1 டிசம்பர், 2014

காவியத் தலைவன்

ராஜபார்ட் வேஷம் கட்டும் பொன்வண்ணன், குரு நாசரிடம் கோபித்துக் கொண்டு கிளம்புகிறார். பிருத்விராஜை நடித்துக் காட்டும்படி நாசர் சொல்கிறார். பொன்வண்ணனைவிட பிரமாதமாக பிருத்வி நடிக்கிறார். அடுத்து சித்தார்த்தையும் நடித்துக்காட்ட சொல்கிறார். நம்மூர் நாடக மரபு நடிப்பினை உடைத்து, லேசான மேற்கத்திய தாக்கத்தோடு சித்தார்த் செய்ய காவியத் தலைவன் உருவாகிறான் என்று நம்பிக்கை பிறக்கிறது.

ஆனால், ஒரு ஜமீன் பெண்ணை காதலித்து.. அதை பிருத்விராஜ் நாசரிடம் போட்டுக் கொடுத்து அவரது ராஜபார்ட் வேஷம் பிடுங்கப்பட்டு, மீண்டும் பிருத்விராஜ் ராஜாவாகும்போது.. அட.. இதோ இவன்தான் காவியத்தலைவன் என்று நிமிர்ந்து உட்காருகிறோம்.

இரண்டாம் பாதியில் மீண்டும் சித்தார்த்தின் எண்ட்ரி. கர்ணமோட்சம் நாடகத்தில் கர்ணன் உயிரைவிட்ட பிறகு, திடீரென அர்ஜூன வேஷம் கட்டும் சித்தார்த் மிலிட்டரி மிடுக்கில் நடந்துவந்து, பார்வையாளர்களின் உயிரை உருக்கும் பாடலை பாடும்போது, ‘அடடே.. இவன்தான் காவியத்தலைவன் போலிருக்கு’ என்று ஃபீலிங் வருகிறது.

இப்படியாக படம் முடியும் ஃப்ரேம் வரை காவியத்தலைவனை தேடித்தேடி அலுத்துப் போகிறோம். இரண்டு முக்கிய பாத்திரங்களுமே செத்துப் போகிறபோது யார்தான் காவியம் படைத்து தலைவன் ஆனார்கள் என்கிற குழப்பத்தோடே அரங்கை விட்டு வெளியே வரவேண்டியிருக்கிறது.

எப்படிப்பட்ட படத்தையும் ஏதேனும் ஒரு சினிமா கோட்பாட்டுக்குள் அடக்கிவிடும் திறமை படைத்த விமர்சகர் ராஜன்குறையே, இந்தப் படத்தை எந்த சட்டகத்துக்குள் அடக்குவது என்று திணறிப்போயிருக்கிறார் என்பதை அவரது பேஸ்புக் ஸ்டேட்டஸ் காட்டுகிறது. கடைசியாக தமிழன் அவனாகவே கண்டுபிடித்த ‘ஒரு முறை பார்க்கலாம்’ என்கிற சினிமா தியரிக்குள் இதைப் பொருத்த முயற்சிக்கிறார்.

இலக்கியவாதிகளும், அறிவுஜீவிகளும் புரியாத வார்த்தைகளில் விமர்சனம் எழுதி உங்களை ஏமாற்றப் போகிறார்கள். வசந்தபாலனுக்காகவும், ஜெயமோகனுக்காகவும் அவர்கள் அளிக்கப்போகும் சலுகை இது. உண்மையில் அவ்வப்போது பளிச், பளிச்சென்று சில ஃப்ளாஷ்கள் அடித்தாலும், காவியத்தலைவன் படுமோசமாக தோற்றிருக்கிறது. அரவானுக்கு பரவாயில்லை என்கிற வகையிலான ஆறுதல் மட்டுமே.

படம் வரைய வசந்தபாலன் எடுத்துக்கொண்ட கேன்வாஸ் ஓக்கே. ஆனால் வரைந்திருக்கும் படம்தான் மாடர்ன் ஆர்ட்டுமாக இல்லாமல், மரபு ஓவியமாகவும் இல்லாமல் ஆறாங்கிளாஸ் பையனின் முதல் ஓவிய முயற்சி மாதிரி ஆகிவிட்டது.

டைட்டிலிலேயே ‘வெள்ளையர் காலத்து நாடகக் கம்பெனி’ என்று சொல்லிவிட்ட பிறகும், களத்தை பார்வையாளர்களுக்கு புரியவைக்க இடைவேளை வரை நேரம் எடுத்துக் கொள்கிறார். இடைவேளைக்கு அரை மணி நேரத்துக்கு முன்புதான் கதையே தொடங்குகிறது. சித்தார்த் ராஜபார்ட் ஆனதும், அவருக்கும் இளவரசிக்குமான காதல், சித்தார்த் மீதான பிருத்விராஜின் பொறாமை, போட்டுக் கொடுத்தல், குரு சாபம், இளவரசி மரணம், குருவுக்கு சிஷ்யனின் சாபம், குருவின் மரணம், சித்தார்த் விரட்டப்படுதல் என்று சரசரவென்று ஓடி ‘இடைவேளை’ போடும்போது சர்ரென்று பிரமிப்பு ஏற்பட்டதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

இடைவேளை முடிந்தவுடன் பழைய குருடி கதவை திறடி கதைதான். முப்பதுகளின் கதை என்றால் மெதுவாகதான் எடுத்துத் தொலைக்க வேண்டுமென்று என்ன இலக்கணக் கண்ணறாவியோ தெரியவில்லை.

படத்தின் பெரிய பலவீனம் பிருத்விராஜ் – சித்தார்த் இடையே ஏற்படும் முரண். எல்லாம் தெரிந்தும் சித்தார்த் நல்லவராகவேதான் இருக்கிறார். கொலைவெறி வருமளவுக்கு இருவரிடையே முரண் ஏதுமில்லை. இரு நண்பர்களுக்குள் பிரச்சினை எனும்போது, ஒரு நண்பன் துரோகியாகதான் ஆகித்தொலைக்க வேண்டுமா? எத்தனை ரஜினிகாந்த் – சரத்பாபு காம்பினேஷனில் இதையே திரும்பத் திரும்ப பார்த்திருக்கிறோம். போலவே வடிவாம்பாளான வேதிகாவுக்கு, சித்தார்த்தை ஏன் அந்தளவுக்கு லவ் செய்துத் தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்றும் தெரியவில்லை. அதுவும் ‘உன்னோட பிள்ளையை என் வயித்துலே சுமக்கணும்’ என்று கெஞ்சுகிற அளவுக்கு காதல் ஏற்பட என்ன எழவு காரணமென்று புரியவில்லை. புத்தி சுவாதீனமுள்ள பெண்ணாக இருந்திருந்தால் பிருத்விராஜைதான் கல்யாணம் கட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

படத்தின் மெயின் கேரக்டர்களே திரும்பத் திரும்ப ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டிருப்பதால் மெகாசீரியல் வாசனை பலமாக அடிக்கிறது.

ஸங்கீதம் ஏ.ஆர்.ரகுமானாம். சம்பாஷணை ஜெயமோகன் என்று டைட்டில் போட்டிருந்தார்கள். பாட்டெல்லாம் கேட்கும்படி இருப்பதால் ஸங்கீதமே பரவாயில்லை. சம்பாஷணை படுமோசம். முன்பு தூர்தர்ஷனில் கல்கியின் ‘அலைஓசை’ தொடராக வந்தது. அதிலேயே சம்பாஷணை பிரமாதமாக இருந்த நினைவு.

திராவிட எழுத்தாளர்களை இளப்பமாக ஜெயமோகன் பேசுவார், எழுதுவார். அவர்கள் எல்லாம் இலக்கியவாதிகள் அல்ல. சும்மா அலங்கார நடையில் மக்களை உசுப்பேத்துகிறார்கள் என்பதாக அவர்களை பார்க்கிறார். திரள் மக்களை உசுப்பேத்துவது எவ்வளவு கடினமென்று காவியத்தலைவன் படத்தின் ரிசல்ட் மூலம் அவர் உணர்வார். தமிழின் ஆகச்சிறந்த நம் கால எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன், காவியத்தலைவனில் எப்படியெல்லாம் தடுமாறியிருக்கிறார் என்பதை பார்க்கும்போது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இதே சினிமாவில் வசனங்களால் அனல் கக்கிய அண்ணாவும், கலைஞரும், கண்ணதாசனும், திருவாரூர் தங்கராசும் எத்தனை மகத்தான எழுத்தாளுமைகள் என்பதை உணரமுடிகிறது.

ஒரு முயற்சி என்கிற வகையில் மட்டும் பார்க்கலாம். மற்றபடி தியேட்டரில் உட்காரும்போது அடிக்கடி வெளிவரும் கொட்டாவியை தடுக்கவே முடியவில்லை.

22 நவம்பர், 2014

கதையல்ல, வாழ்க்கை!

ஒரு காதல் கதை
பிரதீப் அழகாக ராகம் போட்டு பாடுவார். ஏதோ பழைய படத்தில் சரத்பாபு பாடும் பாட்டுதான் அவருக்கு ஃபேவரைட். “நான் உன்னை நெனைச்சேன். நீ என்னை நெனைச்சே. தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சி… நம்மை யாரு பிரிச்சா.. ஒரு கோடு கிழிச்சா…” அச்சு அசலாக எஸ்.பி.பி. குரல். கேட்கும் யாருமே மயங்கிவிடுவார்கள். சுசிலா மட்டும் விதிவிலக்கா என்ன?

