7 அக்டோபர், 2015

நேரு குடும்பத்தின் நயன்தாரா

மோடி அரசின் செயல்பாடுகளை கண்டித்து தான் பெற்ற சாகித்திய அகாதெமி விருதினை திருப்பியளிப்பதன் மூலம் இப்போது ஊடகங்களின் மஞ்சள் வெளிச்சத்துக்கு வந்திருப்பவர் எழுத்தாளர் நயன்தாரா சாஹல். இவரைக் குறித்த இந்த அறிமுகக் கட்டுரை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘தினகரன் வசந்தம்’ இதழில் வெளியானது.
நயன்தாராவின் கதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் இந்திய உயர்வர்க்கத்தின் ஆண்களும், பெண்களும்தான். அவரால் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்து மனிதர்களையோ, ஏழைகளையோ, சாதிய பாகுபாடுகளால் ஒடுக்கப்பட்டவர்களையோ கதைகளாக்க முடியவில்லை. ஏனெனில் அவர்களோடு அவர் பழகியதே இல்லை. இதை அவர் மீதான விமர்சனமாக நிறைய விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால், இந்திய அரசியல் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும், தன்மைகளையும் இவரளவுக்கு நேர்மையாக எழுத்தில் முன்வைத்தவர் வேறு யாருமில்லை.

“நான் ஒரு நாவலாசிரியர் மட்டுமல்ல. அரசியல் செய்திகளை எழுதக்கூடிய பத்திரிகையாளரும் கூட. நான் திட்டமிட்டு அரசியல் பின்னணியை எழுத்தில் கொண்டு வருவதில்லை. நான் வாழ்வில் சந்தித்த மனிதர்களும், சம்பவங்களும் அரசியல் தொடர்பானவை மட்டுமே. அவற்றை மட்டுமே எனக்கு எழுதத் தெரிந்திருக்கிறது” என்று தன் எழுத்துகளை குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறார் நயன்தாரா சாஹல்.

இந்தியாவின் நெம்பர் ஒன் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு இவருடைய தாய்மாமன். ஐக்கிய நாடுகள் சபைக்கு சுதந்திர இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட முதல் தூதரான விஜயலஷ்மி பண்டிட்தான் அம்மா. இந்திராகாந்திக்கு அத்தை மகள். பிறந்து வளர்ந்ததெல்லாம் அலகாபாத்தில் இருக்கும் நேருவின் பாரம்பரிய பரம்பரை வீடான ஆனந்தபவனத்தில்தான். இவரது எழுத்துகளில் அரசியலும், வரலாறும் கலந்திருப்பதில் ஆச்சரியமென்ன?

அப்பா ரஞ்சித் சீத்தாராம் பண்டிட் அந்த காலத்தில் பிரபலமான வக்கீல். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வரலாற்றுக் காவியமான ராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவர்தான். நேரு குடும்பம் ஆயிற்றே. அடிக்கடி சுதந்திரப் போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை செல்ல வேண்டியிருக்கும். அம்மாதிரி சிறைப்பட்டிருந்த ஒரு நேரத்தில் திடீரென மரணமடைந்தார். அப்போது நயன்தாராவுக்கு வயது பதினேழுதான். ஒரு அக்காவும், ஒரு தங்கையும் இருந்தார்கள். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய பத்து, பதினைந்து ஆண்டுகள் நேரு குடும்பத்துக்கு சோதனையானவை. கிட்டத்தட்ட எல்லோருமே சிறைக்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக போய்விட்டு வருவார்கள். எனவே குழந்தைகளாக இருந்தவர்கள் அவர்களாகவே வளர்ந்தார்கள். பள்ளி, கல்லூரி படிப்பெல்லாம் வெளியூர்களில்தான்.

மேற்கத்திய பாணி குடும்ப வாழ்க்கையை பின்பற்றும் நேரு குடும்பத்தில் பிறந்ததால் நுனிநாக்கு ஆங்கிலமும், ஐரோப்பிய நடை உடை பாவனைகளுமாக ஸ்டைலாக வலம் வந்தார் நயன்தாரா. இந்திய சமூக மரபில் பெண்கள் பலியாடுகளாய் வளர்க்கப்படுவதை வெறுத்தார். பெண்களுக்கான தனித்த அடையாளத்தை தர ஆண்கள் மறுப்பதாய் நினைத்தார். அவருடைய இளமைக் காலத்தில் ஐரோப்பாவில் தொடங்கிய பெண்ணிய சிந்தனை போக்கு இவருக்குள் ஆழமாக ஊடுருவியது. இதனாலேயே என்னவோ திருமண வாழ்க்கை தடுமாற்றம் கண்டது. இரண்டு விவாகரத்துகளுக்கு பிறகு மூன்றாவதாக அந்தகால ஐ.சி.எஸ் (இன்றைய ஐ.ஏ.எஸ் மாதிரி) அதிகாரியான மங்கத்ராயை மணந்தபிறகுதான் வாழ்க்கை சமநிலைக்கு வந்தது.

