11 மே, 2015

தீர்ப்பு யாருக்கு சாதகம்?

முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

ஜெ, விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருகிறது (திமுக தலைவருக்கும் அப்படிதான் இருக்குமென்று யூகிக்கிறேன்).

இந்திய நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய நிலை இன்று நிச்சயமாக இல்லை. பலகீனமான நீதித்துறை என்று ஜெ.வுக்கு தண்டனை அளித்தபோது நாம் விமர்சித்தபோது நம்மை திட்டித் தீர்த்தவர்கள், இன்று அதை ஒப்புக் கொள்வார்கள். பதினெட்டு ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்கு செல்லுமேயானால் இறுதித் தீர்ப்பினை பெற இன்னும் நூற்றி எண்பது ஆண்டுகள் கூட ஆகலாம்.

இந்தியாவில் ‘நக்சல்பாரிகள்’ உருவாவதற்கான அத்தனை நியாயங்களையும் இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களுமே உருவாக்கி வைத்திருக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டுகள் கூட முழுமையாக இல்லாத நிலையில் வந்திருக்கும் குமாரசாமியின் தீர்ப்பு, தமிழகத்தில் எந்தெந்த கட்சிகளுக்கு என்னமாதிரியான சாதகபாதகங்களை ஏற்படுத்தக்கூடும் என்று பார்ப்போம்.

இது, அதிமுகவுக்கு ஆதரவான தீர்ப்பாக அதிமுகவின் அடிமைகள் (தொண்டர்கள் என்கிற சொல், இக்கட்சியைப் பொறுத்தவரை சரியான பொருளில் வராது) எண்ணலாம். மாறாக, இத்தீர்ப்பால் அதிக பலன்களை அறுவடை செய்ய இருப்பது திமுகவே என்று தோன்றுகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு எதிராக பிரயோகித்த ஆயுதம் ஊழல். திமுக அதனாலேயே படுதோல்வி அடைந்து, அக்கட்சியின் பல்வேறு மட்டத் தலைவர்கள் நிலஅபகரிப்பு / சொத்துக்குவிப்பு வழக்குகளை மாவட்டம் தோறும் சந்தித்து வருகிறார்கள். தேசிய அளவில் 2ஜி உள்ளிட்ட கத்திகளும் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டு அவ்வப்போது அச்சமூட்டுகிறது. இந்த வழக்குகளோடு தேர்தலில் மக்களை சந்திக்க நேரவேண்டிய சங்கடம், குமாரசாமியால் அடியோடு துடைக்கப்பட்டிருக்கிறது.

அம்மா ‘உள்ளே’ எனும் நிலை இருந்தால், 91ல் ஏற்பட்டிருந்த அனுதாப அலையை போன்ற சுனாமியை எதிர்கொண்டாக வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு இருந்திருக்கும். “ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு பொம்பளையை கருணாநிதி உள்ளே தள்ளியிருக்கக் கூடாது” என்கிற தமிழர்களின் இரக்க மனோபாவத்தை வெல்ல திமுக ஏழு கடல், ஏழு மலையை கடக்கவேண்டிய சிரமத்தை அடைந்திருக்கும். இப்போது அம்மாதிரி தொல்லைகள் இல்லாமல், கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியின் அவலங்கள், ஊழல் முறைகேடுகள், வளர்ச்சியற்று ஸ்தம்பித்துவிட்ட நிர்வாகம், விலைவாசி உயர்வு என்றெல்லாம் மக்களுக்கு ‘பிடித்தமான’ சப்ஜெக்ட்டுகளை பிரச்சாரத்தில் பேசக்கூடிய சுதந்திரம் அக்கட்சியினருக்கு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே ஸ்டாலின் சலங்கை கட்டி ஆடுவார். இத்தீர்ப்பு வெளிவந்திருக்கும் சூழலில் ருத்திரத் தாண்டவம் ஆடக்கூடிய வாய்ப்பு அவருக்கு.

அதிமுகவைப் பொறுத்தவரை அம்மா வெளியே வந்துவிட்டார் என்பதுதான் லாபம். அம்மா, நீதியை வென்று வெளியே வந்தார் என்று அவர்களால் மக்களுக்கு நிரூபிக்க முடியாது. “கோர்ட்டில் பணம் விளையாடிடிச்சி...” என்று பேசும் மக்களிடம், தங்களை நிரூபிக்கவே அவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு தாவூ தீரும்.

திமுகவுக்கு எதிராக மாறிக்கொண்டிருந்த தமிழ் நடுத்தர வர்க்கத்து மனோபாவம், இந்த தீர்ப்பால் திடீர் தடை பெற்றிருப்பதுதான் அதிமுகவுக்கு நிஜமான இழப்பு. குமாரசாமியின் தீர்ப்பினை, ஊழலற்ற இந்தியா கனவில் மிதக்கும் ‘ஜெய் ஹோ’ தலைமுறை ரசிக்கப் போவதில்லை. கடந்த தேர்தலில் முதன்முறையாக வாக்களித்த இந்த மாபெரும் கூட்டம், இரட்டை இலைக்கு வாக்கு இயந்திர பொத்தான்களை சரமாரியாக அமுக்கித் தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

நியாயமாக இந்த சூழலில் அமோக அறுவடை செய்யவேண்டியது, சட்டமன்ற எதிர்க்கட்சியான தேமுதிகதான்.

ஆனால்-

கடந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்ததால்தான் விஜயகாந்த் வெல்ல முடிந்தது என்கிற பொதுக்கருத்தை தவறென்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது. அதற்காக தனியாக போட்டியிட்டு, ‘கெத்து’ காட்ட நினைத்தால், நிலைமை என்னாகும் என்று விஜயகாந்துக்கும் தெரியும், பிரேமலதாவுக்கும் தெரியும்.

பாஜக கூட்டணியில் இன்னமும் தேமுதிக நீடிக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்த கூட்டணி வலுவானது அல்ல. அதற்காக திமுகவோடு கூட்டணி வைத்துக் கொண்டால், எதிர்காலத்தில் எப்போதுமே முதல்வர் கனவு காணமுடியாது. அப்படியொரு நிலைமை ஏற்படும் பட்சத்தில் இன்றைய பாமகவுக்கான இடம்தான் எதிர்காலத்தில் தேமுதிகவுக்கும்.

எப்படிப் பார்த்தாலும் இந்த தீர்ப்பை சாதகமாகவோ/பாதகமாகவோ எடுத்துக்கொள்ளக் கூடிய நிலையில் தேமுதிக இல்லை. அரசியல் ஆற்றில் அதுவாக அடித்துச் செல்லப்படும் தேமுதிக எதைப் பிடித்து கரையேறும் என்பது சஸ்பென்ஸ். ஒருவேளை கடந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி காட்டாமல் தனியே நின்றிருந்தால், இன்றைய நிலைமை தேமுதிகவுக்கு அட்டகாசமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்திருக்கும்.

காங்கிரஸைப் பொறுத்தவரை இம்முறையும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை சொல்ல வித்வான் வே.லட்சுமணன் தேவையில்லை. திமுக அல்லது அதிமுக என்று இரண்டு பிராதனக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றோடு கூட்டணி சேர முடிந்தாலே, அது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்யக்கூடிய உலகசாதனையாக இருக்கும்.

அகண்ட பாரத கொள்கை கொண்ட பாஜகவால், இன்னமும் அகண்ட பாஜக ஆவதற்கே முட்டுக்கட்டையாக நிற்பது தமிழகம்.