“வணக்கம் தோழர், நான் பிரதீப்” என்று முதன்முதலாக அவர் அறிமுகமானபோது சுசிலா, ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸம்தான் அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ள காரணம். எனவே காரல்மார்க்ஸுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். சுசிலாவின் அப்பா கம்யூனிஸ்ட்டு கட்சி, தொழிற்சங்கம் என்று தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தவர். முற்போக்கான குடும்பச் சூழலில்தான் சுசிலா சிறுவயதிலிருந்தே வளர்ந்தார். எனவே அவர்களது வீட்டில் எப்போதுமே ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ கோஷம்தான். நிறைய தோழர்கள் வருவார்கள். காரசாரமாக அரசியல் பேசுவார்கள். போராட்டங்களை திட்டமிடுவார்கள். புரட்சிக்கு நாள் குறிப்பார்கள்.

ஆரம்பத்தில் பிரதீப்பிடம் சுசிலாவும் அரசியலையும் சமூகத்தையும் பற்றிதான் பேச தொடங்கினார். பேச்சு சுவாரஸ்யம் கவிதைக்கு நீண்டது. இலக்கியம் பேசி அலுத்து இளைப்பாறிய ஒரு பொழுதில்தான் பிரதீப், ‘ஐ லவ் யூ’ சொன்னார். சுசிலா அப்போது பதினொன்றாம் வகுப்பு. அரசியல், சமூகம், இலக்கியம் என்று அனைத்து ரசனைகளுமே ஒத்துப்போகும் இருவருக்கும் ஈர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியம் என்ன?

ஆனாலும் சுசிலாவுக்கு தயக்கம் இருந்தது.

“நான் இன்னமும் பள்ளிப்படிப்பைகூட முடிக்கவில்லை”

“நான் ஒழுங்காக பள்ளிக்கு கூட சென்றதில்லை. எனக்கும் நிரந்தரமான வேலையும் எதுவுமில்லை”

எதிர்காலத்தை அந்த வயதிலேயே திட்டமிட்டார்கள். சுசிலா, பட்டம் பெற வேண்டும். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த பிரதீப், குறைந்தபட்ச பொருளாதாரத் தன்னிறைவு அடையும் வரை திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அவர் அப்போது வாடகைக்கு ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார்.

சுசிலாவின் குடும்பச்சூழலும் வறுமையானதுதான். மூன்று குழந்தைகள். இவர்தான் மூத்தவர். ரேஷன் அரிசி சாப்பாடுதான். அவருக்கும் அவருடைய தங்கைக்கும் பள்ளிக் கட்டணத்தைகூட அப்போது நடிகர் விஜயகாந்த்தான் கட்டினார். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் மேற்படிப்பு படிக்க வழியில்லை. கிடைத்த ஒரு கல்லூரிப் படிப்பை படிக்க ஆறாயிரம் ரூபாய் கட்டணம் கட்டவேண்டும். அப்போது முடியாததால், தாம்பரம் மெப்ஸில் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வேலைக்கு போக ஆரம்பித்தார்.

நன்றாக படிக்கக்கூடிய பெண், வறுமையின் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு போவதை சகித்துக் கொள்ள முடியாத பிரதீப் உள்ளிட்ட அவரது இயக்கத் தோழர்கள் வற்புறுத்தி அவரை மதுரை சட்டக்கல்லூரியில் நுழைவுத்தேர்வு எழுதவைத்தார்கள். தேர்வில் வென்றவுடன் அங்கேயே தங்கி சட்டம் படிக்க ஏற்பாடு செய்தார்கள்.

“அஞ்சு வருஷத்துலே நான் லாயர் ஆயிடுவேன். நீங்க என்ன ஆவீங்க மிஸ்டர் பிரதீப்?” என்று சுசிலா கலாய்க்க, அவசர அவசரமாக திறந்தநிலை பல்கலைக்கழகம் ஒன்றில் எம்.ஏ., படிக்க விண்ணப்பித்தார். இப்படியாக ‘சூர்யவம்சம்’ சரத்குமார் – தேவயானி மாதிரி இருவரின் தனிமனித முன்னேற்றத்துக்கு ஒருவருக்கொருவர் காரணமாக இருந்தார்கள்.

பிரதீப்புக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் சொன்னார். “நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”. இருவீட்டிலும் லேசான எதிர்ப்பு இருந்தது. ஆனாலும், ஆறாண்டு காதல் கல்யாண இலக்கை கரெக்ட்டாக எட்டியது.

ஒரு கொடூர கொலை

ஏப்ரல் 18, 2002.

“காத்திரு. வந்து கூட்டிச் செல்கிறேன்” என்று சொல்லியிருந்தார் பிரதீப்.

அவருக்காக கடைவாசல் ஒன்றில் காத்திருந்தார். சொன்ன நேரத்துக்கு பிரதீப் எப்போதுமே வந்ததில்லை. கடுமையான கோபம் சுசிலாவுக்கு. அப்போது கடையில் இருந்த டெலிபோன் கிணுகிணுத்தது. போனை எடுத்த கடைக்காரர், “சுசிலாம்மா... உனக்குதான் போன்” என்றார்.

ரிசீவரை காதில் வைத்ததுமே பாட்டு கேட்டது. “நான் உன்னை நெனைச்சேன். நீ என்னை நெனைச்சே”

“ஏய், எவ்வளவு நேரம்பா ‘வெயிட்’ பண்ணிக்கிட்டிருக்கிறது? நீயான்னா எங்கியோ இருந்து பாட்டு பாடிக்கிட்டிருக்கே?” என்று சுசிலா கத்தினார்.

யாரோ முதுகை தொட்டது மாதிரி இருக்க, ‘ஷாக்’ ஆகி திரும்பிப் பார்த்தால் சிரித்த முகத்தோடு பிரதீப்.

இருவரும் சுசிலாவின் வீடு வந்தார்கள். அன்று ஏனோ வழக்கத்தைவிட கூடுதல் உற்சாகமாய் இருந்தார் பிரதீப். “எல்லாரும் பீச் போகலாமா?” கேட்டார். பதிலை எதிர்ப்பார்க்காமல், ஏதோ சினிமா பாட்டுக்கு விசிலடித்தபடியே ஆட்டோ பிடிக்க சாலைக்கு விரைந்தார்.

‘தட்’. தலையில் இடி விழுந்த மாதிரி சப்தம் கேட்டது. கண்ணில் பூச்சி பறந்தது. இரு கைகளாலும் பின்னந்தலையை பிடித்தபோது கைகளில் பிசுபிசுப்பாக இரத்தம். உச்சந்தலையில் ‘விண்’ணென்று உயிர்போகும் வலி. உடலை திருப்ப முயற்சித்தபோது காலில் ஒரு வெட்டு. அப்படியே மரம் மாதிரி சாய்ந்தார். அவர்கள் யார், எதுவென்று தெரியவில்லை. மாறி மாறி தாக்க ஆரம்பித்தார்கள். அரிவாள் கொண்டு காட்டுமிராண்டித்தனமாக வெட்ட ஆரம்பித்தார்கள். வெட்டிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் பிரதீப்பை அடையாளம் கண்டுவிட்டு சொன்னான். “டேய், இந்த அண்ணனையாடா கொல்ல வந்தீங்க? வேணாம்டா”. அவனுடைய வேண்டுகோள் பலனளிக்கவில்லை. இரத்த ஆற்றில் பிணமாய் வீழ்ந்தார் பிரதீப். கொன்ற கூட்டம் நொடியில் பறந்தது. கூட்டம் வழக்கம்போல வேடிக்கை பார்க்க கூடியது. “நல்ல பையன். அநியாயமா கொன்னுட்டானுங்க. காப்பாத்துங்கன்னு ஒரு குரல் கூட கொடுக்கலையே” கும்பல் உச்சு கொட்டியது.

ஓடிவந்து பார்த்த சுசிலா சிலையாய் நின்றார். ஒரு சில நிமிடங்களில் அவருடைய வாழ்க்கையே தலைகீழானது. எல்லாமே அவருக்கு சடுதியில் நடந்துவிட்டது. கண்கள் இருட்டிக்கொண்டது. பிரதீப்பை போய் யாராலாவது கொலை செய்ய முடியுமா?

சாகும்போது அவரது வயது இருபத்தெட்டு. அதுவரை இருபத்தெட்டு முறை இரத்ததானம் செய்திருந்தார். இருபத்தைந்து காதல் திருமணங்களை முன்னின்று நடத்தியிருந்தார். அவர் வசித்த சென்னை தரமணியின் பகுதி பிரச்சினைகளுக்காக பதிமூன்று வயதிலேயே கொடியேந்தி போராடத் தொடங்கியவர். அருமையாக பாடுவார். சர்ச்சில் போல உணர்ச்சிகரமாகப் பேசுவார். கவிதைகள் புனைவதில் ஷெல்லி. அவரை சுற்றி எப்போதும் இருபது பேராவது இருப்பார்கள். பிரதீப் இருக்குமிடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. களரி கலையில் வல்லவர்.

ஏதோ ஓர் அநீதியை இவர் தட்டிக்கேட்டு அடக்கியிருந்த வகையில், சில பேரின் பகையை சம்பாதித்திருந்தார். விளைவு, அந்த வயதிலேயே மரணம்.

ஒரு போராட்டம்
பிரதீப்புக்கு இறுதிவிடை கொடுக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தார்கள். கண்களில் கண்ணீர் வற்றி வெறித்துக் கொண்டிருந்த சுசிலாவுக்கு திடீர் ஆவேசம். மைக் இல்லாமலேயே உரத்துப் பேச ஆரம்பித்தார்.

