14 அக்டோபர், 2008

உண்மையாரின் புனிதப்போர்!

கன்னிராசி படத்தில் ஒரு காட்சி.

ஜனகராஜ் ஒரு பாடகர். தூர்தர்ஷனில் மிக அருமையாக ஒரு நிகழ்ச்சியில் பாடியிருப்பார்.

மறுநாள் தெருவில் நடந்து செல்லும்போது ஒருவன் உடைந்துப் போன அவனது டிவியை சைக்கிளில் வைத்து எடுத்து வருவான். அவனிடம் ஜனகராஜ் கேட்பார்.

“என்னய்யா ஆச்சி? டிவி உடைஞ்சிப் போயிருக்கு!”

“நேத்து எவனோ ஒருத்தன் டிவியிலே பாடியிருக்கான். அதைப் பார்த்து டென்ஷன் ஆயி என் பொண்டாட்டி டிவியை போட்டு உடைச்சிட்டா. பாட்டு பாடுனவன் மட்டும் நேர்லே கிடைச்சான்னா...” என்று சைக்கிள்காரர் பல்லை நறநறத்துக் கொண்டே போவார்.

* - * - * - * - * - * - * - * - * -



இதுவரை எப்படியெல்லாமோ டவுசர் கிழிந்து தாவூ தீர்ந்திருக்கிறது.. ஆனால் இந்த லெவலுக்கு ஆனதில்லை :-(

உலகத் திரைப்படங்கள் குறித்து ஐம்பது, அறுபது பக்கங்களுக்கு மிகாமல் விமர்சனம் எழுதுபவர், பல திரையுலக ஆட்களோடு நட்பு கொண்டவர், நீண்ட ஆண்டுகளாக கலைத்துறையோடு தொடர்புடையவர்.. இப்படிப்பட்டவர் எடுத்திருக்கும் படம் என்பதால் அமர்க்களமாக இருக்கும் என்று நினைத்தேன், நினைப்பில் மண்ணை வாரி போட்டுவிட்டார் உண்மையார்.

ரொம்ப சிக்கனமாக எடுத்திருந்ததால் கொஞ்சம் சுமாராக வந்திருக்கும் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கான்செப்டே இல்லாமல் பண்ணிரண்டு நிமிடமும் வெறும் வாய்கள் மட்டும் பேசிக்கொண்டேயிருக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல? க்ளைமேக்ஸை நச்சென்று முடிக்க உண்மையார் நினைத்திருக்கலாம், ஆனால் பார்ப்பவர்களுக்கு 'நச்சு'வாக தான் முடிகிறது.

ஒளிப்பதிவை சுமார் என்று கூட சொல்லமுடியாத வகையில் மொக்கையாக வந்திருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்பு என் சித்திக்கு கல்யாணம் நடந்தபோதே இதைவிட சூப்பரான ஒளிப்பதிவை அந்த காலத்து வீடியோ கேமிராமேன் எடுத்திருந்தார். வாய்களை மட்டுமே காட்டுவது ஒரு நவீன யுக்தி என்று உண்மையாருக்கு யாரோ தவறாக சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. சில வாய்களை குளோசப்பில் பார்க்க ரொம்ப கண்ணறாவியாக இருக்கிறது.

கொக்கோ கோலா, பெப்ஸி, இளநீர் என்று ஒவ்வொரு குளிர்பானத்தையும் ஒரு குளோசப் அடித்து காட்டும்போது பெரியதாக ஏதோ இதைவைத்து கும்மியடிக்கப் போகிறார் என்று நினைத்தால் க்ளைமேக்ஸில் ஆஸிட்டை காட்டுவதற்கான முன்னோட்ட காட்சிகளாம். என்ன கொடுமை சார் இது?

