8 டிசம்பர், 2016

Crisis Management @ அப்போலோ

 விளம்பரத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு ரொம்பவும் பரிச்சயமான சொல், ‘Crisis Management’. குறிப்பாக விளம்பரத் துறையில் மக்கள் தொடர்புப் பணிகளை செய்யக்கூடிய பணியாளர்கள் (public relations) அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சொல்.

மக்கள் தொடர்பு இன்றைக்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டக்கூடிய வர்த்தகமாக மாறியிருக்கிறது. புரியும்படி சொல்ல வேண்டுமானால் ஒரு நடிகரை/நடிகையை பிரபலப்படுத்த பி.ஆர்.ஓ என்பவர் இருக்கிறார் இல்லையா? அதுபோல நிறுவனங்களை பிரபலப்படுத்த பி.ஆர். ஏஜென்ஸிகள் உண்டு. இந்த ஏஜென்ஸிகள் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு கூலி கொடுக்கும் நிறுவனத்தின் பெயர் மக்கள் மத்தியில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்க தேவையான அனைத்து வேலைகளையும் மறைமுகமாக செய்துக் கொண்டிருப்பார்கள்.

நாம் செய்தித் தாள்களிலோ இணையத்தளங்களிலோ வாசிக்கும், டிவிக்களில் பார்க்கும் நிறுவனங்களை குறித்த / பிரபலங்களை குறித்த பல செய்திகள், பெரும்பாலும் செய்தியாளர்களால் எழுதப்படுபவை அல்ல. அவை இதுபோன்ற பி.ஆர். ஏஜென்ஸியின் காப்பிரைட்டர்களால் எழுதப்படும் அறிக்கைகள். நான் இதுபோன்ற ஒரு பி.ஆர். ஏஜென்ஸியில் பணியாற்றியிருக்கிறேன். இன்றைய தமிழகத்து கல்வித்துறை அமைச்சர், முன்பு வைத்திருந்த நிறுவனம் ஒன்றுக்கு மக்கள் தொடர்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

ஒரு நிறுவனத்தையோ / பிரபலத்தையோ நல்லவிதமாக பிரபலப்படுத்தக் கூடியது மட்டுமல்ல பி.ஆர். ஏஜென்ஸிகளின் வேலை. அந்த குறிப்பிட்ட நிறுவனத்துக்கோ, அதன் தயாரிப்புக்கோ, அந்த நிறுவனம் தொடர்பான அதிகாரிகளுக்கோ, உரிமையாளருக்கோ மக்களிடையே பெயர் எதிர்மறையாக ஏற்படக்கூடிய சூழலில், அதை மாற்றக்கூடிய பணிகளை செய்வதே crisis management.

இந்த crisis managementக்கு நமக்கு தெரிந்த நல்ல உதாரணம், கூடங்குளம் அணு உலை. கூடங்குளத்தில் மக்கள் போராட்டம் வெடித்தபோது, ஊடகங்கள் தொடர்ச்சியாக அதை பதிவு செய்துக் கொண்டிருந்தன. திடீரென்று அணு மின்சாரத்தின் தேவை எவ்வளவு அத்தியாவசியம் என்று பல ஊடகங்களும் ‘யூ’ டர்ன் அடித்ததில் சென்னையின் பிரபலமான ஏஜென்ஸி ஒன்றுக்கு முக்கியப் பங்கு உண்டு. கூடங்குளம் அணு உலை குறித்த நேர்மறையான செய்திகள் அதிகமாகவும், போராட்டம் குறித்த கவனம் நீர்க்கப்பட்டதிலும் மிகத்திறமையான crisis management மேற்கொள்ளப்பட்டது. அந்த ஏஜென்ஸியின் நடவடிக்கைகளை வெளிப்படையாக சொல்ல முடியாத அளவுக்கு ‘நிழல்’ தன்மை ஏராளமாக உண்டு.

திறமையாக கையாளப்பட்ட crisis managementக்கு இன்னொரு நல்ல உதாரணம் கோகோ கோலா. எழுபதுகளின் இறுதியில் இந்தியாவில் முடக்கப்பட்ட கோலா, தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மீண்டும் சந்தைக்கு வந்தது. இன்றுவரை விற்பனையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

2003 ஆகஸ்ட் மாதம், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கை ஒன்றில் குளிர்பானங்களில் குறிப்பிடத்தக்க அளவு பூச்சி மருந்து கலக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் சந்தையில் விற்கப்பட்ட குளிர்பானங்களின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்தது. குறிப்பாக அப்போது மார்க்கெட்டில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த பெப்ஸி, இந்தப் பிரச்சினையால்தான் தன்னுடைய மவுஸை முற்றிலுமாக இழந்தது. இன்றுவரை பெப்ஸியால் பழைய சந்தையை பிடிக்கவே முடியவில்லை.

ஆனால்-

கோகோ கோலா இதை திறமையான crisis management நடவடிக்கைகள் மூலமாக சமாளித்தது. உடனடியாக தன்னுடைய விளம்பரங்களில் கோலா பாதுகாப்பானது என்பதை புரியவைக்கும் வாசகங்களை இணைத்தது. தங்களுடைய ஃபேக்டரிகளுக்கு பொதுமக்களை நேரில் அழைத்துச் சென்று, கோகோ கோலா எவ்வளவு பாதுகாப்பாக தயாரிக்கப்படுகிறது என்பதை காட்டி, அவர்களது testimonial விளம்பரங்களை வெளியிட்டது. சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துக் கொண்டிருந்த அமீர்கானுக்கு கோடிகளை கொட்டி, அவர் வாயாலேயே கோகோ கோலா குடித்தால் எந்தப் பிரச்சினையுமில்லை என்று சொல்லவைத்தது.

தன்னுடைய பழைய பெயரையும், சந்தையையும் மீட்க கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலம் கோகோ கோலா போராடியது. அப்போது அவர்களது crisis management theoryயாக எடுத்துக் கொள்ளப்பட்ட 3P’s இன்று உலகம் முழுக்கவே விளம்பரத்துறையினருக்கு ஒரு பாடமாக ஆகியிருக்கிறது.

Price Value, Preference, Pervasive penetration ஆகியவையே அந்த மூன்று P. அதாவது இந்த காலக்கட்டத்தில் நிறுவனத்துக்கு நஷ்டமே ஏற்பட்டாலும்கூட மக்கள் வாங்கக்கூடிய மலிவான விலை, மக்கள் தாகம் எடுத்தால் முதலில் நாடக்கூடிய குளிர்பானமாக கோகோ கோலோவை முன்னிறுத்துவதற்கான நடவடிக்கை, கோலோ கிடைக்காத இடமே இல்லை என்கிற நிலையை உருவாக்குவது போன்ற பணிகளில் பெருமளவு ஆற்றலை கோகோ கோலோ நிறுவனம் செலவிட்டது. மக்களுக்கு ‘பூச்சி மருந்து’ என்கிற சொல்லே மறந்துப்போன நிலை ஏற்பட்ட பிறகே ‘open happiness’ என்று நார்மல் மோடுக்கு வந்தார்கள் கோகோ கோலாவினர்.

ஓக்கே. இப்போது ‘அப்போலோ’வுக்கு வருவோம்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற மருத்துவ நிறுவனமாக அப்போலோ கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் அடையாளமே அதன் விஐபி பேஷண்டுகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து சிகிச்சை பெற வருவோரால் ஏற்படுத்தப் பட்டது.

இந்திய அரசியலின் இரும்புப் பெண்மணிகளில் ஒருவராக கருதப்படும் தமிழக முதல்வர், அப்போலோவின் பேஷண்ட் என்பது அந்நிறுவனத்தின் branding தொடர்பான பெருமைதான். மறுப்பதற்கில்லை.

கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல்வர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுமே அப்போலோ வெளியிட்ட பத்திரிகைக் குறிப்பு வரை சரிதான்.

ஆனால்-

அதன் தொடர்ச்சியாக ஒருநாள் விட்டு ஒருநாள் முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ வெளியிட்ட பத்திரிகைக் குறிப்புகள் முழுக்க முழுக்க ஆர்வக்கோளாறாகவே அமைந்து விட்டது. ஒருவேளை முதல்வர் முழு உடல்நலத்தோடு திரும்பி இருப்பாரேயானால் அது அப்போலோவின் சாதனையாக பார்க்கப் பட்டிருக்கும்.

முதல்வரின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையில் சில சட்டவல்லுநர்களின் உதவியோடு அப்போலோ வெளியிட்ட அறிக்கைகள், சமூக ஊடகங்களில் கிண்டலடிக்கப்பட காரணமாக அமைந்தனவே தவிர, அது அப்போலோவின் பெயரை ‘நல்லவிதமாக’ மக்கள் மத்தியில் பரப்ப உதவவில்லை.

போதாக்குறைக்கு அப்போலோவின் தலைவர் ரெட்டி அவர்கள், “முதல்வர் எப்போது விருப்பப் படுகிறாரோ, அப்போது அவரே டிஸ்சார்ஜ் ஆகிக் கொள்ளலாம்” என்று பத்திரிகையாளர்களை அழைத்து சொன்னது, அப்போலோவின் இமேஜை அசைத்துப் பார்ப்பதாக அமைந்துவிட்டது.

இதுபோல பத்திரிகைக் குறிப்புகள் தரவேண்டும், பேட்டி தரவேண்டும் என்றெல்லாம் அப்போலோவுக்கு எந்த கட்டாயமும் இல்லை. அவர்கள் தமிழக அரசுக்கும், பேஷண்டின் உறவினர்களுக்கும் மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். ‘தமிழக முதல்வரே எங்களிடம்தான் சிகிச்சை பெறுகிறார்’ என்று பில்டப் தர முயற்சித்து, தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் இங்கே சிகிச்சை பெறவில்லை என்றாலும்கூட அப்போலோவின் அருமை பெருமைகள் ஒன்றும் குறைந்து போய்விடப் போவதில்லை.

