23 ஜூலை, 2012

The darknight rises


ஷங்கர் தன்னுடைய சில சூப்பர்ஹிட் திரைப்படங்களுக்கு எதையெல்லாம் கச்சாவாக தேர்ந்தெடுத்திடுத்திருக்கிறார்?

மண்டல் கமிஷன் பரிந்துரை செயல்பாடுகளுக்கு வந்த நிலையில் ‘ஜெண்டில்மேன்’. மத்தியில் நரசிம்மராவ், மாநிலத்தில் ஜெயலலிதா என்று ஊழல் மலிந்த சூழலில் ‘இந்தியன்’. இந்தியாவெங்கும் தங்களை ஆளும் கட்சிகள் மீது மக்களுக்கு அதிருப்தி பெருகிக்கொண்டே போன வேளையில் ‘முதல்வன்’. பாஜக ஆட்சி ஊழல் தடுப்பில் ஒட்டுமொத்தமாக செயலிழந்து நின்ற வேளையில் ‘அந்நியன்’. இப்படியாக ஷங்கரை இம்மாதிரியான சப்ஜெக்ட்களை திரும்பத் திரும்ப (நமக்கு அந்த சப்ஜெக்ட் உவப்பானதா இல்லையா என்பது வேறு விஷயம்) தேர்ந்தெடுக்க அரசியல்-சமூகச் சூழல் நிர்ப்பந்தப்படுத்துகிறது. திரைப்படமாக்க எடுத்துக் கொள்ளும் பிரச்சினைகளில் ஷங்கர் தனிப்பட்ட முறையில் எந்தப் பக்கம் என்பது தெரியாது. ஆனால் பொதுமக்களின் மனப்போக்கை ஒட்டியவகையில், அந்த மனப்போக்கை ஆதரிப்பதோடு மேலும் தூண்டும் வகையிலாக தன்னுடைய திரைப்படங்களை எடுக்கிறார். வெற்றிக்காக அவர் கண்டுபிடித்து வைத்திருக்கும் சுலபமான சூத்திரம் இது.

டார்க்நைட் ரைசஸ் திரைப்படத்தில் நோலனும் இதே ஃபார்முலாவை கையாண்டிருப்பதாக தெரிகிறது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் காமிக்ஸ் என்பது கலாச்சாரமாக உருவெடுத்த சமாச்சாரம். எந்த ஒரு ஹாலிவுட் இயக்குனருக்குமே ஏதேனும் புகழ்பெற்ற காமிக்ஸை படமாக எடுத்துத் தீரவேண்டும், ஒரு சூப்பர்ஹீரோவை திரையில் பறக்கவைத்து க்ளாப்ஸ் அள்ளவேண்டும் என்கிற ஆசை இல்லாமல் இருக்காது. தெரிந்தோ, தெரியாமலேயோ நம்மூர் பார்த்திபனைப் போல வித்தியாச விரும்பியாக பெயரெடுத்துவிட்ட நோலனுக்கும் இதே ஆசை இருந்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். ஹாலிவுட்டில் யாரும் பெரியதாக சாதித்துவிடாத ‘பேட்மேன்’ பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டார். நோலன் என்றாலே நான் லீனியர் மங்காத்தா என்று ரசிகர்கள் அவர்களாகவே முடிவுகட்டிக் கொள்ள, தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள தனக்கு ஒரு சூப்பர்ஹீரோ தேவை என்று அவர் நினைத்திருக்கலாம்.

பேட்மேனை ரீபூட்டிய பேட்மேன் பிகின்ஸ், ரசிகர்களை கொண்டாட்டத்துக்கு தள்ளிய டார்க்நட்டுக்குப் பிறகு இப்போது டார்க்நைட் ரைசஸ். படத்துக்கு ‘டார்க்நைட் ரைசஸ்’ என்று பெயரிட்டு, ‘தி லெஜெண்ட் எண்ட்ஸ்’ என்று துணைத்தலைப்பில் நோலன் ஆடியிருக்கும் குறும்பு ஆட்டம் அவருக்கே உரியது. இவரது படத்தில் காட்சிகள்தான் நான்லீனியராக இருக்கும் என்றால் ட்ரையாலஜியில் எடுத்திருக்கும் பேட்மேன் படங்களையே நான்லீனியராகதான் எடுத்திருக்கிறார். முதல் பாகத்துக்குப் பிறகு வரவேண்டிய படம் மூன்றாம் பாகமாக வந்திருக்கிறது. பேட்மேனுக்கு க்ராண்ட் ஓபனிங் தரவேண்டும் என்று நினைத்திருந்தால், டார்க்நைட்டைதான் நோலன் முதலாவதாக எடுத்திருக்க வேண்டும்.

பொதுவாக ஹாலிவுட் படங்களில் முதல் பாகம் சூப்பர் டூப்பராக இருக்கும். இரண்டாம் பாகம் நன்றாக இருக்கும். மூன்றாம் பாகம் சுமாராகவோ, மொக்கையாகவோ இருக்கும். பேட்மேனைப் பொறுத்தவரை எனக்கு மூன்றாவது பாகமும் முதல் இரண்டு பாகங்களைப் போலவே பிரமாதமாக அமைந்துவிட்டதாக தோன்றுகிறது. ஒருவேளை முதல் படத்தை பார்க்காதவர்கள் நேரடியாக மூன்றாவது படத்தை பார்த்தால் புரியாமல் போகலாம். ஆனால் மொக்கையாக தோன்றுவதற்கு எந்த சாத்தியமுமில்லை. லீக் ஆஃப் ஷேடோஸ், கமிஷனர், டபுள் ஃபேஸ் என்று ஓரளவாவது பின்னணி தெரிந்திருக்க வேண்டியது இப்படத்தை பார்ப்பதற்கு அவசியம்.

டார்க்நைட் ரைசஸ் இப்போதைய அமெரிக்க அரசியலை மறைமுகமாக முன்நிறுத்தி பேசக்கூடியதாக இருக்கிறது. புரட்சி, பொதுவுடைமை மாதிரியான சொற்களின் மீது அமெரிக்கர்களுக்கு இருந்த வெறுப்பு மறைந்து, இப்போது கேலியும் கிண்டலும் பிறந்திருக்கிறது. அதைதான் நோலன் இப்படத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார். புரட்சி குறித்த மிக மோசமான நையாண்டியை டார்க்நைட் ரைசஸ் உருவாக்குகிறது. ‘வால்ஸ்ட்ரீட் முற்றுகை’ மாதிரியான அடித்தட்டு அமெரிக்கர்களின் உணர்வை முற்றிலுமாக நிராகரித்து, சராசரி நடுத்தட்டு அமெரிக்கனின் இன்றைய மனவோட்டத்தை வெளிப்படுத்துகிறார் நோலன் (இதே மாதிரி நம்மூர் ஷங்கரும் நடுத்தரஜோதியில் ஐக்கியமாகக் கூடியவர்தான் என்பதாலேயே இப்பதிவின் ஆரம்பத்தில் அவர் வருகிறார்).