“நமக்காக குரல் கொடுத்தவனை கொன்றிருக்கிறார்கள். அநியாயத்தை தட்டிக் கேட்பவனுக்கெல்லாம் மரணம்தான் பதில் என்றால், இந்த உலகமே மனிதர்கள் வாழ தகுதியற்றதாகி விடும். பிரதீப்பை கொன்றவர்களை சட்டப்படி தண்டிப்போம். சட்டம் தயங்கினால் நாம் போராடி நெருக்குதல் தருவோம்”

மொத்த கூட்டமும் சுசிலாவின் பேச்சை ஏற்றுக் கொண்டது. கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை வற்புறுத்தத் தொடங்கினார்கள். எல்லா கேஸையும் போல, பிரதீப் கொலை கேஸும் ஆமைவேகத்தில்தான் நடந்தது. ஆனால், காவல் நிலையம் தொடங்கி நீதிமன்றம் வரை ஒவ்வொரு படியாக ஏறி இறங்கத் தொடங்கினார் சுசிலா. இயக்கத் தோழர்களோடு இணைந்து தெருவில் இறங்கி போராடினார். அப்போது சென்னை கமிஷனராக இருந்த விஜயகுமாரை ஒருமுறை சந்தித்து, தன்னுடைய கதையை சொன்னார். உடனே, விஜயகுமார் வேகமாக நடவடிக்கைகள் எடுத்து கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர். வழக்கினை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கிடையே சுசிலாவின் சட்டப்படிப்பும் முடிந்திருந்தது. அரசுத் தரப்பில் வழக்கை நடத்திய வழக்கறிஞருக்கு இவரே தன்னார்வத்தோடு உதவத் தொடங்கினார். சட்டக் குறிப்புகள் எடுப்பது, சாட்சிகளின் பதிவுகளை ஆவணமாக்கி வரிசைபடி வழக்கறிஞருக்கு சமர்ப்பிப்பது என்று, அந்த கொலைகேஸை விரைவாக முடிக்க என்னென்ன வேலைகளை செய்யவேண்டுமோ, அது அத்தனையையும் செய்துக் கொடுத்தார்.

சட்டம் வென்றது. கொலையாளிகள் தண்டிக்கப்பட்டனர். இத்தனைக்கும் கொலையாளிகளின் சார்பாக ஆஜரான வக்கீல், ஏதேனும் கேஸை எடுத்தாலே வெற்றிதான் எனுமளவுக்கு வெற்றிகரமாக இருந்தவர். சுசிலா துல்லியமான ஆதாரங்களை கொடுத்திருந்ததால், கொலையாளிகளால் தப்பிக்க முடியவில்லை.

தீர்ப்பு வந்த நாளன்று நீதிமன்றத்தின் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தபோதுதான் சுசிலாவுக்கு பிரதீப் இல்லாத வெறுமை பளிச்சென்று உரைத்தது. இதுபோல முன்பு எத்தனையோ பேருக்கு, எத்தனையோ விஷயங்களில் பிரதீப் உதவியிருக்கிறார். அவரை கொலைசெய்த கொலையாளிகளை துணிச்சலோடு பிடித்து சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனையை பெறக்கூடிய தைரியம் சுசிலாவுக்கு இருந்ததென்றால், அதெல்லாம் பிரதீப் கொடுத்த தைரியம்தான்.

சுசிலா வக்கீலாக பார்கவுன்சிலில் பதிவு செய்யவேண்டும். கருப்பு கோட்டு வாங்க வேண்டும். எப்படியும் நாலாயிரம் ரூபாய் செலவாகும். கைப்பையில் எவ்வளவு காசு இருக்கிறதென்று பார்த்தார். வீட்டுக்கு ஆட்டோவில் போகக்கூடிய அளவுகூட காசில்லை.

ஒரு வாழ்க்கை

அடுத்த சில நாட்கள் வீட்டில் வெறுமனே முடங்கிக் கிடந்த சுசிலாவை மீட்க இயக்கத் தோழர்கள் முயன்றார்கள். ஒரு தோழரின் ஏற்பாட்டில் வக்கீலாக பதிவு செய்தார். பதிவு செய்த அன்றுதான் தோன்றியது. இனிமேல் எவனோ ஒருவன் பிரதீப் மாதிரி யாரையாவது கொன்றுவிட்டு தன்னிடம் வழக்கை எடுத்துக்கொள்ள சொல்லி வந்தால், தர்மப்படி அவனுக்காக வாதாடி ஆகவேண்டும். அவனும் தன்னுடைய கிளையண்ட்தான். பிரதீப்பை கொன்றவர்களுக்காக ஆஜரானவர் மனித உரிமைப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய வக்கீல். அவரே கூட கொலையாளிகளுக்கு ஆதரவாக வாதாட வேண்டிய நிலை வந்தது. இப்படிப்பட்ட ஒரு தொழிலை செய்யவேண்டுமா என்று சுசீலாவுக்கு குழப்பம். இதே குழம்பிய மனநிலையோடு சிறிது காலம் இருந்தார்.

அப்போதுதான் ‘சுனாமி’ வந்தது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சிதறின. குழந்தைகள் பெற்றோரை இழந்தார்கள். பெற்றோர் குழந்தைகளை இழந்தார்கள். தமிழக கடற்கரையோர ஊர்கள் மொத்தமும் மரண ஓலம். துன்பத்தில் வாடுபவர்களுக்கு உதவ கிளம்பினார். நிறைய தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பல்வேறு ஊர்களுக்கும் போனார். மக்களுக்கு உதவும் இந்த மகத்தான பணியை செய்துக் கொண்டிருந்தபோதுதான் அவருக்கு சமூகம் குறித்த முழுமையான புரிதல் ஏற்பட்டது. தன்னுடைய சொந்த துயர், சமூகத்தின் மற்ற துயரங்களை ஒப்பிடும்போது எவ்வளவு சிறியது என்று நினைத்தார் சுசிலா. கோர்ட்டுக்கு வெளியேதான் ஒரு வக்கீலுக்கு நிறைய வேலை இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டார்.
டெல்லியில் மனித உரிமைகளுக்கான வக்கீல்கள் அமைப்பு இயங்கி வருவதை தெரிந்துகொண்டார். அவர்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அவ்வமைப்பில் ‘பெண்களுக்கான நீதியை பெறுதல்’ என்கிற பிரிவில் சுசிலா இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறார். வரதட்சணை, குடும்ப வன்முறை போன்று பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரத்யேக கொடுமைகள், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு என்று சுசிலாவின் பணிகள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. சென்னையில் தொண்டு நிறுவனங்களின் நிகழ்வுகளிலோ அல்லது ஏதேனும் சமூகப்பணிகளின் போதோ சுசிலாவை நீங்களும் பார்த்திருக்கலாம்.

இடையே பிரதீப்பின் தாயாருக்கு சுசிலாவுக்கு மீண்டும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று தோன்றியது. பிரதீப்பின் நண்பரான விஜயானந்திடம் பேசி, சுசிலாவை திருமணம் செய்துக்கொள்ள முடியுமா என்று கேட்டார். பிரதீப் இறந்த அன்று இரவே தனக்கும் இம்மாதிரி தோன்றியது, ஆனால் சுசிலாவின் மனநிலை தெரியாமல் இதை பேசமுடியாது. அவருக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதமே என்றார்.

பிரதீப்பின் தாயாரும், நண்பர்களும் சுசிலாவிடம் இதுபற்றி பேசினார்கள். உடனடியாக ஒப்புக்கொள்ள முடியாதவர், தீவிரமாக யோசித்தார். இதே போல இளம் வயதில் கணவனை இழந்த தோழி ஒருவள் தனக்கு இருந்து இருந்தால், அவளுக்கு நாம் என்ன யோசனை சொல்வோம் என்று யோசித்தார். அதேதானே தனக்கும். ஒருவழியாக திருமணத்துக்கு சம்மதித்தார். இரு வீட்டாருக்குமே லேசான அதிருப்தி இருந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் பணியாற்றக்கூடிய மோகனாவின் ஏற்பாட்டின் பேரில் பழனியில் திருமணம் நடந்தது.
சுசிலா – விஜயானந்த் தம்பதியினருக்கு இப்போது இரண்டு மகன்கள். விஜயானந்தும் சமூக மக்கள் பணிகளில் ஈடுபாடு கொண்டவர் என்பதால், இல்வாழ்க்கையை பார்ட்டைமாகவும், மக்கள்பணியை ஃபுல்டைமாகவும் தம்பதிசமேதரராக நடத்திவருகிறார்கள்.

“என் வாழ்வில் நடந்தமாதிரியான சம்பவங்கள் ஒரு ஆணுக்கு நடைபெற்றால், சில நாட்களிலேயே அவன் இயல்புக்கு வந்துவிடுவான். பெண், அம்மாதிரி மீண்டும் வருவதில் இங்கு மரபுரீதியாகவே கலாச்சாரத்தடைகள் ஏராளம் இருக்கின்றன. எந்தவொரு சூழலிலும் ஒரு பெண்ணுடைய சுயம் தொலையாமல் இருப்பதுதான் முக்கியம். நான் என் வாழ்க்கையில் கடந்துப்போன துயரமான நாட்களில் என்னுடைய தனித்துவமான அடையாளத்தை மட்டும் இழக்காமல் பிரக்ஞையோடு இருந்திருக்கிறேன். அதனால்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். நாம் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் நாம் மற்றவர்களுக்கு எதை சொல்கிறோமோ அதை பின்பற்றக்கூடியவர்களாக நாமே இருக்க வேண்டும். நான் அப்படிதான் இருக்க விரும்புகிறேன்” என்கிறார் சுசிலா.

(நன்றி : தினகரன் வசந்தம்)

17 நவம்பர், 2014

குடிவெறியர்களே ஜாக்கிரதை!

குடிகாரர்களை குறிவைக்கும் குற்றவாளிகள்

வழிபறிக்கொள்ளை!