மொக்கை கான்செப்ட், மோசமான ஒளிப்பதிவு, உணர்ச்சியே இல்லாத ஒலிப்பதிவு, நாடகத்தனமான நடிகர்கள் என்று எல்லாவற்றையும் கூட மன்னித்துவிடலாம், முழம் முழமாக உண்மையார் எழுதிய வசனங்களை மட்டும் மன்னிக்கவே முடியாது. பண்ணிரண்டு நிமிடமும் கொடூரமாக நாலு பேர் பேசிக்கொண்டேயிருப்பதை குறும்படம் என்று சொன்னால் குறும்படங்களை எல்லாம் என்னவென்று சொல்வது? :-(

க்ளைமேக்ஸில் பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தவரைப் பார்த்து இயக்குனர் உண்மையாரின் குரல் சொல்கிறது, “மவனே, உனக்கு ஆசிட்டு தாண்டா!”. நியாயமாக பார்க்கப் போனால் இந்த குறும்படத்தை எடுத்த இயக்குனர் மீது தான் பார்வையாளர்கள் ஆசிட் வீச்சு நடத்த வேண்டும்.

குறும்படத்தின் தலைப்பை ‘புனிதப்போர்' என்று வைத்து பெண்களுக்கு எதிரான மனோபாவம் கொண்ட கதாபாத்திரங்களை சித்தரித்திருப்பதின் மூலம் உண்மையாரின் முகமூடி கிழிந்து, உண்மையான அவரது இந்துத்துவா கோரமுகம் பல்லிளிக்கிறது. எது எதற்கோ நுண்ணரசியலை கண்டறிந்து கண்டிப்பவர்கள் இன்னமும் உண்மையாரின் சிறுபான்மையினருக்கு எதிரான நுண்ணரசியலை கண்டிக்காதது வெட்கக்கேடு மட்டுமல்ல, வேதனையானதும் கூட.

* - * - * - * - * - * - * - * - * -

நல்லவேளை, உண்மையாரின் புனிதப்போரை இன்றுதான் அவரது வலையில் பார்த்தேன். டிவியில் பார்த்திருந்தால் கன்னிராசி கதை தான் ஆகியிருக்கும், என் வீட்டு டிவி தப்பித்தது :-)

23 செப்டம்பர், 2008

பரபரப்பான பத்து நிமிடங்கள்!



ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே அந்த காட்சியை நம்மால் பார்த்திருக்க முடியும். பத்தே நிமிடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை சென்னையில் பரபரப்பான பகல்வேளையில் கடப்பது சாத்தியமா? ஆம்புலன்சுக்கு கூட வழிவிட மனமில்லாத சென்னை வாகன ஓட்டிகளின் சவாலை ஒரு காவல்துறையின் ஊர்தி கடந்து சாதித்திருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் சாலைகளில் கடந்ததை பார்த்தவர்கள் மின்னலை கண்டதாக சொல்கிறார்கள். சபாஷ் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை. ஷூமேக்கர் வேகத்தில் ஒரு போலிஸ்காரர் காரை ஓட்டிச்செல்ல காரணம் என்னவாக இருக்கும்?

ஒரு உயிரைக் காக்க...

ஹிதேந்திரன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன். அப்பா அசோகனும், அம்மா புஷ்பாஞ்சலியும் மருத்துவர்கள். மகாபலிபுரத்துக்கு அருகில் இருக்கும் திருக்கழுக்குன்றத்தில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை அப்பாவின் பைக்கை எடுத்துக்கொண்டு நண்பனை சந்தித்து திரும்பியவனுக்கு எமன் ஒரு மீன்பாடி வண்டி ரூபத்தில் வந்தது. எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தில் தலையில் ஹிதேந்திரனுக்கு அடிபட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டவன் நினைவிழந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவுக்கு கொண்டு செல்லப்பட்டான்.

பரிசோதித்த மருத்துவர்கள் கை விரித்தார்கள். ஹிதேந்திரனின் மூளை செயல் இழந்து விட்டது (பிரைன் டெத்). கிட்டத்தட்ட மரணம். இதயம் மட்டுமே துடிக்கும். பெற்றோரும் மருத்துவர்கள் ஆயிற்றே? பிரச்சினையை புரிந்துகொண்டார்கள். தன் மகனின் உடல் உறுப்புகளை தானமாக தர விரும்பினார்கள். கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டன. புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா நகரில் இருக்கும் செரியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனுக்கு இதயம் அவசரமாக தேவைப்பட்டது. ஹிதேந்திரனின் இதயம் அகற்றப்பட்டு 20 நிமிடங்களில் அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் 20 கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் அடைவது சாத்தியமா?

