17 மார்ச், 2015

உல்லாசம்

‘உல்லாசம்’ என்ற சொல்லை கேட்டால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?

அஜித் நடித்த சினிமா?

ஜாலி, ஹேப்பி மாதிரியான உணர்வுகள்?

அதெல்லாம் நினைவுக்கு வரும் பட்சத்தில் நீங்கள் ‘உல்லாசமாக’ இருக்க லாயக்கே இல்லை.

நமக்கு ‘உல்லாசம்’ என்றாலே தினத்தந்தி நினைவுக்கு வரும். அதில் உல்லாசம் என்கிற சொல்லை வாசிக்கும்போதே ‘உல்லாசமாக’ இருக்கும். செய்தி எழுதும் உதவி ஆசிரியர்கள், பேனாவில் ‘உல்லாசத்தை’ ஊற்றி எழுதுகிறார்கள்.

தந்தி, ‘உல்லாசம்’ என்கிற தமிழ்ச் சொல்லை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறது என்பது தமிழர்கள் யாவரும் அறிந்ததே. உதாரணத்துக்கு நேற்று வாசித்த ‘உல்லாச’ செய்தி ஒன்று சாம்பிளுக்கு கீழே.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் கடை வீதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 34). அவருடைய மனைவிக்கும், நாமக்கல்லைச் சேர்ந்த என்ஜினியர் (வயது 28) ஒருவருக்கும் செல்போன் மூலம் பழக்கம். அப்படியே அது ‘கள்ளக்காதலாக’ உருவெடுக்கிறது.

செல்போனில் அடிக்கடி ராமசாமியின் மனைவி, என்ஜினியருடன் பேசிக்கொண்டே இருக்கிறார். ராமசாமி இந்த நடவடிக்கையை கண்டிக்கிறார். உடனே ராமசாமியின் மனைவி, என்ஜினியரிடம் தன் கணவர் இதுபோல திட்டுவதாக புகார் செய்கிறார்.

இதையடுத்து அந்த என்ஜினியர், ஆத்தூருக்கு வந்து ராமசாமியிடம் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். “உங்கள் மனைவியோடு எனக்கு ‘தொடர்பு’ எதுவுமில்லை. சும்மா ‘பழக்கம்’ தான்”

“அப்படியா, அப்படியெனில் நாம் இருவரும் இனி நண்பர்களாக இருப்போம்” என்று பெருந்தன்மையோடு அவரை நண்பராக்கிக் கொண்டார் ராமசாமி.

உடனே, அந்த என்ஜினியரை தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். இருவரும் இணைந்து ‘சரக்கு’ சாப்பிட்டிருக்கிறார்கள். ராமசாமியின் மனைவி ‘சைட் டிஷ்’ ஏற்பாடு செய்திருக்கிறார். சரக்கு போதையில் ராமசாமி ராஜதந்திரமாக ஒருவேலை செய்தார்.

என்ஜினியரிடம், “என் மனைவியோடு ‘உல்லாசமாக’ இருக்க விரும்பினால் இருந்துக்கொள்” என்று சலுகை காட்டியிருக்கிறார்.

இதை கேட்டு மகிழ்ந்த இருவரும், நள்ளிரவில் நிர்வாண நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கையும், களவுமாக இருவரையும் பிடித்துவிட்ட ராமசாமி, என்ஜினியரை கடுமையாக தாக்கினார். கொடுவாள் எடுத்து வெட்ட முயன்றார். உடையை மாற்றிக் கொள்ளக்கூட அவகாசமற்ற நிலையில் பேண்ட், சட்டை, ஜட்டி உள்ளிட்ட உடைகளை கையில் எடுத்துக்கொண்டு என்ஜினியர் தப்பி ஓடினார். அவரை ராமசாமி விரட்டிச் சென்றும் போதை காரணமாக பிடிக்க முடியவில்லை. உடனே வீட்டுக்கு திரும்பியவர் நிர்வாண நிலையில் இருந்த தன் மனைவியை கத்தரிக்கோலால் குத்த முயன்றிருக்கிறார். அவரும் உயிருக்குப் பயந்து ‘அப்படியே’ தெருவில் ஓடியிருக்கிறார்.

ஒரு வாலிபரும், அழகியும் தெருவில் ‘இந்த’ கோலத்தில் ஓடியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

பின்னர் அங்கிருக்கும் பொதுமக்கள் தலையிட்டு அழகிக்கு நைட்டி கொடுத்து மாட்டிக்கொள்ள சொல்லியிருக்கிறார்கள். ஒரு மரநிழலில் என்ஜினியரும் உடை மாற்றிக் கொண்டார். இருவரும் காயத்துக்கு சிகிச்சை பெற ஆத்தூர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். விசாரணைக்குச் சென்ற போலிஸாரிடம் இருவரும் வழக்கு எதுவும் பதியவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். கீழே விழுந்து இருவருக்கும் அடிபட்டு விட்டது என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நேர்மையாளரான ராமசாமியோ நேராக காவல்நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியிருக்கிறார். அவர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் பிரிவின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். ஆத்தூர் உதவி கலெக்டர் ‘நீதி விசாரணை’ நடத்த இருக்கிறார்.

நேற்று (மார்ச் 17, 2015) வாசித்த செய்தியை அப்படியே என்னுடைய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறேன். தந்தி லெவல் மொழிப்புலமை நமக்கு வராது.

மேற்கண்ட சம்பவத்தில் ஒரே ஒரு லாஜிக் இடிப்பதாக தோன்றுகிறது. அனேகமாக இது உதவி கலெக்டரின் நீதிவிசாரணையில் தெளிவாகும்.