குடிமகன்களே உஷார்

புறநகர் பகுதிகளில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியர்களை கொள்ளையர்கள் குறிவைத்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதை அறிந்திருப்போம். எளிதான இலக்கு என்பதால் பெரிய எதிர்ப்பு இல்லாமல் குற்றவாளிகள் தங்கள் ‘வேலை’யை சுலபமாக முடித்துக் கொள்வார்கள். காவல்துறையின் ‘பீட் ஆபிஸர்கள்’ பைக்கில் ரோந்து வந்து இந்த குற்றங்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். சமீபமாக டாஸ்மாக்கில் மூக்கு முட்ட குடித்துவிட்டு, கடுமையான போதையில் வருபவர்களை மடக்கி பணம், நகை கொள்ளையடிக்கும் சம்பவம் சென்னை நகரில் பரவிவருகிறது.

குடிமகன் புலம்பல்

சில நாட்களுக்கு முன்பு இரவு பதினோரு மணியளவில் நமக்கு ஒரு போன்கால் வந்தது. குழறலான குரலில் ஒருவர் பேசினார். பெருங்குடியிலிருந்து குரோம்பேட்டைக்கு பைக்கில் போய்க் கொண்டிருந்தவராம் அவர். இடையில் ‘ரிலாக்ஸ்’ ஆக ஒரு டாஸ்மாக் வாசலில் வண்டியை நிறுத்தியிருக்கிறார். லேசான கிறுகிறுப்போடு பைக்கை கிளப்பி, ஈச்சாங்காடு தாண்டி போய்க்கொண்டிருந்தவரிடம் இடையில் யாரோ கை காட்டி லிஃப்ட் கேட்டிருக்கிறார்கள்.

போதையிலும் சமூகசேவை உணவு கொண்டவரான அவர், லிஃப்ட் கேட்ட வழிப்போக்கருக்கு உதவி இருக்கிறார். பல்லாவரம் வேல்ஸ் காலேஜ் அருகே பைபாஸ் ரோட்டில் தன்னை இறக்கிவிடும்படி வழிப்போக்கர் சொன்னாராம். அங்கே வண்டி ஸ்லோ ஆனதுமே, இருளில் மரங்களுக்கு பின்னால் இருந்து சிலர் ஓடிவந்து இவரை சூழ்ந்திருக்கிறார்கள். யாருக்கு இவர் லிஃப்ட் கொடுத்தாரோ, அவரும் அந்த கும்பலில் ஒருவர்.

அப்புறமென்ன? செயின், மோதிரம், செல்ஃபோன், பர்ஸிலிருந்த பணம் அத்தனையும் காலி. “நான் டிரிங்ஸ் சாப்பிட்டிருக்கிறதாலே போலிஸுக்கு போகவும் பயமாயிருக்கு சார்” என்று கிட்டத்தட்ட அழும் குரலில் நம்மிடம் சொன்னார்.

மயிலை சம்பவம்

போன வாரத்தில் ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும். நல்ல மழை பெய்து முடித்திருந்தது. மயிலாப்பூர் ரயில் நிலையத்துக்கு வலது பக்கமாக இருந்த படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தவருக்கு ஐம்பது வயது இருக்கும். லேசான ‘தள்ளாட்டம்’ தெரிந்தது.

அவரை இருபத்தி மூன்று வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் இருவர் திடீரென எதிர்கொண்டார்கள். “தீப்பெட்டி இருக்கா?” என்று கேட்டார்கள்.

அவர் “இல்லை” என்று நாக்குழறி டாஸ்மாக் வாசனையோடு சொன்னதுமே, அவர்களுக்கு தெரிந்துவிட்டது இவர் நிதானத்தில் இல்லையென்று. சட்டென்று அவரது முகத்தில் ஒருவர் ‘குத்து’ விட்டார். நிலைகுலைந்து கீழே விழுந்தவரின் பையை ஒருவர் பறித்தார். இன்னொருவர் பாண்ட் பாக்கெட்டில் கையை விட்டு பர்ஸை எடுக்க முனைந்தார். நிறைய பேர் நடமாடிக் கொண்டிருந்த ரயில்நிலையத்தில் பப்ளிக்காக இந்த சம்பவம் நடந்ததை பார்த்த பயணிகள் பலரும் ஆவலாக வேடிக்கை பார்த்தார்களே ஒழிய, அந்த இரு குற்றவாளிகளையும் தட்டிக் கேட்கவோ, தடுக்கவோ முனையவில்லை.

தினகரன் ஆக்‌ஷன்

பணிமுடிந்து வீட்டுக்கு திரும்ப ரயில்நிலையத்துக்கு வந்திருந்த தினகரன் பத்திரிகையாளர்கள் சிலர் உடனே அடிபட்டவரை காப்பாற்ற விரைந்தனர். இவர்கள் வருவதை கண்டதுமே ரவுடிகள் இருவரும் தப்பி ஓடினர். அங்கிருந்த ரயில்வே போலிஸ்காரரிடம் போய் தினகரன் ஊழியர் உடனே நடவடிக்கை எடுக்கும்படி கோரினார். “நான் ரயில்வே போலிஸ். வெளியே ரோட்டுக்கு ஓடிப்போய் அவனுங்களை பிடிக்க முடியாது. அதுவுமில்லாமே, அடிபட்டவர் குடிச்சிருக்காரு. கொஞ்சநாளாவே இதுமாதிரி குடிச்சிட்டு வர்றவங்களை குறிவெச்சி இதுமாதிரி நிறைய சம்பவம் நடக்குது” என்று பார்வையாளர் மாதிரியே அவரும் பேசினார்.

அவசரத்துக்கு பிரயோசனமில்லை

தலையில் அடித்துக்கொண்ட நம் பத்திரிகையாளர் உடனே ‘அவசர எண் 100’க்கு போன் அடித்திருக்கிறார். ரொம்ப நேரம் கழித்து போன் எடுக்கப்பட்டது. முழு சம்பவத்தையும் கேட்டவர்கள், ‘அப்படியா?’ என்று எதிர்கேள்வி போட்டிருக்கிறார்கள். இதற்கிடையே குடிமகனுக்கு முகத்தில் காயம் பட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. 108க்கு போன் செய்து அவருக்கு முதலுதவி செய்ய ஏற்பாடு செய்தார்கள் தினகரன் ஊழியர்கள்.

தொடர்கதை

ஓரளவுக்கு ‘ஸ்டெடி’யாக இருந்த அங்கிருந்த இன்னொரு குடிமகன் சொன்னார். “முன்னாடியெல்லாம் குடிகாரனாலேதான் எல்லாருக்கும் பிரச்சினை. இப்போ குடிகாரனுக்கே பிரச்சினை பண்ண ஆரம்பிச்சிட்டானுங்க. தப்பிச்சி ஓடினவனுங்க பக்கத்து ஏரியா பசங்கதான். குடிச்சிட்டு வர்றவனுங்க கிட்டே கொள்ளையடிச்சா, போதையிலே இருக்குறவன் போலிஸுக்கு போவமாட்டான் என்கிறதுதான் அவனுங்களோட லாஜிக்கு” என்றார்.

இதே மாதிரி சம்பவங்கள் அடிக்கடி மயிலாப்பூர் ரயில்நிலையத்தில் நடக்கிறது. ஆனால் குடித்திருக்கிறோமே என்கிற குற்றவுணர்வால், பாதிக்கப்பட்ட அப்பாவிகள் போலிஸுக்கு போவதில்லை என்று அங்கிருந்த பொதுமக்கள் சிலர் சொன்னார்கள்.

ரோந்து தேவை

பேருந்து நிலையங்களுக்கும், ரயில் நிலையங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருப்பதாலேயே இம்மாதிரி குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறுகின்றன. பேருந்தோ, ரயிலோ வர கொஞ்சம் நேரம் எடுத்தால், பக்கத்தில்தானே கடை இருக்கிறது. ‘கேப்’பில் போய் ஒரு ‘கட்டிங்’ போட்டுவிட்டு வந்துவிடலாம் என்று குடிமகன்கள் நினைக்கிறார்கள். அவர்களது இந்த அவசரபோதைதான் வழிபறிக்கொள்ளைக்கு ஆளாக்குகிறது. டாஸ்மாக் பாரிலிருந்தே அவர்களை கவனித்து பின் தொடர்பவர்கள்தான், பலகீனமான சந்தர்ப்பத்தில் செயலில் இறங்குகிறார்கள்.

டாஸ்மாக் கடை வாசல்களில் போலிஸின் ரோந்து வாகனங்கள் நிற்கும் பட்சத்தில் இந்த புதிய முறை கொள்ளையை தடுக்க முடியும். அதே நேரம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களையும் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த முடியும்.

மாநகர காவல் மனசு வைக்குமா?

(நன்றி : தினகரன் சண்டே ஸ்பெஷல்)

10 நவம்பர், 2014

தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்

நவம்பர் 8, 2014 அன்று சென்னை பனுவல் புத்தக நிலையத்தில் நிகழ்ந்த, தாமிராவின் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்’ நூல் விமர்சனக் கூட்டத்தில் பேசியதின் வரிவடிவம் :

எல்லாருக்கும் வணக்கம்.

பேச்சுன்னா எனக்கு கலைஞரைதான் பிடிக்கும். மனசுலே நினைக்கிற வேகத்துலே மைக் முன்னாடி அவராலே பேசமுடியும். எந்த நெருக்கடியிலும் கச்சிதமா எடிட் பண்ணிப் பேசுவாரு. தான் உச்சரிக்கிற ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன விளைவு ஏற்படும்னு அவராலே ஜோசியம் பார்த்துட்டு பேசமுடியும். ஆனா நான் மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவோட ஜெனரேஷன். திட்டமிடாம பேசினா எதையாவது உளறிக் கொட்டிடுவோமோன்னு பயம். அதனாலேதான் முன்னாடியே எழுதிவெச்சிக்கிட்டு பார்த்து பேசுறேன். மன்னிக்கவும்.

