5 நவம்பர், 2014

காகிதப்படகில் சாகசப்பயணம் : நூல் வெளியீட்டு விழா உரை!

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசுபவர்கள் (அதாவது எழுதுபவர்கள்), லைக் போடப்போகிறவர்கள், கமெண்ட் போடப்போகிறவர்கள், நிஜமாகவே வாசிக்கப் போகிறவர்கள், பார்த்துவிட்டு சும்மா போகிறவர்கள் அனைவருக்கும் என்னுடைய முதற்கண் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு என் சிற்றுரையை தொடங்குகிறேன்.
நாளைக்கு சச்சின் புக் ரிலீஸ்.

இன்றைக்கே கருணாகரன் புக் ரிலீஸ்.

(விசில் சத்தம்)

சச்சின் கிரிக்கெட்டுக்கு வந்த அதே காலக்கட்டத்தில்தான் கருணாகரனும் பத்திரிகையுலகத்துக்கு வருகிறார். பேட்டை பிடித்தவனுக்கு உடல் ஒத்துழைப்பதை நிறுத்தினால் ரிடையர் ஆகிவிடலாம். பேனாவைப் பிடித்தவன் இதயம் துடிப்பதை நிறுத்துவதுவரை நாட் அவுட் பே(இங்கே ‘ட்’ போடணுமா ‘ன்’ போடணுமா)ஸ்மேனாக முடிவேயில்லாத டெஸ்ட்டில் விளையாடித்தான் ஆகவேண்டும். எல்லாருக்கும் கேரியர் என்பது 56, 58, 60 என்கிற வயதுகளில் முடிந்துவிடும். பேனா பிடித்தவன் மூச்சை விடும்போதுதான் அவனுடைய கேரியர் முடிவுக்கு வரும் என்பது சாபக்கேடு அல்லது வரம். இதுநாள் வரையிலான கால்நூற்றாண்டு கேரியரை பெரிய வம்பு, தும்பு இல்லாமல் முடித்த கருணாகரன் சாருக்கு முதலில் வாழ்த்துகள்.

உலக பதிப்புலக வரலாற்றிலேயே முதன்முறையாக இணையத்திலேயே வெளியீட்டுவிழா காணும் நூல் ‘காகிதப் படகில் சாகசப் பயணம்’ என்றுதான் நினைக்கிறேன். இந்த வெளியீட்டு விழாவில் பேச (அதாவது எழுத) எனக்கு அருகதை இருக்கிறது என்று கருதுகிறேன். ஏனெனில் இப்போது உங்கள் கையில் தவழும் புத்தகத்தை வரிவரியாகதான் நீங்கள் அனைவரும் படிக்கிறீர்கள். இந்த நூலில் இருக்கும் மொத்த வார்த்தைகளையும் (இந்த நூலைவிட ஐந்து மடங்கு கூடுதலான டெக்ஸ்ட்டையும்) நூலாசிரியரின் வாய்வழியாகவே கடந்த ஐந்தாண்டுகளாக நேரிடையாக கேட்டிருப்பவன் என்கிற தகுதி எனக்கு இருக்கிறது.

நவம்பர் தொடங்கினாலே இப்படிதான் உற்சாகமடைந்துவிடுவேன். கலைஞருக்கு பிறகு அதிகம் மதிக்கும் ஆளுமையான கமலஹாசனின் பிறந்தநாள் வருகிறது என்பதால். எனவே கமல் மாதிரி கொஞ்சம் அப்படி, இப்படி சுற்றி உளறிதான் இந்த வெளியீட்டு விழாவில் focus இல்லாமல் பேசி (அதாவது எழுதி) சமாளிக்க இருக்கிறேன் என்பதால் நண்பர்கள் பொறுத்துக்கொண்டு வாசிக்கவும்.

