7 மார்ச், 2016

என்ன சொல்கிறது கூட்டணி வரலாறு?

பலமான கூட்டணியே வெற்றிக்கு அடித்தளம்
என்பதை நிரூபித்துள்ளது 1967 முதல் நடந்த தேர்தல்கள்...
தமிழகத்தில் 1952ல் நடந்த முதல் தேர்தல் மட்டுமே பலமுனை தேர்தலாக அமைந்திருந்தது. சென்னை மாகாணமாக இருந்தபோது சட்டமன்றத்தில் இருந்த இருக்கைகளின் எண்ணிக்கை 375. இதில் 367 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 152 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 131 தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் 62 தொகுதிகளை வென்று பலமான எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. கிஸான் மஸ்தூர் பிரஜா, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, கிரிஷிகார் லோக், சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை இரட்டை எண்ணிக்கையில் வென்றிருந்தன. இந்த தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. ஆட்சியமைக்க போதிய மெஜாரிட்டி இல்லாத நிலையில் ‘ஆட்சியில் பங்கு’ ஆசை காட்டி, சில கட்சிகளை உள்ளே வாரி போட்டுக் கொண்டு, ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. முதல் தேர்தலிலேயே ‘குதிரை பேரம்’ தமிழகத்துக்கு அறிமுகமாகி விட்டது.

1957ல் நடந்த இரண்டாவது தேர்தலில் காங்கிரஸுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை. மொழிவாரிப் பிரிவினையின் காரணமாக சென்னை மாகாணத்தில் இம்முறை 206 இடங்களே இருந்தன. காமராஜர் தலைமையில் தேர்தலை சந்தித்த அந்த கட்சி 204 தொகுதிகளில் போட்டியிட்டு, 151 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிக்கு மொத்தமாகவே 4 எம்.எல்.ஏ.க்கள்தான் இருந்தார்கள். மாநில கட்சி அங்கீகாரம் இல்லாத நிலையில் சுயேச்சையாக போட்டியிட்ட திமுகவினர், 15 இடங்களில் வென்றனர்.

1962 தேர்தல்தான் முதன்முறையாக தமிழகத்தில் நடந்த இருமுனை தேர்தல். அத்தனை தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் 139 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது. இத்தனைக்கும் அக்கட்சியில் இருந்து ராஜாஜி பிரிந்துபோய் சுதந்திரா கட்சியை நிறுவி போட்டியிட்டார். இம்முறை காங்கிரஸுக்கு பலத்த போட்டியை கொடுத்த கட்சி திமுக. 143 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 50 இடங்களை வென்று பலமான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தது.

திமுக முதன்முதலாக ஆட்சியைப் பிடித்த 1967 தேர்தல்தான், இன்றைய கூட்டணி கலாசாரத்துக்கு வித்திட்ட தேர்தல். தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்திருந்த காங்கிரஸை வீழ்த்த புதிய உத்தி ஒன்றினை கைக்கொண்டார் அண்ணா. சுதந்திரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர், ம.பொ.சி.யின் தமிழரசு கழகம், முஸ்லீம்லீக், பிரஜா சோஷலிஸ்ட், பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளை இணைத்து திமுக தலைமையில் மெகா கூட்டணியாக உருவாக்கினார். இந்த ஒற்றுமைக்கு தேர்தல் முடிவுகளில் நல்ல பலன் கிடைத்தது. 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 137 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தது. 232 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 51 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. மேலும் அக்கட்சியின் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், பூவராகன், கக்கன் உள்ளிட்டோர் அவரவர் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவுமளவுக்கு இந்த கூட்டணியின் வீரியம் இருந்தது.

1971ல் நடந்த தேர்தலை ஒருமுனை தேர்தல் என்றே சொல்லலாம். 1962ல் காமராஜர் பெற்ற வெற்றியை போன்றே கலைஞரும் வென்றார். காங்கிரஸ் பிளவுபட்ட நிலையில் ஸ்தாபன காங்கிரஸ் என்கிற பெயரில் காமராஜர் இயங்கினார். முந்தைய தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த சுதந்திரா கட்சி அவரை ஆதரித்தது. திமுக கூட்டணியில் இம்முறை சுதந்திராவுக்கு பதிலாக இந்திரா காங்கிரஸ் இணைந்தது. எனினும் தொகுதி எதுவும் அக்கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிட, அந்த இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வந்து சேர்ந்தது. இம்முறையும் திமுக கூட்டணியே அபார வெற்றியை பெற்றது. தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே மகத்தான சாதனையாக ஒரு தனிக்கட்சி வென்ற அதிக இடங்கள் (184 எம்.எல்.ஏ.க்கள்) என்கிற இன்றுவரை உடைக்க முடியாத சாதனையை திமுக படைத்தது. எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்தாபன காங்கிரஸ் - சுதந்திரா கூட்டணிக்கு 19 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்த 1977 தேர்தல் நான்கு முனை தேர்தலாக அமைந்தது. இத்தேர்தலில் நெருக்கடி நிலையை எதிர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நெருக்கடி நிலையை ஆதரித்த அதிமுகவோடு அமைத்த கூட்டணிதான் தமிழகத்தின் முதல் பச்சை சந்தர்ப்பவாத கூட்டணி என்று அரசியல் ஆய்வாளர்களால் இன்றுவரை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ‘சர்க்காரியா கமிஷன், திமுக தலைவர்களை ஊழல் புகார்களுக்காக விசாரித்துக் கொண்டிருப்பதால் திமுக கூட்டணியில் இருக்க முடியாது’ என்கிற சப்பைக் கட்டை மா.கம்யூ தலைவர்கள் முன்வைத்தார்கள். ஆனால் இந்த தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதே திமுகவோடுதான் கூட்டணி அமைத்து மா.கம்யூ போட்டியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சர்க்காரியா கமிஷன், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே விசாரணை நடத்திக் கொண்டுதான் இருந்தது. இந்த தேர்தலில் கிட்டத்தட்ட தனித்தே போட்டியிட்டது திமுக. காங்கிரஸ் –- இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணி, அதிமுக -– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு அணி, மத்தியில் ஆட்சியிலிருந்த ஜனதா கட்சி தனி என்று நடந்த நான்குமுனை போட்டியில் அதிமுக 130 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது.

1980 தேர்தலில் திமுக - இ.காங்கிரஸ் கூட்டணி உருவானது. காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், திமுக 112 தொகுதிகளிலும் ஏனைய சிறு கட்சிகளுக்கு மீதி தொகுதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இக்கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தலுக்கு பிறகு எந்த கட்சி ஆட்சி, யார் முதல்வர் என்பதை தீர்மானிப்போம் என்று கூறப்பட்ட தெளிவில்லாத அறிவிப்புக்கு வாக்காளர்களிடையே வரவேற்பில்லை. மாறாக அதிமுகவோ இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், குமரி ஆனந்தனின் காமராஜர் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ், பழ.நெடுமாறனின் காமராஜர் காங்கிரஸ் என்று பலமான கட்சிகளை கூட்டணிக்கு வைத்திருந்தாலும் 168 தொகுதிகளில் போட்டியிட்டது. ஜனதா கட்சி இந்த தேர்தலிலும் தனித்து களம் கண்டதால் மும்முனை போட்டியே நடந்தது. அதிமுக கூட்டணியில் யார் முதல்வர் என்கிற தெளிவு இருந்ததால், அக்கூட்டணிக்கே வெற்றி கிடைத்தது. 129 தொகுதிகளில் அக்கட்சி வென்றது.

எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி அமெரிக்காவில் இருந்தபடியே 1984 தேர்தலை சந்தித்தார். இடைப்பட்ட காலத்தில் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸோடு, மாநில ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு உறவு மலர்ந்திருந்தது. அதிமுக –- இ.காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணியாக தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணியை எதிர்த்து திமுக, மா.கம்யூ, இ.கம்யூ, ஜனதா, தமிழ்நாடு பார்வர்ட் பிளாக், காமராஜ் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை பலமாக அணி திரண்டன. இருப்பினும் இந்திரா காந்தி கொலை, எம்.ஜி.ஆர் உடல்நலமின்மை போன்றவற்றால் ஏற்பட்ட அனுதாப அலைக்கு முன்பு திமுக கூட்டணியால் சமாளிக்க முடியவில்லை. திமுக - அதிமுக கட்சிகளுக்கு மாற்று என்று முதன்முறையாக ‘ஊழல் ஒழிப்புக் கூட்டணி’, அதிமுகவில் இருந்து பிரிந்திருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் இந்த தேர்தலில் களமிறங்கி காணாமல் போனது. இதே காரணத்தை சொல்லி இப்போதைய தேர்தலில் களமிறங்கி இருக்கும் மக்கள்நல கூட்டணிக்கு இதுவே முதல் முன்னுதாரணம் என்று சொல்லலாம்.

1989 தேர்தலில் திமுக, மா.கம்யூ, ஜனதாதளம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு அணி. இரண்டாக அதிமுக பிளவு பட்டிருந்தது. ஜெயலலிதா பிரிவு அதிமுகவோடு இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி. வி.என்.ஜானகி பிரிவு அதிமுகவோடு, சிவாஜிகணேசன் ஆரம்பித்த கட்சியான தமிழக முன்னேற்ற முன்னணி கூட்டணி. காங்கிரஸ் இம்முறை இரு திராவிடக் கட்சிகளோடு இணையாமல் தனி அணியாக நின்றது. அவ்வகையில் நான்கு முனை போட்டியாக நடந்த இத்தேர்தலில் 146 இடங்களில் வென்று திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

1991 தேர்தலில் அதிமுக மீண்டும் ஒன்றுபட்டது. அக்கட்சியோடு கூட்டணி வைத்த காங்கிரஸின் தலைவர் ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் குண்டுவைத்து கொல்லப்பட்டார். திமுக கூட்டணியில் மா.கம்யூ, இ.கம்யூ, பார்வர்ட் பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எஸ்.திருநாவுக்கரசின் அண்ணா புரட்சித்தலைவர் திமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்து சந்தித்த முதல் தேர்தல் இதுதான். ராஜீவ் கொலை அனுதாப அலை வீசியதால் 168 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, 164 தொகுதிகளில் வென்று எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளை வாரி சுருட்டியது.

1996ல் வித்தியாசமான களம். அதிமுக பலவந்தமாக காங்கிரஸோடு கூட்டணி வைக்க முயல, அக்கட்சி உடைந்து தமிழ்மாநில காங்கிரஸ் என்கிற புதிய கட்சி மூப்பனார் தலைமையில் உதயமானது. இக்கட்சி திமுக கூட்டணியில் இணைந்தது. திமுக, தமாகா, இ.கம்யூ, பார்வர்ட் பிளாக் ஆகியவை பலமான கூட்டணியை அமைத்தன. திமுகவில் இருந்து பிரிந்து வைகோ மதிமுகவை தொடங்கியிருந்தார். திமுக - அதிமுகவுக்கு மாற்று என்று முழங்கிய அவரோடு மா.கம்யூ கூட்டணி கண்டது. இவர்களோடு ஜனதாதளமும் சேர்ந்துக் கொண்டது. முதலில் திமுக கூட்டணியோடு, பிற்பாடு மதிமுக கூட்டணியோடு பேசி உடன்பாடு காண முடியாத பாமக தனித்து நின்றது. நான்கு முனை தேர்தலாக நடந்ததில் எதிர்க்கட்சிகள் அத்தனையையும் முறியடித்து பிரும்மாண்ட வெற்றியை ருசித்தது திமுக. அக்கட்சி போட்டியிட்ட 182 இடங்களில் 173 தொகுதிகளை வென்றது. ஜெயலலிதா, வைகோ போன்ற தலைவர்கள், அப்போது அதிமுக அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளிலேயே தோல்வியடைந்தனர். பாஜக, தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக தன்னுடைய கணக்கை துவக்கிய தேர்தல் இதுதான். மதிமுகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுயேச்சையாக வென்றார். பிற்பாடு ‘புதிய தமிழகம்’ கட்சியை உருவாக்கினார்.

2001ல் நடந்த முந்தைய தேர்தலை போன்ற பலமான கூட்டணியை திமுகவால் ஏற்படுத்த முடியவில்லை. மதிமுக கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டு தனித்துப் போய் நின்றது. பாஜக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, தமாகாவில் இருந்து பிரிந்து புதுக்கட்சி கண்ட ப.சிதம்பரத்தின் தமாகா ஜனநாயகப் பேரவை, கு.ப.கிருஷ்ணனின் தமிழர் பூமி என்று இக்கூட்டணி வலுவில்லாததாக அமைந்தது. மாறாக அதிமுகவோ காங்கிரஸ், தமாகா, பாமக, இ.கம்யூ, மா.கம்யூ என்று பலமான கூட்டணியை அமைத்து வென்றது. 141 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட அதிமுக, 132 இடங்களில் வென்றது.

2006ல் முதன்முறையாக தேமுதிக தனித்து களமிறங்கியது. இரு கட்சிகளுக்கும் மாற்று என்று விஜயகாந்த் முழங்கினார். திமுக, காங்கிரஸ், பாமக, இ.கம்யூ, மா.கம்யூ என்று பலம் வாய்ந்த கூட்டணி. இந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, கடைசி நேரத்தில் போயஸ் தோட்டத்துக்கு போய் பொக்கே கொடுத்து அதிமுக கூட்டணியில் இணைந்தது. விடுதலை சிறுத்தைகளும் அதிமுக அணியில் சேர்ந்தார்கள். பாஜக தனித்து தேர்தலை சந்தித்தது. கடுமையான பொட்டியில் 132 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட திமுக 96 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. 1952க்கு பிறகு தமிழகத்தில் மெஜாரிட்டி இல்லாத ஆட்சியை கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு அமைத்தது.

2011ல் அதிமுகவோடு தேமுதிக, மா.கம்யூ, இ.கம்யூ கட்சிகள் கூட்டணி அமைத்தன. கடைசிநேர தொகுதிப் பங்கீடு பிரச்சினையில் ஒற்றை இலக்க சீட்டுகள்தான் கொடுக்கிறார்கள் என வெறுத்துப்போய் இக்கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறினாலும், அதிமுகவுக்கு சங்கடம் கொடுக்கக்கூடாது என்று தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தது. திமுகவோடு காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன. பாஜக தனித்துவிடப்பட்டது. அதிமுக - திமுக கூட்டணி சமபலத்தோடு மோதுவது போன்ற தோற்றம் தெரிந்தாலும், தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் அதிமுகவை மீண்டும் அரியணையில் ஏற்றியது.