‘நிராயுதபாணியாக’ என்ஜினியர் தப்பி ஓடியபோது, ராமசாமி துரத்திக்கொண்டு சென்றிருக்கிறார். கிடைத்த அவகாசத்தில் அந்த அம்மணி உடை மாற்றிக் கொண்டிருக்கலாமே? ராமசாமி வீட்டுக்கு திரும்பும்வரை ஏன் ‘அப்படியே’ இருந்திருக்கிறார்? – நேற்றிலிருந்து மண்டையை குடைந்துக் கொண்டிருக்கும் சந்தேகம் இது.

16 மார்ச், 2015

கால் கிலோ காதல், அரை கிலோ கனவு!

ஒன்பதாவது படிக்கும்போது யாரை காதலித்துக் கொண்டிருந்தேன்?

அனுராதா – இல்லை. பத்தாவது கோட்டர்லி லீவில்தான் ‘லவ்வு’ பச்சக்கென்று வந்தது.

குணசுந்தரி – பார்த்திபன் ஜூட் விட்டுக் கொண்டிருந்தான். நண்பனின் காதலியை காதலிக்குமளவுக்கு நான் நாகரிகமற்றவன் இல்லை.

ஸ்ரீவித்யா – நோ சான்ஸ். வாழைக்காய் விஜய்யின் ஆளு.

எழிலரசி – வெள்ளைக்காரி மாதிரி இருப்பாள். வெள்ளை என்றாலே அலர்ஜி.

சபிதா – மூன்றாவது படிக்கும்போது லவ் பண்ணிய பொண்ணு. நாலாவதிலேயே புட்டிக்கிச்சி.

கவிதா – பர்ஸ்ட் ஸ்டேண்டர்டுன்னு நெனைக்கிறேன். சபிதாவுக்கு முன்னாடி.

ஸ்ரீதேவி, கவுதமி, குஷ்பூ - இவர்களையெல்லாம் லவ் செய்தேன். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒன்பதாவது படிக்கும்போதா என்று குறிப்பாக நினைவில்லை.

கோவிலம்பாக்கம் குமுதா – யெஸ். இவளாகதான் இருக்கவேண்டும். கொஞ்சம் குள்ளச்சி. அதனால் என்ன. அப்போது நானும் கொஞ்சம் குள்ளம்தான்.

கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு ‘பி’ பிரிவில் படித்த பா.ராகவன்.. மன்னிக்கவும்.. பத்மநாபன் என்கிற குடுமிநாதன் வளர்மதியை லவ் செய்கிறான்.

நாவலின் முதல் சாப்டரே, பவித்ரனின் ‘இந்து’ படத்தில் வாலி எழுதியதாக டைட்டிலில் பெயர் போடப்பட்டு -ஆனால் உண்மையில் ஷங்கர் எழுதிய- பாடலின் சமாச்சாரம்தான். ‘எப்படி எப்படி? பொண்ணு (ப்பீப்.. பீப் சவுண்டு) எப்படி?’

ஏற்கனவே வளர்மதி என்கிற குட்டச்சியை கிளாஸில் நான்கு பேர் லவ் செய்கிறார்கள். குடுமிநாதனுக்கு செம காம்பெடிஷன். போதாக்குறைக்கு அவள் வயசுக்கு வந்துவிட்டாள் என்கிற ப்ளாஷ் நியூஸ் வந்தபிறகு, மிச்ச சொச்சப் பயல்களுக்கும் அவள் மீது தெய்வீகக் காதல் வந்துத் தொலைக்கிறது.

சகப் போட்டியாளர்களை சமாளித்து, முப்பாட்டன் திருப்போரூர் முருகன் திருவருளால் வளர்மதியின் கடைக்கண் பார்வை, குடுமிநாதன் மீது விழுந்ததா என்பதே நாவல்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பள்ளிக்கூட காதல் படம் ஹிட் ஆகும். அலைகள் ஓய்வதில்லை, வைகாசி பொறந்தாச்சி, துள்ளுவதோ இளமை, காதல் என்று பெரிய பட்டியல். பா.ராகவன் எழுதியிருக்கும் ‘கால் கிலோ காதல், அரை கிலோ கனவு’ அந்த ஜானர். முன்னெப்போதோ கல்கியில் எழுதிய இந்த தொடர்கதையை சினிமாவுக்கு கொடுக்காமல், ஏன் நாவலாக இப்போது அச்சில் கொண்டு வந்திருக்கிறாரோ தெரியவில்லை. இப்போதும் கெட்டுப்போய்விடவில்லை. படமாக எடுத்தால் பட்டையைக் கிளப்பலாம்.

பத்மநாபன் என்கிற இளைஞனின் (!) ஓராண்டு வாழ்க்கைப் பயணம். படிக்கச் சொல்லி வன்முறையில் ஈடுபடும் தீவிரவாத ஆசிரியர்கள். மகன் உருப்படுவான் என்கிற நம்பிக்கையே இல்லாத தறுதலை அப்பா. பத்து மாதம் சுமந்து பெற்றுவிட்டோமே என்பதற்காக கடனே என்று சோறு போட்டு வளர்க்கும் அம்மா. எங்கே இவனுக்கெல்லாம் லவ்வு செட் ஆகிவிடுமோ என்கிற பதட்டத்தில் அலையும் பொறாமைக்கார நண்பர்கள். குறிப்பாக பர்ஸ்ட் ரேங்க் பன்னீர்செல்வம். இப்படிப்பட்ட வாழத்தகுதியற்ற கொடூரமான உலகில், கண்ணுக்கு தெரிந்தமட்டும் பாலைவனமாய் நீண்டிருக்கும் துலாபார சோக வாழ்க்கையில் கானல்நீராய், பசுஞ்சோலையாய் வளர்மதி மட்டுமே.