இடதுசாரி சித்தாத்தங்கள் மீது மரியாதை வைத்திருப்பவன் என்கிற முறையில் ‘டார்க்நைட் ரைசஸ்’ எனக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். புரட்சி, பொதுவுடைமை குறித்த மூர்க்கமான கிண்டல். ஆனால் நோலனின் திரைப்படம், தான் பேசும் அரசியலுக்கு எதிர்நிலையில் இருப்பவர்களையும் கூட ரசிக்கவைக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

சரி. புரட்சி வேண்டாம். வேறு என்ன புண்ணாக்கைதான் ஏற்றுக்கொள்ள சொல்கிறார் என்று பார்த்தோமானால், கிட்டத்தட்ட நம்மூர் அப்துல்கலாம் வகையறாக்கள் வழங்குவது மாதிரியான மொக்கைத் தீர்வுகளைதான் நோலனும் முன்வைக்கிறார். அமெரிக்க அன்னாஹசாரேவான ஒபாமாவின் ‘யெஸ் வீ கேன்’ என்கிற, இதுவரையில் உலகில் யாருக்குமே தோன்றாத தாரகமந்திரத்தை வலியுறுத்துகிறார் (நவம்பரில் அதிபர் தேர்தல் என்பதை மனதில் கொள்க). சூப்பர்ஹீரோவாக இருந்தாலும் முதுகெலும்பு முறிக்கப்படும். ஆனால் அச்சமின்றி போராடினால் வெற்றி நிச்சயம் என்கிறார்.

இருபதாம் நூற்றாண்டு சூப்பர் ஹீரோக்களை கொண்டாடிய நூற்றாண்டு. அப்போது அமெரிக்காவுக்கு எதிரி இருந்தான். தங்களைக் காத்துக்கொள்ள ஒரு ரட்சகன் சூப்பர்ஹீரோவாக வருவான் என்கிற அமெரிக்கர்களின் மூடநம்பிக்கையை முதலீடாக்கி, சூப்பர்ஹீரோக்கள் காமிக்ஸ்களிலும், நாவல்களிலும், திரைப்படங்களிலும் கல்லா கட்டினார்கள். மாறாக இந்த நூற்றாண்டு ஒவ்வொருவனும்  தானே சூப்பர்ஹீரோ ஆகிவிடும் வாய்ப்பினை அமெரிக்கர்களுக்கு வழங்குகிறது. ஒவ்வொருவனும் தன்னை ஜீனியஸ் என்று கருதிக்கொள்ளும் நிலையில், அவன் காதில் போய் சூப்பர் ஹீரோ பறப்பான், அவனை யாருமே வீழ்த்த முடியாது என்று பூச்சுற்ற முடியவில்லை. எனவேதான் பேட்மேனை நல்ல உள்ளம் கொண்ட சராசரி மனிதன் என்று நிறுவ நோலன் இப்படத்தில் மெனக்கெட்டிருக்கிறார். கடைசியாக பேட்மேனே கூட “எவனொருவன் மற்றவர்களுக்கு உணவளிக்கிறானோ, உடையளிக்கிறானோ அவனெல்லாம் ஹீரோதான்” என்று எம்.ஜி.ஆர் படகாலத்து தத்துவம் பேசிவிட்டு படத்தை முடிக்கிறார். தி லெஜெண்ட் ரியல்லி எண்ட்ஸ்.

இவ்வாறாக அமெரிக்காவை மட்டுமே மனதில் நிறுத்தி, அமெரிக்கர்களின் மனவோட்டத்தை பேசும் திரைப்படம் உலகமெங்கும் எப்படி சக்கைப்போடு போடுகிறது என்கிற கேள்வி எழுகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிக் கொண்டிருக்கிறது என்று பேச்சுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படி நிஜமாகவே சுருங்கும்பட்சத்தில் அந்த கிராமத்தின் பெயர் அமெரிக்காவாகதான் இருக்கக்கூடும். இதுதான் யதார்த்தம். நாம் கம்யூனிஸமோ, நாசிஸமோ, பாஸிசமோ, எந்த கருமத்தையோ பேசுபவர்களாக இருந்தாலும் மனதளவில் நம்மையறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கர்களாக மாறிக்கொண்டிருக்கிறோம்.

திரைக்கதையில் நிறைய க்ளிஷேக்கள் அடங்கிய மசாலாப்படம்தான் என்றாலும், அதையும் கலையாக உருமாற்றும் திறன் படைத்தவர் கிறிஸ்டோபர் நோலன் என்பதற்கு இப்படமும் ஓர் உதாரணமாக அமைகிறது.

17 ஜூலை, 2012

வெற்றி : எட்டிவிடும் உயரம்தான்!


