11 ஜனவரி, 2010

பதிவர்களுக்காக மாதப்பத்திரிகை!

சர்புதீன் என்ற தோழர் தமிழிணையத்தில் பதியப்படும் கதை, கட்டுரை, கவிதை இத்யாதிகளை வைத்தே ஒரு தனி மாத இதழ் நடத்த முன்வந்திருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வரும் ‘வெள்ளிநிலா' என்ற மாத இதழை இதற்காக பயன்படுத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பான தோழர் சர்புதீனின் இடுகையை காணவும்!

9 ஜனவரி, 2010

ஜேம்ஸ் கேமரூன் : அரசன் அல்ல கடவுள்!


பண்ணிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான டைட்டானிக் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதன் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஒருமுறை சொன்னார். “நான் இந்த உலகுக்கு அரசன்”. ,‘அவதார்’ திரைப்படத்தின் முதல் காட்சியை இங்கே கண்டுகளித்த இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா சொல்கிறார். “கேமரூன் அரசன் அல்ல. கடவுள்!”.

வர்மா சொல்வதை வெறும் புகழ்மாலையாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் டிசம்பர் 18 அன்று, ‘அவதார்’ வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டும் 6.75 கோடி ரூபாய், உலகளவில் 127 கோடி ரூபாய் என்று வசூலை அள்ளிக் கொட்டியிருக்கிறது. அமெரிக்காவில் மட்டுமே ஒரு மாதத்தில் ரூ.2860 கோடி ரூபாயை வசூல் எட்டிவிடும் என்கிறார்கள். படத்தின் செலவு ரூ.1200 கோடி மட்டுமே என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சினிமா ஆயிரம், ஆயிரம் கோடிகளாக அள்ளிக் கொட்டுவது சாத்தியமா என்றால், இன்றைய நிலையில் ஜேம்ஸ் கேமரூனுக்கு எளிமையான சாத்தியமே.

உலகமே அவதாரை தூக்கி தலையில் வைத்துக் கொண்டாட, ஜேம்ஸ் கேமரூன் மட்டும் கொஞ்சூண்டு வருத்தத்தில் இருக்கிறார். அவரது முந்தையப் படமான டைட்டானிக் முதல் நாளிலேயே 134 கோடி வசூலித்ததாம். இந்தப் படத்துக்கு 7 கோடி ரூபாய் குறைந்துவிட்டதாம். அடிச்சி ஆடுங்க கேமரூன். உங்க கடலிலே இப்போ சுனாமி!

டைட்டானிக்குக்கும், அவதாருக்கும் ஏன் பண்ணிரெண்டு ஆண்டு இடைவெளி? உண்மையில் பார்க்கப் போனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அவதார் படத்தின் 114 பக்க ஸ்க்ரிப்டை கேமரூன் தயார் செய்துவிட்டார். ஆனாலும் அன்று இருந்த தொழில்நுட்பத்தில் இப்படம் சாத்தியமாகாது என்று நினைத்தார்.
முழுமையாக ஒரு படைப்பை தருவதற்கு தேவையான தொழில்நுட்பம் வரும் வரை ஒரு கலைஞன் காத்திருப்பது எத்தகைய அர்ப்பணிப்பு? டைட்டானிக் வெளியானதற்குப் பிறகு படம் இயக்க கேமரூனை அழைத்து கோடி, கோடியாக சம்பளம் தர எவ்வளவோ தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்க, அவரோ அடம்பிடித்து அவதாருக்காக காத்திருந்தார்.

அப்படி என்ன ஸ்பெஷல் அவதாரில்?

இதுவரை அயல்கிரக வாசிகளை பற்றிய படம் என்றால் ஹாலிவுட்டில் ஒரு வெற்றி பார்முலா வைத்திருந்தார்கள். அயல்கிரக வாசிகள் பூமிக்கு படையெடுப்பார்கள். மனித குலத்தை அழித்து பூமியை தமதாக்கிக் கொள்ள போர் தொடுப்பார்கள். அமெரிக்காவின் அதிபர் நேரடியாக களமிறங்கி அவர்களை துரத்தியடித்து மனிதகுலத்தை காப்பார். ஏற்கனவே அயல்கிரக வாசிகளை வில்லன்களாக்கி, மனிதநேயத்தை கச்சாப்பொருளாக்கி வந்த நூற்றுக்கணக்கில் படங்கள் நல்ல காசு பார்த்துள்ளன.

இங்கேதான் மாறுபடுகிறது அவதார். இப்படத்தில் மனிதர்கள் வில்லன்கள். நவிக்கள் எனப்படும் அயல்கிரகவாசிகள் தங்கள் கிரகத்தை பாதுகாக்க மனிதர்களோடு போராடுகிறார்கள். நல்ல மனம் படைத்த சில மனிதர்களின் துணையோடு வெற்றியும் காண்கிறார்கள். ஹாலிவுட்டின் அயல்கிரக மோகத்தின் அடிப்படையையே மாற்றி யோசித்ததுதான் அவதாரின் வெற்றி.

படத்தின் கதை என்ன?

பூமியிலிருந்து 4.4 ஒளியாண்டுகள் தூரத்தில் (ஒரு ஒளியாண்டு என்பது ஒளியின் வேகத்தில் ஒரு ஆண்டு முழுக்க பயணிக்கும் தூரம்) இருக்கும் ஆல்பா செண்ட்ரி நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் ஒரு கிரகம் பண்டோரா. யூனோப்டைனாயம் என்று சொல்லக்கூடிய தோரியத்தை விட பன்மடங்கு விலையுயர்ந்த கனிமம் அங்கே ஏராளமாக கிடைக்கிறது. ஒரு சிறிய துண்டு யூனோப்டைனாயம் பல கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்தது என்று படத்தில் சித்தரிக்கப்படுகிறது.

