ஷங்கர் தன்னுடைய சில சூப்பர்ஹிட் திரைப்படங்களுக்கு எதையெல்லாம் கச்சாவாக
தேர்ந்தெடுத்திடுத்திருக்கிறார்?
மண்டல் கமிஷன் பரிந்துரை செயல்பாடுகளுக்கு வந்த நிலையில் ‘ஜெண்டில்மேன்’. மத்தியில் நரசிம்மராவ், மாநிலத்தில் ஜெயலலிதா என்று ஊழல் மலிந்த சூழலில் ‘இந்தியன்’. இந்தியாவெங்கும் தங்களை ஆளும் கட்சிகள் மீது மக்களுக்கு அதிருப்தி பெருகிக்கொண்டே போன வேளையில் ‘முதல்வன்’. பாஜக ஆட்சி ஊழல் தடுப்பில் ஒட்டுமொத்தமாக செயலிழந்து நின்ற வேளையில் ‘அந்நியன்’. இப்படியாக ஷங்கரை இம்மாதிரியான சப்ஜெக்ட்களை திரும்பத் திரும்ப (நமக்கு அந்த சப்ஜெக்ட் உவப்பானதா இல்லையா என்பது வேறு விஷயம்) தேர்ந்தெடுக்க அரசியல்-சமூகச் சூழல் நிர்ப்பந்தப்படுத்துகிறது. திரைப்படமாக்க எடுத்துக் கொள்ளும் பிரச்சினைகளில் ஷங்கர் தனிப்பட்ட முறையில் எந்தப் பக்கம் என்பது தெரியாது. ஆனால் பொதுமக்களின் மனப்போக்கை ஒட்டியவகையில், அந்த மனப்போக்கை ஆதரிப்பதோடு மேலும் தூண்டும் வகையிலாக தன்னுடைய திரைப்படங்களை எடுக்கிறார். வெற்றிக்காக அவர் கண்டுபிடித்து வைத்திருக்கும் சுலபமான சூத்திரம் இது.
மண்டல் கமிஷன் பரிந்துரை செயல்பாடுகளுக்கு வந்த நிலையில் ‘ஜெண்டில்மேன்’. மத்தியில் நரசிம்மராவ், மாநிலத்தில் ஜெயலலிதா என்று ஊழல் மலிந்த சூழலில் ‘இந்தியன்’. இந்தியாவெங்கும் தங்களை ஆளும் கட்சிகள் மீது மக்களுக்கு அதிருப்தி பெருகிக்கொண்டே போன வேளையில் ‘முதல்வன்’. பாஜக ஆட்சி ஊழல் தடுப்பில் ஒட்டுமொத்தமாக செயலிழந்து நின்ற வேளையில் ‘அந்நியன்’. இப்படியாக ஷங்கரை இம்மாதிரியான சப்ஜெக்ட்களை திரும்பத் திரும்ப (நமக்கு அந்த சப்ஜெக்ட் உவப்பானதா இல்லையா என்பது வேறு விஷயம்) தேர்ந்தெடுக்க அரசியல்-சமூகச் சூழல் நிர்ப்பந்தப்படுத்துகிறது. திரைப்படமாக்க எடுத்துக் கொள்ளும் பிரச்சினைகளில் ஷங்கர் தனிப்பட்ட முறையில் எந்தப் பக்கம் என்பது தெரியாது. ஆனால் பொதுமக்களின் மனப்போக்கை ஒட்டியவகையில், அந்த மனப்போக்கை ஆதரிப்பதோடு மேலும் தூண்டும் வகையிலாக தன்னுடைய திரைப்படங்களை எடுக்கிறார். வெற்றிக்காக அவர் கண்டுபிடித்து வைத்திருக்கும் சுலபமான சூத்திரம் இது.
டார்க்நைட் ரைசஸ் திரைப்படத்தில் நோலனும் இதே
ஃபார்முலாவை கையாண்டிருப்பதாக தெரிகிறது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் காமிக்ஸ்
என்பது கலாச்சாரமாக உருவெடுத்த சமாச்சாரம். எந்த ஒரு ஹாலிவுட் இயக்குனருக்குமே ஏதேனும்
புகழ்பெற்ற காமிக்ஸை படமாக எடுத்துத் தீரவேண்டும், ஒரு சூப்பர்ஹீரோவை திரையில் பறக்கவைத்து
க்ளாப்ஸ் அள்ளவேண்டும் என்கிற ஆசை இல்லாமல் இருக்காது. தெரிந்தோ, தெரியாமலேயோ நம்மூர்
பார்த்திபனைப் போல வித்தியாச விரும்பியாக பெயரெடுத்துவிட்ட நோலனுக்கும் இதே ஆசை இருந்திருக்கிறது
என்பதுதான் ஆச்சரியம். ஹாலிவுட்டில் யாரும் பெரியதாக சாதித்துவிடாத ‘பேட்மேன்’ பாத்திரத்தை
கையில் எடுத்துக் கொண்டார். நோலன் என்றாலே நான் லீனியர் மங்காத்தா
என்று ரசிகர்கள் அவர்களாகவே முடிவுகட்டிக் கொள்ள, தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்
கொள்ள தனக்கு ஒரு சூப்பர்ஹீரோ தேவை என்று அவர் நினைத்திருக்கலாம்.