கதை நடைபெறும் காலக்கட்டம் எண்பதுகளின் கரெக்ட்டான மத்தி. ஏனெனில் நாயகி வளர்மதி 1971ல் பிறந்தவள் என்கிற குறிப்பு கிடைக்கிறது. அவள் ஒன்பதாவது படிக்கிறாள் என்றால் 14 வயசு (வயசுக்கு வந்தது கொஞ்சம் லேட்டுதான்). எனவே, கதை நடக்கும் காலக்கட்டம் 1985 என்று எடுத்துக் கொள்ளலாம்.

இந்த கட்டுரையை வாசிக்கும்போது நாவல் கொஞ்சம் ‘அப்படி, இப்படி’ இருக்குமோவென்று உங்களுக்கு டவுட்டு வரலாம். பா.ராகவன் சுத்த சைவம். ஒரு இடத்தில் கூட அவரது பேனா வரம்பு மீறவில்லை. அதுவும் கல்கியில் தொடராக வந்த கதை. ஆனால் வாசிக்கும் வாசகரான நாம், ‘ப்ளெஷர் ஆஃப் டெக்ஸ்ட்’டுக்காக, ஆங்காங்கே லைட்டாக கூட்டிக் குறைத்து, ‘அப்படி, இப்படி’ கற்பனை செய்துக்கொள்ளக்கூடிய ஏராளமான வாய்ப்புகளை கதையின் சம்பவங்கள் அனுமதிக்கிறது. அவ்வகையில் இந்நாவலுக்கு ஒரு பின்நவீனத்துவத் தன்மை இருப்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய ‘ராஜீவ்காந்தி சாலை’ (ஓ.எம்.ஆர் என்றழைக்கப்படும் ஓல்டு மகாபலிபுரம் ரோடு) எப்படியிருந்தது என்கிற வர்ணனை மிகத்துல்லியமாக இந்நாவலில் பதிந்திருக்கிறது. நாவலாசிரியர் வளர்ந்த பகுதி அது என்பதாலும் இருக்கலாம். புவியியல்ரீதியான வர்ணனை மட்டுமின்றி, அத்தலைமுறையின் கலாச்சாரம், மரபு, இத்யாதி லொட்டு லொசுக்குகளை எல்லாம் மலரும் நினைவுகளாக ரீவைண்ட் செய்து ஃபிலிம் ஓட்டுகிறார் பாரா. இந்த கதை குடுமிநாதனுடையது அல்ல. நம் அனைவருடையதும் கூட. மாங்காய் அடிப்பது, கிணற்றில் குதிப்பது, சினிமா, கிரிக்கெட் என்று அக்கால இளைய தலைமுறையினரின் அசலான வாழ்க்கைப் பதிவு. வாட்ஸப் யூத்துகள் தங்களுடைய சித்தப்பாக்களும், மாமாக்களும் எப்படிப்பட்ட உயர்வான இலட்சிய வாழ்வினை வாழ்ந்தார்கள் என்பதை அறிய அரிய வாய்ப்பு.

சிறுவனை நாயகனாகவும், சிறுமியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்ட நாவல் என்பதால் இதை சிறுவர் இலக்கியம் என்று வகைப்படுத்தலாமா என்கிற குழப்பமும் இடையிடையே வருகிறது. ஆனால், இதற்கு எவ்வித இலக்கிய அந்தஸ்து மயிரும் வேண்டாம் என்று அட்டையிலேயே முத்திரை போட்டு முகத்தில் அறைந்திருக்கிறார் பா.ராகவன். ‘கத புஸ்தகம்’ என்று சிகப்பு முத்திரையிட்டு கழுதைப் படம் போட்ட முகப்பு அட்டை. கமர்சியல் ரைட்டர்களின் வழக்கமான கொணஷ்டை.

உண்மையை சொல்லப் போனால் தீவிர இலக்கியம் என்று சமகாலத்தில் முன்வைக்கப்படும் தீவிர த்ராபைகளை விடவும், அக்கால இளைஞர்களின் பிரச்சினைகளை தீவிரமாகவே அலசியிருக்கக்கூடிய நூல் இது. ஆனால், இதை எழுதியவர் ‘இதெல்லாம் இலக்கியமா?’ என்கிற பாணியில் அசால்டாக இருக்கிறார். சுவாரஸ்யமாக எழுதினால் அது நிச்சயமாக இலக்கியமல்ல என்று அதை எழுதக்கூடிய எழுத்தாளர்களே நம்பக்கூடிய அளவுக்கு தமிழிலக்கியத்தின் நிலைமை இப்படி அபாயகரமாக போகுமென்று டால்ஸ்டாயும், தஸ்தாவேஸ்கியும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

வாசிப்பும் இன்பம் தரும் என்பதற்கு இந்நாவல் நல்ல எடுத்துக்காட்டு. இது த்ரில்லர் அல்ல. ஆனால், த்ரில்லருக்கு இணையான வேகம் ஆரம்பம் முதல் இறுதிவரை இருக்கிறது. பத்திக்கு பத்தி சுவாரஸ்யத்துக்கு குறைவேயில்லை. வாசிப்பின் வழியாக ஒரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராக இருப்பவர்கள் ‘மிஸ்’ பண்ணாதீங்க.
நூல் : கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
எழுதியவர் : பா.ராகவன்
பக்கங்கள் : 160
விலை : ரூ.80
வெளியீடு : மதி நிலையம்
எண் 2/3, 4வது தெரு, கோபாலபுரம்,
சென்னை – 600 086.
போன் : 28111506
மின்னஞ்சல் : mathinilayambook@gmail.com

3 மார்ச், 2015

சாந்தி (70 எம்.எம். ஏ/சி)

சாந்தி தியேட்டருக்கும் எனக்கும் ஒருவகையில் பூர்வஜென்ம பந்தம் உண்டு.