பண்டோராவில் ஜீவராசிகள் உண்டு. ‘நவி’க்கள் என்று மனிதர்களை ஒத்த இனமும் உண்டு. கிட்டத்தட்ட மனிதத் தோற்றத்தில் இருக்கும் நவிக்கள் சாதாரணமாக பத்து அடி உயரம் கொண்டவர்கள். அவர்களது நிறம் நீலம். நவிக்களுக்கு தனி கலாச்சாரம் உண்டு. நம் உலகின் பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை ஒத்தவர்கள். இயற்கையோடு இசைந்து வாழ்பவர்கள். சில மாந்த்ரீக சக்திகளை தங்களது தெய்வமான அய்வாவிடமிருந்து பெறுகிறார்கள். பண்டோராவில் மனிதர்கள் ஆதிக்கம் செலுத்த இந்த நவிக்களே தடையாக இருக்கிறார்கள்.

எனவே புதியதாக நவிக்களை உருவாக்கி, இங்கிருக்கும் மனிதர்களின் சிந்தனையை, உருவாக்கப்பட்ட நவிக்கள் மீது ஏற்படுத்தி அவர்களது கூட்டத்தோடு கலக்கச்செய்து, பண்டோராவை ஆராய்வதே ‘அவதார்’ திட்டம். இந்த விஷயத்தை புரிந்துகொள்வது சற்று கடினமானது. மிக எளிமையாக சொல்ல வேண்டுமானால் நம் விட்டலாச்சார்யா படங்களில் பார்த்த கூடு விட்டு கூடு பாயும் வித்தையை ஒப்பிடலாம். அதாவது ஒரு நவியின் உடலில் ஒரு மனிதன் கூடுபாய்வது என்று எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு கூடுபாயும் ஊனமுற்ற ஹீரோ, அங்கிருக்கும் நவி கூட்டத் தலைவரின் மகளோடு காதல்வசப்படுகிறான். நடக்க இயலாத அவன் நவி உடலில் பாய்ந்தப் பிறகு தாவுகிறான், ஓடுகிறான். ஒரு கட்டத்தில் தன் மனிதவாழ்க்கையை விட, நவி வாழ்க்கையை விரும்ப ஆரம்பித்து விடுகிறான். தன்னை ஒரு நவியாகவே உணர்கிறான்.

படத்தின் இரண்டாம் பாதியில் நவீன ஆயுதங்களோடு மனிதர்கள், நவிக்கள் மீது போர்தொடுத்து அவர்களது வசிப்பிடங்களை அழிக்க முற்படும்போது, ஹீரோ நவிக்களுக்கு தலைமைதாங்கி மனிதர்களை வெல்கிறான். இதுதான் கதை. இப்படத்தின் கதை அடக்குமுறைக்கு எதிரானது என்று உலக அரசியல் நோக்கர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. குறிப்பாக உலகில் தற்போது நடந்துவரும் சில வளர்ந்த நாடுகளின் சுயநலங்களை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது. மனிதர்களின் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டாமல், விலங்குகளை பாத்திரங்களாக அமைத்து கதை சொல்லிய ஈசாப் குட்டிக்கதைகள் பாணி இது.
இந்தக் கதையை படமாக்க அப்படி என்ன பெரிய தொழில்நுட்பம் கேமரூனுக்கு தேவைப்பட்டது.

பத்து அடி உயர நவிக்களை ஆயிரக்கணக்கில் தத்ரூபமாக உருவாக்குவது. யாருமே கற்பனை கூட செய்யமுடியாத ஒரு புதிய கிரகத்தையும், அவர் மனதுக்குள் கற்பனை செய்து வைத்திருக்கும், அக்கிரகத்தின் தாவரங்கள் மற்றும் வினோத ஜீவராசிகளோடு கூடிய வித்தியாச சூழலையும் ஏற்படுத்துவது. 2002ஆம் ஆண்டு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை கண்டவுடன் அவதாரை உருவாக்கிவிடலாம் என்று கேமரூனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

படத்துக்கு கம்ப்யூட்டர் விஷூவல் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது கேமரூன் சொன்னார். “இப்போது நான் செய்து கொண்டிருப்பதுதான் ஒரு முழுமையான படைப்பை உருவாக்குவதற்கான ஒரே வழி. யாருமே கண்டறியாத ஒரு மரத்தையோ, மலையையோ, வானத்தையோ புதியதாக உருவாக்கும்போது, அந்த படைப்பாளிக்கு தான் உருவாக்கும் விஷயங்களின் மீது முழுமையான ஆதிக்கம் தேவை. பண்டோரா கிரகம் முழுக்க முழுக்க இப்போது என்னுடைய ஆதிக்கத்தில் இருக்கிறது”.