தங்களுடைய பிராண்ட் மேனேஜர்களையோ, பி.ஆர்.ஓ.க்களையோ கலந்தாலோசித்து இருந்தால் இத்தகைய குளறுபடிகளை அப்போலோ நிர்வாகம் தவிர்த்திருக்க முடியும். மேலும், முதல்வருக்கு கார்டியாட்டிக் அரெஸ்ட் ஆனதற்கு மறுநாள் அப்போலோ தலைவரின் மகள் ட்விட்டரில் வெளியிட்ட ‘கிரேவ்’ ட்விட், அம்மருத்துவமனையின் பெருமையை முற்றிலுமாக சீர்குலைப்பதாக அமைந்துவிட்டது. உணர்ச்சிப்பூர்வமான அந்த சூழலில் அப்போலோ, அமைதியை கடைப்பிடித்திருக்க வேண்டும்.

மேலும்-

முதல்வரின் மரணத்தை அப்போலோ தன்னுடைய பத்திரிகைக் குறிப்பாக கொடுத்தது முட்டாள்த் தனத்தின் உச்சம். தமிழக முதல்வர் காலமானதை தமிழகத்தின் ஆளுநரோ அல்லது அரசோ மக்களுக்கு தெரிவிக்கட்டுமே... அந்த கடமை அவர்களுக்குதானே இருக்கிறது? தன்னுடைய ஃபெய்லியரை எந்த நிறுவனமானது ஊடகங்களுக்கு முன்பாக இப்படி பட்டவர்த்தனமாக தானே முன்வந்து ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்?

டிசம்பர் 6ஆம் தேதி விடியற்காலை இரண்டு மணியளவில் தமிழக முதல்வரின் பூவுடலை தாங்கிய ஆம்புலன்ஸ், அப்போலோவில் இருந்து வெளியேறுகிறது. மறுநாளே காலை ஆறு மணிக்கு நாடறிந்த பத்திரிகையாளரான சோ ராமசாமி, இதே அப்போலோவில் இருந்து பிணமாக ஆம்புலன்ஸில் வெளியேறுகிறார். திரும்பத் திரும்ப டிவியில் காட்டப்பட்ட இந்த இரு விஷூவல்களும் சாதாரண மக்கள் மத்தியில் துக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

‘அப்போலோவுக்கு போனாலே அவ்ளோதான்’ என்று வழக்கமான பாமரத்தனத்தோடு தெருமுனைகளில் நின்று பேசிக்கொள்கிறார்கள். அப்போலோவின் இமேஜ், இதுபோல சாதாரணர்களிடம் ஆட்டம் காண்பதை அப்போலாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவேதான் இந்த அவப்பெயரை போக்க புதியதாக சுவாரஸ்யமான ‘அம்மா கதைகள்’ உருவாக்கி, ஆங்கில நாளேடுகளில் மெர்ஸி என்கிற நர்ஸின் படத்தைப் போட்டு crisis management செய்கிறார்கள்.

ரொம்ப சிறுபிள்ளைத்தனமான முயற்சி. இந்தக் கதைகளின் தர்க்க ஓட்டை, உடைசல்கள் அப்பட்டமாகவே தெரிகின்றன. அந்தளவுக்கு ஆக்டிவ்வாக இருந்த அம்மா, தன்னை வெளியுலகத்துக்கு வெளிப்படுத்திக் கொள்ளவே முயற்சித்திருப்பார். ‘நான்’, ‘எனது தலைமையிலான அரசு’, ‘என்னுடைய’ என்று எல்லாவற்றிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பும் சுயமோகியான ஜெயலலிதா, அப்போலோ கதைகளின் படி நார்மலாக இருந்திருந்தால், எழுபத்தைந்து நாட்கள் எதற்காக தலைமறைவு வாழ்க்கை நடத்தினார் என்று மக்கள் கேட்கமாட்டார்களா?
ஜெயலலிதாவின் வாய்ஸ் என்று வாட்சப் குழுமங்களில் பரப்பப்பட்ட குரல், சட்டமன்ற வேட்பாளர்களுக்கான படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்து உள்ளிட்ட விஷயங்களையே அதிமுகவினர் உட்பட யாரும் நம்பவில்லையே?

மேலும் தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிகைகள் வாயிலாக ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம், டிஸ்சார்ஜ் தேதி என்று நாளோரு செய்தியும் பொழுதொரு வண்ணமுமாக அதிமுகவினரை உற்சாகப்படுத்த வைட்டமினாக கொடுத்த தகவல்கள் அத்தனையும் முழுக்க பொய்த்து அவர்கள் கடுமையான மனவுளைச்சலில் இருக்கும்போது இந்திய புதிய முயற்சி எப்படி வெற்றிபெறும்?

அப்போலோவின் அச்சம் தேவையற்றது. அப்போலோவில் என்னென்ன மருத்துவ வசதிகள் இருக்கின்றன, அது எவ்வகையில் மற்ற மருத்துவமனைகளைவிட சிறந்தது என்பதெல்லாம் அப்போலோவின் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு தெரியும். இதுபோல பாமரத்தனமான பரவும் சென்டிமெண்டான வதந்திகளால் அவர்கள் தங்கள் மருத்துவமனையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இதுபோன்ற வதந்திகளுக்கும் நீண்டகால ஆயுள் கிடையாது.

உதாரணத்துக்கு, மியாட் மருத்துவமனை தன்னுடைய சோதனைக் காலத்தை எப்படி எதிர்கொள்கிறது என்று அப்போலோ நிர்வாகம் பார்க்கலாம். ஒரு காலத்தில் பிரதமரே டெல்லியில் இருந்து வந்து அறுவைச் சிகிச்சை செய்துக் கொள்கிற அளவுக்கு பெருமை வாய்ந்த மருத்துவமனையாக இருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மழை வெள்ளத்தில் அடையாறு பாய்ந்து அத்தனை பெருமைகளையும் குலைத்தது. மியாட், உடனடியாக தன்னுடைய விளம்பர வேகத்தை குறைத்துக் கொண்டது. சில ஆண்டுகளுக்கு மியாட் என்கிற பெயரை உச்சரித்தாலே, மக்களுக்கு அந்த சோகம் நினைவுக்கு வந்துவிடும் என்று கருதி அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. அந்த நினைவுகள் முற்றிலுமாக சில ஆண்டுகளில் மறைந்து சகஜமாகும் நிலையில் மீண்டும் மியாட், விஸ்வரூபம் எடுக்கும். அதுவரை பதுங்கி, பாய்வதற்கான சூழலை எதிர்நோக்கிக் கொண்டே இருக்கும். சமீபமாக மீனாட்சி மிஷன், டாக்டர் குருசங்கர் தலைமையில் புதுரத்தம் பாய்ச்சப்பட்டு தன்னை தமிழகத்தின் முக்கியமான மருத்துவக் கேந்திரமாக அடையாளப்படுத்தி வளர்த்துக் கொள்வதை இங்கே கவனிக்கலாம்.

‘ராசியில்லாத டாக்டர்’ மாதிரி சென்டிமெண்டெல்லாம் எளிய மக்களிடம்தான் செல்லுபடி ஆகும். ஜெயலலிதா மற்றும் சோவின் மரணமெல்லாம் இன்னும் சில காலத்திலேயே மறந்துவிடும். அப்போது அப்போலோவில்தான் அவர்கள் ட்ரீட்மெண்ட் எடுத்தார்கள் என்பதையெல்லாம் யாராவது நினைவுப்படுத்தினால்கூட உடனடியாக recall செய்துக் கொள்ள முடியாத அளவுக்கு வேறு வேறு விஷயங்கள் அவர்களது மூளைகளில் திணிக்கப்பட்டு விட்டிருக்கும்.

ஆகையால்-

அப்போலோ இப்போது சும்மா இருந்தாலே போதுமானது. அதனுடைய வழக்கமான சிறப்பு எவ்வகையிலும் பாதிக்கப்பட்டு விடாது. நிகழ்ந்த சேதாரத்தை சரிசெய்ய ‘Damage control’  என்று நினைத்துக் கொண்டு ‘அப்போலோ’ என்கிற பிராண்டின் பெயரை திரும்பத் திரும்ப நினைவுப்படுத்திக் கொண்டிருந்தால் ஜெ.வும், சோ-வும் கூடவே நினைவுக்கு வந்துக் கொண்டேதான் இருப்பார்கள். அதுதான் அப்போலோவுக்கு ஆபத்தும்கூட.

7 டிசம்பர், 2016

ஜெ.வின் முதல் ஹீரோ!


நாடகங்கள் வாயிலாக உருவான ஆளுமை சோ.
ஐம்பதுகளின் இறுதியிலும், அறுபதுகளின் தொடக்கத்திலும் சென்னையில் ஏராளமான அமெச்சூர் நாடகக் குழுக்கள் இயங்கி வந்தன. சோ நடத்திய விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் நாடகங்களுக்கு சபாக்களில் ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டு போடக்கூடிய அளவுக்கு வரவேற்பு இருந்தது.

இந்த நாடகக்குழுவை சோ ஆரம்பித்ததாக இன்று டிவி சேனல்களில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சோவின் தம்பி ‘அம்பி’ ராஜகோபால் அவர்களும், அவருடைய கல்லூரி நண்பர்களும் ஆரம்பித்த குழு இது. இடையில் புகுந்த சோ, அந்த குழுவை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டார். இந்த நிகழ்வை சோவே, ‘கூடாரத்தில் புகுந்த ஒட்டகம்’ என்று தன்னை சுயபகடி செய்து குறிப்பிடுகிறார்.

ஒருமுறை நாடகம் போடும்போது, அதில் நடித்த முக்கிய நடிகர் ஒருவரை சோ, பிளாக்மெயில் செய்திருக்கிறார். “இந்த நாடகத்தில் சோ-வுக்கு கேரக்டர் கொடுக்கவில்லையென்றால் நான் நடிக்க மாட்டேன்” என்று அவர் வாயாலேயே சொல்லவைத்து, நாடகத்தில் அடமாய் இடம்பிடித்து நடிகர் ஆனார்.

