தமிழ்நாட்டில் வாழும் மக்களை இலங்கைக்காரர்கள் என்று சொல்லும்.இறுதியில் உங்கள் வீட்டுக் கதவை தட்டும். ஃபாசிஸவாதிகள் சொல்வதை மறுப்பில்லாமல் ஏற்றுக்கொண்டு அவர்களைஅடிமைகளைப் போல் பின் தொடர்ந்தால் வாழலாம் இல்லையேல் வெளியேற வேண்டும் அல்லது அழிக்கப்படுவீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dr. Khalil - please read Indian history about Aurangezeb, Tipu Sultan and other your kings who were mercilessly killed the people of this land in the name of religion. MIllions died on their hand for this nation. Now you think who is fascists?? Not only our (yes, also yours- before conversions) ancestors died also we lost our land to Pakistan, Bangladesh, Afghanistan etc. and more. Even today what is happening for minority Hindus in Pakistan and Bangladesh- don't you know? In Asom don't you know about illegal immigrants, in NE what's going on?
      People like you are born, eat,sleeve, live and die here- but loyal to others. Think it over dear Sir.

      நீக்கு