மருத்துவமனையின் நிர்வாகம் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையை அணுகினார்கள். பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்ட கூடுதல் ஆணையாளர் சுனில் உடனடியாக ஒரு உதவி ஆணையாளரை அனுப்பி வைத்து உதவுமாறு உத்தரவிட்டார். உதவி கமிஷனர் மனோகரன் இந்த ஆபரேஷனுக்கு திட்டமிட்டார். தன் சக அதிகாரிகளோடு தொடர்புகொண்டவர் குறிப்பிட்ட அந்த நேரத்துக்கு போக்குவரத்து சிக்கல் இல்லாதவாறு திட்டம் தீட்டினார். சிக்னல்கள் முழுக்க போலிசாரின் கட்டுப்பாட்டுக்கு சில நிமிடங்களில் வந்தது. ஒரு ஆம்புலன்ஸில் இதயத்தை எடுத்துச் செல்லவும், அந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிட ஆக்சண்ட் காரில் ஏ.சி. மனோகரனே முன்செல்லவும் திட்டம் தீட்டப்பட்டது.

ஹிதேந்திரனின் இதயத்தை ஒரு பெட்டியில் வைத்து படபடப்போடு மருத்துவர்கள் ஓடிவந்தார்கள். படபடப்பில் இருந்ததால் ஆம்புலன்ஸில் ஏறுவதற்கு பதிலாக ஏ.சி.யின் காரில் ஏறிவிட்டார்கள். ஒரு நொடியை கூட வீணடிக்க விரும்பாத ஏ.சி. தனது டிரைவரான கான்ஸ்டபிள் மோகனை புயல்வேகத்தில் ஓட்ட சொன்னார். ஏ.சி.யின் கார் இலகுவாக செல்ல வழியெங்கும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டிருந்தது. போனில் போலிஸ்காரர்களிடம் பேசியபடியே வழியில் இருந்த தடங்கல்களையெல்லாம் அகற்றினார் ஏ.சி.

மேட்லி ரோடு, தி.நகர் புதிய மேம்பாலம், லயோலா, சூளைமேடு, அமைந்தகரை, அண்ணா வளைவு வழியாக சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் மோகன் காரை விரட்டினார். திருப்பங்களில் கூட பிரேக்கில் மோகன் காலை வைக்கவில்லை. ஆக்ஸிலேட்டரில் வைத்த காலை எடுக்கவேயில்லை. பொதுவாக போக்குவரத்தில் இந்த தூரத்தை கடக்க சுமார் 50 நிமிடங்களில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை பிடிக்கும். மருத்துவர்கள் கொடுத்திருந்த டார்கெட் 20 நிமிடம். பத்தே நிமிடங்களில் செரியன் மருத்துவமனையை ஏ.சி.யின் கார் அடைந்திருந்தது. ஆறு மணி நேரம் நடந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை சக்சஸ்!

இனி ஹிதேந்திரனின் இதயம் வாழும்!!

மருத்துவத்துறை காவல்துறையோடு இணைந்து இந்த சாதனையை செய்திருக்கிறது. சென்னையில் மருத்துவத்துறை சாதனைகள் புரிவது ஒன்றும் அதிசயமல்ல என்றாலும், காவல்துறையின் இந்த அதிரடி சாதனை சென்னை மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. வாய்ப்புகள் கிடைத்தால் எங்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டிய சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு சல்யூட்.

