3 நவம்பர், 2012

ஸ்கைஃபால்


ஒருவழியாக தான் ஏற்றுக்கொண்ட ஜேம்ஸ் பாத்திரத்துக்கு நியாயம் வழங்கியிருக்கிறார் டேனியல் கிரேக். சமீப வருடங்களாக வந்த பாண்ட் சீரியஸ் படங்கள் ஜேம்ஸின் தனித்துவ ஸ்டைலையும், குணாதிசயங்கலையும் குலைப்பதாக பாண்ட் ரசிகர்கள் குறைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ‘ஸ்கைஃபால்’ அத்தனை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கி இருக்கிறது.

ஜேம்ஸுக்கு பொன்விழா என்பதால் மிகக்கவனமாக ஸ்கைஃபாலை கையாண்டிருக்கிறார் இயக்குனர். கொஞ்சம் பிசகினாலும் ஜேம்ஸின் வரலாற்றில் தன்னுடைய பெயர் மோசமாக பதியப்பட்டுவிடும் என்கிற அச்சமும், கவனமும் அவரை சரியான பாதையில் செலுத்தியிருக்கிறது.

சூப்பர் ஹீரோக்களான சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்றோரே தங்களை சாதாரண மனிதர்கள், தங்களுக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, லொட்டு, லொசுக்கெல்லாம் உண்டு என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காலம் இது. யதார்த்த ஹீரோவாக அறிமுகமாகிய ஜேம்ஸ் வருடாவருடம் கூடிக்கொண்டே போகும் ரசிகர்களின் அதீத எதிர்ப்பார்ப்பு காரணமாக ஃபேண்டஸி ஹீரோவாக தரைக்கு ஒரு அடிமேலாகவே சில காலமாக சாகஸம் செய்துக் கொண்டிருந்தார். இழுத்துப் பிடித்து 007ஐ அவரது வழக்கமான பாதைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சாம் மெண்டாஸ்.

பொதுவாக ஜேம்ஸ் படங்களில் அவரது மிலிட்டரி இண்டெலிஜென்ஸ் அமைப்பே மனிதகுலத்துக்கு எதிரிகளான வில்லன்களிடம் ஆதிக்கம் செலுத்தும். எம்.ஐ.6-ன் ஏஜெண்ட்களை பார்த்து அஞ்சி நடுங்கி ஓடிக்கொண்டே இருப்பார்கள். 007 மாதிரியான ஏஜெண்ட்கள் அவர்களை துரத்தி துரத்தி சூப்பர் சேஸ் அடிப்பது பாண்ட் சீரியஸ் படங்களில் தவிர்க்கமுடியாத அம்சம். ஸ்கைஃபாலில் தலைகீழ். வில்லனான சில்வா (இவரும் எம்.ஐ.6ன் முன்னாள் ஏஜெண்ட்தான்) மிலிட்டரி இண்டெலிஜென்ஸை முற்றிலுமாக குலைத்து, அந்த அமைப்பையே கிட்டத்தட்ட நிர்மூலமாக்கி விடுகிறார்.

வழக்கமான பாண்டும் இந்தப் படத்தில் இல்லை. முதல் காட்சியிலேயே துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி உயிர்பிழைத்து வருகிறார். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பலவீனமான நிலையில் இருக்கிறார். அவரால் குறிபார்த்து சுடமுடியவில்லை. கொஞ்சம் ஓடினாலே மூச்சு வாங்குகிறது. எம்.ஐ.6 கலைக்கப்படும் என்கிற சூழலில் மேடம் ‘எம்’ வேறுவழியில்லாத நிலையில் கருணை காட்டி, பணிக்கு தகுதியில்லாத ஜேம்ஸை சேர்த்துக் கொள்கிறார். மேடமின் நம்பிக்கையை மட்டுமின்றி உயிரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம். ஏனெனில் கிட்டத்தட்ட சைக்கோவான வில்லனுக்கு மேடமை போட்டுத்தள்ள வேண்டும் என்று பழிவெறி.

வில்லன் சில்வாவாக நடித்திருக்கும் ஜேவியர் பார்டெமே மொத்தப் பாராட்டுகளையும் அள்ளிக்கொண்டு போகிறார். இவரது பாத்திரப் படைப்பு ஜோக்கரை நினைவுபடுத்தினாலும், ஸ்டைலில் கிழித்திருக்கிறார். எடுத்தவுடனேயே உளவுப்படையிடம் சிக்கிக் கொள்கிறாரே, இவ்வளவு சப்பையா என்று நினைக்கும்போது அவர் எடுக்கும் விஸ்வரூபம் அட்டகாசம்.
முந்தையப் படங்களில் எல்லாம் எவ்வளவு இக்கட்டான சூழல்களிலும் ஜேம்ஸின் முகத்தில் ஒரு குறுநகை தவழ்ந்துக் கொண்டேயிருக்கும். குறிப்பாக பெண்களை பார்க்கும்போது கவர்ச்சிகரமான சிரிப்பை உதிர்ப்பார். ஸ்கைஃபாலில் ஒரு காட்சியில் கூட ஜேம்ஸ் சிரித்ததாக நினைவில்லை. ஆரம்பத்தில் இருந்தே டென்ஷன், டென்ஷன், டென்ஷன்தான். எனவே அவருக்கு ஹீரோயினோடு ‘குஜால்’ செய்யவும் நேரமின்றி போகிறது. ஜேம்ஸ் படங்களின் சிறப்பம்சமான ‘பிட்’டை மட்டும் ரசிக்கும் ரசிகர்களுக்கு இது பேரிழப்பு.

போலவே ஜேம்ஸுக்கு எப்போதுமே வித்தியாசமான ஆயுதங்களை உளவு அமைப்பு வழங்கும். இந்த ஆயுதங்களை ஜேம்ஸ் கையாளும் லாவகம் ரசிகர்களை குஷிப்படுத்தும். எம்.ஐ.6 அமைப்பே இருத்தலியல் நெருக்கடியில் இருப்பதால் அரசிடமிருந்து போதிய நிதி கிடைக்காததாலோ என்னவோ, இருப்பதை வைத்து ஜேம்ஸ் சிறப்பாக சமாளித்திருக்கிறார் (படத்துக்கு ஃபைனான்ஸ் செய்த எம்.ஜி.எம்-முக்கும் நிதி நெருக்கடி என்பது கதையோடு சம்பந்தப்படாத வேறு விஷயம்).