“மற்றவர்கள் என்னை இளக்காரமாக மதிப்பிட்ட தருணங்கள்தான், என்னை நானே உலகத்துக்கு நிரூபித்துக்கொள்ள உதவியது” டாக்டர் சூர்யா பாலி, எம்.பி.பி.எஸ்., பைரலி காவோன் கிராமம், ஜான்பூர், உத்தரப் பிரதேசம்.
ஹோலி, தீபாவளி மாதிரி பண்டிகைகள் வந்தாலே சிறுவன் சூர்யாவுக்கு குஷி. நல்ல சாப்பாடு சாப்பிடலாம். கையில் தட்டு ஏந்திக் கொண்டு கிராமத்திலிருக்கும் பண்ணை வீடுகளுக்கு செல்வான். சில வீடுகளில் இனிப்போடு நல்ல சாப்பாடு கிடைக்கும். சில வீடுகளில் எரிச்சலோடு துரத்தி அடிப்பார்கள். கேலி, கிண்டல் எதுவாக இருந்தாலும் சூர்யாவை பாதித்ததில்லை. பழங்குடி இனத்தில் பிறந்து, பண்ணையில் அடிமையாக வேலை செய்பவருக்கு மகனான தான் இதற்கெல்லாம் சங்கோஜப்படலாமா? சாப்பாடுதான் முக்கியம்.
சிறுவயதில் சூர்யா பச்சை மண். தன்னுடைய வர்க்கம், சாதி, பிழைப்பு எல்லாமே இறைவனால் விதிக்கப்பட்ட இயல்பான விஷயங்கள் என்று வாழ்ந்தான். ஆனால் படிக்காதவராக இருந்தாலும், ஓரளவு விவரம் தெரிந்த அவனுடைய அப்பாவுக்கு அப்படியில்லை. அடிமை சேவகத்தை வெறுத்தார். பழங்குடி இனத்தில் பிறந்த ஒரே பாவத்துக்காக தன்னுடைய பரம்பரையே அடிமை வாழ்க்கை வாழும் அவலத்தை எண்ணி தினம் தினம் கண்ணீர் விட்டார். தன்னைத்தானே நொந்துக்கொண்டு கழிவிரக்கத்தோடு எத்தனைநாளைதான் கழிக்க முடியும்? ஒரு நாள் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிவிட்டார். மனைவி, குழந்தைகள், பிறந்து வாழ்ந்த கிராமம். எதுவுமே அவருக்கு பொருட்டாகத் தெரியவில்லை. யாருமற்ற தனிமைதான் தன்னுடைய இழிவைப் போக்குமென சித்தார்த்தனைப் போல கிளம்பிவிட்டார்.
தனிமை வெறுத்து மீண்டும் அவர் தன் குடும்பத்தோடு இணைய பத்து ஆண்டுகளாகியது. இடைப்பட்ட காலத்தில் சூர்யாவின் தாய் மீது குடும்பப்பாரம் விழுந்தது. மேல்சாதியினர் வீடுகளில் வீட்டு வேலை பார்த்தார். விசேஷங்களில் சமையல் வேலை. அக்கம் பக்கத்து வீடுகளுக்கு கிணற்றில் இருந்து நீர் இறைத்துக் கொடுப்பது மாதிரி துண்டு துக்கடா வேலைகள். அதில் வந்த சொற்ப வருமானத்தில் குழந்தைகளுக்கு கால்வயிற்று கஞ்சி.
சூர்யாவுக்கு குடும்பச்சூழல் புரிந்தபோது அவன் கிராமத்திலிருந்த ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். கல்வி இலவசம்தான் என்றாலும், பாடப்புத்தகங்கள் வாங்க கொஞ்சம் காசு வேண்டுமல்லவா? காட்டுக்குச் சென்று பேரிக்காய் உள்ளிட்ட பழங்களைப் பறிப்பான். அருகிலிருக்கும் நகரங்களுக்கு சென்று காசுக்கு விற்பான். அதிர்ஷ்டவசமாக சில வருடங்களில் புத்தகத்துக்கு பழங்களை பண்டமாற்று செய்யும் வாய்ப்பு கூட அவனுக்கு கிடைத்தது.
ஏழைவீட்டுக் குழந்தைகள் என்றாலே சிலருக்கு இளக்காரம்தான். சூர்யாவின் ஆசிரியர்கள் சிலர் அவனைக் கேட்டார்கள். “உன் அம்மா, அப்பாவில் தொடங்கி பரம்பரையே பண்ணைக்கு அடிமைச் சேவகம் செய்து வாழ்ந்தவர்கள்தான். நீயும் அதைத்தான் செய்யப்போகிறாய். அப்படியிருக்கையில் இவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன கிழிக்கப் போகிறாய்?”
சூர்யாவிடம் பதில் இல்லை. எனினும் கல்வி தன்னுடைய, தன் குடும்பத்தின் நிலையை மாற்றும் என்கிற எண்ணம் மட்டும் அவனுக்குள் வலுவாகப் பதிய ஆரம்பித்தது. நெஞ்சுக்குள் எரிந்துக்கொண்டிருந்த தீ படிக்க, படிக்கத்தான் அடங்கியது. ஒரு பழங்குடியின மாணவன் மற்ற மாணவர்களைவிட நன்றாகப் படிப்பதை அந்தப் பள்ளியின் உரிமையாளரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பண்டிட்ஜி எனப்படும் அவர் சாதி, மத அடிப்படையில் வாழ்ந்து வந்தவர். படிக்க விடாமல் பல தடைகளை ஏற்படுத்த, சூர்யா பள்ளி மாறினான்.
சார்சி எனும் ஊரில் இருந்த நடுநிலைப் பள்ளியில் சேர்ந்தான். அவனுடைய கிராமத்திலிருந்து பதினோரு கிலோ மீட்டர் தூரம். செருப்பில்லை. வெறுங்காலில் அரக்கப் பரக்க அவன் பள்ளிக்கு ஓடுவதைப் பார்த்த கிராமம் சிரித்தது. “பண்ணை வேலை பார்க்குறதுக்கு பட்டணத்துப் பள்ளியில் போய் படிக்கிறானே?”
மழைக்காலங்கள்தான் பிரச்னை. பள்ளிக்குச் செல்ல முடியாது. இரண்டே இரண்டு செட் சீருடைகள்தான் அவனிடமிருந்தது. நனைந்த சீருடைகள் காயாமல் எப்படி பள்ளிக்குப் போவது?
ட்யூஷன் மற்றும் புத்தகச் செலவுகளுக்கு இப்போது சூர்யாவுக்கு வேறு வேலை கிடைத்தது. பள்ளி முடிந்ததும், அருகிலிருந்த சைக்கிள் கடையில் வேலைக்கு சேர்ந்தான். பஞ்சர் ஒட்டுவதில் தொடங்கி அத்தொழிலில் கொஞ்சம் கொஞ்சமாக நிபுணத்துவம் பெற்றான். வந்த வருமானம் கல்விச் செலவுக்கும், ஓரளவு குடும்பச் செலவுக்கும் உதவியது.
எல்லா சிரமங்களையும் கடந்து, எட்டாம் வகுப்பில் சூர்யா முதல் ரேங்க் வாங்கியபோது பள்ளியே ஆச்சரியப்பட்டது. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி. அவனுடைய பரம்பரையிலேயே பத்தாம் வகுப்பை கடந்த முதல் ஆள் அவன்தான். இப்போது சூர்யாவுக்கு தன்னுடைய எதிர்காலம் குறித்த ஒரு லட்சியம் தோன்றியது. எப்பாடு பட்டாவது டாக்டர் ஆகிவிட வேண்டும். தனக்கு ஏழு வயது இருக்கும்போது, தன்னுடைய தம்பி மருத்துவவசதி இல்லாமல் மரணித்தது சூர்யாவின் ஆழ்மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது இதற்கு ஒரு காரணம். நிரந்தர நோயாளியாகி விட்ட அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம், மருத்துவராகி அவரை நல்லவிதமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மற்றொரு காரணம்.
பிரச்சினைகளுக்கு இடையில் பண்ணிரெண்டாம் வகுப்பையும், வழக்கம்போல நல்ல மதிப்பெண்களோடு கடந்தார் சூர்யா. மருத்துவம் சேருவதற்கு தேவைப்பட்ட பணத்தை புரட்ட முனைந்தார். தட்டினால் திறக்குமென அவர் நம்பிய எல்லாக் கதவுகளும் பலமாக இழுத்து பூட்டப்பட்டிருந்தன. பதினேழு வயது சூர்யாவுக்கு வாழ்க்கை வெறுத்தது. ஏற்கனவே வாழ்க்கை வெறுத்து எப்படி அவருடைய அப்பா ஊரைவிட்டுச் சென்றாரோ, அதுபோலவே யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல், எல்லாவற்றையும் துறந்து எங்கோ சென்றார் சூர்யா.
ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தவருக்கு திடீரென்று குடும்ப நினைவு வந்தது. தன்னுடைய அண்ணனுக்கு தொலைபேசினார். “உன் கல்விக்காக பணம் புரட்டி வைத்திருக்கிறேன். உடனே ஊருக்கு வா” என்றார் அண்ணன். அதை நம்பி ஊருக்கு வந்தவருக்கு அதிர்ச்சி. அண்ணன் வைத்திருந்த பணமோ வெறும் மூவாயிரம்தான். மெடிக்கல் தேர்வுக்கு பயிற்சி தரும் கோச்சிங் சென்டர் கட்டணத்துக்கே இது சரியாகப் போய்விடும். டாக்டர் கனவை தள்ளிப் போட்டுவிட்டு யதார்த்தத்துக்கு திரும்பினார் சூர்யா. பனாரஸ் ஹிந்து கல்லூரியில் பி.எஸ்.சி வகுப்பில் சேர்ந்தார்.
அற்புதங்கள் நம்ப முடியாதவைதான். ஆனாலும் அவை அவ்வப்போது நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. சூர்யா சற்றும் எதிர்பாராத அற்புதம் ஒன்று அவரது கல்லூரி விடுதி வார்டன் மூலமாக நடந்தது. இவரது கதையை, கனவை கேட்டு உருகிவிட்ட அந்த நல்ல மனம் கொண்ட வார்டன், சூர்யாவை டாக்டராக்கி அழகு பார்ப்பது என்று முடிவெடுத்து விட்டார். இலவச தங்கும் வசதி, மாதாமாதம் செலவுக்கு ரூ. 500, அட்மிஷனுக்கு பொருளாதார ஏற்பாடு என்று அவர் தடாலடியாக ஏற்பாடு செய்தார். அலகாபாத் மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் கதவுகள் சூர்யாவுக்காக அகலமாக திறந்தது.
மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் வசதியான குடும்பச் சூழலில் இருந்து வருகிறவர்கள். சூர்யாவைக் கண்டு அவர்களுக்கு ஆரம்பத்தில் கோபம் வந்தது. பிற்பாடு கேலி பிறந்தது. சூர்யாவின் நடை, உடை பாவனைகளை எள்ளி நகையாடத் தொடங்கினார்கள். பொருளாதாரப் பின்புலம் இல்லாததால் மற்றவர்களை மாதிரி நாம் இருக்க முடியவில்லை என்கிற யதார்த்தம் புரிந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் மற்றவர்கள் தரும் மனவுளைச்சலை அவரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. படித்துக்கொண்டே பணம் சம்பாதிக்க வேண்டும். ஏற்கனவே பள்ளி படிக்கும்போது அவர் மேற்கொண்ட வழிமுறைதான்.
சூர்யா ஓரளவுக்கு நன்றாக எழுதுவார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று அவர் அவ்வப்போது எழுதினாலும், இத்திறமையை இதுவரை யாரிடமும் வெளிக்காட்டியதில்லை. தனக்குத் தெரிந்த எழுத்தை பத்திரிகைகளுக்கு தந்து சம்பாதிக்க முடியுமா என்று முயற்சிக்கத் தொடங்கினார். ஆல் இந்தியா ரேடியோவில் நிகழ்ச்சிகளை வழங்கும் வாய்ப்பு இதன் மூலம் அவருக்கு கிடைத்தது.
வேலை, படிப்பு நேரம் தவிர்த்து மீத நேரத்தை கல்லூரி நூலகத்தில் கழிக்கத் தொடங்கினார். தனிமை அவருக்கு வரம். கேலிகளிலிருந்து காக்கும் கேடயம்.
பெரும் போராட்டத்துக்குப் பிறகு ஒரு வழியாக எம்.பி.பி.எஸ். முடித்து டாக்டர் சூர்யா ஆனார். கனவினை நனவாக்கிப் பார்க்கும் பாக்கியம் அனைவருக்கும் கிட்டிவிடுவதில்லை. சூர்யாவுக்கு கிடைத்தது. அடுத்து எம்.டி. படிக்க அதே கல்லூரியில் உதவித்தொகையுடன் கூடிய வாய்ப்பு கிடைத்தது. “என் வாழ்க்கையிலேயே பதினைந்தாயிரம் ரூபாயை ஒட்டுமொத்தமாக இப்போதுதான் பார்த்திருக்கிறேன்” என்றார் சூர்யா.
எந்த கல்லூரியில் மற்ற மாணவர்களால் கேலி செய்யப்பட்டு மனவருத்தம் அடைந்தாரோ, இப்போது அதே கல்லூரியில் பயிற்றுநராக (faculty) மாணவர்களுக்கு பாடம் போதித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸ் இன் ஹெல்த் மேனேஜ்மெண்ட் (MHM) படிக்க அவருக்கு IFB உதவி கிடைத்திருக்கிறது.
“மருத்துவம் என்பது முழுக்க முழுக்க சேவை அடிப்படையிலான தொழில். பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மருத்துவம் படிக்கக்கூடாது” என்கிறார் டாக்டர் சூர்யாபாலி. க்ளோபல் ஹெல்த் டெவலப்மெண்ட் மிஷன் என்கிற பெயரில் ஒரு அரசுசாரா நிறுவனத்தைத் தொடங்கி கிராம மக்களுக்கு சேவை செய்கிறார். மருத்துவக் கட்டுரைகளை போஜ்புரி, அவாதி ஆகிய உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்த்து புத்தகங்கள் பதிப்பிக்கிறார். நோய்களைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாடல்கள் எழுதி பாடி பிரச்சாரம் செய்கிறார். தன்னுடைய கிராமத்தில் எல்லா வசதிகளும் கொண்ட ஒரு மருத்துவ மையத்தை உருவாக்குவது அவரது நோக்கம்.
உத்தரப் பிரதேசத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் ’கோண்டு’ பழங்குடி இனத்தில் பிறந்த சூர்யா, அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் மருத்துவம் கற்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார். ‘நீ படித்து என்னத்தைக் கிழிக்கப் போகிறாய்?’ என்று, அன்று சூர்யாவைக் கேட்டவர்களுக்கு, இன்றைய அவரது உயரம் மவுனச் சிரிப்போடு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது.
சூர்யாவின் வாழ்க்கை நம்மூர் மாணவர்களுக்கும் சொல்லும் பாடம் ஒன்றே ஒன்றுதான். படிங்க, படிங்க.. அதுதான் வாழ்க்கையின் வெற்றிப் படிக்கட்டுங்க...

