12 நவம்பர், 2011

அங்காடித் தெருவுக்கு ஆபத்து!

வணிக சாம்ராஜ்யங்கள் சந்திக்கும் நெருக்கடிக்கு சாட்சி சொல்கின்றன வெறிச்சோடிக் கிடக்கும் தி.நகர் தெருக்கள். எதன் ஆரம்பம் இது?

அருளானந்தம் மெஸ் சென்னை தியாகராயநகர் உஸ்மான் ரோட்டில், ரங்கநாதன் தெருவுக்கு முன்பாக இருக்கும் இந்த உணவகத்தில் எப்போதுமே சாப்பிட ஏகப்பட்ட போட்டி. டேபிள்கள் நிறைந்து, அடுத்து சாப்பிட வருபவர்கள் ஓட்டலுக்கு வெளியே கூட்டமாக நிற்பார்கள். காலையில் வேலை செய்ய ஆரம்பிக்கும் ஓட்டல் பணியாளர்கள் இரவுவரை, ஒரு நிமிடம் கூட ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருப்பார்கள். இந்த நவம்பர் இரண்டாம் தேதி நாம் போனபோது, அங்கே ஆட்களே இல்லை. டேபிள்கள் காலியாக கிடக்க, பணியாளர்கள் ஓய்வாக நின்றிருந்தார்கள். அருளானந்தம் மெஸ் இருளானந்தம் மெஸ் ஆகியிருந்தது.

இது ஒரு உதாரணம்தான். உஸ்மான் ரோடு முழுக்கவே இதுதான் நிலை. தீபாவளி வாரத்தில் யாருமே சுலபமாக உள்ளே நுழைய முடியாத (நுழைந்தால் வெளியே வரமுடியாத) ரங்கநாதன் தெரு இப்போது வெறிச்சோடிப் போயிருக்கிறது. நடைபாதை வியாபாரிகள், வியாபாரமின்றி சோர்வாக அமர்ந்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் புழங்கிக் கொண்டிருந்த இடம் சூனியம் வைத்ததைப் போலச் சோம்பிச் சுருண்டு கிடக்கிறது.ஆனால் இது சொந்தச் செலவில் வைத்துக் கொண்ட சூனியம்.

என்ன காரணம்?

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, அதிகாலை. அந்த நாளின் பரபரப்பிற்குத் தயாராகச் சோம்பல் முறித்து எழுந்து கொண்டிருந்தது ரங்கநாதன் தெரு. ஆனால்- தி.நகரில் வந்திறங்கிய சி.எம்.டி.ஏ (சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்) மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இருபத்தைந்து கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். தங்களுடைய நாளைத் துவக்காமலேயே இக்கட்டிடங்களில் இயங்கி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலமான வணிக ஸ்தாபனங்கள் முடங்கிப் போயின. இங்கு தினம், தினம் ஆயிரம் ஆயிரமாக கூடி ‘ஷாப்பிங்’ செய்யும் மக்கள் வராமல் வெறிச்சோடிப் போனது ரங்கநாதன் தெரு. பக்கவிளைவாக ரங்கநாதன் தெரு கூட்டத்தை நம்பி வியாபாரம் செய்துவந்த உணவகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், நடைபாதை வியாபாரங்கள் என்று அனைத்துமே இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறது.

வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் வணிகர்கள் கவலையோடும் வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத கோபத்தோடும் பேசுகிறார்கள்.

”நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நூறுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள். கட்டிடங்களை கட்டும்போதே, இவற்றை அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆனபிறகு நடவடிக்கை எடுப்பது நியாயம் அல்ல”. என்கிறார் வெள்ளையன், தமிழ்நாடு வணிகர்சங்கப் பேரவை

கடைகளுக்கு ஏன் சீல் ?

அவர் சொல்வது போல் இது நியாயமற்ற நடவடிக்கையா?

அந்தக் கேள்விக்கு விடைகாண கடைகளுக்கு ஏன் சீல் வைக்கப்பட்டன என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் படி, சென்னை மாநகரப் பகுதியில் எந்த வளர்ச்சியை மேற்கொள்வதாக இருந்தாலும், அதற்கான திட்ட அனுமதியை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் முன்கூட்டியே பெறவேண்டும்.