தான் பிறந்த ஸ்காட்லாந்துக்கு ஜேம்ஸ், எம்-முடன் போவது, அங்கே ஜேம்ஸின் பெற்றோருடைய கல்லறை, ‘அனாதைக் குழந்தைகள்தான் உளவாளியாக சிறந்தவர்கள்’ என்கிற எம்-முடைய கருத்து, உணர்வுப்பூர்வமான இறுதிக்காட்சி என்று ‘அழுகாச்சி’ காட்சிகள் ஏராளம். டேனியல் கிரேக்கை காதலிக்கும் இளம்பெண்கள் படம் முடியும்போது கர்ச்சீப்பால் கண்ணை துடைத்துக்கொண்டே வெளியே வருகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால் ஸ்கைஃபாலில் இயான்ஃப்ளெமிங்கின் ஜேம்ஸ் மீண்டும் பிறந்திருக்கிறார். அடுத்த தலைமுறை ஜேம்ஸ் பாண்ட் சீரியஸ் படங்களின் போக்கை தீர்மானிக்கிறது என்கிற வகையில் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. உலகமே காறித்துப்பிய ‘கோல்டன் ஐ’யை தூக்கிவைத்துக் கொண்டாடியவர்கள் ஆசிய ரசிகர்கள். அத்தகைய மசாலா ஸ்கை ஃபாலில் கிடைக்காது என்பதால் ஓரளவுக்கு இவர்கள் ஏமாற்றம் அடையக்கூடும். இதுவரை இப்படம் வெளியான நாடுகளில் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் நெ.1 ஆக சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. விமர்சகர்களும் ஒருமனதாக கொண்டாடுகிறார்கள். எனினும் அடுத்த வாரம் அமெரிக்காவில் வெளியாகும்போதுதான், இந்த புது ஜேம்ஸ்பாண்ட் வசூல்ரீதியாகவும் வேலைக்கு ஆவாரா என்பது தெரியும்.

2 நவம்பர், 2012

முட்டைக்கு மொட்டை அடிப்பது


சென்னை விமானநிலையத்தில் விஜயகாந்த் நடந்துகொண்ட முறை அநாகரிகமானது. பேட்டி கொடுக்க விருப்பமில்லை என்றால் எதுவும் பேசாமல் ஒதுங்கிச் சென்றிருக்கலாம். மாறாக தன்னுடைய கட்சிக்காரர்களை நடத்துவதைப் போல பத்திரிகையாளர்களை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

அதே நேரம், புரட்சித்தலைவியை இதேபோல விமானநிலையத்தில் மடக்கி, குறுக்கிட்டு, இதே பத்திரிகையாளர்கள் பேச ‘தில்’ இருக்கிறதா என்று பொதுமக்கள் ஊருக்குள் கேட்கும் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ கணக்காக, கொஞ்சம் கிராமத்து மனிதர் மாதிரியாக வெள்ளந்தியாக பழகுகிறார் என்பதற்காக மனைவியோடு கைபிடித்துச் சென்றுக் கொண்டிருந்தவரை குறுக்கிட்டு எகனைமொகனையாய் பேசியதை என்னவென்று சொல்ல?

குறிப்பிட்ட பத்திரிகையாளர் (அவர் தற்போதைய அரசு ஆதரவு பத்திரிகையாளர் என்பதில் சந்தேகம் வேண்டாம்) விஜயகாந்திடம் சென்று அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள், முதல்வரை சந்தித்ததைப் பற்றி கருத்து கேட்கிறார். விஜயகாந்துக்கு விடையளிக்க விருப்பமில்லை. பதிலுக்கு ஊரெல்லாம் கரெண்டு இல்லை. இதைப்பத்தி போயி ஜெயலலிதாகிட்டே என்னன்னு கேளு என்று பதில் அளித்திருக்கிறார். புத்திசாலித்தமான பத்திரிகையாளர் பதிலுக்கு ‘ரிஷிவந்தியத்தில் மட்டும் கரெண்டு இருக்கா?’ என்று கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறார். கோபத்துக்கு பேர் போன விஜயகாந்துக்கு கோபம் வந்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ரிஷிவந்தியம் என்ன அமெரிக்காவிலா இருக்கிறது? ரிஷிவந்தியத்துக்கும் ஜெயலலிதாதான் முதல்வர். இந்த ஆட்சியின் மின்சார வாரியம்தான் அந்த ஊருக்கும் மின்சாரம் கொடுக்க வேண்டும்.


இதையடுத்துதான் ரசபாசம் ஆகியிருக்கிறது. குறிப்பிட்ட பத்திரிகையாளரை விஜயகாந்த் ஏகவசனத்தில் ‘நாயே’ என்று விளித்திருக்கிறார். உன் பத்திரிகையா எனக்கு சம்பளம் கொடுக்கிறது என்றும் கேட்டிருக்கிறார்.

இதையடுத்து தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகையாளர்களும் விஜயகாந்துக்கு எதிராக நூதனப் போராட்டம் ஒன்றினை அறிவித்திருக்கிறார்கள். அனைவரும் வருக, ஆதரவு தருகவென்று கேட்டுக் கொள்கிறோம்.

ஆட்சிக்கு வந்தபோது வாராவாரம் பத்திரிகையாளர்களை சந்திக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் முதல்வர் மட்டுமின்றி அமைச்சர்களும், உள்ளாட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், அதிகாரிகளும் கூட பத்திரிகைகளிடம் எதைப்பற்றியும் பேச விரும்புவதில்லை. எதிர்தரப்பினரின் கருத்துகளை வாங்கிவிட்டு, அரசு தரப்பாக பத்திரிகைகளே பேசித்தொலைக்க வேண்டிய அபாக்கியமான நிலைமை.

அப்படியும் ஏதோ இலைமறை காய்மறையாக எழுதினாலும் முதல்வரோ, அமைச்சர்களோ பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகளை அம்புமாதிரி தொடர்ச்சியாக எய்துக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அதிகாரத்துக்கு எதிராக விமர்சனம் வைக்கும் காமன்மேன்கள் மீதும் இப்போது வழக்குகள் பாய ஆரம்பித்திருக்கிறது.