(நன்றி : புதிய தலைமுறை)

16 ஜூலை, 2012

பில்லா-2

பிரபாகரனை நேரில் போய் பார்த்துவிட்டு வந்தவர்கள்கூட இவ்வளவு தில்லாக தாம் இயக்கிய படங்களில் காட்சிகளை வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ராஜீவ்காந்தி கொலையை ‘இந்தியப் பார்வையில்’ படமாக்கிய குற்றப்பத்திரிகைக்கு கூட இங்கே தடைவிதிக்கப்பட்டது. ஆனால், பில்லா-2 படத்தின் டைட்டில் நேரடியாக ஈழத்தில் நடத்தப்பட்ட இந்திய ராணுவ அமைதிப்படையின் கொடூரங்களை பட்டியலிடுகிறது. இப்போது தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஓர் இனத்தின் நியாயமான வலியை கருப்பு வெள்ளை புகைப்படங்கள் வாயிலாக இரண்டரை, மூன்று நிமிடங்களில்  பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். “நாங்களெல்லாம் பாவமில்லையா?” என்று இதில் யாரும் இறைஞ்சவில்லை. டேவிட்பில்லாவின் சிறுவயதுக் காட்சிகள் என்கிற சாக்கில் ‘இதுதான் உண்மையில் நடந்தது’ என்று நெற்றியில் அடித்தாற்மாதிரி  நறுக்கென்று மவுனமொழியில் காட்சியாக்கி தருகிறார்கள். படம் பார்த்துவிட்டு ‘மொக்கை’ என்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், பிலாக்கிலும் விமர்சனம் எழுதிய மொக்கைகள் எத்தனைபேர் இப்படத்தின் டைட்டிலை புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை.