ஆரம்பக் காலத்தில் சோ, ஒய்.ஜி.பார்த்தசாரதியின் ‘யுனைட்டெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்’ குழுவின் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஒய்.ஜி.பி. குழுவில்தான் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்துக் கொண்டிருந்தார். ரிகர்ஸலுக்கு அம்மாவோடு வந்த ஜெ.வும் சில நாடகங்களில் துண்டு - துக்கடா வேடங்களில் நடிப்பார்.

சோ வில்லனாக நடித்த நாடகம் ஒன்றில்தான் ஜெ. முதன்முறையாக மேடையில் தோன்றினார். அப்போது ஆங்கில நாடகங்களும் போடுவார்கள். சோவின் தமிழ் நாடகங்களுக்கும் கூட ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் வழக்கம் இருந்தது. எலைட் சொசைட்டி என்று சொல்லப்படுபவர்களுக்கான நாடகங்கள் இவை. சோவுக்கு ஆங்கிலம் தண்ணிபட்ட பாடு. ஆனால், ஆங்கிலம் பேசும் நடிகைகள் மிகவும் குறைவாக இருந்த நிலையில் ஜெ.வுக்கு அடித்தது ஜாக்பாட்.

பிற்பாடு சோ ஹீரோவாக நடிக்க, அவரது அழகுக்கு பொருத்தமாக இருந்த ஜெ. ஹீரோயினாக நடித்தார். 62-63 வாக்கில் இம்மாதிரி ஒரு நாடகத்தைப் பார்க்க வந்தபோதுதான் எம்.ஜி.ஆர், ஜெ.வை சினிமா ஹீரோயினாக ஆக்க முன்வந்தார் என்பார்கள். ஆனாலும், ஸ்க்ரீன் டெஸ்டில் எம்.ஜி.ஆரின் பர்சனாலிட்டிக்கு முன்பாக ஜெ. மிக சிறுப்பெண்ணாக தெரிகிறார் என்று முதலில் நிராகரிக்கப்பட்டார். ஸ்ரீதர், ‘வெண்ணிற ஆடை’ திரைப்படம் மூலமாக முந்திக்கொள்ள, அதன் பின்னரே எம்.ஜி.ஆர் மீண்டும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மூலமாக இவரை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பாகவே ஜெ. சில கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார்.
சோ-வை இங்கே அழகன் என்று குறிப்பிடுவது நிறைய பேருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். சிறுவயதிலேயே சோடாபுட்டி கண்ணாடி, ஒல்லியான உடல்வாகு, சினிமாக்களில் கோமாளி வேடம் என்று அவர் காமெடியாகவே மக்கள் மனதில் பதிந்துப் போயிருக்கிறார். உண்மையில் அவர் இளைஞராக இருந்தபோது மிகவும் அழகான தோற்றம் கொண்டவர். அது நாடகங்களிலோ, சினிமாக்களிலோ அவ்வளவாக வெளிப்படவில்லை.

‘முகம்மது-பின்-துக்ளக்’ திரைப்படத்தில் ஒரு மாதிரி வித்தியாசமான நடையில், அவர் நடக்கும்போதெல்லாம் சிரிப்பு வருவது மாதிரி கேரக்டரில் நடித்தார். ஆனால், அப்படத்தின் ப்ளாஷ்பேக் காட்சி ஒன்றில் பைஜாமா - குர்தா அணிந்து காளி சிலை முன்பாக சபதம் எடுக்கும் காட்சியில் கட்டழகுக் காளையாக ஜம்மென்று ஜொலிப்பார் சோ. அவரது முகம் அத்தனை களையாக இருக்கும். இந்த தோற்றத்தில் அவர் வேறு திரைப்படம் எதிலும் தோன்றியதாக நினைவில்லை.

டி.டி.கே. குழுமத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றிக் கொண்டே நாடகங்கள் நடித்து வந்தார். விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் குழுவில் இருந்த அத்தனை பேருமே ஆர்வத்தின் பேரில் பணியாற்றியவர்கள்தான். நாடகத்துக்கு என்று தனியாக சன்மானம் கிடையாது. கிடைக்கும் லாபத்தை அப்படியே சேர்த்து வைத்து வருடத்துக்கு ஒருமுறை அவரவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.

அறுபதுகளின் தொடக்கத்தில் இருந்த அரசியல் சூழலை சோ வெகுவாக கிண்டலடித்து தன்னுடைய நாடகங்களில் வசனமாக சேர்ப்பார். இது பரபரப்பாகும். அப்போதெல்லாம் நாடகம் நடத்த, நாடகத்தின் ஸ்க்ரிப்டை காவல்துறையிடம் சமர்ப்பித்து அனுமதி வாங்க வேண்டிய நடைமுறை இருந்தது.

பக்தவத்சலம் ஆட்சிக் காலம். அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவது குறித்த கிண்டல் ஏகத்துக்கும் ஒரு நாடகத்தில் இருந்தது. இந்த நாடகத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்க, வழக்கு தொடுத்து அனுமதி பெற சோ முயற்சித்தார். பிரச்சினை வேண்டாம் என்று அனுமதி கொடுத்து விட்டார்கள்.

ஒருமுறை இந்நாடகத்துக்கு காமராஜர் தலைமை தாங்கினார். மேடையில் பேசிய ஜெமினி கணேசன், ‘அரசு இந்நாடகத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை, ஆனால்- காமராஜரே தலைமை தாங்குமளவுக்கு சிறப்பான நாடகம்’ என்று கொளுத்திப் போட, காமராஜர் மேடையிலேயே நாடகத்தை கிழித்து தோரணம் கட்ட ஆரம்பித்து விட்டார். பதிலுக்கு சோவும் எதிர்த்துப் பேச, பாதியிலேயே காமராஜர் வெளிநடப்பு செய்தார். இந்த பரபரப்புதான் சோவை தமிழகம் எங்கும் பிரபலமாக்கியது. அதே காலக்கட்டத்தில் காமராஜரின் சீடரான சிவாஜியே சோவை சினிமாவுக்கும் அழைத்துச் சென்றது சுவையான முரண்.

சோ நாடக உலகில் உச்சத்தில் இருந்த அதே காலக்கட்டத்தில்தான் திமுக ஆட்சியை பிடித்தது. பார்ப்பனீய சிந்தனைகளின் முழு உருவமான சோவால் இந்த அரசியல் போக்கை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரியார், அண்ணா போன்றோரை கிண்டலடித்து வசனங்கள் எழுதினார்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அவர் எழுதி நாடகமாக்கிய ‘முகம்மது-பின்-துக்ளக்’ பெரும் வெற்றி பெற்ற நாடகம். இது இந்திரா காந்தியைதான் அதிகம் விமர்சிக்கிறது என்றாலும், அதில் தொடப்பட்டிருந்த மொழிப்பிரச்சினை மாதிரி விஷயங்கள் திராவிட இயக்கத்தாரை வெகுண்டெழச் செய்தது. இந்த எதிர்ப்பே அந்நாடகத்துக்கு பெரும் வெற்றியை தேடித்தந்தது.

‘முகம்மது-பின்-துக்ளக்’ நாடகத்தை சினிமாவாக எடுக்க சோ முயற்சித்தார். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இத்தனைக்கும் அப்படத்தை தயாரித்தவர் எம்.ஜி.ஆரிடம் மேனேஜராக இருந்த நாராயணன். ‘இந்நாடகம் இஸ்லாமியரை கேவலப்படுத்துகிறது’ என்றொரு பிரச்சாரம் கிளம்ப, படத்தின் டைட்டில் பாடலாக ‘அல்லா.. அல்லா... நீ இல்லாத இடமே இல்லை.. நீதானே உலகின் எல்லை’ என்கிற பாடலை போட்டு அந்தப் பிரச்சாரத்தை முறியடித்தார்.

திராவிட சிந்தனைகளின் கோட்டையாக திகழ்ந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்ச்சி. அங்கிருந்த மாணவர்களில் சிலர், ‘உன்னால் ஒரு பத்திரிகை நடத்த முடியுமா?’ என்று சவால்விட, ‘நடத்திக் காட்டுகிறேன்’ என்று சவால் விட்டு, விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியனின் ஆதரவில்தான் ‘துக்ளக்’ தொடங்கினார்.

சில கட்டுரைகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் பத்திரிகைகளுக்கு எழுதியிருந்தாரே தவிர அதுவரை சோவுக்கு நேரடி பத்திரிகை அனுபவங்கள் எதுவும் பெரியதாக இல்லை. ‘துக்ளக்’கின் முதல் இதழில் அப்படி இப்படியென்று 47 பக்கங்கள் தேத்திவிட்டார். ஒரு பக்கத்துக்கு என்ன போடுவது என்று தெரியவில்லை. பக்கம் முழுவதுமே ‘இந்தப் பக்கத்தை படிக்காதீர்கள்’ என்று எழுதிவைத்து ஒப்பேற்றினார். ‘மற்ற பக்கங்களை படித்து உங்களுக்கு என்ன பிரயோசனமோ, ஒன்றுமில்லாத இந்தப் பக்கத்தைப் படித்தாலும் உங்களுக்கு அதே பிரயோசனம்தான்’ என்கிற மாதிரி அடிக்குறிப்பும் எழுதினார்.

கலைஞர் 71ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருந்த நேரம். ‘துக்ளக்’ இதழ் பெரியாரை படுமோசமாக சீண்ட, திமுகவினர் துக்ளக் அலுவலகம் மீது தாக்குதல், இதழ்களை எரிப்பது என்று கிளம்பினார்கள். தானாகவே அணைந்திருக்க வேண்டிய விளக்கான ‘துக்ளக்’ இதன் காரணமாக பரபரப்பான இதழாக மாறியது (சோ ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த இன்னொரு ஆங்கில இதழ் படுமோசமாக தோற்றது என்பதையும் நாம் நினைவுகூற வேண்டும்) அதுவரை சினிமா டிக்கெட்தான் பிளாக்கில் விற்கப்படும். முதன்முதலாக ஒரு பத்திரிகை பிளாக்கில் வாங்கி படிக்கப்பட்டது. பிற்பாடு எமர்ஜென்ஸியின் போது இதே ‘துக்ளக்’ இதழை தன்னுடைய ‘முரசொலி’ அச்சகத்தில் அச்சிட கலைஞர் ஏற்பாடு செய்தார் என்பதும் இங்கே அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டிய வரலாறு.