இப்படியிருக்கும் பிரகாசமான தமிழக பத்திரிகைச் சுதந்திரச் சூழலில் விஜயகாந்துக்கு எதிராக பத்திரிகையாளர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது அவசியம்தான். நமது உரிமையை நிலைநாட்ட இதைக்கூட செய்யவில்லை என்றால் எப்படி. நம்மை சீண்டினால் என்னாகும் என்பதை உலகம் உணரவேண்டாமா. குறைந்தபட்சம் பத்திரிகையாளர்கள் என்று ஒரு இனம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதையாவது மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா. நான்கூட பேசாமல் கையில் ‘ரெட்டை எலை’ பச்சை குத்திக்கொள்ளலாமா என்று யோசிக்கிறேன். ஐம்பது வயதுக்கு பிறகு ராஜ்யசபா சீட்டாவது கிடைக்கும்.

1 நவம்பர், 2012

அம்மா

தமிழக சட்டமன்றத்தின் வைரவிழா கூட்டத்தொடர் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் ஏர்போர்ட் பேட்டி, அவரது கட்சியினர் சிலர் தேமுதிகவின் அம்மா கோஷ்டியாக உருவெடுத்திருப்பது என்று வழக்கத்தைவிடவும் சுவாரஸ்யமாகவே நடப்புகள் இருக்கிறது.

ஓ.பி.எஸ்., செ.கு.தமிழரசன், சரத்குமார் போன்றோர் மிகச்சிறப்பாக மன்றத்தில் பேசிவருகிறார்கள். ஓ.பி.எஸ்.சின் பேச்சு பதினாறு நிமிடங்களுக்கு சொல்லருவியாய் பொழிந்தது. அந்த சொற்பொழிவில் பத்து நிமிடங்களுக்கு ‘அம்மா’ என்கிற சொல்லே ஆக்கிரமித்திருந்ததை திமுக சட்டமன்றத் தலைவர் ஸ்டாலின் குறையாக சொல்லுகிறார்.

அதுபோலவே கவிமழையாய் பொழிந்த, அம்பேத்கரிய இயக்கத்தின் செ.கு.தமிழரசனின் புரட்சி முழக்கத்திலும் ‘அம்மா’ என்கிற சொல் அளவுக்கதிமாக பயன்படுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, ஃபேஸ்புக்கில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் சட்டமன்ற உறுப்பினரான சிவசங்கர்.


இதற்கே மலைத்துப் போய்விட்டால் எப்படி? இனிமேல்தான் தேமுதிக அம்மா கோஷ்டியினர் களமிறங்கப் போகிறார்கள். அவர்களது ‘அம்மா’ துதியில் ஓ.பி.எஸ், செங்கோட்டையன் போன்ற அனுபவஸ்தர்களே வெட்கி, நாணி தலைகுனியக்கூடிய சூழல் உருவாகத்தான் போகிறது. அப்போது இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ஏற்கனவே 91-96 அம்மாவின் பொற்கால ஆட்சியிலும் நான்கைந்து காங்கிரஸ் கைப்புள்ளைகளை பிடித்து இம்மாதிரி ‘போற்றி’ பாடவைத்த வரலாற்றுப் பெருமை அதிமுக ஆட்சிக்கு உண்டு.

மேலும் ‘அம்மா’ என்கிற சொல்லின் பெருமையை நாம் அனைவரும் இப்போது உணர்ந்தாக வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அமெரிக்காவில் மாடுகள் கூட ‘அம்மா’ என்றுதான் சொல்கின்றன. அமெரிக்கா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இதுதான் நிலை. ஐக்கிய நாடுகள் சபைக்கு டெசோவின் தீர்மானத்தை அளிக்க அமெரிக்காவுக்குப் போயிருக்கும் ஸ்டாலின் அங்கே இந்த உண்மையை உணர்வார். தாய்மையின் பெருமையை பறைசாற்றும் ‘அம்மா’ என்கிற சொல்லை ஆயிரம் முறை என்ன.. லட்சம் முறை, கோடி முறை சொன்னாலும் போகிற வழிக்கு புண்ணியம்தான்.

சுயமரியாதை சுடர்களாக வாழும் பொதுவுடைமை இயக்கத்தின் தா.பாண்டியனும், திராவிட இயக்கத்தின் போர்வாள் வைகோவும், எந்த சித்தாந்தப் பின்னணி என்பதே தெரியாமல் தலைவராகி விட்ட மாவீரன் செந்தமிழன் சீமானும் இந்த அம்மா புகழ்பாடும் கலாச்சாரத்தை விமர்சித்ததுண்டா? அவர்களுக்கு இருக்கும் நாகரிகம் திமுகவின் சட்டமன்றத் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டாமா?

ஒன்றை மட்டும் இறுதியாகவும், உறுதியாகவும் சொல்லிக் கொள்கிறோம். கோயில்களில் கூட இறைவன் பெயரைச் சொல்லிதான் லட்சார்ச்சனை செய்கிறார்கள். மாறாக வைரவிழா காணும் வரலாற்றுச் சிறப்புமிக்க நம்முடைய சட்டமன்றத்தில் கோடியார்ச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ’அம்மா’ என்கிற சொல்லை இந்த ஐந்து வருடங்களில் குறைந்தபட்சம் ஒரு கோடி முறையாவது, சட்டமன்ற நடவடிக்கைப் பதிவேட்டில் பதிந்தே தீருவது என்கிற தீவிர லட்சியத்தோடு ஓ.பி.எஸ்.ஸின் சீரியத் தலைமையில் நம் சட்டமன்ற உறுப்பினர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.

