7 செப்டம்பர், 2013

மிருதங்க சக்கரவர்த்தி vs விகடன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1983ல் வெளிவந்த திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. தில்லானா மோகனாம்பாளில் நாதஸ்வர வித்வானாக அசத்தியவர் இப்படத்தில் மிருதங்க வித்வானாக பரிணாமம் பெற்றிருந்தார். கிரிட்டிக்கலி அக்ளெய்ம்ட் ஆன இப்படம், ஏனோ பாக்ஸ் ஆபிஸில் சோடை போனது.

இப்படம் வந்திருந்தபோது விகடனில் எழுதப்பட்ட விமர்சனத்தில் சிவாஜியின் மிருதங்க நடிப்பு தாறுமாறாய் கிழிக்கப்பட்டிருந்தது. சிவாஜி மிருதங்கம் வாசிப்பதை பார்க்கும்போது, வலிப்பு நோய் வந்தவரை பார்ப்பது போல இருக்கிறது என்று விகடன் காரசாரமாக எழுதிவிட்டது. இந்த விமர்சனத்துக்கு சிவாஜி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை கிளப்பினார்கள். இதையடுத்து விகடன், புகழ்பெற்ற மிருதங்க வித்வான்களிடம் சிவாஜியின் நடிப்பு குறித்து கருத்து கேட்டிருக்கிறது. நிஜ மிருதங்க வித்வான்களை மிஞ்சும் வகையில் சிவாஜியின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது என்று அவர்கள் சான்றிதழ் தர, விகடன் மனப்பூர்வமாக தன் வாசகர்களிடம் மன்னிப்பு கோரியது.

செய்த பாவத்துக்கு பரிகாரமாக அடுத்த ஓராண்டுக்கு விகடனில் விமர்சனமே வராது என்றும் அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படியே விகடனும் ஓராண்டுக்கு சினிமா விமர்சனம் எழுதவேயில்லை.

இது நடக்கும்போது நான் சிறுவனாக இருந்திருப்பேன். விகடனோடு பரிச்சயம் இருந்ததா என்றும் நினைவில்லை. எனவே சம்பவம் பற்றி தெரியவில்லை. ’தங்கமீன்கள்’ திரைப்படம் குறித்து விகடன் எழுதிய விமர்சனத்துக்கு, எதிர்வினையாக இயக்குனர் ராம் எழுதிய பதிவுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மூத்தப் பத்திரிகையாளர் இந்த சம்பவத்தை சொன்னார். தங்கமீன்கள் விமர்சனம் குறித்த ராமின் தரப்பையும், விகடனின் விளக்கத்தையும் அடுத்தவாரம் விகடன் பிரசுரிக்கப் போகிறது என்று ராம் எழுதியிருக்கிறார். ஐ யாம் வெயிட்டிங்.

மிருதங்க சக்கரவத்தி காலத்தில் இச்சம்பவம் நடந்திருக்கும் பட்சத்தில், அதையும் தங்கமீன்கள் குறித்த விளக்கம் வரும் இதழிலேயே, விகடன் பொக்கிஷம் ஆட்கள் மீள்பிரசுரித்தால் சுவையாக இருப்பதோடு, விகடனின் பாரம்பரியப் பெருமையையும் அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதாக அமையும்.

2 செப்டம்பர், 2013

தங்க மீன்கள்

படம் தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே திக்குத்தெரியாத காட்டில் வழிதெரியாமல் அலைந்துக் கொண்டிருப்பதற்கான உணர்வு. ‘தெரியாத்தனமா மாட்டிக்கிட்டோமோ’ என்றுதான் இடைவேளையின் போதும் கூட தோன்றியது. இவரே ஏன் நடித்துத் தொலைத்தார் என்று கோபம் கூட வந்தது. இயக்குனர் ராம் பெரிய இண்டெலக்ச்சுவல். அவருடைய சிந்தனையின் வேகத்தோடு கூடவே ஓடிவருவது, நம்மைப் போன்ற சாதாரண கமர்சியல் சினிமா ரசிகர்களுக்கு சாத்தியமில்லை. அதுவுமின்றி craftஐ அவர் கண்ட்ரோல் செய்யும் ஸ்டைல் நமக்குப் புதுசு. இடைவேளைக்குப் பிறகு படத்தோடு செட்டில் ஆக முடிகிறது. இயக்குனர் ராமும், நடிகர் ராமும் விஸ்வரூபம் எடுக்கும் கட்டம் இது. பாலிவுட்டில் இருந்தெல்லாம் டிஸ்கஷனுக்கு ராமை கூப்பிடுகிறார்கள் என்றால் சும்மாவா?

