டிசம்பர் 3, 1971.
விசாகப்பட்டினம் நகரமே பரபரப்பில் ஆழ்ந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக ரேடியோ செய்திகளை கேட்காத காதுகளே நகரத்தில் இல்லை.
“பாகிஸ்தான் நமது நகரத்தை தாக்கப் போகிறதாமே?” என்று ஒருவருக்கு ஒருவர் கவலையோடு பேசிக் கொண்டார்கள். எப்படி தாக்கப் போகிறது, எங்கிருந்து தாக்கப் போகிறது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. எப்படியோ கசிந்த இந்த தகவலால், நகரை விட்டு பலர் வெளியேறியும் விட்டார்கள்.
இரவு ஒன்பது மணி இருக்கலாம்.
‘பூம்’
வானமே இடிந்து விசாகப்பட்டினம் நகரத்தின் மீது விழுந்து விட்டதோ என்று ஐயப்படுமளவுக்கு விபரீதமான சப்தம். பூமி அதிர்ந்ததை போல உணர்வு. அச்சத்தில் மக்கள் சிதறி ஆங்காங்கே ஓடுகிறார்கள். நடுங்கியவாறே தெருக்களில் திரளுகிறார்கள்.
அந்த சப்தத்துக்கு பிறகு நெடிய அமைதி. மயான அமைதி.
என்ன நடந்தது, ஏது நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை.
அடுத்த நாள் இந்திய கடற்படை அறிவித்தது. பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பலான PNS Ghazi, விசாகப்பட்டினம் கடல் எல்லையில், இந்திய நேவியால் வீழ்த்தப்பட்டது.
கடந்த சில நாட்களாகவே இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் கடலுக்கு அடியில் நடந்துக் கொண்டிருந்த போர் அப்போதுதான் எல்லோருக்கும் வெட்டவெளிச்சமானது. S21 என்கிற இந்திய நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த வீரர்கள் பதினெட்டு நாட்கள் போராடி, விசாகப்பட்டினம் நகரை பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து காப்பாற்றினார்கள். இந்த தாக்குதல்தான் 1971 இந்திய - பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கான வெற்றிக்கு அச்சாரமாக அமைந்தது.
ஆயினும்-
இன்றுவரை என்னதான் நடந்தது என்பது பற்றிய விலாவரியான தகவல்கள் இல்லை. வங்கக் கடலின் ஆழத்தில் புதைந்துப் போன அந்த கதையைதான் ‘The Ghazi Attack’ திரைப்படம் காட்சிகளாக நமக்கு காட்டுகிறது.
இந்த போர் வெற்றியின் பெருமையை இந்திக்காரர்களும், தெலுங்குக்காரர்களும் மட்டுமே பங்கிட்டுக் கொள்கிறார்களே என்று தமிழனாக உங்கள் ரத்தம் கொதிப்பது புரிகிறது.
ப்ளீஸ், வெயிட். முழுசாக சொல்ல விடுங்கள்.
தமிழனும் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
படத்துக்கு இசையமைத்திருப்பது நம்ம கே. அவரேதான். ‘யுத்தம் செய்’, ‘முகமூடி’ உள்ளிட்ட படங்களுக்கு மியூசிக் போட்டாரே, அதே கே-தான். கேமிராமேனும் ‘வெயில்’, ‘பையா’, ‘ஜீவா’வுக்கெல்லாம் வேலை பார்த்த அதே மதிதான். எடிட்டர், நம்ம ஆளு ஸ்ரீகர்பிரசாத். இந்தியாவின் முதல் கடற்போர் திரைப்படத்தில் தமிழ் டெக்னீஷியன்களின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கிறது.
சரி, படத்தை விடுங்கள். கொஞ்சம் வரலாற்றைப் புரட்டுவோம்.