உலக நாகரிக வரலாற்றில் எந்தவொரு சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ இத்தகைய சாதனை நடைபெற்றதாக வரலாற்றில் குறிப்புகள் ஏதுமில்லை. அவ்வகையில் இது உலக சாதனை ஆகிறது. அமெரிக்க செனட்டில் ‘மம்மி’ என்று ஆயிரம் முறை கூட சொல்லியிருக்க மாட்டார்கள். கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கு இந்த விஷயம் தெரிந்தால், அவர்களே முன்வந்து தங்கள் புத்தகத்தில் தற்கால சட்டமன்ற உறுப்பினர்களின் பெயரை பதித்து சிறப்பு செய்வார்கள். ஒலிம்பிக்கில் வேண்டுமானால் யார் அதிகமுறை ‘அம்மா’ என்று உச்சரிப்பது என்று போட்டியைக் கொண்டு வாங்களேன் பார்ப்போம். தங்கம், வெள்ளி, வெண்கலம், பித்தளை, அலுமினியம் என்று அத்தனைப் பதக்கங்களையும் நமது சட்டமன்ற உறுப்பினர்களே அள்ளிவந்து, இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

ஆனாலும் ஒரு சின்ன குறை இருக்கிறது. தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் தங்களை பெற்ற தாயை, தாய் என்று அழைக்காமல் ‘அம்மா’ என்று தவறுதலாக அழைக்கிறார்கள். தங்கத்தாரகை புரட்சித்தலைவியை
 தவிர வேறு யாரையாவது ‘அம்மா’ என்று அழைப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்கிற புதிய சட்டத்திருத்தத்தை நடப்பு சட்டமன்றத்திலேயே ஓ.பி.எஸ். முன்மொழிந்து, சரத்குமார் வழிமொழிந்து உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று சட்டமன்றத்துக்கு கோரிக்கை விடுக்கிறோம். மேலும் அமிர்தானந்தமாயி போன்ற பெண் சாமியார்கள் இனியும் தங்களை ‘அம்மா’வென்று விளம்பரப்படுத்தும் பட்சத்தில், மக்களை மோசடி செய்ததாக கருதி, அவர்களின் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டம் 302ன் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சாதனைகள் படைக்கப்படுவது பிற்காலத்தில் உடைக்கப்படுவதற்கே. அம்மா பிறரின் சாதனைகளை உடைப்பவரல்ல. அவர் முந்தைய ஆட்சிக்காலம் செய்த சாதனைகளை, அவரேதான் அடுத்த ஆட்சி அமையும்போதும் முறியடிப்பார் என்பது இந்தியாவே உணர்ந்த பேருண்மை. இந்த ஆட்சிக்காலத்தில் செய்யப்படும் இந்த கோடியார்ச்சனை சாதனையை விஞ்சிய சாதனையும் கூட, அடுத்த அம்மா ஆட்சிக்காலத்தில் மட்டுமே நடைபெறும்.


சாதனைகளுக்கே சால்ட் கொடுக்கும் சாகசத்தலைவி அல்லவா நம் சமூகநீதி காத்த வீராங்கனை?

31 அக்டோபர், 2012

நான் மலாலா

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலிருக்கும் ஸ்வாட் பள்ளத்தாக்கு பூலோக சொர்க்கம். இயற்கை தனது எழில் மொத்தத்தையும் கொட்டி செதுக்கிய அற்புதம். உலகமெங்கும் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் வாழ்நாளில் ஒரு முறையாவது அப்பகுதியை தரிசிக்க தவம் கிடப்பார்கள். அதெல்லாம் 2003 வரை. ஆப்கானிஸ்தானை ஒட்டியிருந்த இப்பகுதியிலும் தாலிபன் ஆதிக்கம் கொடிகட்டியது. பெண்கள் கல்விகற்க பிறந்தவர்கள் அல்ல என்பது தாலிபனின் தாரகமந்திரம். அவ்வளவு ஏன், வீட்டு வாசற்படியை அவர்கள் தாண்டுவதே பாவம் என்று நம்பினார்கள். 
ஆனால் மலாலா யூசுப்ஸாய் என்கிற பெண் குழந்தைக்கு இதெல்லாம் அவசியமற்ற மூடநம்பிக்கை என்று தோன்றியது. கொஞ்சம் முற்போக்காக சிந்திக்கக்கூடிய அப்பா அமைந்தது அவளது பாக்கியம். அங்கிருந்த சிறுநகரமான மிங்கோரவைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.

பெண்கள் கல்வி கற்பதைக் குறித்து தாலிபான்கள் பேச்சளவில் ஆட்சேபித்துக் கொண்டிருந்தபோதே மலாலா ஊடகங்களிடம் இதுகுறித்து தனது ஆட்சேபணையை வெளிப்படுத்தி வந்தார். 2008 செப்டம்பரில் பெஷாவரில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், “என்னுடைய அடிப்படை உரிமையான கல்வியை தடுக்க தாலிபான்களுக்கு என்ன தைரியம்?” என்று சீறினார்.

“தாலிபான்கள் தொடர்ச்சியாக ஸ்வாட் மாவட்டத்தின் பள்ளிகளை குறிவைக்கிறார்கள்” என்று மலாலா தனது டயரிக் குறிப்புகளாக பி.பி.சி. நிறுவனத்தின் இணையத்தளத்தில் எழுதியவை உலகைக் குலுக்கியது. மலாலாவுக்கு அப்போது வயது பதினொன்று. பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க அப்பகுதியில் மட்டுமே நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளை தாலிபான்கள் அச்சூழலில் முடக்கியிருந்தார்கள். 2009 ஜனவரியில் இனி பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்று பகிரங்கமாகவே ஆணையிட்டிருந்தார்கள்.

மலாலாவின் தந்தை சில பள்ளிகளை நடத்திவந்தார். தாலிபான்களின் கட்டளைப்படி அப்பள்ளிகள் இயங்கமுடியாத நிலையில் இருந்தன. அப்போது அவரது தந்தையிடம், யாரோ ஒரு பெண் பி.பி.சி. இணையத்தளத்தில் இங்கு நடக்கும் சூழல்களை குறித்து சிறப்பாக எழுதுகிறாள் என்று சில பிரிண்ட் அவுட்களை தந்திருக்கிறார்கள். அவற்றை வாசித்த மலாலாவின் தந்தை புன்முறுவல் செய்திருக்கிறார். அதையெல்லாம் எழுதுவது தனது மகள் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளவில்லை. “அப்பாவின் ஆதரவுதான் என்னுடைய கல்விக்காக என்னை போராடத் தூண்டியது” என்று பிறிதொரு நாளில் மலாலா சொன்னார். அப்பாவோடு இரவுகளில் நீண்ட நேரம் அரசியல் குறித்து விவாதிப்பது மலாலாவின் பொழுதுபோக்கு. 
பி.பி.சி.யில் மலாலா வெறுமனே தன்னைப் பற்றியும், தன்னுடைய கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளைப் பற்றியும் மட்டும் எழுதவில்லை. ஸ்வாட் பள்ளத்தாக்கில் நடக்கும் தாலிபன்களின் கொடூர அடக்குமுறை ஆட்சி, பெண்கள் கல்வி கற்பதின் அவசியமென்று அவருடைய எழுத்தில் உயர்வான சமூகப் பார்வை தொக்கி நின்றது.