தொடர்ச்சியாக உணர்வுபூர்வமான செண்டிமெண்ட் விஷயங்களையே படமாக எடுப்பது கேமரூனின் பாணி. உணர்ச்சிகளை வியாபாரமாக்குகிறார் என்று சில தீவிர சினிமா விமர்சகர்கள் கேமரூனை குற்றம் சாட்டுகிறார்கள். கேமரூன் இந்த விமர்சனத்தை ஒப்புக் கொள்கிறார். “செண்டிமெண்டான காட்சிகள் ரசிகர்களின் உள்ளத்தை தொடுகிறது. தங்கள் உள்ளத்தை தொட்ட விஷயங்களை அவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறார்கள். இதனால் தான் என் படங்கள் உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. என் படங்கள் நன்றாக வியாபாரம் ஆகிறது என்று சொல்லப்பட்டால் அது நல்ல விஷயம்தானே? இதை ஏன் நான் விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்?” என்று கேட்கிறார்.

அவதார் வெளியாவதற்கு முன்பே விருதுகளை அள்ளிக்கொட்ட ஆரம்பித்து விட்டது. கேமரூனின் டைட்டானிக் பதினோரு ஆஸ்கர் விருதுகளை வென்றது. அவதாரும் அதுபோலவே அரை டஜன் விருதுகளை பல துறைகளில் அள்ளிக் குவிக்கும் என்று ஹாலிவுட்டில் பரபரப்பு பேச்சு. அமெரிக்காவின் ஹாலிவுட்டையே கலகலக்கச் செய்துகொண்டிருக்கும் கேமரூன் அமெரிக்கர் அல்ல. கனடியர்.

கேமரூன் எடுக்கும் படங்கள் ஒவ்வொன்றுமே ‘ட்ரெண்ட் செட்டர்’ என்று சொல்லப்படக்கூடிய வகையிலானது. இவர் டெர்மினேட்டர்-ஜட்ஜ்மெண்ட் டே எடுத்தபோது, அப்படத்தைப் போலவே காட்சிகள் அமைத்து, புற்றீசல்போல பல படங்கள் அந்த காலத்தில் வெளிவந்தது. டைட்டானிக் வெளிவந்தபோது காதல், கப்பல் என்று ஹாலிவுட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க ஏகப்பட்ட திரைமுயற்சிகள்.

இப்போது அவதார். இதுதான் படம். அடுத்த பத்தாண்டுகளுக்கு இது மட்டும்தான் முன்னோடிப்படம். இனி உருவாக்கப்படும் படங்கள் மனிதநேயத்தை கைவிட்டு, ‘அயல்கிரகவாசி நேயத்தை’ கையில் எடுத்துக்கொள்ளும். ஒரு கலைஞனின் தனித்துவமே வழக்கமான மரபை கட்டுடைத்து, புதிய பாணியை உருவாக்குவதுதான். கேமரூன் தனது முப்பதாண்டு திரைவாழ்வில் பலமுறை பல புதிய பாணிகளை உருவாக்கித் தந்திருக்கிறார்.

(நன்றி : கறைஆண்கள் - இலக்கிய ஆயுளிதழ்)

8 ஜனவரி, 2010

புத்தகக் காட்சி புத்தகப் பட்டியல்!


பாராமார்த்த குருவும், அவருடைய மொன்னை சிஷ்யர்களும், பின்னே ஒரு குப்பைத் தொட்டியும்!


புத்தகக் காட்சிக்கு போய்வந்து வாங்கிய புத்தகங்களின் பட்டியலை பதிவிடாவிட்டால் வலைப்பதிவர் சமூகத்தில் இருந்து ‘இவனுக்கு யாரும் பின்னூட்டம் போடக்கூடாது' என்று தள்ளி வைத்து விடுவார்களோ என்ற அச்சம் இரண்டு மூன்று நாட்களாக தூங்கவிடாமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.

தோழர்கள் வெளியிட்டு வரும் பட்டியல்கள் அனுமார்வால் மாதிரி நீளமாகவும், அதே சமயம் ஞானாம்பிகை மெஸ் சாப்பாடு மாதிரி தரமாகவும் இருப்பது குறித்த மனவுளைச்சலால் மருத்துவம் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். காலச்சுவடில் வாங்கிய புத்தகங்கள், உயிர்மையில் வாங்கிய புத்தகங்கள், லெஃப்ட் வேர்ல்டில் வாங்கியவை என்று 'தர'ப்பட்டியல் இடாவிட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்களோ என்றளவுக்கு பீதியில் உறைந்துப் போய் நிற்கிறேன். வலைப்பதிவு கலாச்சாரத்தின் நீட்சியாக ஆனந்த விகடனும் கூட வி.ஐ.பி.கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலை போட்டிருக்கிறது (அதில் ஒரு வி.ஐ.பி புத்தகக் காட்சிக்கு போகக்கூட இல்லை என்பது வேறு விஷயம்)

சில மொக்கைப் பதிவர்களையே பெரும்பாலும் திரும்ப திரும்ப இந்த சீசனில் புத்தகக்காட்சியில் சந்திக்க முடிந்தது என்றாலும் கூட, அவர்கள் பதிவில் ஏற்றும் பட்டியலும் கூட ஜே.டி.க்ரூஸ், பி.ஏ.கிருஷ்ணன், ஜெயமோகன் என்று ஒருமாதிரியாக பெரிய ரேஞ்சிலேயே நிற்கிறது. வாங்கியதாக இவர்கள் பதிவிட்டிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக படித்தாலே போதும், பதிவுலகம் அடுத்தாண்டு உருப்பட்டு விடும் என்ற பார்வையற்ற நம்பிக்கை பிறக்கிறது.