தமிழகத்தில் அகதிமுகாம்களின் நிலை பற்றிய வர்ணனைகள் தமிழ் சினிமாவில் இடம்பெற்றதாக தெரியவில்லை. லீனாமணிமேகலை இயக்கிய ‘செங்கடல்’ ஆவணப்படம் விதிவிலக்கு. ஓரளவுக்கு நந்தா, ராமேஸ்வரம் படங்களில் காட்சியாக்க முயற்சித்திருக்கிறார்கள் (வேறு சில படங்களும் இருக்கலாம், இவை நான் பார்த்தவை மட்டுமே). கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சபரி’யில்தான் அகதிமுகாம்களில் நம் அதிகாரிகளின் அத்துமீறல் நேரடியாக விமர்சிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அதுவும் கேப்டனின் ஹீரோயிஸத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான காட்சியாகவே அமைந்தது. படத்தின் தொடக்கத்தில் இரண்டு, மூன்று காட்சிகள்தான் என்றாலும் பில்லா-2வில் இது வலுவாக காட்டப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் ஒரே ஒரு காவல்துறை அதிகாரியைதான் காட்டியிருக்கிறார்கள். அகதிகளை நம் அதிகாரவர்க்கம் எதற்காகவெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று பிரச்சாரநெடி ஏதுமின்றி இயல்பான முறையில் காட்டியிருக்கிறார்கள்.

இதற்காக பில்லா-2வை ஈழப்பிரச்சாரத் திரைப்படமாகவெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. முந்தைய அஜீத்தின் படவெளியீட்டின்போது ஈழத்தமிழர்களோடு அவருக்கு நேர்ந்த பிரச்னைக்கு பரிகாரமாககூட பார்க்கலாம். ஆனாலும், ‘சென்ஸாரில் தட்டிவிடுவார்களோ?’ என்றெல்லாம் அச்சப்படாமல் நேரடியாக சொல்ல நினைத்ததை நேர்மையாக சொல்லியிருப்பதற்காக பாராட்டலாம். ஒருவகையில் எதிர்காலத்தில் தமிழர்கள் தங்கள் நியாயத்தை இந்தியத் திரைமொழியில் பேச பில்லா-2 பிள்ளையார்சுழி போட்டிருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

படத்தை முதல் நாள் முதல் காட்சி ப்ரீமியர் ரேட்டில் பார்த்த அணில் ரசிகர்கள் உடனடியாக எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், பிலாக், மொட்டைக் கடிதாசி என்று எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தி, ‘படம் மொக்கை’ என்று பிரச்சாரம் செய்து, தம் கடமையை முடித்துக் கொண்டார்கள். இந்தப் பிரச்சாரம் வழக்கமாக அஜித்தின் எல்லாப் படங்களுக்கும் செய்யப்படுவதுதான். பில்லா-2 நிச்சயமாக ‘சுறா’வோ, ‘வில்லு’வோ அல்ல. அதே நேரம் பில்லா-1, மங்காத்தா அளவுக்கு கெத்துமில்லை. ஓரிருமுறை பார்க்கக்கூடிய படம்தான். அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கலாம். எந்த முன்முடிவுமின்றி பார்ப்பவர்களுக்கும் நல்ல படம் என்றே தோன்றும். சக்ரிடோலட்டிக்கு படமே எடுக்கத் தெரியவில்லை என்பவர்கள், தமிழில் இதற்கு முன்பாக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படங்கள் என்று எதை கருதுகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழின் ஒரு சராசரி இயக்குனரால் இப்படத்தின் தரத்தில் பாதியைக் கூட எட்டமுடியாது என்பதுதான் நிஜம். ப்ரீக்குவல் என்பதால் ஒருவேளை பில்லா-1ஐ விட அடக்கி வாசிக்கவேண்டும் என்கிற எண்ணம் படக்குழுவினருக்கு இருந்திருக்கலாம். ரசிகர்களும் கூட பில்லா-1க்கு முன்பாக நடக்கும் கதை என்கிற உணர்விலேயே படம் பார்த்தால், எவ்வளவு சுவாரஸ்யமாக முன்கதைச் சுருக்கத்தை சொல்கிறார்கள் என்பதை உணரலாம்.  அடுத்ததாக ஒருவேளை பில்லாவின் சீக்குவல் எடுக்கப்பட்டால் பங்களா கட்டி புகுந்து விளையாடுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கலாம்.

இதுபோன்ற கேங்ஸ்டர் படங்களுக்கு க்ரைம் அளவுக்கு செக்ஸும் ஒரு முக்கியமான அம்சம். பில்லா-1ல் நயன்தாரா, நமீதா என்று இந்த மேட்டர் அமர்க்களம். ஆனால் ஏனோ இப்படத்தில் ஏனோ ரொம்ப சைவமாக இருந்திருக்கிறார்கள். ஓங்குதாங்காக ரேஸ் குதிரை மாதிரி ப்ரூனோ அப்துல்லா இருக்கிறார். செம கட்டை என்று சொல்லமுடியாவிட்டாலும், சொல்லிக் கொள்ளும்படியாக ஓமணக் குட்டி இருக்கிறார். இருவரையும் தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரிதான் இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார். அந்த பாலியல் விடுதி பாடல் காட்சியும் ஆகா, ஓகோவென்று இல்லை. ஏற்கனவே ‘சிந்தனை செய்’ என்கிற திரைப்படத்தில் அபாரமாக எடுக்கப்பட்ட பாடல்காட்சி ஒன்றின், சுமார் பிரதியாகவே அப்பாட்டும் அமைந்திருக்கிறது.

இரண்டாம் பாதியில் வரும் பில்டப் பாடல் நிச்சயமாக இதுவரை தமிழில் படமாக்கப்பட்ட மிகச்சிறப்பான பாடல் என்று சொல்லலாம். முழுக்க கிராஃபிக்ஸ், யுவன்ஷங்கரின் அதிரடி மியூசிக், நா.முத்துக்குமாரின் ஷார்ப் லிரிக்ஸ், அல்டிமேட் ஸ்டாரின் அதிரடி ஸ்டைல் என்று எல்லா ஏரியாவிலும் சிக்ஸர் அடிக்கும் பாட்டு இது. பில்லா-வின் தீம் மியூசிக் படத்தின் தொடக்கத்தில் எங்கும் வந்துவிடாத அளவுக்கு யுவன்ஷங்கர்ராஜா மிக ஜாக்கிரதையாக இருந்திருக்கிறார். டேவிட் பில்லா, டான் ஆகும் இடைவேளைக் காட்சியில்தான் (அதுவும் மெல்லியதாக) அந்த இசையைக் கொண்டு வருகிறார். அதுபோலவே பில்லா-1ல் வரும் இண்டர்போல் ஆபிஸர், ப்ரீக்குவலிலும் ஒரு காட்சியில் பில்லா சாதா ஆளாக இருக்கும்போது அவருக்கு அறிமுகமாகிறார். ஏற்கனவே எடுக்கப்பட்ட படத்தின் தொடர்ச்சி கெடாதவகையில், முன்கதையை கையாளுவது சாதாரணமான விஷயமல்ல. பில்லா-2 அவ்வகையில் பர்ஸ்ட் க்ளாஸில் தேறுகிறது.