“என் வீட்டுக்கு அருகிலேயே ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பள்ளிகளை இடித்திருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை இழுத்து மூடியிருக்கிறார்கள். பாகிஸ்தான் இராணுவம் அவர்களை ஆதரிக்கிறது என்கிற ஆணவம் அவர்களுக்கு இருக்கிறது. இராணுவம் மட்டும் இங்கே முறையாக தங்கள் பணிகளை மேற்கொண்டால், இப்படிப்பட்ட அபாயச்சூழலே ஏற்பட்டிருக்காது” என்று காட்டமாகவே மலாலா எழுதினார். அவரது அபயக்குரல் அமெரிக்கா வரை அசைத்துப் பார்த்தது. பாகிஸ்தான் இராணுவம் உடனடியாக பள்ளத்தாக்கு பகுதிக்கு விரைந்து, தாலிபான்களின் கொட்டத்தை அடக்கியது.

தாலிபான்கள் அங்கே வீழ்ந்தநிலையில் மலாலா சொன்னதுதான் ஹைலைட். “நல்லவேளையாக கடவுள் ஸ்வாட் பள்ளத்தாக்கில் அமைதியை நிலைநிறுத்திவிட்டார். இல்லாவிட்டால் இங்கே அமெரிக்காவோ, சீனாவோ வரவேண்டியிருந்திருக்கும்”

மலாலாவின் சாதனையை பறைசாற்றும் விதமாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மலாலா குறித்த ஆவணப்படம் ஒன்றினை எடுத்தது. ஊடகங்கள் அவரை பேட்டி எடுக்க போட்டாபோட்டி நடத்தின. ஸ்வாட் மாவட்டத்தின் குழந்தைகள் பாராளுமன்றத் தலைவராக மலாலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருதுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப் பட்டது. பாகிஸ்தானின் தேசிய அமைதிக்கான இளைஞர் விருதை முதலில் வென்றவர் இவர்தான்.


“நான் பிறந்ததின் பயன் மனிதகுலத்துக்கு பயன்பட வேண்டும். எனக்கு ஒரு புதிய கனவு இருக்கிறது. நான் அரசியல்வாதியாகி என் நாட்டை காக்க வேண்டும். என் நாடு பிரச்னைகளால் சீரழிந்திருக்கிறது. இச்சீரழிவை எப்பாடு பட்டேனும் சீர்செய்யவேண்டும்” என்று தன்னைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் பேசினார் மலாலா.

இதெல்லாம் வரலாறு.
கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று அன்று, ஒரு தேர்வினை முடித்துவிட்டு பஸ்ஸில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் மலாலா. முகத்தில் முகமூடி போட்டிருந்த மனிதன் ஒருவன் அந்த பஸ்ஸில் ஏறினான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. அங்கிருந்த பெண்களைப் பார்த்து “உங்களில் யார் மலாலா?” என்று வெறிபிடித்தாற்போல கத்தினான். மலாலாவை அடையாளம் கண்டவுடன் காட்டுத்தனமாக சுட்டான். ஒரு குண்டு தலையிலும், இன்னொரு குண்டு கழுத்திலும் பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே மலாலா நினைவிழந்தார். அவருக்கு அருகிலிருந்த இரண்டு பெண்களுக்கும் லேசான காயம்.

மலாலா பெஷாவரிலிருந்த இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தலையில் பாய்ந்து வலது மூளையின் பக்கத்தை பாதித்திருந்த குண்டினை மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை செய்து நீக்கி, உயிர்பிழைக்க வைத்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானிய தாலிபானின் செய்தித் தொடர்பாளர் ஈஷானுல்லா ஈஷான், இந்த அடாத கொலைமுயற்சி தங்களுடையதுதான் என்று கொக்கரித்திருக்கிறார். “மலாலா என்பவர் கடவுளுக்கும், சமூக ஒழுங்குக்கும் கீழ்ப்படியாமையின் சின்னம்” என்று விமர்சித்திருக்கிறார்.


“எங்களைப் பற்றி மோசமாக எழுதவேண்டாம் என்று உன் பெண்ணிடம் சொல்லு என்று பலமுறை மலாலாவின் தந்தையை நாங்கள் எச்சரித்திருந்தோம். ஆனால் அவர் எங்கள் பேச்சை கேட்கவில்லை. அதனாலேயே இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம்” என்று தங்களது இரக்கமற்ற கொலைமுயற்சிக்கு அவர் நியாயமும் கற்பிக்கிறார்.
இன்று உலகம் முழுக்கவே மலாலா விரைவில் குணம்பெற வேண்டும் என்று பிரார்த்தனைகள் நடக்கின்றன. அதே வேளையில் தாலிபான்கள் முன்பைவிட அதிகமாக கண்டிக்கப்படுகிறார்கள். ஓரளவுக்கு தாலிபான் ஆதரவாளர்களாக இருந்தவர்களை கூட இச்செயல் அவர்களை தாலிபான்களுக்கு எதிரான நிலையை எடுக்க வைத்திருக்கிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவில் தொடங்கி, அத்தனை உலகத் தலைவர்களும் மலாலாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய வளைகுடா நாடுகள் ஒட்டுமொத்தமாக மலாலாவுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதின் மூலமாக, தாலிபானின் பெண்கள் கல்விக்கு எதிரான செயலை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றன.

மலாலாவுக்கு சிகிச்சையளிக்க பிரிட்டன் ஆர்வம் காட்டியது. எனவே அவர் இங்கிலாந்துக்கு கோமாநிலையில் கொண்டுச் செல்லப்பட்டார். கடைசியாக கிடைத்த தகவலின் படி மலாலாவுக்கு நினைவு திரும்பி, சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கிறார். பயப்படும்படியான பாதிப்பு ஏதுமில்லை. மிக விரைவில் முழுநலம் பெறுவார் என்று மருத்துவர்கள் உறுதியளிக்கிறார்கள். 
முன்னாள் பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய சிறப்பு கல்வித் தூதராக இருக்கிறார். அவர் “நான் மலாலா” என்கிற ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். 2015 வாக்கில் உலகில் பள்ளிக்குச் செல்லாத பெண்களே இல்லை என்கிற நிலையை எட்டவேண்டியது நம் இலட்சியம் என்று சொல்லியிருக்கிறார் பிரவுன். பாகிஸ்தானில் எது நடக்கவேண்டும், எம்மாதிரியான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று மலாலா விரும்பினாரோ, இன்று அது உலகம் முழுக்க அவர்மீது நடந்த கொலைமுயற்சியால் ஏற்பட்டிருக்கிறது.