அம்மா அங்கே சிவாஜி படம் (ஜஸ்டிஸ் கோபிநாத் அல்லது பைலட் பிரேம்நாத் என நினைக்கிறேன்) பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் இடுப்பு வலி வந்ததாம். மறுநாள் காலை நான் பிறந்தேன். ஒருவேளை தியேட்டரிலேயே பிறந்திருந்தால் சிவாஜி கணேசன் என்று பெயர் வைத்திருப்பார்கள். வாத்யார் ரசிகரான அப்பாவுக்கு அசிங்கமாகியிருக்கும்.

‘ஏர் கண்டிஷன்’ என்றொரு நவீன வசதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதையே தமிழர்கள் முதன்முதலாக சாந்தி தியேட்டர் மூலமாகதான் அறிந்தார்கள். ‘குளுகுளு வசதி செய்யப்பட்டது’ என்று விளம்பரப்படுத்தப் படுமாம். சென்னையின் முதல் ஏர்கண்டிஷண்ட் தியேட்டரான சாந்தி 1961ல் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் உமாபதி கட்டிய இந்த அரங்கை, சிவாஜி ஆசையாக கேட்டு வாங்கிக் கொண்டதாக சொல்வார்கள் (காசுக்குதான்). அப்படியல்ல, உமாபதி காண்ட்ராக்டர் மட்டும்தான் என்று சொல்வோரும் உண்டு. எப்படியிருப்பினும் இதற்கு நன்றிக்கடனாக பிற்பாடு நடிகர் திலகம் உமாபதிக்கு நடித்து கொடுத்த ‘ராஜ ராஜ சோழன்’ படுமோசமாக தோல்வியடைந்து, உமாபதியை மேற்கொண்டு நஷ்டத்துக்கு உள்ளாக்கியது என்பதெல்லாம் இப்போது தேவையில்லாத சமாச்சாரம்.

திறக்கப்பட்ட காலத்தில் நகரின் பெரிய தியேட்டரும் சாந்திதான். சுமார் 1200+ இருக்கைகள். பால்கனியில் மட்டுமே நானுத்தி சொச்சம் சீட்டு. இவ்வளவு பெரிய தியேட்டரை கட்டிவிட்டு கூட்டம் வராமல் ஆரம்பத்தில் சில நாட்களுக்கு அவதிப்பட்டிருக்கிறார்கள். தெலுங்கு டப்பிங் படம், இந்திப்படம் என்றுதான் காலத்தை ஓட்டினார்களாம். ‘அய்யோ, அந்த தியேட்டரா? உள்ளே போனா ஊட்டி மாதிரி பயங்கரமா குளுருமாமே? ஸ்வெட்டர் போட்டுக்கிட்டுதான் போவணுமாம்’ என்று மக்கள் அனாவசியமாக அச்சமடைந்திருக்கிறார்கள் (பின்னாளில் குளுகுளு ஏற்பாட்டில் ‘அலங்கார்’ சாதனை படைத்தது. இன்றும் காசினோ காஷ்மீர் மாதிரி ஜில்லிட்டு கிடக்கிறது)

அப்போது பீம்சிங் இயக்கத்தில் ‘பாவமன்னிப்பு’ நடித்திருந்தார் சிவாஜி. நட்சத்திர நடிகர்களின் படங்களை எல்லாம் ‘சித்ரா’வில்தான் திரையிடுவார்கள். சின்ன தியேட்டர் என்பதால் நூறு நாள் ஓட்டி கணக்கு காட்ட வசதியாக இருக்கும்.

சிவாஜியே சொந்தமாக தியேட்டர் கட்டியிருக்கிறார், அதில் பாவமன்னிப்பை வெளியிட்டே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். அவ்வளவு பெரிய தியேட்டரில் வெளியிட்டுவிட்டு நூறு நாள் ஓடாவிட்டால் அசிங்கமாகிவிடுமே என்று ஏவிஎம் நிறுவனம் அச்சப்பட்டிருக்கிறது. சிவாஜியின் வற்புறுத்தலின் பேரில் இங்கு திரையிடப்பட்ட ‘பாவமன்னிப்பு’ வெற்றிகரமாக வெள்ளிவிழா ஓடி சாதனை படைத்தது.

அதையடுத்து கிட்டத்தட்ட நூறு சிவாஜி படங்கள் இங்கே திரையிடப்பட்டிருக்கின்றன. பாவமன்னிப்பு, திருவிளையாடல், வசந்தமாளிகை, தங்கப்பதக்கம், திரிசூலம், முதல் மரியாதை ஆகிய படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட சிவாஜி படங்கள் நூறு நாள்களை தாண்டி ஓடியிருக்கிறது.