நான் வெகுவாக விரும்பித் தேடிய அல்பேனிய புத்தகங்கள் நானூற்றி சொச்சம் ஸ்டால்களிலும் கிடைக்கவில்லை என்பதே என்னுடைய ஒரே வருத்தம். கிழக்குப் பதிப்பகம் ஸ்டாலில் லத்தீன் அமெரிக்க புத்தகங்கள் வந்திருக்கிறதா என்று கேட்டேன். அதை லத்தீன் அமெரிக்கா போய் வாங்கிக் கொள்ளலாமே என்று அசட்டையாக பதில் அளித்தார்கள். இப்படியான ஒரு கசப்பான மனநிலையோடே, இலக்கிய அரிப்பைத் தீர்க்கும் பொருட்டு, ஆபாசங்களை சகித்துக் கொண்டு அரிய புத்தகங்களை தேடித்தேடி வாங்க வேண்டிய சூழல் சென்னை புத்தகக்காட்சியில் நிலவுகிறது.

ஓக்கே, நான் வாங்கிய புத்தகங்களின் லிஸ்ட் :

1. காமசூத்ரா (எ) கொக்கோக சூத்திரம் (ஹார்ட்பவுண்ட் பைண்டிங், ரூ.160, நர்மதா)

2. புஷ்பா தங்கதுரையின் தாய்லாந்து அனுபவங்கள் (நக்கீரனின் பினாமி பதிப்பகம்)

3. இன்னொரு கில்மா புக் - பெயர் நினைவில்லை (இதுவும் நக்கீரனின் பினாமி)

4. ராஜேந்திரகுமாரின் நகைச்சுவைக் கதைகள் (பதிப்பகம் பெயர் தெரியவில்லை)

5. அப்புசாமியும், கலர் டிவியும் (காமிக்ஸ் - மணிமேகலை)

6. டெக்கான் கிரானிக்கிள் (ஓசியில் கொடுத்தார்கள்)

7. புதிய தலைமுறை இதழ் எண் 2 (ஓசியில் கொடுத்தார்கள்)

8. தமிழ்நாடு மேப் (ரூ.20 - ஏதோ பதிப்பகம்)

9. ஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாவது எப்படி? (கிழக்கா மணிமேகலையா நினைவில்லை)

10. ஓவர் குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாவது எப்படி? (இதுவும் கிழக்கா மணிமேகலையா நினைவில்லை)

11. வலைப்பதிவர்களிடமிருந்து தொகுத்த மொக்கை கதைகள் (ரிசர்வ் செய்திருக்கிறேன்,
இன்னும் ப்ரிண்ட் ஆகவில்லை)

12. வலைப்பதிவர்களிடமிருந்து தொகுத்த ஆகச்சிறந்த மொக்கை கவிதைகள் (ரிசர்வ் செய்திருக்கிறேன், இன்னும் ப்ரிண்ட் ஆகவில்லை)

13. சரோஜாதேவி கதைகள் - முழுத்தொகுப்பு (புத்தகக் காட்சிக்கு எதிரிலிருக்கும் பிளாட்ஃபார்மில்)

14. விருந்து - மருதம் - திரைச்சித்ரா உள்ளிட்ட பழைய செவ்விலக்கிய இதழ்கள் தனித்தனியாக (புத்தகக் காட்சிக்கு எதிரிலிருக்கும் பிளாட்ஃபார்மில்)

15. இன்னும் சில மொக்கை மற்றும் கில்மா புத்தகங்கள் (பெயரை கூட நினைவில் வைத்துக் கொள்ள இயலா மொக்கைத்தன்மை கொண்டவை)

எனக்கும் கூட புலிநகக்கொன்றை, விஷ்ணுபுரம், பிரமிளின் முழுத்தொகுப்பு, சுந்தரராமசாமி சிறுகதைகள், நகுலன் கவிதைகள், அ.மார்க்ஸ், துருக்கித் தொப்பி என்றெல்லாம் பட்டியலிட ஆசையாக இருந்தாலும், வாங்கித் தொலைத்தவற்றையே பட்டியலிட வேண்டும் என்ற நேர்மையும், அறமும் இருப்பதால் இப்பட்டியலை வெளிப்படையாக நீதிபதி சொத்துக் கணக்கு வெளியிடுவது மாதிரி வெளியிடுகிறேன்.

6 ஜனவரி, 2010

ஜெயமோகன் - தத்துவம் நம்பர் பத்தாயிரத்து ஒண்ணு!


தோழர் ஜெயமோகன் இதுவரை எவ்வளவோ தத்துவமுத்துகளை உதிர்த்திருக்கிறார். தொடர்ந்து உதிர்த்துக் கொண்டிருக்கும் இருக்கிறார். பிரச்சினை என்னவென்றால் எனக்கென்னவோ அவரை மைடியர் மார்த்தாண்டன் 'ஐடியாமணி' ரேஞ்சுக்கு மட்டுமே பார்க்க முடிகிறது.

பாருங்கள். அவரது லேட்டஸ்ட் தத்துவமுத்தினை : இந்துமதம் பின்நவீனத்துவப் பண்புகளை அதிகமாக கொண்டிருக்கும் மதம்.

மோசமான சாதிய கட்டமைப்பு கொண்ட ஒரு மதத்தை, காலாவதியாகிப் போய்விட்ட அம்மதத்தின் தத்துவங்களை, இப்போதைய சமகால போக்குடன் கஷ்டப்பட்டு ஒட்டவைக்கும் தந்திரத்தை தவிர வேறென்ன இக்கருத்தில் இருக்கிறது. மூன்றாம் உலகநாடுகளின் காலத்திலும் ஆயிரக்கணக்கான மாற்றுமதத்தினரை கொன்று குவிக்கும் மதத்தை, அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்களே தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடும் கூத்தை எங்கு போய் அடித்துக் கொள்வது?