ஒரு சீனியர் தன்னுடைய ஜூனியருக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய கவுரவத்தை எனக்கு கருணாகரன் சார் கொடுத்திருக்கிறார், அவருடைய புத்தகத்தை வாழ்த்திப்பேச அழைத்ததின் மூலம். இந்த கவுரவம் என்கிற சொல் பிரபஞ்சனை அடிக்கடி புரட்டுவதால் வந்து ஒட்டிக் கொள்கிறது. ‘நல்லதொரு காலைப்பொழுதை காஃபி குடித்துதான் கவுரவப்படுத்தமுடியும்’ என்று கவித்தெறிப்போடு எங்கோ அவர் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. ‘லாங் சர்வீஸ்’ செய்த ஊழியர்களை நிறுவனங்கள் கவுரவப்படுத்தும். மற்ற தொழில்களுக்கு சரி. பத்திரிகையாளனை அதுபோல யாரும் பெரியதாக கவுரவப்படுத்துவதாக தெரியவில்லை. நம் மக்களைப் பொறுத்தவரை தினமும் காலையில் அவர்களுக்கு பேப்பர் போடும் பையனும் ஒன்றுதான். அந்த பேப்பரில் எழுதியிருப்பவனும் ஒன்றுதான். இதற்காக பேப்பர் போடும் பையனை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தமில்லை. அவன்தான் ஒவ்வொரு எழுத்தையும் எண்ட் பாய்ண்டுக்கு கொண்டுச்சென்று கவுரவப்படுத்துபவன்.

ஓக்கே. எங்கே விட்டேன். பத்திரிகையாளனை அதுபோல யாரும் பெரியதாக கவுரவப்படுத்துவதாக தெரியவில்லை. எனவே பத்திரிகையாளன் தன்னைத்தானே கவுரவப்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழி. கருணாகரன் சார், அதைத்தான் செய்திருக்கிறார். கடந்துபோன தன்னுடைய இருபத்தைந்து ஆண்டுகால சொந்தவாழ்க்கையின் பெரும்பகுதியை பத்திரிகைப்பணிகள் எப்படியெல்லாம் பறித்துக் கொண்டது என்பதை ஏகப்பட்ட முறை, பல சம்பவங்களை சொல்லி சொல்லியிருக்கிறார். எல்லாருமே அவரவர் பணிரீதியான அழுத்தங்களை சந்திக்கிறார்கள் என்றாலும், இத்துறை பலி கேட்கும் விஷயங்கள் கொஞ்சம் கொடூரமானவை. உண்மையில் இந்த நூலில் இந்த விஷயத்தை அவர் லேசாகதான் கோடிட்டுக் காட்டியிருக்கிறாரே தவிர, முழுக்க சொல்லவில்லை. சொல்லவும் விரும்பவில்லை என்றுதான் தோன்றுகிறது.

நாற்பதை எட்டியவர்களுக்கு சொல்ல நிறைய இருக்கிறது. இருபதை தாண்டியவர்களுக்கு கேட்க நிறைய இருக்கிறது. நாற்பதை எட்டியவர்கள் சொல்ல தயாராக இருந்தாலும், இருபதை எட்டியவர்கள் பெரும்பாலும் காது கொடுக்க விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். கவுதம் சாரிடம் நான் கற்றுக்கொண்ட பண்பு, வாயை திறக்கிறோமோ இல்லையோ. இரண்டு காதுகளையும் எப்போதும் திறந்துவைத்திருக்க வேண்டும். தேவையோ தேவையில்லையோ. எல்லாவற்றையும் கேட்டு வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அனைத்தையும் சீர்செய்து தேவையில்லாதவற்றை தூக்கி ரீசைக்ளிங் பின்னில் போட்டுக் கொள்ளலாம். முற்போக்கானவன் என்று காட்டிக்கொள்ள விரும்பினாலும் எனக்கு குருகுலக் கல்வியில் உள்ளூர நம்பிக்கையுண்டு.