பேட்மேனை ரீபூட்டிய பேட்மேன்
பிகின்ஸ், ரசிகர்களை கொண்டாட்டத்துக்கு தள்ளிய டார்க்நட்டுக்குப் பிறகு இப்போது
டார்க்நைட் ரைசஸ். படத்துக்கு ‘டார்க்நைட் ரைசஸ்’ என்று பெயரிட்டு, ‘தி லெஜெண்ட்
எண்ட்ஸ்’ என்று துணைத்தலைப்பில் நோலன் ஆடியிருக்கும் குறும்பு ஆட்டம் அவருக்கே
உரியது. இவரது படத்தில் காட்சிகள்தான் நான்லீனியராக இருக்கும் என்றால் ட்ரையாலஜியில்
எடுத்திருக்கும் பேட்மேன் படங்களையே நான்லீனியராகதான் எடுத்திருக்கிறார். முதல்
பாகத்துக்குப் பிறகு வரவேண்டிய படம் மூன்றாம் பாகமாக வந்திருக்கிறது. பேட்மேனுக்கு
க்ராண்ட் ஓபனிங் தரவேண்டும் என்று நினைத்திருந்தால், டார்க்நைட்டைதான் நோலன்
முதலாவதாக எடுத்திருக்க வேண்டும்.
பொதுவாக ஹாலிவுட் படங்களில் முதல் பாகம்
சூப்பர் டூப்பராக இருக்கும். இரண்டாம் பாகம் நன்றாக இருக்கும். மூன்றாம் பாகம்
சுமாராகவோ, மொக்கையாகவோ இருக்கும். பேட்மேனைப் பொறுத்தவரை எனக்கு மூன்றாவது
பாகமும் முதல் இரண்டு பாகங்களைப் போலவே பிரமாதமாக அமைந்துவிட்டதாக தோன்றுகிறது. ஒருவேளை
முதல் படத்தை பார்க்காதவர்கள் நேரடியாக மூன்றாவது படத்தை பார்த்தால் புரியாமல்
போகலாம். ஆனால் மொக்கையாக தோன்றுவதற்கு எந்த சாத்தியமுமில்லை. லீக் ஆஃப் ஷேடோஸ்,
கமிஷனர், டபுள் ஃபேஸ் என்று ஓரளவாவது பின்னணி தெரிந்திருக்க வேண்டியது இப்படத்தை
பார்ப்பதற்கு அவசியம்.
டார்க்நைட் ரைசஸ் இப்போதைய அமெரிக்க அரசியலை மறைமுகமாக
முன்நிறுத்தி பேசக்கூடியதாக இருக்கிறது. புரட்சி, பொதுவுடைமை மாதிரியான சொற்களின்
மீது அமெரிக்கர்களுக்கு இருந்த வெறுப்பு மறைந்து, இப்போது கேலியும் கிண்டலும்
பிறந்திருக்கிறது. அதைதான் நோலன் இப்படத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார்.
புரட்சி குறித்த மிக மோசமான நையாண்டியை டார்க்நைட் ரைசஸ் உருவாக்குகிறது.
‘வால்ஸ்ட்ரீட் முற்றுகை’ மாதிரியான அடித்தட்டு அமெரிக்கர்களின் உணர்வை முற்றிலுமாக
நிராகரித்து, சராசரி நடுத்தட்டு அமெரிக்கனின் இன்றைய மனவோட்டத்தை
வெளிப்படுத்துகிறார் நோலன் (இதே மாதிரி நம்மூர் ஷங்கரும் நடுத்தரஜோதியில்
ஐக்கியமாகக் கூடியவர்தான் என்பதாலேயே இப்பதிவின் ஆரம்பத்தில் அவர் வருகிறார்).
இடதுசாரி சித்தாத்தங்கள் மீது மரியாதை
வைத்திருப்பவன் என்கிற முறையில் ‘டார்க்நைட் ரைசஸ்’ எனக்கு கடுமையான கோபத்தை
ஏற்படுத்தியிருக்க வேண்டும். புரட்சி, பொதுவுடைமை குறித்த மூர்க்கமான கிண்டல்.