'பின்நவீனத்துவம் என்றால் என்ன?'வென்று சிறுபான்மை மதத்தை சேர்ந்த சையது கடிதம் எழுதுவாராம். அதற்கு ஜெமோ ஒரு பதிவு எழுதுவாராம். பின்னூட்டத்தில் பெருமாள் என்பவர் திடீரென உதித்து, அப்படியென்றால் ‘இந்துமதம் ஒரு பின்நவீனத்துவ மதமா?' என்று கேள்வி கேட்பாராம். மைல்டாக ஜெமோ ‘ஆமாம்' என்பாராம். இதுபோன்ற நாடகத்தன்மை கொண்ட இலக்கியச்சேவையை ஜெமோவைத் தவிர வேறு யாரிடமும் நாம் பெற்றுவிட முடியாது. பதிவிலேயே இந்துமதத்தை பின்நவீனத்துவ மதமாக முன்னிறுத்தினால் ‘ஆர்.எஸ்.எஸ். வெறியர்' என்ற விமர்சனத்தை உண்மையாக்கி விடுவோமோ என்ற அச்சம் ஜெமோவுக்கும் இருக்குமில்லையா?

நண்பர்களே, ஒரு விஷயத்தை நீங்கள் உணர்ந்திருக்கலாம். மொட்டைக்கடுதாசி உங்களுக்கும் வந்திருக்கலாம், அல்லது நீங்களும் யாருக்காவது எழுதியிருக்கலாம். உலகிலேயே ‘பெருமாள்' என்ற பெயரில்தான் மொட்டைக்கடுதாசி அதிகமாக எழுதப்படும், தெரியுமில்லையா? அப்பெயருக்கான வலிமையும், தன்மையும் அது அது. ‘இந்து மதம் பின்நவீனத்துவ மதமா?' என்று ஜெமோவை கேள்வி கேட்பதும் பெருமாள்தான் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜெமோ அவரது வாசகர்களுக்கு சொல்லித்தர விரும்புவது மதவெறியே தவிர, பின்நவீனத்துவம் அல்ல என்று அவரது முன்னாள் வாசகர்கள் அறிந்திருக்கிறோம். துரதிருஷ்டவசமாக இன்னும் பெருமாள்கள் மட்டுமே ஆட்டுமந்தையாய் அவர் பின்னே சென்றுக் கொண்டிருக்கிறார்கள், பின் தொடரும் நிழல்களின் குரல்களாக, பரிதாபமாய் ‘மே'வென்று கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

* - * - * - * - * - *

உ.போ.ஒருவனுக்குப் பிறகாக உலகநாயகன் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பை கக்கிக் கொண்டிருக்கிறார். திருட்டு டி.வி.டி.க்கு எதிரான ஜக்குபாய் குழுவினரின் அதிரடிக்கூட்டம் நேற்று நடந்திருக்கிறது. எதையாவது கோஷமாய் போட்டுவிட்டு செல்வதில் நமக்கு பிரச்சினையில்லை.

உலகநாயகனின் பேச்சில் குறிப்பாக ஒரு விஷயம் நெருடுகிறது. 'திருட்டு டி.வி.டியில் வருவது கருப்புப் பணம். இப்பணம் தேசவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மும்பை குண்டுவெடிப்பு போன்றவற்றுக்கு இப்பணமே செலவழிக்கப்படுகிறது'

ஏதோ பெரிய, அரிய, புதிய கண்டுபிடிப்பை உ.நாயகன் கண்டு சொல்லிவிட்டதாக புல்லரித்துப் போய்விட்டோம். “பர்மாபஜார் பாய்கள் இங்கே திருட்டுத்தனமாக சம்பாதித்து, தீவிரவாத செயல்களுக்கு முதலீடு செய்கிறார்கள்” என்று நேரடியாகவே சொல்லிவிட்டிருக்கலாம். பாய்களுக்கு டிவிடி சப்ளை செய்பவர்கள் காஞ்சிபுரம் தேவநாதன்கள் என்பதையும் கூட சேர்த்து சொல்லியிருந்தாரானால், இன்னமும் அவரை செக்யூலரிஸ்டாகவே நாங்களும் நம்பித் தொலைக்கலாம்.

* - * - * - * - * - *

செல்போன் என்ற வஸ்துவை தமிழனுக்கு பயன்படுத்தத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். 'முக்கிய' நேரங்களில் வரும் அழைப்புகள் எரிச்சல்படுத்துகின்றன. நாம் ‘முக்கிய' விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை, அழைப்பவருக்கு சொல்லும் முகமாக 'கட்' செய்தாலும், பதினைந்து நொடிகள் கழித்து மீண்டும் ரிங்குகிறார்கள். செல் அழைப்புகள் நல்ல சூழல்களை நாசப்படுத்துகின்றன.

யாராவது மூன்று ரிங்குக்கு மேல் போனை எடுக்கவில்லை, அல்லது எடுத்து கட் செய்கிறார் என்றால், பேச இயலாத சூழலில் இருக்கிறார் என்று பொருள். முக்கியமான விஷயமாக இருந்தால் எஸ்.எம்.எஸ். செய்யலாம். அல்லது மிஸ்ட் கால் பார்த்து அழைத்த நபரே உங்களை திரும்ப அழைத்துத் தொலைப்பார்.