நில உபயோகம் மற்றும் விதிகளின் படி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும். நிலத்தின் தன்மை மற்றும் அளவு, அதில் கட்ட உத்தேசிக்கப்பட்டிருக்கும் கட்டிடத்தின் உயரம் மற்றும் பரப்பளவு, வாகனங்கள் நிறுத்தும் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று பலவித தன்மைகளையும் அலசி, உத்தேசித்தே கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின்அதிகாரிகள் மனையை பார்வையிட்டு, அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை பின்பற்றாததாலேயே தி.நகரில் இப்போது இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெரிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.தி.நகரில் பொறுத்தவரை தற்போது சீல் வைக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள், நில அளவுக்குப் பொருந்தாத வகையில் ஐந்து முதல் பத்து மடங்கு பகுதிகளைக் கட்டுமானத்துக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நடைபாதைக்கு விடவேண்டிய இடங்களையும் விட்டுவைக்கவில்லை. ரங்கநாதன் தெருவில் இருக்கும் எந்த வணிக வளாகத்திலும் ‘கார் பார்க்கிங்’ வசதி இல்லை. இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் கூட இடமில்லை என்பதுதான் உண்மை. இடர் காலங்களில் தீயணைப்புத்துறையினர் செயல்படும் அளவுக்குக் கூட இடங்களை விட்டுவைக்கவில்லை.

”இக்கட்டிடங்களில் போதுமான பக்க இடைவெளி இல்லை. அனுமதிக்குப் புறம்பான வாகன நிறுத்துமிடம், இரண்டு மூன்று மற்றும் நான்கு ஐந்து தளங்களை அனுமதியின்றி கட்டியது என்று பல்வேறு விதிமுறை மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன” என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்
”விதிமுறையை மீறிய கடை உரிமையாளர்களுக்கு முப்பது நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கியிருந்தோம். இதற்கு உரிமையாளர்கள் அளித்த பதில் திருப்தி அளிக்காததால் சீல் வைத்திருக்கிறோம்.” என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்

2006ஆம் ஆண்டு சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி, இதுகுறித்த வழக்கு ஒன்றைச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தார். அவ்வழக்கில் விதிமுறை மீறிய கட்டிடங்களை கண்டறிந்து போதிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு கண்காணிப்பு கமிட்டியையும் இதற்காக உருவாக்க வேண்டுமென நீதிமன்றம் யோசனை சொன்னது.

2007ஆம் ஆண்டு இந்தக் கண்காணிப்பு கமிட்டி, விதிமுறை மீறிய கட்டிடங்களை முடக்கி, சீல் வைக்க நோட்டீஸ் விடச்சொல்லி சென்னை மாநகராட்சியையும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தையும் கேட்டுக் கொண்டது.

நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக முந்தைய அரசு சட்டமன்றத்தில் ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றி இந்நடவடிக்கையை முடக்கியது. இயங்கிக் கொண்டிருக்கும் பெரிய வணிக வளாகங்களுக்கு சீல் வைப்பதின் மூலமாக சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று அந்த சட்டவரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், இவ்வழக்கு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை நிறுத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதையடுத்து ‘சீல்’ நடவடிக்கை முடக்கப்பட்டது.

தற்போது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த அவசரச் சட்டம் காலாவதியாகிவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு எதிராக கிடைத்திருக்கிறது.
எனவே, கடந்த ஜூலை மாதம் இக்கட்டிடங்களுக்கு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் நோட்டீஸ் வழங்கியது. இருப்பினும் நோட்டீஸ் வழங்கியதோடு, மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செய்வதாக மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது.
சி.எம்.டி.ஏக்கும், மாநகராட்சிக்கும் இந்த அளவிற்கு நிர்பந்தமும் நெருக்கடிகளும் உருவானபிறகே வேறுவழியின்றி, இப்போது ‘சீல் வைக்கும் வைபவம்’ நடந்தேறியிருக்கிறது.

ஏன் தாமதம்?

நீதிமன்றம் கட்டளையிட்டபிறகும் கூட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்தது ஏன்? விடை எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

லஞ்சம், ஊழல்!

விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியவர்கள், அதை கண்டுகொள்ளாமல் இருந்த சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழுமம், மாநகராட்சி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் ஏராளம்.

இப்போது அவர்களில் 31 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் மீதான துறைரீதியான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. மேலும் இவ்வழக்கில் அவர்கள் எதிர்மனுதாரராகவும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தற்போதைய நிலவரப்படி இவர்கள் ‘கைது’ ஆனாலும் ஆச்சரியமடைய ஏதுமில்லை.