முதன்முதலாக கருணாகரன் சாரை நான் சந்தித்தது ராயப்பேட்டையில் இருந்த ‘பெண்ணே நீ’ அலுவலகத்தில். கவுதம் சாரை அவர் சந்திக்க வந்திருந்தார். அப்போது நான் கவுதமிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். “இவர்தான் பெ.கருணாகரன்” என்று கவுதம் சொன்னதுமே, “காதல்தோல்வி கதைகள் எழுதினவர்தானே?” என்று கேட்டு கைகுலுக்கினேன். இருபதாண்டுகள் கழித்து தன்னுடைய எழுத்துகளை ஒருவன் நினைவுகூர்வது எந்தவொரு எழுத்தாளனுக்கும் உவப்பான விஷயம்தான். என்னை இவனுக்கு ஏற்கனவே எழுத்துகள் வாயிலாக தெரியும் என்கிற எண்ணமே அவருக்கு என் மீது கூடுதலான அன்பை ஏற்படுத்தியிருக்கலாம். பின்னர் சில மாதங்கள் கழித்து, ‘புதிய தலைமுறை’ இதழ் தொடங்கப்பட்டபோது அதன் ஆரம்ப ஊழியர்களாக ஒரே அலுவலகத்தில் இருந்தோம். ‘அ’னா போட்டு ஓர் இதழ் துவக்கப்படும்போது அதில் பணிபுரிபவர்களுக்கு கிடைக்கக்கூடிய அனுபவங்கள், மற்ற பெரிய இதழ்களில் பணிபுரிபவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களை காட்டிலும் கொஞ்சம் ‘ஒஸ்தி’தான். அனுபவமிக்க மாலன் சார், கருணாகரன் சார், உதயசூரியன் சார் போன்றவர்களின் வழிகாட்டலில் ஆரம்பத் திணறல்களை வெகுசுலபமாகவே எங்களால் கடக்க முடிந்தது.

கருணாகரன் சார் கடந்த ஐந்தாண்டுகளில் அவர் மனைவியிடம் பேசியதைக் காட்டிலும் என்னிடம்தான் அதிகம் பேசியிருப்பார் என்று கருதுகிறேன். ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்ததால் இது சாத்தியமானது. அலுவலகத்தில் டீ குடிக்க மாட்டோம். வெளியேதான் இருவரும் போவோம். டீ குடிக்க ஐந்து, பத்து நிமிடம் ஆகிறதென்றாலும் ஒவ்வொரு பிரேக்கிலும் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். இதழ் தயாரிப்பு, கட்டுரைகள் முதலானவற்றை தாண்டி பர்சனல் லைஃப் குறித்தும் பேசியிருக்கிறோம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் விகடனில் தொடங்கிய தன்னுடைய பத்திரியுலகப் பணிகளை பேசத் தொடங்கினார். கிசுகிசுக்கள் கேட்பதில் ஆர்வம் கொண்ட நான் (இது முக்கியமான வெகுஜனப் பண்பு) கேள்விப்பட்டவற்றை சரியா, தவறா என்று அவரிடம் கேட்பேன். அது தொடர்பாக அவருக்கு தெரிந்த விஷயங்களுக்கு ஹைப்பர்லிங்க் கொடுத்து கொஞ்சம் விஸ்தாரமாக சொல்வார். இதன் வாயிலாக நான் பணிபுரிந்திருக்கா விட்டாலும் குமுதம், விகடன், நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் எப்படி இயங்கின, அங்கு யாரெல்லாம் பணிபுரிந்தார்கள், அவர்களுடைய குணநலன்கள் என்று கருணாகரனின் ப்ளாஷ்பேக்கில் நான் அறிந்துகொண்ட விஷயங்கள் பல.

குறிப்பாக குமுதம் – கமல் மோதல் குறித்து அவரிடம் அடிக்கடி கேட்பேன். ஏற்கனவே அவர் விலாவரியாக சொல்லியிருந்தாலும், வேண்டுமென்றே புதியதாக கேள்விப்படுவது போல மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கேட்பேன். இவனிடம்தான் சொல்லிவிட்டோமே என்று சலித்துக் கொள்ளாமல் மீண்டும் ஆதியிலிருந்து அந்தம் வரை சொல்வார். போலவே பாபா காலத்து ரஜினி பற்றியும் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அப்போது தமிழ் வெகுஜன இதழ்கள் குறித்த நூல்களை தேடித்தேடி வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அது தொடர்பான நூல்கள் வெகுகுறைவாகவே இருக்கின்றன என்கிற எண்ணம் ஏற்பட்டிருந்தது. “இதையெல்லாம் நீங்கள் எழுதலாமே சார்?” என்று கேட்டால், “எழுதினா யார் படிப்பா?” என்பார்.