ஜெயலலிதா விடுதலை ஆனது மோடியின் கைங்கர்யம் என்று சாதாரண மக்கள் நம்புகிறார்கள். அருண் ஜெட்லி, போயஸ் கார்டனுக்கு வந்து சொத்துக்குவிப்பு குற்றவாளியாக ஜாமீனில் இருந்த ஜெயலலிதாவை ‘மரியாதை நிமித்தம்’ சந்தித்துவிட்டுச் சென்றதிலிருந்து மாறிய காட்சிகளை அவர்கள் கவனித்திருக்கிறார்கள். இந்த தீர்ப்புக்கு பிரதியுபகாரமாக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கூடுதல் இடம் கொடுத்து தன் கூட்டணியில் அதிமுக சேர்த்துக் கொள்ளும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

ஒருவேளை அதிமுக கூட்டணியில் பாஜக இணையும் பட்சத்தில், 96ல் நரசிம்மராவ் தமிழகத்தில் பெற்ற படுதோல்வியையே மோடி பெறவேண்டியிருக்கும். இங்கே ஓரளவுக்கு துளிர்த்திருக்கும் பாஜகவை ஒட்டுமொத்தமாக பட்டு போகவைக்கும். இது தமிழக அளவிலான அக்கட்சியின் தலைவர்களுக்கு தெரிகிறது என்றாலும், அதை கட்சி மேலிடத்தலைவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாமக உள்ளிட்ட குட்டிக் கட்சிகளை இந்த ஆட்டத்தில் சேர்க்க வேண்டியதில்லை. எது எப்படி நடந்தாலும் இந்த கட்சிகளுக்கு சாதக/பாதகம் என்பது கடைசி நேரத்தில் எந்த கட்சியோடு போய் ஒட்டிக் கொள்கிறார்கள் என்பதில் மட்டும்தான் இருக்கிறது.

மக்கள் முதல்வராக இருந்து மாநில முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு முன் இப்போது இருக்கும் பெரிய சவால், தான் பெற்றிருக்கும் இந்த தீர்ப்பு நேர்மையான முறையில் பெற்றது என்பதை நிரூபிப்பதுதான். இதற்குப் பிறகே மற்ற விஷயங்களை பிரச்சாரம் செய்து, அதிமுகவின் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள முடியும். ஆயினும், இது சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

கடைசியாக-

குமாரசாமி கொடுத்திருக்கும் ‘நேர்மையான’ தீர்ப்பின் காரணமாக நிஜமாகவே விடுதலை ஆகியிருப்பவர் நிரந்தர மக்கள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம்தான். முதல்வராக கத்தி மேல் பேலன்ஸ் செய்து நடந்த அவருடைய அரசியல் எதிர்காலம் படு இருட்டாக இருந்தது. இப்போது கண்ணுக்குப் பழகிய இருட்டாக மாறியிருக்கிறது.

30 ஏப்ரல், 2015

மிஸ்டர் மிடில் க்ளாஸ்!

கீழ்க்கண்டவற்றுக்கு ஆம்/இல்லை என்று பதில் சொல்லவும்.

