‘கீழ் மேல்’ கோட்பாடுதான் மலையாளிகளின் ஒரே கலை செயல்பாடு என்று இன்னும் நாம் நம்பிக் கொண்டிருந்தால் நம்மைவிட பெரிய முட்டாள்கள் யாருமில்லை. மலையாளிகள் என்றாலே கதகளி, வேட்டி, சேச்சி, மூக்கால் பேசும் முக்காத் தமிழ் என்கிற காலமெல்லாம் மலையேறி மாமாங்கமாகி விட்டது. மிக தைரியமாக ஹோமோசெக்ஸ் த்ரில்லர் எடுக்கிறார்கள். குறிப்பாக வினீத் சீனிவாசனின் வரவுக்குப் பிறகு மலையாளத் திரையுலகில் புதிய அலை சுனாமி வேகத்தில் கரைகடந்து வீசிக்கொண்டிருக்கிறது.
‘1983’, ‘ஒரு வடக்கன் செல்ஃபீ’, ‘தட்டத்தின் மறயத்து’, ‘மும்பை போலிஸ்’, ‘பிரேமம்’, ‘பெங்களூர் டேஸ்’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘டயமண்ட் நெக்லஸ்’, ‘டிராஃபிக்’, ‘ஷட்டர்’, ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’, ‘த்ரிஷ்யம்’ என்று சமீப வருடங்களில் வேறெந்த திரையுலகிலும் வராத அளவுக்கு வகை வகையான கதைகளிலும், களங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறது மாலிவுட்.
இந்த புதிய அலை ஜோதியில் லேட்டஸ்ட் வரவு ‘ஆனந்தம்’.
முற்றாக புதுமுகங்களோடு களமிறங்கியிருக்கும் இயக்குநர் கணேஷ்ராஜுக்கும் இதுதான் முதல் படம். வினீத் சீனிவாசனிடம் உதவியாளராக இருந்தவர், அதே வினீத் சீனிவாசனுக்கு கதை சொல்லி அவரையே தயாரிக்க வைத்திருக்கிறார். என்ன கதை சொல்லி கன்வின்ஸ் செய்திருப்பார் என்பதுதான் சஸ்பென்ஸாக இருக்கிறது. ஏனெனில் ‘ஆனந்தம்’ படத்தில் கதையென்று எதையும் குறிப்பாக சுட்டிக்காட்ட முடியவில்லை. தமிழில் எண்பதுகளின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ‘பன்னீர் புஷ்பங்கள்’ வகையறா கதைதான்.
காட்சிக்கு காட்சி திரையின் ஒவ்வொரு பிக்ஸெலிலும் தெறிக்கும் இளமைதான் ‘ஆனந்தம்’. படம் பார்க்கும் கல்லூரி மாணவர்கள், தங்களையே கண்ணாடியில் காண்பதாக உணர்வார்கள். முப்பது ப்ளஸ்ஸை எட்டிய அரைகிழங்கள், தங்களின் இருபதுகளை நினைத்து ஏங்குவார்கள். புத்திசாலித்தனமான திரைக்கதை யுக்தியோ, வலுவான காட்சியமைப்புகளோ இல்லாமலேயே ‘ஆனந்தம்’, ஒரு ‘ஆட்டோகிராப்’பை சாதித்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் குறைந்தபட்சம் ஒரு ‘ஆனந்தம்’ –- அதாவது கள்ளமில்லாத ஒரு சிரிப்பு - என்று மட்டும் திட்டமிட்டுப் பார்த்துக் கொண்டதுதான் இயக்குநரின் சிறப்பு. சின்ன சின்ன உரசல்கள், கேலி, கிண்டல், சீண்டல், ஜாலி, நட்பு, காதல், ஜொள்ளு, லொள்ளு என்று ஒவ்வொரு உணர்வையும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து, சரிவிகிதத்தில் கலந்து பரிமாறியிருக்கிறார் கணேஷ்ராஜ். சேர்மானம் சரியாக அமைந்துவிட்டதால் ஆனந்தத்தின் சுவை அபாரம்.