ஃபேஸ்புக்கில் அவர் அக்கவுண்டு தொடங்கிய அந்த சுபயோக சுபதினத்தின் முகூர்த்த நேரம்தான் இன்று ‘காகிதப் படகில் சாகசப் பயணம்’ நூல் வெளிவரவே காரணமாக இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் ஃபேஸ்புக்கில் மொக்கைதான் போட்டுக் கொண்டிருந்தார். இளங்கோவன் பாலகிருஷ்ணன் திடீரென்று அவர் மாணவப் பத்திரிகையாளராக இருந்தபோது எழுதிய கட்டுரைகளை ஸ்கேன் செய்து போட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் தான் தன்னுடைய ப்ளாஷ்பேக்கை எழுதலாம் என்கிற எண்ணம் கருணாகரன் சாருக்கு வந்தது.

ஆரம்பத்தில் நூலாக தொகுக்கும் எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. இந்த ஸ்டேட்டஸ்களுக்கு பெரியளவில் இணைய வாசகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து நூலாக வெளியிடவேண்டும் என்கிற கோரிக்கைகளும் அவருக்கு வைக்கப்பட்டபோதுதான், ஏன் நூலாக்கக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தார். ‘நூல்’ என்கிற எண்ணம் வந்தபிறகு, மிகவும் கவனமாக எழுத ஆரம்பித்தார் என்பதை கவனித்திருக்கிறேன்.

எழுத நினைத்து அவர் எழுதாமல் விட்ட சம்பவங்கள் ஏராளமாக இருக்கிறது. ஃபாஸிட்டிவ்வான விஷயங்களைதான் ஃபோகஸ் செய்யப்போகிறேன் என்று முதலிலேயே சொல்லிவிட்டார். ஆனால் எழுதுவதற்கு முன்பாக அது தொடர்பான நெகட்டிவ்வான விஷயங்களையும் என்னிடம் சொல்லியிருக்கிறார். இந்த நூலால் யார் மனதும் புண்பட்டுவிடக்கூடாது என்று ரொம்பவும் கவனமாக இருந்தார். புத்தகத்தை வாசிக்கும்போது அவரிடம் அந்த ஓர்மை எந்தளவுக்கு இருந்தது என்பதை உணரமுடிகிறது.

(சோடா ப்ளீஸ்)


உடன்பணிபுரிந்த சகாக்கள் பற்றி எழுதவேண்டுமா என்று அவருக்கு தயக்கம் இருந்தது. எழுதலாம் என்று ஊக்கம் கொடுத்தது நான்தான். இப்போது புத்தகத்தை வாசிக்கும்போது அந்த அத்தியாயம் கொஞ்சம் சோடை போனது போலதான் தோன்றுகிறது. காரணம் அவருடைய நெடும்பயணத்தில் எல்லாரையும் குறிப்பிட முடியவில்லை. போலவே, சில முக்கியமான விடுபடுதல்கள் இருப்பதாக தோன்றியதும் அவரிடம் தொலைபேசியில் கேட்டேன். “அவங்கள்லாம் முக்கியமானவங்கதான். ஆனா நீங்க குறிப்பிடறவங்களில் சிலரோட நான் வேலை கூட பார்த்ததில்லை. என்னோட அனுபவங்கள் என்கிறப்போ என்னோட பழகாதவங்களை பத்தி என்னன்னு எழுதறது. சில பேரை எனக்குத் தெரியும். ஆனா நினைவுப்படுத்திக்கிற மாதிரி முத்தாய்ப்பான சம்பவம் எதுவும் அவங்க தொடர்பா இல்லாததாலே எழுத முடியலை” என்றார். அந்த அத்தியாயம் கொஞ்சம் சுமார் என்று எழுத்தாளர் சுபா (சுரேஷ்) இன்று காலை ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்ததை கவனித்தேன். இந்த பாவம் என்னையே சாரும்.

