26 ஏப்ரல், 2019

காமிக்ஸாக ‘மெகா’பாரதம்!

“இந்தக்கால குழந்தைகளுக்கு ஸ்கூல்புக் தவிர வேறெந்த வாசிப்புமே வெளியிலே இல்லை. எப்போ பார்த்தாலும் டிவி, கம்ப்யூட்டர், மொபைல்கேம்ஸ்...” என்று அலுத்துக் கொள்ளும் பெற்றோரா நீங்கள்?

உங்கள் குழந்தைகளுக்கு இந்த கோடைவிடுமுறையில் மகாபாரதத்தை அறிமுகப்படுத்துங்கள். அதுவும் அவர்களுக்கு பிடித்த காமிக்ஸ் வடிவத்தில்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தனித்தனி புத்தகங்களாக அமர்சித்திரக்கதைகளாக வாசித்த அதே மகாபாரதம்தான். இப்போது முழுத்தொகுப்பாக மூன்று வால்யூம்களில் 1,312 பக்கங்களில் ஏ4 அளவில் பிரும்மாண்டமாக வெளிவந்திருக்கிறது. வெளியிட்டிருப்பவர்கள் அதே அமர் சித்திரக்கதை நிறுவனத்தினர்தான்.

உலகின் மிகப்பழமையான இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். வியாசர் சொல்ல, விநாயகரே எழுதினார் என்பது நம்பிக்கை. அதற்காக இதை மதம் சார்ந்த பிரதியாக மட்டும் அணுக வேண்டியதில்லை. பண்டைய இந்திய பண்பாடு, தத்துவங்கள் குறித்த அறிமுகத்துக்கு இராமாயணமும், மகாபாரதமும் வாசிப்பதை தவிர்த்து வேறெந்த வழியுமில்லை. மேலும் இவற்றில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, சம்பவங்கள் ஆகியவை வாசிப்பவரின் படைப்புத்திறனை மேலும் கூர் தீட்டவும் செய்யும்.
குழந்தைகளுக்கு ஏன் மகாபாரதம்?

ஏனெனில், குடும்பம் மற்றும் நட்பின் முக்கியத்துவத்தையும், மதிப்பையும் அவர்கள் மகாபாரதம் வாசிப்பதின் மூலமாக உணரமுடியும். மனிதன் என்பவன் ஒரு சமூகவிலங்கு. சமூகத்தின் நெறிமுறைகளோடு அவன் ஒத்து வாழவேண்டியதின் அவசியத்தை மகாபாரதம் எடுத்துக் காட்டும். இந்த வாசிப்பு பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும்.

உங்கள் குழந்தை, ‘மகாபாரதம்’ வாசித்தால் கீழ்க்கண்ட சில தெளிவுகளை பெறலாம்.

* பொறாமைதான் துன்பங்களுக்கு அடிப்படை காரணம். கவுரவர்களின் தாயார் காந்தாரியின் கதை இந்த அடிப்படை உண்மையை அழகாக எடுத்துக்கூறும்.

* அர்த்தமற்ற வெறுப்பு என்பது எதிரிகளைதான் உருவாக்கும். மேலும் ஒரு தனிமனிதனின் மகிழ்ச்சியை மொத்தமாகவே இந்த வெறுப்பு பறித்துவிடும். பாண்டவர்கள் மீது கவுரவர்கள் காட்டிய வெறுப்பின் மூலமாக இதை உணரலாம். இறுதியில் பாண்டவர்களால் குருவம்சமே அழிந்ததுதான் மிச்சம். யார் மீதும் எதற்காகவும் தேவையின்று வெறுப்பு கொள்ளக்கூடாது என்பதே மகாபாரதம் நமக்கு நடத்தும் பாடம்.