மலாலாவின் பள்ளித்தோழி ஒரு மேற்கத்திய ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் குரலை உயர்த்திச் சொல்கிறார். “நாங்கள் ஒவ்வொருவருமே மலாலாதான். நாங்கள் எங்களுக்காக கல்வி கற்போம். நாங்கள்தான் வெல்லுவோம். அவர்களால் எங்களை எப்போதுமே தோற்கடிக்க முடியாது”
இதைவிட மலாலாவுக்கு வேறென்ன வேண்டும்?

(நன்றி : புதிய தலைமுறை)

30 அக்டோபர், 2012

தலைமுறைகளை தாண்டிய ஹீரோ


எனக்கு பத்து வயதாக இருந்தபோது முதன்முதலாக ஜேம்ஸ்பாண்டை திரையரங்கில் பார்த்தேன். டிமோதி டால்டன் நடித்த ‘லிவிங் டேலைட்ஸ்’.

டிமோதியின் ஸ்டைலில் மிரண்டுப்போய் அப்பாவிடம் சொன்னேன். “ஜேம்ஸ் பாண்ட் எவ்ளோ அழகா இருக்காம்பா...”

“இவனெல்லாம் என்ன அழகு? ‘டாக்டர் நோ’வுலே சான் கானரியைப் பார்க்கணும். ஜேம்ஸ்பாண்டுன்னா அவன் தான் ஜேம்ஸ்பாண்ட்” அப்பா கானரி ரசிகர்.

போன வருடம் என்ஜினியரிங் முடித்த அண்ணன் பையன் சொல்கிறான். “டேனியல் கிரேக்தான் ஜேம்ஸ்பாண்டுலேயே பெஸ்ட். அவனோட கண்ணு மாதிரி உலகத்துலே எவனுக்குமே இல்லை”

ஒன்று மட்டும் புரிகிறது. ஐம்பது ஆண்டுகளாக சான்கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் க்ரேக்  என்று ஆறு பேர் ஜேம்ஸ்பாண்ட்களாக நடித்துவிட்டார்கள். முதல் தலைமுறை ஜேம்ஸ்பாண்ட் நடிகரை, அடுத்த தலைமுறை ஆட்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அதற்கடுத்த தலைமுறை அத்தனை பேரையும் தூக்கிப் போட்டுவிட்டு புதுநடிகருக்காக சண்டை பிடிக்கிறார்கள். ஆனால் மூன்று தலைமுறையுமே ஒன்றுபட்டு ஒற்றுமையாக ‘ஜேம்ஸ் பாண்டை’ தலை மேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது.

1962ல் ஜேம்ஸ்பாண்டின் முதல் படமான ‘டாக்டர் நோ’ வெளியானது. அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் ‘ஸ்கை ஃபால்’, ஜேம்ஸ்பாண்டின் இருபத்தி ஐந்தாவது திரைப்படம். முதல் படத்துக்கு அப்போது என்ன வரவேற்பு இருந்ததோ, அதைவிட பன்மடங்கு வரவேற்பு வரவிருக்கும் படத்துக்கும் இப்போது இருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாக ஒரு நாயகனுக்கு உலகம் முழுக்க மவுசு குறையாமல் இருக்கும் அதிசயம் ஜேம்ஸ்பாண்டுக்குதான் சாத்தியம். சினிமாவில் அவர் ஓர் அதிசயம். ஸ்டார்வார்ஸ் திரைப்படங்களுக்குப் பிறகு, உலகில் அதிகம் பிரபலமான திரைத்தொடர் ஜேம்ஸ்பாண்ட் படங்கள்தான்.

ஏன் ஜேம்ஸ்பாண்டை எல்லோருக்கும் பிடிக்கிறது?

நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்பார்

நல்ல லட்சியங்களுக்காக உயிரை பணயம் வைப்பார்

கெட்டவர்களிடம் சண்டை போட தயங்கியதேயில்லை

அழகான பெண்கள் எல்லோருக்குமே அவரைப் பிடிக்கும்

அனாயசமாக அசுரவேகத்தில் அட்டகாசமான ஸ்டைலில் கார் ஓட்டுவார்

படத்துக்குப் படம் வெவ்வேறு நாடுகளை சுற்றுவார். உலகம் சுற்றும் வாலிபன்

நவீன ஆயுதங்களை பயன்படுத்துவார்

பாப் கலாச்சாரத்தின் அடையாளம்

இனம், மொழி, நாடு, அரசியல் என்று அனைத்து எல்லைகளையும் உடைத்து உலகுக்கே பொதுவானவர் 

இன்னும் நிறைய காரணங்களை வரிசையாக அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால் இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு காரணம் உண்டு. அவர் நிஜமான ‘ஆண்மகன்’. அதுவும் தைரியமான ஆண்மகன். ஓர் ஆண் எப்படி இருக்கவேண்டுமென்று உலகம் விரும்புகிறதோ, குறிப்பாக பெண்கள் விரும்புகிறார்களோ அப்படியே ஜேம்ஸ் இருக்கிறார். ஜேம்ஸை திரையில் பார்க்கும் ஆண்கள் ஆரம்பத்தில் அவர்மீது பொறாமை கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் தன்னையே (வேறு வழியின்றி) ஜேம்ஸாக கருதிக்கொண்டு கொண்டாடத் தொடங்குகிறார்கள். எனவேதான் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ஷாருக்கான், ஜேம்ஸ்பாண்டாக நடிக்க விரும்புகிறேன் என்று அறிவிக்கிறார்.