எமர்ஜென்ஸியின் போதுதான் சோவுக்கு ஏராளமான அரசியல் தொடர்புகள் கிடைத்தது. அப்போது இந்திரா அரசுக்கு எதிராக அவர் காட்டிய துணிச்சல் என்றென்றும் போற்றப்பட வேண்டியது. எமர்ஜென்ஸி முடிந்த ஜனதா அரசு பொறுப்பேற்றபோதுதான் சோவின் அரசியல் புரோக்கர் பணிகள் தொடங்கின. மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம், வாஜ்பாய், அத்வானி, சரண்சிங், ஹெக்டே போன்ற தலைவர்களோடு அவர் நெருக்கமாக பழகக்கூடிய வாய்ப்புகள் அமைந்தன. 77 தேர்தலில் நேரடியாக ஜனதாவுக்கு சோ தேர்தல் பிரச்சாரமும் செய்தார்.

பின்னர் என்.டி.ராமாராவின் ஆட்சி ஆந்திரத்தில் கவிழ்க்கப்படக்கூடிய சூழல் இருந்தபோதும் சோவின் அரசியல் பின்னணிப் பணிகள் சிறப்பாக நடந்தன. ராஜீவின் இந்திரா காங்கிரஸ் தோற்ற நிலையில், தன்னுடைய லட்சியமான இந்து ராஷ்டிரத்துக்கு வி.பி.சிங் முட்டுக்கட்டையாக வந்தபோது அவரையும் கடுமையாக எதிர்த்தார்.
ஆச்சரியப்படக்கூடிய விஷயம் ஒன்று என்னவென்றால், எம்.ஜி.ஆரின் அதிமுகவை ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து கிண்டல் செய்துக் கொண்டிருந்தார். ‘துக்ளக்’கின் ‘ஒண்ணரைப்பக்க நாளேடு’, எம்.ஜி.ஆர். அளவுக்கு வேறு யாரையும் படுமோசமாக சேதாரப்படுத்தியதில்லை. ஆனால், தன்னுடைய அபிமான ஜெயலலிதா, அக்கட்சிக்கு தலைமையேற்றபோது அகமகிழ்ந்தார். இருப்பினும் ஜெயலலிதாவிடம் தான் எதிர்ப்பார்த்த முக்கியத்துவம் கிடைக்காத நிலையில் 96 தேர்தலில் யாருமே எதிர்பாரா வண்ணம் திமுக ஆட்சிக் கட்டில் ஏற உழைத்தார். பாஜக, திமுகவோடு கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சியை தக்கவைக்க சோவின் பின்னணிப் பணிகளும் காரணம். இதற்கு பரிசாகதான் ராஜ்யசபா உறுப்பினர் ஆனார்.

ரஜினியை எப்படியாவது பாஜகவுக்கு கொண்டுச் சேர்த்துவிட வேண்டும் என்கிற அவரது முயற்சி படுதோல்வி அடைந்தது. சோவின் குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றியாக நரேந்திரமோடியை மட்டுமே சொல்ல வேண்டும். 2002 குஜராத் கலவரங்களின் போதே, ‘இது நம்ம ஆளு’ என்கிற முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.

கடைசி பத்து, பதினைந்து ஆண்டுகளாக தன்னை அரசியல் விமர்சகர் என்கிற நிலையிலிருந்து பார்ப்பன சாதிமுகமாக அவராகவே வெளிப்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘ராஜகுரு’ என்கிற அடைமொழி அவரை இழிவானப் பொருளில் குறித்தாலும், அதை தன்னுடைய பெருமையாகவே சோ கருதினார். குருமூர்த்தி போன்ற சாதிய சிந்தனையாளர்களை பிரபலமாக்க கடுமையாக உழைத்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திராவிட கோடரிக் காம்புகளை வளர்த்துவிட்டார். கடந்த தேர்தலில்கூட தேமுதிக, திமுகவோடு கூட்டணி அமைத்து திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் உடல் படுமோசமாக நலிவற்ற நிலையிலும் பின்னணியில் காய்களை நகர்த்தினார். சங்கராச்சாரியார் கைது போன்ற தனக்கு உவப்பில்லாத வேலைகளை ஜெ. செய்தபோதும்கூட அவரோடு சமரசமானார். இதற்கு பலனாக ‘மிடாஸ் இயக்குநர்’ போன்ற கவுரவங்கள் அவருக்கு கிடைத்தன.

வாழ்நாள் முழுக்க திராவிடத்தின் அழிவை கண்டு களிக்க கனவு கண்டு கொண்டிருந்தவர், அது பகல் கனவு ஆன நிலையிலேயே கண்ணை மூடியிருக்கிறார்.

புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா!

அது 1988ஆம் ஆண்டு. சென்னைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். இரவு எட்டு மணி இருக்கலாம். ஏராளமான பொதுமக்கள் திரண்டிருக்கிறார்கள். கொடியேற்ற ஜெயலலிதா வருகிறார். அந்தக் கூட்டத்திலே ஒரு சிறுவனும் இருந்தான். ஜெயலலிதா வந்தவுடன் உதயசூரியன் சின்னத்தை காட்டுவேன் என்று நண்பர்களிடம் சபதம் செய்திருந்தான். இரவு 11.30 மணியளவில் ஜெ. புயலென வருகிறார். மின்னல் வேகத்தில் கொடி ஏற்றுகிறார். "புரட்சித்தலைவி வாழ்க" கோஷம் விண்ணை முட்டுகிறது. உதயசூரியன் சின்னம் காட்டுவேன் என்று சபதம் எடுத்தச் சிறுவனோ அம்மாவின் வசீகரத்தால் கவரப்பட்டு இரட்டை இலை காட்டுகிறான். அந்த வசீகரம் தான் புரட்சித்தலைவி ஜெயலலிதா. மக்களை கவர்ந்திழுக்கக் கூடிய அவரது வசீகரமான முகம் தான் அவரது வெற்றிகளுக்கெல்லாம் அச்சாணி.

உலகிலேயே ஓர் அரசியல் தலைவருக்கு மிக அதிகமான நெகடிவ் பாயிண்ட்ஸ் இருக்கிறது என்றால் அது செல்வி ஜெயலலிதாவுக்கு தான். அவரது சர்ச்சைக்குரிய நட்பு, பிடிவாதம், கோபம், முன்னுக்குப் பின் முரணாக நடக்கும் செயல், அவசரப்படும் தன்மை, ஆட்சியியல் நிர்வாகத் திறமையின்மை என்று ஏகப்பட்ட பின்னடைவுத் தரக்கூடிய விஷயங்கள் அவரிடம் உண்டு. இருப்பினும் தொடர்ந்து அரசியல் ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற்று வருவதற்கு காரணம் மாற்றாரையும் வசீகரிக்கக்கூடிய அவரது "மாஸ்".

அதுபோலவே பொதுவாழ்வில் ஈடுபடக்கூடிய ஒவ்வொரு பெண்ணுக்கும் ICON அவர். எத்தகைய கடுமையான சூழலையும் முறியடித்து வெற்றி பெறுவது எப்படி என்பதற்கு ஜெயலலிதா தான் சரியான முன்னுதாரணம். எப்படியெல்லாம் ஒரு பெண் நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கும் அவரே முன்னுதாரணம். எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர் இதைத்தான் செய்வார் என்று கொஞ்சமும் கணிக்க முடியாத இரும்புத்திரை அவரது மனம். அம்மா ஒரு முடிவெடுத்து விட்டால் அதை ஆண்டவனால் கூட மாற்ற முடியாது என்பது அதிமுகவின் கடைக்கோடித் தொண்டனுக்கும் தெரியும்.

82ஆம் ஆண்டு ஜூன் மாதம் திரையுலகில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் ஜெயலலிதா. அரசியலில் ஈடுபட முடிவு செய்து எம்.ஜி.ஆர். முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். இவரெல்லாம் முதல்வர் ஆவார் என்று யாருமே எண்ணிப் பார்த்திருக்க முடியாது. சுமார் ஆறு மாதம் கழித்து 83 ஜனவரியில் கட்சியின் கொ.ப.செ.வாக அறிவிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் அரசின் ஸ்டார் திட்டமான சத்துணவுத் திட்டத்தின் உயர்குழுவிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக கட்சியைப் பிடியில் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டார். அவருக்கென தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஆதரவாளர்கள் பெருகினார்கள். சேலம் கண்ணன் என்பவர் ஜெயலலிதாவின் காட்பாதராகச் அந்நேரத்தில் செயல்பட்டார் (இப்போது அட்ரஸே இல்லை. இருக்கிறாரோ இல்லையோ?)

மேலும் மூன்று மாதம் கழிந்த நிலையில் ஜெ.வின் வற்புறுத்தலால் எம்.ஜி.ஆர் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியும் வழங்கினார். பாராளுமன்றத்துக்கு சென்றவர் அறிஞர் அண்ணா அமர்ந்த இருக்கை எதுவென்று கேட்டு, அவ்விருக்கையை தனக்கு வாங்கிக் கொண்டார். இதற்குப் பின் அவரது வளர்ச்சி ஜெட் வேகம் தான். எம்.ஜி.ஆராலேயே அவரது வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை. எம்.பியாக தேர்ந்தெடுக்கப் பட்டதுமே யாரும் எதிர்பார்க்காத வகையில் நேரடியாக பிரதமராக இருந்த இந்திராவைப் போய் சந்தித்தார்.