5 செப்டம்பர், 2008

விகடன் தாத்தாவின் பரிசு



பரிசு பெறுவது என்றாலே மகிழ்ச்சி தானே? சிறுவயதில் எவ்வளவோ நாட்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வருவார், ஒரு பேனாவாவது தருவார் என்றெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். கிறிஸ்துமஸ் தாத்தா ஏமாற்றியிருந்தாலும் இப்பொது விகடன் தாத்தா பரிசு தந்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறார். என் தாத்தா கூட எனக்கு பரிசு எதுவும் தந்ததில்லை. பரிசு என்பதை விட பலரும் உயர்வாக மதிக்கும் பத்திரிகையின் அங்கீகாரம் என்பது தான் எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது. இப்போது நான் கையில் கட்டிக்கொண்டிருக்கும் பாஸ்ட் ட்ராக் வாட்ச் விகடன் தாத்தா பரிசாக தந்தது. நேரம் பார்க்கும்போதெல்லாம் வாட்சுக்குள் இருந்து ‘நேரத்தை ஒழுங்காக பயன்படுத்து' என்று விகடன் தாத்தா அட்வைஸ் செய்வது போலவே இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஆனந்த விகடனில் கவிதை (?) போன்ற தோற்றமளிக்கும் எனது எழுத்து கால் பக்கத்துக்கும் குறைவான இடத்தில் வந்திருந்தது. புத்தகத்தை எடுத்துக் கொண்டு அக்கம்பக்கத்தில் இருந்த ஒவ்வொரு வீடாகப் போய் “விகடனில் என் எழுத்து வந்திருக்கிறது” என்று ஜம்பம் அடித்துக் கொண்டேன். வாசித்த சில பேர் பாராட்டுவதற்கு பதிலாக (என் குடும்ப உறுப்பினர்கள் உட்பட) நல்லவேளையாக காறி உமிழாமல் விட்டதே பெரிய விஷயமாக போய் விட்டது. ம்ம்ம்.. ஞானச்சூனியங்களுக்கு எங்கிருந்து பின்நவீனத்துவ இலக்கியங்கள் புரியப் போகிறது? அதன் பின்னர் அப்படி ஒரு கவிதை எழுதியதையே மறந்துவிட்டிருந்தேன்.

இன்று மதியம் சாப்பிட்டு முடித்தபிறகு கண்ணை திறந்துகொண்டே தூங்கிக்கொண்டிருந்த போது ஒரு போன். ”விகடனில் இருந்து ஜி.எம். சீனிவாசன் பேசுறேன். நீங்க ரெண்டு வாரத்துக்கு முன்னாடி யூத் செக்‌ஷனில் எழுதியிருந்த கவிதைக்கு ஒரு வாட்ச் ப்ரைஸ் கிடைச்சிருக்கு. ஆபிஸ் வந்து கலெக்ட் பண்ணிக்குங்க”. தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையோடு மரியாதையாகவே “சரிங்க சார்.. ஓக்கே சார்.. ரொம்ப தேங்க்ஸ் சார்..” என்று சொல்லி போனை வைத்தேன். எல்லாரும் திட்டுன ஒரு கந்தாயத்துக்கு விகடனாவது, பரிசு கொடுப்பதாவது என்று நினைத்தேன். அதுவும் விகடனின் ஜி.எம். (மார்க்கெட்டிங்) போன் செய்து ஒரு சாதாரண வாசகரோடு பேசுவாரா?

இருந்தாலும் ஒரு நப்பாசை. விகடனோடு தொடர்புடைய வேறொரு நண்பருக்கு தொலைபேசி, ”விகடனில் சீனிவாசன் என்ற பெயரில் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டேன். “இருக்கிறார். அவர் தான் ஓனர்” என்றார் நண்பர். “ஹலோ சீரியஸா கேட்குறேன்” என்று சொல்லி மேட்டரை சொன்னபின்பு, விகடனில் ஜி.எம்.மாக இன்னொரு சீனிவாசன் இருப்பது உறுதியானது. என் அலுவலகத்திலிருந்து பத்து நிமிட இருச்சக்கர வாகன பயண தூரம் தான், ஆனால் வழக்கமாக டிராபிக்கில் முப்பது நிமிடமாகும். ஆர்வம் தாங்காமல் நேராக விகடன் அலுவலகத்துக்கே சென்று விட்டேன்.

பரிசு கிடைத்திருப்பது உண்மைதான் என்று விகடன் ஊழியர் சொன்னபோது நம்பவே முடியவில்லை. முகத்தில் அந்த பிரமிப்பை காட்டாமல் 'எவ்வளவோ பாத்துட்டோம், இதெல்லாம் ரொம்ப சாதாரணம்' என்பது போல நடிப்பது கொஞ்சம் கடினம் தான். விருந்தினரை உபசரிப்பது போல வாசகர்களையும் உபசரிப்பதில் விகடனின் பாரம்பரியம் இன்னமும் கில்லி மாதிரி நின்று ஆடுகிறது. பரிசுக்கு பொறுப்பான அந்த ஊழியர் விகடனின் புதிய வடிவம் பற்றி கருத்து கேட்டார். விலை பதினைந்து ரூபாய்க்கு எகிறிவிட்டதால் சர்க்குலேஷன் குறைந்திருக்கிறதா என்று கேட்டதுக்கு, ”இல்லை, கூடியிருக்கிறது” என்று சொல்லி அதிர்ச்சி அளித்தார்.