சட்டென்று ஜெயமோகனின் தேர்வு, தங்கமீன்களின் அச்சாணியாய் தோன்றுகிறது. மாலனின் தப்புக்கணக்கு சிறுகதையும் நினைவுக்கு வருகிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக அவதானித்தால் நிறைய இலக்கியப் பிரதிகளின் பாதிப்பை உணரலாம்.

தங்கமீன்களை விளம்பரப்படுத்த்துவதைப் போல இது வெறும் அப்பாவுக்கும், மகளுக்குமான கதையாக மட்டும் தோன்றவில்லை. மகளை பெற்ற அப்பாவுக்குதான் இந்த படம் பிடிக்கும் என்றுகூட ஃபேஸ்புக்கில் யாரோ ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்கள். அப்பா – மகன், மாமியார் – மருமகள், அண்ணன் – தங்கை, ஆசிரியை – மாணவி, பெற்றோர் – ஆசிரியர், பணம் வைத்திருப்போர் – பணம் இல்லாதவர், சுரண்டுபவர் - ஒடுக்கப்படுபவர் என்று நிறைய முரண்களை உள்ளடக்கிய கதை. பட முழுக்க ஏராளமான சிறுகதைகள். எதுவுமே சிதறிவிடாமல் ஒழுங்காக கோர்த்து நேர்த்தியான படமாக்கியிருக்கிறார் ராம். வேண்டுமானால் நம்முடைய ஈகோவை திருப்திப்படுத்திக் கொள்ள ஒரு சில குறைகளை தேடி கண்டுபிடித்து பட்டியலிட்டுக் கொள்ளலாம். ஒருவேளை இரண்டரை மணி நேர பொழுதுபோக்குக்காக மட்டுமே யாரேனும் தங்கமீன்களுக்கு போயிருந்தால், அவர்கள் ஏமாற்றமடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

காட்சிகளில் யதார்த்தமில்லை என்று தங்கமீன்களை நண்பர் ஒருவர் விமர்சித்தார். வாழ்வியல் சம்பவங்களே மிகையாய், நாடகமாய் நடந்துக் கொண்டிருக்கும் சூழல் இது. சினிமா ஏன் யதார்த்தமாக இருக்கவேண்டும் என்று தெரியவில்லை. “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு காக்கா வந்து சொல்லிச்சா?” மாதிரி வசனங்களும், காட்சிகளும் கொஞ்சம் மிகையாய், அபத்தமாய் இருப்பது உண்மைதான். அதனாலென்ன. பராசக்தி இறுதிக்காட்சியில் சிவாஜி முழம், முழமாய் பேசியதைப் போல கோர்ட்டில் யாரேனும் பேச முடியுமா. அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு மாபெரும் காவியம் என்று ஒப்புக்கொள்ளும் நாம், தங்கமீன்கள் மட்டும் பக்கத்து வீட்டில் நடப்பதை எட்டிப் பார்க்கும் காட்சியனுபவத்தை தரவேண்டும் என்று ஏன் எதிர்ப்பார்க்கவேண்டும்? ராம் இம்மாதிரி காட்சிகளின் மூலமாக வெளிப்படுத்த விரும்பும் உணர்வை மட்டும் புரிந்துக்கொண்டால் போதுமில்லையா? தன்னுடைய மகள் கொஞ்சம் மந்தமானவள் என்று சுட்டிக் காட்டுபவர்களிடம், அப்படி நம்ப விரும்பாத ஒரு தகப்பன் கொஞ்சம் ஆவேசமாக (லூசுத்தனமாகக்கூட) நடந்துக்கொள்வதில் என்ன பெரிய லாஜிக் மிஸ்டேக் வந்து தொலைக்கப் போகிறது?

படத்தின் திரைக்கதை கட்டுமானமே ஃபேண்டஸியோடு கலந்த நடப்பு சமூக, குடும்ப சம்பவங்கள்தான். தாத்தாவோ, பாட்டியோ கதை சொல்லும்போது அதில் லாஜிக்கலாக குறுக்குக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தோமானால் கதையனுபவம் சுவாரஸ்யப்படாது.