பன்மொழி ஆற்றல் ஜெ.வின் பெரிய பலம். குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாக, சுவையாகப் பேசும் ஆற்றல் பெற்றவர். பாராளுமன்றத்தின் பல விவாதங்களில் அனல்பறக்க அருமையான ஆங்கிலத்தில் உரையாற்றினார். இந்தியைத் தவிர வேறு மொழி தெரியாத பல வடநாட்டு எம்.பி.க்கள் மிரண்டு போயினர். குஷ்வந்த் சிங் அப்போது மேல்சபை எம்.பியாக இருந்தார். அம்மாவின் ஆங்கிலப் பேச்சாற்றலால் கவரப்பட்ட அவர் கூட ‘அம்மாவின் ரசிகர்’ ஆனார். வட இந்தியத் தலைவர்களோடு ஜெ.வுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

இதனால் அரசியலின் சித்து விளையாட்டு அம்மாவுக்கு அத்துபடி ஆனது. பாராளுமன்ற நூலகத்தில் பெரும் நேரத்தை செலவழித்ததாக அவரோடு எம்.பி.யாகப் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள். இந்நிலையிலே எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்திரா மரணமடைந்த நிலையில் பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் பாராளுமன்றத் தேர்தலை நடத்துகிறார். பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலும் அனுதாப அலைக்காக இணைந்தே நடக்கிறது. தமிழ்நாட்டிலே நெடுஞ்செழியன் முதல்வருக்கான பொறுப்புகளை ஏற்று பணியாற்றுகிறார்.

அரசியல் அனல் பறந்தது. கலைஞரே கூட எம்.ஜி.ஆர் திரும்பி வந்தால் அவர் தான் முதல்வர் என்று அறிக்கை விட, அம்மா மட்டும் உஷாராக இருந்தார். ராஜீவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலே தமிழ்நாட்டின் நிர்வாகம் எம்.ஜி.ஆர் இல்லாமல் சீர்குலைந்து இருப்பதால் தன்னை முதல்வராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அரண்டு போனார் ராஜீவ். ஜெ.வின் அந்த அசட்டுத் துணிச்சல் தான் இன்றுவரை அவரைக் காக்கிறது.

87ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மரணமடைகிறார். எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் கிடத்தப்பட்டிருக்கிறது. கட்சி யார் பக்கம்?  அண்ணா மறைந்தபோது நடந்தது போல திரைமறைவில் காய்கள் நகர்த்தப்படுகிறது. ஜெயலலிதா மட்டும் வரக்கூடாது என்று அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் சிலரால் முடிவு எடுக்கப்படுகிறது. ஜானகி அம்மாளை முன் நிறுத்தும் யோசனையை ஆர்.எம்.வீ செயல்படுத்தத் தொடங்குகிறார். எம்.ஜி.ஆரின் உடல் ஏற்றப்படும் பீரங்கி வண்டியிலே ஜெயலலிதாவும் ஏற முயற்சிக்க ஆரம்பத்திலேயே அறுத்து விடும் நோக்கில் ஜானகி அம்மாளின் உறவினரான நடிகர் தீபன் எட்டி உதைக்கிறார். எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.ராமலிங்கம் (இப்போது திமுக) ஓடிவந்து இழுத்து கீழே தள்ளுகிறார்.

இவ்வாறெல்லாம் சொந்தக் கட்சிக்காரர்களாலேயே அவமானப்படுத்தப்பட்ட, அடிக்கப்பட்ட ஜெயலலிதா அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரானது தான் காலத்தின் கோலம். அதிமுக இரண்டாகப் பிரிந்தது. ஜானகி அம்மாளை முன்னிறுத்தி ஆர்.எம்.வீயும், நெடுஞ்செழியனை முன்னிறுத்தி ஜெ.வும் கட்சியைப் பிரித்தார்கள். தக்க சமயத்தில் நெடுஞ்செழியனைத் தட்டி விட்டு தானே முன்னுக்கு வந்தார் ஜெ. நெடுஞ்செழியனோ நால்வர் அணி அமைத்து நாசமாய்ப் போனார்.

இந்தச் சமயத்தில் ஒரு விஷயம் பார்க்க வேண்டும். ஜெ. மட்டும் இந்தக் காரியத்தைச் செய்ததில்லை. இதுபோல தங்களுக்கு மேலே இருந்த தலைவர்களை தட்டி விட்டுத் தான் (அமைதிப்படை அமாவாசை போல) பல தலைவர்கள் புகழ் பெற்றிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ராஜாஜியை அமுக்கி மேலே வந்த காமராஜர், நெடுஞ்செழியன் - சம்பத் - மதியழகன் - அன்பழகன் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு மேலே வந்த கலைஞர், அந்தக் கலைஞருக்கே ஆப்பு வைத்த எம்.ஜி.ஆர், காமராஜரை திணறடித்த இந்திரா அம்மையார் என பல உதாரணங்கள் உண்டு. ஒரு வெற்றிகரமான அரசியல்வாதிக்கு தேவையான வல்லமை இது. இன்றைய தேதியிலும் அதிமுகவை இரும்புக் கோட்டையாக ஜெயலலிதா வைத்திருக்க இந்த வல்லமை தான் காரணம்.

89 சட்டமன்றத் தேர்தல் வருகிறது. நான் தான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று ஜானகியும், ஜெ.வும் ஆளுக்கொரு பக்கமாக அறிக்கை விட்டு மோதிக் கொள்கிறார்கள். காங்கிரஸ் எப்படியாவது இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கோட்டை கட்டுகிறது. தேர்தல் முடிவுகள் பலருக்கும் (ஏன் கலைஞருக்கும் கூட) அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் அமைந்தது. பிரதான எதிர்க்கட்சித் தலைவி ஆனார் ஜெயலலிதா. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அரசியல் தலைவர்களில் முதலாவதாக தன் சூறாவளி சுற்றுப் பயணத்தை அறிவித்தவரும் அவர் தான். முதலில் வந்த வேட்பாளர் பட்டியலும் அவருடையது தான். இந்த ‘முதல்’ குணம் இன்றுவரை அவரிடம் மாறவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் கூட எல்லா "முதல்’-லும் அவருடையது தான்.

எதிர்க்கட்சித் தலைவி ஆன பிறகு புத்திசாலித்தனமாக கட்சியை இணைத்தார். வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வார் ஜெயலலிதா. அதுவரை அரசியலில் அவருக்கு பெரும் நெருக்கடிகள் கொடுத்த ஆர்.எம்.வீ-யுடனேயே கட்சியை இணைக்க கை கோர்த்தார். காங்கிரசிடம் இணக்கமாக போக காய்களை நகர்த்தினார். தான் முன்னேற யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேருவார், யாரை வேண்டுமானாலும் வீழ்த்துவார்.

இந்த வேளையிலே மத்தியிலே வி.பி. சிங்கிடம் ஆட்சியை இழந்த காங்கிரசுக்கு ஜெ. தேவதையாகத் தெரிந்தார். வி.பி. சிங் பா.ஜ.க.வை முறைத்துக் கொள்ள சந்திரசேகருக்கு அதிர்ஷ்ட தேவதையின் சகாயம் காங்கிரஸ் உருவில் கிடைத்தது. காங்கிரஸ் மூலமாக சந்திரசேகரை உசுப்பேத்தி திமுக ஆட்சியைக் கலைத்தார் ஜெ. இந்த அயோக்கியத்தனத்தில் குடியரசுத் தலைவராக இருந்த வெங்கட்ராமனுக்கும் கூட்டு உண்டு.

91ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ராஜீவ் எதிர்பாராதவிதமாக மரணமடைந்து விட அம்மாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம். தமிழக சட்டமன்றத்திலேயே யாரும் பெறாத அளவுக்கு பெருவாரியான வெற்றியை காங்கிரஸ் தயவில் பெற்றார் அம்மா. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர். இந்தியாவிலேயே இன்றுவரை (43 வயது) இளம்வயதில் முதல்வர் பொறுப்பை ஏற்ற ஒரே பெண். தமிழகத்திலும் மிகக்குறைந்த வயதில் முதல்வர் ஆனவர் இவர் தான். வெற்றி பெறும் வரை தான் அவருக்கு ஏணி வேண்டும். வெற்றி பெற்றப் பின்னால் அதை எட்டி உதைப்பது அவர் வழக்கம். 92ஆம் ஆண்டு ஏணி எட்டி உதைக்கப்பட்டது. காங்கிரஸ் அவமானப்படுத்தப் பட்டது. எட்டி உதைக்கப்பட்ட ஏணியே மீண்டும் மீண்டும் அவர் ஏறிச்செல்ல உதவுவது தான் அரசியலின் விசித்திரம். அம்மாவின் விவேகம் என்றும் சொல்லலாம்.

92ஆம் ஆண்டு ராஜிவின் முதல் நினைவுநாள் வருகிறது. இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் ஸ்ரீபெரும்புதூருக்கு அஞ்சலி செலுத்த வருகிறார்கள். அம்மா போகவில்லை. இதுகுறித்து சட்டமன்றத்திலே ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்புகிறார். "முதல்வர் ஏன் ராஜீவ் நினைவிடத்துக்குச் செல்லவில்லை?" உடனே முதல்வர், "இதுவரை டெல்லியிருந்து தமிழகம் வந்த எந்த காங்கிரஸ் தலைவனாவது எம்.ஜி.ஆர், அண்ணா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திதுண்டா? நான் மட்டும் ஏன் செலுத்த வேண்டும்?" - இந்தத் துணிச்சல் தான் இன்று வரை எந்த சூழ்நிலையிலும் அவரை தளர விடாமல் காப்பாற்றி வருகிறது.

91 - 96 ஆட்சிக்காலத்தில் அவர் சார்ந்த சாதிக்கு அவர் முன்னுரிமை தருகிறார் என்று எதிர்க்கட்சிகளால் பிரச்சாரம் செய்யப்படும் வேளையில் தன் இமேஜைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் சட்டமன்றத்திலேயே "நான் பாப்பாத்தி தான்" என்று அறிவித்தார்.... அவர் அதுபோல சொன்னது சரியா? தவறா? என்பது வேறு விஷயம். இமேஜைப் பற்றி பயமில்லாது சொன்ன அவரது தைரியம் வேறு எந்த அரசியல்வாதிக்கும் இன்றைய நிலையில் இல்லை.