  • உங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் காய்கறி கடையிலேயே வெண்டைக்காய் கிலோ ரூ.30/-க்கு கிடைக்கிறது. ஆனால் அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் சந்தையில் ரூ.25/-க்கு விற்கிறது என்பது தெரிந்து டூவீலரில் போய், நாலு கிலோ மொத்தமாக வாங்குகிறீர்கள்.
  • சென்னைக்கு மிக அருகில் செய்யாறுக்கு பக்கத்தில் வீட்டு மனை சதுர அடி ரூ.250/- என்று நாளிதழ்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை விரும்பி வாசிக்கிறீர்கள். உடனே கால்குலேட்டர் எடுத்து கால்கிரவுண்டு வாங்க எவ்வளவு ஆகுமென்று கணக்கு போடுகிறீர்கள்.
  • டூவீலரோ/சிறியரக காரோ வைத்திருக்கிறீர்கள். அதற்கு மாதாமாதம் தவணை செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
  • டூவீலராக இருந்தால் கட்டாயம் ஹெல்மெட், காராக இருந்தால் மறக்காமல் ‘சீட் பெல்ட்’ போடுகிறீர்கள். பாதுகாப்புக் காரணத்தைவிட போலிஸிடம் மாட்டினால் ‘கப்பம்’ கட்டவேண்டுமே என்றுதான் கூடுதல் அச்சம்.
  • இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ஐம்பது பைசா ஏறுகிறது என்று டிவியில் ஃப்ளாஷ் நியூஸ் போட்டதுமே, அவசர அவசரமாக பெட்ரோல் பங்குக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று ‘டேங்க் ஃபுல்’ செய்துக் கொள்கிறீர்கள்.
  • ஊழல் செய்திகளை உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. “இவனை எல்லாம் நடுரோட்டுலே நிறுத்தி யாராவது இந்தியன் தாத்தா மாதிரி ஆளுங்க சுட்டுத் தள்ளணும் சார்” என்று சக நண்பர்களிடம் அரசியல் பேசுகிறீர்கள். இதே ஆவேசத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் ஸ்டேட்டஸ்களிலும் காட்டுகிறீர்கள்.
  • உங்கள் மொத்த வருவாயில் பெரும்பகுதி உங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவே செலவிடப் படுகிறது. செலவுகளை சமாளிக்க தம்பதிகள் இருவரும் பணியாற்றுகிறீர்கள். அப்படியும் மாதாமாதம் பற்றாக்குறை பட்ஜெட்தான்.
  • மாதத்துக்கு ஒரு முறை குடும்பத்தோடு மால் விஜயம். சும்மா ‘விண்டோ ஷாப்பிங்’தான். வந்ததற்கு அடையாளமாக ஒரு ஃபேன்ஸி கம்மலோ, ஃப்ரண்ட்ஸ் பேண்டோ வாங்குகிறீர்கள். அங்கிருக்கும் திரையரங்கில் ஏதோ ஒரு மசாலாப்படம் பார்க்கிறீர்கள். இடைவேளையில் பாப்கார்ன் நிச்சயம் உண்டு.
  • பர்சனல் லோன்/ஹோம் லோன் இவற்றுக்கு எந்த வங்கி குறைந்த வட்டி வாங்குகிறது போன்ற தகவல்களை விரல்நுனியில் வைத்திருக்கிறீர்கள். எப்போதும் ஏதோ ஒரு லோன், தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டே இருக்கிறது.
  • மொபைல் போனோ, கலர் டிவியோ வாங்குவது எதுவாக இருந்தாலும், “ஏதாவது ஸ்பெஷல் ஆஃபர் இருக்கா?” என்று கூச்சநாச்சமில்லாமல் கேட்டு, குறைந்தபட்சம் ஒரு துணிப்பையையாவது இலவசமாக வாங்கிக்கொண்டுதான் வருவீர்கள்.
  • இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய்.. இரண்டில் ஒன்றுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறீர்கள்.
பட்டியலிட்டுக் கொண்டே போனால் குறைந்தது நூறு பாயிண்டுகள் தேறும். அதை விடுங்கள். பெரும்பாலானவற்றுக்கு ‘ஆம்’ சொல்லியிருக்கிறீர்களா. கையைக் கொடுங்கள். இந்த கட்டுரையின் ஹீரோ நீங்கள்தான். உங்களுக்கு ‘மிஸ்டர்/மிஸஸ் மிடில்க்ளாஸ்’ பட்டம் வழங்கி கவுரவிப்பதில் பெருமையடைகிறோம்.
மிடில்க்ளாஸ் ஆட்களை மாதிரி அல்லோலகல்லோலப் படுபவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது. குடிசையுமில்லாமல், பங்களாவுமில்லாமல்.. இங்குமில்லாமல், அங்குமில்லாமல் நானூற்றி ஐம்பது சதுர அடி ஃப்ளாட்டில் நெரிசலாக நான்கைந்து பேர் இடித்துக்கொண்டு திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்பவர்கள். அரசாங்க கஜானா காலியாகிக் கொண்டிருக்கிறது என்றால் முதலில் வரிபோட்டு சாகடிப்பது இவர்களைதான். மக்கள் தொகையில் இருபதிலிருந்து முப்பது சதவிகிதம் பேர்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்காக வருமான வரியில் தொடங்கி, கார்ப்பரேட் டாக்ஸ், ரோட் டாக்ஸ், பிராப்பர்ட்டி டாக்ஸ் என்று ஆண்டு முழுக்க எது எதுவென்றே தெளிவாக தெரியாமல் ஏதோ ஒன்றுக்காக வரி வரியாக வரி கட்டியே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். வருடத்துக்கு ஒருமுறை கொஞ்சமே கொஞ்சமாய் சம்பளம் ஏறினாலும், அதையும் பெட்ரோல் டீசல், பால், பஸ் ரயில் டிக்கெட், மருத்துவம், கல்வி, மின்சாரம் என்று இவர்களது அடிப்படை ஆதாரங்களின் விலையை ஏற்றி ஈஸியாக அரசாங்கங்கம் பிடுங்கிக் கொள்கிறது. சுருக்கமாக சொன்னால் இந்திய அரசாங்கத்தின் ஏ.டி.எம். கார்டு, நம்முடைய மிடில் க்ளாஸ் மாதவன்கள்தான். என்ன செய்வது, குருவித்தலையில் பனங்காயை வைத்துதான் நாட்டை நடத்த வேண்டியிருக்கிறது.
ஜனகனமன பாடும்போது அட்டென்ஷனில் சிலிர்த்துக்கொண்டு நிற்பதற்காகவும், பாரதம் கிரிக்கெட் கோப்பைகளை வெல்லும்போது, டிவிக்கு முன்பாக குடும்பத்தோடு ஜெய்ஹிந்த் சொல்லும்போது குரலில் தானாகவே வந்து சேரும் பெருமிதத்துக்காகவும் இந்த தியாகங்களை திருவாளர் நடுத்தரம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. குடியரசுத் தினத்துக்கும், சுதந்திர தினத்துக்கும் மறக்காம சட்டையில் தேசியக்கொடி குத்திக்கொண்டு நாட்டை பெருமைப்படுத்துவது யார். நம்ம மிடில்க்ளாஸ்தானே? இந்தியனாக இருப்பதற்கு இன்னும் ஏராளமான துன்பங்களையும், அழுத்தங்களையும் சகித்துக்கொள்ள வேண்டியதாக போகிறது. பாழாய்போன அமெரிக்காவில் முன்புமாதிரி ஈஸியாக வேலை கிடைத்து தொலைக்க மாட்டேங்கிறது சார். ஒபாமா ஓவரா ஸ்ட்ரிக்ட் பண்ணுறார்.
அப்படியிருந்தாலும் பாருங்கள். நடுத்தர வர்க்கத்துக்கு நல்ல பெயரே இல்லை. நாட்டில் எது நடந்தாலும் முதலில் அறிவுஜீவிகளும், ஊடகங்களும் திட்டுவது நம்மைதான். ‘middle class morons’ என்று ஆரம்பித்து, நடுத்தர வர்க்கத்து மனோபாவம்தான் நாட்டின் எல்லா சீரழிவுகளுக்கும் காரணமென்று பத்தி, பத்தியாக எது எதையோ எழுதுகிறார்கள். மூச்சு விடாமல் மூன்று மணி நேரம் கருத்தரங்குகளில் பேசுகிறார்கள். ஏழைகளை பற்றி அக்கறை இல்லை. என்கவுண்டரை மனிதநேயமில்லாமல் ஆதரிக்கிறார்கள். மேன் ஈட்டரான புலியை அதிரடிப்படை சுட்டுக்கொன்றதை சுற்றுச்சூழலியல் அறிவின்றி வரவேற்கிறார்கள் என்றெல்லாம் எல்லாத்துறை பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி, மிடில் க்ளாஸ் மாரோன்கள் எப்படி இயற்கைக்கும், இயல்புக்கும், அறத்துக்கும், அறிவுக்கும் எதிராக செயல்படுகிறார்கள் வாழ்கிறார்கள் என்றெல்லாம் சுட்டிக் காட்டுகிறார்கள். உற்றுக் கவனித்தால் இம்மாதிரி எழுதுபவர்களும் பேசுபவர்களும் கூட ‘மிடில் க்ளாஸ்’ ஆகதான் இருக்கிறார்கள். என்ன, நாம் டிகிரியில் அரியர்ஸ் வைத்திருப்போம். அறிவுஜீவிகள் பன்ணென்டாங்கிளாஸ் பாஸ் செய்திருப்பார்கள். பாஸ் பெருசா ஃபெயில் பெருசா தர்க்கத்தில் போட்டு நம்மை தாலியறுக்கிறார்கள்.
ஏதோ முக்கியமான ஆய்வு மாதிரி ஆரம்பித்து, கலாய்ப்பது மாதிரி போகிறதா கட்டுரை? சரி, சட்டென்று சீரியஸாகி விடுவோம்.
அறுபதுகளில் தமிழ்நாட்டில் பாதி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்து வந்தோம். குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு, பெண்களுக்கு கல்வி, கிராமங்கள் வரை மருத்துவம் என்று பல்வேறு காரணங்களால் கட்டுக்குள் வந்த மக்கள் தொகை பெருக்கத்தால், இன்று நாட்டிலேயே நடுத்தர மக்கள் அதிகமாக வாழும் மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. எனவே இந்த வர்க்கத்தினரின் பிரச்சினை என்பது மாநிலத்தின் பிரச்சினையும் கூட.
வாழ்க்கை முழுக்கவே பொருளாதார, சமூக அழுத்தங்களால் உந்தப்பட்டு வாழ்ந்துக் கொண்டிருப்பவன் என்பதுதான் மிஸ்டர் மிடில்க்ளாஸின் அசலான அடையாளம். அவனுடைய கனவு எந்த தொல்லையுமில்லாத வாழ்க்கை. துரதிருஷ்டவசமாக அது கடைசிவரை கனவாகவே ஆகிவிடுகிறது. அடிப்படை வசதிகளை பெற்றுவிட்ட நடுத்தர வர்க்கம், தனக்கு சுலபத்தில் எட்டாத வசதிகளுக்கு எம்பி, எம்பி முயற்சித்துக் கொண்டிருப்பதே அவர்களுடைய வாழ்க்கை முறையை சிக்கல்களுக்கு உள்ளாக்குகிறது. சவால்களை எதிர்கொள்ள ‘ரிஸ்க்’ எடுக்க விரும்புவதில்லை. தனிப்பட்ட முறையிலோ அல்லது ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்க்கைத்தரத்தை இன்னும் சில படிகள் மேலே கொண்டுவர ஏதேனும் ‘ரம்மி’ விளையாடி, ‘ஜோக்கரே’ வராமல் போய்விடுமோ என்கிற அச்சம்தான் நடுத்தரவர்க்கத்து வாழ்க்கையை சஞ்சலத்துக்கு உள்ளாக்குகிறது.
அரசியல் தலைவர்களை பொறுத்தவரை ‘நடுத்தர வர்க்கம்’ என்பதை ஓட்டு போடும் இயந்திரமாகதான் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு இவர்களை சீண்டுவார் இல்லை. ஆட்சியை தக்கவைக்க ஏழைகளுக்கு இலவசத் திட்டங்கள். அதிகாரத்தை தக்கவைக்க பணக்காரர்களுக்கு சலுகைகள். இடையில் இருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக விழுந்துக் கொண்டிருப்பது நாமம்தான்.
அனாயசமாக ஆங்கிலம் பேசக்கூடிய, பட்டம் பெற்ற, பல்வேறுதுறைகளில் தொழில்நுட்ப அனுபவமும் தகுதியும் கொண்ட நடுத்தர வர்க்கம் நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறார்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. கலை மற்றும் அறிவுசார் துறைகளிலும் இந்தியா உலகளவில் உயர்ந்து வருவதற்கு நடுத்தரக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்களே பிரதான காரணமாக இருக்கிறார்கள். ஆனால் நாடு இவர்களை எந்தளவுக்கு பொருட்டாக எடுத்துக் கொள்கிறது என்பது கேள்விக்குறிதான்.

முதுகு வளைந்துவிட்ட திருவாளர் நடுத்தரம் நிமிர்ந்து நடக்க முயற்சிக்கிறார் என்றே சமீபகாலமாக எண்ணத் தோன்றுகிறது. அரசியல், நாட்டு நடப்பு குறித்து வெறுமனே கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்திருக்கிறார்கள். அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டுமென்ற எண்ணத்துக்கு நடுத்தர வர்க்கம் வந்திருப்பதாக தோன்றுகிறது. பார்ப்போம். பவர் ஆஃப் மிடில்க்ளாஸ்ஸை அவ்வளவு சுலபமாக எடைபோட்டுவிட முடியாது.

20 ஏப்ரல், 2015

விழிகளால் மொழி பேசிய வித்யா!

கமலஹாசன் அந்த ஒரு மணி நேரமும் கலங்கிப் போயிருந்தார்.

சராசரி மனிதர்களுக்கேயான எந்தவித செண்டிமென்டும் இல்லாத இரும்பு மனிதர் என்றுதான் அவரை அறிந்தவர்கள் சொல்வார்கள்.

ஆனால்-

அந்த சந்திப்பு மட்டும் விதிவிலக்கு.

திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திர திருநாள் மருத்துவமனை. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார் ஸ்ரீவித்யா. தன்னுடைய நோய் யாருக்கும் தெரியக்கூடாது என்று நண்பர்களோ, உறவினர்களோ, மற்ற பிரபலங்களோ தன்னை வந்து பார்ப்பதை தவிர்த்தார். கமல்ஹாசனை மட்டுமே சந்திக்க அனுமதித்தார்.

ஏனெனில்-

கமலஹாசன், ஸ்ரீவித்யாவுக்கு எப்போதுமே ஸ்பெஷல். இருவரும் காதலிக்கிறார்கள் என்று எழுபதுகளின் மத்தியில் தமிழ் – மலையாள ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதின. இத்தனைக்கும் கமலஹாசனைவிட ஸ்ரீவித்யா ஒரு வயது பெரியவர். இரு குடும்பத்தாரிடமும் போராடி திருமணத்துக்கு அவர்கள் சம்மதம் வாங்கிவிட்டதாகவும் செய்திகள் வந்தன.

நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலம் இத்தனை சோகமாக இருந்திருக்காது. கமலஹாசன் – ஸ்ரீவித்யா இருவரும் ஏன் பிரிந்தார்கள் என்றெல்லாம் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இப்போது புலனாய்வு செய்யவேண்டிய அவசியமில்லை. இருவரும் காதலித்தார்களா என்றுகூட இன்று உறுதிப்படுத்திக் கொள்ளவும் தேவையில்லை. ஏனென்றால், இருவரும் தனித்தனி பாதையை தேர்ந்தெடுத்தார்கள். ஈடுபட்ட துறையில் உச்சத்தை எட்டினார்கள்.

கடைசி நாட்களில் ஸ்ரீவித்யாவை கவனித்துக் கொண்டவர் மலையாள நடிகரும், கேரளாவின் முன்னாள் அமைச்சருமான கே.பி.கணேஷ்குமார். “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. சிகிச்சைக்காக உலகின் எந்த நாட்டுக்கு அனுப்பினால், நோய் தீருமோ அங்கு அனுப்புங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவரிடம் கமல் உறுதியளித்தாராம்.

இருவருக்கும் இடையே நடந்த அந்த கடைசி சந்திப்புதான் ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியது என்கிறார் இயக்குனர் ரஞ்சித். அவர் எடுத்து 2008ல் வெளிவந்த ‘திரக்கதா’ திரைப்படத்தின் போஸ்டரிலேயே பெரியதாக மறைந்துவிட்ட ஸ்ரீவித்யாவின் படத்தை அச்சிட்டார்கள். ரசிகர்களும், விமர்சகர்களும் ‘திரக்கதா’வை கொண்டாடினார்கள். ஸ்ரீவித்யா பாத்திரத்தில் நடித்த பிரியாமணிக்கு, அந்த ஆண்டு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.

அக்டோபர் 19, 2006ல் காலமானபோது ஸ்ரீவித்யாவுக்கு வயது 53. அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் அவருக்கு ‘ஸ்பைன் கேன்சர்’ இருப்பது கண்டறியப்பட்டது. ‘கீமோ தெரபி’ சிகிச்சைக்கு செல்லும்போதெல்லாம் இதனால் தன் தோற்றம் பாதிக்கப்படுமோ, அதனால் நடிப்பு வாய்ப்பு குறைந்துவிடுமோ என்று அவர் அச்சப்பட்டதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஸ்ரீவித்யாவுக்கு அவரது வாழ்வும், நடிப்பும் வேறு வேறல்ல. நடிப்பினை உயிருக்கும் மேலாக நேசித்ததால்தான் இன்னும் சிறிது காலம் வாழ விரும்பினார்.

இத்தனைக்கும் ஸ்ரீவித்யா நடிக்க வந்ததே கூட யதேச்சையாக நடந்த விஷயம்தான்.
அம்மா எம்.எல்.வசந்தகுமாரி மிகப்பிரபலமான கர்நாடகப் பாடகி. அப்பா கிருஷ்ணமூர்த்தியும் பிரபலமான நடிகர்தான். 1953ல் ஸ்ரீவித்யா பிறந்தபோது உடல்நலக்குறைவு காரணமாக அவரது அப்பா நடிப்பதை நிறுத்தியிருந்தார். குடும்பம் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் இருந்தது. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஒப்புக்கொண்டு மேடை மேடையாக பாடிக் கொண்டிருந்தார் அம்மா. “கைக்குழந்தையான எனக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூட நேரமில்லாமல் அம்மா குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருந்தார்” என்று பிற்பாடு ஒரு பேட்டியில் சொன்னார் ஸ்ரீவித்யா.

பெற்றோர் சூட்டிய பெயர் மீனாட்சிதான். ஆனால், இவர் பிறந்ததை கேள்விப்பட்ட சிருங்கேரி மடத்தின் தேத்தியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், ‘ஸ்ரீவித்யா’ என்று பெயரிட்டு அழைக்கும்படி கேட்டுக் கொண்டாராம். ஸ்ரீவித்யா உபாசகரான அவரது ஆசையை தவிர்க்கமுடியாமல் மீனாட்சி, ஸ்ரீவித்யா ஆனார்.

வித்யாவின் சிறுவயதின் போது குடும்ப பொருளாதாரம் காரணமாக பெற்றோருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருந்தது. தாத்தா அய்யசாமி அய்யர்தான் வித்யாவுக்கு ஆறுதல். தினமும் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து லஸ் கார்னரில் இருக்கும் தண்ணீர்த்துறை மார்க்கெட்டுக்கு தாத்தாவும், பேத்தியும் காய்கறி வாங்க ரிக்‌ஷாவில் வருவார்கள்.

இசைமேதையான தாத்தா ரிக்‌ஷா பயணத்தின் போது கீர்த்தனைகளை பாடியபடியே வருவாராம். பேத்திக்கு புரிகிறதோ இல்லையோ, தான் பாடிய பாடலின் ராகம், தாளம் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பாராம். இதனால் ஐந்து வயதிலேயே ராகங்களை அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய திறமை ஸ்ரீவித்யாவுக்கு வாய்த்தது.

வித்யாவுக்கு பத்து வயதாக இருக்கும்போது, அவரது குரு டி.கிருஷ்ணமூர்த்தி, “இவள் கச்சேரி செய்யுமளவுக்கு கற்றுத் தேர்ந்துவிட்டாள்” என்று சான்று கொடுத்தார்.

ஆனால்-

ஸ்ரீவித்யாவுக்கு சங்கீதத்தைவிட நாட்டியத்தில்தான் குழந்தையாக இருந்ததிலிருந்தே ஆர்வம். பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் இந்தியாவிலேயே நாட்டியத்தில் புகழ்பெற்ற திருவாங்கூர் சகோதரிகள் அல்லவா? நாட்டியப் பேரொளி பத்மினியின் நாட்டியம் என்றால் ஸ்ரீவித்யாவுக்கு அவ்வளவு உயிர். அவர்தான் குரு தண்டாயுதபாணி பிள்ளையிடம் ஸ்ரீவித்யாவை சேர்த்து வைத்தவர். அவருக்கு ஆறு வயதாக இருந்தபோதே பத்மினி-ராகினி நடத்திய நாட்டிய நாடகத்தில் பாலசீதாவாக தோன்றினார். பதினோரு வயதில் அரங்கேற்றம்.

அத்தனை சிறுவயதிலேயே இந்தியா முழுக்க ஸ்ரீவித்யா நடனத்தில் பிரபலமானார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திராகாந்தி, ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மேடையேறினார்.
அம்மாவுக்கு சங்கீதம், மகளுக்கு நாட்டியம் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். அப்படியிருக்கையில், அந்த மாலைப்பொழுது ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையையே மாற்றியது. பள்ளியில் இருந்து திரும்பியிருந்தார். வீட்டு வாசலிலேயே பரபரப்பாக காத்திருந்தார் பத்மினி.

“வித்யா, சீக்கிரம் ரெடி ஆகு. உனக்கு இன்னைக்கு மேக்கப் டெஸ்ட்”

“எதுக்குக்கா?”