நவம்பர் 14, 1971. நேருவின் பிறந்தநாளில்தான் PNS Ghazi நீர்மூழ்கி ஒரு ரகசிய ஆபரேஷனுக்காக கராச்சி துறைமுகத்தில் இருந்து கிளம்புகிறது. இந்திய கப்பற்படையின் பெருமையான INS Vikrant, விமானம் தாங்கி போர்க்கப்பலை மூழ்கச்செய்து, இந்தியாவின் கடற்படை வலிமையையும், போர்விமானங்களின் எண்ணிக்கையையும் குறைப்பதுதான் அந்த ஆபரேஷனின் நோக்கம். அப்போது விக்ராந்த், விசாகப்பட்டினம் அருகே நிலைக்கொண்டிருந்தது என்று ரகசியத் தகவல் பாகிஸ்தானுக்கு கிடைத்தது.
எனவேதான் Ghazi, வங்கக்கடலுக்குள் நுழைந்து விசாகப்பட்டினம் நோக்கி விரைந்து வந்தது. பாகிஸ்தானுக்கு கிடைத்த தகவல், பொறிக்காக வைக்கப்பட்ட மசால்வடை என்பதை அவர்கள் அறியவில்லை. அப்போது இந்திய கிழக்கு கடற்பரப்புக்கு பொறுப்பேற்றிருந்த வைஸ் அட்மிரல் கிருஷ்ணன்தான் ரேடியோ சிக்னல்களை குழப்பி பாகிஸ்தானுக்கு தவறான தகவல் கிடைக்குமாறு செய்தார். உண்மையில் விக்ராந்த் போர்க்கப்பல், அந்தமான் தீவுகளுக்கு இடையே எங்கோ பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துக் கொண்டிருந்தது.
விக்ராந்த் இருப்பதாக பாகிஸ்தான் நீர்மூழ்கி Ghazi நம்பி வந்து சேர்ந்தபோது, விசாகப்பட்டினத்தில் அதை எதிர்கொண்டது INS Raput. இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்திலிருந்து கடற்போரின் தாதாவாக, பெரும் அழிவுசக்தியாக செயல்பட்ட கப்பல் இது.
பாகிஸ்தான் எப்படி இந்த வலையில் மாட்டியது?
அங்கேதான் இந்திய போர்த் தந்திரம் எவ்வளவு சிறப்பானது என்பதை நாம் உணரமுடிகிறது. சில நாட்களுக்கு முன்பாக வேண்டுமென்றே விக்ராந்த், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிலைநிறுத்தப் படுவதாக தகவல்கள் பரப்பப்பட்டது. அந்தக் கப்பலில் இருந்த சுமார் ஆயிரம் நேவி வீரர்கள் நகரத்துக்கு வந்திருப்பதாகவும், அவர்களுக்கு நகரில் இருந்த மார்க்கெட்டுகளில் இருந்து உணவுப் பொருட்கள் வாங்கப்பட்டதாகவும் ஒரு பொய்யான தோற்றத்தை இந்தியா உருவாக்கியது. மேலும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு ரேடியோ வாயிலாக பேசிய கடற்படை அதிகாரிகள் இந்தப் பொய்யான தகவல்களை உண்மை போன்ற தொனியில் ரொம்ப சீரியஸாகவே பேசினார்கள்.
விசாகப்பட்டினத்தில் இருந்த உளவாளிகள் மூலமாகவும், பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் ரேடியோ அலைகளை மறித்து ஒட்டுக் கேட்டதின் காரணமாகவும் விக்ராந்த், விசாகப்பட்டினத்தில்தான் இருக்கிறது என்று பாகிஸ்தான் உறுதியாக நம்பியது. அதற்கேற்ப Ghazi attack நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே இரவுகளில் விசாகப்பட்டினம் தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன. மக்கள் தெருக்களில் நடமாட தடை செய்யப்பட்டார்கள். எனவே, மக்களும் கூட தங்கள் நகரில் போர் நடக்கப் போகிறது என்றே பதட்டமடையத் தொடங்கி இருந்தார்கள்.