96ல் நடந்த தேர்தலில் வரலாறு காணாத தோல்வி. அம்மாவுக்கு வெற்றி எப்படி என்ற வித்தை அத்துப்படியானாலும், அந்த வித்தையை தோற்றுப் போன பின்பு தான் பயன்படுத்துகிறார். 98 பாராளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராவிதமாக ஒரு வித்தியாசமான கூட்டணியை உருவாக்கினார். இந்தியாவிலேயே அதுவரை அப்படி ஒரு கூட்டணி அமைந்திருக்குமா என்பது சந்தேகமே. அது எப்படி வெற்றி பெறும் என்று கணித்தாரோ தெரியவில்லை. பா.ஜ.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்த்து பெரும் வெற்றி பெற்றார்.

அம்மா ஒரு புதிர். எந்த வேளையில் என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது. கட்சியில் யாருக்கு பதவி தருவார். யாருக்கு கல்தா கொடுப்பார் என்று யாரும் ஜோசியம் சொல்ல முடியாது. திடீரென்று அடிமட்டத் தொண்டனை தூக்கி மேலே வைப்பார். மேலே இருந்தவரைத் தூக்கி கீழே எறிவார். இதற்கெல்லாம் அவர் ஏதாவது லாஜிக் வைத்திருக்கிறாரா என்று கொஞ்சமும் புரியவில்லை. இவரது அடுத்த மூவ் என்ன என்பது தெரியாமலேயே கலைஞரின் தலையில் இருந்த கொஞ்ச நஞ்ச முடியும் காணாமல் போனது. ஆனால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் எப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறான். ‘அம்மா ஏதாவது செய்வார்’. அந்த நம்பிக்கை திமுக உட்பட வேறு எந்தக் கட்சித் தொண்டனுக்கும் கட்சித் தலைமையால் தரமுடியாமல் இருப்பது அதிமுகவின் பெரிய பலம்.

பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவும் அமைச்சரவையில் இடம் பெறுகிறது. 91 ஸ்டைலில் திமுக ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க.வை நெருக்குகிறார் அம்மா. பா.ஜ.க. மறுக்க அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சு.சாமியுடன், சோனியாவுடனும் டீப்பார்ட்டியில் கைகோர்க்கிறார். எனக்குத் தெரிந்து பாஸ்டன் தேநீர் விருந்துக்குப் பிறகு மிகவும் உலகப் புகழ்பெற்ற தேநீர் விருந்து அம்மா கலந்து கொண்டதுதான்.

பா.ஜ.க. ஆட்சி கவிழ்கிறது. காட்சிகள் வேகவேகமாக மாறுகிறது. 99 தேர்தல். இந்த முறை விசித்திரமான அரசியல் விளையாட்டில் வெற்றி எதிரிகளுக்குப் போய் சேர்கிறது. துவண்டு விட்டாரா அம்மா? அதுதான் இல்லை. ஏராளமான வழக்குகள். தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை, அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கிடையே 2001 தேர்தலைச் சந்தித்தார். சூறாவளி சுற்றுப் பயணம். கூட்டணிக் கட்சிகளிடையே தாராளம் என்று தன் பலத்தை அசுரபலம் ஆக்கி தேர்தலிலே வென்றார். 134 தொகுதிகளில் மட்டுமே நின்று மெஜாரிட்டியை அதிமுக பிடித்தது அகில இந்திய அளவிலான சாதனையாக எடுத்துக் கொள்ளலாம்.

இவருடைய 2001 ஆட்சிக்காலத்தில் பலரின் புருவத்தை உயர்த்தும் அளவுக்கு சில முடிவுகளை எடுத்தார். அறிவிக்கப்படாத ராஜகுருவாக இவருக்கு விளங்கிய சங்கராச்சாரியாரை கைது செய்தது இவர் புகழை உலகெங்கும் பரப்பியது. எந்தச் சூழ்நிலையில் அந்த முடிவை எடுத்தார் என்பது இதுவரைக்கும் புரியாத புதிர் தான்.

2006ல் தோல்வி. இதோ முடங்கிவிடாமல் 2009 பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆனால் இம்முறை இதுவரை அவரிடம் பார்க்காத நிதானத்தைப் பார்க்க முடிகிறது. இந்த நிதானம் அவருக்கு வெற்றியை தருமா என்பதை தமிழக வாக்காளர்கள் அளிக்கும் தீர்ப்பில் தான் தெரிந்துகொள்ள முடியும்.

தோல்வியின் விளிம்புக்கும் சென்றிருக்கிறார். வெற்றியின் அதிகபட்ச உயரத்துக்கும் சென்றிருக்கிறார். யாராலும் புரிந்துகொள்ள முடியாத கவர்ச்சி அதிரடி அரசியல்வாதி இவர். இன்னமும் குறைந்தது 15 ஆண்டுக்காலத்துக்கு இவரது பங்கேற்பினை தமிழக அரசியலில் மறுக்க முடியாது. முகலாய மன்னர் அவுரங்கசீப்பை போல மகிழ்ச்சி, கோபம், நயவஞ்சகம், பிடிவாதம், விட்டுக் கொடுக்காத தன்மை, கனிவு, தலைமைப் பண்பு எல்லாம் கலந்த கலவை தான் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா!

(2009ஆம் ஆண்டு ஜெ. பிறந்தநாளை முன்னிட்டு ஓர் இணைய இதழுக்கு எழுதிய கட்டுரை)

29 நவம்பர், 2016

கருப்புப்பண ஒழிப்பு மோசடி : ஊழல் கழிசடைகளின் பகற்கொள்ளை!

கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று களமிறங்கி இருக்கும் இந்தியப் பிரதமர், உண்மையைதான் பேசுகிறாரா? சாமானிய மக்களை ஐந்துக்கும், பத்துக்கும் ஏ.டி.எம். வரிசைகளிலும், வங்கிகளுக்கு முன்பான ஜனநெரிசலிலும் அலைக்கழிக்கும் இந்திய அரசாங்கத்தின் உண்மையான நோக்கம்தான் என்ன?

‘எழுபது ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நோயை ஏழே நாட்களில் விரட்ட முடியாது’ என்று வீராவேசமாக பாஜகவினர் பேசிவருகிறார்களே? நாட்டை அரித்துக் கொண்டிருக்கும் நோய் உண்மையிலேயே கருப்புப் பணம்தானா?

சிக்கலான எந்தப் பிரச்சினைகளுக்கும் எளிமையான தீர்வு இருக்கவே முடியாது என்பதுதான் உலக வரலாறு நமக்கு எடுத்துரைக்கும் உண்மை. அப்படியிருக்க ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்று விட்டால் கருப்புப் பணம் ஒழிந்துவிடுமென்றால், ஊழலில் புரையோடி திவால் ஆகும் நிலையில் இருக்கும் உலகின் மற்ற நாடுகளும் இந்த எளிமையான தீர்வை எட்டியிருக்க வேண்டுமா, இல்லையா?

‘ஜெய்ஹிந்த்’, ‘பாரத் மாதா கீ ஜே’ போன்ற உசுப்பேற்றும் தேசபக்தி கோஷங்களை புறம் தள்ளிவிட்டு யதார்த்தமாக கொஞ்சம் யோசிப்போம்.

உயர்மதிப்பு கரன்ஸிகளான 500, 1000 அரசால், வங்கிகள் வாயிலாக திரும்பப் பெறப்பட்டு மாற்றாக புதிய 2000, 500 ரூபாய் தாள்கள் வினியோகிக்கப்படுகின்றன. ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் தாள்களின் மதிப்பு சுமார் 14 லட்சம் கோடி. இந்த இருபது நாட்களில் வங்கிகளில் அடாவடியாக மக்களிடம் இருந்து பிடுங்கிய பணம் சுமார் 8 லட்சம் கோடி. இன்னும் ஒரு மாத காலத்தில் மேலும் பல்லாயிரம் கோடிகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும்.

பழைய கரன்ஸிகளுக்கு மாற்றாக இவர்கள் வழங்கிய புது கரன்ஸி, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாற்றித் தந்த பணத்தின் மதிப்பு குறித்த தொகைரீதியான தகவல்கள் எதுவும் துல்லியமாக இல்லை. வங்கிகள் தவிர்த்து மக்களிடம் புழக்கத்தில் மூன்று அல்லது நான்கு லட்சம் கோடிகளாவது அன்றாடச் செலவுகளுக்கு இருக்கலாம் என்று கருதலாம். இந்தப் பணம் கூட மக்களிடையே இல்லாமல் இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் எதுவுமே நகர வாய்ப்பில்லை.

இன்னமும் பழைய மதிப்பை ஈடுகட்டும் அளவுக்கு ரிசர்வ் வங்கியும் 2000 மற்றும் 500 ரூபாய் தாள்களை முழுமையாக அச்சிட்டிருப்பதாகவும் தெரியவில்லை. இவை ஒன்று அல்லது இரண்டு லட்சம் கோடியாக இருக்கலாம். ஒருவேளை அதற்கும் கூடுதலாக இருக்கலாம்.

சரியா? ஒரு வழியாக இந்த பதினான்கு லட்சம் கோடி என்பது ஏறக்குறைய ஒருவழியாக கணக்குக்கு வந்துவிடுகிறது.

அப்படியெனில், கணக்குக்கு வராத பணம் - அதாவது கருப்புப்பணம் - எங்கே போனது? கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் எல்லாம் அப்படியே எரித்துவிடுவார்கள், ஆற்றில் எறிந்துவிடுவார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பு பொய்யாகதானே போயிருக்கிறது? மோடி அரசின் இந்த செயல் திட்டம் மன்மோகன்சிங் சொல்வதை போல வரலாற்று மோசடி அல்லவா? மோடியின் இந்த அறுவைச் சிகிச்சைக்கு பின்னால் என்னதான் நோக்கம் இருக்க முடியும்?

இங்குதான் ரிச்சர்ட் பேக்கர் எழுதிய ‘அமெரிக்கா : ஜனநாயக மோசடியும், வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்’ கட்டுரை நமக்கு, இந்த மோசடியின் பின்னால் இருக்கும் நிஜமான அரசியலை அம்பலப்படுத்துகிறது.