பரிசுகள் வழங்குவதில் எப்போதுமே விகடன் குழுமத்துக்கு இணையாக யாருமே இல்லை. பவளவிழா கொண்டாட்டத்தின் போது ஒரு கோடி ரூபாய்க்கு பரிசு வழங்கியிருந்தார்கள். இதெல்லாம் பத்திரிகைத் துறையில் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத சாதனை. இப்போது விலை கூடியிருந்தாலும் லேப்டாப், செல்போன் என்றெல்லாம் அதிரடியாக பரிசுகள் வழங்குவதால் வாசகர்கள் அதிகரித்திருக்கிறார்களாம். சென்னையில் இருக்கும் வாசகர்களுக்கு அவர்களது அலுவலகத்துக்கே வரவழைத்து பரிசு கொடுத்து வருகிறார்கள்.

ஜி.எம். அறையில் விகடனின் உயரதிகாரி ஒருவர் எனக்கு பரிசினை கையளித்தார். ஜி.எம்.மும் விகடனின் புதிய வடிவம் குறித்து கேட்டார். அதுவுமில்லாமல் “புதிய விகடன் குறித்த கருத்துக்களை நேரடியாக விகடன் ஆசிரியரிடமே சொல்லிவிடுங்கள்” என்று போனில் லைனை போட்டு வேறு கொடுத்துவிட்டார். பத்திரிகையாளர்களிடம் பேசுவது என்றாலே எனக்கு கொஞ்சம் உதறல் தான். “விகடன் குறித்த எண்ணங்களை தயவுசெய்து எழுதியோ, நேரம் கிடைத்தால் அலுவலகத்துக்கு வந்து நேரிலோ சொல்லுங்கள். வாசகர்களது விருப்பு, வெறுப்புகளை என்றுமே விகடன் புறந்தள்ளியது இல்லை” என்று விகடனின் ஆசிரியர் அசோகன் சொன்னார். இருவருக்கும் நன்றி சொல்லி வெளியே வந்தேன்.

எனக்குப் பிடித்த கருப்பு நிறத்தில், அசத்தல் ஸ்டைலான டைட்டனின் பாஸ்ட் ட்ராக் வாட்ச் தான் பரிசு. சிலந்தி வலை படமெல்லாம் போட்டிருக்கிறது. ஸ்பைடர் மேன் ட்ரெஸ் போட்டுக்கொண்டு இந்த வாட்ச்சை கட்டிக்கொண்டால் செம மேட்ச்சாக இருக்கும். ஒரே ஒரு குறை. இதில் ஆனந்த விகடன் லோகோ இல்லை. யாரிடமாவது ஆனந்த விகடனின் பரிசு என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். விகடன் தாத்தா படம் பொறித்திருந்தால் கொஞ்சம் கெத்தாக இருந்திருக்கும்.

25 ஆகஸ்ட், 2008

பாலாவின் நாட்டு நடப்பு!

சிறுவயதில் கையில் கிடைக்கும் சாக்பீஸையோ, கரித்துண்டையோ வைத்து வீடெல்லாம் கிறுக்கிக் கொண்டிருந்தால் உங்களுக்கெல்லாம் உதை கிடைத்திருக்கும் தானே? குட்டிப்பையன் பாலாவையோ அவரது தாத்தா மேலும் கிறுக்க ஊக்குவித்திருக்கிறார். விளைவு? நாடறிந்த பத்திரிகையான குமுதத்தின் பிரதான கார்ட்டூன் ஓவியராக இன்று வளர்ந்திருக்கும் கார்ட்டூன் பாலா.