Ghazi நீர்மூழ்கிக் கப்பல் விசாகப்பட்டினத்தில் நிலைகொண்ட நிலையில் சிறுபடகுகள் மூலமாக பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் நகருக்குள் மாறுவேடத்தில் நுழைந்திருக்கிறார்கள். பதட்டமாக இருந்த மக்களையும், நகரில் அசாதாரணமாக நிலவிய நிலைமையையும் நேரிடை சாட்சியாக கண்டவர்கள், கண்டிப்பாக விக்ராந்த் போர்க்கப்பல் இங்கிருக்கும் துறைமுகத்தில்தான் இருக்கிறது என்று உறுதியாகவே நம்பினார்கள்.
இந்த நிலையில்தான் டிசம்பர் 3 அன்று, கட்டுரையின் தொடக்கத்தில் நாம் கேட்ட ‘பூம்’ சப்தம் கேட்டது.
இந்த ‘பூம்’ சப்தம், எதிரிகளை அழிக்கும் போர்க்கப்பலான ராஜ்புத்தின் சாதனையென்று இந்தியத் தரப்பு அறிவித்தது. ஆழ்கடல் தாக்குதலை நாங்கள் நடத்தி Ghaziயை மூழ்கடித்தோம் என்று கப்பற்படை அதிகாரிகள் சொன்னார்கள்.
பாகிஸ்தானோ இதை மறுத்தது. கடலுக்கு அடியில் இருந்த பாறைகளில் தெரியாத்தனமாக (?) தங்கள் நீர்மூழ்கி மோதி விபத்து ஏற்பட்டே Ghazi வீழ்ந்தது என்று சப்பைக்கட்டு கட்டியது.
விக்ராந்த் போர்க்கப்பல் அப்போது எப்படி Ghaziயின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு வங்கக்கடலில் மறைந்தது என்பதை பற்றி வைஸ் அட்மிரல் கிருஷ்ணன் எழுதிய புத்தகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நீர்மூழ்கி மூலமாக விக்ராந்த் தாக்கப்படலாம் என்கிற தகவல் கிடைத்ததுமே, அந்த கப்பலை சுற்றி நான்கு பாதுகாப்பு கப்பல்கள் நிறுத்தப்பட்டு அந்தமானுக்கு அருகில் ஓர் மறைவிடத்தில் நிறுத்தினோம். பாதுகாப்பு கப்பல்களில் மூன்று கப்பல்கள் நீருக்கு அடியில் ஏதேனும் கப்பல் வருவதாக இருந்தால் sonar அலைகள் மூலமாக காட்டிக் கொடுத்துவிடும். அவ்வாறு எப்படியோ எல்லோர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு ghazi, விக்ராந்தை நெருங்கியிருந்தாலும் போட்டுத்தள்ள அத்தனை ஏற்பாடுகளும் தயாராகவே இருந்தன. எனினும், நம் நாட்டின் பெருமையாக விளங்கிய விக்ராந்தின் விஷயத்தில் எந்தவொரு சின்ன ரிஸ்க்குமே எடுக்கக்கூடாது என்றுதான் விசாகப்பட்டினம் நாடகம் ஆடி, அவர்களை அலைக்கழித்து வீழ்த்தினோம் என்று அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.
Ghaziயின் உடைந்து சிதறிய சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு, விசாகப்பட்டினம் மியூசியத்தில் இப்போதும் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. விசாகப்பட்டினம் கடலுக்கு அடியில்தான் இன்னமும் Ghazi மூழ்கிக் கிடக்கிறதாம்.
நிஜத்தில் நடந்த இந்த கதையைதான் கற்பனை கலந்து நமக்கு படமாக கொடுத்திருக்கிறார்கள். சரி, விக்ராந்த்?
Ghazi மூழ்கடிக்கப்பட்ட மூன்றாவது நாள், விக்ராந்த் கம்பீரமாக வெளிவந்தது. கிழக்கு பாகிஸ்தானை நோக்கிச் சென்றது. தன்னுடைய விமானங்களை விண்ணில் ஏவி, பாகிஸ்தான் ராணுவத்தை மண்டியிட வைத்தது.
(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)