தம்மாத்தூண்டு நாடுதான். உலக வரைபடத்தில் கூட தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். மக்கள் தொகையே மொத்தமாக ஒன்றரை கோடிதான். ஆனாலும் அமெரிக்காவின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. முந்தாநாள் கியூபா, நேற்று வெனிசூலா. இன்று ஈக்குவேடார். அமெரிக்காவின் காலுக்கு கீழே அமர்ந்திருக்கும் இந்த தென்னமெரிக்க குட்டி நாடுகள் அமெரிக்காவுக்கு குழிபறித்துக் கொண்டிருப்பதே வாடிக்கை ஆகிவிட்டது.
யானையைப் பார்த்து எலி சவால் விடும் கதையை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முன்பாக எட்வர்ட் ஸ்நோடன் என்கிற முப்பது வயது இளைஞரைப் பற்றி நாம் மேலோட்டமாக தெரிந்துக் கொள்வது அவசியம். முப்பதே வயதுதான். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் தொழில்நுட்ப ஒப்பந்தக்காரர். சி.ஐ.ஏ.,வின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர். அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்களை ஊடகங்களுக்கு தந்துவிட்டார் என்று இவர்மீது குற்றச்சாட்டு. அரசுப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பொதுவாகவே இவர் அமெரிக்க அரசு எதிர்ப்பாளராகதான் அறியப்படுகிறார்.
இண்டர்நெட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான முன்னணி நிறுவனங்களோடு அமெரிக்க அரசு ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதாவது நீங்கள் உங்கள் மனைவியிடம் சாட்டிங்கில் ‘சாயங்காலம் போண்டாவும், சட்னியும் டிஃபனுக்கு ரெடி பண்ணி வை’ என்று சொல்வதைக்கூட அமெரிக்க அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எளிமையாகப் புரிந்துக் கொள்வோம். வேடிக்கையாக சொன்னாலும் இதுவும்கூட சாத்தியம்தான். அப்படியெனில் மற்ற நாடுகளின் அதிமுக்கியமான ரகசியங்களின் கதி என்ன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.
இதன் அடிப்படையில் ‘ஒட்டுமொத்தமாக மக்களின் இண்டர்நெட் செயல்பாடுகளை அமெரிக்கா கண்காணிக்கிறது. அதற்கான கட்டமைப்பு வசதிகள் அதனிடம் இருக்கிறது’ என்பதுதான் இவர் கசியவிட்ட ரகசியம். ஏனெனில் இந்த ரகசியத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களில் ஸ்நோடனும் ஒருவர். ‘நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதை செய்யவேண்டியிருக்கிறது. வேறொன்றும் குறிப்பிடத்தக்க உள்நோக்கம் இல்லை’ என்று அமெரிக்க அரசு அந்த குற்றச்சாட்டை மறுத்தது.
எனவேதான் ஸ்நோடனின் மீது அமெரிக்கா கொலைவெறி கொண்டிருக்கிறது. ‘சிக்கினால் பிரியாணிதான்’ என்று உணர்ந்த ஸ்நோடன் ஹாங்காங்கிற்கு அடைக்கலம் நாடி பறந்துவிட்டார். “பாதுகாப்பு ரகசியங்களை கசியவிட்ட குற்றவாளி உங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறார். அவரைப் பிடித்து வையுங்கள்” என்று அமெரிக்க அதிகாரிகள் சீனாவுக்கு தகவல் அனுப்பினார்கள். “இதோ உடனே தேடிப்பிடித்து கொடுக்கிறோம்” என்று அமெரிக்காவோடு பேசிக்கொண்டே, அவரை மாஸ்கோவுக்கு பாதுகாப்பாக விமானம் ஏற்றி அனுப்பி விட்டார்கள் சீனர்கள். ஸ்நோடனை ஒப்படைக்கும்படி இப்போது ரஷ்யாவிடம் கெஞ்சியும் மிரட்டியும் கொண்டிருக்கிறது அமெரிக்கா.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினோ இந்த விவகாரத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். “ஸ்நோடன் எங்கள் நாட்டுக்கு வந்தது நிஜமாகவே எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ரஷ்ய மண்ணில் அவர் எந்த குற்றமும் புரியாத நிலையில் அவர் மீது நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?” என்று அப்பாவியாக கேட்கிறார்.
“மக்களுடைய கருத்து சுதந்திரத்துக்காகவே உயிரைப் பணயம் வைத்து இத்தியாகத்தை செய்திருக்கிறேன்” என்று கூறும் ஸ்நோடன், கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் நாடு ஒன்றில் அடைக்கலம் பெற விரும்புவதாகவும் சொல்லியிருக்கிறார். ஐஸ்லாந்துதான் அவருடைய சாய்ஸ். ஆனால் ஐஸ்லாந்து நாட்டு சட்டவிதிகளை காரணம் காட்டி அவருக்கு அடைக்கலம் தர இயலாது என்று அந்நாடு தயங்குகிறது.
இங்கேதான் வருகிறது ஈக்குவேடார். மாஸ்கோவில் ஸ்நோடன் தரையிறங்கியபோது விமான நிலையத்தின் வாயிலில் ஈக்குவேடார் நாட்டு தூதரகத்தின் கார் நின்றிருந்தது என்பதை அமெரிக்க ஊடகங்கள் போட்டோவோடு ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அந்நாட்டின் அயலகத்துறை அமைச்சர் ரிகார்டோ பாட்டினோ, ஸ்நோடன் தங்கள் நாட்டில் அடைக்கலம் பெற விண்ணப்பித்திருப்பதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கும் லண்டனில் இருக்கும் தங்கள் தூதரகத்தில்தான் ஈக்குவேடார் கடந்த ஓராண்டாக அடைக்கலம் தந்து வருகிறது. ஸ்வீடன் அரசாங்கம் அவரது மீது பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ய அலைந்துக் கொண்டிருக்கிறது. இது டம்மி காரணம். ஒருவேளை ஸ்வீடன் அவரை கைதுசெய்தால் அமெரிக்காவிடம்தான் ஒப்படைக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் பல்லாண்டு தூதரக பரிமாற்ற ரகசியங்களை தொடர்ச்சியாக விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது.
இந்நிகழ்வுகளால் உலக அரசியல் மீண்டும் சூடேறிப்போய் இருக்கிறது. உலகநாடுகளை வேவு பார்க்கிறது என்கிற குற்றச்சாட்டில் மாட்டிக்கொண்டிருப்பதால் அமெரிக்கா இவ்விவகாரத்தில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது. அமெரிக்காவின் இந்த பலகீனத்தை பயன்படுத்தி ஈக்குவேடார் தொடைதட்டி சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் நிகழ்வுகளை புன்னகையோடு ரசித்துக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த அசகாய சூரனைப்பற்றி பதிவிட்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குசமீபத்தில் நான் படித்த உருப்படியான ஒரே பதிவு.
தம்மாத்தூண்டு நாடுதான்.இன்று உலகளவில் பேசப்படும் நாடு .மூளை சின்னது அது உடலை இயங்கச் செய்கிறது
பதிலளிநீக்கு“என்னோட மெயில் எல்லாத்தையும்தான் நீங்களே பார்க்குறீங்களே, உங்களுக்குத் தெரியாத ரகசியமா..” என்று நம்ம சிங் கேட்டுவிட்டால் -- No chance of our prime minister asking it even in dreams
பதிலளிநீக்குWhy not India watch Americans emails or even Russians emails or even Chinese email like America dose others.
பதிலளிநீக்கு