தினமணி, விகடன் இதழ்கள் தங்கள் பத்திரிகைகளில் வெளிவந்த கார்ட்டூன்களை புத்தகமாக போடுவது வழக்கம். முதன்முறையாக குமுதத்தில் அப்படிப்பட்ட ஒரு முயற்சி நடந்திருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளாக தன் தூரிகையால் அரசியல்வாதிகளின் தூக்கத்தை கெடுத்த பாலாவின் கார்ட்டூன்கள் “நாட்டு நடப்பு” என்ற பெயரில் கவர்ச்சிகரமான வடிவத்தோடு, தரமான பேப்பரில் 160 பக்க புத்தகமாக வெளியிட்டிருக்கிறது குமுதம். விலை ரூ.100/-

புத்தகத்தின் பின் அட்டையில் 2006 தேர்தல் நேரத்தில் பாலா கிறுக்கிய “பாசக்கிளிகள்” கார்ட்டூனுக்கு கலைஞர் முரசொலியில் அடைந்த எரிச்சலையே பாலாவுக்கான அறிமுகமாக தந்திருப்பது நல்ல பாராட்டுப் பத்திரம். வைகோ திமுக கூட்டணியை விட்டு வெளியே போகப்போகிறார் என்ற யூகங்கள் வருவதற்கு முன்பாகவே தீர்க்கதரிசனமாக அதை கார்ட்டூனாக வரைந்தவர் பாலா என்பது குறிப்பிடத்தக்கது. நடந்த நிகழ்வுகளை மட்டுமே கிண்டலடித்து கார்ட்டூன் போடுவதை விட, அரசியலை கூர்ந்து கவனித்து என்ன நடக்கப் போகிறது என்பதையும் கார்ட்டூனாக போடும் கலை பாலாவுக்கு நன்கு கைவந்திருக்கிறது.


பாலாவின் கோபம் முழுக்க முழுக்க கலைஞர் மீதும், அம்மா மீதும் தான் போலிருக்கிறது. கருப்பு எம்.ஜி.ஆர் குறித்த கார்ட்டூன்கள் குறைவு. ஒருவேளை எதிர்காலத்தில் நிறைய போடுவாரோ என்று தெரியவில்லை. 'கூட்டணி மாறுதல்' குறித்த நையாண்டிகள் ரொம்பவும் அதிகம், பாவம் இதனால் பாலாவிடம் அதிகமாக மாட்டிக்கொண்டு அவதிப்படுபவர் டாக்டர் அய்யா தான். பத்திரிகைகளில் இடம்பெறும் கவர்ஸ்டோரிகளுக்கு, பாலோ-அப் கொடுப்பது வாடிக்கையான ஒன்று. “பாசக்கிளிகள்” கார்ட்டூனுக்கு “வேஷக்கிளி” கார்ட்டூன் மூலமாக பாலோ-அப் கொடுத்தது அருமையான கிரியேட்டிவிட்டி. சமூகம், நாடு, உலகம் மீதான தனது கோபத்தினை கார்ட்டூன் மூலமாக நையாண்டியாக வெளிப்படுத்துவது பாலாவின் ஸ்பெஷாலிட்டி.

முன்னுரையில் தனது தாத்தாவுக்கும், அம்மாவுக்கும் புத்தகத்தை சமர்ப்பிப்பதாக பாலா குறிப்பிட்டிருக்கிறார். பின்னட்டையில் குழந்தை போல இருக்கும் அவரது போட்டோவை போட்டதை தவிர்த்திருக்கலாம். நிறைய பேர் ஆட்டோ அனுப்பி அடையாளம் காண அந்த போட்டோ வசதியாக இருக்கும். வேறு ஒரு துறையில் பணிபுரிந்துகொண்டு ஆர்வத்துக்காக ஓவியம் வரைந்துகொண்டிருந்த பாலாவை கார்ட்டூன் வரையத்தூண்டி, அவருக்குள் இருந்த திறமையை ஊக்குவித்து இன்றைய நிலையில் நிறுத்தியிருக்கும் பாலபாரதிக்கும் முன்னுரையில் செய்நன்றி காட்டியிருக்கிறார் பாலா.