சென்னையின் பெரிய தியேட்டர் சிவாஜியின் கையில் இருந்ததாலும், அவர் நடித்த எந்த படம் திரையிடப்பட்டாலும் ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள் என்பதாலும் எம்.ஜி.ஆரை ஒப்பிடுகையில் வசூல்ரீதியாக சிவாஜியே சென்னையின் மன்னனாக இருந்திருக்கிறார். அதுவுமின்றி சிவாஜி கெடாவெட்டு கணக்கில் வருடத்துக்கு ஏழெட்டு படங்கள் நடித்துத் தள்ளிக்கொண்டே இருப்பார் என்பதால், சாந்தி தியேட்டருக்கு வேறு நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யும் வாய்ப்பு குறைவு. எம்.ஜி.ஆருக்கு சித்ரா, ஸ்ரீகிருஷ்ணா மாதிரி சுமார் அரங்குகள்தான் மாட்டும். ஏசி தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் என்கிற வாத்யார் ரசிகர்களின் ஆசை ரொம்ப நாள் கழித்து உலகம் சுற்றும் வாலிபனில்தான் தேவிபாரடைஸ் மூலமாக நிறைவேறியது. எனக்குத் தெரிந்து இன்றுவரை சாந்தி தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் எதுவும் திரையிடப்பட்டதாக தெரியவில்லை. சிவாஜி தெலுங்கு, மலையாளத்தில் நடித்த படங்களைகூட அடமாக இங்கே திரையிட்டு நடிகர் திலகத்தின் ரசிகர்களை பரவசப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

அந்த காலத்தில் சாந்தி தியேட்டரில் நைட்ஷோ விடும் நேரத்தை கணக்கில் வைத்து, படம் பார்த்து வருபவர்களின் வசதிக்காக ஸ்பெஷலாக பிராட்வேயிலிருந்து தாம்பரத்துக்கு 18ஏ பேருந்தினை அதிகாலை வேளையில் விட்டிருந்தது போக்குவரத்துக் கழகம். தினமலரில் பணியாற்றும்போது வீட்டுக்கு போக இந்த பேருந்து பல நாட்கள் எனக்கு பயன்பட்டிருக்கிறது.

சிவாஜிக்கு வயதானபிறகு பிரபு நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்பட்டன. இவரது பெரும்பாலான படங்கள் ‘டப்பா’தான் என்பதால் தியேட்டரின் மவுசே குறைய ஆரம்பித்தது. ‘சின்னத்தம்பி’ விதிவிலக்காக இருநூற்றி ஐம்பது நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ‘மன்னன்’ படத்தில் கவுண்டமணியும், ரஜினியும் சேர்ந்து ‘சின்னத்தம்பி’ படம் பார்ப்பது இந்த தியேட்டரில்தான்.

பிரபுவின் நூறாவது படமான ‘ராஜகுமாரன்’ பயங்கர ஃப்ளாப். ஆனாலும் ஓனர் படம் என்பதால் ஆளே இல்லாத டீக்கடையில் நூறு நாட்களுக்கு ஈ ஓட்டி நஷ்டப்பட்டது சாந்தி தியேட்டர். கடைசியாக இனிய திலகம் விக்ரம் பிரபு நடித்த அத்தனை படங்களையுமே நூறு நாட்களுக்கு மேலாக (அரிமா நம்பி கூட என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்) ஓட்டியது. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக பால்கனியை மட்டும் தனியாகப் பிரித்து ‘சாய்சாந்தி’ என்று தனி அரங்காக ஆக்கினார்கள்.

ஆண்பாவம், நீதிக்கு தண்டனை, வெற்றிவிழா, மன்னன், சந்திரமுகி, சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் இங்கே அபாரவெற்றி பெற்றவை. இந்திப் படமான ‘சங்கம்’ வெள்ளிவிழா கண்டதும் இங்கேதான். பாகவதரின் ‘ஹரிதாஸ்’ சாதனையை (பிராட்வே தியேட்டர்) உடைக்க வேண்டும் என்பதற்காகவே, ‘சந்திரமுகி’யை 888 நாட்கள் ஓட்டி கணக்கு காட்டினார்கள்.

எல்லா சென்னைவாசிகளையும் போலவே சாந்தி திரையரங்கோடு எனக்கும் உணர்வுபூர்வமான பந்தம் உண்டு. எத்தனை படங்கள் இங்கு பார்த்திருப்பேன் என்று கணக்கு வழக்கே இல்லை. நண்பர்களோடு சேர்ந்து படங்கள் பார்த்த அற்புதமான தருணங்கள் எல்லாம் இப்போது நெஞ்சில் நிழலாடுகிறது.

ஒவ்வொரு காட்சி தொடங்குவதற்கு முன்பாக இன்றும் கவுண்டர் அருகே ஒயிட் & ஒயிட்டில் கம்பீரமாக வந்து நிற்கும் அந்த தியேட்டர் மேனேஜரை மறக்கவே முடியாது. இப்போது கலைஞரின் வயது ஆகிறது அவருக்கு. பெண்கள் பாதுகாப்பாக படம் பார்க்கவேண்டும் என்று ரொம்பவும் அக்கறை காட்டுவார்.

பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பாக படம் பார்க்க க்யூவில் நிற்கும்போது கையில் லத்தியோடு கூட்டத்தை ஒழுங்குபடுத்த அங்கும், அவர் இங்குமாக அலையும் காட்சி ஓர் ஓவியம் மாதிரி மனசுக்குள் பதிந்திருக்கிறது. இவரது கேரக்டரைதான் ‘அமர்க்களம்’ படத்தில் சரண், வினுசக்ரவர்த்திக்கு கொடுத்திருப்பார்.

தியேட்டரை இடித்துவிட்டு மால் கட்டுகிறோம் என்று அதிகாரபூர்வமாக சிவாஜி குடும்பத்தார் அறிவித்து விட்டார்கள். புதிதாக கட்டப்படும் மாலில் சாந்தி என்கிற பெயரிலேயே சில ஸ்க்ரீன்கள் இருக்கும் என்று ஆறுதல் அளிக்கிறார்கள். இருந்தாலும் ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘தில்லானா மோகனாம்பாள்’ ஓடிய ஒரிஜினல் சாந்தி மாதிரி வருமா?