கடந்த வாரம் முழுக்க இதுபோன்ற அழைப்புகளால் கடுமையான மன உளைச்சலை அடைந்தேன். தொடர்ந்து ஐந்து முறை ஒரு நண்பர் ரிங் அடித்துக் கொண்டேயிருக்க, நானும் கட் அடித்துக் கொண்டேயிருந்தேன். ஆறாவது முறையும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் அவர் அடிக்க, என்னவோ ஏதுவோவென்று அச்சத்துடனே, வேறுவழியின்றி எடுத்தேன். “ரொம்ப வேலையா இருக்கீங்களா பாஸூ. சும்மாதான் போன் பண்ணேன்” என்கிறார். என்னத்தைச் சொல்ல?

2 ஜனவரி, 2010

எவரெஸ்ட், எட்டி விடும் உயரம்தான்!


காட்சி 1 :

அப்பா, அம்மா இல்லாத திவ்யா தாத்தாவின் பொறுப்பில் வளர்ந்தார். செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிராமம். தாத்தாவுக்கு பென்ஷன் மட்டுமே வருமானம். உணவுக்கு கூட அக்கம்பக்கம் இருப்பவர்கள் உதவவேண்டிய நிலை. வாடகை வீடு. வீட்டு உரிமையாளர் மிக நல்லவர். இவர்களது நிலையறிந்து, குறைந்த வாடகை வாங்கினார்.

சூழல்தான் இப்படியே தவிர, திவ்யா படுப்பில் படுசுட்டி. அவர் படித்த மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நிர்வாகம், திவ்யாவுக்கு ஒரு சலுகை தர முன்வந்தது. மெட்ரிக்குலேஷனில் ஏதாவது ஒரு பாடத்தில் ’செண்டம்’ எடுத்தாலும் போதும். +1, +2 படிப்பை இலவசமாகவே வழங்குகிறோம் என்றது. திவ்யா மூன்று பாடத்தில் ‘செண்டம்’ எடுத்தார்.

+2வில் 1200க்கு 1142 மதிப்பெண். என்ஜினியரிங் படிக்க ஆசை. இவரது மதிப்பெண்ணுக்கு முன்னணிக் கல்லூரிகள் கூப்பிட்டு சீட்டு தர தயாராகவே இருந்தார்கள். ஆனால் திவ்யாவுக்கோ வயதான தாத்தாவை விட்டு, விட்டு தூரமாகச் சென்று படிக்க முடியாது. அவர் வசித்த பகுதிக்கு அருகிலேயே ஒரு தனியார் கல்லூரி இருந்தது. ஆனால் செலவு அதிகம். கையைப் பிசைந்துகொண்டு கலங்கினார் திவ்யா.

காட்சி 2 :

போடிநாயக்கனூர் கார்த்திக் கடுமையான ஏழ்மையிலும் செம்மையாக படித்தார். அவரது அப்பா சமோசா வியாபாரி. தள்ளு வண்டியில் தெரு தெருவாக சென்று சமோசா விற்பார். அப்பாவுக்கு உதவியாக கார்த்திக்கும் விடுமுறை நாட்களில் சமோசா விற்கச் செல்வதுண்டு.

+2வில் கார்த்திக்கின் மார்க் 1200க்கு 1080. இவருக்கும் என்ஜினியரிங் படிக்கவே ஆசை. சமோசா விற்று கிடைக்கும் வருமானம் வயிற்றுக்கும், வாய்க்குமே சரியாகப் போகிறது. எங்கிருந்து மகனை என்ஜினியரிங் படிக்கவைப்பது என்று யோசித்தார் அவரது அப்பா. பேசாமல் ஒரு வண்டி வாங்கி, நாமும் சமோசா வியாபாரத்தில் இறங்கி விடலாமா என்று மனதை கல்லாக்கிக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தார் கார்த்திக்.

மேற்கண்ட இரு காட்சிகளிலும் சொல்லப்பட்டதைப் போல நம் நாடெங்கும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான திவ்யாக்களும், கார்த்திக்குகளும் இருக்கிறார்கள். காசில்லை என்பதற்காக கல்வியை கைவிடுவது எவ்வளவு கொடுமையானது?

நல்ல வேளையாக திவ்யாவுக்கும், கார்த்திக்குக்கும் கைகொடுக்க ‘எவரெஸ்ட்’ முன்வந்தது. திவ்யா இப்போது அவர் இருக்கும் பகுதியிலேயே தான் ஆசைப்பட்ட கல்லூரியில் என்ஜினியரிங் படிக்கிறார். கார்த்திக் திருச்சியில் ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார்.

நன்றி எவரெஸ்ட்!

எவரெஸ்ட் என்பது உலகின் உயர்ந்த சிகரம். மலையேறும் வீரன் சிகரத்தைத் தொட்ட மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சி, ஏதேனும் சிறு உதவியை மற்றவர்களுக்கு செய்துப் பார்த்தாலும் கிடைக்கும். எனவேதான் உயர்ந்த உள்ளங்களின் சங்கமமான இந்த அமைப்புக்கும் ‘எவரெஸ்ட்’ என்று பெயர்.

சுமார் மூவாயிரத்து ஐநூறு பேர் இவ்வமைப்பில் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டு சமூகத்துக்கு, தங்களால் ஆன பங்களிப்பினை செய்துவருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.