இக்கட்டுரை அமெரிக்காவின் சோசலிஸம் மற்றும் விடுதலைக்கான கட்சியால் வெளியிடப்பட்டது. தமிழில் 48 பக்க சிறுநூலாக விடியல் பதிப்பகத்தால் நிழல்வண்ணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 2013ல் வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்நூலின் பதிப்புரையில், ‘கடந்த 25 ஆண்டுகளாக உலகமயமாக்கலின் விளைவாக உற்பத்தித்துறை முதலாளிகள் (பெரும்பாலும் சிறு/நடுத்தர/குறு முதலாளிகள்) முதல் அனைத்துத் துறை உழைப்பவர்கள் வரை தங்கள் உபரி சேமிப்பை/உழைப்பை வங்கிகள் என்கிற கொள்ளையர்களிடம் இழந்துவருகிறார்கள். நிதி மூலதனத்தின் ஆட்சியே உலகின் ஆட்சி’ என்று குறிப்பிடப்படுகிறது.

மேலும், ‘அத்தகைய கொள்ளையின் அடுத்தக்கட்டம் இந்தியாவில் இனி கூடுதலாக நடக்க உள்ளது’ என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே மிகச்சரியாக தற்போது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை குறித்து ஆரூடம் சொல்கிறது.

வங்கிகளின் லாபவெறிச் செயல்பாடுகள் அமெரிக்கப் பொருளாதாரத்தையே பெரும் நெருக்கடிக்கு எப்படி உள்ளாக்கியது, அந்த நெருக்கடியை அரசின் மீது திணித்து தம்மை மீட்டுக் கொள்ளும் முயற்சியில் மக்களை எப்படி தெருத்தெருவாக விரட்டித் தள்ளினார்கள், மக்களின் வரிப்பணத்தின் பெரும்பகுதியை அபகரித்துக் கொண்டு மக்களை எப்படி ஓட்டாண்டி ஆக்கி வருகிறார்கள் என்பதை விளக்குவதே அந்நூலின் சாரம்.

வீட்டுக்கடன், கல்விக்கடன், பர்சனல் லோன், கடன் அட்டைகள் எனும் பெயரில் மக்களை சுரண்டிக் கொழிக்கும் வங்கிகள், பெருமுதலாளிகளுக்கு மக்களின் பணத்தை கூட்டிக் கொடுத்துவிட்டு, மக்கள் தங்கள் கடனை கட்டாததால்தான் நாங்கள் திவாலாகப் போகிறோம் என்று அரசை மிரட்டி, அரசிடமிருந்து மக்களின் வரிப்பணத்தையும் அபகரிக்கின்றன என்று அந்நூல் விலாவரியாக தகுந்த உதாரணங்களோடு சொல்கிறது.

2008ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்க அரசாங்கம் மக்களின் பணத்திலிருந்து 700 பில்லியன் டாலரை (42,00,000 கோடி ரூபாய்) வங்கிகள், நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக செலவிட்டது. இந்திய அரசுக்கு அவ்வளவு துப்பில்லை. மக்களை வலுக்கட்டாயமாக தங்களிடமிருக்கும் ஐநூறு, ஆயிரம் பணத்தை வங்கிகளுக்கு தாரைவார்க்க வைத்திருக்கிறது. இவ்வகையில் முதலாளித்துவத்தின் உச்சம் என்று சொல்லப்படும் அமெரிக்காவைவிட மிக கீழ்த்தரமாக செயல்பட்ட நாடு என்கிற அவலமான பெருமை நமக்கு கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் அவ்வாறு வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட மக்கள் பணம், எவ்வகையில் செலவிடப்பட்டது, எப்படி வங்கிகளின் நிதிநிலைமையை சரிசெய்தது என்கிற கேள்விகளுக்கு எந்த அமெரிக்க வங்கியுமே பதில் அளிக்கவில்லை. ஜே.பி.மார்கன் சேஸ், நியூயார்க் மெல்லன், மார்கன் ஸ்டான்லி உள்ளிட்ட வங்கிகள் நேரடியாகவே அது ரகசியம், வெளியிடுவதற்கில்லை என்று மறுத்தன.

2008 பொருளாதார வீழ்ச்சியின் போது இந்தியா பெருமளவில் பாதிக்கப்படவில்லை. அயல்நாட்டு முதலீடுகள் குறைந்தனவே தவிர, நேரடியாக இந்திய சந்தை பாதிக்கப்படாத அளவுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பானதாகவே இருந்தது. இங்கிருக்கும் வங்கிச் சந்தை பெரும்பாலும் பப்ளிக் செக்டார் நிறுவனங்களாக அரசின் கட்டுப்பாட்டில் (தேசியமயமாக்கிய இந்திராவுக்கு நன்றி) இருந்ததால், அமெரிக்க வங்கிகள் அளவுக்கு ஆணவத்தில் ஆடாமல் இருந்தன.

ஆனால்-

அமெரிக்காவில் வங்கிகளுக்கு புஷ்/ஒபாமா காலக்கட்டங்களில் காட்டப்பட்ட ‘செல்லம்’, இங்கிருந்த வங்கி முதலைகளின் நாக்கில் நீர் சுரக்க வைத்திருக்க வேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் கமிஷன் காரணமாகவோ, அரசியல் அழுத்தத்தாலோ அல்லது வேறு என்ன எழவுக்காகவோ பெருமுதலாளிகளுக்கு கடனாக வாரி வழங்கத் தொடங்கினார்கள். அந்நிய முதலீடு குறைந்ததால், உள்ளூர் வங்கிகளின் கடனில்தான் தொழில் விரிவாக்கம் சாத்தியம் என்று இந்நடவடிக்கைகளுக்கு சப்பைக்கட்டு கட்டப்பட்டது.

கடனை வாங்கிய விஜய் மல்லையாக்கள் உல்லாசமாக அவற்றை செலவழித்துவிட்டு, கடனை திருப்பிக் கட்ட முடியாது என்று அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்தார்கள். வங்கிகளில் நிதிநிலைமை டாஸ்மாக் குடிகாரனை காட்டிலும் மோசமாக தள்ளாட ஆரம்பித்தது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டுத் தொடக்கத்தில் 15 பொதுத்துறை வங்கிகள் ஒட்டுமொத்தமாக தங்களுக்கு 23,493 கோடி ரூபாய் நஷ்டம் என்று கணக்கு காட்டியிருக்கின்றன. பஞ்சாப் நேஷனல் பேங்க் (5,367 கோடி), கனரா பேங்க் (3,905 கோடி), பேங்க் ஆஃப் இண்டியா (3,587 கோடி), பேங்க் ஆஃப் பரோடா (3,230 கோடி) என்று நஷ்டத்தில் சாதனை புரிந்திருக்கின்றன நமது வங்கிகள். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இதே காலாண்டில் இந்த வங்கிகள் 8,500 கோடி ரூபாய் லாபம் காட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓராண்டுக்குள் அப்படி என்ன பெரிய எழவு இந்தியாவுக்கு விழுந்துவிட்டது என்றுதான் தெரியவில்லை.

இதற்கு காரணமானவர்கள் யார் என்று விசாரணை நடத்த வேண்டிய அரசோ, கள்ளப் பண முதலைகளை வேட்டையாடுகிறோம் என்று மக்களை தெருவில் நிற்கவைத்திருக்கிறது. இந்த மோசடிகளை மூடி மறைக்கதான் இந்த நடவடிக்கையோ என்றும் கருத வேண்டியிருக்கிறது.
இந்த வீழ்ச்சிக்கு 90% காரணம் வராக்கடன்கள்தான் என்று வங்கிகள் ஒப்பாரி வைக்க, அடுத்த ஓராண்டுக்குள் இந்தப் பிரச்சினையை ‘எப்படியாவது’ சரி செய்துவிடுங்கள் என்று ரிசர்வ் வங்கி கறார் காட்டியது. இல்லையேல் தேசத்தின் பொருளாதாரமே ஆடிவிடும் என்று கடந்த ஆண்டு இறுதியிலேயே ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் எச்சரித்திருந்தார். அப்போது அவர் பயன்படுத்திய வார்த்தைதான், இப்போது மோடி தானே கண்டுபிடித்து பேசுவதை போல ஒப்பேத்திக் கொண்டிருக்கும் deep surgery. ஆனால், ஒரு போதும் 500, 1000 செல்லாது என்று ஓரிரவில் அறிவித்து மக்களை பரிதவிப்புக்கு உள்ளாக்கும் அறுவைச் சிகிச்சையை ரகுராம் ராஜன் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார். மோடியை மாதிரி எக்கனாமிக்ஸில் மொக்கையா அவர்?

பொதுத்துறை வங்கிகள் ததிங்கிணத்தோம் போடும் இதே காலாண்டில்தான் தனியார் வங்கிகள் 14% வளர்ச்சியை காட்டியிருக்கின்றன. அதாவது தொழில் வளர்ச்சிக்காக அங்கே கடன் வாங்கிய பெருமுதலைகள், அந்தப் பணத்தில் பெரும்பான்மையை தங்கள் சொந்தக் கணக்கில் இங்கே பாதுகாத்துக் கொண்டு, அரசு வங்கிகளிடம் நஷ்டம், கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்று பெப்பே காட்டுகிறார்கள் என்று நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது.

காசில்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த வங்கிகளில்தான் இப்போது 500, 1000 செல்லாது என்று நம்முடைய பணத்தை கொண்டுப்போய் கொட்டிக் கொண்டிருக்கிறோம். நாம் பணத்தைக் கொட்டியதுமே பெருமூச்சு விட்ட ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா, வாங்கியதற்கு வாலாட்டும் விதமாக உடனடியாக ஏழாயிரத்து சொச்சம் கோடியை வெட்கமே இல்லாமல் பெருமுதலாளிகளுக்கு writeoff செய்திருக்கிறது.