* நல்ல நண்பனை தேர்ந்தெடுப்பது வாழ்வில் மிகவும் முக்கியம். கர்ணன் மாவீரனாக இருந்தும், நல்ல மனிதாக இருந்தும் துரியோதனின் நட்பு அவனது வீழ்ச்சிக்கு காரணமானது. நட்பை தேர்ந்தெடுப்பதில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

* எல்லாவற்றுக்கும் மேலான சக்தியை (ஆத்திகர்களுக்கு கடவுள், நாத்திகர்களுக்கு இயற்கை) நாம் உணர்ந்து, நம்பிக்கையோடு பின்பற்றினால் வெற்றி நிச்சயம். அர்ஜூனன் தன் வில்லாற்றலைவிட கிருஷ்ணனை நம்பினான். போரில் வென்றான்.
* வாழ்க்கையின் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டால், அதன் பாதிப்பு வாழ்க்கை முழுக்கவே தொடரும். குந்தியின் வாழ்க்கையிலிருந்து இதை நாம் அறியலாம். அவரது மூத்த மகன் கர்ணனின் பிறப்பை மறைத்ததால், அவர் அடைந்த துயரங்கள் எண்ணிலடங்காதவை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மையை மறைக்கக்கூடாது என்கிற எண்ணத்தை குந்தியின் வாழ்க்கையிலிருந்து நாம் அறியலாம்.

* எந்தவொரு பெண்ணையுமே அவமதிக்கக்கூடாது. அதுவே நம்முடைய வீழ்ச்சிக்கு பிரதானமான காரணமாகிவிடும். பாஞ்சாலியை அரசவையில் அவமதித்த துஷ்யந்தன், நமக்கு இதைதான் உணர்த்துகிறான்.

* எந்தவொரு அபாயகரமான பழக்க வழக்கத்துக்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது. சூது விளையாட்டுக்கு அடிமையாகிவிட்ட தர்மரின் கதை இதை நமக்கு அழுத்தமாக சொல்கிறது.

வாட்ஸப் தலைமுறையில் வாழும் இன்றைய குழந்தைகளுக்கு நம்முடைய இதிகாசங்களில் சுவையான சம்பவங்களோடு விவரித்துச் சொல்லப்பட்டிருக்கும் இம்மாதிரியான கருத்துகள் மிகவும் அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் என்பதை மகாபாரதம் சொல்கிறது. குழந்தைகளை கவரக்கூடிய வகையிலான எளிமையான கதைத்தொகுப்புகளாக உருவாக்கப்பட்டிருப்பதே மகாபாரதத்தின் பெரும் சிறப்பு.
“குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் நாங்கள் வெளியிட்டிருக்கும் ‘மகாபாரதம்’ மிகவும் பிடிக்கும். எண்பதுகளில் தனித்தனியாக 42 நூல்களாக வெளியிடப்பட்ட இந்தக் கதைகள், தொண்ணூறுகளில் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு வெளியாகி பல்லாயிரக்கணக்கில் விற்றன. அப்போதே கூட தமிழில் தனித்தனி புத்தகங்களாக வந்துவிட்டாலும், மொத்தத் தொகுப்பாக வரவில்லையே என்கிற குறை ஏராளமானோருக்கு இருந்தது.

அப்போது குழந்தைகளாக தனிநூல்களாக வாசித்தவர்கள், நீண்டகாலமாக எங்களிடம் ‘மகாபாரதம்’ காமிக்ஸ் முழுத்தொகுப்பு எப்போது வருமென்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வாசித்து சிலிர்த்த மகாபாரதத்தை தங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலேயே இப்போது இந்த பெரும் தொகுப்பை,  முழு வண்ணம், ஹார்ட்பவுண்ட் அட்டையில் சர்வதேசத் தரத்தில் மிகவும் மலிவான விலையில் கொண்டு வந்திருக்கிறோம்.
வாசகர்களிடம் பிரமாதமான வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து இதேபோல இராமாயணத்தையும் கொண்டுவரவேண்டும் என்று அனைவரும் கேட்கிறார்கள். அதையும் செய்வோம். எங்களால் நிறைய குழந்தைகள் தமிழில் நூல்கள் வாசிக்க முன்வருகிறார்கள் என்கிறபோது, இதையெல்லாம் செய்யவேண்டியது எங்கள் கடமையாகிறது” என்று உற்சாகமாக சொல்கிறார் அமர் சித்திரக் கதையின் மண்டல விற்பனை மேலாளர் நாகராஜ்.

மகாபாரதம், நம் முன்னோர் வழிவழியாக கடத்தி நமக்குக் கொண்டுச்சேர்ந்த அறிவுச்செல்வம். அதை அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்துவோமே?