நாலஞ்சி வருஷம் முன்னாடி இருக்கும். கற்பு பத்தி குஷ்பூ தைரியமா பேசியிருந்த டைம் அது. வழக்கம்போல தமிழ்நாடே கொந்தளிச்சிடிச்சி. கல்தோன்றி மண்தோன்றா காலத்திலேயே கற்போடு வாழ்ந்த தமிழரின் பெருமையை ஒரு வடக்கத்திப் பொண்ணு இப்படி கேவலப்படுத்தினா, புலியை முறத்தாலே விரட்டின இனம் சும்மா இருக்குமா?

அந்த டயமில் ஒரு படம் வந்தது. அதிலே ஒரு குட்டிப் பாப்பாவோட பேரு குஷ்பூ.

“குஷ்பூ நீ பேசாதே!”

“குஷ்பூ செருப்பு போட்டுக்கிட்டு கோயிலுக்கு வராதே!”

“குஷ்பூ நீ எதையாவது பேசினாலே பிரச்சினைதான்!”

அட. இப்படியெல்லாம் கூட சினிமாவில் சமூக அரசியலை பேசலாமான்னு ஆச்சரியம்.

நானும் தமிழன்தான். இருந்தாலும் இந்த தமிழ் அடையாளத்தை வெச்சிக்கிட்டு ஒரு நூறு வருஷமா நாம பண்ணுற அலம்பல் நமக்கே புரியுது. அதை தைரியமா ஒத்துக்கிட்டவர் என்கிற முறையில் தாமிராவை அப்போதான் எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது. அதுவரை அவரோட கதை சிலதை ஆனந்தவிகடனில் படிச்ச நினைவு. ஆனா, அவரு பேரு ரொம்ப ஸ்ட்ராங்கால்லாம் ரெஜிஸ்டர் ஆகலை. ‘ரெட்டச்சுழி’ படம் வந்தப்போ, அதை ஆதரிச்சி ரொம்ப பாசிட்டிவ்வா இண்டர்நெட்டுலே எழுதினது அனேகமா நான் மட்டும்தான்னு நெனைக்கிறேன்.

லேயர் லேயரா ரெட்டச்சுழியிலே தாமிரா வெச்சிருந்த உள்குத்துகள் வழக்கம்போல தமிழர்களுக்கு புரியலைன்னு தோணுது. அவங்களுக்கு டைரக்டா ‘பஞ்ச் டயலாக்’ சொல்லி, வயிறு நிறைய நாலு இட்லி சாப்பிட்டுட்டு எக்ஸ்ட்ராவது அஞ்சாவது இட்லி ஆர்டர் பண்ணுறவன் பூர்ஷ்வான்னு பப்பரப்பான்னு பேசுனாதான் புரியும்.

“அவுரு கட்சி ஆபிசுக்கு போயே பத்து வருஷம் ஆச்சி. அவராண்டே வந்து ராட்டையை காட்டிக்கிட்டு”ன்னுலாம் டயலாக் வச்சா அது எவ்ளோ பெரிய sattire. அதிர்ஷ்டவசமா இன்னிக்குவரைக்கும் அது காங்கிரஸ்காரனுக்கும் புரியலை. புதுசா வந்திருக்கிற தமிழ்மாநில காங்கிரஸ்காரனுக்கும் புரியலை. நல்லவேளை. தாமிரா தப்பிச்சார். இல்லேன்னா வேட்டி கிழிஞ்சிருக்கும்.

அண்ணன் தாமிராவோட எனக்கு பெருசா பழக்கவழக்கம் எதுவுமில்லை. ஓரிரு முறை அகஸ்மாத்தா பாத்துக்கிட்டப்போ கூட லேசா புன்னகை பண்ணியிருக்கேன். அவ்ளோதான். எனவே அப்போ ரெட்டைச்சுழியை பாசிட்டிவ்வா எழுதினதுக்கு வேறெந்த உள்நோக்கமும் இல்லைங்கிறதை இப்போ சொல்லிக்கறேன். அப்புறம் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ என்கிற இந்த சிறுகதை தொகுப்பை பத்தியும் பாசிட்டிவ்வாதான் பேசப்போறேன். ஏதாவது தேடிக்கண்டுபிடிச்சி நெகட்டிவ்வா சொன்னா மட்டும்தான் அது விமர்சனம்னா, அப்படியொரு கலையே நமக்கு தேவையில்லை.

தாமிராவோட சில கதைகளை பத்திரிகைகளில் படிச்சப்பவும் சரி. ரெட்டச்சுழி படம் பார்த்தப்பவும் சரி. அவரோட அரசியல் என்னன்னு ரொம்ப சப்டிலா காமிக்கிறார். தமிழ் ஐடெண்டிட்டி மேலே எல்லாம் அவருக்கு பேரன்பு இருக்கு. ஆனா, ‘தமிழ், தமிழன்’னு சொல்லி கும்மி அடிச்சிக்கிட்டு மொழியை, இனத்தை வியாபாரத்துக்கு பயன்படுத்துறவங்க மேலே பெருங்கோபம் இருக்கு. இது நானா அவரைப்பத்தி guess பண்ணி வெச்சிருந்த இமேஜ்.

இந்த தொகுப்போட முன்னுரையை படிக்கறப்போ, அது கரெக்ட்டுதான்னு தோணுது.

பொதுவா எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அனேகமா அது மூடநம்பிக்கையா கூட இருக்கலாம். அதாவது படைப்பாளியோட படைப்புலே அவங்களோட பணிசார்ந்த தாக்கம் கண்டிப்பா இருக்குன்னு நம்பறேன்.

உதாரணத்துக்கு சொல்லணும்னா, சுந்தர ராமசாமியை படிச்சோம்னா அவ்வளவு பர்ஃபெக்ட்டா வார்த்தைகள் கட் பண்ணியிருக்கும். ஒவ்வொரு sentenceலேயும் எக்ஸ்ட்ராவாவும் இருக்காது. கம்மியாவும் இருக்காது. துணிக்கடையிலே ரெண்டு மீட்டர் துணி கேட்டோம்னா, ஒரு இஞ்ச் அப்படியும், ஒரு இஞ்ச் இப்படியுமா இல்லாமே ரொம்ப நறுக்கா வெட்டி கொடுப்பாங்க இல்லையா? அந்த கறாரான அளவீடு அவரோட எழுத்துகளில் இருக்கும்.

பத்திரிகையிலே வேலை செய்யுறவங்க கதை எழுதினாங்கன்னா அதுலே ரிப்போர்ட்டிங் வாசனை நிச்சயமா அடிக்கும். தினத்தந்தியிலே வேலை பார்க்குறவங்க எழுதுறப்போ ‘சதக், சதக்’, ‘கதற கதற’ ஆட்டோமேடிக்கா வந்துடும்னு எனக்கு தோணும்.

இதை கிண்டலுக்காக எல்லாம் சொல்லலை. நாம புழுங்கற மனுஷ்யங்களோட / ஏரியாவோட தாக்கம் நம்மோட கனவுகளிலேயே வர்றப்போ, கதைகளில் வர்றது ஆச்சரியமில்லை இல்லையா. ஒருவகையிலே கதைகளும் அந்த எழுத்தாளனோட கனவுகள்தானே?

படைப்பை பணிசார்ந்த அம்சம் தாக்கப்படுத்துது என்பதாலேதான் சமகால நவீன, பின்நவீனத்துவ தமிழிலக்கியத்துக்கு ஒரு குமாஸ்தா தன்மை இருக்குன்னு நெனைக்கிறேன்.

இதுக்கெல்லாம் புள்ளிவிவரம் எதுவும் எங்கிட்டே இல்லை. இது நானே உட்கார்ந்து சொந்தமா ரூம் போட்டு யோசிச்சப்போ தோணுச்சி. ஒருவேளை இதை யாராவது இண்டெக்ஸ் போட்டு, ஆராய்ச்சி பண்ணினா அனேகமா அவங்களுக்கு டாக்டர் பட்டம் கூட ஏதாவது பல்கலைக்கழகத்தாலே வழங்கப்படலாம்.

ஓக்கே. மேட்டருக்கு வர்றேன்.

தாமிராவோட கதைகளில் அவரோட பணியான சினிமா நிறைய இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. அதை சொல்லதான் இப்படி காதை சுத்தி மூக்கை தொட்டிருக்கேன்.

ஒவ்வொரு பாராவும் ஒரு ஷாட்டா இருக்கு.

ஒவ்வொரு கதையும் ரெண்டு இல்லைன்னா மூணு சீன்.

கதைகளைப் படிக்கிறப்போ எனக்கு ரீரெக்கார்டிங் கூட கேட்குது. கன்ஃபார்மா மியூசிக் இளையராஜாதான். டவுட்டே இல்லை.

இடையிடையிலே பொருத்தமான இடங்களில் பாட்டு கூட போடுறாரு.

‘அமிர்தவர்ஷினி’ கதையை படிக்கிறப்பவே மழை வந்து நாம நனைஞ்சுட்ட ஃபீலிங்.

அதிலும் கேரக்டர் இண்ட்ரொடக்‌ஷனெல்லாம் பக்கா சினிமா.

‘அடிப்படையில் குமார் ஒரு நாத்திகர். ஆனால் அவரது நாக்கில் எப்போதும் சனி குடிகொண்டிருக்கும்’னு சொல்றப்பவே இந்த கேரக்டர் மணிவண்ணனுக்குன்னு தோண ஆரம்பிச்சிடுது.

சில கதைகளில் தாமிராவோட உருவகம் அநியாயத்துக்கு மிரட்டுது.

“யூனிஃபார்மை போட்டுக்கிட்டு ஒரு கல்லறையிலேருந்து இன்னொரு கல்லறைக்கு என்னாமா ஓடுதுங்க”ன்னு சொல்றப்போ பக்குன்னு இருக்கு. திருநெல்வேலி சுடலைக்கு நகரம் மொத்தமாவே நரகம்தான். கான்க்ரீட் வீட்டை கல்லறைன்னு சொல்றான். ஸ்கூலும் கான்க்ரீட்தானே. அதுவும் இன்னொரு கல்லறை. “வாக்கரிசையை கூட இனிமே இறக்குமதிதாண்டா பண்ணனும்னு” அவன் சொல்றப்போ நெஜமாவே நாமள்லாம் சுடுகாட்டுலே அலையற ஆவிங்களோன்னு டவுட்டு வருது.