“காசு இல்லாதவன்னா, அவனை முட்டாள்னு நெனைக்காதீங்கடா”

“நானும் செல்லம்மா மாதிரி தானேங்க?”

“காசு இல்லாதது பிரச்சினை இல்லை. காசு நிறைய இருக்குற இடத்துலே நாம மட்டும் காசு இல்லாம இருக்குறதுதான் பெரிய பிரச்சினை”

“அவன் ரொம்ப நல்லவன். கொஞ்சம் கெட்டவனாதான் திரும்பி வரட்டுமே?”

“உங்க கிட்டே நான் விட்டுட்டுப் போனது குழந்தையை. அதை கொன்னுட்டீங்க. அந்த ஸ்கூல் கொன்னுடிச்சி”

படம் நெடுக இம்மாதிரி ஒன்லைனர்களால் பார்வையாளனின் மூளையை சுறுசுறுப்பாகவே வைத்திருக்கிறார் இயக்குனர். அச்சு பிச்சு பஞ்ச்லைன்களுக்கு விசில் அடித்த நாம், உடனடியாக தங்கமீன்கள் மாதிரியான படத்தோடு ஒன்றுவது கொஞ்சம் கடினம்தான். அழகி, சொல்ல மறந்த கதை போன்ற படங்களின் genreல் இதை சேர்க்கலாம்.

இதே கதையை ஏதேனும் ஐரோப்பிய படத்திலோ, கொரியன் படத்திலோ சப்-டைட்டிலின் உதவியோடு பார்த்தால் உருகி, உருகி மாய்ந்துவிடுவோம். தமிழ் பேசும் தமிழ் மாந்தர்களின் கதை என்பதாலும், தமிழர்கள் உருவாக்கிய திரைப்படம் என்பதாலும் தங்கமீன்கள் நமக்கு கொஞ்சம் இளப்பமாய் தோன்றுகிறதோ என்னவோ?

அன்புமழையில் நனைத்திருக்கும் அந்திமழை

 ‘அந்திமழை’ மாத இதழ் தன்னுடைய இரண்டாம் ஆண்டு துவக்கத்தை இளைஞர் சிறப்பிதழாக கொண்டாடுகிறது.

சினிமா, ஊடகம், இலக்கியம் துறைகளில் எதிர்காலத்தில் பிரகாசிக்கக்கூடிய இளைஞர்களாக சிலரை அந்திமழை யூகித்து அடையாளம் காட்டியிருக்கிறது.

யுவகிருஷ்ணாவையும் இந்தப் பட்டியலில் ‘அந்திமழை’ குறிப்பிட்டிருக்கிறது. இந்த சிறப்பையும் எனக்கு ஏற்படுத்தித் தந்த ‘எந்தரோ மாகானுபாவலு’க்களை வணங்குகிறேன்.

அந்திமழையின் அன்புக்கு நன்றி!

30 ஆகஸ்ட், 2013

சிரியா : சிரிப்பை துறந்த தேசம்

சிரியாவின் உள்நாட்டுப் போர் ‘சீரியஸாகி’
போர்ப்பதட்டம் மத்திய கிழக்கு பிராந்தியத்தை அச்சுறுத்துகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிரியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பாதி பேர் அப்பாவி சிவிலியன்கள். முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. நாற்பது லட்சம் பேர் குடும்பம், வீடு, ஊரையெல்லாம் இழந்து உயிர்பிழைக்க நாட்டுக்குள் ஆங்காங்கே சிதறிப்போயிருக்கிறார்கள். ஓரளவுக்கு வசதி படைத்த பதினெட்டு லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டார்கள்.

2010ல் தொடங்கி, அரபுநாடுகளை புரட்டிப்போட்ட ‘அராபிய வசந்தம்’ எனப்படுகிற மக்களிடையே ஏற்பட்ட புரட்சியுணர்வு இப்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் இன்னமும் சிரியாவில் மட்டும் வசந்தம் பெரும்புயலாக வீசிக்கொண்டிருக்கிறது.