ஜேம்ஸ்பாண்டை முதன்முதலாக உருவாக்கிய நாவலாசிரியர் இயான்ஃப்ளெமிங்குக்கு ஆரம்பத்தில் சொல்லிக்கொள்ளும்படி எந்த சுவாரஸ்யமான ஐடியாவும் இல்லை. “1953ல் முதன்முதலாக நாவல் எழுதும்போது என் நாயகனை மந்தமானவனாகவே சித்தரிக்க விரும்பினேன். எந்த சுவாரஸ்யமும் அற்ற ஒருவன் சந்திக்கும் அதிசுவாரஸ்யமான நிகழ்வுகள் என்றே யோசித்தேன். நிகழ்வுகள்தான் முக்கியம். ஹீரோ சும்மா ஒப்புக்குச் சப்பாணி என்பதுதான் அடிப்படை. இதற்காகவே உச்சரிக்கும்போது எந்த சுவாரஸ்யமும் தராத ஒரு பெயரை என் பாத்திரத்துக்கு சூட்டினேன். அதுதான் ஜேம்ஸ்பாண்ட். நான் பிறந்ததிலிருந்து கேட்டதிலேயே ரொம்ப மொக்கையான பெயர் இதுதான்” என்று நியூயார்க்கர் பத்திரிகைக்கு தந்த பேட்டியில் இயான்ஃப்ளெமிங் கூறினார். ஜேம்ஸ்பாண்ட் என்பவர் அப்போது அமெரிக்காவின் பிரபலமான பறவையியல் நிபுணர்.
 வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஃப்ளெமிங். அக்காலத்தில் பிரபலமான ராபர்ட் ஃப்ளெமிங் & கோ என்கிற வங்கி இவர்களது குடும்பத்துக்கு சொந்தமானது. முனிச் மற்றும் ஜெனிவா பல்கலைக்கழகங்களில் படித்தார். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் கடற்படையின் உளவுத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் கடற்படையில் இருந்து விலகி பத்திரிகையாளர் ஆனார். கடற்படையில் பணிபுரியும்போதே தனது நண்பர்களிடம் உளவாளியை நாயகனாக்கி ஒரு நாவல் எழுதப்போவதாக சொல்லியிருந்தார். அவரது போர் அனுபவங்களும், பத்திரிகையுலகம் தந்த அறிவும்தான் ஜேம்ஸ்பாண்ட் என்கிற பாத்திரத்தின் துல்லியத்துக்கு அச்சாரம்.

ஜேம்ஸ்பாண்ட் எம்-ஐ6 என்கிற பிரிட்டிஷ் ரகசிய உளவு ஸ்தாபனத்தின் ஏஜெண்ட்.  007 என்பது அவரது ரகசியக் குறியீட்டு எண். ஆரம்பத்தில் ஃப்ளெமிங் நினைத்தமாதிரியாக இல்லாமல் எழுத, எழுத 007 மிகசுவாரஸ்யமானவராக மாறிப்போனார். தன்னையே ஜேம்ஸாக நினைத்து எழுதித்தள்ளினார். உணவு, மது, உடை, சிகரெட்டு என்று தான் எதையெல்லாம் விரும்பினாரோ, அதையெல்லாம் ஜேம்ஸ்பாண்டுக்கும் விருப்பமானதாக ஆக்கிவிட்டார். நியூயார்க்கர் பேட்டியில் அவர் குறிப்பிட்ட ‘மந்தமான ஏஜெண்ட்’ நிஜத்தில் ஃப்ளெமிங்தான். என்ன எழுதும்போது அவரையறியாமலேயே சுவாரஸ்யமானவராக அவரை அவரே சித்தரித்துக் கொண்டார். ஃப்ளெமிங்தான் ஜேம்ஸ். ஜேம்ஸ்தான் ஃப்ளெமிங். சந்தேகமிருந்தால் ஸ்டைலாக புகைபிடிக்கும் ஃப்ளெமிங்கின் புகைப்படத்தைக் காணுங்கள்.

1964ல் ஃப்ளெமிங் மறைந்துவிட்டார். உயிரோடு இருக்கும்போதே தனது பாத்திரத்தை திரையில் பார்க்கும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. ஃப்ளெமிங்குக்கு பிறகு ஜான் கார்ட்னர், ரேமண்ட் பென்ஸன், கிங்ஸ்லி அமிஸ், செபஸ்டியன் ஃபாக், ஜெஃப்ரி டேவர் என்று ஏராளமானோர் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதி ஃப்ளெமிங்கின் பாத்திரத்துக்கு சாகாவரம் வழங்கியிருக்கிறார்கள். காமிக்ஸ், டிவி தொடர், சினிமா, வீடியோ கேம்ஸ் என்று விஷூவலின் அத்தனை வடிவிலும் ஜேம்ஸ் சக்கைப்போடு போட்டிருக்கிறார். ராணிகாமிக்ஸ் படித்துவிட்டு ‘பாண்ட்... மை நேம் ஈஸ் ஜேம்ஸ்பாண்ட்’ என்று அலட்டிக்கொண்டு பேசும் பொடிசுகளை நீங்களும் பார்த்திருக்கிறீர்கள்தானே?
துப்பாக்கி, அழகிகள், நவீன கார், மிடுக்கான ரீட் அண்டு டெய்லர் ஷூட், வித்தியாசமான வில்லன்கள், ஆக்ன், நீரிலும் நிலத்திலும் வானத்திலும் சேஸிங்... உலகத்தில் எது மாறினாலும் மாறுமே தவிர ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான இந்த ஃபார்முலா மாறவே மாறாது. என்ன தற்கால நவீன ஜேம்ஸ் பாண்ட் செல்போன் பயன்படுத்துகிறார்.