புதிய தலைமுறை பத்திரிகையாளர் திட்டத்தின்போது வாசித்த இரண்டு கட்டுரைகளை சேர்த்திருக்கிறார். அதை பின்னிணைப்பாக கொடுத்திருக்கலாம் என்று கருதுகிறேன். சுவாரஸ்யமான நாவலுக்கு இடையே இரண்டு கட்டுரைகளை அத்தியாயமாக செருகியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

நூலில் எனக்கு மிகவும் பிடித்த அத்தியாயம் நக்கீரன் அண்ணாச்சியைப் பற்றி அவர் எழுதியிருக்கும் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’. அண்ணன் கோபால் அவர்களைப் பற்றி கருணாகரன் சார் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட பல விஷயங்களே ஒரு முழுப்புத்தகம் அளவுக்கு தேறும். அந்த அளவுக்கு அண்ணன் மீது அளவில்லா அன்பும், அளப்பறியா மரியாதையும் கொண்டவர் கருணாகரன். இந்த அத்தியாயத்தை அவர் ஃபேஸ்புக்கில் எழுதியபோது அவ்வளவு பாராட்டுகள். பிற்பாடு இந்த அத்தியாயம் அப்படியே ‘இனிய உதயம்’ இதழிலும் பிரசுரமானது. குமுதம் வரதராசன் குறித்து அவர் எழுதியிருக்கும் அத்தியாயமும் அபாரம். தன்னுடைய சீனியர்கள் பெரும்பாலானவர்கள் மீது கருணாகரன் சாருக்கு மரியாதையும் பக்தியும் உண்டு. மாலன் சார் குறித்து எழுதியிருக்கும் அத்தியாயத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையையுமே, மாலனிடம் பணிபுரிந்த அத்தனை பேரும் ஒப்புக்கொள்வார்கள். ஒரே ஒருவரி கூட மிகையாக இருக்காது.

மற்ற பணிகள் மாதிரி இல்லாமல் பத்திரிகையாளன் ஒவ்வொருவனுக்கும் கிடைக்கும் பணி அனுபவங்கள் unique ஆனது. உலகில் வேறெவருக்குமே கிடைக்காத அனுபவங்கள் அவனுக்கு மட்டும்தான் சாத்தியம். பத்திரிகையுலகில் நீண்டகாலம் பணிபுரிந்த மூத்தப் பத்திரிகையாளர்கள் தங்கள் அனுபவங்களையும், தாங்கள் சந்தித்த மனிதர்களையும் இதுபோல நூலாக எழுதவேண்டும். தங்கள் அடுத்த தலைமுறை பத்திரிகையாளர்களுக்கு என்றில்லாமல் இது அனைவருக்கும் பயன்படக்கூடிய விஷயம்தான். தான் வாழும் காலத்தைதான் ஒவ்வொரு பத்திரிகையாளனும் தன்னுடைய பணியாக பதிவு செய்கிறான். அதுவே எதிர்கால வரலாறாகவும் ஆகிறது. நமக்கு பின்னால் எத்தனையோ ஆண்டுகள் கழித்து எவனோ ஒருவன் வரலாற்றை தொகுக்க தேடும்போது, இம்மாதிரி நூல்கள் அவனுக்கு வெகுவாக உதவும்.

அந்த கால கல்கியை தெரிந்துக்கொள்ள வாண்டுமாமாவின் ‘எதிர்நீச்சல்’, குமுதத்தை அறிந்துக்கொள்ள ‘எடிட்டர் எஸ்.ஏ.பி’, சாவியை உணர ‘சாவியில் சில நாட்கள்’ என்று பத்திரிகையாளர்களுக்கென்றே பிரத்யேகமாக முன்னுதாரண நூல்கள் ஏராளமானவை இருக்கின்றன. அந்தவரிசையில் வரும் ‘காகிதப்படகில் சாகசப் பயணம்’ நூலும் மாபெரும் வெற்றி காணும் என்று வாழ்த்தி என்னுடைய நீண்ட உரையை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

பேச (எழுத) வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி!

(பலத்த கைத்தட்டல்)

நூல் : காகிதப் படகில் சாகசப் பயணம்
ஆசிரியர் : பெ. கருணாகரன்
பக்கங்கள் : 208
விலை : ரூ.150/-
வெளியீடு : குன்றம் பதிப்பகம்,
73/31, பிருந்தாவனம் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை - 600 033.
ஃபேஸ்புக் : https://www.facebook.com/perumal.karunakaran.1
மின்னஞ்சல் : pekarunakaran@gmail.com

2 கருத்துகள்: