28 ஜூன், 2013

CATCH ME IF YOU CAN

ம்மாத்தூண்டு நாடுதான். உலக வரைபடத்தில் கூட தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். மக்கள் தொகையே மொத்தமாக ஒன்றரை கோடிதான். ஆனாலும் அமெரிக்காவின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. முந்தாநாள் கியூபா, நேற்று வெனிசூலா. இன்று ஈக்குவேடார். அமெரிக்காவின் காலுக்கு கீழே அமர்ந்திருக்கும் இந்த தென்னமெரிக்க குட்டி நாடுகள் அமெரிக்காவுக்கு குழிபறித்துக் கொண்டிருப்பதே வாடிக்கை ஆகிவிட்டது.
யானையைப் பார்த்து எலி சவால் விடும் கதையை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முன்பாக எட்வர்ட் ஸ்நோடன் என்கிற முப்பது வயது இளைஞரைப் பற்றி நாம் மேலோட்டமாக தெரிந்துக் கொள்வது அவசியம். முப்பதே வயதுதான். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் தொழில்நுட்ப ஒப்பந்தக்காரர். சி.ஐ.ஏ.,வின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர். அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்களை ஊடகங்களுக்கு தந்துவிட்டார் என்று இவர்மீது குற்றச்சாட்டு. அரசுப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பொதுவாகவே இவர் அமெரிக்க அரசு எதிர்ப்பாளராகதான் அறியப்படுகிறார்.

இண்டர்நெட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான முன்னணி நிறுவனங்களோடு அமெரிக்க அரசு ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதாவது நீங்கள் உங்கள் மனைவியிடம் சாட்டிங்கில் ‘சாயங்காலம் போண்டாவும், சட்னியும் டிஃபனுக்கு ரெடி பண்ணி வை’ என்று சொல்வதைக்கூட அமெரிக்க அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எளிமையாகப் புரிந்துக் கொள்வோம். வேடிக்கையாக சொன்னாலும் இதுவும்கூட சாத்தியம்தான். அப்படியெனில் மற்ற நாடுகளின் அதிமுக்கியமான ரகசியங்களின் கதி என்ன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

இதன் அடிப்படையில் ‘ஒட்டுமொத்தமாக மக்களின் இண்டர்நெட் செயல்பாடுகளை அமெரிக்கா கண்காணிக்கிறது. அதற்கான கட்டமைப்பு வசதிகள் அதனிடம் இருக்கிறது’ என்பதுதான் இவர் கசியவிட்ட ரகசியம். ஏனெனில் இந்த ரகசியத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களில் ஸ்நோடனும் ஒருவர். ‘நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதை செய்யவேண்டியிருக்கிறது. வேறொன்றும் குறிப்பிடத்தக்க உள்நோக்கம் இல்லை’ என்று அமெரிக்க அரசு அந்த குற்றச்சாட்டை மறுத்தது.
இதுவரை பிரச்சினை இல்லை. அடுத்து பதிலுக்கு ஸ்நோடன் சொன்னதுதான் அமெரிக்காவை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. “வளரும் நாடுகளின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா கண்காணிப்பதற்காகவே இந்த ரகசியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது” என்று ஒரு போடு போட்டார். உலக அரங்கில் அமெரிக்கா தலைகுனிய வேண்டியதாயிற்று. இந்த ரகசியம் வெளியாகி விட்டதால் மற்ற நாடுகளுடனான நல்லுறவு பாதிக்கப்படக்கூடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. நாளையே மன்மோகன்சிங்கோடு ஒபாமா சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது “என்னோட மெயில் எல்லாத்தையும்தான் நீங்களே பார்க்குறீங்களே, உங்களுக்குத் தெரியாத ரகசியமா..” என்று நம்ம சிங் கேட்டுவிட்டால், ஒபாமாவின் பாடு என்ன ஆகும்?

எனவேதான் ஸ்நோடனின் மீது அமெரிக்கா கொலைவெறி கொண்டிருக்கிறது. ‘சிக்கினால் பிரியாணிதான்’ என்று உணர்ந்த ஸ்நோடன் ஹாங்காங்கிற்கு அடைக்கலம் நாடி பறந்துவிட்டார். “பாதுகாப்பு ரகசியங்களை கசியவிட்ட குற்றவாளி உங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறார். அவரைப் பிடித்து வையுங்கள்” என்று அமெரிக்க அதிகாரிகள் சீனாவுக்கு தகவல் அனுப்பினார்கள். “இதோ உடனே தேடிப்பிடித்து கொடுக்கிறோம்” என்று அமெரிக்காவோடு பேசிக்கொண்டே, அவரை மாஸ்கோவுக்கு பாதுகாப்பாக விமானம் ஏற்றி அனுப்பி விட்டார்கள் சீனர்கள். ஸ்நோடனை ஒப்படைக்கும்படி இப்போது ரஷ்யாவிடம் கெஞ்சியும் மிரட்டியும் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினோ இந்த விவகாரத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். “ஸ்நோடன் எங்கள் நாட்டுக்கு வந்தது நிஜமாகவே எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ரஷ்ய மண்ணில் அவர் எந்த குற்றமும் புரியாத நிலையில் அவர் மீது நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?” என்று அப்பாவியாக கேட்கிறார்.

“மக்களுடைய கருத்து சுதந்திரத்துக்காகவே உயிரைப் பணயம் வைத்து இத்தியாகத்தை செய்திருக்கிறேன்” என்று கூறும் ஸ்நோடன், கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் நாடு ஒன்றில் அடைக்கலம் பெற விரும்புவதாகவும் சொல்லியிருக்கிறார். ஐஸ்லாந்துதான் அவருடைய சாய்ஸ். ஆனால் ஐஸ்லாந்து நாட்டு சட்டவிதிகளை காரணம் காட்டி அவருக்கு அடைக்கலம் தர இயலாது என்று அந்நாடு தயங்குகிறது.

இங்கேதான் வருகிறது ஈக்குவேடார். மாஸ்கோவில் ஸ்நோடன் தரையிறங்கியபோது விமான நிலையத்தின் வாயிலில் ஈக்குவேடார் நாட்டு தூதரகத்தின் கார் நின்றிருந்தது என்பதை அமெரிக்க ஊடகங்கள் போட்டோவோடு ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அந்நாட்டின் அயலகத்துறை அமைச்சர் ரிகார்டோ பாட்டினோ, ஸ்நோடன் தங்கள் நாட்டில் அடைக்கலம் பெற விண்ணப்பித்திருப்பதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கும் லண்டனில் இருக்கும் தங்கள் தூதரகத்தில்தான் ஈக்குவேடார் கடந்த ஓராண்டாக அடைக்கலம் தந்து வருகிறது. ஸ்வீடன் அரசாங்கம் அவரது மீது பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ய அலைந்துக் கொண்டிருக்கிறது. இது டம்மி காரணம். ஒருவேளை ஸ்வீடன் அவரை கைதுசெய்தால் அமெரிக்காவிடம்தான் ஒப்படைக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் பல்லாண்டு தூதரக பரிமாற்ற ரகசியங்களை தொடர்ச்சியாக விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது.
அமெரிக்காவின் எதிரியான அசாஞ்சேவை ஏற்கனவே பாதுகாத்துவரும் ஈக்குவேடார், இப்போது ஸ்நோடனை பாதுகாக்க நினைப்பதுதான் அமெரிக்காவுக்கு கடுப்பு. தொடர்ச்சியாக தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களை தேடித்தேடி பாதுகாப்பதால் ஈக்குவேடாரை அமெரிக்கா கடுமையாக எச்சரித்திருக்கிறது. “ஒழுங்கீனமாக நடக்கும் நாடுகளை அமெரிக்கா சகித்துக் கொள்ளாது” என்று ஈக்குவேடாரை குறிவைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை குழுவின் தலைவரும், செனட்டருமான ராபர்ட் மெணண்டெஸ் குமுறியிருக்கிறார். இந்த எச்சரிக்கையை இடக்கையால் புறந்தள்ளியிருக்கிறது ஈக்குவேடார். அந்நாட்டின் அதிபர் ரேஃபல் கோர்ரியா “மற்ற நாடுகளின் அழுத்தங்களையும், மிரட்டல்களையும் கண்டு அஞ்சமாட்டோம்” என்று பதிலுக்கு சவால் விட்டிருக்கிறார். இச்சந்தந்தர்ப்பத்தை பயன்படுத்தி இவர் அடுத்த சாவேஸாக உருவெடுத்துவிடுவாரோ என்று அமெரிக்காவுக்கு அச்சம்.

இந்நிகழ்வுகளால் உலக அரசியல் மீண்டும் சூடேறிப்போய் இருக்கிறது. உலகநாடுகளை வேவு பார்க்கிறது என்கிற குற்றச்சாட்டில் மாட்டிக்கொண்டிருப்பதால் அமெரிக்கா இவ்விவகாரத்தில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது. அமெரிக்காவின் இந்த பலகீனத்தை பயன்படுத்தி ஈக்குவேடார் தொடைதட்டி சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் நிகழ்வுகளை புன்னகையோடு ரசித்துக் கொண்டிருக்கின்றன.

20 ஜூன், 2013

சாணக்கிய சரித்திரத் தலைவி

புரட்சித்தலைவி என்றால் புரட்சித்தலைவிதான். ராஜ்யசபா தேர்தலில் அவரது ராஜதந்திரத்தை தமிழக ஊடகங்கள் எப்படியெல்லாம் மெச்சுகின்றன என்பதைப் பார்த்தாலே அவரது புரட்சி என்னவென்று உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். அதனால் காலியாகும் எங்கள் ராஜ்யசபா சீட்டை எங்களுக்கே தரவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரினார்கள். ஆனால் டெல்லி சென்ற புரட்சித்தலைவியோ ஐந்து இடங்களிலும் புரட்சித்தலைவரின் கழகமே போட்டியிடும் என்று அறிவித்தார். அது மட்டுமின்றி நாற்பதும் எனக்கே என்றுகூறி ஆறு பாலில் பண்ணிரெண்டு சிக்ஸர் அடித்தார். இதன் மூலமாக அகில இந்திய கம்யூனிஸ்ட்டுத் தலைவர்கள் அவரை தேடிவந்து வாய்க்கரிசி.. மன்னிக்கவும் வாக்கு கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

சென்னைக்கு வந்தபிறகுதான் தெரிந்தது. ராஜ்யசபாவில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு முப்பத்தி நான்கு ஓட்டுகள் வேண்டுமாம். அப்படிப் பார்த்தால் ஐந்து x முப்பத்தி நான்கு = நூற்றி எழுபது. கழகத்துக்கு இருப்பதோ (சரத்குமார் மாதிரி உதிரிகளையும் சேர்த்து) நூற்றி ஐம்பத்து ஒன்று உறுப்பினர்கள்தான். சீமான், வைகோ, தாபா போன்றோர் ஓட்டுபோட அனுமதியில்லை என்று தேர்தல் கமிஷன் வேறு கழகத்திற்கு எதிராக காய் நகர்த்தியது. எப்படிப் பார்த்தாலும் ஐந்தாவது வேட்பாளர் தோற்பது உறுதி. இதையெல்லாம் கணக்கு போட்டுதான் ராஜதந்திரத்தோடு ஓர் உறுப்பினரை வாபஸ் பெறவைத்து, அவரை வாரியத்தலைவராக்கி தன்னுடைய அரசியல் சாணக்கியத்தனம் என்னவென்பதை உலகுக்கே பறைசாற்றினார். எனவேதான் ராஜ்யசபா தேர்தலில் குதிரைப் பேரத்தை ஒழித்த ஜான்ஸிராணி என்று வார இதழ் ஒன்று அவருக்கு ‘ராஜ்யபரணி’ பாடியிருக்கிறது. தேமுதிக என்கிற கட்சியில் ‘தொகுதிப் பிரச்சினைகளைப் பேச முதல்வரை சந்தித்த கோஷ்டி’ என்று புதுப்பிரிவை உருவாக்கியதன் மூலமாகவே குதிரைப்பேரத்தை அவர் ஒழித்திருக்கிறார் என்பதை அந்த இதழ் குறிப்பிட மறந்துவிட்டது.

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலமாக ராஜ்யசபாவுக்கு யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள் புரட்சித்தலைவியால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற நிலையை அகில இந்திய அளவிலும் புரட்சித்தலைவி ஏற்படுத்தியிருக்கிறார். கனிமொழி, ராஜா என்று யார் வென்றாலும் அவர்கள் புரட்சித்தலைவியின் தயவோடுதான் பாராளுமன்றத்துக்கு சென்றாக வேண்டும். அடுத்த முறை மன்மோகன் சிங் ராஜ்யசபாவுக்கு நிற்கவேண்டுமானால் கூட புரட்சித்தலைவியின் ஆதரவு இல்லாமல் அது முடியாது என்கிற நிலை உருவாகியிருக்கிறது. கிங் மேக்கர், குயின் மேக்கர், மீல் மேக்கர் என்று எல்லா மேக்கராகவும் புரட்சித்தலைவியே நிலைபெற்றிருக்கிறார்.

இதையெல்லாம் விட புரட்சித்தலைவியின் மிகச்சிறந்த அரசியல் காய்நகர்த்தல் தற்போது நடந்திருக்கிறது. அரசியல் நோக்கர்களும், அரசியல் இதழாளர்களும் அதை இன்னும் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் உலக அரசியல் வரலாற்றின் புரநானூற்றை படைக்கும் புரட்சித்தலைவியை நிச்சயம் மெச்சியிருப்பார்கள். நாட்டுக்கு அவசியமான, சமகாலத்தில் தவிர்க்கமுடியாத ஒரு பிரச்சினையைப் பற்றி அசாம் மாநில முதல்வருக்கு அம்மா கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் எங்கள் வண்டலூர் பூங்காவில் போதுமான காட்டெருமைகள் உள்ளன. உங்களுக்கு ஒரு ஜோடி காட்டெருமையை பரிசாக வழங்கவிருக்கிறோம். பதிலுக்கு நீங்கள் ஒரு ஜோடி காண்டாமிருகத்தை எங்களுக்கு வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அசாம் முதல்வர் தருண்கோகாய் ஒரு காங்கிரஸ்காரர் என்பதை இங்கே மனதில் நிறுத்திக்கொண்டு இந்த அரசியல் நடவடிக்கையை நாம் பார்க்கவேண்டும். இதையடுத்து தருண்கோகாயும் அசாம் மாநில பிரச்சினைகளை தீர்க்கக்கோரி புரட்சித்தலைவியை கோட்டைக்கு வந்து சந்தித்து விடுவாரோ என்று டெல்லியும், இத்தாலியும் கலங்கிப் போயிருக்கிறது. காட்டெருமைக்குப் பதிலாக காண்டாமிருகம் என்கிற இந்த புதிய அரசியல் கணக்கு இதுவரை உலக அரசியல் சரித்திரம் சந்தித்திராதது.

முன்பாக இதே வண்டலூரில் பிறந்த புலிகளுக்கு புரட்சித்தலைவி பெயர் வைத்து தனக்கு தமிழின உணர்வாளர்களால் வழங்கப்பட்ட ஈழத்தாய் பட்டத்துக்கு நியாயம் செய்ததும் நமக்கு நினைவிருக்கலாம். மேலும் முதுமலையில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தி, யானை டாக்டர் என்று கதை எழுதிய ஜெயமோகன் மாதிரி தீவிர இலக்கியவாதிகளையும் தனக்கு ஆதரவான போக்குக்கு மடைமாற்றிய அவரது அரசியல் தொலைநோக்குப் பார்வையையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

நாட்டுக்கு மட்டுமல்ல. காட்டுக்கும்தான் தான் ராணி என்பதை இம்மாதிரி விலங்கின அரசியல் மூவ்கள் மூலமாக புரட்சித்தலைவி தொடர்ச்சியாக உறுதிசெய்து வருகிறார் என்று இந்தியாவே மூக்கின் மேல் விரல்வைத்து சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை அண்ணாந்து பார்த்த வண்ணமிருக்கிறது. இனிமேல் இந்தியாவில் எது நடந்தாலும் அது புரட்சித்தலைவியால் நடந்ததாகவே இருக்கும்.

17 ஜூன், 2013

தியேட்டரில் நாலு பேர்!

கிட்டத்தட்ட ‘பி’ கிரேடு படம்தான். அநியாயத்துக்கு லோ பட்ஜெட். ஆனால் ஆந்திராவின் பி & சி-யில் மக்கள் சுனாமி. வழக்கம்போல விமர்சகர்கள் ஊதித்தள்ளி விட்டார்கள். அதனால் என்ன. திருப்பதி உண்டியலை மாதிரி தியேட்டர் கவுண்டர் கேஷ் பாக்ஸ் ரொம்பி வழிகிறது. ‘தியேட்டர்லோ நல்குரு’ டோலிவுட்டுக்கு சில புதிய திறமையாளர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. புதுமையான திரைக்கதை வடிவத்தை ஹாலிவுட்டிலிருந்தா அல்லது கொரியாவிலிருந்து சுட்டார்களா என்பதை யாமறியோம் பராபரமே.

நான்கு நண்பர்கள். காட்டுக்கு நடுவில் இருக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸுக்கு ஜாலி ட்ரிப் போகிறார்கள். இடையில், நண்பர்களில் ஒருவனுடைய கேர்ள் ஃப்ரண்டும் இணைந்து கொள்கிறாள். கெஸ்ட் ஹவுஸில் இவர்களை எதிர்ப்பார்த்து ஒரு பேய்(!) காத்துக் கொண்டிருக்கிறது. இங்கேதான் ஒரு ட்விஸ்ட். இது நம் படத்தின் கதையல்ல. ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படத்தின் கதை. திரையில் ஓடும் பேய்க்கதையில் வருவதைப் போலவே, சில சம்பவங்கள் தியேட்டரிலும் நடக்கிறது. படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் திடீரென்று நாலு பேர் அமானுஷ்யமான முறையில் காணாமல் போகிறார்கள். நிஜமாகவே பேய் இருக்கிறதா என்கிற கேள்வியோடு முடிகிறது க்ளைமேக்ஸ்.