படத்தின் வசனங்கள் ‘ஷார்ப்’ என்றாலும், ஓவர் புத்திசாலித்தனமோ என்றுகூட ஒருக்கட்டத்தில் சலிப்படைய வைக்கிறது. பில்லாவின் உலகம் முட்டாள்கள் அற்றது என்று தோன்றுகிறது. ‘தல’ எதைப் பேசினாலும், அது ‘பஞ்ச்’ ஆகத்தான் இருக்கவேண்டும் என்று இயக்குனர், வசனகர்த்தாவிடம் கேட்டுக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. அக்கா செத்துப் போகும்போது சுடுகாட்டுக்கு வந்தும், ‘தல’ ஏதாவது பஞ்ச் வைத்துவிடுவாரோ என்று மனசு பதறுகிறது.

“இவர் சுட்டுக் கொண்டே இருக்கிறார், மற்றவர்கள் செத்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்றெல்லாம் படத்தை குறை சொல்பவர்கள், இதற்கு முன்பாக ஏதாவது சினிமா பார்த்திருக்கிறார்களா என்றே சந்தேகம் வருகிறது. திரைக்கதை கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தாலும் படமாக்கம், நடிகர்களின் ஃபெர்பாமன்ஸ், கேமிரா, எடிட்டிங் என்று தொழில்நுட்பரீதியாக சிறப்பான விருந்து பில்லா-2.

படம் மொக்கை. வேஸ்ட்டு. பில்லா இல்லை நல்லா என்றெல்லாம் எழுதினால் ஃபேஸ்புக்கிலும், பிளாக்கிலும் நூற்றி சொச்சம் ‘லைக்’, ’கமெண்டு’ எல்லாம் கிடைக்குமென்றாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ரிஸ்க் எடுத்து இதை சொல்கிறேன்.

அஜீத் ரசிகர்களுக்கு அட்டகாசம். ஆக்‌ஷன் பிரியர்களுக்கு விஷூவல் ட்ரீட். இந்த இரண்டு கேட்டகிரியிலும் இல்லாதவர்கள் பவர்ஸ்டாரின் ‘ஆனந்தத் தொல்லை’ ஆகஸ்ட்டில் வெளியாகும்வரை பொறுமையாக காத்திருக்க வேண்டியதுதான்.

14 ஜூலை, 2012

Sorkam-1970/சொர்க்கம்1970/நடிகர் திலகத்தின் நட்டுக்குத்தலான படம்...


பில்லா-2 படத்தை நீங்கள் எந்தக் காரணத்துக்காக வேண்டுமானாலும் பார்த்திருக்கலாம். என்னால் அந்தப் படத்தை பார்க்க முடியாது. இயக்குனர் சக்ரா டொலாட்டி உங்கள் நண்பராக இருக்கலாம். அல்லது ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் உங்களுடைய ஒன்றுவிட்ட மச்சானாக இருக்கலாம். அல்லது அஜித்குமார் உங்களுடைய வாசகநண்பராக கூட இருக்கலாம். இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு உங்களுடைய மலச்சிக்கல் கூட ஒரு காரணமாக இருக்கலாம். என்னுடைய பிரச்சினையே வேறு.

நான் ஏன் பில்லாவை விட்டு விட்டு ‘சொர்க்கம்’ பார்த்தேன் என்று உங்களுக்கு காரணம் சொல்லியே ஆகவேண்டும்.

ஏனெனில் எனக்கு இப்போது ’பில்லா’ டிக்கெட்டு கிடைக்கவில்லை. வாசக நண்பர் விஸ்வா போனமாசமே டிக்கெட்டு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். நான், விஸ்வா, வாசக நண்பர் அதிஷா, வாசக நண்பர் சிவராமன், வாசக நண்பர் நாராயணன் ஆகியோர் போனோம். அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்பதற்கு பதிலாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தப்பாக டைட்டில் போட்டார் தியேட்டர் ஆபரேட்மேன். அவருக்கு படமே போட தெரியவில்லை என்று கூறி டைட்டில் முடிவதற்கு முன்பாக எழுந்து வந்துவிட்டேன்.

நான் லோக்கல் என்பதால், லோக்கல் தியேட்டருக்குப் போய் முந்தாநாள் டிக்கெட் கேட்டேன். ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது என்று தியேட்டர் வாசலில் கடைவிரித்து பீடி, பான்பராக் விற்பவர் சொன்னார். ஒத்தா, என்ன படத்துக்குதான் டிக்கெட் கிடைக்கும் என்று இணையத்தில் தேடினேன். என் வாசக நண்பர் அதிஷா, மாம்பலம் சீனிவாசா தியேட்டரில் ‘சொர்க்கம்’ படத்துக்கு டிக்கெட் கிடைப்பதாக சொல்லி, அவரே ஆன்லைனில் ‘புக்’கும் செய்துவிட்டார். டிக்கெட் விலை ரூ.30 (பால்கனி) தான். ஆனால் பைக் பார்க்கிங் டோக்கன் ரூ.10 + ஆன்லைன் சர்வீஸ் சார்ஜ் ரூ.20 + குவார்ட்டர் நெப்போலியன் ரூ. 85 + அரை பாக்கெட் கிங்ஸ் ரூ.30 + நாலு மாணிக்சந்த் ரூ.24 என்று எக்ஸ்ட்ராவாக ரூ.169 செலவானது. ச்சீ.. நாய்களா.. பேய்களா.. குரங்குகளா.. சுண்டக்காய் எட்டணா.. சுமைக்கூலி எட்டு ரூபாயா?

நான் ஏன் ‘சொர்க்கம்’ பார்த்தேன் என்று உங்களிடம் சொல்லியே ஆகவேண்டும். டைட்டிலை பார்த்துவிட்டு ஏதாவது ‘பிட்டு’ இருக்குமென்று முதலில் நினைத்தேன். ஆனால் தியேட்டர் முன்னால் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் கே.ஆர்.விஜயா படம் இருந்ததால் ‘அட்டு’ தான் இருக்குமென்று தெரிந்துகொண்டேன்.

மனமார ஒத்துக்கறேன். கே.ஆர்.விஜயா சிக்கென்றுதான் இந்த வயதிலும் இருக்கிறார். 1970ல் காஞ்சிபுரத்தில் இந்தப் படத்தை என்னுடைய அப்பா பார்த்தபோதும் அப்படியேதான் இருந்திருக்கிறார். எனக்கு கே.ஆர்.விஜயாவை ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் அவர் கற்பகம் படத்தில் மன்னவனே அழலாமா என்று அழுதுக்கொண்டே பாடுவார்.

 = = = = = = = = = =

சொர்க்கம் படத்தின் ஓன்லைன் என்ன?

சிவாஜி கே.ஆர்.விஜயாவை கல்யாணம் செய்துக் கொள்கிறார். இதனால் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.

 = = = = = = = = = = 

சொர்க்கம் படத்தின் கதை என்ன?