மத்திய கிழக்கில் சிரியாவை சுற்றி இஸ்ரேல், ஜோர்தான், ஈராக், துருக்கி ஆகிய ‘எப்போதும் பிரச்சினை’ நாடுகள் அமைந்திருக்கின்றன. நெருப்புக்கு நடுவில் எரியாத கற்பூரமாய் சிரியா மட்டும் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

மக்கள் தொகை கிட்டத்தட்ட இரண்டு கோடி. தொண்ணூறு சதவிகிதம் முஸ்லிம்கள். பத்து சதவிகிதம் கிறிஸ்தவர்கள். ஜனநாயகத்தின் வாசனையே சிரியாவில் அரைநூற்றாண்டாக கிடையாது. 1963ல் ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகளாக அராப் சோசலிஸ்டு பாத் கட்சியின் ஆட்சிதான். 1971ல் தொடங்கி, தற்போதைய அதிபர் பஸார் அல் ஆஸாத்தின் குடும்பம்தான் அதிபர் பதவியை தொடர்ச்சியாக தக்கவைத்திருக்கிறது.

அராபிய வசந்தம் காரணமாக அரபுநாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களைத் தொடந்து கடந்த 2011 மார்ச் வாக்கில் சிரியாவிலும் போராட்டங்கள் தொடங்கின. தொடர்ந்து ஒரே குடும்பம் சிரியாவில் ஆட்சியதிகாரம் செய்வதை மறுத்து, அதிபரை ராஜினாமா செய்யக்கோரி பேரணிகள் நடந்தன. அதிபருக்கு இவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை வீணடிப்பது பிடிக்கவில்லை. இராணுவத்தை அனுப்பி ‘என்ன செய்தாவது’ அடக்கச் சொன்னார். துப்பாக்கி முனையில் போராட்டக்காரர்களை இராணுவம் அணுக, கொடி பிடித்துக் கொண்டிருந்த போராட்டக்கார்கள் கொடியை கீழே போட்டுவிட்டு பதிலுக்கு துப்பாக்கி ஏந்தத் தொடங்கிவிட்டார்கள். இதுதான் சிரியப் பிரச்சினை.

சிரிய இராணுவத்தை ஆங்காங்கே நடந்த சண்டைகளில் துப்பாக்கி ஏந்திய போராட்டக்காரர்கள் போட்டுத்தள்ளிக் கொண்டிருக்க, நாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிபர் அல் ஆஸாத்தின் கையை விட்டு நழுவிக்கொண்டிருக்கிறது. அரசை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இதுவரை பொதுவான தலைமை ஒன்று உருவாகவே இல்லை. முஜாகிதீன் அமைப்பான ஜபாத் அல் நுஸ்ரா என்கிற மத அமைப்புக்கு அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களிடையே நல்ல மதிப்பு இருக்கிறது. எனவே அரசுக்கு ஆதரவாகவும் ஹிஸ்புல்லாவினர் (அரபுநாடுகளில் இயங்கும் இராணுவக் கட்டுமானம் கொண்ட மத அரசியல் கட்சி) களமிறங்கியிருக்கிறார்கள். நாட்டின் முப்பதிலிருந்து நாற்பது சதவிகிதம் நிலப்பரப்புதான் இப்போதைக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மீதி இடங்களை கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள்.

சிரிய அரசாங்கத்துக்கு ஈரான், ரஷ்யா போன்ற நாடுகள் இராணுவரீதியாக உதவி வருகின்றன. போராட்டக்காரர்களுக்கு கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஆயுதங்களை தருகின்றன. போராட்டக்காரர்களை நியாயமே இன்றி அடக்குவதாகக் கூறி அரபுக் கூட்டமைப்பு சிரியாவை தங்கள் அமைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டது. ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்றவையும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான போக்கையே கடைப்பிடிக்கிறார்கள்.