இதோ 2016 தேர்தல் வந்துவிட்டது. திமுக, காங்கிரஸ், முஸ்லீம்லீக் கூட்டணி உறுதிப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் சில கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று தெரிகிறது. கண்ணுக்கு தெரிந்த தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்று இதுவரை முழங்கிக் கொண்டிருந்த ஜெயலலிதா, அதிமுக கூட்டணிக்கு தயார் என்று சமீபமாக சிக்னல் காட்டியும் பலமான கட்சிகள் எதுவும் அவரோடு சேர விருப்பமாக இல்லை. முந்தைய தேர்தல்களில் திமுக - அதிமுகவோடு மாறி மாறி கூட்டணி அமைத்து எப்படியோ சட்டமன்றத்தில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த கட்சிகள், இப்போது இரு கட்சிகளுக்கும் மாற்று என்று களமிறங்கி இருக்கின்றன. இரு கட்சிகளுடனான கடந்தகால தேர்தல் உறவுகளே, அவர்களுக்கு மக்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்கவில்லை.

1967ல் தொடங்கி பார்த்தோமானால், தேர்தலில் பல பிரச்சினைகள் எதிரொலித்தாலும் கூட பலமான கூட்டணிதான் ஆட்சியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது என்பது வரலாறு. இந்த தேர்தலிலும் அதே போக்கு தொடருமா என்பது இன்னும் இரண்டு மாதங்களில் தெரிந்துவிடும்.

(நன்றி : தினகரன்)

3 மார்ச், 2016

மிஸ்டர் ராங்!

தமிழக அரசியல் வரலாற்றில் சரியான சந்தர்ப்பத்தில் தவறான முடிவுகளை மட்டுமே எடுக்கக் கூடியவர் என்று மற்ற கட்சியினரால் தொடர்ச்சியாக கிண்டலடிக்கப்படுபவர் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

1993ல் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்கிற கட்சியை உருவாக்கினார். 1996ல் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதாதளம் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்தித்தது. வைகோவே கூட விளாத்திகுளம் தொகுதியில் தோல்வி அடைந்தார். சிவகாசி பாராளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்ட அவர் அங்கும் மூன்றாவது இடம் பெற்று படுதோல்வி அடைந்தார். 177 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவால் ஒரே ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. “காட்டாற்று வெள்ளத்தில் சந்தனமரங்களும் அடித்துச் செல்வது இயல்புதான்” என்று தன்னுடைய படுதோல்வியை இலக்கியத்தரமாக விமர்சித்து ஆறுதலடைந்தார்.

96 தேர்தலில் மிகக்கடுமையாக அதிமுகவையும், ஜெயலலிதாவையும் விமர்சித்த வைகோ, அடுத்த இரண்டே ஆண்டுகளில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி கண்டார். 1998 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “அதிமுகவும், மதிமுகவும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்” என்று அவர் உருகியதை கண்டு மதிமுக தொண்டர்களே முகம் சுளித்தார்கள்.

ஜெயலலிதாவால் ஓராண்டிலேயே வாஜ்பாய் அரசு கவிழ்ந்துவிட 1999ல் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல். இம்முறை, எந்த கட்சியிலிருந்து பிரிந்தாரோ அதே திமுகவுடன் மதிமுக கூட்டணி. இந்த முடிவு கட்சிசாரா வாக்காளர்கள் மத்தியில் மதிமுகவின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக குலைத்தது. கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று முழங்கிய வைகோ அடுத்தடுத்து அதே கட்சிகளோடு வெற்றிக்காக கூட்டணி அமைத்தது அவரது தலைமைப் பண்பையே கேலிக்குரியதாகவும் ஆக்கியது.

அடுத்து வந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் வைகோ எடுத்த முடிவு அவரது அரசியல் தற்கொலை முயற்சியாக பார்க்கப்படுகிறது. இரண்டு சீட்டுக்காக சண்டை போட்டு திமுக கூட்டணியிலிருந்து விலகிப்போய் தனித்து நின்றது மதிமுக. மீண்டும் திமுக, அதிமுக இரு கட்சிகளையும் மிக கடுமையாக விமர்சித்த வைகோ, இனி எந்த காலத்திலும் இந்த கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்றார். 211 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, டெபாசிட்டையே விரல்விட்டு எண்ணக்கூடிய தொகுதிகளில்தான் திரும்பப் பெற்றது.

1998ல் தேசியளவில் பாஜகவோடு மதிமுகவுக்கு ஏற்பட்ட கூட்டணிக்கு வைகோ மிகவும் விசுவாசமாக இருந்தார். பாஜக அரசு பொடா சட்டம் கொண்டுவந்தபோது அதை ஆதரிக்கவும் செய்தார். 2001ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக, பாஜகவுக்காக வைகோ ஆதரித்த அதே பொடா சட்டத்தை பயன்படுத்தி அவரையே சிறையில் தள்ளியது. அந்த சந்தர்ப்பத்தில் வைகோவை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக கோரியது. அக்கட்சியின் தலைவர் கருணாநிதியே, வேலூர் சிறையில் இருந்த வைகோவை நேரில் இருமுறை பார்த்து ஆறுதலும் சொன்னார்.

இதையடுத்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, திமுக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணிக்கு 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு வந்தது மதிமுக. “தந்தையைப் பிரிந்து தனிக்குடித்தனம் போன தனயன் திரும்பி வந்திருக்கிறேன்” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார் வைகோ. ஒரு வார இதழுக்கு அவர் கொடுத்த பேட்டியில், “என் வாழ்வில் நான் தலைவராக ஏற்றுக்கொண்ட ஒரே மனிதர் கலைஞர்தான். அவரால்தான் வார்க்கப்பட்டேன். வளர்க்கப்பட்டேன். காலம் எங்களை காயப்படுத்தியது. அதே காலம்தான் எங்கள் காயங்களுக்கு களிம்பும் தடவியது. சிறையிலிருந்த என்னைப் பார்க்க அன்பு மேலோங்க வந்தார் தலைவர் கலைஞர். அவர் என்னை வந்துப் பார்த்ததால் என் மனச்சுமை குறைந்துப் போனது. அரசியலில் எதுவும் நேரலாம். ஆனால் இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்க மாட்டேன். காலம் எனக்குக் கற்றுக் கொடுத்த பக்குவம் இது” என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் வந்தபோது வைகோவின் வழக்கப்படி அப்படியே ‘யூ டர்ன்’ அடித்தார். கேட்ட தொகுதிகளை திமுக தரவில்லை என்றுகூறி, அதிமுக கூட்டணிக்கு தாவினார். சிறையில் இருந்து வெளியே வந்தபோது, “பாசிச வெறி பிடித்த ஜெயலலிதா ஆட்சியை தூக்கியெறிவோம்” என்று அவர் முழங்கிய கோஷத்துக்கு மாறாக, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அவர் அமைத்த கூட்டணி, அரசியலில் வைகோ மீதான நம்பகத்தன்மையை ஒட்டுமொத்தமாகவே குலைத்தது. அவரை பொடாவில் உள்ளே வைத்து சித்திரவதை செய்த ஜெயலலிதாவை, ‘அன்பு சகோதரி’ என்று விளித்ததை, வைகோவின் தாயாரே எதிர்த்தார் என்று அப்போது பத்திரிகைகள் எழுதின. 2006ல் வைகோ இடம்பெற்றிருந்த அதிமுக கூட்டணி தோல்வியடைந்து, திமுக ஆட்சிக்கு வந்தது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன்முறையாக தான் இடம்பெற்ற கூட்டணியிலேயே இரண்டாம் முறையாகவும் வைகோ தொடர்ந்தார். ஆனால், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வைகோவே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அடுத்து வந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் கேட்ட தொகுதிகளை அதிமுக கொடுக்கவில்லை என்றுகூறி வித்தியாசமான ஒரு முடிவுக்கு வந்தார் வைகோ. “ஜெயலலிதா துரோகம் செய்துவிட்டார்” என்று கூறிய அவர், தேர்தலிலும் போட்டியிடாமல், அதிமுகவுக்கு எதிர்க்கட்சியான திமுகவுக்கு ஆதரவளிக்காமல் தேர்தலையே ஒட்டுமொத்தமாக புறக்கணித்தார்.