இந்த நடவடிக்கைகள் குறித்து பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் நம்மிடம் பொங்கினார்.
“என்னவோ அரசு அதிகாரிகள் மட்டுமே குற்றவாளிகள் என்பதுபோல காட்சி சித்தரிக்கப்படுவ்து அவலமானதும், உண்மைக்குப் பொருந்தாததும் ஆகும்.இந்த விதிமுறை மீறல்களை கண்டுக்கொள்ளாமல் இருந்ததற்கு அரசியல் அதிகாரம் பெற்றவர்களின் அழுத்தம் முக்கியமான காரணம். நீட்டிய இடத்தில் கையெழுத்து போடாவிட்டால், பணிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டுமென நேரடியாகவே மிரட்டல்களை சந்திக்கிறோம்.
அரசியல் அதிகாரம், அரசு நிர்வாகத்தை அச்சுறுத்தும் போக்கு முற்றிலுமாக நிற்காதவரை இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்துக்கொண்டே தானிருக்கும். ஆனால் கடைசியாக பலிகடா ஆக்கப்படுவது என்னவோ அதிகாரிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. நீதிமன்றத்தால் முறையான விசாரணை நடைபெற வேண்டுமானால், தற்போது நடவடிக்கை எடுக்கப்படப் போகும் அதிகாரிகளை அச்சுறுத்திய அரசியல்வாதிகளும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்”

இந்தக் கடைகள் மூடப்படுவதால் ஏராளமானவர்கள் வேலை இழப்பார்கள் என்று வணிகர்கள் பிரச்சினையை திசைதிருப்ப முயல்கிறார்கள். ஆனால் இந்த ’அங்காடித் தெரு’ செயல்பட்டுக் கொண்டிருந்தபோது அங்கு பணிபுரிபவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். அங்கு பணிபுரிபவர்களுக்குப் கழிப்பறை வசதிகள் கூடப் போதுமான அளவு செய்து தரப்படவில்லை. ஆனால் இன்று ஆடு நனைகிறதே என ஓநாய்கள் அழுகின்றன.

அரசியல் வாதிகளைக் கொண்டு எதையும் ‘சமாளித்து விடலாம்” என்ற மனப்போக்கு, அரசு அதிகாரிகளின் சுயநலம், அலட்சியம் மற்றும் வணிக முதலாளிகளின் பணவெறி.. இவற்றால்தான் தி.நகரின் வணிக சாம்ராஜ்யம் இன்று சரிவைச் சந்திக்கிறது.

தி.நகருக்கு இணையாக தற்போது வளர்ச்சி பெற்றுவரும் புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் முன்பே வளர்ச்சி அடைந்திருக்கும் பாரிமுனை ஆகிய பகுதிகளிலும் இதே நடவடிக்கைகள் தொடரக்கூடும் என்று தெரிகிறது. இன்றைக்குச் சென்னை நாளை, நாளை மறுநாள் என்று அடுத்தடுத்து தமிழக நகரங்களிலும் இதே இடி நிச்சயம் இறங்கும்.

இது முடிவல்ல, ஆரம்பம்.


எக்ஸ்ட்ரா மேட்டர் :

நம் கடமை என்ன?

எந்த ஒரு நேர்மையான நடவடிக்கையும் தனிமனித செயல்பாடுகளில் இருந்தே துவக்கப்பட வேண்டும். நம்முடைய வீடு, கடை என்று எந்த கட்டிடமாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி என்று உள்ளாட்சி அமைப்புகளிடம் முறையான அனுமதி பெறவேண்டும். விதிமுறைகளை மீறாதபட்சத்தில் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாகவும், அது தொடர்பான விதிமுறைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் நேரடியாகவே சென்று தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். எந்த ஒரு கட்டுமான திட்டமிடலுக்கும் முன்னதாக, உங்கள் உள்ளாட்சி அமைப்பிடம் ஒரு நடை போய் விசாரித்துவிட்டுதான் வந்துவிடுங்களேன். இல்லையேல் எதிர்காலத்தில் இதுபோன்ற சீல்வைப்பு, இடிப்பு நடவடிக்கைகளை நாமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

(நன்றி : புதிய தலைமுறை)

10 நவம்பர், 2011

சாருவும், மாமல்லனும்!

சமகாலத்தில் ஒரு மாதிரியான அவநம்பிக்கைச் சூழலை பல இலக்கிய ஆர்வலர்கள் உணருவதை காண நேர்கிறது. தமிழ் இலக்கியவாதிகள் இலக்கியம் படைப்பதை விட்டு விட்டு ஒருவரையொருவர் இருபத்து நான்கு மணி நேரமும் வசைபாடிக் கொண்டிருப்பதையே தொழிலாக்கிக் கொண்டார்களோ என்றுகூட சில நேரங்களில் எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக ‘இணையம்’ வந்தபிறகு இலக்கியத்துக்கான வடிவமென்பது வெறும் வசைபாடுதலாக, மன வக்கிரங்களுங்கான வடிகாலாக சுருங்கிவிட்டது என்றுகூட சிலர் புலம்ப கேட்டிருக்கிறோம்.