பாலாவின் கார்ட்டூன் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம். கேட்பதை விட புத்தகத்தை புரட்டிப் பார்ப்பதே உங்களுக்கு அதிக சுவாரஸ்யத்தை தரும். சுவாரஸ்யமான பார்வைக்கு இந்த புத்தகம் நிச்சயமான உத்தரவாதத்தை தருகிறது. ஒவ்வொரு வீட்டு நூலகத்திலும் இடம்பெற வேண்டிய அவசியமான புத்தகம். குமுதம் வெளியிட்டிருக்கும் பாலாவின் “நாட்டு நடப்பை” வாங்க விரும்புபவர்கள் 9940619748 (குருராஜன்) என்ற தொலைபேசி எண்ணுக்கு பேசி உங்கள் வீட்டுக்கே புத்தகத்தை வரவழைக்கலாம். அல்லது பிரபல புத்தகக் கடைகளிலும் “நாட்டு நடப்பை” வாங்கலாம்.

வீடியோ பைரசி போல புக் பைரசியும் தார்மீகக் குற்றம். எனவே நீங்கள் காசு கொடுத்து வாங்கும் புத்தகத்தை யாருக்கும் இரவல் கொடுக்காதீர்கள். புத்தக விற்பனை மூலமாக எழுத்தாளர்களுக்கும், ஓவியர்களுக்கும் கிடைக்கும் ராயல்டி தொகை மிகவும் குறைவு. புத்தகங்களை இரவல் கொடுப்பதின் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் கொஞ்சம் நஞ்சம் ராயல்டி தொகைக்கும் வேட்டு வைத்துவிடாதீர்கள்.

1 ஏப்ரல், 2008

கண்ணும் கண்ணும்


மக்களின் ஆதரவைப் பெறாமல் தோல்வியடையும் படங்களில் பத்துக்கு ஒன்பது குப்பையாக இருக்கும், சில பல அரிய நேரங்களில் ஏதாவது ஒரு மாணிக்கமும் இந்த குப்பைகளோடு சேர்ந்துவிடுவது ஒன்று. அப்படிப்பட்ட ஒரு படம் கண்ணும் கண்ணும். இது வெளியான நேரத்தில் படம் குறித்த பெரிய எதிர்ப்பார்ப்பில்லை என்பதால் இப்படத்தை தவறவிட்டேன். ஊடகங்களில் நல்லமுறையில் விமர்சனம் வந்தபோது படம் பார்க்க ஆசைப்பட்டேன். விமர்சனம் வெளிவருவதற்குள்ளாகவே பல திரையரங்குகளில் படம் தூக்கப்பட்டு விட்டதால் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த சனிக்கிழமை ஃபிலிம் சேம்பரில் திரையிடப்பட்டதால் பார்க்க முடிந்தது.

குற்றால அருவிகளுக்கும், தென்பொதிகைச் சாரலுக்கும் நன்றிகூறி, வில்லன் விதியாக அறிமுகம் என்று டைட்டில் கார்டு போடும்போதே இயக்குனர் மாரிமுத்துவுக்கு கவிதைகள் குறித்த பரிச்சயம் உண்டு என்பது தெரிகிறது.

ஓபனிங் சாங், அதிரவைக்கும் டிடிஎஸ் இசை இல்லாமல் கதாநாயகனின் அறிமுகம் பார்த்து ரொம்ப காலமாகிறது. கதாநாயகிக்கு மட்டும் ஓபனிங் சாங். பாடல் வரிகள் இசையால் அழுத்தப்படாமல் அட்சர சுத்தமாக காதில் விழுகிறது. ‘Cleavage' காட்டுவதெல்லாம் நார்மலாகிவிட்ட தமிழ்ச்சூழலில் நான்கு இளம்பெண்கள் இருந்தும் ஒரு நொடி கூட எந்தப் பெண்ணின் இடுப்பையோ, மார்புப்பிளவையோ காட்டாமல் படமெடுத்திருப்பது இயக்குநருக்கு சவலாக இருந்திருக்கக் கூடும். விரசம் தான் வில்லன் என்று நினைத்திருப்பாரோ என்னவோ?

விரசத்தை விரட்டிய இயக்குனர் வணிகத் தேவைக்காக படத்தோடு பொருந்தாத வடிவேலுவின் காமெடிக் காட்சிகளை இணைத்திருக்கிறார். வாய்விட்டு சிரிக்கும் காமெடி தான் என்றாலும் படத்தின் கதையோடு ஒன்றி பார்க்கும் பார்வையாளர்களுக்கு இடையூறு.