அடுத்துவந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் பத்தாண்டுகள் கழித்து மீண்டும் பாஜகவோடு சேர்ந்தார். நாடு முழுக்க மோடி அலை வீசியபோதும் கூட, ஏழு இடங்களில் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட வெல்ல முடியவில்லை. வழக்கம்போல விருதுநகரில் வைகோவே தோல்வியை தழுவினார்.

இப்போது 2016 தேர்தலில் இதுவரை தான் கூட்டணி கண்ட திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக அத்தனை கட்சிகளும் மாற்று இயக்கம் என்றுகூறி ‘மக்கள் நல கூட்டணி’யில் இணைந்திருக்கிறார். பெரிய கட்சிகளின் கூட்டணி சுனாமியில் மக்கள் நல கூட்டணி தேர்தல் வரை தாங்குமா என்கிற சந்தேகத்தை அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பி வருகிறார்கள். ஒருவேளை மக்கள் நல கூட்டணி சிதையுமேயானால், வழக்கம்போல தனித்துவிடப் படுவது வைகோவாகதான் இருப்பார்.

கடந்தகால வைகோவின் செயல்பாடுகளால் வெறுத்துப்போய் மதிமுகவில் இருந்து மீண்டும் தாய்க்கழகமான திமுகவுக்கே அவரோடு வந்தவர்கள் போய்விட்டார்கள். என்ன செய்வது? வைகோ உப்பு விற்க போனால் மழை அடிக்கிறது, மாவு விற்க போனால் காற்றடிக்கிறது. இந்த அளவுக்கு அதிர்ஷ்டமே கொஞ்சமும் இல்லாத தலைவர் இந்திய அரசியலிலேயே வேறு யாரும் இல்லை என்று கிண்டலாக சமூகவலைத் தளங்களில் இவரை விமர்சிக்கிறார்கள் நெட்டிஸன்கள்.

(நன்றி : தினகரன் தேர்தல் களம்)

26 பிப்ரவரி, 2016

என்னப்பா இப்படி பின்னுறீங்களேப்பா...

வெகுஜன மனநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் திமுகவுக்கு நிகர் திமுகதான்.

1950களின் மத்தியில் அக்கட்சி தேர்தல் பாதைக்கு திரும்பியபோதே, மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியிருந்த சினிமாவை நன்கு பயன்படுத்திக் கொண்டது. அக்கட்சியின் நிறுவனர் அண்ணாவில் தொடங்கி, இளம் தலைவர்களாக உருவெடுத்துக் கொண்டிருந்த கருணாநிதி, கண்ணதாசன் போன்றவர்கள் படங்களின் வசனங்களிலும், பாடல்களிலும் மறைமுகமாக திமுகவின் கருத்துகளை மக்களிடையே பிரபலப்படுத்தினர்.

அக்கட்சி சார்பு நடிகர்களாக இருந்த எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர் போன்றவர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் திமுக அடையாளங்களை காட்ட தவறியதில்லை.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எழுத்தறிவு பரவலாக கிடைக்கத் தொடங்கிய காலத்தில் ஏராளமான பத்திரிகைகள் நடத்தியும், பிரசுரங்கள் வெளியிட்டும் தங்கள் கொள்கைகளை பிரசாரம் செய்தார்கள். பிற்பாடு தொலைக்காட்சிக்கு மக்கள் மத்தியில் மவுசு ஏற்பட்டபோதும் அதையும் தனக்கு சாதகமான ஊடகமாக மாற்றிக்கொள்ளவும் திமுக தவறவில்லை.

இதுபோன்ற மக்கள் தொடர்பு பணிகள் ஏற்படுத்திய தாக்கத்தை தேர்தல் நேரத்தில் விளம்பரங்கள் மூலமாக தங்களுக்கு ஆதரவான அலையாக மாற்றுவது திமுக பாணி.

அரசியல் மேடைகளில் நல்ல தமிழை கொண்டு வந்த சாதனைக்கு சொந்தக்காரர்களான திமுகவினர், தேர்தல் விளம்பரங்களிலும் ‘நச்’சென்று நடுமண்டைக்கு ஏறும் விதமாகவும் வண்ணமயமான வாசகங்களை உருவாக்குவதில் வல்லவர்கள்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்பதில் தொடங்கி, ‘தொடரட்டும் இந்த பொற்காலம்’ வரையிலுமான அவர்களது விளம்பரத் தொடர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பிரபலம்.

‘நாடு நலம்பெற.. நல்லாட்சி மலர..’ என்கிற ஒருவரி வாசகமே 89ல் திமுகவுக்கு பெருவாரியான வரவேற்பை மக்களிடையே பெற்றுத் தந்து, அக்கட்சியின் பதிமூன்று ஆண்டுகால வனவாசத்தை முடிவுக்கு கொண்டுவந்தது என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.

‘ஊழல் பெருச்சாளிகளுக்கா உங்கள் ஓட்டு?’ என்கிற 96 தேர்தல் வாசகம், ஜெயலலிதாவை அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே மண்ணை கவ்வ வைத்தது. ‘சசிகலாபுரமா சமத்துவபுரமா?’ என்றெல்லாம் திமுக விளம்பரங்கள் மக்களை நோக்கி கேட்ட கேள்வி போயஸ் தோட்டத்தை நடுநடுங்க வைத்தது.

பொதுவாக இதுபோன்ற விளம்பரங்களில் திமுக இரண்டு வழிமுறைகளையே பின்பற்றுகிறது.

அக்கட்சி ஆட்சியிலிருந்து சந்திக்கும் தேர்தல்களின் போது தன்னுடைய சாதனைகளை முன்வைத்து விளம்பரங்கள் செய்யும்.