அதிபர் ஆஸாத் இஸ்லாமியக் குழுக்களில் மைனாரிட்டியான அலாவிட் குழுவைச் சேர்ந்தவர். மைனாரிட்டியினர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மெஜாரிட்டியினரை அடக்கி ஆளுவதா என்கிற குமுறல் ஏற்கனவே இருந்தது. ஆஸாத்தின் உறவினர்களும், அவரது குழுவைச் சேர்ந்தவர்களும்தான் சிரிய இராணுவத்தின் முக்கியமானப் பதவிகளைப் பிடித்திருந்தார்கள். மேலும் சிரியாவில் வாழும் குர்திஸ் இனமக்களும் தங்களுடைய கலாச்சாரம், மொழி, இனத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஏற்கனவே குமைந்துக் கொண்டிருந்தார்கள். 2011ன் தொடக்கத்தில் சிரிய கிராமப்புறங்களில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம். அதன் காரணமாக ஏற்கனவே ஏழைகளாக இருந்தவர்கள் பரம ஏழைகளானது. புதிய பொருளாதாரக் கொள்கைகளால் மக்களிடையே சமத்துவத்துக்கான இடைவெளி அதிகரித்தது. இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலைவிரித்து ஆடுவது என்று ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ நிறைய காரணங்கள் இருக்கிறது.
உலகிலேயே அதிகளவில் இரசாயன ஆயுதங்களை ‘ஸ்டாக்’ வைத்திருக்கும் நாடுகளில் மூன்றாவது பெரிய நாடாக சிரியா கருதப்படுகிறது. போராட்டக்காரர்களை அடக்க சிரிய இராணுவம் இவற்றை பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்ஜசீரா தொலைக்காட்சி சந்தேகப்பட்டது. அப்போதிலிருந்தே தொடர்ச்சியாக ஆங்காங்கே இரசாயன ஆயுதங்களால் மக்கள் தாக்கப்படுவதாக ஊடகங்கள் அலறிக்கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் நடத்தப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலில் சுமார் 635 பேர் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல். இதை உறுதிப்படுத்த வந்த ஐ.நா. விசாரணை அதிகாரிகளை, அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து அரசு வெளியேற்றியிருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்கா இனியும் பொறுக்கமுடியாது என்று தன்னுடைய போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடலுக்கு அனுப்பியிருக்கிறது. ஏற்கனவே அங்கே நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஹாரி ட்ரூமான் என்கிற விமானந்தாங்கி கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கு விரைந்திருக்கிறது. அங்கிருந்து சிரியா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. ஏவுகனை தாங்கி கப்பல் ஒன்றும் மத்திய தரைக்கடலுக்கு விரைந்தது. அமெரிக்காவுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் படைகளும் தயார்நிலையில் இருக்கின்றன.

“எங்கள் பிரச்சினையில் யார் தலையிட்டாலும், அது எண்ணெயில் தீயை வைப்பதற்கு ஒப்பாகும். அந்த தீ சிரியாவை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் எரித்துவிடும்” என்று சிரியாவின் தகவல்துறை அமைச்சர் அமெரிக்காவின் தலையீட்டை எச்சரித்து மிரட்டியிருக்கிறார்.

“அபாயக்கோட்டை அமெரிக்கா தாண்டுகிறது. இதன் விளைவுகளை வெள்ளை மாளிகை சந்திக்கும்” என்று சிரியாவின் ராணுவ துணைத்தலைவர் மசூத் ஜஸாயரியும் சவால் விட்டிருக்கிறார்.

சிரியாவுக்கு ஆதரவாக ஈரானும் தொடை தட்டி களமிறங்கியிருக்கிறது. ரஷ்யாவும் நேரடியாக களமிறங்கும் பட்சத்தில் மத்திய தரைக்கடல் இரத்தக்கடல் ஆகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அரபு நாடுகள் கவலையோடு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

உலகம் இன்னொரு போரை சந்திக்க தயார் ஆகிவிட்டது.

(நன்றி : புதிய தலைமுறை)

27 ஆகஸ்ட், 2013

Men are from Mars; Women are from Venus

அனில் அழகான பையன். அனன்யா மிக அழகான பெண்.

அனிலின் அப்பா ஒரு பிசினஸ்மேன். அம்மா எப்போதும் ஷாப்பிங், ஷாப்பிங் என்று அலைந்துக் கொண்டிருப்பவள். அம்மாவை மாதிரி ஒரு பெண்ணை மட்டும் மணந்துவிடக்கூடாது என்று சபதம் எடுத்திருப்பவன். எப்போது பார்த்தாலும் திருமணத்துக்காக வற்புறுத்தும் அம்மாவிடமிருந்து எப்படி எஸ்கேப் ஆவது என்று காத்துக் கொண்டிருப்பவன்.

அனன்யாவின் அப்பா ஒரு டிவி பர்சனாலிட்டி. அம்மா ஹவுஸ் வைஃப். காதலித்து மணந்தவர்கள். திருமணத்துக்குப் பிறகு மனைவியின் தனித்திறமைகளை மதிக்காத அப்பா. அப்பாவை மாதிரி ஓர் ஆணாதிக்கவாதி தனக்கு கணவனாக வந்துவிட்டால் என்னாகும் என்று அனன்யாவுக்கு கலக்கம்.