அரசியல் மட்டத்தில் இவருக்கும், இவருடைய தாயாருக்கும் இருந்த செல்வாக்கை சொந்த மாமன் மகளான இந்திராகாந்தி பிரதமர் ஆனதும் அடித்து நொறுக்கினார். இத்தாலிக்கான இந்திய தூதராக நயன்தாரா நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பதவியேற்பதற்கு முன்பாகவே அந்த ஆணையை திரும்பப் பெற்றார் புதியதாக பதவிக்கு வந்திருந்த இந்திராகாந்தி. இவ்வாறாக நேருவின் தங்கை குடும்பம் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு முடிவுக்கு வந்தது. இந்திராவின் அதிரடி வளர்ச்சியை உண்மையில் யாருமே யூகிக்க முடியவில்லை. நேருவின் மரணத்துக்குப் பிறகு அதிரடியாய் மிகக்குறுகிய காலத்தில் காங்கிரஸையும், இந்தியாவையும் அவர் கைப்பற்றிய கதையை பிற்பாடு ‘இந்திராகாந்தி, எமர்ஜென்ஸ் அண்ட் ஸ்டைல்’, என்று என்று நூலாய் எழுதினார். தன் மாமன் மகளை எட்ட நின்று பார்வையாளராய் ஆச்சரியமாய் அவர் பார்த்த அனுபவங்கள்தான் அந்த நூல். இதையே கொஞ்சம் பிற்பாடு புனைவு பாணியில் ‘இந்திராகாந்தி : ஹெர் ரோட் டூ பவர்’ என்று நாவலாகவும் எழுதி வெளியிட்டார். இந்திரா முதன்முதலாக ஆட்சியை இழந்த நேரத்தில் முதல் நூல் வெளிவந்தது. நாவல் வெளிவரும்போது மீண்டும் அவர் ஆட்சியை கைப்பற்றியிருந்தார். எனவே இரண்டு நூல்களும் எத்தகைய பரபரப்பை அந்த காலத்தில் ஏற்படுத்தியிருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

அரசியலும் வரலாறும்தான் ஆர்வம் என்றாலும் புனைவு மீது அலாதி ப்ரியம் கொண்டவர் நயன்தாரா. தன் குடும்பத்தின் சிறை நினைவுகளை ‘ப்ரிஸன் அண்ட் சாக்லேட் கேக்’ என்று 1954ல் அவர் எழுதிய நினைவலைகள், ஆங்கில இலக்கிய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக அவருக்கு அரசியல் அலசல் கட்டுரைகளையும், நூல்களையும் எழுததான் வாய்ப்புகள் நிறைய கிடைத்தது. ஒரு கட்டத்தில் இந்த நான்ஃபிக்‌ஷன் உலகில் இருந்து வெளிவரவேண்டும் என்கிற வேட்கையோடு தொடர்ச்சியாக நாவல்கள் எழுத ஆரம்பித்தார். இந்திய மேல்தட்டு வர்க்கம் குறித்த சித்திரம் மிக துல்லியமாக இவரது கதைகளில் இடம்பெற்றது. உலகளவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பெண் எழுத்தாளர்களுக்கே சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவர்களில் நயன்தாராவும் ஒருவர்.

இவரது எழுத்துகளில் சம்பவங்களும், பாத்திரங்களும் வேண்டுமானால் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் அந்த வர்க்கத்திலும் கூட பெண்கள் மீதான ஒடுக்குமுறை இருப்பதை துணிச்சலாக விமர்சித்தார். பெண்களுக்கான சுதந்திரம் குறித்த உரிமைக்குரலை தொடர்ச்சியாக பதிவு செய்து வந்திருக்கிறார். கடைசியாக அவர் எழுதிய நாவலில் கூட இந்திய பெண்கள் எப்படி உன்னதமான உயரத்தை எட்டக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது என்கிற விவாதமே பிரதானமாக இருந்திருக்கிறது. எட்டு நாவல்கள், ஏராளமான சிறுகதைகள் (இவை தொகுப்பாக வந்ததாக தெரியவில்லை), அரசியல் விமர்சன கட்டுரைகள் உள்ளிட்ட அபுனைவு நூல்கள் ஒன்பது என்கிற எண்ணிக்கைகளில் இவரது எழுத்துகள் நூலாக அச்சாகியிருக்கின்றன.

அரசியலில் இருந்து திட்டமிடப்பட்டு இவர் வெளியேற்றப் பட்டிருந்தாலும் இந்தியாவின் பல உயரங்களை இவர் தொடமுடிந்திருக்கிறது. 1972ல் இருந்து 75 வரை சாகித்ய அகாதெமியின் (ஆங்கில இலக்கியப் பிரிவு) ஆலோசகராக பதவி வகித்தார். இந்திய ரேடியோ மற்றும் டிவிக்கான வர்கீஸ் கமிட்டியின் உறுப்பினராக 77-78 ஆண்டுகளில் இருந்தார். ஐக்கிய நாடுகள் பொதுசபையின் இந்திய பிரதிநிதியாக செயல்பட்டிருக்கிறார். குடிமக்கள் உரிமைகளுக்கான யூனியன் அமைப்பில் துணைத்தலைவராக பணிபுரிந்திருக்கிறார்.