சாட்டிங், பேஸ்புக்கு, வாட்ஸப்புன்னு மாறிட்ட நவீன உலகத்துலே நுணுக்கமான மனித உறவுகளோட பொசிஸன் என்னன்னு ‘மியாவ்… மனுஷி’ங்கிற கதையிலே ஆராயறாரு. அந்த கதையிலே இண்டர்நெட்டுக்கு தாமிரா கொடுத்திருக்கும் தமிழாக்கம் அட்டகாசம். ‘வலைவனம்’. கதை இப்படி முடியுது… “வலைவனங்களெங்கும் ஏதோ ஒரு பூனை மியாவ் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது”. நாமல்லாம் ரோபோவா மாறுகிற வரைக்கும் நம்மோட ஆதாரமான ஆதிகுணங்களை இழந்துட மாட்டோம்னு இந்த கதையோட மெசேஜை எடுத்துக்கிட்டேன்.

எப்பவும் தற்கொலைக்கு முயற்சிக்கிற தட்சணோட முயற்சிகள் ஊத்திக்குது. இருபத்தஞ்சி வாட்டிக்கும் மேலா அவனுக்கு மரணம் கண்ணாமூச்சி காமிக்குது. கடைசியிலே ஒருத்தன் அவங்கிட்டே வந்து புலம்பறான். “என்னை மன்னிச்சிடுங்க. உங்க கிட்டே தோத்துட்டேன். வெளியே சொல்லிடாதீங்க. மானம் போயிடும்”னு அழுவறான். அவன் தான் மரணம். சடார்னு சுஜாதா நினைவுக்கு வந்தாரு. ஒருமாதிரி குறுகுறுப்புலே மறுபடியும் கதையை முதல்லேருந்து படிச்சிப் பார்த்தோம்னா, கிறிஸ்டோபர் நோலன் லெவல் கிளாசிக். கதையோட பின்னிணைப்பா தாமிரா எழுதியிருக்கிற மரணசாசன கவிதை தீபாவளிக்கு டபுள் போனஸ் கிடைச்சமாதிரி இருக்கு.

தாமிராவோட உலகப் புகழ்பெற்ற கதை ‘ரஜினி ரசிகன்’. ரொம்ப நேரிடையான அட்டாக். பாப்புலர் லேங்குவேஜ்லே ஒரு சொசைட்டியோட ஒட்டுமொத்த ஆன்மாவை அம்பலப்படுத்துற கதை. குறைந்தபட்சம் ஒரு கோடி காமுவாவது தமிழ்நாட்டில் இருக்காங்கன்னு தோணுது. நம்பளைப் பத்தி நம்பளைவிட யாருக்கு ரொம்ப நல்லா தெரியும். நாம பொய் பேசுவோம். நாம பொறாமைப் படுவோம். நாம கோள் மூட்டுவோம். நமக்கு பர்சனலா நிறைய வீக்னஸ் இருக்கு. இதெல்லாம் மத்தவங்களுக்கு தெரியாது. நமக்கு மட்டும்தான் தெரியும்னு நெனைச்சிப்போம். ஆனா, “தம்பி. இதெல்லாம்தான் உன்னோட கேரக்டர்”ன்னு ஒருத்தரு புட்டுப்புட்டு வெச்சா எவ்ளோ கோவம் வரும். இந்த கதையை படிக்கிறப்போ அப்படிதான் எல்லாருக்கும் கோவம் வரணும். எனக்கு வரலை. நல்லவேளையா நான் கமல் ரசிகன். கமலைப் பத்தி அண்ணன் ஏதாவது எழுதினாருன்னாதான் டென்ஷன் ஆவேன்.

பொதுவா இதுமாதிரி சினிமாப் பைத்தியங்களை பத்தி வெளியிலேருந்து நிறைய பேர் விமர்சிச்சிருக்காங்க. குறிப்பா பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும். ஆனா ஒரு சினிமாக்காரரே ரொம்ப தெகிரியமா தன்னோட துறையின் சூப்பர்ஸ்டாரை, பலமான ஆதாரங்களை வெச்சிக்கிட்டு அம்பலப்படுத்துறது ரொம்ப துணிச்சலான முயற்சி. ரஜினி கிட்டே கால்ஷீட் வாங்கி, படமெடுக்கிற எண்ணமே அண்ணனுக்கு இல்லைன்னு தோணுது.

எல்லாத்தையும் விட தொகுப்போட க்ளைமேக்ஸ் கொடுக்குற அற்புத அனுபவம்தான் இந்த புத்தகத்தை தலைமேலே தூக்கிவெச்சி என்னை கொண்டாட சொல்லுது. எனக்கு வைரமுத்துவை ரொம்ப பிடிக்கும். இளையராஜாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அனேகமா காது கேட்குற தமிழனில் தொண்ணூறு சதவிகிதம் பேருக்காவது இவங்களை சேர்த்துவெச்சி பிடிக்கும். அவங்க சேர்ந்திருந்த ஆறேழு வருஷம் தமிழ் திரையிசையின் பொற்காலம் என்பதை யாரும் மறுத்துட முடியாது. இந்த பிரிவுக்கு என்ன காரணம்னு ஒவ்வொருத்தனுக்கும் இருவத்தஞ்சி வருஷமா மண்டை காய்ஞ்சிக்கிட்டிருக்கு. தமிழனோட இந்த உணர்வை சைக்காலஜிக்கலா அணுகற கதை அது.

ஒட்டுமொத்தமா இந்த தொகுப்பை பத்தி சொல்லணும்னா, பதினைஞ்சி படத்தை அடுத்தடுத்து பார்த்த இனிமையான அனுபவத்தை எனக்கு கொடுக்குது. பிழியப் பிழிய டிராமா பண்ணவேண்டிய விஷயங்களைகூட ‘லைட்டர் வெர்ஷனில்’ கொடுக்கிறாரு. சமகால அரசியல் சமூக அங்கதம் அங்கங்கே அழகா விரவியிருக்கு. குறிப்பா கடவுள், மரணம்னு விடை தெரியாத விஷயங்களுக்கு… அறிவியலால் ஒப்புக்கொள்ளப்படவோ, நிராகரிக்கப்படவோ முடியாதது பத்தின அலசல் அடிக்கடி வருது.

தான் எழுதுறது இலக்கியங்கிற கான்சியஸ் எல்லாம் இல்லாமே இயல்பான வெளிப்பாடா எழுதியிருக்கிறாரு. ஒரு கதை இலக்கியம்னு ஒப்புக்கப்படணும்னா அதுக்கு நிறைய சங்கேதவார்த்தைகளை அங்கங்கே மானே, தேனேன்னு தூவணும்னாதான் இப்போ ஒத்துக்கிறாங்க. அதிலும் கதையை படிச்சதுமே வாசகனுக்கு புரிஞ்சிடக் கூடாதுன்னு எழுத்தாளர்கள் ரொம்ப தீவிரமா இருக்காங்க. சில கதைகளை படிக்கிறப்போ இந்த கதை எழுதினவருக்கே புரியுமான்னுகூட எனக்கு அப்பப்போ சந்தேகம் வரும். அந்த மாதிரி பாவனைகள் எதுவுமே இல்லாம நேரடியாக வாசகனோட மானசீகமா உரையாடுது தாமிராவோட எழுத்து.

லேங்குவேஜோட கொஞ்சம் இண்டெலெக்ச்சுவல் ஃபார்ம் - ‘மொழியின் அறிவுப்பூர்வமான வெளிப்பாடு’தான் இலக்கியம்னு நம்பறேன். அந்த வகையில் தாமிராவோட இந்தத் தொகுப்பு இப்போதைய சூழலுக்கு அவசியமான இலக்கியம் என்கிற எண்ணம் எனக்கிருக்கு. பரவலாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் என்கிற அபிப்ராயம் உருவாகியிருக்கு. முக்கியமா தாமிரா இனி எழுதற கதைகளையும் மோசமா அவராலே எழுதவே முடியாதுங்கிற ஸ்ட்ராங் ஃபீலிங் வந்திருக்கு.

இந்த கதைகளில் அவருக்கு கிடைச்சிருக்கிற ப்ளாக்பஸ்டர்ஹிட் விரைவில் சினிமாவிலும் கிடைக்கணும்னு, அவரோட முதல் படத்தை இன்னமும் நேசிக்கிற தரைடிக்கெட் ரசிகனாக வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.
நூல் : தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்
ஆசிரியர் : தாமிரா
விலை : ரூ. 100
வெளியீடு : நாளந்தா

5 நவம்பர், 2014

காகிதப்படகில் சாகசப்பயணம் : நூல் வெளியீட்டு விழா உரை!

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசுபவர்கள் (அதாவது எழுதுபவர்கள்), லைக் போடப்போகிறவர்கள், கமெண்ட் போடப்போகிறவர்கள், நிஜமாகவே வாசிக்கப் போகிறவர்கள், பார்த்துவிட்டு சும்மா போகிறவர்கள் அனைவருக்கும் என்னுடைய முதற்கண் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு என் சிற்றுரையை தொடங்குகிறேன்.
நாளைக்கு சச்சின் புக் ரிலீஸ்.

இன்றைக்கே கருணாகரன் புக் ரிலீஸ்.