2
ஸ்ரீகாந்த், ஷங்கர், வருண், தீரஜ் என்று நான்கு நாயகர்கள். அவர்களை விட்டு விடலாம். அட்டக்கத்திகள். ஹீரோயின் ஸ்வேதான் பண்டிட்தான் ‘மேட்டர்’. இவருடைய காஸ்ட்யூமர் காற்றாட உடைகளை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். ஸ்வேதா ஸ்க்ரீனில் தெரியும் ஒவ்வொரு காட்சியிலும், தொடையோ அல்லது கழுத்துக்கு கீழான வனப்பான பகுதிகளோ பளிச்சென்று ஸ்பெஷல் லைட்டிங்கில் பளீரிடுகிறது. குறிப்பாக பாத்ரூமில் டாப்லெஸ்ஸாக குளிக்கும் காட்சியில் ஏர்கண்டிஷண்ட் தியேட்டரிலும், நமக்கு உள்ளாடையெல்லாம் நனையுமளவுக்கு வியர்க்கும் நூத்தி பத்து டிகிரி சூடு. படம் பார்க்கும் நமக்கே ஒரு மாதிரி முறுக்குகிறது எனும்போது, அவரது காதலர் தேமேவென்று எப்போதும் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் பெரிய லாஜிக் மிஸ்டேக். ஸ்வேதா கிளப்பும் சூடு போதாதென்று, ஹாட் சவர் சூப் மாதிரி ஒரு ஜங்கிள் ரேப் சீன் வேறு. ஸ்க்ரீனில் எந்த பெண் கேரக்டர் வந்தாலும், ஏதாவது பிட்டு தேறுமா என்று ரசிகனை ஏங்கவைக்கிறார்கள். ஒரு மெயின்ஸ்ட்ரீம் மூவிக்கு இவ்வளவு செக்ஸ் ஆகாது சாமி.

                             center
இரண்டு மணி நேரத்துக்கு நல்ல எண்டெர்டெயினர்தான் என்றாலும், ஒரு குறும்படத்தை முழுநீளத்துக்கு இழுத்திருப்பதைப் போன்ற பிரமையை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக முதல் பாதி திரைக்கதையை தடவித் தடவி மெதுவாக எழுப்புகிறார் இயக்குனர். வெண்ணிற ஆடை மூர்த்தி தெலுங்கில் டயலாக் எழுதியிருப்பாரோ என்று சந்தேகப்படுகிற அளவுக்கு படம் முழுக்க நேரடி ஆபாச வசனங்கள். பேய்க்கு போட்டிருக்கும் மேக்கப் படுமொக்கை. பேயைப் பார்த்தால் பயம்தான் வரவேண்டும். ஆனால் பார்வையாளர்களுக்கு காமம் வருகிறது. கிராஃபிக்ஸ், போஸ்ட் புரொடக்‌ஷன் மாதிரி விஷயங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்று ஸ்வேதாவின் டிரெஸ் மாதிரி படுசிக்கனமாக படமெடுத்திருக்கிறார் இயக்குனர்.

1
தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களின் கேரக்டர்களை ரசனையாக செதுக்கியிருப்பதில் இயக்குனரின் டிஸ்கஷன் உழைப்பு தெளிவாகிறது. அதிலும் குஜால் படம் பார்க்க அஜாலாக
வரும் ஜோசியரும், அவருடைய சீடரும் அட்டகாசம். பேய்ப்படம் என்றாலும் பேய் நடுராத்திரியில் அமானுஷ்யமாக பாடுவதைப் போல, பாட்டு போட்டு சாகடிப்பது நம்மூர் வழக்கம். பட்ஜெட் பற்றாக்குறையாலோ என்னமோ பாட்டு எடுக்க முடியவில்லையென்றாலும், அது படத்துக்கு பொருத்தமாகதான் இருக்கிறது. படம் பார்த்து வெளியே வரும்போது பைக் பார்க்கிங்கில் ஏதாவது ‘மோகிணி’ தென்படுமாவென்று ஆவலோடு ஒவ்வொரு ரசிகனும் எதிர்ப்பார்க்கிறான். இதுதான் தியேட்டர் லோ நல்குருவின் வெற்றி.


பேய் வீடு, மைடியர் லிசா மாதிரி genreயை தமிழில் கிட்டத்தட்ட கொன்றுவிட்டோம். தெலுங்கில் ரத்தம் ஊற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல டப்பும் பார்க்கிறார்கள். ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாக பணம் போட்டு ஒரு படமெடுத்து அரங்குகளை நிரப்பமுடியுமென்று நம் கண்ணெதிரே நிரூபிக்கிறார்கள். ஒரு பக்கம் மால்களின் வரவால் சூப்பர் ஹீரோக்களின் இண்டஸ்ட்ரி ரெக்கார்ட் கலெக்‌ஷன்ஸ். இன்னொரு பக்கம் தரை டிக்கெட்டு வசூலையும் இம்மாதிரி படங்களால் இழக்கவில்லை. வணிகரீதியாக திரையுலகை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்று டோலிவுட்டிடம் பாடம் கற்கவேண்டும் நம் கோலிவுட்.
end
 
(நன்றி : cinenmobita.com)

14 ஜூன், 2013

அடுத்த பிரதமர் மோடி

நரேந்திரமோடிக்கு நிர்வாகத்திறமை உண்டு என்பதை ஒப்புக்கொள்வதில் நமக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு ஹாட்ரிக் அடிப்பதெல்லாம் அபாரமான சாதனைதான். கோத்ரா ஒன்றே அவரை நிராகரிக்க போதுமான காரணமுமில்லை. ஆனால் அவரால் மட்டுமே இந்தியாவை ரட்சிக்க முடியும், அவர் அடுத்து பிரதமர் நாற்காலியில் அமர்வதை ஆண்டவன் நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதைப் போன்ற பிரமையெல்லாம் வெத்து சவடால்தான். மோடி, ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படும் பலூன் மட்டுமே. முன்பு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை அசைக்கவே முடியாது என்று இதே ஊடகங்கள் இதே போல ஊதியதை மறந்துவிடக்கூடாது.

இந்தியாவிலேயே குஜராத் நெ.1 மாநிலம். அம்மாநிலம் உலகவங்கியில் ஒரு லட்சம் கோடி சேவிங்ஸ் அக்கவுண்டில் போட்டிருக்கிறது. குஜராத்தில் மின்வெட்டே கிடையாது. குஜராத்தின் நதிகளில் தண்ணீருக்குப் பதிலாக தேனும், பாலும்தான் ஓடுகிறது என்பது மாதிரி ஏகப்பட்ட கட்டுக்கதைகளை குஜராத்துக்கு வெளியே தூணிலும், துரும்பிலும் கூட கேட்கமுடிகிறது. மோடி பதவியேற்ற பிறகு குஜராத்தைவிட பல மாநிலங்கள் (தமிழகம் உட்பட) கூடுதல் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது. இத்தனைக்கும் இம்மாநிலங்களில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தும் வளர்ச்சியில் எந்த தடையுமில்லை. குஜராத்தின் தனிநபர் வருமானத்தை விட ஐந்து மாநிலங்களில் (தமிழகம் உட்பட) வருமானம் அதிகம். தொழில் வளர்ச்சியிலும் கூட மற்ற மாநிலங்களை குஜராத் எவ்வகையிலும் முந்தவில்லை. இவரது காலக்கட்டத்தில் குஜராத்தைவிட தமிழ்நாட்டிலேயே கூட அந்நிய முதலீடு அதிகம். கல்வி, நலவாழ்வு, வருமானம் அடிப்படையிலான ஹூயுமன் டெவலப்மெண்ட் இண்டெக்ஸில் கூட இந்திய மாநிலங்களில் குஜராத்துக்கு பதினோராவது இடம்தான். எப்படி யோசித்தாலும் எந்த வகையிலும் குஜராத் முதலிடத்தில் இல்லை எனும்போது, மோடி சார்பாக செய்யப்படும் ஊடகப் பிரச்சாரங்கள் கோயபல்ஸ் தன்மை கொண்டவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மோடி ஒரு தலைசிறந்த நிர்வாகியுமில்லை. அதே நேரம் மோசமான ஆட்சியாளரும் இல்லை என்பதுதான் உண்மை.

திரும்பத் திரும்ப குஜராத்தியர்கள் அவரையே தேர்ந்தெடுக்கிறார்களே, சிறப்புகள் இல்லாமலா மூன்றாவது முறை முதல்வர் ஆவார் என்று கேட்கிறார்கள். அப்படிப் பார்க்கப்போனால் இவரைவிட அசைக்க முடியாத இடத்தில் ஷீலாதீட்சித் இருக்கிறார். அவரை பிரதமர் பதவியில் வைத்து கற்பனையில் கூட எந்த ஊடகமும் அழகு பார்க்கவில்லையே?

மோடி ஏன் பிரதமர் ஆகவேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், அவர் ஏன் ஆகக்கூடாது என்று அவரது எதிர்ப்பாளர்களும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த பட்டிமன்றத்துக்குள் நாம் நுழையவேண்டாம். நிஜமாகவே மோடி பிரதமர் ஆக வாய்ப்பிருக்கிறதா என்று மட்டும் பார்ப்போம். ஊர் ஊராகப் போய் சென்சஸ் கூட எடுக்க வேண்டியதில்லை. உங்களுக்கு முன்பாக இந்தியா மேப்பை எடுத்து வைத்துக்கொண்டு பாஜக எங்கெங்கே ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது என்று ஒரு ரஃப் எஸ்டிமேட்டை நீங்களே கூட போட்டுப் பார்க்கலாம்.

இந்தியாவில் 543 பாராளுமன்றத் தொகுதிகள். பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் சட்டீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம். பாஜக ஆளும் இந்த நான்கு மாநிலங்களிலும் இருக்கும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 68 தான். இவற்றை தவிர்த்துப் பார்த்தால் டெல்லி, மஹாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மாதிரி சில மாநிலங்களில் சொல்லிக் கொள்ளும்படி செல்வாக்கு உண்டு. தென்மாநிலங்களில் கர்நாடகாவில் ஓரளவுக்கு ஜெயிக்கலாம். கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகியவற்றில் பாஜக ஒரே ஒரு பாராளுமன்றத் தொகுதியில் ஜெயித்தாலும் ஆச்சரியம்தான். ஒரிஸ்ஸாவில் பட்நாயக் மனசுவைத்தால் ஓரிரண்டு இடங்கள் உண்டு.