என்ஜினியரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் ‘இண்டஸ்ட்ரியல் விசிட்’ அடிக்கிறார்கள். மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் எப்படியோ பிரின்சிபலை தாஜா செய்து, இந்த விசிட்டில் கோவாவையும் சேர்த்துவிடுகிறார். புதுவருடம் அன்று வகுப்பு மாணவர்கள் அத்தனை பேரும் கோவாவில் பார்ட்டி கொண்டாடுவதுதான் திட்டம். கொச்சியிலிருந்து ஹம்பிக்கு போய், அங்கிருந்து கோவா என்று மாணவர்களின் நான்கு நாள்தான் ‘ஆனந்தம்’.
இந்த நான்கு நாட்கள் அவர்களில் சிலருக்கு எதிர்கால வாழ்க்கை குறித்த தெளிவினை ஏற்படுத்துகிறது. உம்மணாம் மூஞ்சி புரொபஸர் ஒருவர், எப்போதும் புன்னகையை மட்டுமே முகத்தில் ஏந்தியிருக்கும் சக புரொபஸரின் மீது காதலில் விழுந்து கல்யாணம் செய்துக் கொள்ள முடிவெடுக்கிறார். பப்பி லவ் முறிந்த ஒருவன், காதல் இல்லையென்றாலும் அப்பெண்ணோடு நட்பை தொடரமுடியும் என்று உணர்கிறான். இன்னொருவனோ தன்னுடைய உள்ளத்தை தான் விரும்பும் பெண்ணிடம் திறந்துகாட்டி அவளது காதலை வெல்கிறான். தான் தானாக இருக்கக்கூடிய சுயவெளிப்பாட்டின் சுதந்திரத்தை இன்னொருவன் அறிகிறான். தான் நேசிக்கக்கூடியவனை அவனை அவனுடைய தனித்துவத்தோடு மதிக்க ஒருத்தி கற்றுக் கொள்கிறாள். தன்னுடைய பெற்றோரின் மணமுறிவினை முதிர்ச்சியோடு ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பான்மைக்கு மற்றொருத்தி வருகிறாள். இப்படியாக அந்த வகுப்பிலிருக்கும் பலரின் வாழ்க்கையை அந்த நான்கு நாட்கள் முற்றிலுமாக மாற்றுகிறது. கூட்டமாக இருப்பதின் சவுகரியத்தை அனைவருமே உணர்கிறார்கள். பொதுவாக இதுமாதிரி ஜானரில் படமெடுப்பவர்களுக்கு கை கொஞ்சம் துறுதுறுக்கும். லேசாக செக்ஸ் சேர்த்தால் ஜம்மென்று இருக்குமே என்று தோன்றும் (நம்ம ஊர் செல்வராகவன் நாசமா போனதே இதனால்தான்). ஆனால், கணேஷ்ராஜோ படத்தில் சின்ன கிளிவேஜ் கூட இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். ஆங்காங்கே ‘நேவல்’ தெரியதான் செய்கிறது. ஆனால், காமமாக கண்ணுக்கு எதுவும் உறுத்தவில்லை.
தெலுங்கில் இயக்குநர் சேகர் கம்முலா எடுக்கும் ‘ஹேப்பி டேஸ்’, ‘லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்’ போன்ற ‘ஃபீல்குட்’ மூவிகளின் தாக்கம் சற்றே அதிகமாக இருந்தாலும், கணேஷ்ராஜின் அசால்டான ஜஸ்ட் லைக் தட் ஸ்டைல் இயக்கம்தான் ‘ஆனந்தம்’ படத்தினை ரசிகர்களை காதலிக்க வைக்கிறது. சேகர் கம்முலாவுக்கு ரசிகனை இரண்டு காட்சியிலாவது அழவைத்து பார்த்துவிட வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும். கணேஷ்ராஜோ, எவ்வளவு சீரியஸான சீனுக்கு லீட் இருந்தாலும், அதையும் எப்படி காமெடியாக்கலாம் என்பதே கவலையாக இருந்திருக்கிறது. சின்ன சந்து கிடைத்தாலும் அதில் fun வந்தாக வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.