சிவாஜி ஒரு வேலையில்லா பட்டதாரி. ரொம்ப வெயில் அடித்ததால் அவர் வேப்பமரம் முன்பாக நிழலுக்கு உட்காருகிறார். அப்போது ஜிக் ஜிக்கென்று ஆட்டிக்கொண்டு டூபிஸில் ஒரு பெண் டேன்ஸ் ஆடுகிறார். சிவாஜி ‘பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்’ என்று டி.எம்.எஸ். மாதிரி கஷ்டப்பட்டு மிமிக்ரி செய்து பாட்டு பாடுகிறார். பாட்டு முடியும் போது வேப்பமரத்தில் இருந்து வேப்பங்காய் விழுவதற்கு பதிலாக பணம் கொட்டோ கொட்டுவென்று கொட்டுகிறது.

சிவாஜி பணக்காரர் ஆகிறார். ஆனால் அடுத்த காட்சியிலேயே அவர் ஏழையாகி கே.ஆர்.விஜயாவை கல்யாணம் செய்துக்கொள்ளும் படி காட்டுவது எடிட்டர் சரியாக வேலை பார்க்கவில்லை என்பதை காட்டுகிறது. பணக்காரர் ஆன சிவாஜி தண்ணி அடிக்கிறார். தம்மும் அடிக்கிறார். அது கே.ஆர்.விஜயாவுக்கு பிடிக்கவில்லை. சிவாஜி பேசாமல் கே.ஆர்.விஜயாவுக்கும் தம்மையும், சரக்கையும் பழக்கப்படுத்தி இருந்தால் கதை இண்டர்வெல்லிலேயே முடிந்துவிட்டிருக்கும்.

இரண்டாம் பாதியில் மனோகர் நல்லவனாக வருகிறார். திடீரென்று அவரே கெட்டவனாக மாறுகிறார். கடைசியில் மீண்டும் நல்லவனாக வருகிறார். ஒரு காட்சியில் நல்லவனும், கெட்டவனுமாக இரண்டு மனோகரும் ஒன்றாக வருகிறார்கள். இப்படி முன்னுக்கு பின் முரணாக நான் லைனராக எனக்கு பிடித்த ஹாலிவுட் இயக்குனர் கிரிஷ்டாபர் லோலன் மாதிரி படமெடுத்திருக்கிறார் இயக்குன நண்பர் டி.ஆர்.ராமண்ணா. வாசக நண்பர் அதிஷாவோ அப்படியில்லை, மனோகர் டபுள் ஆக்சன் என்று ஒரு புதிய கோணத்தை சொல்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம். ஆகமொத்தம் நம் வாழ்க்கை முக்கோணம்.

படம் முடியும்போது எல்லோரும் சிரிக்கிறார்கள். எனக்கு அழுகை வந்தது. ஏனென்றால் பாக்கெட்டில் வைத்திருந்த தம்மு பாக்கெட்டையும், மாணிக்சந்தையும் டிக்கெட் கிழிக்கும்போது செக்யூரிட்டி செக் செய்து பறித்துவிட்டான்.

  = = = = = = = = = =

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

முதன்முதலாக நடிகர் திலகம் தண்ணி அடிக்கிறார். சரக்கில் தண்ணி ஊற்றாமலேயே கல்பாக அடிக்கிறார். எனக்கெல்லாம் சோடாவோ, கோக்கோ இல்லாமல் சரக்கு அடிக்க முடியாது. சரக்கு அடித்ததும் காருக்கு வருகிறார். டிரைவர் ஏதோ சொல்லவருகிறார். உடனே “சொல்லாதே யாரும் கேட்டால்” என்று பாடுகிறார். டிரைவர் யாரிடமும் இவர் தண்ணியடித்ததை சொல்லவில்லை. நடிகர் திலகமும் கே.ஆர்.விஜயாவிடம் இதை சொல்லவில்லை. ஆனால் கே.ஆர்.விஜயா இந்த விஷயத்தை புத்திசாலித்தனமாக கண்டுபிடிக்கிறார். எப்படி என்பதுதான் சஸ்பென்ஸ். நானாக யூகித்துக்கொண்டேன். வாசனை வந்திருக்கும் கண்டுபிடித்திருப்பார் என்று.

நடிகர் திலகம் சிவாஜிக்கு இந்த படம் மைல்கல் என்பேன். ஏனெனில் இரண்டாம் பாதி முழுவதும் அவர் காரிலோ, டிரைனிலோ பயணம் செய்துக்கொண்டே இருக்கிறார்.

கேமிராமேன் அசத்தி இருக்கிறார். ‘ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துகள்’ பாட்டில் புடவை கட்டிக்கொண்டு கே.ஆர்.விஜயா பாட, மற்ற பெண்கள் எல்லோரும் என்ன டிரெஸ் என்பதே தெரியாத டிரெஸ் அணிந்து ஆட, சிவந்த கண்களோடு நடிகர் திலகம் நைசாக கே.ஆர்.விஜயாவுக்கு டிமிக்கி கொடுத்து பாலாஜியோடு போய் ஒரு ‘கட்டிங்’ விட்டு வர, அனைத்தையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார் கேமிராமேன்.

சரி படத்துக்கு ஏதாவது திருஷ்டிபூசணிக்காய் உடைக்க வேண்டும் அல்லவா?

நான் 1992ல் பார்த்த தேவர் மகன் படத்தில் நடிகர் திலகம் வயசானவராக இருந்தார். 1998ல் பார்த்த படையப்பா படத்தில் தேவர்மகனை விட ஆறுவயது கூடுதலாக இருந்தார். ஆனால் 2012ல் பார்க்கும் சொர்க்கம் படத்தில் மட்டும் முப்பது, முப்பத்தைந்து வயது வாலிபனாக வருகிறார். நியாயமாக பார்க்கப்போனால் படையப்பாவை விட 14 ஆண்டுகள் அதிகம் ஆன முதியவராக அல்லவா இருக்கவேண்டும்? இந்த லாஜிக்கை மட்டும் இயக்குனர் சரி செய்திருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும்.

 = = = = = = = = = = 

ஃபைனல் கிக் : படம் எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கு பிடிக்குமா என்று தெரியாது. உங்களுக்கு பிடிக்காதா என்றும் தெரியாது. பதிவு போடுவதற்காக பார்த்தே தீரவேண்டிய படம்.


11 ஜூலை, 2012

இந்த காதலுக்கு எத்தனை கோணம்?


சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து ஏதாவது ஒன்று இருக்கும்தானே? வேதாளம் சொன்ன கடைசிக் கதைக்கு விக்கிரமாதித்தனால் விடை சொல்ல முடியவில்லையாம். நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த பஞ்சாயத்து ஒன்று அப்படிப்பட்டது. கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனரோ, கூடுதல் கமிஷனர்களோ மக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறுவது ஒரு சடங்கு. அந்த சடங்கின்படி நேற்று கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் புகார்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

பரங்கிமலையிலிருந்து ஓர் நடுத்தர வயது ஆள் புகார் கொடுக்க வந்திருந்தார்.

“என்ன பிரச்சினை?” கமிஷனர் கனிவாக கேட்டார்.

“என் கூட இருந்த பொண்ணை ஒருத்தன் தள்ளிக்கிட்டு போயிட்டான்”

“கூட இருந்த பொண்ணுன்னா.. மனைவியையா?”