எவரெஸ்ட்டுக்கு என்று அலுவலகம் கூட கிடையாது. ஒருவரை ஒருவர் இவர்கள் பெரும்பாலும் சந்தித்தது கூட இல்லை. இண்டர்நெட்தான் இவர்களை ஒருங்கிணைக்கிறது. யாருக்காவது உதவி தேவை என்பதை அறிந்தால், உடனடியாக இண்டர்நெட்டில் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அச்சமயத்தில் இயன்றவர்கள் உடனடியாக பங்களிக்கிறார்கள். அவ்வப்போது இவர்களில் சிலர் ஒன்றுகூடி களச்சேவையும் செய்வதுண்டு.

எங்கே, எப்படி தொடங்கப்பட்டது எவரெஸ்ட்?

அது ஒரு தனி கதை. ஆரணியைச் சேர்ந்த கார்த்தீபனின் அப்பா ஒரு வீடியோகிராபர். அம்மா ஒரு பள்ளியில் தலைமையாசிரியை. அருகிலிருந்த பத்தியாவரம் பள்ளியில் படித்தார் கார்த்தீபன். வயலுக்கு நடுவே பள்ளி. ரம்மியமான சூழல். ஆனால் அப்பள்ளியில் படித்த பல மாணவர்களும் குழந்தைத் தொழிலாளர்கள். படிப்பு என்பதை பகுதிநேரப் பணியாக வைத்திருந்தார்கள். பள்ளி முடிந்ததுமே தனது பக்கத்து சீட் மாணவன் பஞ்சர் ஒட்டும் வேலைக்கு அவசரமாக ஓடுவதை கண்டார் கார்த்தீபன். அரசுப்பள்ளியில் கட்டணம் என்பதே மிகச்சொற்பமானது. அதை கட்டக்கூட இயலாத வகையில் அம்மாணவர்களுக்கு வறுமை. பசுமரத்தாணியாய் பத்தியாவரம் கார்த்தீபனின் மனதில் பதிந்தது. இந்த மாணவர்களுக்கு யாராவது உதவ வேண்டுமே? யார் உதவுவார்கள்.

சேலத்தில் என்ஜினியரிங் படித்தபோது, சில சேவை அமைப்புகளோடு சேர்ந்து செயல்பட ஆரம்பித்தார். நான்காம் ஆண்டு படித்தபோது, தன்னோடு ஒத்தக் கருத்து கொண்ட சில நண்பர்களோடு பேசினார். காசுக்காக கல்வி யாருக்கும் மறுக்கப்பட்டு விடக்கூடாது. என்ன செய்யலாம்? சமூகம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பங்களிக்கிறது. சமூகத்துக்கு தனிமனிதனின் பங்களிப்பு என்ன?

எவரெஸ்ட் ரெடி.

ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததும், தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் இருந்து ஆயிரம் ரூபாயை தனியாக தரும்படி அம்மாவை கேட்டார் கார்த்தீபன்.

“எதுக்குப்பா?”

“எங்கிட்டே இப்போ நிறைய காசிருக்கு. இல்லாதவங்களுக்கு இதில் கொஞ்சமாவது கொடுக்கணும் இல்லையா?”

கார்த்தீபனின் நண்பர்களும் கைகொடுத்தார்கள். நான்காயிரம் ரூபாய் தயார். திருவண்ணாமலைக்கு அருகில் சிறுமூர் என்றொரு கிராமம். அங்கிருக்கும் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள் பெரும்பாலானோர் ஏழை மாணவர்கள். காலையில் பூப்பறிக்கும் வேலை. முடிந்ததும் பள்ளிக்கு வருவார்கள். மாலையில் மீண்டும் பூ விற்பனை. இந்த மாணவர்களுக்கு சீருடை, நோட்டுப் புத்தகங்கள் என்று வாங்கித் தந்து தங்கள் அமைப்பின் சேவைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டார்கள்.

சேவை ஒரு போதை. மீண்டும் மீண்டும் சேவை செய்யத் தூண்டும். அடுத்தடுத்து தாங்கள் வாங்கிய சம்பளத்தின் ஒரு பகுதியை சேவைக்கு ஒதுக்கத் துவங்கினார்கள். கல்விக்கான சேவைதான் முதல் இலக்கு. ஏனெனில் கல்வி எல்லாவற்றையும் பெற்றுத் தரும். பிரதீப் என்ற நண்பர் தொடர்ச்சியாக தனது சம்பளத்தில் இருந்து ஐநூறு ரூபாய் கொடுத்துவந்தார். அவருக்கு சம்பள உயர்வு தரப்பட்டபோது, ஐநூறை எழுநூற்றி ஐம்பது ஆக்கினார்.

சேவை ஒரு தொற்றுநோய். நீங்கள் சேவை செய்பவராக இருந்தால், உங்கள் நண்பர்களும் செய்ய விரும்புவார்கள். கார்த்தீபன், பிரதீப் போன்றவர்களின் ஆர்வம் அவர்களது நண்பர்களுக்கு தொற்றிக் கொண்டது. பத்து பேராக இருந்தவர்கள் நூறு பேரானார்கள். நூறு பேர் ஆயிரமாக, இப்போது ஆயிரம் மூவாயிரத்து ஐநூறாக பெருகி நிற்கிறது.

இதெல்லாம் வெறும் நான்கு ஆண்டுகளிலேயே நடந்த வெற்றிக்கதை. இப்போது எவரெஸ்ட் அமைப்பின் உதவிக்கரம் நீண்டுவிட்டது. ஏழை மாணவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு கை கொடுக்கிறது. இவர்களின் உதவிகளைப் பெற்றவர்களும், மற்றவர்களும் உதவ வேண்டுமென்ற மனப்பான்மையோடு இவர்களது அமைப்பில் சேருகிறார்கள். முதல் பத்தியில் வந்த கல்லூரி மாணவியான திவ்யா இப்போது ஆறு ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கிறார்.