ஒரு வேலை விஷயமாக ஹைதராபாத்துக்கு வருகிறான் அனில். அங்கே அனன்யாவைப் பார்க்கிறான். முதல் சந்திப்பிலேயே அவனை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகிறாள். பதிலுக்கு அனிலும் அவளை அதைவிட ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகிறான். அடுத்தடுத்த சந்திப்புகளில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்திக் கொள்கிறார்கள். இவள் நம் அம்மா மாதிரி அல்ல என்று அனிலும், இவன் நம் அப்பா மாதிரி அல்ல என்று அனன்யாவும் உணர்கிறார்கள்.

ஒரு மஞ்சளான மாலை வேளையில் திடீரென்று அனன்யா கேட்கிறாள்.

“நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?”

“ஓக்கே”

“என்னது?”

“கல்யாணத்துக்கு ஓக்கேன்னு சொன்னேன்”

அதுவரை அவர்களுக்குள் காதல் இருந்ததற்கான சாட்சியங்கள் எதுவுமில்லை. எல்லாமே நல்லபடியாக முடிந்துவிட்டால் இடைவேளையிலேயே ‘சுபம்’ போடவேண்டி இருக்கும் இல்லையா? எனவே ஒரு முரணை உள்நுழைக்கிறார் இயக்குனர்.

“ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் இவன் நம்ம அப்பாவை மாதிரி ஆயிடுவானோ?”

“ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் இவ நம்ம அம்மாவை மாதிரி மாறிடுவாளோ?”

இருவருக்குமே அவசரப்பட்டு புரபோஸ் செய்துவிட்டோமோ என்று சஞ்சலம். கூடிப்பேசி ஒரு தீர்வை கண்டறிகிறார்கள்.

“வீடியோ கேம்ஸுக்கெல்லாம் ஒரு டெமோ வெர்ஷன் இருக்குற மாதிரி, லைஃபுக்கும் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்?” சாதாரணமாகதான் சொன்னாள் அனன்யா.

ஆனால், அந்த ஐடியா அனிலுக்கு ‘ஓக்கே’ என்றுதான் தோன்றியது.

“நாற்பது நாள். ஒரு ஃப்ளாட் எடுத்து தங்கலாம். நீயும் நானும் ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ஃபா வாழணும். லிவிங் டூ கெதர் மாதிரி இல்லை. சின்ன வயசுலே அப்பா அம்மா விளையாட்டு விளையாடுவோமில்லை, அதுமாதிரி. இந்த நாற்பது நாளில் நாம லைஃப் முழுக்க சந்தோஷமா வாழமுடியுமான்னு தெரிஞ்சிடும். ஓக்கேன்னா கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லைன்னா ஃபிரண்ட்ஸாவே இருந்துடலாம்”

அனிலின் திட்டம் அனன்யாவுக்கு ஓக்கே. அப்பா அம்மா விளையாட்டு சரி. ஆனா ‘அது’ மட்டும் நோ என்கிற நிபந்தனையோடு ஒப்புக் கொள்கிறாள். இது ஒரு ரகசிய விளையாட்டு. யாருக்கும் தெரியாது. விளையாட்டு ஆரம்பிக்கிறது.
கணவன் – மனைவிக்குரிய தினசரி வாழ்க்கை அழுத்தச் சிக்கல்களை உணர்கிறார்கள். நண்பர்களாக இருந்தபோது ஒருவரையொருவர் மாற்றி மாற்றி இன்ஸ்பயர் செய்ததற்கு, நேரெதிர் நிலைக்கு வருகிறார்கள். அவளுடைய சிறு குறைகள் அவனுக்கு பூதாகரமாக தெரிகிறது. போலவே அவளுக்கும் அவனுடைய குறைகள். ‘அந்த மூன்று நாள்’ அவளுக்கு வரும்போது அவன் அருவருப்பாக உணர்கிறான். ஆனால் தொடர்ந்து ஆரம்பத்திலேயே போட்ட ஜெண்டில்மேன் அக்ரீமெண்டை மீறி ‘அதற்கு’ அவன் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறான் (அட்லீஸ்ட் அவன் வெறும் ஆம்பளைதானே?). ஒரு கட்டத்தில் ‘அது’ நடந்தும் விடுகிறது. எதிர்பாராவிதமாக ஒரு வயது குழந்தை ஒன்றை சில நாட்களுக்கு இவர்கள் பராமரிக்க வேண்டிய நிலை. எதிர்காலத்தில் குழந்தை பிறந்தால் இருவரும் எப்படி நடந்துக் கொள்வார்கள் என்பதை புரிந்துக் கொள்கிறார்கள். சின்னச் சின்ன வாக்குவாதங்கள். கதவை இழுத்து சப்திக்க சாத்திக்கொண்டுச் செல்லுமளவுக்கு சண்டைகள். ஒருக்கட்டத்தில் எல்லா பெண்களும், எல்லா ஆண்களும் ஒரே மாதிரிதான் என்கிற முடிவுக்கு இருவரும் வருகிறார்கள்.