ஆனால் நோலனின் திரைப்படம், தான் பேசும் அரசியலுக்கு எதிர்நிலையில்
இருப்பவர்களையும் கூட ரசிக்கவைக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
சரி. புரட்சி வேண்டாம். வேறு என்ன
புண்ணாக்கைதான் ஏற்றுக்கொள்ள சொல்கிறார் என்று பார்த்தோமானால், கிட்டத்தட்ட
நம்மூர் அப்துல்கலாம் வகையறாக்கள் வழங்குவது மாதிரியான மொக்கைத் தீர்வுகளைதான் நோலனும்
முன்வைக்கிறார். அமெரிக்க அன்னாஹசாரேவான ஒபாமாவின் ‘யெஸ் வீ கேன்’ என்கிற, இதுவரையில்
உலகில் யாருக்குமே தோன்றாத தாரகமந்திரத்தை வலியுறுத்துகிறார் (நவம்பரில் அதிபர்
தேர்தல் என்பதை மனதில் கொள்க). சூப்பர்ஹீரோவாக இருந்தாலும் முதுகெலும்பு
முறிக்கப்படும். ஆனால் அச்சமின்றி போராடினால் வெற்றி நிச்சயம் என்கிறார்.
இருபதாம் நூற்றாண்டு சூப்பர் ஹீரோக்களை
கொண்டாடிய நூற்றாண்டு. அப்போது அமெரிக்காவுக்கு எதிரி இருந்தான். தங்களைக்
காத்துக்கொள்ள ஒரு ரட்சகன் சூப்பர்ஹீரோவாக வருவான் என்கிற அமெரிக்கர்களின்
மூடநம்பிக்கையை முதலீடாக்கி, சூப்பர்ஹீரோக்கள் காமிக்ஸ்களிலும், நாவல்களிலும்,
திரைப்படங்களிலும் கல்லா கட்டினார்கள். மாறாக இந்த நூற்றாண்டு ஒவ்வொருவனும் தானே சூப்பர்ஹீரோ ஆகிவிடும் வாய்ப்பினை
அமெரிக்கர்களுக்கு வழங்குகிறது. ஒவ்வொருவனும் தன்னை ஜீனியஸ் என்று கருதிக்கொள்ளும்
நிலையில், அவன் காதில் போய் சூப்பர் ஹீரோ பறப்பான், அவனை யாருமே வீழ்த்த முடியாது
என்று பூச்சுற்ற முடியவில்லை. எனவேதான் பேட்மேனை நல்ல உள்ளம் கொண்ட சராசரி மனிதன்
என்று நிறுவ நோலன் இப்படத்தில் மெனக்கெட்டிருக்கிறார். கடைசியாக பேட்மேனே கூட “எவனொருவன்
மற்றவர்களுக்கு உணவளிக்கிறானோ, உடையளிக்கிறானோ அவனெல்லாம் ஹீரோதான்” என்று
எம்.ஜி.ஆர் படகாலத்து தத்துவம் பேசிவிட்டு படத்தை முடிக்கிறார். தி லெஜெண்ட்
ரியல்லி எண்ட்ஸ்.
இவ்வாறாக அமெரிக்காவை மட்டுமே மனதில்
நிறுத்தி, அமெரிக்கர்களின் மனவோட்டத்தை பேசும் திரைப்படம் உலகமெங்கும் எப்படி
சக்கைப்போடு போடுகிறது என்கிற கேள்வி எழுகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே
ஒரு கிராமமாக சுருங்கிக் கொண்டிருக்கிறது என்று பேச்சுக்கு சொல்லிக்
கொண்டிருக்கிறோம். அப்படி நிஜமாகவே சுருங்கும்பட்சத்தில் அந்த கிராமத்தின் பெயர்
அமெரிக்காவாகதான் இருக்கக்கூடும். இதுதான் யதார்த்தம். நாம் கம்யூனிஸமோ, நாசிஸமோ,
பாஸிசமோ, எந்த கருமத்தையோ பேசுபவர்களாக இருந்தாலும் மனதளவில் நம்மையறியாமலேயே கொஞ்சம்
கொஞ்சமாக அமெரிக்கர்களாக மாறிக்கொண்டிருக்கிறோம்.
திரைக்கதையில் நிறைய க்ளிஷேக்கள் அடங்கிய
மசாலாப்படம்தான் என்றாலும், அதையும் கலையாக உருமாற்றும் திறன் படைத்தவர்
கிறிஸ்டோபர் நோலன் என்பதற்கு இப்படமும் ஓர் உதாரணமாக அமைகிறது.