28 பிப்ரவரி, 2015

திராவிட வடுக வந்தேறிகளை முன்வைத்து தமிழ்தேசிய முற்போக்கு ஆய்வு!

முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நிலமான லெமூரியாவை முப்பாட்டன் முருகன் ஆண்டான். திராவிட வடுக வந்தேறியான விநாயகன், நம் முப்பாட்டனுக்கு கொடுத்த ஞானப்பழ அரசியல் நயவஞ்சகத் தொல்லைகளை தமிழ்தேசிய வரலாறான ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் தமிழ்தேசிய இயக்குனர் ஏ.பி.நாகராசன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இன்று இந்திய தேசிய ஆரிய வடுக கும்பல் புராணகாலத்திலேயே அவர்கள் விமானம் கண்டுபிடித்துவிட்டதாக கூறி புஷ்பகவிமானம், அது இதுவென்று கதை விடுகிறார்கள். உலகின் முதல் விமானத்தை ஓட்டியது முப்பாட்டன் முருகனே. மயில் வாகனம் விமானப் போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கி, விமானத்தில் உலகை ஒரு சுற்று சுற்றி முப்பாட்டன் முருகன் அன்றே உலகசாதனை படைத்துவிட்டான்.

* * * * * *

இன்று நாகரிக தொலைக்காட்சியில் (fashion tv) உடையலங்கார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உலகின் முதல் நாகரிக நடை நிகழ்வை (fashion walk) நடத்திக்காட்டியது நம் முப்பாட்டன் முருகனே என்கிற பேருண்மையை மேற்கத்திய வடுக வந்தேறிகள் உணரவேண்டும்.

இன்று இருகச்சை (two piece) ஆடைதான் நாகரிகம் என்று இந்த வந்தேறிகள் கூப்பாடு போடுகிறார்கள். ஆனால் நம் முப்பாட்டன் முருகனோ பழனி மலை மீதேறி ஒருகச்சை (single piece) ஆடை அணிந்து, தமிழனின் நாகரிகத்தை அன்றே குன்றிலிட்ட விளக்காக பறைசாற்றியிருக்கிறான். இன்று எதுவெல்லாம் நாகரிகம் என்று உலகம் நம்புகிறதோ, அதையெல்லாம் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே லெமூரிய தமிழ் தேசிய பேரரசு, முப்பாட்டன் முருகனின் ஆட்சிக்காலத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறது.

* * * * * *

முப்பாட்டனின் வழித்தோன்றலான திப்பாட்டன் திருவள்ளுவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடுக வந்தேறிகளின் தமிழ்நில ஆக்கிரமிப்பை தமிழ்தேசிய நீதிநூலான திருக்குறளில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

அதாவது இந்த தமிழ்தேசிய கீதத்தின் இறுதியில் இடம்பெறும் ‘வடு’ என்கிற சொல், திராவிட வடுக வந்தேறிகளையே குறிக்கிறது. வடுகன் தீயினாலும் சுடுவான், நாவினாலும் சுடுவான் என்பதே திப்பாட்டன் திருவள்ளுவர் தமிழ் மறவருக்கு சொன்ன எச்சரிக்கை.

ஆனால், பிற்பாடு வந்தேறி வடுக திராவிட திம்மிகளின் தலைவரான கருணாநிதியோ, “நெருப்பு சுட்ட புண்கூட ஆறிவிடும், ஆனால் வெறுப்பு கொண்டு திட்டிய சொற்கள் விளைவித்த துன்பம் ஆறவே ஆறாது” என நெருப்பு வெறுப்பு வார்த்தை விளையாட்டு விளையாடி வடுகருக்கு ஆதரவான போக்கில் மாற்றி எழுதினார்.

திராவிட வடுக வந்தேறிகள், வரலாற்றை எப்படியெல்லாம் திரித்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சோறு பதம் இந்த நிகழ்வு.

* * * * * *

‘தீரா விஷம்’ என்கிற ஆரிய சமஸ்கிருத வடுக வந்தேறிச் சொல்லையே தமிழில் ‘திராவிடம்’ என்று பொருள்மாறு மயக்க அணியை பயன்படுத்தி திராவிட வடுக வந்தேறி தான்தோன்றிகள் மாற்றிவிட்டதாக தமிழ் தேசிய மொழி ஆய்வாளரும், தீவிர உணர்வாளருமான மயில் மாணிக்கம் ‘திராவிட வடுக வந்தேறிகளின் திரிபுரசுந்தரி தீவிர விளையாட்டு’ என்கிற ஆய்வுநூலில் அம்மணப்படுத்தி இருக்கிறார்.

* * * * * *

‘சீமான்’ என்கிற தூயத்தமிழ் சொல்லையே ஆங்கில திராவிட வடுக வந்தேறிகள், வெட்கமே இல்லாமல் அப்படியே எடுத்துக்கொண்டு ‘see man’ என்கிற வார்த்தைத் தொடரை உருவாக்கி இருக்கிறார்கள்.

இவ்வாறே முப்பாட்டன் முருகனின் தமிழ்தேசிய ஆயுதமான ‘வேல்’ என்பதையே well என்று ‘நல்லது’ என்கிற பொருள்படும் வார்த்தையாகவும், கிணறு என்கிற அர்த்தத்தை தரும் வார்த்தையாகவும் வடுகர்கள் வெட்கமே இல்லாமல் திருடியிருக்கிறார்கள்

* * * * * *

சமீபமாக தமிழிலக்கிய எழுத்தாளர்களுக்கும் தமிழ்ச்சாதியினருக்குமான மோதலை திராவிட வடுக வந்தேறிகளே திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்களோ என்கிற ஐயம் நமக்கு தோன்றுகிறது.