1985ல் இங்கிலாந்தின் புனைவுக்கான சிங்க்லேர் விருது, 1986ல் சாகித்திய அகாதெமி, 1987ல் காமன்வெல்த் எழுத்தாளர்களுக்கான விருது என்று தேசிய, சர்வதேச விருதுகள் ஏராளம் இவரது வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது. அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸிலும் இவரது இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

எண்பத்தேழு வயதாகும் நயன்தாரா சாஹல், தற்போது டெஹ்ராடூனில் வசிக்கிறார். பெண்ணியம், அடிப்படைவாதம், இனவாதம் முதலியவற்றை காரசாரமாக விமர்சித்து எழுதும் பத்திரிகையாளரும், ஆவணப்பட இயக்குனரும், மனித உரிமைப் போராளியுமான கீதா சாஹல் இவருடைய மகள்தான்.
இந்த கட்டுரை, சூரியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ரைட்டர்ஸ் உலா’ நூலின் ஓர் அத்தியாயமாகவும் இடம்பெற்றிருக்கிறது.

24 செப்டம்பர், 2015

அசந்துட்டாங்க ஆங்கிலேயனுங்க

தமிழ் திரையுலகின் வரலாற்று சாதனையாளரான தேவருக்கும் ஆங்கிலத்துக்கும் எட்டாம் பொருத்தம். இருந்தாலும் வாழ்வின் கடைசிநாள் வரை அம்மொழியோடு விடாது மல்லு கட்டிக் கொண்டிருந்த பயில்வான் தேவர். தமிழிலும், இந்தியிலும்தான் படங்கள் தயாரித்தார் என்றாலும் ஆங்கிலப் படங்கள் மீதுதான் அவருக்கு அத்தனை மோகம். 1930களில் தொடங்கி 70கள் வரை வந்த முக்கியமான ஆங்கிலப் படங்கள் அத்தனையையுமே தேவர் பார்த்து ரசித்திருக்கிறார். சில ஹாலிவுட் படங்களின் கருவை எடுத்துக்கொண்டு, தமிழில் புதுசாக தன்னுடைய கதை இலாகாவை கதை தயார் செய்யச் சொல்லி படமும் எடுத்திருக்கிறார்.

---

சென்னைக்கு வந்து சினிமா தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆரம்பக் காலம். கம்பெனிக்காக வங்கி அக்கவுண்டு ஓபன் செய்திருந்தார். தமிழ் சினிமாவின் புரொடியூஸர் அல்லவா? தமிழில் கையெழுத்து போட்டால் கெத்தாக இருக்காது என்று ஆங்கிலத்தில் கையெழுத்து போட பழகிவந்தார்.

‘செக்’ புத்தகத்தில் அவர் போடும் கையெழுத்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒருமுறை அவசரப் பணத்தேவைக்காக ஒரு செக் கிழித்து எழுதி பையனிடம் கொடுத்து அனுப்பினார். வங்கியில் கையெழுத்து வேறு மாதிரியாக இருக்கிறது என்று திருப்பி அனுப்பினார்கள்.

தேவரே நேரடியாகப் போய் கையெழுத்து போட்டார். ஒத்துக் கொள்ளவில்லை. “என் காசை வெச்சுக்கிட்டு எனக்கு கொடுக்க மாட்டேங்கறீங்களேடா. பாவிகளா!” என்று பயங்கர கலாட்டா செய்தவர், கடுப்பில் தன்னுடைய வங்கி அக்கவுண்டையே குளோஸ் செய்து மொத்தப் பணத்தையும் எடுத்துவிட்டார். அதில் தொடங்கி அவருக்கு வங்கி, செக் போன்ற விஷயங்கள் என்றாலே அலர்ஜி.

கோடம்பாக்கமோ மும்பையோ... தேவர், யாருக்கு அட்வான்ஸ் கொடுப்பதாக இருந்தாலும் கத்தையாக மடியில் கட்டிய பணத்தைதான் எடுத்துக் கொடுப்பார். செக் கொடுப்பதில்லை என்பதின் பின்னணிக் காரணம் இதுதான்.

---

படப்பிடிப்பில் நடிக நடிகையர் ‘டிமிக்கி’ கொடுத்தால் தேவர், வில்லனாக மாறிவிடுவார். ஆனால்- அவரிடம் அனுமதி கேட்டு லீவு வாங்கினால், வள்ளலாக வாரி வழங்குவார்.

சரோஜாதேவிக்கு மறுநாள் அவசரவேலைகள் இருந்தன. தயங்கித் தயங்கி தேவரிடம் கேட்டார். “அண்ணே! கொஞ்சம் வீட்டு வேலைகள் இருக்கு. நாளைக்கி நான் இல்லாம ஷூட்டிங் அட்ஜஸ்ட் பண்ணிக்கறீங்களா?”