எதிர்க்கட்சியாக இருந்து தேர்தலை சந்திக்கும்போது, ஆளுங்கட்சியின் தவறுகளை பாமர மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் எளிமையாக அம்பலப்படுத்தும்.

இந்த மரபு, விளம்பரங்களுக்கு மட்டுமல்ல. அக்கட்சியின் பிரசார மேடைகளுக்கும் பொருந்தும்.

மற்ற சில்லறை விஷயங்களில் கவனத்தை சிதறவிடாமல், இந்த இரண்டு உத்திகளையே தொடர்ச்சியாக தேவைக்கேற்ப பயன்படுத்துவதால்தான் உலகிலேயே அறுபது ஆண்டுகளை கடந்தும் உயிரோட்டமாக இருக்கும் ஒரே பிராந்திய இயக்கமாக திமுக இருக்கிறது.

எண்பது ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்துப் பத்திரிகையில் தொடங்கிய திமுக தலைவர் கருணாநிதியின் ஊடகப்பணி, இன்றைய ஃபேஸ்புக் காலம் வரை ஏராளமான வடிவங்களை கடந்து வளர்ந்திருக்கிறது. கருணாநிதி ஒவ்வொரு முறை அப்டேட் ஆகும்போதும் கூடவே அவரது கட்சியும் தன்னை டெக்னாலஜிக்கு ஏற்ப அப்டேட் செய்துக் கொள்கிறது.

இதற்கு உதாரணம்தான் திமுக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து வெளியிட்டு வரும் பரபரப்பான விளம்பரங்கள்.

திமுகவின் பொருளாளர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களில் தமிழகம் எங்கும் 234 தொகுதிகளிலும் நடத்திய ‘நமக்கு நாமே’ பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அந்த பயணத்தின் போது அவர் ஒவ்வொரு ஊரிலும் முழங்கிய வாசகம் ‘முடியட்டும் விடியட்டும்’. அதிமுக ஆட்சி முடியட்டும், திமுக ஆட்சி விடியட்டும் என்கிற பொருளில் கூறப்பட்ட இந்த வாசகத்தின் தொடர்ச்சியாக சமீபநாட்களாக ஊடகங்களில் பளிச்சிடும் விளம்பரங்கள், மக்களிடையே பேசப்படும் விவாதமாக உருவெடுத்திருக்கிறது. தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரத்தை மையப்படுத்தி சிறப்பு விவாதம் நடத்தும் அளவுக்கு வெளியான முதல் நாளே பூகம்பத்தை உருவாக்கியிருக்கிறது.

விளம்பரத்துறையில் teaser ad என கூறப்படும் சீண்டல் விளம்பரங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. திமுகவின் சமீப விளம்பரங்களும் ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா?’ என்கிற புகழ்பெற்ற வாசகத்தை தாங்கி வருவது அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறது.

ஆளும் அதிமுக, அரசு செலவிலேயே நலத்திட்டங்கள் அறிவிப்புக்கான விளம்பரங்கள் என்கிற சாக்கில் பல கோடி ரூபாய்க்கு தேர்தல் பிரசார விளம்பரங்களாக தந்துவரும் நிலையில், அதை எதிர்க்கட்சியான திமுக எதிர்கொண்டிருக்கும் இந்த நூதன பாணி இந்தியாவெங்கும் பேசப்படும் பொருளாகி உள்ளது.

கடந்த 23ஆம் தேதி இந்த விளம்பரத் தொடரின் முதல் விளம்பரம் வெளியிடப்பட்ட அன்றே, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் 6 லட்சம் முறை இந்த விளம்பரம் விவாதிக்கப்பட்டு வைரலாக மாறியது. இன்றும் பரவி வருகிறது. போலவே ஃபேஸ்புக், கூகிள் பிளஸ் போன்ற தளங்களிலும் இப்போது திமுக விளம்பரங்கள் குறித்துதான் பேச்சு. அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரம் ஒன்று சமூகவலைத்தள ஊடகங்களில் இந்தளவுக்கு முதன்மையான பேசுபொருளாக மாறியிருப்பது இதுவே முதன்முறை.

வருடாவருடம் அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று விதவிதமாக போஸ்டர் ஒட்டி, விளம்பரங்கள் கொடுத்து அசத்துவார்கள்.

இந்த ஆண்டு அதிமுகவினரின் அந்த வழக்கமான கோலாகலம் பிசுபிசுத்துப் போனதற்கு திமுகவின் இந்த புதிய விளம்பரத் தொடரே காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஏற்கனவே இணையதளங்களில் செயல்படும் திமுக ஆதரவாளர்களுக்கு, அக்கட்சி பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வரும் நிலையில் இந்த புதிய ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா’ வைரல் அவர்களை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. இதே விளம்பர வாசகங்களை கொஞ்சம் முன்னே பின்னே மாற்றி, அதிமுக அரசை வெறுப்பேற்றி மீம்ஸ் உருவாக்கி வருகிறார்கள்.

பாரம்பரியமான அச்சு ஊடக விளம்பரங்களில் திமுக கலக்கினாலும், இக்கால இளைஞர்களை ஈர்க்கும் டிஜிட்டல் ஊடகங்களிலும் முழு முனைப்பாக பிரசாரம் செய்து வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் தொடங்கி கட்சியின் ஊராட்சி கிளை நிர்வாகிகள் வரை அத்தனை பேரும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள் (இன்னமும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக சமூகவலைத்தளங்களுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

இதற்காக தேர்தல் வரை திமுக 24 X 7 மணி நேரமும் உழைக்கக்கூடியவர்களை நியமித்திருக்கிறது. தொழிற்முறையிலான சில ஏஜென்ஸிகளையும் ஒப்பந்தம் செய்திருக்கிறது என்று தெரிகிறது.

அந்தவகையில் திமுக தலைவர் போன் மூலம் பிரசாரம் செய்யும் ‘மிஸ்ட் கால்’ முறை பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. இதுவரை முப்பது லட்சம் பேர், மிஸ்ட்கால் முறையில் கருணாநிதியின் குரலை ஆர்வத்தோடு கேட்டிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட அளவிலான திமுகவினர், மாவட்டம் தோறும் பிரத்யேக வாட்ஸப் குழுமங்களை உருவாக்கி அதில் அதிமுக அரசின் சொதப்பல்களை பிரசாரம் செய்யும் பணியும் ஜரூராக நடந்து வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, திமுகவால் 2016 தேர்தல் கலர்ஃபுல்லாக களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இதற்காக திமுக நிறைய செலவழித்திருப்பதாக ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. “இந்த விளம்பரம் மக்களிடையே ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை ஒப்பிட்டால், திமுக செலவழித்திருக்கும் தொகை மிக சொற்பமே” என்று JWT என்கிற விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த விளம்பர ஆய்வாளர் சொல்கிறார்.

திமுகவின் இந்த விளம்பர சுனாமியை அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்கிற ஆவல் அனைத்து மட்டங்களிலும் உருவாகி இருக்கிறது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் நேரடி போட்டி என்கிற மனப்பான்மை உறுதியாக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள்நல கூட்டணி, பாமக போன்ற மாற்று அணிகளின் பிரசாரம் சுத்தமாக கலகலத்துப் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் சாதகங்களை சொல்லி ஓட்டு கேட்காமல், அதிமுகவின் பாதகங்களை மட்டுமே சுட்டிக் காட்டுவது தார்மீகமான விளம்பரமுறைதானா என்றொரு கேள்வியை சமூகவலைதளங்களில் சிலர் எழுப்பி வருகின்றனர்.