“இல்லை. என் மனைவியை அவன் எப்பவோ தள்ளிக்கிட்டுப் போயிட்டான்”

“அப்போ உன் கூட இருந்த பொண்ணு”

“அவனோட மனைவி”

“புரியலை”

“நான் வாழ்க்கை நடத்திக்கிட்டிருந்த பொண்ணை அவளோட முன்னாள் கணவன் கூட்டிக்கிட்டுப் போயிட்டான். அவ இல்லாமே என்னாலே வாழ முடியாது. நீங்கதான் பெரிய மனசு பண்ணி எங்களை சேர்த்து வைக்கணும்”

கூடுதல் கமிஷனருக்கு ‘கிர்’ரடித்திருக்கிறது. கொஞ்சம் தெளிவாக பின்கதைச் சுருக்கத்தை எடுத்தியம்புமாறு அந்த மறத்தமிழனிடம் கெஞ்சியிருக்கிறார்.

பரங்கிமலையில் வசிக்கும் அவர் இண்டீரியர் டெக்கரேஷன் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளி. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவருக்கு திருமணம் ஆகியிருக்கிறது. மனைவியோடு இல்லறத்தில் இன்பமாக வாழ்ந்துக் கொண்டிருந்தவருக்கு, திடீரென ‘இடி’ விழுந்தது பக்கத்துத் தெரு இளைஞர் ஒருவரால். இளைஞரின் கவர்ச்சியில் மயங்கிவிட்ட இவரது மனைவி அவரோடு ஓடிவிட்டார்.

இனிய இல்லறம் புயலாய் தடைபட்ட விரக்தியில் வாடிய நம் ஹீரோவின் வாழ்வில் மீண்டும் தென்றல் வீசத் தொடங்கியது. பக்கத்துத் தெரு பைங்கிளி ஒன்று இவருக்கு ஆறுதலாய் அமைந்தது. அது வேறு யாருமல்ல. இவருடைய மனைவியை தள்ளிக்கொண்ட சென்ற இளைஞரின் மனைவி. எனக்கு நீ துணை. உனக்கு நான் துணை என்று பாதிக்கப்பட்ட இருவரும் இணைந்து புது அத்தியாயம் எழுதத் தொடங்கினார்கள்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்க, மீண்டும் புயல். இவர் வேலைக்குச் சென்றிருக்கும் நேரத்தில், அதே இளைஞர் பூர்வாசிரம நினைவு வந்து அவ்வப்போது வந்துச் சென்றிருக்கிறார். பைங்கிளியும் தன் முன்னாள் கணவரின் கவர்ச்சிக்கு முன்பாக மதியிழந்தார். ஒரு சுபமுகூர்த்த நாளில் இவரும் அவருடனேயே ஓட்டம் பிடித்தார்.

அடுத்தடுத்து இரண்டு துணைகளையும் ஒரே இளைஞரிடம் பறிகொடுத்த ஆற்றாமை தாங்காமல் உள்ளூர் பஞ்சாயத்து, போலிஸ் ஸ்டேஷன் என்று தனக்கு சாத்தியப்பட்ட எல்லா இடங்களுக்கும் சென்று தன் பிரச்னையை தீர்த்துவைக்குமாறு கோரியிருக்கிறார் நம் ஹீரோ. இவருடைய கதையை கேட்ட எல்லோருமே “நீ ஹாலிவுட்லே பொறந்திருக்க வேண்டிய ஆளு” என்று பாராட்டினார்களே தவிர, தீர்வுக்கு முன்வரவில்லை. கடைசியாகதான் கமிஷனர் ஆபிஸ் கதவைத் தட்டியிருக்கிறார்.

“இப்போ என்னய்யா பிரச்னை? உன் பொண்டாட்டியை உன் கூட சேர்த்து வைக்கணுமா?” கூடுதல் கமிஷனர் கொஞ்சம் டென்ஷனாகவே கேட்டிருக்கிறார்.

ஹீரோ உடனே மறுத்திருக்கிறார். தனக்கு தன்னுடைய மனைவி வேண்டாம். அவளைவிட அவனுடைய மனைவியைதான் பிடித்திருக்கிறது. அவளோடு மட்டும் சேர்த்துவைத்தால் போதுமென கேட்டுக் கொண்டார்.

கமிஷனர் ஆபிஸே கதிகலங்கிப் போய்விட்டது. நூற்றாண்டு கண்ட சென்னை ஆணையாளர் அலுவலகம் எத்தனையோ விசித்திர வழக்குகளுக்கு தீர்வு கண்டிருக்கிறது. ஆனால் இப்படியொரு வழக்கு வருவது வரலாற்றில் இதுதான் முதன்முறை.

சுவாரஸ்யத்துக்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வகையாக திடீரென ஒரு சுவையான ட்விஸ்ட். ஹீரோ கமிஷனர் ஆபிஸுக்குப் போயிருப்பதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட வில்லன், வள்ளி தெய்வானை சமேதரராய் திடீரென்று ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார். “அவருக்கு ஏதாவது ஒண்ணு வேணும்னா, இந்த ரெண்டுலே எது இஷ்டப்படுதோ அது அவராண்ட போய்க்கட்டும்” என்று பெருந்தன்மையும் காட்டியிருக்கிறார். ஆனால் ரெண்டுக்குமே ஹீரோவைவிட வில்லனைதான் ரொம்பவும் பிடித்திருக்கிறது. ரெண்டுமே அவரோடு போக இஷ்டப்படவில்லை. ஒற்றுமையாக வில்லனோடேயே உன்னதமாக வாழ விருப்பப்படுகிறார்கள். இப்படிப்பட்ட கண்ணகிகள் இருப்பதால் இந்தியா இரண்டாயிரத்து இருபதுக்கு முன்பாகவே வல்லரசு ஆகிவிடுமென்ற நம்பிக்கை நமக்கு இயல்பாகவே பிறக்கிறது.

ஆனால், நம் ஹீரோவோ தீர்வு கிடைக்காமல் இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்று ஒற்றைக்காலில் தவம் நின்றார். முக்கோணக் காதலை கேள்விப்பட்டிருக்கிறார் கூடுதல் கமிஷனர். நான்கு பேர் பங்கு கொண்டிருக்கும் இந்த விசித்திரமான காதலுக்கு எத்தனை கோணங்கள் என்று புரியாமல் தாவூ தீர்ந்துப்போய் டரியல் ஆகிவிட்டவர், இந்தப் பஞ்சாயத்துக்கு நான் தீர்ப்பினை சொல்லுவதைவிட, பரங்கிமலை உதவி கமிஷனர் தீர்வு சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இது அவருடைய ஏரியா என்று நைஸாக பாலை அந்த சைடு ஒரு தட்டு தட்டிவிட்டார்.

இன்று விடிகாலையிலேயே தினகரன் நாளிதழில் இச்செய்தியை வாசித்த பரங்கிமலை உதவி கமிஷனர், கூடங்குளத்துக்கு அந்தப்பக்கமாக எங்காவது தண்ணியில்லாத காட்டில் போஸ்டிங் கிடைக்குமாவென்று டிரான்ஸ்பருக்கு அலைந்துக் கொண்டிருப்பதாக பராபரியாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.