துரோகம், விரோதம், பொறாமை என்று இத்துறை புதர்மண்டிப்போன நிலையில் அவ்வப்போது சில நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் பளிச்சிடுவதுண்டு. விமலாதித்த மாமல்லன் எழுதியிருக்கும் இப்பதிவு, அவ்வாறான ஒளியேற்றி இருள் நீக்குகிறது : தவறியும் போகாதவை!

அவ்வப்போது ஜடாமுனி வளர்த்து, மோனநிலைக்குப் போய் இலக்கியத்துறவு மேற்கொள்ளும் மாமல்லன், பதினைந்து ஆண்டுகள் கழிந்து கடந்த ஆண்டு மீண்டும் இலக்கியத்துக்குள் கிரகப்பிரவேசம் நிகழ்த்தினார். முப்பதாண்டுகளுக்கு முன்பாக சில சிறப்பான சிறுகதைகளை எழுதி பெயர் பெற்றவர் என்பதால், மீண்டும் சிறுகதைகளாக எழுதிக் குவிப்பார் என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது. மாறாக ஆரம்பத்தில் எஸ்.ரா., பிறகு சாரு, கடைசியாக ஜெயமோகன் என்று சமகால இலக்கியவாதிகளை அம்பலப்படுத்துவதாக கூறி வசைகட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவந்தார். நம்மைப் போன்ற இலக்கிய வம்பு ஆர்வலர்களுக்கு நல்ல தீனியும் போட்டுவந்தார். அவ்வப்போது ஏதாவது பழைய எழுபதுகள், எண்பதுகளின் புனைவுகள், மொழிப்பெயர்ப்புகளை ஒளிவருடி பதிவிலேற்றுவார். இப்போது எழுதிவருபவர்களில் யாரையும் அவர் மனந்திறந்து பாராட்டியிருந்தால், அது ஓர் அரிதான நிகழ்வாக மட்டுமே இருக்க முடியும். மாமல்லனோடு நேரிடைப் பழக்கம் நமக்குண்டு. எப்போதும் தன்னை ஓர் இலக்கியப் பேராசானாகவே வரித்துக்கொண்டு, கையில் பிரம்பு வைத்துக்கொண்டு அடுத்த தலைமுறை வாசகர்களை மிரட்டி, இலக்கியப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராகவே அவர்குறித்த மனச்சித்திரம் நமக்குள் பதிந்திருக்கிறது.

அப்படிப்பட்டவர் எழுதியிருக்கும் ‘தவறியும் போகாதவை’யில் தான் எவ்வளவு பெருந்தன்மையும், சக எழுத்தாளனை உயர்த்திப் பிடிக்கும் மனோபாவமும், நினைத்ததை தேடிப்பிடித்தே ஆகவேண்டும் என்கிற குழந்தைத்தன்மையும் வெளிப்படுகிறது?

எண்பதுகளின் தொடக்கத்தில் வந்த சிற்றிதழ்களில் ஒன்று ’படிகள்’. அவ்விதழினில் சார்த்தரின் ‘சுவர்’ சிறுகதையை படித்திருந்ததாக மாமல்லனுக்கு நினைவு. அக்கதையை தூசுதட்டி ஒளிவருடி தனது வலைத்தளத்தில் ஏற்ற ஆசைப்படுகிறார். அது படிகளில்தான் வந்ததா என்பதும் துல்லியமாக அவருக்கு நினைவில்லை.

தனக்குத் தெரிந்த இலக்கியவாதிகளிடமும் , வாசகர்களிடமும் இதுகுறித்து விசாரிக்கிறார். நிறைய ஆட்கள், நீண்ட தேடல். அதுகுறித்த அனுபவத்தை எளிய வார்த்தைகளில், பகட்டின்றி இப்பதிவில் பகிர்கிறார்.

குறிப்பாக சாருநிவேதிதாவிடம் விசாரிக்கும் கட்டம் சுவாரஸ்யமானது. “எனக்கு பெரிய நினைவாற்றல் கிடையாது. ஆனால், ‘சுவர்’ சிறுகதை நிச்சயம் படிகளில் வரவே இல்லை” என்கிறார் சாரு. இந்த கதைத்தேடல் கட்டத்தின் போது, நம்மை மாதிரி அசமஞ்சங்களிடமும் மாமல்லன் விசாரணையை நடத்தினார். “சார்த்தரோட அந்த கதையை தமிழில் யாரும் மொழிபெயர்க்கலேன்னு கூட சாரு சொல்றாம்பா... ஆனா எனக்கு நல்லா படிச்ச நினைவிருக்கு. அதுவும் ‘படிகள்’லே படிச்ச மாதிரிதான் நினைவு” என்றார்.