“நாங்க இப்போதைக்கு ஒட்டியிருக்கிறது போஸ்டர்தான். அதுக்குள்ளே விமர்சனம் எழுதிட்டா எப்படி? இன்னும் டீசர் வரணும். டிரைலர் வரணும். ஆடியோ ரிலீஸ் அது இதுன்னு நிறைய இருக்கு. அதுக்கப்புறம்தான் படம். முதல்லே படம் ரிலீஸ் ஆகட்டும். நிச்சயமா பட்டையைக் கிளப்பும். அதைப் பார்த்துட்டு இந்த தார்மீகம், அறம் பற்றியெல்லாம் எழுதுங்க. விமர்சனங்களை வரவேற்கிறோம்” என்று ஜாலியாக இதற்கு பதில் சொல்லுகிறார் திமுக இளைஞரணி பிரமுகர் ஒருவர்.

(இந்த கட்டுரையின் எடிட் செய்யப்பட்ட வடிவம் இன்றைய ‘தினகரன்’ நாளிதழில் பிரசுரமாகியிருக்கிறது)

24 பிப்ரவரி, 2016

நூத்தி பத்து... அம்மா.. அம்மா...!

அதிமுகவினரின் அம்மாவுக்கு பிறந்தநாள் இன்று. காவடி தூக்குவது, பால்குடம் சுமப்பது, தீச்சட்டி ஏந்துவது, வேப்பிலை ஆடை உடுத்துவது, நாக்கில் வேல் குத்திக் கொள்வது, நெருப்பு மிதிப்பது, அங்கபிரதட்சணம் செய்வது என்று ஆயிரத்தெட்டு பகுத்தறிவு வழிமுறைகளில் இந்நன்னாள் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இருந்தாலும் தமிழனுக்கு கொண்டாட்டம் என்றால் தமிழ் கலாசார செயல்பாடாக பாரம்பரியமாக நடைபெறுவது பட்டிமன்றம்தான். அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பயா டிவி’யில் நடைபெறும் கற்பனை காமெடி பட்டிமன்றம் வாசகர்களுக்காக லைவ்வாக...
பட்டிமன்றத் தலைப்பு, ‘டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியின் சாதனையாக விஞ்சி நிற்பது தமிழகமெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களா? அல்லது உலகமே வியந்து போற்றும் நூத்திப்பத்து அறிவிப்புகளா?’

நடுவராக சபாநாயகர் தனபால். ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், சரத்குமார் ஆகியோர் வாதிடுகிறார்கள்.

தனபால் : அம்மா என்றாலே சாதனைதான். அம்மா என்றாலும் மூன்றெழுத்து. சாதனை என்றாலும் மூன்றெழுத்து (பலத்த கைத்தட்டல்). இருந்தாலும் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் ஐ.நா.சபையே வியக்கும் வண்ணம் அவரது சாதனைகள் ஸ்டிக்கராக உலகம் முழுக்க ஒட்டப்பட்டிருக்கின்றன. அதிக ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்சி என்று கின்னஸ் புத்தகமே பாராட்டுகிறது. அதுபோல அமெரிக்க அதிபர் மாளிகையிலே கூட அம்மாவின் நூத்திப் பத்து அறிவிப்புகளை பிட்டு அடித்து அதே மாதிரியான அறிவிப்புகளை ஒபாமா வெளியிட ஆலோசனைகள் நடைபெறுகின்றன. இப்படி பிரபஞ்சமே பாராட்டும் புரட்சித்தலைவி அவர்களின் முத்தாய்ப்பான இந்த இரண்டு சாதனைகளில் எது பெரிய சாதனை என்று வாதிட நம் பேச்சாளர்கள் துப்பாக்கியிலிருந்து பாயும் தோட்டா கணக்காக தயாராக இருக்கிறார்கள்.

முட்டையும் முட்டையும் மோதிக்கொண்டால் ஆஃப் பாயில். மொட்டையும் மொட்டையும் மோதிக்கொண்டால்? இவர்கள் முட்டையா அல்லது திருப்பதி மொட்டையா என்பது கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.

(பலமான கைத்தட்டல்)

சரத்குமார் பேசவருகிறார். பின்னணியில் ‘நாட்டாமை பாதம் பட்டா...’ பாடல் ஒலிக்கிறது.

சரத்குமார் : மாண்புமிகு நடுவர் அவர்களே. நான் ஸ்டிக்கர் அல்ல. கருவேப்பிலை. எனவே நூத்தி பத்துக்காக பேசுகிறேன். அகில இந்திய சமத்துவக் கட்சி, அதிமுகவுக்காக அதிமுகவினரை விட அதிகம் குனிந்த கட்சி. அப்படியிருக்க ஆட்சியின் முடிவில் எங்களுக்கு தரப்பட்டிருக்கும் பரிசு 110 அல்ல 111 (மூன்று விரல்களை நாமம் போல போட்டு காட்டுகிறார்) என்பதை நடுவருக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஆகவே 110 அறிவிப்பில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு ரெண்டு சீட்டு கொடுக்கப்படுமேயானால்...”

தனபால் : வரம்பு மீறி பேசுகிறீர்கள். உங்களுக்கு பேசக் கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. உட்காருங்கள்.

வளர்மதி : சரத்குமார் எங்களைவிட புரட்சித்தலைவி அம்மாவுக்கு விசுவாசமாக இருந்ததாக குறிப்பிடுவது நித்தமும் அம்மாவின் காலில் விழுந்து சேவித்து எழும் எங்களையெல்லாம் கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது.

(ஆவேசமாக)

செவுரு இருக்கிறது. ஸ்டிக்கர் ஒட்டுகிறது. உனக்கேன் ஸ்பெஷலாக அறிவிக்க வேண்டும் நூத்தி பத்து? எங்களை போல நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டாயா? பசை தடவினாயா? பஞ்சர் ஒட்டினாயா? எவரோ கொடுத்த வெள்ள நிவாரணப் பொருட்களுக்கு எல்லாம் எம் ரத்தத்தின் ரத்தங்கள் ஸ்டிக்கர் ஒட்டி உரிமை கொண்டாடியபோது கூடமாட உட்கார்ந்து ஒட்டாமல் எங்கே போயிருந்தாய்? டெபாசிட் இல்லாதவரே... நீ என்ன எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளரா? வார்டு கவுன்சிலரா? நீ ஏன் கேட்கிறாய் 110 அறிவிப்பு? ஓட்டு இல்லாத ஓடப்பரே, அம்மாவின் காலில் விழுந்து எழுந்து மக்களிடம் ஓட்டு கேட்கும் அதிமுக மறவர் கூட்டம் உன் அசமகவினரின் அஞ்சாறு ஓட்டுகளையும் எங்கள் ஓட்டுகளாக தேர்தலில் குத்திவிடும். ஜாக்கிரதை.

(விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது. கரவொலி காதை கிழிக்கிறது. நடுவர் தனபாலே தனக்கு முன்னிருக்கும் பெஞ்சை தட்டி ஒலி எழுப்புகிறார்)

சரத்குமார் : நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்..?

தனபால் : நீங்கள் என்ன சொல்லுவது? அம்மா சொல்லுவார் உங்களைப் பற்றி. வரம்புமீறி பேசுகிறீர்கள். நீங்கள் பேசியதை நான் நீக்குகிறேன். ஒழுங்காக பட்டிமன்ற மாண்பை கடைப்பிடிக்கும் வகையில் வெளிநடப்பு செய்யுங்கள். இல்லையேல் காவலர்களை வைத்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியே எறிந்து தமிழர்களின் மானத்தை காப்பேன்.

நத்தம் விஸ்வநாதன் : சரத்குமார் வீட்டின் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு, மிச்சமாகும் மின்சாரம் ஏழைபாழைகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுமென புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க அறிவிக்கிறேன். இதனால் ஏழு கோடி ஏழைகள் பயன்பெறுவார்கள். அம்மா வாழ்க. புரட்சித்தலைவி வாழ்வாங்கு வாழ்க. தங்கத்தலைவி நீடுழி வாழ்க.

ஓ.பன்னீர் செல்வம் : சரத்குமாரை அழைத்ததற்கு பதிலாக மாஃபா பாண்டியராஜனையோ, செ.கு.தமிழரசனையோ பேச அழைத்திருக்கலாம். தேர்தலில் சீட்டு கொடுக்காவிட்டாலும் விசுவாசத்தில் நம்மையும் மிஞ்சி, நம்மைவிட மிகசிறப்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழ்பாடும் தகுதி பெற்றவர்கள் அவர்கள்தான்.

நத்தம் விஸ்வநாதன் : இதை நான் வழிமொழிகிறேன். அம்மா வாழ்க. ஸ்டிக்கர் வாழ்க. பேனர் வாழ்க. வெள்ள நிவாரணம் வாழ்க. மின்தடை வாழ்க.

தனபால் : பட்டிமன்றம் மிக அருமையாக நடக்கிறது. மக்களுக்கு பயன் தரக்கூடிய இதுபோன்ற விவாதங்கள் அம்மாவை பற்றி பேசும்போதுதான் அர்த்தம் பெறுகிறது. ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’ என்று கவிஞன் சும்மாவா பாடினான்?

வளர்மதி : ஆலுமா டோலுமா ஸ்டிக்கர் ஒட்டுனா போதும்மா

ஓ.பன்னீர்செல்வம் : டேரா டேரா டேரா பைட்டா ஸ்டிக்கர் இருக்கு. பிட்டு பிட்டா ஒட்ட ஒட்ட ஏறும் கிறுக்கு. நூத்தி பத்து. அம்மா... அம்மா.. நூத்தி பத்து. அம்மா.. அம்மா.. லெட் அஸ் கெட் எ நூத்தி பத்து.. அம்மா... அம்மா.... ( ‘செல்ஃபீ புள்ள’ ராகத்தில் டேபிளை தட்டியபடியே பாடுகிறார்)

தனபால் : அடடா.. அடடா.. சும்மா அள்ளுதே. தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்துடிச்சி..

(திடீரென்று எங்கிருந்தோ பாய்ந்து வருகிறார் நாஞ்சில் சம்பத்)

நாஞ்சில் : அப்படியெல்லாம் சட்டுபுட்டுன்னு தீர்ப்பு கீர்ப்பு சொல்லிடக்கூடாது. அம்மா வரட்டும். காத்திருப்போம்.

(செம்பரம்பாக்கம் வெள்ளம் வந்தபோது, அம்மா வரட்டும் என்று நாடே காத்திருந்ததை போல பட்டிமன்ற அவை மொத்தமும் அப்படியே காத்திருக்கிறது)

நன்றி : தினகரன் தேர்தல் களம்

22 பிப்ரவரி, 2016

வெள்ளத்தை தடுத்த வெனிஸ் நகரமே!

தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுகவினர் 26,000த்துக்கும் மேற்பட்ட மனுக்களை அளித்திருக்கின்றனர். இதில் கிட்டத்தட்ட 8,000 மனுக்கள் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரும் விருப்பமனுக்கள்.

உலக வரலாற்றிலேயே எந்த கட்சியோடும் ஒப்பிட முடியாத வித்தியாசமான கட்சியான அதிமுகவில் விருப்பமனு போட்டவர்களுக்கு, ‘நேர்காணல்’ என்றொரு சம்பிரதாயம் நடக்கும். ஆனால், ஏற்கனவே வேட்பாளர்களை ‘அம்மா’ தேர்வு செய்துவிட்டிருப்பார் (அந்தப் பட்டியலைதான் கையில் எடுத்துக்கொண்டு ஊர் ஊராகப் போய் சசிகலா சாமி கும்பிட்டுவிட்டு வருவதாக சொல்கிறார்கள்). இருந்தாலும் ஒப்புக்குச் சப்பாணியாக, ஊருக்கு ஒப்பேற்ற அதிமுக தேர்தல் குழுவினர் நடத்தும் நேர்காணல் எப்படியிருக்கும் என்றொரு ஜாலி கற்பனை. ஓவர் டூ லாயிட்ஸ் ரோடு அதிமுக தலைமைக் கழகம்...
நேர்காணலுக்கு வந்தவர் : புரட்சித்தலைவி வாழ்க. பொன்மனச்செல்வி வாழ்க. தங்கத்தாரகை வாழ்க. ஆதிபராசக்தி வாழ்க. அகிலாண்டேஸ்வரி வாழ்க. அகிலம் காக்கும் அன்னிபெசண்ட் அம்மையார் வாழ்க. அன்னை தெரசா வாழ்க. அம்மா வாழ்க.


ஓ.பன்னீர்செல்வம் (இடைமறித்து) : கேட்குற எனக்கே மூச்சு வாங்குது. சொல்லுற நீங்க பூஸ்ட் அடிச்சாமாதிரி தெம்பா இருக்கீங்க. கண்டினியூ யுவர் கபடி கபடி.

நே.கா. வந்தவர் : கழகத்தின் நிரந்தப் பொதுச்செயலாளர் வாழ்க. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் வாழ்க. நாளைய பாரத பிரதமர் வாழ்க. நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் வாழ்க. உலகத் தலைவி வாழ்க. அண்டசராசரங்களை ஆளும் தைரியலட்சுமி வாழ்க.

நத்தம் விஸ்வநாதன் : போதுங்க... போதுங்க... பொதுஅறிவு உங்களுக்கு பிரமாதமா இருக்கு. ஆனா சட்டசபைக்கு போறதுக்கு வேற சில தகுதிகள் வேணுமே?

நே.கா. வந்தவர் : எங்க ஊர்லே இஞ்ச் இடுக்கு பாக்கியில்லாமே எல்லா இடத்துலேயும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கேனுங்க. ரோட்டுலே நடந்தாகூட அம்மா ஸ்டிக்கரை மிதிச்சமாதிரி ஆயிடுமோன்னு பயந்துக்கிட்டு மக்களெல்லாம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாங்க.