பிரதமரை தீர்மானிக்கும் மாநிலம் என்று சொல்லக்கூடிய உ.பி.யில் 80 தொகுதிகள் இருக்கின்றன. எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளின் துவக்கத்திலும் பாஜகவுக்கு அட்சயப் பாத்திரமாக இருந்த உ.பி., இன்று முற்றிலுமாக அக்கட்சியை கைவிட்ட நிலையே நிலவுகிறது. முலாயமும், மாயாவதியும் அடித்துப் பிடித்துக்கொண்டது போக காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் கிடைப்பது எலும்புத்துண்டுகள் மட்டுமே. பீகாரில் பாஜகவுக்கு பெரிய செல்வாக்கு இல்லையென்றாலும், அங்கு அக்கட்சியின் அணியில் இருக்கும் ஐக்கிய ஜனதாதளம்தான் ஆட்சியில் இருக்கிறது. மோடி என்கிற பெயரை கேட்டாலே நிதிஷூக்கு அப்படி ஓர் எரிச்சல். அக்கட்சியும் கிட்டத்தட்ட பாஜகவை கைவிட்டு விட்டது. மகாராஷ்டிராவில் பால்தாக்கரே இருந்தபோது பாஜகவுக்கு கிடைத்த பிடிப்பு இன்றில்லை. கிழக்கு மாநிலங்களில் சொல்லவே வேண்டாம். பல மாநிலங்களில் பாஜகவுக்கு அமைப்புகள் கூட இல்லை.

இரக்கப்பட்டு கொஞ்சம் தாராளமாகவே பாஜகவுக்கு இடம் கொடுத்தோமானால் கூட என்ன செய்தாலும் நூற்றி ஐம்பதை நெருங்குவதற்குள்ளாகவே நாக்கு தள்ளிவிடுகிறது. நிலைமை இப்படியிருக்கையில் மோடியை பிரதமர் ஆக்க தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கப் போகும் மக்கள் அமெரிக்காவிலிருந்தும், ஆகாயத்திலிருந்தும் குதிக்கப் போகிறார்களா... பாஜக எனும் ஓட்டைப்படகை வைத்துக்கொண்டு மோடியால் எப்படி கரைசேர முடியும்? இவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்காமலேயே தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் கூட காங்கிரஸ் மீதான கோபத்தால் பாஜகவுக்கு கொஞ்சம் கூடுதல் சீட்டுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதின் மூலம் தேர்தலுக்கு முன்பாகவே பதினைந்து சதவிகித சிறுபான்மை வாக்குகளை இழக்கும் ரிஸ்க்கை பாஜக எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

மோடிதான் அடுத்த பிரதமர் என்று அடித்துப் பேசுபவர்கள் ‘இயேசு வருவார்’ என்கிற அற்புதத்தையும் நம்பலாம்.

11 ஜூன், 2013

மழைக்காதலர்

தொண்ணூறுகளின் இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு வாழ்வின் அதிகபட்ச லட்சியமாக அது இருந்தது. யமஹா. அவருக்கும் அதுதான் கனவு. செகண்ட் ஹாண்டிலாவது ஒரு பைக் வாங்கிவிட வேண்டும். கிடைத்த சொற்ப சம்பளத்தின் ஒரு பகுதியை யமஹாவுக்காக சேமிக்கத் தொடங்கினார். குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் எங்காவது பைக் விற்பனைக்கு வருகிறதா என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த திடீர் திருமணம். அவருடன் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஒரு நண்பரின் காதல் திருமணம். நண்பரிடம் திருமணச் செலவுகளுக்கு நயா பைசா இல்லை.

“செலவுக்கு என்னடா பண்ணுவே? இதை வெச்சுக்க. முடியறப்போ திருப்பிக் கொடு” தன் கனவுக்காக சேர்த்து வைத்த பணத்தை, எந்த நெருடலுமின்றி அப்படியே எடுத்துக் கொடுத்தார்.