எல்லா நாடுகளிலுமே ஜேம்ஸ்பாண்டின் தாக்கம் அளப்பரியது. சூப்பர் ஹீரோ போன்ற காதுச்சுற்றல்கள் இல்லாத ஜேம்ஸ்பாண்ட் பாணி, உலகளாவிய ஆக்‌ஷன் இயக்குனர்களை பாதித்ததில் ஆச்சரியமேதுமில்லை. மற்ற ஹீரோக்களைப் போல இல்லாமல் ஜேம்ஸ் கொஞ்சமாகதான் பூச்சுற்றுவார். உலகம் முழுக்கவே கதாநாயகன் என்பவன் நல்லவனாக மட்டுமின்றி வல்லவனாகவும் இருக்க வேண்டும். அநீதியை எதிர்த்து, அஞ்சாமல் போராட வேண்டும். அழகாகவும் இருக்கவேண்டும் என்றுதான் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்ப்பார்ப்பையெல்லாம் முழுக்க பூர்த்தி செய்கிறார் 007. ஹீரோவுக்கு சம்பளம் கொடுத்து பட்ஜெட் கட்டுப்படி ஆகவில்லையென்றால், பெண்களை கூட ‘லேடி ஜேம்ஸ்பாண்ட்’ ஆக சித்தரித்து, படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு வெளியாகிய இந்தித் திரைப்படமான ‘ஏக் தா டைகர்’ கூட ஜேம்ஸ்பாண்ட் படங்களின் தாக்கத்தில் வெளிவந்து நூறுகோடி ரூபாய் வசூலித்தது. முன்னதாக ‘ஏஜெண்ட் வினோத்’ என்கிற திரைப்படம். உளவுத்துறை அதிகாரியை ஹீரோவாக்கும்போது தம்மையறியாமலேயே ஜேம்ஸை பிரதியெடுத்துவிடுகிறார்கள் இயக்குனர்கள். நம்மூரில் அந்தகால மாடர்ன் ஆர்ட்ஸ் தயாரிப்புப் படங்கள் பலவும் அச்சு அசலாக ஜேம்ஸ் படங்களை ‘உல்டா’ அடித்து எடுக்கப்பட்டவையே. வல்லவன் ஒருவன், சிஐடி சங்கர் போன்ற படங்களை பார்க்கும்போது, அவற்றில் பழைய ஜேம்ஸ் பாண்ட் படங்களின் காட்சி அப்பட்டமாக இடம்பெற்றிருப்பதை காணலாம். இவற்றில் பெரும்பாலும் ஜெய்சங்கர்தான் ஹீரோ என்பதால் அவரையே ‘தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட்’ என்று ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். அடுத்து ரஜினி-கமல் சகாப்தம் உருவான காலத்திலும், அவர்களை உயர்த்திப் பிடிக்க ஜேம்ஸ்பாண்டே கைகொடுத்தார். என்ன.. உளவாளி என்பதை சிஐடியாகவோ அல்லது போலிஸ் இன்ஸ்பெக்டராகவோ, இல்லையென்றால் பிரைவேட் டிடெக்டிவ்வாகவோ நம்மூருக்கு ஏற்றமாதிரியாக மாற்றிக் கொள்வார்கள்.

ஜேம்ஸ்பாண்டின் தாக்கம் சினிமாவில் மட்டுமல்ல. கதைகளிலும் வெளிப்படுகிறது. சுஜாதா, ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று நம்மூர் எழுத்தாளர்களின் க்ரைம் கதைகளிலும் உளவாளிதான் பெரும்பாலும் ஹீரோ. பெண்கள், ஆக்ஷன் என்று ஜேம்ஸ்ரக கரம்மசாலாதான் கதை என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

பிரிட்டிஷ் உளவுப்படையின் ஏஜெண்டான ஜேம்ஸ், இன்று ஒரு பிரபஞ்ச ஹீரோ. ஏனெனில் வில்லன்களிடம் இருந்து அவர் காப்பாற்றிக் கொள்வது தன்னையோ, தன் நாட்டை மட்டுமோ அல்ல. ஒட்டுமொத்த உலகையும் சேர்த்துதான். எனவேதான் உலகின் எந்த மொழியில் எழுதப்படும் கதைகளிலும், எடுக்கப்படும் படங்களிலும் அவரது பாதிப்பு நீடிக்கிறது. அதற்கேற்றாற்போல ஜேம்ஸும் வருடங்கள் ஆக, ஆக தன்னைப் புதுப்பித்துக் கொண்டே செல்கிறார். உடையில் தொடங்கி செல்போன் வரை இன்றைய ஜேம்ஸ் பயன்படுத்துவது அதிசமீபத்திய பொருட்களைதான். எனவேதான் ஜேம்ஸ் இத்தனை ஆண்டுகள் கழித்தும் நமக்கு சலிக்காமலேயே இருக்கிறார்.



007 பிட்ஸ்

உலகப் பிரபலமான பின்னணி இசையோடு ஸ்டைலான நடை நடந்து வந்து ஜேம்ஸ் திரையை சுடுவார். திரை முழுக்க ரத்தமயமாகி ‘டைட்டில்’ வரும். ஓரிரு படங்கள் தவிர்த்து, ஜேம்ஸ்பாண்டின் எல்லா படங்களிலும் இதுதான் டைட்டில் கார்ட்.

இவரது படங்களில் ‘பஞ்ச் டயலாக்’ பிரசித்தம். அறிமுகக் காட்சியிலேயே அனாயசமாக ஒரு சாகஸத்தை நிகழ்த்தி முடித்துவிட்டு, ஒரு பஞ்ச் கட்டாயம் வைப்பார்.

டைட்டில் கார்டில் எப்போதுமே அப்போதைய பிரபல பாடகரின் பாடல் இடம்பெறும். பாடல் வரியிலும் படத்தின் பெயர் இடம்பெறும்.

அலுவலகத்தில் நுழைந்ததுமே தன் தொப்பியை கழற்றி, தொப்பி மாட்டும் ஸ்டேண்டின் மீது சரியாக வீசுவார்.

மதுபான விடுதிகளுக்கு செல்லும்போது ‘வோட்கா மார்டினி’ என்கிற வகையைதான் அருந்துவார்.

ஜேம்ஸின் பாஸ் மிஸ் எம்மின் உதவியாளராக மணிபென்னி என்றொரு பெண்மணி இருப்பார். அவர் ஜேம்ஸை ஒருதலையாக ஐம்பது ஆண்டுகளாக காதலித்துக் கொண்டே இருக்கிறார்.

பெண்கள் இன்றி ஜேம்ஸ் படங்களை கற்பனைகூட செய்துப் பார்க்க முடியாது. இவரால் காப்பாற்றப்படும் பெண்கள் இவரை காதலிப்பார்கள். அல்லது இவரைப்போன்ற சக ரகசிய பெண் ஏஜெண்டுகள் காதலிப்பார்கள். அதுவுமில்லையேல் வில்லனின் ஆசை நாயகிகளுக்கு, நம் ஹீரோ மீது காதல் வந்துவிடும். காதலே இல்லாமல் ஜேம்ஸ் பாண்ட் படம் எடுக்கவே முடியாது.

படத்தின் கடைசி காட்சியில் கதாநாயகியோடு இருப்பதுபோல படம் முடிக்கப்படும். ஒரு சில படங்களில் மட்டும் கதாநாயகி இறந்துவிடுவதால் கடைசிக்காட்சியில் இந்த சம்பிரதாயத்தை கடைப்பிடிக்க முடிவதில்லை.