தேவருக்கு அப்போதுதான் அட்வைஸ் செய்திருந்தார்கள். யாராவது தமிழில் பேசினாலும் ஆங்கிலத்திலேயே பதில் சொல்லுங்கள். மொழி வசமாகும் என்று.

தேவர், பளீரென்று சொன்னதைக் கேட்டு சரோஜாதேவிக்கு மயக்கமே வந்துவிட்டது.

“ஓக்கே. டும்மார்ரோ ஐ வில் மேரேஜ் யூ”

அதாவது ‘மேனேஜ்’ செய்துக் கொள்கிறாராம்.

---

எழுபதுகளின் தொடக்கத்தில் இந்தியில் அவர்தான் ‘ஹாட்’ பீஸ். இருபது ஆண்டுகள் கழித்து அவரது மகளும் பாலிவுட்டில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்தார். அந்த நடிகைக்கு கட்டுமஸ்தாக இருக்கும் தேவரின் மீது ஒரு கண். மனுஷனும் அப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் பணத்தை ‘தண்ணீ’யாக அள்ளி எறிவார். இவரை மடக்கிப் போட்டால் ஈஸியாக தமிழ் திரையுலகில் நுழைந்துவிடலாம், எம்.ஜி.ஆருக்கு ஜோடி சேரலாம் என்று கணக்கு போட்டார் அந்த நடிகை. தேவர், அந்த நடிகையை வைத்து பிரும்மாண்டமான ஒரு இந்திப்படத்தை அப்போது தயாரித்துக் கொண்டிருந்தார்.

படப்பிடிப்பில் வேண்டுமென்றே தேவரை உரசுவது, தொட்டுத் தொட்டுப் பேசுவது என்று காஜூ ஏற்றிக் கொண்டிருந்தார். ஏகபத்தினி விரதனான தேவர், ஒரு முறை டென்ஷன் ஆகி கத்தினார்.

“சீ. டோண்ட் டச் ஐ. முருகன் ஒன்லி டூ வைஃப். மீ டச் ஒன்லி மை வைஃப்”

தேவரின் தமிழ் கற்பு ஒழுக்கத்தை வியந்தவாறே, அந்த நடிகை அதற்குப் பிறகு அவருக்கு தொல்லை கொடுக்கவில்லை.

---

‘நீதிக்குப் பின் பாசம்’ படப்பிடிப்பு. வெள்ளைக்காரர்கள் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தேவரின் யூனிட்டும் தேவர் மாதிரியேதான். ஆங்கிலம் என்றால் அலர்ஜி. எனவே, வெள்ளைக்காரர்கள் ஏதாவது கேட்டுவிட்டு, அதற்கு பதில் சொல்ல முடியாமல் மானபங்கம் ஆகிவிடுமோ என்று அஞ்சிக்கொண்டே வேலை பார்க்கிறார்கள்.

படப்பிடிப்பு இடைவேளையில் திடீர் திருப்பம். அந்த வெள்ளைக்காரர்களோடு தேவர் ஜோவியலாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார். அவர்களும் தேவருக்கு சல்யூட் வைத்து, கைகுலுக்கி பாராட்டிவிட்டு, டாட்டா காண்பித்துவிட்டுச் செல்கிறார்கள்.

தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆர் இந்த அதிசயத்தைப் பார்த்து அசந்துக் கொண்டிருந்தார்.

அருகில் வந்த தேவரிடம் எம்.ஜி.ஆர் கேட்டார்.

“மொதலாளி, அவங்களோட என்ன பேசிக்கிட்டிருந்தீங்க?”

“படம் பத்தி சில தகவல்கள் கேட்டானுங்க முருகா. சொன்னேன்”

“என்ன கேட்டாங்க, நீங்க என்ன சொன்னீங்க?”

“படத்தோட கதையை கேட்டாங்க. தலைப்பை சொன்னேன். கதை புரிஞ்சிடுச்சி, நல்லாருக்கு. சூப்பருன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க”

“அவங்களுக்கு தமிழ் தெரியாதே? இங்கிலீஷ்லேயா சொன்னீங்க?”

“ஆமாம். ‘தி ஜட்ஜ் பேக் ஆஃப் லவ்’ அப்படின்னேன். அசந்துட்டானுங்க ஆங்கிலேயனுங்க”

அனேகமாக அன்று புரட்சித்தலைவருக்கு காய்ச்சல் வந்திருக்க வேண்டும்.

6 ஆகஸ்ட், 2015

மோட்டிவ்


“போட்டா இவளைதான் போடணும்” கதையின் முதல்வரியிலேயே முடிவெடுத்து விட்டான் நரேந்திரன்.

ஏன் போடணும்?

கிரிமினாலஜி படிக்கும் மாணவனான அவனுக்கு அன்று காலைதான் திடீரென்று இந்த எண்ணம் தோன்றியது.

வகுப்பில் புரொபெஸர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருந்தார்.