ஒருவழியாக செயின் மார்க்கெட்டிங் மாதிரி யார், யாரையோ பிடித்து ஆர்.சிவக்குமாரை பிடிக்கிறார். நல்லவேளையாக அவரிடம் ‘படிகள்’ இதழ்கள் சேகரிப்பில் இருக்கிறது. ‘சுவர்’ சிறுகதை படிகளின் பதிமூன்றாவது இதழில் வந்ததையும் மாமல்லனால் உறுதி செய்துக்கொள்ள முடிகிறது. ‘ஜனனி’ என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்த மொத்த பிராசஸிங்கிலேயே சுவாரஸ்யமான விஷயம் ‘ஜனனி’ தான். யார் இந்த ஜனனி என்றுப் பார்த்தோமானால், முன்பு அக்கதை படிகளில் வரவில்லை, தமிழில் வந்தது மாதிரியும் நினைவில்லை என்று மறுத்த சாருநிவேதிதாதான் ஜனனி. ஒரு சுவாரஸ்யமான குறுநாவலுக்கான இந்தக் கருவை, ஒரு சாதாரண வலைப்பதிவாக கருக்கலைப்பு செய்துவிட்டார் மாமல்லன்.

தற்பெருமை மிக்கவர், தன்னுடைய சாதாரண படைப்புகளுக்கு கூட டால் க்ளெய்ம் செய்துக் கொள்பவர் என்றெல்லாம் பலவாறாக விமர்சிக்கப்படும் சாரு, தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பெயரை கூட மறந்திருக்கிறார் அல்லது மறுத்திருக்கிறார். விக்கிப்பீடியாவைக் கூட விட்டுவைக்காமல் தமிழின் பெரிய சிந்தனைவாதியாகவும், இலக்கிய அத்தாரிட்டியாகவும் தன்னைத்தானே எழுதிக் கொள்ளும் விளம்பரமோக எழுத்தாளர்கள் மத்தியில் சாருவுக்குள் இருக்கும் இந்த அரிய பண்பு பிரமிப்பினை ஏற்படுத்துகிறது.

மாமல்லன் நினைத்திருந்தால் இந்த விஷயத்தை கமுக்கமாக அமுக்கியிருக்கலாம். ஆனாலும் தன் சக எழுத்தாளனுக்கான கிரெடிட்டை கொடுத்தாக வேண்டும் என்கிற நேர்மை அவரிடம் இருக்கிறது. தனது வலைப்பதிவில் ஒரு கட்டுரையாக எழுதி அதை சிறப்பாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேன்மக்கள் மேன்மக்களே!

7 நவம்பர், 2011

கமல்ஹாசன் - சில சாதனைகள், சில தகவல்கள்!

• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.

• இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.

• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

• கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.

• கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.

• கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது.

• கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் இங்கிலாந்து மகாரானி எலிஸபெத்-2 அவர்களால் துவக்கப்பட்டது.

• உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசன் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000 ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

• 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி அழைத்தும் அதை துச்சமாக மதித்தவர் கமல்ஹாசன்.

• இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.

• 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்தவர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.

• கமல்ஹாசனுக்கு மற்ற கலையுலக வித்தகர்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் "காதல் இளவரசன்" - ஜெமினி கணேசன், "புரட்சி மன்னன்" - கே. பாலச்சந்தர், "சூப்பர் ஆக்டர்" - பஞ்சு அருணாசலம், "கலைஞானி" - டாக்டர் கலைஞர், "உலக நாயகன்" - கே.எஸ். ரவிக்குமார்.

• The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே (டாடா உட்பட)

• சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

• டாக்டர் ஏ.டி. கோவூர் தேசிய விருது சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகசேவைகளுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India ).

• மதுரையில் திரைப்படத் துவக்க விழா செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. விருமாண்டிப் படத்துக்கான துவக்க விழா மதுரையில் நடைபெற்றது.

• கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

• ஒரே ஆண்டில் 5 சில்வர்ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 - ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)

• கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாள் ஓடியது. மரோசரித்திரா இந்தியில் "ஏக் துஜே கலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாள் ஓடியது.

• அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை கமல்ஹாசனையே சாரும். இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார்.

• கமலுக்கு தனது பிறந்தநாளான நவம்பர் 7ஐ கொண்டாடுவதில் ஒரு சங்கடம் உண்டு. ஏனெனில் இதே தேதியில்தான் அவரது தந்தையார் மறைந்தார்.

• இவரது நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27.

• டைம்ஸ் பத்திரிகை இவர் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது.

• உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார்.

• இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வையில் தான்.

• தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான்.

• ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப்படம் "இந்தியன்"

• கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் தான்.

• ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்து அந்தப் படத்தின் டைட்டிலிலும் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது.

• சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன்.

• கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்த குகைக்கே "குணா குகை" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

• கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் கமல்.

• தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்.

3 நவம்பர், 2011

நாம் இளிச்சவாயர்

‘இலை மலர்ந்தால், ஈழம் மலரும்’ என்றார். இலை மலர்ந்து ஆறு மாதமாகிறது. இப்போது என்ன மலர்ந்திருக்கிறது?


ஆகவே தாய்மாரே!

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சமையல் போட்டி, கொழுகொழு குழந்தைகள் போட்டி, கண்ணாமூச்சி, அய்ஸ் பாய்ஸ், கில்லி, கோலி என்று எல்லாப் போட்டிகளையும் நடத்தி தமிழின விடியலுக்கு ‘நாம் இளிச்சவாயர்’ இயக்கம் பாடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

அம்மா நூலகம்

அண்ணா நூலகம் இடமாற்றம் பெறுவது குறித்து நிறைய பேர் ஆச்சரியமும், அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறார்கள் என்பதைக் காண்பதுதான் நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை அம்மா மாறிவிட்டார், ஈழத்தாயாக நிலைபெற்றுவிட்டார் என்று கருதி, கடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்தவர்கள் வேண்டுமானால் இது குறித்து கொந்தளிக்கலாம், கோபப்படலாம். ‘அண்ணா திமுக’ என்கிற பெயரையே கூட ‘அம்மா திமுக’ என்று புரட்சித்தலைவி மாற்றினாலும் கூட அதுகுறித்து எந்த வியப்பும் நமக்கு இருக்கப்போவதில்லை. ‘அண்ணா’வை விட ‘அம்மா’தானே பெருசு? அண்ணாவா கடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றார்? நடந்து முடிந்த திருச்சி மேற்கு இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அம்மாவால்தானே அதிமுக வெல்ல முடிந்தது? எனவே, இனிமேல் எல்லாமே இப்படித்தான். அடுத்த ஐந்து ஆண்டு காலமும் அதிர்ச்சி, வேதனை, வியப்பு உள்ளிட்ட எல்லா கருமாந்திரங்களும் தமிழர்களுக்கு பழகிப்போகும்.

வாடிக்கைதானே இது?

இது ஒரு பாட்டிக்கதை.

கட்டிக் கொடுத்தப் பெண்ணைப் பார்க்க பெற்றோர் ஊருக்கு வந்திருந்தார்களாம். பெற்றோர் எதிரில் மருமகளை மரியாதையாக நடத்த மாமியார்க்காரி ரொம்பவும் பிரயத்தனப்பட்டாளாம். வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய நேரம் வந்தது. மாமியார்க்காரி மருகளிடம் ரொம்ப தன்மையாக சொன்னாளாம்.

“போயி விளக்கேத்திட்டு வாம்மா”

மருமகள் தயங்கி, தயங்கி நின்றிருக்கிறாள்.

“விளக்கு ஏத்திட்டு வாயேம்மா. இருட்டுது இல்லே”

மீண்டும் தயங்கி மருமகள் சொல்கிறாள். “கொடுக்கிறதை கொடுங்க அத்தே. வெளக்கு ஏத்துறேன்”

“அதெல்லாம் இன்னிக்கு வேணாம். நீயா போயி வெளக்கு ஏத்திட்டு வா”

“கொடுக்குறதை கொடுத்தாதான் வெளக்கு ஏத்துவேன்”

பார்த்துக்கொண்டிருந்த பெற்றோருக்கு கடுப்பு. மாமியார்க்காரியிடம் கோபமாக சொன்னார்கள். “ஏங்க.. எங்க பொண்ணுக்குதான் தினமும் ஏதோ கொடுப்பீங்களாமே? அதைக் கொடுத்துடுங்க. அவ பாட்டுக்குப் போயி விளக்கு ஏத்தப்போறா...”

மாமியார்க்காரிக்கும் அதுதான் சரியென்று பட்டது. ஓரமாக வைத்திருந்த விளக்குமாறை எடுத்துவந்து, மருமகளை நாலு விளாசு விளாசினாள். மருமகளும் அழுதுக்கொண்டே போய் விளக்கேற்றினாள்.

தினமும் மாமியார்க்காரி மருமகளுக்கு கொடுப்பது இதுதான்.