உதாரணமாக எழுத்தாளர் ‘புலியூர் முருகேசன்’ அவர்களது பெயரை வைத்தே நாம் ஆய்வு செய்து நிரூபிக்க முடியும். புலி என்பது தமிழ் தேசியப் பேரரசான சோழனின் கொடியில் இடம்பெற்ற தமிழ்தேசிய விலங்கு (பிற்பாடு இந்திய ஆரிய வடுக வந்தேறி கும்பல் புலியை நம்மிடமிருந்து அபகரித்து இந்திய தேசிய விலங்காக அறிவித்திருக்கிறார்கள்). மேலும் ‘புலி’ என்பது சமகாலத்தில் தமிழ்தேசிய வீரத்தின் அடையாளமும் கூட. முருகேசன் என்கிற பெயர் நம் முப்பாட்டன் முருகனை குறியீடாக உணர்த்துகிறது. இப்படி முழுக்க தமிழ் தேசிய தன்மையோடு ஒரு எழுத்தாளன் தனக்கு புனைபெயர் சூட்டிக்கொண்டால் திராவிட வடுக வந்தேறிகள் சும்மாவா இருப்பார்கள்? தமிழ்சாதியினரை தூண்டிவிட்டு தமிழனுக்கு தமிழனையே எதிரியாக்கி மோதிக்கொள்ள வைத்திருக்கிறார்கள்.

இதேதான் எழுத்தாளர் பெ.முருகன் விவகாரத்திலும் நடந்திருக்கிறது. முப்பாட்டன் முருகனின் பெயர்தான் அவர் பெயரும் என்றாலும் திராவிட வடுக வந்தேறிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்துக்கொண்டு திராவிட வடுக வந்தேறிகளின் தெய்வமான பெருமாளின் பெயரையும் தன் பெயருக்கு முன்பாக சூட்டிக்கொண்டதுதான் அவரது தவறு. அந்த தவறினை உணர்ந்து ‘பெருமாள்’ என்கிற வடுக வந்தேறி இடுபெயரினை துறந்து தமிழ்தேசியத்துக்கு அவர் மீண்டு வந்திருக்கிறார்.

* * * * * *

மக்கள் முதல்வர் நாமம் வாழ்க. மகத்தான தமிழ் தேசியம் ஓங்குக.

23 பிப்ரவரி, 2015

உசேனி

தொண்ணூறுகளின் துவக்கத்தில் உசேனி சென்னையில் ரொம்ப ஃபேமஸ். கராத்தே, வில்வித்தை உள்ளிட்ட மார்ஷியல் ஆர்ட்ஸ் வகுப்புகளுக்கு ஆட்சேர்ப்பு என்று கருப்பு சிவப்பு வண்ணங்களில் எல்லா சுவர்களிலும் போஸ்டர் ஒட்டியிருப்பார்.

அவ்வப்போது தலைமயிரில் கயிறு கட்டி ஆம்னி காரை இழுப்பது. சுத்தியால் மார்பை அடித்துக் கொள்வது மாதிரி ஏதேனும் சாதனைகள் (!) செய்வார். புறநகர்களில் உசேனியின் சீடர்கள் என்று சொல்லி நிறைய பேர் கராத்தே க்ளாஸ் எடுக்க ஆரம்பித்தார்கள். அம்மாதிரி சீடர்களில் ஓரிருவரும் பல்லால் ஜீப்பை இழுப்பது என்றெல்லாம் சாதனை செய்ய ஆரம்பித்தார்கள்.

உசேனியின் ஒரு சாதனையை நேரில் பார்க்க பெசண்ட் நகர் கடற்கரைக்கு போயிருந்தேன். காருக்குள் தீவைத்துக் கொண்டு உள்ளே உட்கார்ந்து கொள்ள போவதாக பேப்பரில் விளம்பரம் கொடுத்திருந்தார். மாலை நான்கு மணி அளவுக்கு போயிருந்தபோது தீப்பிடிக்காத ஆடைகளை அணிந்துகொண்டு ஒரு ஓட்டை அம்பாஸடருள் போய் அமர்ந்துக் கொண்டார். சீடர்கள் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள். ஐந்து நிமிடம் கார் எரிந்தது. உள்ளே இருந்து வெளியே வந்த உசேனி, மூர்ச்சை ஆனதைபோல தரையில் படுத்துக் கொண்டார். உடனே உடைகளை கழட்டிவிட்டு சீடர்கள் அவருக்கு விசிறி விட்டார்கள். போலிஸ் கூட ஏதோ கேஸ் போட்டதாக ஞாபகம். தீப்பிடிக்காத உடை அணிந்துகொண்டு தீக்குள் போவதில் என்ன சாதனை என்று எனக்கு புரியவேயில்லை. சினிமாவில் ஸ்டண்ட்மேன்கள் தினம் தினம் செய்யும் சாதனைதானே இதுவென்று தோன்றியது.