முடிவு என்ன என்பதை ‘அந்தக்க முந்து; ஆ தரவாத்த’ (அதாவது ‘அதற்கு முன்பு; அதற்குப் பின்பு’ என்று அர்த்தம்) படம் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். தெலுங்கு தெரியாது என்றால், தமிழில் ‘வணக்கம் சென்னை’யாகவோ, ‘ராஜா ராணி’யாகவோ வரும்போது பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் எங்கிருந்து எடுத்தார்களோ, இவர்களும் அங்கிருந்தே எடுக்கப் போகிறார்கள்.

படம் முழுக்கவே ஆணுக்கும், பெண்ணுக்குமான பொதுவான உறவுமுறைகளை பேசுகிறது. இருவருக்குமான அடிப்படை உளவியல் வேறுபாடுகளை அலசுகிறது. உடலும் சரி, மனமும் சரி. இருவருமே வேறு வேறான உலகத்தில் வாழ்கிறார்கள். ஆணின் உலகத்தை பெண்களும், பெண்களின் உலகத்தை ஆண்களும் உணரவே முடியாத யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. ஆனாலும் ஆணும், பெண்ணும் சேர்ந்துவாழ வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட் ரோகிணி, மதுபாலா என்று நம்முடைய முன்னாள் கதாநாயகிகள். நாயகனுக்கும், நாயகிக்கும் அம்மாக்களாக வருகிறார்கள். க்ளைமேக்ஸில் வசனங்களே இல்லாமல் கண்களால் ரோகிணி நடிக்கும் நடிப்பு பர்ஸ்ட் க்ளாஸ். இருபது ஆண்டுகளுக்கு முந்தைய ஜெண்டில்மேன் மதுபாலாவாகவே இளமையாக –இன்னும் ஒல்லியாக- இருக்கிறார். கொஞ்சூண்டு சதை போட்டால் ரஜினி-கமலுக்கு ஹீரோயினாகவே இன்னும் நடிக்கலாம்.

நாயகனாக நடித்த சுமந்த் அஸ்வினுக்கு இது இரண்டாவது படம். ஆக்‌ஷன் மசலா படங்கள், தெலுங்கானா சி.எம். கனவு என்பதெல்லாம் இல்லாமல் இருந்தால் கொஞ்ச காலத்துக்கு லவ்வர்பாயாகவே நிலைப்பார். நாயகி ஈஷாவுக்கு முதல் படம். தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடிப்பதற்குரிய ஆதாரமான விஷயங்கள் ஈஷாவிடம் தென்படுகின்றன. இயக்குனர் மோகனகிருஷ்ண இந்திராகாந்தி தன்னுடைய முதல் படமான கிரகணம் மூலமாக தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்று குவித்தவர். அடுத்து சுமாராக சில படங்களை எடுத்து, இப்போது குறிப்பிடத்தக்க வணிக வெற்றியை பெற்றிருக்கிறார். உண்மையில் இப்படத்தின் ஹீரோக்கள் என்றால் கேமிராமேனும், ஆர்ட்டைரக்டரும்தான். ஒரு லோ பட்ஜெட் படத்தில், ஒவ்வொரு ஃப்ரேமையும் இவ்வளவு ரிச்சாக அவர்கள் உருவாக்கி இருப்பதால்தான் ஆந்திர மல்ட்டிப்ளெக்ஸ்கள் ‘அந்தக்க முந்து; ஆ தரவாத்த’வை கொண்டாடித் தீர்க்கின்றன.

அடுத்த வீட்டு அந்தரங்கத்தை திருட்டுத்தனமாக எட்டிப் பார்க்கும் சுவாரஸ்ய அனுபவத்தை பார்வையாளனுக்கு இப்படம் வழங்குகிறது.