மசோகிஸ்டுகளாக மாறிப்போன தமிழ் வாக்காளர்கள் போன சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து, விளக்கேற்றி இப்போது விளக்குமாறு அடிதான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோல அடி வாங்கி, அடி வாங்கி பழகிவிட்டது. அடி வாங்காமல் இருந்தால்தான் ஏதோ இழந்தது மாதிரி இருக்கிறது.

கதையை விடுங்கள். விஷயத்துக்கு வருவோம்.

1992ல் கரசேவைக்கு செங்கல் கொடுத்தனுப்பிய அதே ஜெயலலிதாதான் கொஞ்சமும் மாறாமல் பத்தொன்பது வருடங்கள் கழித்தும் இருக்கிறார். அவரது எந்தவொரு செயல்பாடும், முடிவும் ஆரிய/ஆர்.எஸ்.எஸ்/பார்ப்பனீய கருத்தியல்களின் அடிப்படையிலேயே அமைகிறது. முதலாளித்துவத்துக்கும் இது ஒத்துப்போகும் விஷயங்கள்தான் என்பதால் கேட்க நாதியில்லாமல் போய்விட்டது.

பின்னே? புற்றீசல்களாக ஆயிரக் கணக்கில் வருடாவருடம் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும், சென்னைக்கு இடம்பெயர்ந்து என்ஜினியரிங் / மருத்துவம் / ஆராய்ச்சி என்று வந்துவிட்டால், அவர்கள் ஏற்கனவே செய்துக்கொண்டிருந்த வேலைகளை யார்தான் செய்வது? இவர்களின் கல்வி தொடர்பான ஆதாரங்களில் அடி கொடுத்தால்தானே ஏற்கனவே நிலவும் அமைப்பை அப்படியே தொடரமுடியும். முன்பு சமச்சீர்க் கல்வி. இப்போது அண்ணா நூலகம்.

வசதி படைத்த உயர்சாதியினருக்கு நூலகம் பெரிய ஆதாரமில்லை. ஐயாயிரமோ, பத்தாயிரமோ, லட்சமோ செலவு செய்து அவர்களுக்கு வேண்டிய நூல்களை அவர்களே வாங்கிவிட முடியும். அண்ணா நூலகம் போன்ற அமைப்பின் சேவை அவர்களுக்கு தேவையில்லை. பாதிப்புக்குள்ளாவது முதல் தலைமுறையாக படிக்க வரும் கீழ்நடுத்தர, கீழ்த்தட்டு இளைஞர்கள்தாம்.

தமிழ்/தமிழர் தொடர்பான ஜெயலலிதாவின் அசூயைக்கு எவ்வளவோ உதாரணங்கள் உண்டு. புதிய புதிய உதாரணங்களையும் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஏற்படுத்திக் கொண்டேதான் போகிறார். புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்த அவருக்கு இருக்கும் மனத்தடைகூட ‘அது திராவிட கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டது’ என்று பெரியதாக, பெருமையாக கடந்த ஆட்சியாளர்களால் சொல்லிக் கொள்ளப்பட்டதும் கூட காரணமாக இருக்கலாம்.

புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம் போன்றவை வெளிப்படையாக தெரியும் சாட்சிகள். ஜெயலலிதாவின் தமிழ் விரோதப் போக்குக்கு எடுத்துக்காட்டாக வெளியே தெரியாத எவ்வளவோ நடவடிக்கைகள் இருந்துவருகின்றன. கடந்தாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி பொறியியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதே? அதன் கதி என்ன? இவ்வருடத்தில் இருந்து பழையமுறையில் ஆங்கில முறை போதிப்புதான்.

அண்ணா நூலக விஷயத்தில் எதிர்ப்பவர்களில் 99% பேரும் நூல்களின் கதி, கட்டிடத்தின் சிறப்பு, லொட்டு, லொசுக்கு என்று ஏதேதோ காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள். இவ்விவகாரத்திலும் சரியாக அடையாளம் கண்டுணர்ந்து, எதிர்க்கப்பட வேண்டியது ஜெயலலிதாவின் பார்ப்பனக் கண்ணோட்டம்தான். அவருடைய இப்போக்கு தொடரும் பட்சத்தில் அண்ணா நூலகம் போன்ற ஏராளமான பன்முக மொழி/இனம் சார்ந்த பிரச்சினைகளை, அடுத்த ஐந்தாண்டுகளும் நாம் சந்தித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறோம். சிங்களம் பழம்பெரும் தமிழ் நூலகத்தை எரித்தது. ஆரியம் நவீனத்தமிழ் நூலகத்தை முடக்கி வைக்கிறது, அவ்வளவுதான் வித்தியாசம். தமிழ் விரோதத்தில் இரண்டுக்கும் மத்தியில் எந்த பெரிய வேறுபாடும் இல்லை. ஒருவேளை ராணுவம் அம்மாவின் கட்டுப்பாட்டில் இருக்குமேயானால், சிறப்புப் பெற்ற அக்கட்டிடத்தையே குண்டுவீசி தகர்த்திருக்கவும் கூடும்.