“எந்த ஒரு குற்றச் செயலுக்கும் ‘மோட்டிவ்’ நிச்சயமிருக்கும். மோட்டிவ் எந்தவொரு குற்றச் சம்பவமும் நடைபெற வாய்ப்பே இல்லை”

அவளைப் பார்த்து சிரித்தான்.

லேசாக குழம்பினாள். தனக்குப் பின்னால் வேறு யாரையாவது பார்த்து சிரிக்கிறானோ என்று திரும்பிப் பார்த்தாள். யாருமே இல்லை. அங்கே யாருமே இல்லை.

“ரேப்புக்கு மோட்டிவ் கிடையாதே சார்?” நரேன்தான் சந்தேகம் கேட்டான்.

“ரேப்புதான்டா மோட்டிவ்” புரொபஸர் கிண்டலாக சொன்னார்.
வகுப்பே கொல்லென்று சிரித்தது. அவமானத்தை உணர்ந்தான். கொல்லென்ற சிரிப்பு நிற்காமல் தொடர, அவமானம் கோபமானது. கைவிரல்கள் உதறின. கண்கள் சிவந்தன.

‘யாரென்று தெரியாத ஒருவன் தன்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறான்?’ அவள் கலவரமானாள்.

இவன் அவளை நோக்கி புன்னகைப்பதை நிறுத்தவே இல்லை.

பளீரென மஞ்சள்புடவை அணிந்திருந்தாள்.

தொப்புளில் இருந்து ஒன்றரை சாண் இறக்கி கொசுவம் வைத்திருந்தாள். எப்படி இது சாத்தியம்?

என்ன அனாடமியோ. ஒன்றும் புரியவில்லை.

“இல்லைங்க சார். பல சம்பவங்களுக்கு மோட்டிவ்வே இருக்குறதில்லை” இவன்தான் மறுத்தான்.

“இருவது வருஷமா நான் எவ்வளவு கேஸ் ஸ்டடி படிச்சிருப்பேன். மோட்டிவ் இல்லாத ஒரே ஒரு கிரிமினல் ரெக்கார்ட் கூட இந்தியாவிலேயே இல்லை. அப்படி இருக்கிறதா இருந்தா அது முடிவுபெறாத கேஸா இருக்கும்” புரொபஸர் மறுத்தார்.

அவளை நோக்கி இவன் நடக்கத் தொடங்கினான்.

இவன் அவளை நெருங்க நெருங்க அவளது முகத்தில் அப்பட்டமாய் அச்சம் தெரிந்தது. சுற்றும் முற்றும் மலங்க மலங்க பார்த்தாள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஈ, காக்காய் இல்லை.

“எனவேதான், போலிசும் டிடெக்டிவ்வும் எந்த கேசை எடுத்தாலும் முதலில் மோட்டிவ் என்னன்னு கெஸ் பண்ணிப்பாங்க. அந்த ரூட்டுலே கிரிமினலை தேட ஆரம்பிக்கிறதுதான் ஈஸி”

சட்டென்று அவளது முகத்தில் மந்தகாசமான புன்னகை ஒன்று விரிந்தது. உதடு திறந்து சிரிக்க ஆரம்பித்தாள். டார்க் ரெட் லிப்ஸ்டிக். இப்போது நரேந்திரன் ஜெர்க் ஆனான். ஒருவேளை அயிட்டமோ?

“கையும் களவுமா ஸ்பாட்டுலேயே கிரிமினல் மாட்டிக்கிட்டா?”

“மாட்டிக்கிட்டவனை பிடிச்சி ‘மோட்டிவ்’ என்னன்னு விசாரிச்சி கண்டுபிடிப்பாங்க. கோர்ட்டுலே குறிப்பிட்ட குற்றத்தை செய்ய குற்றவாளிக்கு என்ன மோட்டிவ்வுன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிச்சாதான் பிராசிக்யூசன் வின் பண்ணதா அர்த்தம்”

பரந்து விரிந்திருந்த அவளது மெகாசைஸ் மார்பைத் தொட்டு இடப்புறமாக சுட்டிக் காட்டினாள். கைவிடப்பட்ட ஒரு வீடு தெரிந்தது. சந்தேகமேயில்லை.

இவள் அப்படிதான்.

“எனக்கு சரியா படலை சார். மோட்டிவ் இல்லாத க்ரைம் சாத்தியம்தான்னு நினைக்கிறேன். காம்யூவோட நாவல்ல கூட...”

புரொபஸர் இம்முறை கோபப்பட்டார். “கிரிமினல்ஸையும், கேஸையும் கரைச்சுக் குடிச்சி இவ்வளவு புக்ஸ் எழுதினவனுங்க முட்டாளு. அதையெல்லாம் படிச்சி உங்களுக்கு கத்துக்கொடுக்கிற நான் கேணையன். எடக்குமடக்கா கேள்வி கேட்குற நீ மட்டும்தான் புத்திசாலியாடா?”