“நீ சினிமாவில் நடிக்கப் போறே”

வித்யா அப்போதுதான் டீனேஜிலேயே நுழைந்திருந்தார். “வேணாம் அக்கா. எனக்கு டேன்ஸுதான் பிடிச்சிருக்கு”

“அடிப்பாவி. தமிழ்நாட்டுலே அத்தனைப் பொண்ணுங்களும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுற எம்.ஜி.ஆரே கூப்பிட்டிருக்காரு. வேணாம்னு சொல்றீயே?”

“எம்.ஜி.ஆரா?” கிட்டத்தட்ட மயங்கிவிழப் போன வித்யாவை, பத்மினிதான் தாங்கிப் பிடித்தார். எம்.ஜி.ஆரின் பெயரை சொன்னபிறகும் மறுக்க முடியுமா என்ன. அந்த காலத்தில் அவரை யார்தான் ரசிக்காமல் இருந்திருக்க முடியும்?

பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய ‘ரகசிய போலிஸ் 115’ படத்துக்குதான் வித்யாவுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. ஆனால் புடவையில் இவரைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை. “ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கு. இன்னும் கொஞ்சம் வளரட்டும். நானே வாய்ப்பு கொடுக்கறேன்” என்றார். ஸ்ரீவித்யா நடிக்க இருந்த வேடத்தில்தான் ஜெயலலிதா அந்த படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த மேக்கப் டெஸ்டெல்லாம் எடுப்பதற்கு முன்பாகவே ஏ.பி.நாகராஜன், வித்யாவின் அம்மாவிடம் இவரை நடிக்கவைக்க கேட்டுக் கொண்டுதான் இருந்தார். ஆனால், அப்போது எம்.எல்.வசந்தகுமாரிக்கும் சரி, வித்யாவுக்கும் சரி. நடிப்பைப் பற்றி ஐடியா எதுவுமில்லை. ‘ரகசியப் போலிஸ்’ விஷயத்தில் ஏமாற்றம் அடைந்திருந்த வித்யாவுக்கு இப்போது நடிப்பை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று வீம்பு ஏற்பட்டு விட்டது. ஏ.பி.என்.னுக்கு சம்மதம் தெரிவித்து செய்தி அனுப்பினார்கள்.

‘திருவருட்செல்வர்’ படத்தில் நடனம் ஆடினார் ஸ்ரீவித்யா. தொடர்ச்சியாக படங்களில் நடனமும், சிறிய வேடங்களும் கிடைத்தன. ‘காரைக்கால் அம்மையார்’ திரைப்படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘தகதகதகதகவென ஆடவா’ பாடலுக்கு தகதகவென ஸ்ரீவித்யா ஆடியிருந்த வேகத்தில் தமிழ்நாடே அசந்துப் போனது.

மலையாளத்தில் ஸ்ரீவித்யா ‘சட்டம்பிக்காவலா’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஹீரோ சத்யனுக்கு வயது அப்போது ஐம்பத்து ஏழு. தன்னைவிட நாற்பது வயது மூத்த ஹீரோவுக்கு ஈடுகொடுத்து நடித்த இவரது துணிச்சல் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

தமிழில் பாலச்சந்தர் புயல் வீச ஆரம்பித்த காலம். அவரது ‘வெள்ளிவிழா’, ‘நூற்றுக்கு நூறு’ படங்களில் வித்யா தலை காட்டியிருந்தார். பாலச்சந்தரின் ஃபேவரைட் நடிகையாக மெதுவாக உருவாகத் தொடங்கினார். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, கமலுக்கும், ஸ்ரீவித்யாவுக்கும் பெரிய பிரேக்காக அமைந்தது. நடனம் தெரிந்த ஸ்ரீவித்யாவின் பெரிய கண்கள் அவரது நடிப்புக்கு ப்ளஸ்பாயிண்ட்.
வித்தியாசத்துக்கு பெயர்போன பாலச்சந்தர், ஸ்ரீவித்யாவை ஒரு ட்ரீம்கேர்ளாக இல்லாமல் திறமையான நடிகையாக வளர்த்தெடுத்தார். இருபத்தி இரண்டு வயது ஸ்ரீவித்யா, இருபது வயது பெண்ணுக்கு அம்மாவாக ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடித்தபோது ஆச்சரியப்படாத ஆளே இல்லை. அந்த படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவித்யாவின் ‘பைரவி’ கேரக்டர், தமிழ் சினிமாவில் சாகாவரம் பெற்ற பாத்திரம். ரஜினிகாந்தின் முதல் ஜோடி ஆயிற்றே? படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவி, கமலுக்கு காதலி.

ரஜினி, கமல் மட்டுமல்ல. எழுபதுகளின் பிற்பாதியில் கோலோச்சிய தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களுடனும் ஸ்ரீவித்யா நடித்தார். தான் பிறப்பதற்கு முன்பே தமிழ் சினிமாவில் ஹீரோவாகிவிட்ட சிவாஜியுடனும் ‘நாம் இருவர்’, ‘நாங்கள்’, ‘நீதியின் நிழல்’ மாதிரி படங்களில் ஜோடி சேர்ந்தார்.

முதன்முதலாக வாய்ப்பு தர முன்வந்த எம்.ஜி.ஆரோடு மட்டும் ஜோடி சேரமுடியவில்லை. ஆனால், அதற்கு பரிகாரமாக எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதுமே ஸ்ரீவித்யாவுக்கு ‘கலைமாமணி விருது’ கிடைத்தது. மட்டுமல்ல, 1977-78ஆம் ஆண்டின் சிறந்த நடிகையாக தமிழக அரசு விருதையும் பெற்றார்.

தமிழ் – மலையாளம் இரு மொழிகளுக்குமே முக்கியத்துவம் தந்தவர் கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களிலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். அதனால்தான் ஒட்டுமொத்தமாக அவரால் 900 படங்கள் நடிக்க முடிந்தது.

அவரது சினிமா வாழ்க்கை சிறப்பாக இருந்தபோதே இல்லற வாழ்வினை தேர்ந்தெடுத்தார். உண்மையை சொல்லப் போனால் சொர்க்கத்திலிருந்து நரகத்துக்கு போய் சேர்ந்த உணர்வினை அடைந்தார். தன் வாழ்க்கைத் துணைவராக ஜார்ஜ் தாமஸை அவர் தேர்ந்தெடுத்ததுதான் அவர் செய்த பெரிய தவறு. அடுத்த ஒன்பது ஆண்டுகளில் ஒருநாள் கூட ஸ்ரீவித்யா நிம்மதியாக உறங்கியதே இல்லை.

வித்யாவின் அம்மாவும், நண்பர்களும் ஆரம்பத்திலேயே இத்திருமணத்துக்கு எதிராகதான் இருந்திருக்கிறார்கள். தன்னுடைய சொந்த தேர்வு தவறானதுமே, அதை வெளிப்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்தார். இவருடைய சொத்துக்களை எல்லாம் தன்னுடைய உல்லாச வாழ்வுக்காக அழிக்கத் தொடங்கினார் ஜார்ஜ். ஏகப்பட்ட கடன். எல்லாவற்றுக்கும் ஸ்ரீவித்யாவே ஜவாப்தாரி. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்ட ஸ்ரீவித்யாவால் திருமணம்தாண்டிய ஜார்ஜின் பெண் உறவை மட்டும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விவாகரத்து வாங்கினார்.

ஆனால், ஸ்ரீவித்யா தன் சொந்த உழைப்பில் சேர்த்த வீட்டைகூட ஜார்ஜ் அபகரித்துக் கொண்டார். நீண்டகால சட்டப் போராட்டம் நடத்தியே அதை மீண்டும் பெற முடிந்தது. இந்த போராட்டமான காலத்தில் நடிகர் செந்தாமரை, இயக்குனர் ஆர்.சி.சக்தி போன்ற நண்பர்கள்தான் ஸ்ரீவித்யாவுக்கு துணையாக இருந்தார்கள் (ஆர்.சி.சக்தி கமலின் உள்வட்ட நண்பர் எனும் தனிக்குறிப்பு இங்கே தேவையில்லாதது என்றாலும் குறிப்பிடத்தக்கது).

யோசித்துப் பார்த்தால் ஸ்ரீவித்யாவின் இந்த தவறான தேர்வுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. “நான் முதன்முதலாக அம்மாவின் மடி மீது தலைசாய்ந்து படுத்தபோது எனக்கு வயது 34 ஆகிவிட்டிருந்தது” என்று வித்யா ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். தாயன்பினை தரிசிக்கவே முப்பது ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார் என்பது எவ்வளவு கொடுமை? சிறுவயதில் இருந்தே அன்புக்கு ஏங்கியவராகதான் இருந்திருக்கிறார்.