(விசில் சத்தம்)

சச்சின் கிரிக்கெட்டுக்கு வந்த அதே காலக்கட்டத்தில்தான் கருணாகரனும் பத்திரிகையுலகத்துக்கு வருகிறார். பேட்டை பிடித்தவனுக்கு உடல் ஒத்துழைப்பதை நிறுத்தினால் ரிடையர் ஆகிவிடலாம். பேனாவைப் பிடித்தவன் இதயம் துடிப்பதை நிறுத்துவதுவரை நாட் அவுட் பே(இங்கே ‘ட்’ போடணுமா ‘ன்’ போடணுமா)ஸ்மேனாக முடிவேயில்லாத டெஸ்ட்டில் விளையாடித்தான் ஆகவேண்டும். எல்லாருக்கும் கேரியர் என்பது 56, 58, 60 என்கிற வயதுகளில் முடிந்துவிடும். பேனா பிடித்தவன் மூச்சை விடும்போதுதான் அவனுடைய கேரியர் முடிவுக்கு வரும் என்பது சாபக்கேடு அல்லது வரம். இதுநாள் வரையிலான கால்நூற்றாண்டு கேரியரை பெரிய வம்பு, தும்பு இல்லாமல் முடித்த கருணாகரன் சாருக்கு முதலில் வாழ்த்துகள்.

உலக பதிப்புலக வரலாற்றிலேயே முதன்முறையாக இணையத்திலேயே வெளியீட்டுவிழா காணும் நூல் ‘காகிதப் படகில் சாகசப் பயணம்’ என்றுதான் நினைக்கிறேன். இந்த வெளியீட்டு விழாவில் பேச (அதாவது எழுத) எனக்கு அருகதை இருக்கிறது என்று கருதுகிறேன். ஏனெனில் இப்போது உங்கள் கையில் தவழும் புத்தகத்தை வரிவரியாகதான் நீங்கள் அனைவரும் படிக்கிறீர்கள். இந்த நூலில் இருக்கும் மொத்த வார்த்தைகளையும் (இந்த நூலைவிட ஐந்து மடங்கு கூடுதலான டெக்ஸ்ட்டையும்) நூலாசிரியரின் வாய்வழியாகவே கடந்த ஐந்தாண்டுகளாக நேரிடையாக கேட்டிருப்பவன் என்கிற தகுதி எனக்கு இருக்கிறது.

நவம்பர் தொடங்கினாலே இப்படிதான் உற்சாகமடைந்துவிடுவேன். கலைஞருக்கு பிறகு அதிகம் மதிக்கும் ஆளுமையான கமலஹாசனின் பிறந்தநாள் வருகிறது என்பதால். எனவே கமல் மாதிரி கொஞ்சம் அப்படி, இப்படி சுற்றி உளறிதான் இந்த வெளியீட்டு விழாவில் focus இல்லாமல் பேசி (அதாவது எழுதி) சமாளிக்க இருக்கிறேன் என்பதால் நண்பர்கள் பொறுத்துக்கொண்டு வாசிக்கவும்.

ஒரு சீனியர் தன்னுடைய ஜூனியருக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய கவுரவத்தை எனக்கு கருணாகரன் சார் கொடுத்திருக்கிறார், அவருடைய புத்தகத்தை வாழ்த்திப்பேச அழைத்ததின் மூலம். இந்த கவுரவம் என்கிற சொல் பிரபஞ்சனை அடிக்கடி புரட்டுவதால் வந்து ஒட்டிக் கொள்கிறது. ‘நல்லதொரு காலைப்பொழுதை காஃபி குடித்துதான் கவுரவப்படுத்தமுடியும்’ என்று கவித்தெறிப்போடு எங்கோ அவர் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. ‘லாங் சர்வீஸ்’ செய்த ஊழியர்களை நிறுவனங்கள் கவுரவப்படுத்தும். மற்ற தொழில்களுக்கு சரி. பத்திரிகையாளனை அதுபோல யாரும் பெரியதாக கவுரவப்படுத்துவதாக தெரியவில்லை. நம் மக்களைப் பொறுத்தவரை தினமும் காலையில் அவர்களுக்கு பேப்பர் போடும் பையனும் ஒன்றுதான். அந்த பேப்பரில் எழுதியிருப்பவனும் ஒன்றுதான். இதற்காக பேப்பர் போடும் பையனை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தமில்லை. அவன்தான் ஒவ்வொரு எழுத்தையும் எண்ட் பாய்ண்டுக்கு கொண்டுச்சென்று கவுரவப்படுத்துபவன்.

ஓக்கே. எங்கே விட்டேன். பத்திரிகையாளனை அதுபோல யாரும் பெரியதாக கவுரவப்படுத்துவதாக தெரியவில்லை. எனவே பத்திரிகையாளன் தன்னைத்தானே கவுரவப்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழி. கருணாகரன் சார், அதைத்தான் செய்திருக்கிறார். கடந்துபோன தன்னுடைய இருபத்தைந்து ஆண்டுகால சொந்தவாழ்க்கையின் பெரும்பகுதியை பத்திரிகைப்பணிகள் எப்படியெல்லாம் பறித்துக் கொண்டது என்பதை ஏகப்பட்ட முறை, பல சம்பவங்களை சொல்லி சொல்லியிருக்கிறார். எல்லாருமே அவரவர் பணிரீதியான அழுத்தங்களை சந்திக்கிறார்கள் என்றாலும், இத்துறை பலி கேட்கும் விஷயங்கள் கொஞ்சம் கொடூரமானவை. உண்மையில் இந்த நூலில் இந்த விஷயத்தை அவர் லேசாகதான் கோடிட்டுக் காட்டியிருக்கிறாரே தவிர, முழுக்க சொல்லவில்லை. சொல்லவும் விரும்பவில்லை என்றுதான் தோன்றுகிறது.

நாற்பதை எட்டியவர்களுக்கு சொல்ல நிறைய இருக்கிறது. இருபதை தாண்டியவர்களுக்கு கேட்க நிறைய இருக்கிறது. நாற்பதை எட்டியவர்கள் சொல்ல தயாராக இருந்தாலும், இருபதை எட்டியவர்கள் பெரும்பாலும் காது கொடுக்க விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். கவுதம் சாரிடம் நான் கற்றுக்கொண்ட பண்பு, வாயை திறக்கிறோமோ இல்லையோ. இரண்டு காதுகளையும் எப்போதும் திறந்துவைத்திருக்க வேண்டும். தேவையோ தேவையில்லையோ. எல்லாவற்றையும் கேட்டு வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அனைத்தையும் சீர்செய்து தேவையில்லாதவற்றை தூக்கி ரீசைக்ளிங் பின்னில் போட்டுக் கொள்ளலாம். முற்போக்கானவன் என்று காட்டிக்கொள்ள விரும்பினாலும் எனக்கு குருகுலக் கல்வியில் உள்ளூர நம்பிக்கையுண்டு.

முதன்முதலாக கருணாகரன் சாரை நான் சந்தித்தது ராயப்பேட்டையில் இருந்த ‘பெண்ணே நீ’ அலுவலகத்தில். கவுதம் சாரை அவர் சந்திக்க வந்திருந்தார். அப்போது நான் கவுதமிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். “இவர்தான் பெ.கருணாகரன்” என்று கவுதம் சொன்னதுமே, “காதல்தோல்வி கதைகள் எழுதினவர்தானே?” என்று கேட்டு கைகுலுக்கினேன். இருபதாண்டுகள் கழித்து தன்னுடைய எழுத்துகளை ஒருவன் நினைவுகூர்வது எந்தவொரு எழுத்தாளனுக்கும் உவப்பான விஷயம்தான். என்னை இவனுக்கு ஏற்கனவே எழுத்துகள் வாயிலாக தெரியும் என்கிற எண்ணமே அவருக்கு என் மீது கூடுதலான அன்பை ஏற்படுத்தியிருக்கலாம். பின்னர் சில மாதங்கள் கழித்து, ‘புதிய தலைமுறை’ இதழ் தொடங்கப்பட்டபோது அதன் ஆரம்ப ஊழியர்களாக ஒரே அலுவலகத்தில் இருந்தோம். ‘அ’னா போட்டு ஓர் இதழ் துவக்கப்படும்போது அதில் பணிபுரிபவர்களுக்கு கிடைக்கக்கூடிய அனுபவங்கள், மற்ற பெரிய இதழ்களில் பணிபுரிபவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களை காட்டிலும் கொஞ்சம் ‘ஒஸ்தி’தான். அனுபவமிக்க மாலன் சார், கருணாகரன் சார், உதயசூரியன் சார் போன்றவர்களின் வழிகாட்டலில் ஆரம்பத் திணறல்களை வெகுசுலபமாகவே எங்களால் கடக்க முடிந்தது.

கருணாகரன் சார் கடந்த ஐந்தாண்டுகளில் அவர் மனைவியிடம் பேசியதைக் காட்டிலும் என்னிடம்தான் அதிகம் பேசியிருப்பார் என்று கருதுகிறேன். ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்ததால் இது சாத்தியமானது. அலுவலகத்தில் டீ குடிக்க மாட்டோம். வெளியேதான் இருவரும் போவோம். டீ குடிக்க ஐந்து, பத்து நிமிடம் ஆகிறதென்றாலும் ஒவ்வொரு பிரேக்கிலும் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். இதழ் தயாரிப்பு, கட்டுரைகள் முதலானவற்றை தாண்டி பர்சனல் லைஃப் குறித்தும் பேசியிருக்கிறோம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் விகடனில் தொடங்கிய தன்னுடைய பத்திரியுலகப் பணிகளை பேசத் தொடங்கினார். கிசுகிசுக்கள் கேட்பதில் ஆர்வம் கொண்ட நான் (இது முக்கியமான வெகுஜனப் பண்பு) கேள்விப்பட்டவற்றை சரியா, தவறா என்று அவரிடம் கேட்பேன். அது தொடர்பாக அவருக்கு தெரிந்த விஷயங்களுக்கு ஹைப்பர்லிங்க் கொடுத்து கொஞ்சம் விஸ்தாரமாக சொல்வார். இதன் வாயிலாக நான் பணிபுரிந்திருக்கா விட்டாலும் குமுதம், விகடன், நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் எப்படி இயங்கின, அங்கு யாரெல்லாம் பணிபுரிந்தார்கள், அவர்களுடைய குணநலன்கள் என்று கருணாகரனின் ப்ளாஷ்பேக்கில் நான் அறிந்துகொண்ட விஷயங்கள் பல.