மறுபடியும் கொல்லென்ற சிரிப்பு. கொலைவெறி வந்தது நரேனுக்கு. ஆட்டு மந்தைகள். என்ன பாடம் சொல்லிக் கொடுக்கிறார்களோ அதை அப்படியே மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தி எடுக்கும் மந்திகள். என்னைப் பார்த்து சிரிக்க இவனுங்களுக்கு என்ன யோக்கியதை?

அவளோடு சேர்ந்து அவனும் நடந்தான். இதுவரை இருவரும் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை. இவனுக்கு எந்த மோட்டிவ்வும் இல்லை. அவளுக்கு?

‘கொல்’லென்ற சிரித்த மந்திகளில் ஒருவனையாவது ‘கொல்’ என்று உள்மனம் ஆணையிட்டது. கொன்றுவிட்டால் ‘கொல்’லென சிரித்ததால்தான் கொன்றான் என்பது மோட்டிவ் ஆகிவிடும்.

மோட்டிவ்வே இல்லாமல் ஒருவனையோ/ஒருவளையோ போட்டால் என்ன?

அந்த மஞ்சள் புடவையோடு சேர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறானே நரேன். அதற்கு மோட்டிவ், வகுப்பறையில் அவனுக்கு நடந்த அவமானம்தான். அரை அடி நீளத்துக்கு பளபளக்கும் பொருளை உடைக்குள் மறைத்து வைத்திருந்தான்.

அந்த கட்டிடம் இருளடைந்து போயிருந்தது. அடிக்கடி இங்கே வந்து செல்பவள் என்பது அவளது இயல்பான நடவடிக்கைகளில் தெரிந்தது. சொந்த வீட்டுக்குள் பிரவேசிப்பவளைபோல விறுவிறுவென நடந்தாள். லேசான படபடப்போடு இவனும் பின் தொடர்ந்தான்.

வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாய் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு ஈ, காக்காய் கூட...

அந்த பழையவீட்டின் வரவேற்பரை முழுக்க செடிகொடிகளால் நிறைந்திருந்தது. நேராகப் போய் ஓர் அறையை திறந்தாள். பூட்டியிருந்த அந்த அறைக்கதவுக்கான சாவி, அவளிடம் இருந்தது என்பதுதான் ஆச்சரியம்.

திரும்பிப் பார்த்து இவனை வரும்படி சைகை செய்தாள். கொஞ்சம் தயக்கமாக உள்ளே நுழைந்தான். ‘பொருள்’ இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

அந்த அறை முதலிரவு அறையை போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. மெழுகுவர்த்தி ஒன்று பாதி எரிந்த நிலையில் மங்கிய மஞ்சள் வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டிருந்தது.

தயக்கத்தை விட்டான். அறைக்குள் நுழைந்தவன் கட்டிலை எட்டி அமர்ந்தான்.

ஒருவிரலை உயர்த்திக் காட்டி ‘ஒரு நிமிஷம்’ என்பதாக சைகை செய்தவள், பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

அவசரமாக உடைக்குள் மறைத்திருந்த ஆயுதத்தை எடுத்து தலையணைக்கு கீழே வைத்தான். அவள் வந்ததுமே கட்டியணைத்து, மெதுவாக கத்தியை எடுத்து, வெண்ணெய் கட்டி மாதிரி இருக்கும் இடுப்பில் ஒரு சொருகு சொருகி, திருகி....

மோட்டிவ்வே இல்லாத பச்சை படுகொலை.

ஆனால்-

மோட்டிவ்வே இல்லாமல் ஒரு கொலை செய்யவேண்டும் என்கிற சிந்தனைதான் இதற்கு மோட்டிவ். அப்படியெனில் அது எப்படி மோட்டிவ் இல்லாத கொலையாகும்?

லாஜிக் இடிக்கிறதே?

திடீர் குழப்பம் அவனைச் சூழ, அவள் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது.

தட்.

மண்டைக்குள் பூச்சி தாறுமாறாய் பறந்தது. அனிச்சையாய் தலையை தொட்டான். கெட்டியாய் ரத்தம் கொழகொழத்தது. முகத்தில் அடர்சிகப்பு வழிய அதிர்ச்சியாய் திரும்பினான்.

அவளது முகத்தில் அடையாளம் காணமுடியாத கோபம். கண்கள் சிவந்திருந்தாள். கையில் நீளமான சுத்தியல். மீண்டும் சுத்தியலை தலைக்கு மேலே தூக்கி, இன்னொரு தட்.

மூளை சிதறுவதற்கு முன்பாக சிந்தித்தான். “என்னை கொல்ல இவளுக்கு என்ன மோட்டிவ்?”

30 ஜூலை, 2015

கனவை நனவாக்குதல்!

அறிவியலாளர்களை கவுரவிக்க இந்திய தேசம் எப்போதுமே தவறியதில்லை. அறிவியல் அறிஞர் ஒருவர் இந்தியாவின் ஜனாதிபதி என்றபோது உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியது. அப்துல்கலாமின் வாழ்க்கை நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் பாதை. தமிழ்நாட்டின் சிறிய ஊரில், ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் ராஷ்டிரபதி பவனில் அமர்ந்து நாட்டையே வழிநடத்த முடியும் என்கிற இந்த வாய்ப்பு வேறு நாடுகளில் அமைவது கடினம்.