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கருத்து வேறுபாடு என்பதால் அப்பாவின் அன்பு அவருக்கு கிடைக்கவேயில்லை. பதிலாக தாத்தாவிடமிருந்து கிடைத்த நேசிப்பும் பத்து வயது வரை மட்டுமே -தாத்தாவின் திடீர் மரணம் காரணமாக- நீடித்தது.

திரையுலகில் எதிர்பாராமல் கிடைத்த கமலின் நட்பும், அன்பும் அவரை தேற்றியிருக்கும். ஆனாலும் அந்த பந்தம் திருமணத்தில் முடியாததாலேயே, அவசர அவசரமாக ஓர் ஆண் பாதுகாப்பினை நாடி ஜார்ஜை தேர்ந்தெடுத்துவிட்டார். உச்சநீதிமன்றம் வரை போய் தனக்கு உரிமையான சொத்துகளை ஜார்ஜிடமிருந்து திரும்பப் பெற்றவருக்கு சென்னையில் வாழும் ஆசையே அற்றுப்போனது. திருவனந்தபுரத்துக்கு இடப்பெயர்ச்சி செய்தார்.

இடையில் திருமணம் மாதிரியான பிரச்சினைகளால் அவரது நடிப்பு வாழ்க்கையிலும் சில பாதிப்பு. நிறைய புதுநடிகைகள் இவரது இடத்தில் அமர்ந்து விட்டார்கள். எழுபதுகளின் இறுதிவரை கோலோச்சிக் கொண்டிருந்தவர் எண்பதுகளின் துவக்கத்திலேயே அம்மா, அண்ணி பாத்திரங்களை ஏற்கவேண்டியதாயிற்று. 1982ல் வெளிவந்த ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ படத்தில் நாயகி அருணாவுக்கு அம்மாவாக நடிக்கும்போது ஸ்ரீவித்யாவின் வயது முப்பதைகூட எட்டவில்லை.
ரஜினியின் முதல் ஜோடியான ஸ்ரீவித்யா அவருக்கு அக்காவாக ‘மனிதன்’, ‘உழைப்பாளி’ படங்களிலும், மாமியாராக ‘மாப்பிள்ளை’, அம்மாவாக ‘தளபதி’ படங்களிலும் நடித்தார். ஊரே திருஷ்டிபோட்ட ஜோடிப்பொருத்தம் கமல்-ஸ்ரீவித்யா ஜோடிக்கு. அதே கமலுக்கு அம்மாவாக ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நடித்தார். ‘என் ராசாவின் மனசிலே’ போன்ற படங்களில் வயதுமுதிர்ந்த கிழவியாகவும் நடித்தார். வேடங்களை ஏற்பதில் அவருக்கு எந்த ஈகோவும் இல்லை என்பதுதான் முக்கியமானது. புதுமுக நடிகர், தன்னைவிட வயது மூத்தவர்கள் பாகுபாடு இல்லாமல் ‘நடிப்பு’ என்கிற தொழிலுக்கு விசுவாசமாக இருந்தார். கடைசிக் காலத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது தமிழ், மலையாளம் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஸ்ரீவித்யாவின் மரணத்தை கேரளா பெரும் இழப்பாக எடுத்துக் கொண்டது. அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன், “ஸ்ரீவித்யா பிறப்பால் தமிழராக இருக்கலாம், ஆனால் அவரை கேரளா மகளாக தத்தெடுத்துக் கொண்டது” என்றுகூறி இருபத்தோரு குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு தகனம் நடத்த ஏற்பாடு செய்தார்.

ஒரு நடிகையின் மறைவுக்கு அரசு மரியாதை என்கிற மாபெரும் கவுரவத்தை தான் சார்ந்த தொழிலுக்கு செத்த பிறகும் பெற்றுத் தந்தவர் ஸ்ரீவித்யா.

(நன்றி : தினகரன் வசந்தம்)

18 ஏப்ரல், 2015

தாரா.. த.. த்த.. ததத்தத்தா... த்தாரா த்தரா!

‘தாலியில்லா தமிழகம்’ என்கிற திராவிடர் கழகத்தின் கனவினை பிரச்சாரம் செய்ய வந்திருக்கும் திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. விழா வைத்து தாலி அகற்றிக் கொண்டிருக்கும் திராவிடர்களைவிட, ஆரியர்கள் எவ்வளவு முற்போக்கானவர்களாக மும்பையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

மணி சாருக்கு இது ‘கம்பேக் மூவி’ என்றெல்லாம் அவரது ரசிகர்கள் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு சொல்ல முடியாது என்றாலும், மணி சாரும் இன்னும் ரேஸில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கும் திரைப்படம். ஒருவகையில் சொல்லப்போனால் இராவணனும், கடலும் ஏற்படுத்திய சேதாரத்தில் இருந்து தப்பித்திருக்கிறார்.

கோபாலரத்தினம் என்கிற மணிரத்தினம் ஐம்பத்தி ஒன்பது வயதிலும் பத்தொன்பது வயது இளைஞனுக்காக படமெடுக்கிறார் என்பதே ஆகப்பெரிய ஆறுதல். ‘லிவிங் டூகெதர்’ குறித்து தமிழில் ஒரு படம் என்பதே கலாச்சார காவலர்களின் யுகத்தில் கொஞ்சம் துணிச்சலான முயற்சிதான். மணிசாரின் சின்ன மாமனார் கமல் சார் இதை சொந்த வாழ்க்கையிலேயே முயற்சித்துப் பார்ப்பதை துணிச்சலின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

படத்தின் ப்ளஸ், முதல் காட்சியிலிருந்தே திரையில் ஒவ்வொரு மில்லி மீட்டரையும் ஆக்கிரமிக்கும் இளமை. கிழ போல்டுகளான மணிசாருக்கும், பி.சி.ஸ்ரீராம் சாருக்கும், அரைகிழமான ஆஸ்கர் நாயகனுக்கும் எப்படி இவ்வளவு இளமை ஆர்ட்டீஷியன் ஊற்றாக கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது என்பது ஆச்சரியமான உலகசாதனை.

இயக்குனர் மணிசாரை விட, வசனகர்த்தா மணிசார்தான் மார்க்குகள் அதிகம் பெறுகிறார். இதுமாதிரி குட்டி குட்டியான க்யூட்டான டயலாக்குகளை இருபதுகளில் இருப்பவர்கள்கூட சிந்திப்பது அசாத்தியம் என்றே தோன்றுகிறது. ‘துகில் உரிப்பியா?’ என்று பட்டாம்பூச்சியின் சிறகுகளை மாதிரியே படபடத்துக்கொண்டு நித்யாமேனன் கேட்கும்போது, சென்னையின் சூப்பர் ஏ சென்டர் ரசிகர்கள் விசிலடிக்கக் கற்றுக்கொள்ளாத தங்கள் இயலாமையை நொந்துக் கொள்கிறார்கள். ஹீரோவும், ஹீரோயினும் சர்ச்சில் சாடை மொழியில் பேசும் மவுன டயலாக்குகள். அட.. அட.. அடடா...

‘தாரா.. த்த.. தத்தத்தா... த்தாரா த்தரா’ என்று தீம் மியூசிக்கில் தொடங்கி ‘மெண்டல் மனதில்’, லீலா சாம்சனிடம் நித்யாமேனன் பாடும் கர்நாடக தமிழிசை பாடல், குறும்பான பின்னணி இசை என்று ஆஸ்கர் வாங்கியதற்கு நியாயம் செய்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

ஸ்ரீகர்பிரசாத்தின் க்ரிஸ்பான எடிட்டிங் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ் படமா ஆங்கிலப் படமா என்று புரியாத அளவுக்கு உச்சமான தொழில் நேர்த்தி.

ஆனாலும்-

அத்தனை பேரையும் தூக்கி சாப்பிடுபவர் பி.சி.ஸ்ரீராம்தான். ரயில்நிலைய முதல் காட்சி தொடங்கி, மழை கொட்டும் க்ளைமேக்ஸ் வரைக்க ‘காதல் கண்மணி’ முழுக்க அவர் ராஜ்ஜியம்தான். கண்களை உறுத்தாத அமைதியான லைட்டிங்கில் முழுப்படமும் ஏற்படுத்தும் ரொமான்ஸ் மூடை உணர்கையில், இளையராஜாவுக்கு நிகரான மேதையான பி.சி. சாரை நாம் தகுந்த முறையில் கவுரவிக்கவில்லையோ என்கிற குற்றவுணர்வு தோன்றுகிறது.