கேள்விப்பட்ட கதைதான். ஆனாலும் உண்மைக்கதை. இதுமாதிரி அவரைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. சசிகுமார் நடிக்கும் படங்களைப் பார்க்கும்போது, இம்மாதிரி கேரக்டர்கள் நிஜமாகவே இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று சந்தேகம் வரும். இவரைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் எனும்போது நட்பு, செண்டிமெண்ட் எல்லாம் சினிமாவில் மட்டும் இல்லை. நம் வாழ்விலும் இவரைப் போன்றவர்களிடம் இருக்கிறது என்கிற நம்பிக்கை பிறக்கும். உலகத்தில் இன்னும் மனிதர்கள் வாழ்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் அவர் அவுட்ஸ்டேண்டிங் ஜர்னலிஸ்ட். அவருடன் சமகாலத்தில் அதே திட்டத்தில் பணியாற்றியவர் சொன்னார். “நிறைய எழுதினாதான் அவுட்ஸ்டேண்டிங்கா செலக்ட் பண்ணுவாங்கன்னு நானெல்லாம் நம்பிக்கிட்டிருந்தேன். அதனாலே கிடைச்ச மேட்டரையெல்லாம் தேத்தி நிறைய எழுதினேன். என்னோட பீரியட்லே எண்ணிக்கையிலே நான் செஞ்சுரியைத் தொட்டேன். ஆனா அவன் எழுதினது ரொம்ப குறைவு. அதிகபட்சம் பதினஞ்சி கட்டுரை இருக்கலாம். ஆனா அதுலே பெரும்பாலானவை கவர்ஸ்டோரி. நான் எதிர்ப்பார்த்த மாதிரியே எனக்கு அவுட்ஸ்டேண்டிங் கிடைச்சுது. வொர்க் குவாலிட்டிக்கு மரியாதையா அவனும் அவுட்ஸ்டேண்டிங்கா வந்தான்” மாணவப் பருவத்திலேயே தகுதியான பத்திரிகையாளர் அவர்.

இளைஞர்களிடம் நட்பு பாராட்டுவதிலும், உரையாற்றுவதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். எந்தவொரு வெற்றிகரமான பத்திரிகையாளரிடமும் இதே பண்பு இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். அனுபவத்திலும், வயதிலும் குறைந்தவர்களிடம் உரையாற்றுவதைவிட அலுப்பான விஷயம் வேறெதுவுமில்லை. பெரும்பாலும் நாமறிந்த செய்திகளையே நம்மிடம் அபத்தமான வடிவில் சொல்வார்கள். ஆனால் அதற்காக அலுத்துக் கொள்பவர்கள் ‘ஜெனரேஷன் கேப்’ வியாதியால் பீடிக்கப்பட்டு விரைவில் காணாமலும் போய்விடுவார்கள். அவரிடம் படு அபத்தமாக உரையாற்றியிருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். ஆனாலும் இன்றுவரை அதே பாசத்தினை சுருதி மாறாமல் காட்டி வருகிறார். அவருடைய ஆயுதமே அன்புதான். அன்பைவிட வன்முறையான ஆயுதம் வேறு ஏது. எதிரிகளை மட்டுமல்ல. சமயத்தில் நண்பர்களையும் தாக்கும் ஆயுதம் இது. பதில் தாக்குதலுக்கு வாய்ப்பேயில்லை. சரண்டர் ஆவது மட்டுமே ஒரே வழி.

பத்திரிகைப் பணி என்பது ரிலே ரேஸ் மாதிரி. நம்முடைய ஓட்டத்தை முடித்துக்கொண்டு, அடுத்தவனிடம் டார்ச்சை சரியான நேரத்தில் ஒப்படைக்க வேண்டும். அவரிடம் ‘டார்ச்’ வாங்கி இப்போது இத்துறையில் ஓடிக்கொண்டிருப்பவர்கள் ஏராளம். கால் மேல் கால் போட்டு வேடிக்கை பார்க்கக்கூடிய உயர்நிலைக்கு உயர்ந்தபிறகும், அவரும் கூடவே கையில் டார்ச்சோடு ஓடிவந்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.

‘உலகம் ஒரே கிராமம்’ காலக்கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இச்சூழலில் சுயநலமே பிரதானம். எம்.ஜி.ஆர் படங்களில் வில்லன்களாக வந்தவர்கள்தான் இப்போது ஹீரோக்கள். தலைமுறை தலைமுறையாக நமது கலாச்சாரம் காத்துவந்த அடிப்படை மனித மதிப்பீடுகளுக்கு இப்போது எந்த மதிப்புமில்லை. ‘வெல்விஷர்’ என்கிற கேரக்டரே இப்போது யார் வாழ்விலும் இல்லை. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் ஏராளமானோருக்கு இவர் இன்னமும் வெல்விஷராக இருக்கிறார் என்பதுதான் அவரது சாதனைகளிலேயே உச்சபட்ச சாதனை.

முன்பெல்லாம் மழை வந்தால் மயில்தான் ஞாபகத்துக்கு வரும். இப்போது கண்ணன் சார் நினைவுக்கு வருகிறார். எல்லாவற்றுக்கும் ரசிகர். குறிப்பாக மழைக்கு மகாரசிகர்.

பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணன் சார்!