இந்த வாய்ப்புக்குப் பின்னால் இருந்த டாக்டர் கலாமின் கடின உழைப்பும், கனவும் அவரை எப்படி சரியான வழியில் நடத்தியது என்பதை ‘எனது பயணம்’ நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். எண்பது வயதைக் கடந்தவர் தன்னுடைய தனித்துவ அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வது என்பது இன்றைய இளைய தலைமுறைக்கு அரிதாகக் கிடைக்கக்கூடிய பொக்கிஷம். ஏராளமான சம்பவங்கள் நிறைந்த நீண்டகால வாழ்வின் அனுபவங்களை நம் மனதுக்கு அப்படியே கடத்தும் நெருக்கமான மொழியமைப்பில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. கூடு விட்டு கூடு பாய்ந்ததைபோல புத்தகத்தை படித்து முடிக்கும்போது, வாசித்த ஒவ்வொருவருமே நம்மை கலாமாக உணர்கிறோம்.

தன் வாழ்வில் கண்டடைந்த மிகப்பெரிய பாடமாக கனவினை சொல்கிறார் கலாம். “ஒருவர் தன் வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் தொடர்ந்து கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும். பிறகு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்” என்று தன் வாழ்வின் வெற்றி ரகசியத்தை சொல்லிக் கொடுக்கிறார்.

இந்தியர் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளும் மகத்தான சாதனைகளை படைத்து பெருவாழ்வு வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலாம், கடைசியாக நூலை முடிக்கும்போது என்ன சொல்கிறார் தெரியுமா?

“கடக்க வேண்டிய தூரம் இன்னும் கணிசமாக இருக்கிறது”

நூல் : எனது பயணம்
எழுதியவர் : ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
தமிழில் : நாகலட்சுமி சண்முகம்
விலை : ரூ. 150/-
பக்கங்கள் : 172
வெளியீடு : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்,
7/32, தரைத்தளம், அன்சாரி சாலை, தார்யாகஞ்ச்,
புதுடெல்லி-110002.
E-mail : sales@manjulindia.com
 Website : www.manjulindia.com



நூலிலிருந்து...

“1998ஆம் ஆண்டில் பொக்ரானில் இந்தியா தனது இரண்டாவது அணுவெடிப் பரிசோதனையை நடத்தியபிறகு, அதன் உருவாக்கத்தில் பங்காற்றியிருந்த எனக்குப் பல்வேறு பட்டப் பெயர்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகும், ஜனாதிபதியாக எனது பதவிக்காலம் முடிந்து பல வருடங்களுக்குப் பிறகும் என்னோடு எப்போதும் தங்கி வந்துள்ள ஓர் அடைமொழி ‘ஏவுகணை மனிதன்’ என்பதுதான். நான் அவ்வாறு அழைக்கப்படும்போது அது எனக்குப் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், ஓர் அறிவியல் மனிதனாக என்னை நான் கருதிக் கொண்டிருக்கையில், அப்பெயர் ஒரு குழந்தையின் சாகசக் கதாநாயகனின் பெயரைப் போல ஒலிக்கிறது”

21 ஜூலை, 2015

பாகுபலி மீது பாலியல் வழக்கு?

பாகுபலி என்னவெல்லாம் அநியாயத்தை அவந்திகாவுக்கு செய்திருக்கிறான் பாருங்கள். அவந்திகா அறியாமலேயே அவளுடைய கைகளில் ஓவியம் வரைகிறான். Intruded her privacy.

பாம்பை ஏவிவிட்டு அவளை சில விநாடிகள் உறையச் செய்கிறான். கத்தி காட்டி மிரட்டுவதை போல பாம்பை காட்டி மிரட்டியிருக்கிறான்.

இச்சையை வெளிப்படுத்தும் நடனம் ஆடுகிறான். அவள் கூந்தலை கலைக்கிறான். உடுத்தியிருந்த ‘போராளிக்கான’ உடையை அவிழ்க்கிறான். ‘பெண்மை’ புலப்படுமளவுக்கு அவளது உடையை செதுக்குகிறான் (அவந்திகா என்ன சிற்பமா?). சாயங்களை சேகரித்து கண்ணுக்கு மை தீட்டுகிறான். உதட்டுக்கு சாயம் பூசுகிறான். அவளை பெண்மை (?) செய்கிறான். அவளை நாணப்படுத்துகிறான். அவனது இறுக்கத்தில் அயர்ந்துப் போகிறாள். உச்சக்கட்டமாக விலங்கை போல ஒரு பெண் பழக்கப்படுத்தப்படுகிறாள்.

நம் அறிவுஜீவிகள் கொஞ்சம் அட்வான்ஸாகதான் சிந்திக்கிறார்கள்.