“நான் என் பெற்றோரின் கண்ணாடி. மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்பதற்கு எனக்கு தூண்டுகோலாக இருந்தவர்கள் என் பெற்றோரே!” – சமூகச்சேவைக்கு நேரமும், பணமும் செலவழிப்பதால் வீட்டில் பிரச்சினை இல்லையே என்று கேட்டதற்கு இப்படி பதில் சொல்லுகிறார் கார்த்தீபன்.

“நீங்கள் சொல்லுவதைப் போல பிரச்சினை வரவும் வாய்ப்புண்டு. எப்படி என்றால் சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும், ஊருக்கு வாரியிறைத்துவிட்டு வீட்டை பட்டினிப்போட்டால் நிச்சயம் பிரச்சினை வரும். எனவே சமூகசேவை செய்ய வரும் இளைஞர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்கினால் போதுமானது. வெறும் பணத்தை பங்களிப்பது மட்டுமே சேவையல்ல.

சினிமாவுக்கும், பீச்சுக்கும், பார்க்குக்கும் பொழுதுபோக்க போகிறோமில்லையா? அதுபோல சமூகசேவைக்கும் மாதத்தில் ஒரு நாள் ஒதுக்கலாம். அந்த நாளை ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கோ, பின் தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு தருவதற்கோ பயன்படுத்தலாம். இன்று பணத்தை விட, நேரடிப் பங்களிப்பே நம் சமூகத்துக்கு அதிகமாக தேவைப்படுகிறது” என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.

மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் கார்த்தீபனுக்கு வயது 24. அவரது நிறுவனம் மூலமாக வெளிநாட்டுக்கு செல்ல வாய்ப்பிருந்தும், நாசூக்காக மறுத்திருக்கிறார்.

“வெளிநாட்டுக்கு போனால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். எனக்கு இங்கே கிடைக்கும் இருபதாயிரமே போதும். என் சமூகத்தோடு, என் மக்களோடு, என் நாட்டில் வாழ்வதே எனக்கு திருப்தி. பணம் சம்பாதிப்பது நிம்மதிக்குதானே? அது இங்கு கிடைக்காமல் வேறு எங்கு கிடைக்கும்?” – ஆன்சைட் வேலை கிடைக்காதா என்று பலரும் அலையும் நேரத்தில் வித்தியாசமாக சிந்திக்கிறார். டாக்டர் கலாமும், மகாத்மா காந்தியும் தான் கார்த்தீபனுக்கு இன்ஸ்பிரேஷனாம். எவரெஸ்ட் குழு, டாக்டர் கலாமுக்கு எப்போதுமே செல்லமான குழு. அவ்வப்போது அழைத்துப் பாராட்டி ஆலோசனைகளும் வழங்குகிறார்.

எவரெஸ்ட் அமைப்பினர் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் மாணவர்களுக்கு அறிவுப்போட்டிகள் நடத்தி வருகிறது. கடந்தாண்டு ஒரு லட்சம் மாணவர்களை தங்கள் போட்டிகளில் கலந்துகொள்ள இலக்கு நிர்ணயித்தார்கள். கூடுதலாக பத்தாயிரம் பேர் கலந்துகொண்டார்கள். வெற்றி பெறுபவனை மட்டுமே போற்றுவது என்பது நெருடலான விஷயமில்லையா? பங்கெடுப்பவர்கள் அனைவருமே பாராட்டுக்கு உரியவர்கள் இல்லையா? அதனால்தான் எவரெஸ்ட் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழும், பரிசுகளும் வழங்குகிறது.

“எங்கள் அமைப்பினர் எப்போதும் உதவ தயாராக இருக்கிறோம். யாருக்கு உதவி தேவை என்று தயவுசெய்து சொல்லுங்கள்” என்கிறார்கள் எவரெஸ்ட் அமைப்பினர்.

இவர்களைப் போல இயன்றவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ முன்வந்தால், இந்தியாவில் இல்லாமை என்ற சொல்லே எதிர்காலத்தில் இருக்காது.


எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

எவரெஸ்ட் அமைப்பின் சார்பில் ‘இளம் இந்தியா’ என்றொரு நீதிநூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நூலில் உலகத் தலைவர்களின் 100 வெற்றிக்கதைகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த அமைப்பினைச் சேர்ந்த 23 பேர் சேர்ந்து இந்நூலை எழுதியிருக்கிறார்கள்.

காலையில் பள்ளி பிரார்த்தனைக் கூட்டத்தில் இந்நூலில் உள்ள தலைவர்களின் கதைகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டி, ஒவ்வொரு பள்ளிக்கும், மாவட்ட கல்வித்துறை மூலமாக இந்நூலை இலவசமாக வழங்குகிறார்கள்.
ரூ.25/- செலுத்தி, யார் வேண்டுமானாலும் ‘இளம் இந்தியா’ நூலை வாங்கி, தங்கள் பகுதி குழந்தைகளுக்கு கதை சொல்லலாம்.

எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

எவரெஸ்ட் அமைப்பினரை குறுஞ்செய்தி (SMS) மூலமாக தொடர்பு கொள்ள : +919976953287. மின்னஞ்சல் : teameverest@yahoo.co.in இணையத்தளம் : http://teameverest.wordpress.com