இதுமாதிரி அடிக்கடி செய்தித்தாள்களில் ஏதோ ‘சாதனை’ என்று இடம்பெறுவார். ஒரு கட்டத்தில் இவரது சாதனைகளை செய்தித்தாள்கள் போட மறுக்க, இவரே ஊரெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டினார். உசேனி ஒரிஜினல் கராத்தேகாரரோ என்னவோ தெரியாது. ஆனால் ஒரிஜினல் ஓவியர். சிற்பங்களும் செய்வார் என்பது மட்டும் உண்மை. பெசண்ட் நகரில் இருக்கும் அவரது வீட்டுக்கு தொண்ணூறுகளின் இறுதியில் அடிக்கடி போய் வந்துக் கொண்டிருந்தேன். என்னுடன் லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக சவுந்தர் என்றொரு மதுரைக்காரர் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். அவர் மதுரை ஓவியர் சங்கத்தில் ஏதோ பொறுப்பில் இருந்தவர். ஊரில் இருக்கும் போது உசேனி அவருக்கு க்ளோஸ் ஃப்ரெண்டு என்பார். புன்னகை மன்னன் படம் வந்தபோது, தியேட்டரில் கமல்ரசிகர்கள் உசேனியிடம் வம்பு செய்ததாகவும், உசேனி ஒரே செகண்டில் குங்ஃபூ கராத்தே அடி கொடுத்து பத்து பேரை வீழ்த்தியதாகவும் சவுந்தர் சொல்வார். உண்மையில் உசேனியின் ஆசை திரையுலகம்தான். சுத்தமாக இவருக்கு நடிப்பே வராது, சண்டையும் சுமார்தான் என்பதால் வேறு வழியில்லாமல் கராத்தே க்ளாஸ் ஆரம்பித்தார்.

த.மா.கா உருவானபோது அதன் சென்னை மாவட்ட செயலாளர்களில் ஒருவர் கராத்தே தியாகராஜன். இவர் நிஜமாகவே கராத்தே வீரர். உசேனி ஒரு டூப்ளிகேட், அவருக்கு கராத்தாவே தெரியாது என்பதை ஊரறிய வைத்தவர் இவர்தான். எந்த அங்கீகரிக்கப்பட்ட கராத்தே போட்டிகளிலும் உசேனியோ, அவரது சீடர்களோ கலந்துக் கொள்வதில்லை. மாறாக ஜப்பானிலிருந்து நேரடி பட்டம் என்று இவர்களாக கொடுக்கும் பெல்ட்டுகள் போலி என்று தொடர்ச்சியாக தியாகராஜன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இதனால் உசேனியின் பிசினஸ் படுமோசமாக அடிபட ஆரம்பித்தது. அவரிடம் கராத்தே க்ளாசுக்கு சேர்ந்தவர்கள் விளக்கம் கேட்க ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் அவர் தன் பெயருக்கு முன்பாக ‘ஷீஹான்’ என்று பட்டம் போட்டுக் கொள்வார். கராத்தே தியாகராஜன், இவருடைய டவுசரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவிழ்க்க ஆரம்பிக்க ‘ஷீஹான்’ எங்கே போனதென்றே தெரியவில்லை.

இடையில் கிடைத்த குறுகியகால புகழை வைத்து உசேனி முயற்சித்த சில தொழிற்வாய்ப்புகள் படுதோல்வி அடைந்தன. அவரது தம்பியை சினிமா ஹீரோ ஆக்கும் முயற்சிக்கு மரண அடி. திருட்டு விசிடியை தடுக்க சிறப்பு படை என்று உசேனி தயாரிப்பாளர்களிடம் பல லட்சரூபாய் வாங்கினார். ஆனால் ‘முதல்வன்’ படம் ஊர் ஊராக கோயில் திருவிழாக்களில் கூட திரையிடப்பட, உசேனி ஏடிஎம் செக்யூரிட்டி வேலைக்கு கூட லாயக்கற்றவர் என்று திரையுலகுக்கு தெரிந்தது. திருட்டு விசிடியை தடுப்பதற்கு மாறாக மாட்டிக் கொள்பவர்களிடம் ‘கட்டிங்’ வாங்கினார்கள் அவரது ஆட்கள் என்றுகூட செய்திகள் அப்போது வந்தன.

கராத்தே தியாகராஜன் தமிழ் மாநில காங்கிரஸை சேர்ந்தவர். த.மா.கா, திமுக ஆட்சியின் ஆதரவோடு இருக்கிறது என்கிற ஒரே காரணத்தினாலேயே, அவரை சமாளிக்க தன்னை அதிமுககாரர் என்பது மாதிரி காட்டிக்கொள்ள ஆரம்பித்தார். அம்மாவின் பிறந்தநாள் ஒன்றுக்கு தன்னுடைய ரத்தத்தாலேயே ஓவியம் வரைந்து அம்மாவிடம் கொடுத்து திடீரென்று அதிமுக வட்டாரங்களில் பிரபலம் ஆனார்.

அதிலிருந்து வருடாவருடம் அம்மா கண்டுகொள்கிறாரோ இல்லையோ இவர் பாட்டுக்கு இரத்தத்தில் சிலை மாதிரி ஏதாவது ‘பயங்கரமான’ சாதனையை செய்துக்கொண்டே இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக ஏதோ சிலை செய்து தருகிறேன் என்று (சசிகலா) நடராசனிடம் ஒரு கொழுத்த தொகையை ஆட்டை போட்டதும், அதை அவர் திருப்பிக் கேட்டபோது கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று கூப்பாடு போட்டதும் நினைவிருக்கலாம்.

கூட்டத்தில் வீறிட்டு அழுது அனைவரின் கவனத்தையும் கவர்ந்து இழுக்கும் குழந்தையை மாதிரியானவர் இவர். எனக்கென்னவோ இவருக்கு ஏதோ சீரியஸான சைக்காலஜிக்கல் பிராப்ளம் இருப்பதாகவே தோன்றுகிறது. இதே பிராப்ளம்தான் சீமானுக்கும், உமாசங்கருக்கும்கூட இருக்கும் போல.

ஆனால், ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். நடத்துவது மன்னார் & கம்பெனிதான் என்றாலும், அதைவைத்தே இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளாக ஒருவர் எப்போதும் ‘லைம்லைட்’டில் இருந்துக்கொண்டே இருப்பது மாபெரும் சாதனைதான்.