தான் இன்னமும் காதலை தெரிவிக்காத பெண்ணின் அருகாமை யதேச்சையாக அவனுக்கு கிடைக்கிறது. ஆசை தீர அந்த பிரைவஸியை அனுபவிக்கிறான் (நோ வல்கர், பேசிப்பேசி தன்னை புரியவைத்து அவளை புரிந்துக்கொள்கிறான்). அவளுக்கு எதை கண்டாலும் பயம் என்பதை அறிகிறான். இவன் சொல்கிறான்.
“எனக்கும் சின்ன வயசுலே இருட்டுன்னா பயம். கரெண்ட் கட் ஆனதுமே ரொம்ப பயப்படுவேன். என்னோட அப்பாதான் அப்போ நட்சத்திரங்களை காண்பிச்சார். கண்ணுக்கு தெரியாத இருட்டை நினைச்சு பயந்துக் கிட்டிருக்கிறதைவிட, கண்ணுக்கு தெரியற மகிழ்ச்சியை அனுபவிக்க கத்துக்கோடான்னு சொன்னாரு”
சின்ன டயலாக்தான். கேட்கும்போது சட்டென்று ஒரு ஜென் கவிதை மாதிரி ஏதோ திறப்பை மனசுக்குள் ஏற்படுத்துகிறது இல்லையா? இந்த காட்சியில் கேமிரா நிலவுக்குச் செல்கிறது. அருகில் நட்சத்திரங்கள். இடைவேளை. வாவ்!
இதே போல கிளைமேக்ஸுக்கு முன்பாக ஒரு வசனம். இத்தனை மாணவர்களையும் மேய்த்து நல்லபடியாக திரும்ப ஊருக்கு கொண்டுபோய் சேர்க்கும் பொறுப்புணர்வில் மிக ஜாக்கிரதையாக இருக்கிறான் அவர்களது ஒருங்கிணைப்பாளர். காலேஜில் இருந்து கிளம்பியதிலிருந்து ஒவ்வொரு விஷயத்தையுமே அவன் பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருப்பதை, அவர்கள் வந்த பேருந்தின் ஓட்டுநர் கவனித்துக் கொண்டே இருக்கிறார். டூரின் கடைசி நாளன்று, பேருந்து ஓட்டுநரிடம் வந்து ஊர் திரும்புவது பற்றி ஏதோ பேச ஆரம்பிக்கிறான். அவர் சொல்கிறார்.
“மவனே! உனக்கு ஒண்ணு சொல்றேன். எப்பவும் பொறுப்பை தலையிலே சுமந்துக்கிட்டு அலையாதே. பொறுப்பு எங்கேயும் போயிடாது. அது எப்பவும் நம்மளுக்கு இருந்துக்கிட்டேதான் இருக்கும். அதுக்குண்ணு உன் வயசுக்குரிய ஆனந்தத்தை இழந்துடாதே. இன்னும் கொஞ்ச நாளில் நரை விழுந்துடும். தொப்பை வந்துடும். அப்பவும் பொறுப்பு இருக்கும். ஆனா, இளமை இருக்காது. போ.. உன் பிரெண்டுங்களோட லைஃபை என்ஜாய் பண்ணு”
இவ்வளவுதான் படமே.
படம் பற்றி வேறென்ன சொல்வது? நடிகர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். கேமிராமேன் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் திறமையாக இயக்கியிருக்கிறார். இப்படியே க்ளிஷிவாகதான் எதையாவது சொல்லிக் கொண்டு போகவேண்டும். படம் பாருங்கள். ஆனந்தமாக இருங்கள். அவ்ளோதான் சொல்லமுடியும்.