படம் பார்க்கையில் ஓர் ஆச்சரியகரமான ஒப்பீடு தோன்றியது. ஏற்கனவே இந்த படத்தை குழந்தைப் பருவத்தில் பார்த்திருக்கிறோமோ என்கிற ஃபீலிங். இடைவேளையில் டாய்லெட்டில் பேண்ட் ஜிப்பை அவிழ்க்கும்போதுதான் பொறி பறந்தது. ‘புதுப்புது அர்த்தங்கள்’. கிட்டத்தட்ட அதுவும் ‘லிவிங் டூகெதர்’ சப்ஜெக்ட்தான். துல்கர் – நித்யா ஜோடி, ரகுமான் – சித்தாராவை நினைவுபடுத்துகிறார்கள். இளம் ஜோடியை சமப்படுத்த இங்கே பிரகாஷ்ராஜ் – லீலா சாம்சன் என்றால், பு.பு.அர்த்தங்களில் பூரணம் விசுவநாதன் – சவுகார்ஜானகி. எல்லாவற்றையும் விட பெரிய ஆச்சரியகரமான –அதே நேரம் யதேச்சையாக அமைந்த- மேட்டர், கே.பி.சாருக்கும் அந்தப் படத்தை இயக்கும்போது வயது ஐம்பத்தி ஒன்பதுதான். என்ன, ரகுமானுக்கும் சித்தாராவுக்கு அந்த படத்தில் ‘காந்தர்வ விவாகம்’ நடக்காது. மணிசார், ஓக்கே கண்மணியில் அதற்கும் ஓக்கே சொல்லியிருக்கிறார்.

துல்கர், ஜீன்களின் அறிவியல் ஆச்சரியம். அப்பாவை மாதிரியே பையன் இருப்பது சகஜம்தான். ஆனால் இப்படியா ‘ஃபிட் டூ பேப்பர்’ கமாண்ட் கொடுத்து பிரிண்ட் எடுத்தமாதிரி மம்முட்டியின் அச்சு அசலான இளமை காப்பியாக இருப்பார். தளபதி காலத்து மம்முட்டியே மீண்டும் ஜீன்ஸும், டீஷர்ட்டும் போட்டுக்கொண்டு நடித்தது மாதிரி விஷூவல் எஃபெக்ட்டை தருகிறார்.

சாண்டில்யனின் கதாநாயகிகள் மாதிரி (குறிப்பாக ‘ராஜதிலகம்’ மைவிழிச்செல்வி) சோமபானத்தில் திராட்சை மிதக்கும் கண்கள் நித்யா மேனனுக்கு. நுரைப்பஞ்சு மெத்தை மாதிரியான உடல்வாகு. ‘குஷி’ ஜோதிகா, ‘வாலி’ சிம்ரன், ‘அன்பே வா’ சரோஜாதேவி, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஜெயலலிதா, ‘நடிகன்’ குஷ்பூ ரேஞ்சுக்கு செமத்தியான ஃபெர்பாமன்ஸ்.

எல்லாம் சரி.

ஆனால்-

அழுத்தமேயில்லாமல் அது பாட்டுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைக்கதை. கதாபாத்திரங்களின் செயல்பாடுகளுக்கு போதுமான ஜஸ்டிஃபிகிஷேன்களே இல்லாமல் ‘ஜஸ்ட் லைக் தட்’டாக போய்க் கொண்டிருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு ஜாலியாக பேசிக்கொண்டிருப்பதெல்லாம் ஓக்கேதான். ஆனால் துல்கருக்கு இவர் ஏன் கண்மணியாகிறார், யாருக்கும் எளிதில் மடங்காத ஃபிகரான நித்யா தடாலென்று கசமுசா மூடுக்கு ஆளாகிறார், இருவரும் இணைந்து லிவிங் டூகெதராக வாழ என்ன எழவு நிர்ப்பந்தம் என்றெல்லாம் காட்சிகளில் விடையில்லை. துல்கர் உருவாக்கும் வீடியோ கேம் மாதிரி அது பாட்டுக்கும் எல்லாம் நடக்கிறது. ‘ஃபீல் குட்’ என்பதெல்லாம் சரிதான். சரவணபவனில் நெய் மிதக்கும் பொங்கல் சாப்பிட்டமாதிரி, காரசாரமான முரண் எதுவுமே இல்லாமல் மப்பாக படம் ஓடிக்கொண்டே இருப்பது (இத்தனைக்கும் வெறும் ரெண்டேகால் மணிநேரம்தான்) உறுத்துகிறது.

மோகன் தொட்டால் ரேவதிக்கு கம்பளிப்பூச்சி ஊறுவது மாதிரி இருந்ததற்கு பின்னால் இருந்த அழுத்தம், ‘நீ அலகா இருக்கேன்னு நெனைக்கலை’யென்று ஷாலினியிடம் ஜொள்ளு விடுவதற்கு பின்னால் மாதவனுக்கு இருந்த ரொமான்டிக் மைண்ட்செட், ‘ஓடிப்போலாமா?’ என்று நாகார்ஜூனனிடம் கிரிஜா செய்யும் குறும்பான ஃபன், கார்த்திக் வீட்டுக்கு வந்து ‘மூணுமாசம்’ என்று அலட்டும் நிரோஷா – இப்படியாக மணி சாரின் கடந்தகால வரலாற்றில் இருந்த சுவாரஸ்யம் எதுவுமே இல்லாமல் சவசவவென்றும், காமாசோமாவென்றும், எதிர்காலத்தில் நினைத்து நினைத்து உருகுகிற காட்சிகளோ, பாத்திரங்களோ இல்லாமல் காதல் கண்மணி அமைந்துவிட்டாள்.

சுஹாசினி மேடமுக்காக மவுஸ் நகர்த்தல் ஃபைனல் வெர்டிக்ட் : (இதையும் அவரது சித்தப்பா பாணியில்தான் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது)

“படம் நல்லா இல்லைன்னு சொல்ல வரலை. ஆனா, நல்லா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமேன்னுதான் சொல்லுறோம்”

13 ஏப்ரல், 2015

மதிப்பீடுகளுக்கு மரியாதை

காரமான கோங்குரா சட்னி தேசம். சாதி மதம் மட்டுமல்ல, வம்ச கவுரவமும் கோலோச்சும் பிற்போக்கு நிலவுடைமை சமூகம். மலையூர் மம்பட்டியான் பாணியில் கருப்பு போர்வை போத்திக்கொண்டு, கையில் லாந்தர் விளக்கோடு காட்டிலும் மேட்டிலும் அலையும் நக்சல்கள் என்றொரு சர்வதேச தோற்ற மயக்கம். ரத்தம் தெறிக்க சண்டை போடுவார்கள். கலர் கலராக டிரெஸ் போட பிடிக்கும். சர்வசாதாரணமாக வாயில் வந்து விழும் பாலியல் வசவுகள். கதறக் கதற கற்பழிப்பு. சொர்ணாக்கா பாணி பெண் ரவுடிகள். விஜயசாந்தி பாணியில் சிகப்புத் துண்டை தலையில் கட்டிய பெண் போராளிகள். புரட்சிப் பாடகர் கத்தார். புழுதி பறக்க சுமோவிலோ, டொயோட்டாவிலோ சேஸிங் சீன். வெடித்து தெறிக்கும் டிரான்ஸ்ஃபார்மர். துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ஓட்டு பெட்டியை கடத்தும் தாதாக்கள்.

சராசரித் தெலுங்கன் எப்படியிருப்பான், தெலுங்கு நிலம் எப்படியிருக்கும் என்று யோசிக்கவே தாவூ தீருகிறது. மூளையில் நான்லீனியராக வந்து விழும் இமேஜ்கள் கொஞ்சம் டெர்ரராகதான் இருக்கிறன. அதிலும் சித்தூரில் தமிழர்கள் மீது நடந்திருக்கும் சீமாந்திர அரசின் அநியாய கொலை வன்முறைக்கு பிறகு தெலுங்கர்களை நினைத்தாலே சிங்களவர்களின் ரத்தம் வழியும் பற்களோடு கூடிய அரக்கத் தோற்றம்தான் (நன்றி : நக்கீரன் அட்டைப்படங்கள், கார்ட்டூனிஸ்ட் பாலாக்கள்) நினைவுக்கு வருகிறது.