ஊழலில் ஊறித்திளைத்து மக்களுக்கு உபதேசம் செய்யும் இந்த உத்தமன்களின் பொருளாதார நிலைமையை சீர்செய்யதான் நாம் தெருத்தெருவாக அலைந்துக் கொண்டிருக்கிறோம். போட்ட பணத்தை ஏடிஎம்மில் எடுக்க முடியாமல் / வங்கிகளிலும் வாரத்துக்கு இவ்வளவு என்கிற கட்டுப்பாட்டில் முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறோம். நம் பணத்தை கொடுக்க நமக்கே மை வைத்து அசிங்கப்படுத்துகிறார்கள். நிஜமான கருப்புப் பணமெல்லாம் பாதுகாப்பாக தங்கமாகவும் / வெளிநாட்டு வங்கிகளிலும் ‘அரசு மரியாதையோடு’ அடக்கமாக இருக்கிறது.

‘ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே’ என்பதுதான் மோடி அரசின் திட்டம். மக்களின் பணத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கி, பெருமுதலாளிகளுக்கு கடனாக கொடுக்கப்பட்டதால் வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சமாளிப்பதே இந்த கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையின் நிஜமான நோக்கம். உலக வரலாற்றிலேயே மக்களை பொய் சொல்லி வதைக்கும் இப்படியானதொடு மோசடி நாடகத்தை பாசிஸ்ட்டு ஆட்சியாளர்கள் கூட அரங்கேற்றியதில்லை.

23 நவம்பர், 2016

சத்ரியன் மறைந்தார்!

இந்த தலைமுறையினரில் எத்தனை பேருக்கு இந்த இயக்குநரை தெரியுமென்று தெரியவில்லை. எண்பதுகளின் குழந்தைகளான எங்களுக்கு கே.சுபாஷ், மிகப்பெரிய இயக்குநர்.

அந்த காலக்கட்டத்தில் ரஜினி - கமல் இருவரையுமோ, இருவரில் ஒருவரையுமோ இயக்காமல் தமிழில் முன்னணி இயக்குநராக கோலோச்சியவர் அனேகமாக இவர்தான்.  இருப்பினும் தொண்ணூறுகளில் திரையுலகப் படிக்கட்டுகளில் அடுத்தடுத்த நிலையில் இருந்தவர்களான விஜயகாந்த், சத்யராஜ், பிரபு ஆகியோரின் மனம் கவர்ந்த இயக்குநராக இவர் இருந்தார். பி.வாசுவுக்கு இணையான செல்வாக்கு சுபாஷுக்கும் ஒரு காலத்தில் இருந்தது.

‘நாயகன்’ படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனின் நடிப்பும், மணிரத்னத்தின் இயக்கமும்தான் காரணமென்று அத்தனை பேரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கமலுக்கும், மணிரத்னத்துக்கும்தான் தெரியும், சுபாஷின் உழைப்பு அப்படத்தின் வெற்றிக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று. ‘நாயகன்’ காலத்தில் மணிரத்னத்தின் வலதுகையாக சுபாஷ் இருந்தார். எனவேதான், தனியாக படம் இயக்கப் போய் திணறிக் கொண்டிருந்தபோது, தன்னுடைய தயாரிப்பில் ‘சத்ரியன்’ இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார் மணிரத்னம்.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஜோடியில் கிருஷ்ணனின் மகனாக பிறந்தவர் சுபாஷ். ஆனால், தன்னுடைய சினிமா சிபாரிசுக்காக எந்நாளும் அவர் தன்னுடைய தந்தை பெயரை பயன்படுத்தியதே இல்லை.

சுபாஷின் முதல் முயற்சியான ‘கலியுகம்’, புரட்சிகரமான கதையை கொண்டதாக இருந்தாலும் போதிய வெற்றி பெறவில்லை. ஆனால், இவரது இயக்கத்தில் பிரபு கம்ஃபர்ட்டபிளாக உணர்ந்தார். எனவே அடுத்து அவர் நடித்த காமெடிப் படமான ‘உத்தம புருஷன்’ படத்தின் இயக்குநர் வாய்ப்பும் சுபாஷையே தேடிவந்தது. இந்தப் படம் கமர்ஷியலாக நன்றாக போக, தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக சுபாஷ் தடம் பதித்தார்.

1990 தீபாவளிதான் சுபாஷின் தலை தீபாவளி எனலாம். கமலின் ‘மைக்கேல் மதன காமராஜன்’, ராமராஜனின் ‘புதுப்பாட்டு’ (தயாரிப்பு : இளையராஜா), மனோபாலா இயக்கத்தில் சத்யராஜின் ‘மல்லுவேட்டி மைனர்’, பாக்யராஜின் ‘அவசர போலிஸ் 100’ என்று பலத்த போட்டிகளுக்கு மத்தியில் விஜயகாந்த் நடிப்பில் இவர் இயக்கிய ‘சத்ரியன்’ வெளிவந்து வெற்றி கண்டது. அதுவரையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த cop movies வகையில் அதுவே தலைசிறந்தது என்று பெயரெடுத்தது.

‘சத்ரியன்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் போலிஸுக்கு என்று புது இலக்கணமும் படைத்தது. இரண்டே பாட்டு, ஒரு நச் ப்ளாஷ்பேக், விறுவிறுப்பான திரைக்கதை, நறுக்கென்ற வசனங்கள் என ‘சத்ரியன்’ ஒரு டிரெண்ட் செட்டர். பிற்பாடு ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்களின் கதை சொல்லும் பாணியில் ‘சத்ரியன்’ தாக்கம் கூடுதலாகவே இருந்தது. தொண்ணூறுகளின் தொடக்க நியூவேவ் மூவியாக, அடுத்த சில ஆண்டுகள் தமிழ் சினிமாவின் போக்கை தொழில்நுட்பரீதியில் தீர்மானிக்கக் கூடியதாக அப்படம் அமைந்தது. ‘பழைய பன்னீர் செல்வமா வரணும்’ என்கிற திலகனின் குரல் இருபத்தாறு ஆண்டுகள் ஆகியும் யார் காதிலாவது இன்னமும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

ஆங்கிலப் படங்கள் பாணியில் அவர் எடுத்த த்ரில்லரான ‘ஆயுள் கைதி’ வசூலில் சோடை போனாலும், அடுத்த தீபாவளிக்கு அவர் கொடுத்த ‘பிரம்மா’ பிளாக் பஸ்டர் ஹிட். இந்த தீபாவளிதான் பிரசித்தி பெற்ற தளபதி –- குணா மோதிய பிரபலமான தீபாவளி. ரஜினி, கமல் படங்களை பல ஏரியாக்களில் ‘பிரம்மா’ அசால்டாக தோற்கடித்தது. ‘செக்ஸ் கொஞ்சம் தூக்கல்’ என்கிற விமர்சனத்தையும் பெற்றது. ‘பிரம்மா’ ஜோடியான அதே சத்யராஜ் - பானுப்ரியாவை வைத்து அவர் இயக்கிய ‘பங்காளி’, சுபாஷுக்கு பின்னடைவாக அமைந்தது. எனினும் இன்றுவரை தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ‘சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா?’ என்கிற வசனம் இடம்பெற்ற படம் அதுதான்.

‘பங்காளி’க்குப் பிறகு சுபாஷின் திரையுலக வாழ்க்கையில் பெரும் தேக்கம். அப்போது அறிமுகமாகியிருந்த அஜித்தை வைத்து அடுத்தடுத்து ‘பவித்ரா’, ‘நேசம்’ படங்களை இயக்கினார். அவை எதிர்ப்பார்த்த வெற்றியை எட்டவில்லை. பார்த்திபனை வைத்து அவர் எடுத்த ‘அபிமன்யூ’ பரபரப்பாக வசூலித்து மீண்டும் சுபாஷை லைம்லைட்டுக்கு கொண்டுவந்தது. இதன் பிறகு தரை லோக்கலுக்கு இறங்கி பிரபுதேவாவை வைத்து ‘நினைவிருக்கும் வரை’, ‘ஏழையின் சிரிப்பில்’ படங்களை வெறும் வசூலை மட்டுமே மனதில் நிறுத்தி இயக்கி வென்றார்.

பார்த்திபனை மீண்டும் அவர் இயக்கிய ‘சபாஷ்’, பழைய சுபாஷை மீண்டும் கொண்டுவந்தது. எனினும் வணிகரீதியாக சரியாக போகவில்லை. கிட்டத்தட்ட இந்தப் படத்தோடு சுபாஷின் தமிழ் திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதலாம். அதன் பின்னர் பிரபுதேவா சகோதரர்களை வைத்து அவர் எடுத்த ‘ஒன் டூ த்ரீ’, டிசாஸ்டர் ஆகவே அமைந்தது.
எனினும் இந்தியில் வெற்றிகரமான கதையாசிரியராக அவர் கடைசி பத்தாண்டுகளாக இருந்தார். ஷாருக்கானின் வசூல் சரித்திர சாதனைப் படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துக்கு கதை எழுதியது இவர்தான். ‘எண்டெர்டெயின்மெண்ட்’, ‘தில்வாலே’, ‘ஹவுஸ்ஃபுல்-3’ என்று இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்ட சுபாஷ் தவறவில்லை.

இன்று ‘தல’ அஜீத், ஷூட்டிங்கில் எல்லோருக்கும் பிரியாணி சமைத்துப் போடுவது பிரபலமான செய்தியாக, ஆர்வமாக வாசிக்கப்படுவதாக ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. அஜீத்துக்கு ‘பவித்ரா’ படம் எடுத்த காலத்தில் பிரியாணி உட்பட விதவிதமான அசைவ உணவு வகைகளை சமைக்க கற்றுக் கொடுத்தவர் இதே கே.சுபாஷ்தான். அறிமுகக் காலத்தில் சினிமாவில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அஜீத்துக்கு கே.சுபாஷின் அலுவலகம்தான் வேடந்தாங்கலாக இருந்தது. ஓய்வாக இருக்கும்போது சுபாஷை பில்லியனில் அமரவைத்து சென்னை முழுக்க அதிவேகமாக பைக் ஓட்டி குஷிப்படுத்துவாராம் அஜித்.

தொண்ணூறுகளின் சினிமா ரசிகர்களுக்கு தாங்க முடியாத இழப்பு, சுபாஷின் திடீர் மரணம்.