குறிப்பாக குமுதம் – கமல் மோதல் குறித்து அவரிடம் அடிக்கடி கேட்பேன். ஏற்கனவே அவர் விலாவரியாக சொல்லியிருந்தாலும், வேண்டுமென்றே புதியதாக கேள்விப்படுவது போல மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கேட்பேன். இவனிடம்தான் சொல்லிவிட்டோமே என்று சலித்துக் கொள்ளாமல் மீண்டும் ஆதியிலிருந்து அந்தம் வரை சொல்வார். போலவே பாபா காலத்து ரஜினி பற்றியும் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அப்போது தமிழ் வெகுஜன இதழ்கள் குறித்த நூல்களை தேடித்தேடி வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அது தொடர்பான நூல்கள் வெகுகுறைவாகவே இருக்கின்றன என்கிற எண்ணம் ஏற்பட்டிருந்தது. “இதையெல்லாம் நீங்கள் எழுதலாமே சார்?” என்று கேட்டால், “எழுதினா யார் படிப்பா?” என்பார்.

ஃபேஸ்புக்கில் அவர் அக்கவுண்டு தொடங்கிய அந்த சுபயோக சுபதினத்தின் முகூர்த்த நேரம்தான் இன்று ‘காகிதப் படகில் சாகசப் பயணம்’ நூல் வெளிவரவே காரணமாக இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் ஃபேஸ்புக்கில் மொக்கைதான் போட்டுக் கொண்டிருந்தார். இளங்கோவன் பாலகிருஷ்ணன் திடீரென்று அவர் மாணவப் பத்திரிகையாளராக இருந்தபோது எழுதிய கட்டுரைகளை ஸ்கேன் செய்து போட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் தான் தன்னுடைய ப்ளாஷ்பேக்கை எழுதலாம் என்கிற எண்ணம் கருணாகரன் சாருக்கு வந்தது.

ஆரம்பத்தில் நூலாக தொகுக்கும் எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. இந்த ஸ்டேட்டஸ்களுக்கு பெரியளவில் இணைய வாசகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து நூலாக வெளியிடவேண்டும் என்கிற கோரிக்கைகளும் அவருக்கு வைக்கப்பட்டபோதுதான், ஏன் நூலாக்கக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தார். ‘நூல்’ என்கிற எண்ணம் வந்தபிறகு, மிகவும் கவனமாக எழுத ஆரம்பித்தார் என்பதை கவனித்திருக்கிறேன்.

எழுத நினைத்து அவர் எழுதாமல் விட்ட சம்பவங்கள் ஏராளமாக இருக்கிறது. ஃபாஸிட்டிவ்வான விஷயங்களைதான் ஃபோகஸ் செய்யப்போகிறேன் என்று முதலிலேயே சொல்லிவிட்டார். ஆனால் எழுதுவதற்கு முன்பாக அது தொடர்பான நெகட்டிவ்வான விஷயங்களையும் என்னிடம் சொல்லியிருக்கிறார். இந்த நூலால் யார் மனதும் புண்பட்டுவிடக்கூடாது என்று ரொம்பவும் கவனமாக இருந்தார். புத்தகத்தை வாசிக்கும்போது அவரிடம் அந்த ஓர்மை எந்தளவுக்கு இருந்தது என்பதை உணரமுடிகிறது.

(சோடா ப்ளீஸ்)


உடன்பணிபுரிந்த சகாக்கள் பற்றி எழுதவேண்டுமா என்று அவருக்கு தயக்கம் இருந்தது. எழுதலாம் என்று ஊக்கம் கொடுத்தது நான்தான். இப்போது புத்தகத்தை வாசிக்கும்போது அந்த அத்தியாயம் கொஞ்சம் சோடை போனது போலதான் தோன்றுகிறது. காரணம் அவருடைய நெடும்பயணத்தில் எல்லாரையும் குறிப்பிட முடியவில்லை. போலவே, சில முக்கியமான விடுபடுதல்கள் இருப்பதாக தோன்றியதும் அவரிடம் தொலைபேசியில் கேட்டேன். “அவங்கள்லாம் முக்கியமானவங்கதான். ஆனா நீங்க குறிப்பிடறவங்களில் சிலரோட நான் வேலை கூட பார்த்ததில்லை. என்னோட அனுபவங்கள் என்கிறப்போ என்னோட பழகாதவங்களை பத்தி என்னன்னு எழுதறது. சில பேரை எனக்குத் தெரியும். ஆனா நினைவுப்படுத்திக்கிற மாதிரி முத்தாய்ப்பான சம்பவம் எதுவும் அவங்க தொடர்பா இல்லாததாலே எழுத முடியலை” என்றார். அந்த அத்தியாயம் கொஞ்சம் சுமார் என்று எழுத்தாளர் சுபா (சுரேஷ்) இன்று காலை ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்ததை கவனித்தேன். இந்த பாவம் என்னையே சாரும்.

புதிய தலைமுறை பத்திரிகையாளர் திட்டத்தின்போது வாசித்த இரண்டு கட்டுரைகளை சேர்த்திருக்கிறார். அதை பின்னிணைப்பாக கொடுத்திருக்கலாம் என்று கருதுகிறேன். சுவாரஸ்யமான நாவலுக்கு இடையே இரண்டு கட்டுரைகளை அத்தியாயமாக செருகியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

நூலில் எனக்கு மிகவும் பிடித்த அத்தியாயம் நக்கீரன் அண்ணாச்சியைப் பற்றி அவர் எழுதியிருக்கும் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’. அண்ணன் கோபால் அவர்களைப் பற்றி கருணாகரன் சார் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட பல விஷயங்களே ஒரு முழுப்புத்தகம் அளவுக்கு தேறும். அந்த அளவுக்கு அண்ணன் மீது அளவில்லா அன்பும், அளப்பறியா மரியாதையும் கொண்டவர் கருணாகரன். இந்த அத்தியாயத்தை அவர் ஃபேஸ்புக்கில் எழுதியபோது அவ்வளவு பாராட்டுகள். பிற்பாடு இந்த அத்தியாயம் அப்படியே ‘இனிய உதயம்’ இதழிலும் பிரசுரமானது. குமுதம் வரதராசன் குறித்து அவர் எழுதியிருக்கும் அத்தியாயமும் அபாரம். தன்னுடைய சீனியர்கள் பெரும்பாலானவர்கள் மீது கருணாகரன் சாருக்கு மரியாதையும் பக்தியும் உண்டு. மாலன் சார் குறித்து எழுதியிருக்கும் அத்தியாயத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையையுமே, மாலனிடம் பணிபுரிந்த அத்தனை பேரும் ஒப்புக்கொள்வார்கள். ஒரே ஒருவரி கூட மிகையாக இருக்காது.

மற்ற பணிகள் மாதிரி இல்லாமல் பத்திரிகையாளன் ஒவ்வொருவனுக்கும் கிடைக்கும் பணி அனுபவங்கள் unique ஆனது. உலகில் வேறெவருக்குமே கிடைக்காத அனுபவங்கள் அவனுக்கு மட்டும்தான் சாத்தியம். பத்திரிகையுலகில் நீண்டகாலம் பணிபுரிந்த மூத்தப் பத்திரிகையாளர்கள் தங்கள் அனுபவங்களையும், தாங்கள் சந்தித்த மனிதர்களையும் இதுபோல நூலாக எழுதவேண்டும். தங்கள் அடுத்த தலைமுறை பத்திரிகையாளர்களுக்கு என்றில்லாமல் இது அனைவருக்கும் பயன்படக்கூடிய விஷயம்தான். தான் வாழும் காலத்தைதான் ஒவ்வொரு பத்திரிகையாளனும் தன்னுடைய பணியாக பதிவு செய்கிறான். அதுவே எதிர்கால வரலாறாகவும் ஆகிறது. நமக்கு பின்னால் எத்தனையோ ஆண்டுகள் கழித்து எவனோ ஒருவன் வரலாற்றை தொகுக்க தேடும்போது, இம்மாதிரி நூல்கள் அவனுக்கு வெகுவாக உதவும்.

அந்த கால கல்கியை தெரிந்துக்கொள்ள வாண்டுமாமாவின் ‘எதிர்நீச்சல்’, குமுதத்தை அறிந்துக்கொள்ள ‘எடிட்டர் எஸ்.ஏ.பி’, சாவியை உணர ‘சாவியில் சில நாட்கள்’ என்று பத்திரிகையாளர்களுக்கென்றே பிரத்யேகமாக முன்னுதாரண நூல்கள் ஏராளமானவை இருக்கின்றன. அந்தவரிசையில் வரும் ‘காகிதப்படகில் சாகசப் பயணம்’ நூலும் மாபெரும் வெற்றி காணும் என்று வாழ்த்தி என்னுடைய நீண்ட உரையை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

பேச (எழுத) வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி!

(பலத்த கைத்தட்டல்)

நூல் : காகிதப் படகில் சாகசப் பயணம்
ஆசிரியர் : பெ. கருணாகரன்
பக்கங்கள் : 208
விலை : ரூ.150/-
வெளியீடு : குன்றம் பதிப்பகம்,
73/31, பிருந்தாவனம் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை - 600 033.
ஃபேஸ்புக் : https://www.facebook.com/perumal.karunakaran.1
மின்னஞ்சல் : pekarunakaran@gmail.com