‘சன் ஆப் சத்யமூர்த்தி’ படம் பிடித்துக் காட்டும் தெலுங்கன் வேறு மாதிரியானவன்.

நவீனமானவன். ஆனால் பழைய மதிப்பீடுகள் மீது மரியாதை கொண்டவன். குடும்ப கவுரவம் காக்க வாழ்க்கையை பணயம் வைப்பவன். சுருக்கமாக சொன்னால் உள்ளுக்குள் கொல்டிதன்மை நிரம்பிய அல்ட்ரா மாடர்ன் காஸ்மோபோலிட்டன் இண்டியன்.

படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன். இவருடைய தாத்தாதான் சிரஞ்சீவியின் மாமனார். தெலுங்கின் செல்வாக்கான குடும்பத்து வாரிசுதான். பார்ன் வித் ப்ளாட்டினம் ஸ்பூன். எனவே குடும்பப் பெருமை பேசும் படத்தில் இவர் ஹீரோ என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஃபெவிக்விக் மாதிரி பச்சக்கென்று கேரக்டரில் ஸ்ட்ராங்காக ஒட்டிக் கொள்கிறார்.

அல்லு அர்ஜூன் ஏற்று நடித்திருக்கும் பாத்திரத்தின் பெயர் விராஜ் ஆனந்த். அப்பா சத்தியமூர்த்தி (பிரகாஷ்ராஜ்) கோடிஸ்வரர். தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தாலும், அவர்களுக்கு உதவும் கோமான். திடீரென்று ஒரு விபத்தில் சத்தியமூர்த்தி மறைந்துவிடுகிறார்.

அவர் தலைமையேற்று நடத்தும் நிறுவனங்களின் பங்கு, மார்க்கெட்டில் சடசடவென்று சரிகிறது. முதலீட்டாளர்களுக்கு பயங்கர நஷ்டம். தன்னுடைய அப்பாவை நம்பி முதலீடு செய்தவர்கள் நஷ்டமடையக் கூடாது என்று, சொந்த சொத்தை விற்று அந்த பங்குகளை தானே வாங்குகிறான் விராஜ்.

வெறும் பேப்பர்களாகிவிட்ட பங்குகளை முன்னூறு கோடி ரூபாயை கொட்டி வாங்கும் அவனது முடிவை பார்த்தவர்கள் பிழைக்கத் தெரியாதவன் என்கிறார்கள். சொத்துகளை காத்துக்கொள்ள சால்வன்ஸி கொடுத்துவிட்டு போகலாம், கார்ப்பரேட் யுகத்தில் இதெல்லாம் சகஜம்தான் என்றெல்லாம் யோசனை சொல்கிறார்கள். ஒரே ஒருவன்கூட தன்னுடைய அப்பாவால் நஷ்டமடைந்ததாக சொல்லக்கூடாது என்று மறுக்கிறான். அப்பாவே இல்லை, அவருடைய பெயரை காப்பாற்றி என்ன செய்யப் போகிறாய் என்று கேட்பவர்களிடம் ‘வேல்யூஸின் வேல்யூ’ குறித்து பேசுகிறான் விராஜ்.

பில்லியனர் குடும்பம் ஒரே நாளில் கீழ்நடுத்தர நிலைக்கு வருகிறது. பங்களா இல்லை. கார் இல்லை. கணவனே உலகம் என்றிருந்த அம்மாவுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அப்பா இறந்ததில் இருந்து லேசான மனநிலைக்கு ஆளாகிவிட்ட அண்ணன். இந்த நிலையில் இந்த குடும்பத்தை விட்டு விலகமுடியாது என்று கஷ்டங்களை ஏற்றுக் கொள்ள தயாராகும் கோடிஸ்வர அண்ணி. பச்சைக் குழந்தையான அண்ணன் மகளுக்கு நிலைமையை புரியவைக்க முடியவில்லை. விராஜ், இழந்ததை மீட்டானா என்பதுதான் மீதி கதை. இடையில் ‘உன் அப்பாவால் எனக்கு நஷ்டம்’ என்று சொன்னவரின் பிரச்சினையை உயிரை பணயம் வைத்து தீர்க்கிறான்.

அண்ணாமலை, படையப்பா மாதிரி ஃபேண்டஸியாக எடுக்கப்பட வேண்டிய படத்தை முடிந்தவரை ரியலிஸ்டிக்காக அமைத்திருக்கிறார் இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். சுயநலத்துக்கும், மதிப்பீடுகளுக்கும் இடையேயான விவாதம் படம் முழுக்க ராஜேந்திர பிரசாத் பாத்திரத்துக்கும், அல்லு அர்ஜூன் பாத்திரத்துக்கும் இடையில் நிகழ்ந்தபடியே இருக்கிறது. மனித உணர்வுகளுக்கு மதிப்பு தரும் விராஜ், தன்னுடைய எதிரிகளையும் தன்னை கேலி பேசியவர்களையும் கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை முறையில் வெல்கிறான். இறுதியில் காற்று அவன் பக்கம் அடிக்கிறது. நல்லது செய்தவனுக்கு நல்லதே நடக்கும் என்கிற ஃபீல்குட் மெசேஜ்தான்.

இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹீரோயின் சமந்தாவை எந்தவித நெருடலுமின்றி ஹீரோ ஏற்றுக் கொள்வதாக ஒரு போர்ஷன். கமல்ஹாசன், வாசிம் அக்ரம் போன்றோர் இளமையிலேயே அந்நோயை எதிர்கொண்டு அவரவர் ஈடுபட்ட துறையில் உச்சத்தை எட்டியதே இந்த கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன் என்று இயக்குனர் சொல்கிறார். த்ரிவிக்ரம் சீனிவாசை புதிய தலைமுறைக்கோ அல்லது பாலம் பத்திரிகைக்கோ கட்டுரை எழுத சொல்லவேண்டும். அந்தளவுக்கு அநியாயத்துக்கு நல்லவர்.

இம்மாதிரி படம் முழுக்கவே ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ ‘நான்தான் முகேஷ்’ பாணியில் ஒவ்வொரு கேரக்டரிலும் ஒவ்வொரு சீனிலும் ஏதோ ஒரு மெசேஜ் அதுவாக ஆட்டோமேடிக்காக வந்து விழுந்துக் கொண்டே இருக்கிறது. 165 நிமிஷத்தில் எப்படிப்பட்ட வில்லனையும் உத்தமனாக்கிவிடும் அகிம்சைவெறியோடு உழைத்திருக்கிறார்கள்.

படம் தொடங்கி பத்தே நிமிடத்தில் இறந்துவிடும் பிரகாஷ்ராஜ் பாத்திரம், க்ளைமேக்ஸ் வரை காட்சிக்கு காட்சி முக்கியத்துவம் பெற்றுக்கொண்டே இருப்பதைப் போன்ற புத்திசாலித்தனமான திரைக்கதை. படம் நெடுக ஏராளமான நட்சத்திரப் பட்டாளம். ஆனால், எல்லாமே பாசிட்டிவ்வான கேரக்டர்கள்தான். தமிழில் இருபது ஆண்டுகளுக்கு முன்பே ஓட்டி தேய்ந்த அப்பாவின் கவுரவத்தை மகன் காப்பது என்கிற அரதப்பழசான ரீல்தான். ஆனால் அதையே ஒழுங்காக ஸ்க்ரிப்ட் ஆக்கி, இன்றைய தலைமுறைக்கு ஏற்ற E வடிவத்துக்கு மாற்றி இருப்பதில்தான் தெலுங்கர்களின் சாமர்த்தியம் வெற்றியை எட்டியிருக்கிறது. தொண்ணூறுகளின் விக்ரமன் காலத்துக்கேற்ப அப்டேட் ஆகிக்கொண்டே வந்திருந்தால் இன்னேரம் சன் ஆஃப் சத்யமூர்த்தி மாதிரி அதிரடி வெற்றியை ருசித்துக் கொண்டிருப்பார்.

சன் ஆஃப் சத்யமூர்த்தி : ஃபேமிலி பிக்னிக்!