இணையத்தள நண்பர்கள் பலரும் ஆன்லைன் பெட்டிஷன்களை உருவாக்கி கையெழுத்திடக் கூறி கேட்டு வருகிறார்கள். ஏற்கனவே எழுத்தாளர்கள் இம்மாதிரியான ஒரு இயக்கத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். சில தோழர்கள் கொஞ்சம் முன்னே போய் முதல்வர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல்/ஃபேக்ஸ் அனுப்பி எதிர்ப்பைத் தெரிவிக்கலாம் என்றும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 2009ல் தொடங்கி ஈழம் தொடர்பாக ஏராளமான ஆன்லைன் பெட்டிஷன்களில் நாம் கையெழுத்திட்டிருக்கிறோம். அவற்றின் கதி என்னவென்று புரியாத நிலையில், புதியதாக தொடங்கப்படும் ஆன்லைன் பெட்டிஷன்களில் ’என்னத்தை கையெழுத்திட்டு, என்னத்தைச் செய்யப்போகிறோம்’ என்று நினைக்கிறோம். ‘எதிர்ப்புகள்’ எல்லாம் அம்மாவுக்கு சும்மா. அசுரபலத்தை அளித்துவிட்ட தமிழக வாக்காளர்களைதான் இதற்காக நோக வேண்டியிருக்கிறது. நீதிமன்ற படியேறினாலும், இவ்விஷயத்தில் நீதி கிடைக்குமென தோன்றவில்லை. அரசின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவது தொடர்பான முட்டல், மோதல் ஏற்கனவே நிகழ்ந்துக் கொண்டிருப்பதால், இவ்வாறு எண்ணத் தோன்றுகிறது. எனவே அன்ணா நூலகம் மறைந்து, குறைந்தபட்சம் நுங்கம் பாக்கத்தில் அம்மா நூலகமாவது அமைந்தால் போதும் என்றே கருதுகிறோம்.

திரும்ப, திரும்ப இதையெல்லாம் அம்பலப்படுத்திக் காட்டும்போது பார்ப்பன அன்பர்கள் சிலர் நம்மை ‘சாதி வெறியர்கள்’ என்று ஒரு சொல் விமர்சனத்தில் கடந்துச் செல்கிறார்கள். சாதியக் கண்ணோட்டத்தையும், சாதியையும் எதிர்ப்பவர்கள் எப்படி சாதிவெறியர்களாகவும், என் சாதியை மட்டும் எதுவும் சொல்லிவிடாதே என்று ‘மனு’ தர்மத்தைக் காப்பவர்கள் ‘நல்லவர்கள்’ ஆகவும் ஆகிறார்கள் என்கிற தர்க்கம்தான் நமக்குப் புரியவில்லை. பார்ப்பனரல்லாத நண்பர்களும் கூட இதற்காக நம்மை நோகும்போது, இப்படியெல்லாம் முத்திரை வாங்கி இந்த கருமங்களை எழுதித்தான் ஆகவேண்டுமா என்று சில நேரங்களில் சலிப்பு கூட தோன்றுகிறது.

அரசியலுக்குள் இரண்டறக் கலந்திருக்கும் பார்ப்பனீயத்தையும் வேறுபடுத்தி கண்டறிந்துணர, பார்ப்பனச் சாதி என்று சொல்லிக் கொள்ளப்படும் சாதியில் பிறந்த நண்பர்தான் பாடமெடுத்து நமக்கு சொல்லிக் கொடுக்கிறார். அவர் அந்தச் சாதியில் பிறந்துவிட்டார் என்கிற காரணத்துக்காக, அவரை பார்ப்பனீயர் என்று எதிர்த்துக் கொண்டிருக்கவா செய்கிறோம்? ‘தன்னிறைவு’ பெற்றுவிட்ட தலித்துக்குள்ளும் பார்ப்பனீயம் நுழைகிறது என்பதுதான் யதார்த்தம். ‘கடவுள்’ மாதிரி எல்லோருக்குள்ளும் கலந்துவிட்ட பார்ப்பனீயத்தை இனங்கண்டு, விலக்கி வைப்பதில்தான் சவால் அடங்கியிருக்கிறது. வாழ்நாள் முழுக்க இந்த சவாலை சந்தித்து, எதிர்த்துப் போராடிக் கொண்டேயிருப்பதுதான் குறைந்தபட்ச மனிதநேய வாழ்க்கைக்கு அடிகோலும்.