ஆனானப்பட்ட பல்லாலதேவனையே சமாளித்துவிட்ட பாகுபலியால் நம்மூர் இண்டெலெக்ச்சுவல்களை சமாளிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் நாயகன், நாயகியின் இடுப்பைப் பிடித்து வலுக்கட்டாயமாகதான் இழுக்க வேண்டுமா என்று எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி, என்னுடைய ஒருநாள் இரவு தூக்கத்தை முற்றிலுமாக பறித்துக் கொண்டிருக்கிறது.

‘அவந்திகா, துணிச்சல்மிகு போராளி’ என்று போடப்பட்ட பன்ச்சிலேயே ‘பணால்’. ‘போராளி’ என்கிற வார்த்தையை கேட்டதுமே/வாசித்ததுமே இணையப் போராளிகள் போர்ப்பரணி பாடத் தொடங்கிவிட மாட்டார்களா?

நிச்சயமாக பாலியல் குற்றம்தான். பாகுபலி மீது இ.பி.கோ 375 பாய்வதுதான் நியாயம். முடிந்தால் இந்த ஆபாசமான காம வெளிப்பாட்டை படம் பிடித்த ராஜமவுலி மற்றும் அவரது குழுவினர் மீதும் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம்.

இதோடு நிறுத்திவிடக்கூடாது. ‘சண்டிராணியே எனக்கு கப்பம் கட்டு நீ’ என்று பாடிக்கொண்டே வாளை நீட்டி அச்சுறுத்தி, விஜயசாந்தியை பணியவைத்த சூப்பர் ஸ்டாரில் தொடங்கி ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ ஹரிதாஸ் வரைக்கும் நம் சினிமாவில் நடந்த அத்தனை பாலியல் பலாத்காரங்களையும் விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். குறிப்பாக பெண்ணியவாதிகளுக்கு இந்த கடமை இருக்கிறது. ஓர் அவந்திகாவுக்கு நடந்த அவலம் இனிமேல் இன்னொரு அவந்திகாவுக்கு நடக்கக்கூடாது என்றால், அவந்திகாவை மாதிரியே நாமெல்லாம் போராளிகளாக, ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்களாக (குறைந்தபட்சம் ஃபேஸ்புக்கிலாவது) மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்.

அட்லீஸ்ட் இதுபோல இந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த ஆயிரக்கணக்கான சினிமாக்களில் நடந்த பாலியல் பலாத்காரங்களை, மோட்டுவளையை பார்த்து சிந்தித்து கண்டுபிடித்து நாம் வெளிப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு தற்கொலை மூடில் இருந்த ரேகாவை வலுக்கட்டாயமாக இழுத்து உதட்டோடு உதடு கிஸ் அடித்த கமல்ஹாசனை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று ஒரு ஸ்டேட்டஸாவது போடவேண்டும். அதற்கு குறைந்தபட்சம் முன்னூறு கமெண்டு, மூவாயிரம் ‘லைக்’காவது விழுந்தால்தான் ஆண்மய்யப்பட்ட இந்திய சமூக விழுமியங்களின் மீது நாம் சிறுநீராவது கழித்த அறிவுலகச் செயல்பாட்டினை நிகழ்த்த முடியும்.

எருதினை அடக்கும் காட்சிக்கு கூட கணிப்பொறியில் சித்தரிக்கப்பட்ட காட்சியைதான் காட்டியாக வேண்டும் என்கிற அறம், ஏற்கனவே இந்தியாவில் இருக்கிறது. விலங்குகள் காட்சிகளில் இடம்பெறுமாயின், ‘இந்தப் படத்தில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை’ என்று ஸ்லைடு போட்டு காட்டவேண்டியது அவசியம் என்று இந்திய தணிக்கைத்துறை வலியுறுத்துகிறது.

நிலைமை அப்படியிருக்கையில் விலங்கினைவிட பெண்கள் மட்டமா என்கிற அடிப்படைக்கேள்வி நமக்கு இங்கே எழுகிறது. முதற்கட்டமாக இனிமேல் சினிமாக்களில் இதுபோன்ற பாலியல் பலாத்கார காதல் காட்சிகள் இடம்பெறுமாயின், அவை கணிப்பொறியில் சித்தரிக்கப்பட்ட இமேஜ்களாகதான் இருக்கவேண்டும் என்கிற கோரிக்கையை நோக்கி நம் போராட்டம் துவங்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இடம்பெறக்கூடிய அவ்வாறான காதல் காட்சிகளில் ‘புகை பிடிப்பது புற்றுநோயை வரவழைக்கும்’ என்பதுபோல, ‘பெண்ணை வலியுறுத்தி காதல் செய்வது, இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும்’ என்கிற எச்சரிக்கை திரையின் கீழே பொறிக்கப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு.

இந்த சீரிய சிந்தனையை தூண்டிய கட்டுரை : 'பலாத்கார பாகுபலி'யும் அவிழ்க்கப்பட்ட அவந்திகாவும்!