தப்பித்தவறி மிதிச்சிட்டா காலை எடுத்துடுவோமில்லே? அவ்வளவு ஏனுங்க. ஜனங்க முதுகுலே கூட ஏப்ரல் ஃபூல் முத்திரை அடிக்கிற மாதிரி அம்மா படத்தை பெருசா ஒட்டிட்டேனுங்க. பிய்க்கவே முடியாதபடி அமெரிக்கன் டெக்னாலஜி பசை போட்டு ஒட்டிட்டேன். என் முதுகை கூட பாருங்க.

(சட்டையை கழற்றி திரும்புகிறார். 20 இன்ச் விட்டத்துக்கு ரவுண்டாக ஒட்டப்பட்டிருக்கும் அம்மா ஸ்டிக்கர் பளபளப்பாக பர்மணெண்ட் பேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது)

ஓ.பன்னீர்செல்வம் : வெரி இண்டரெஸ்டிங். சட்டைய மாட்டிக்குங்க. அப்புறம்?

நே.கா. வந்தவர் : செம்பரம்பாக்கத்துலே வெள்ளம் வந்தப்போ கூட எங்க ஊருக்குள்ளே பொட்டுத்தண்ணி வராம இருந்ததுக்கு காரணம், ஊரை சுத்தி பாதுகாப்பா இடைவெளியே இல்லாம சீனப்பெருஞ்சுவர் கணக்கா நான் வெச்ச அம்மா பேனருங்க தானுங்க. வெள்ளத்தை தடுத்ததாலே மக்களெல்லாம் அம்மாவை மனசார பாராட்டினாங்க. ‘நானும் வெள்ளத்தை தடுத்த வெனிஸ் நகரமே!’ன்னு அதுக்கும் ஒரு பேனர் வெச்சேன்.

வளர்மதி (உணர்ச்சிவசப்பட்டு) : சுனாமியே எங்க அம்மா கட்டவுட்டை பார்த்துட்டு சுருட்டிக்கிட்டு போயிடிச்சி. செம்பரம்பாக்கம் வெள்ளம் எங்கம்மாவுக்கு எம்மாத்திரம்?

(சட்டென்று ஒரு கற்பூரத்தை கையில் ஏற்றி அப்படியே வாயில் போட்டு பபிள்கம் மாதிரி மெல்ல ஆரம்பிக்கிறார் வளர்மதி. நேர்காணல் எடுக்கும் அத்தனை அதிமுக தலைவர்களும் பேச்சு மூச்சின்றி பயபக்தியோடு எழுந்து கன்னத்தில் போட்டுக் கொண்டு அமர்கிறார்கள்)

மதுசூதனன் : தியரி டெஸ்டுலே நீ டபுள் ஓக்கேப்பா. பிராக்டிக்கலா எப்படின்னு தெரியணுமே?

(நேர்காணலுக்கு வந்தவர் சட்டென்று எழுந்து நிற்கிறார். நாற்பத்தைந்து டிகிரி முதுகு வளைத்து, அந்நிலையிலேயே கையை மேலே தூக்கி, இராணுவ வேகத்தில் கும்புடு போட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் செய்கிறார். சட்டென்று யாரும் எதிர்பாரா வண்ணம் எகிப்து பிரமிடுகளில் பதம் செய்யப்பட்ட மம்மி கணக்காக உடம்பை விரைப்பாக்கி தூண் போல நிற்கிறார். இரண்டே நொடிகளில் அனாயசமாக அப்படியே தொம்மென்று தரையில் விழுந்து நமஸ்கரிக்கிறார். ஹெலிகாஃப்டர் பறப்பதை போல மிமிக்ரி செய்துக்கொண்டே, கோபுரதரிசனம் பார்க்கும் பக்தனை போல வானத்தை பார்த்து கச்சிதமான கும்பிடு போடுகிறார். சட்டென்று நாற்காலியில் அமர்ந்து தனக்கு முன்பாக இருக்கும் மேஜையை ‘கிங்காங்’ பாணியில் படபடவென்று தட்டுகிறார். அறைக்குள் சடக்கென்று சட்டசபை அட்மாஸ்பியர் தோன்றுகிறது. தேர்வுக்குழுவினர் அத்தனை பேரும் இந்த வித்தைகளை கண்டு பிரமை பிடித்த நிலையில் படபடவென்று கை தட்டுகிறார்கள்)

கோகுல இந்திரா : தேர்தல் பிரச்சாரத்துலே என்ன பேசுவீங்க?

நே.கா. வந்தவர் : இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த புரட்சித்தலைவி அம்மாவுக்கு ஓட்டு போடுவீங்களா? இல்லேன்னா இரண்டாம் உலகப் போர் நடத்தி மக்களை கொன்ற ஸ்டாலினுக்கு ஓட்டு போடுவீங்களான்னு ஜனங்களை கேட்பேன்.

கோகுல இந்திரா : இரண்டாம் உலகப்போரா? அதை நடத்தினது ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆச்சே?

வளர்மதி : இருந்துட்டு போவட்டுமே. அவர் பேரும் ஸ்டாலின்தானே? அதுக்கும் கருணாநிதிதான் பொறுப்பேத்துக்கணும்.

நத்தம் விஸ்வநாதன் : நீங்க செஞ்ச மக்கள் பணிகளில் வேறெதாவது குறிப்பா சொல்ல முடியுமா?

நே.கா. வந்தவர் : அம்மா பேனரை கிழிப்பேன்னு டிராஃபிக் முனுசாமின்னு ஒரு கிழவரு வந்தாரு. அவரை ஓட ஓட விரட்டி ரத்தம் தெறிக்க அடிச்சி துரத்துனேன். அதே பேனரை போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குன்னு எடுத்துட்ட இன்ஸ்பெக்டரை போனில் கூப்பிட்டு கழுவி கழுவி ஊத்தினேன். அம்மாவை பொய்வழக்குலே பெங்களூர் ஜெயில்லே கருணாநிதி வெச்சப்போ அதை கண்டிச்சி நீளமா தாடி வளர்த்தேன். அம்மா ரிலீஸ் ஆனப்போ மொட்டை அடிச்சி காது குத்திக்கிட்டேன். கூணாளம்மன் கோயிலுக்கு கூழ் ஊத்தினேன். தீச்சட்டி ஏந்தினேன். தீ மிதிச்சேன். மண்சோறு சாப்பிட்டேன். காவடி தூக்கினேன்...

ஓ. பன்னீர் செல்வம் : ஆஹா... ஆஹா... பக்தா உன் பக்தியை மெச்சினோம். நீ எம்.எல்.ஏ பதவிக்கு மட்டுமில்லே. அமைச்சர் பதவிக்கே லாயக்கான ஆளுதான். அம்மா கிட்டே அப்படியே சொல்லிடறோம். அம்மா நல்ல முடிவா எடுத்து கடுதாசி போடுவாங்க. காத்திருங்க.

(புரட்சித்தலைவி வாழ்க. பொன்மனச்செல்வி வாழ்க. தங்கத்தாரகை வாழ்க. ஆதிபராசக்தி வாழ்க என்று மீண்டும் கோஷமிட்டுக் கொண்டே கிளம்புகிறார் நேர்காணலுக்கு வந்தவர்)

(நன்றி : தினகரன் தேர்தல் களம்)