படம் முழுக்க குற்றால அருவி ஒரு பாத்திரமாகவே வந்துப் போகிறது. அஃறிணைகளை கதையோடு ஒன்றவைப்பது இயக்குனர் சரண் பாணி. மாரிமுத்து அதே பாணியை வேறு கோணத்தில் அணுகியிருக்கிறார். பாலசுப்பிரமணியெம் பார்வையில் நாம் காணும் குற்றாலம் நேராகப் பார்ப்பதை விட கொள்ளை அழகாக இருக்கிறது.

அனைவரும் குடும்பத்தோடு காணக்கூடிய திரைப்படம். படத்தில் நம்மை கவரக்கூடிய எல்லா அம்சங்களையும் தாண்டி இயக்குனர் மாரிமுத்துவே ஒவ்வொரு ப்ரேமையும் வியாபித்திருக்கிறார். லாபம் எதுவும் சம்பாதிக்கா விட்டாலும் நல்ல இயக்குனரை தமிழுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு ஹேட்ஸ் ஆப்!! இந்த இயக்குனரிடம் ஒரு ஐந்து கோடியை கொடுத்து படமெடுக்கச் சொன்னால் எல்லாத் தரப்பு மக்களையும் கவருவது போல படத்தை கண்டிப்பாக எடுத்துத் தருவார் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.

வெகுவிரைவில் ‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' போடாமலா இருந்துவிடப் போகிறார்கள்?

இப்படம் வணிகரீதியான வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு சில காரணங்கள் இருக்கலாம் :

- சண்டை இல்லை, குத்துப்பாட்டு இல்லை என்பது போன்ற நிறைய ‘இல்லை' படத்தில் உண்டு. நல்ல படமென்றாலும் கூட தற்போதைய ட்ரெண்டுக்கு சம்பந்தமில்லாத களமாகவும், படைப்பாகவும் இருப்பதால் படம் பார்ப்பவர்களுக்கு பழைய படத்தை பார்க்கும் அனுபவம் ஏற்படுகிறது. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை இருபடங்களுக்கு இடையே வந்திருந்தால் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.

- பின்னணி இசை மகா மோசம். பாடல் காட்சிகளுக்கு இதே இசையமைபாளர் தான் இசையமைத்தாரா என்ற சந்தேகம் வருகிறது. பல காட்சிகளில் பின்னணி இசை வசனத்தை விழுங்குகிறது. வசனங்கள் இல்லாத காட்சிகளில் நம் காதுகளுக்கு தொந்தரவும் தருகிறது.

- படம் தயாராகி மிக தாமதமாக வெளியானால் வெற்றிபெறும் வாய்ப்பு நூற்றில் ஒன்று தான் என்பது தமிழ் சினிமாவின் விதி. நவம்பர் 2006லேயே பலகாட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது தெரிகிறது, படம் வெளியானதோ 2008.

- படம் மார்ச் 21 அன்று வெளியாகியிருக்கிறது. வருடம் முழுவதும் புத்தகத்தை புரட்டிப் பார்க்காத தறுதலை மாணவன் கூட விழுந்து விழுந்து படிக்கும் பரிட்சை நேரமது. பரிட்சை நேரங்களில் வெளியிடப்படும் படங்கள் வெற்றிவாய்ப்பை இழப்பது சகஜமே. பத்தாதற்கு தமிழக வரலாறு காணாத கோடைமழையும் அந்த வாரம் கொட்டித் தீர்த்தது. தியேட்டர் ஈயடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

- இழவு வீட்டுக் காட்சிகள் மெகாநீளம். சீரியலில் இந்தக் காட்சிகளை ரசிக்கும் தாய்க்குலங்கள் கூட சினிமாவில் இழவுக்காட்சிகளை நிராகரிக்கிறார்கள். கதாநாயகியின் அண்ணனும், அப்பாவும் தனித்தனியாக இறந்துப் போனாலும் இரண்டு மரணங்கள் குறித்த கதாபாத்திரங்களின் ரியாக்‌ஷன் தனித்தனியாக நேரத்தை விழுங்கும் வகையில் நீளமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

- கதாநாயகி அழும்போது அசிங்கமாக இருக்கிறார். சிரிக்கும்போது கூட ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி அழகாக இல்லை.