(நன்றி : தினகரன் வசந்தம்)

8 மார்ச், 2019

பெண்ணியம் : ஒரு கட்டிங்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ‘பெண்ணியம்’ (feminism) என்கிற சொல்லே உருவாகிறது. ஆரம்பக் கட்டத்தில் பெண்ணியம் பேசியவர்கள் 99 சதவிகிதம் ஆண்களே. Feminism என்கிற வார்த்தையை முதன்முதலாக உருவாக்கியவருமே கூட பிரெஞ்சு சிந்தனையாளரான ஓர் ஆண்தான்.

நாடுகள் குடியரசாக ஆகிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் தங்களுக்கு வாக்குரிமை கேட்டு பெண்கள் போராடியதே பரந்துப்பட்ட சமூக அளவில் முதல் பெண்ணிய உரிமைக்குரல் எனலாம். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கநிலை.

உலகப்போர்கள் நடந்துக் கொண்டிருந்தபோது போரில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும்பாலும் ஆண்கள். அப்போது போரில் ஈடுபட்ட நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக பெண்களே இருந்தார்கள். அதையடுத்து போர்களுக்குப் பின்னரான காலக்கட்டமான இருபதாம் நூற்றாண்டின் மத்தியில்தான் குடும்பத்தில் தொடங்கி சமூகம், நாடு, உலகம் என்று எல்லைகளை வரையறுக்காமல் ‘ஆணுக்குப் பெண் சமம்’ என்கிற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.

பெண்ணியம் என்பது குடும்பம், சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் ஆணுக்கு இணையான இடத்தை பெண்ணுக்கும் கோருவது என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.

தொண்ணூறுகளில் உலகமயமாக்கலுக்குப் பின்னான பெண்ணியச் சிந்தனைகள் வேறு புதிய பரிமாணங்களை எட்டியது. இதை வார்த்தைகளில் வரையறை செய்ய இயலாது. தங்கள் உடையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தில் தொடங்கிய, இந்த பெண்ணிய அலை இப்போது தங்கள் உடல் குறித்த அரசியலை விவாதிப்பதைக் கடந்து வேறு வேறு அதீத எல்லைகளை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

வரலாற்று அடிப்படையில் ‘இது நல்லது’, ‘இது கெட்டது’ என்றெல்லாம் நிகழ்வுகள் நடக்கக்கூட சமகாலத்தில் யாராலும் துல்லியமாக கூறிவிட முடியாது. எது நல்லது, எது கெட்டது என்பதையெல்லாம் எதிர்காலம் முடிவு செய்துக் கொள்ளட்டும்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

கடந்த வாரம் ‘90 ml’ என்கிற பெண்ணியம் பேசும் திரைப்படம், தமிழகமெங்கும் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

’90 ml’ என்பது ‘குடி’மகன்களுக்கு கவர்ச்சிகரமான அளவு. மதுவிடுதிகளில் “ஒரு லார்ஜ், ஒரு ஸ்மால்” என்று ஆர்டர் கொடுப்பார்களே, அந்த அளவுதான் 90 ml. நம் டாஸ்மாக் கடைகளின் அளவீடுகளின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் ‘ஒரு கட்டிங்’.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘சரக்கு’க்காக ராத்திரி முழுக்க தெருத்தெருவாக அலையும் ஓர் ஆணின் கதை ‘வ - குவார்ட்டர் கட்டிங்’ என்கிற தலைப்பில் வெளியானது. அதே போல ஐந்து பெண்கள் கூடி சரக்கு போடும் படத்துக்கு ’90 ml’ என்று தலைப்பு வைத்திருப்பது பொருத்தமானதுதான்.

தொண்ணூறுகளுக்குப் பிறகான உலகமயமாக்கல் சூழலில் பெண்ணியம் என்ன பாடுபடுகிறது என்பதற்கு சரியான உதாரணம் காட்ட வேண்டுமானால் ’90 ml’ஐ காட்டலாம்.

‘ஆண் சரக்கு அடிக்கும்போது, நாங்கள் அடிக்கக் கூடாதா?’ என்று பெண்கள் கேட்டால் அது சம உரிமை கோருவது மாதிரியான நியாயமான கேள்வியாகதான் இருக்கக்கூடும்.

ஆனால் –

போதைப்பழக்கம் என்பது ஆண், பெண் இருபாலருக்குமே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் என்பதே மருத்துவ உண்மை.

’90 ml’ படத்தில் ஐந்து பெண்கள் அவ்வப்போது சரக்கு அடிக்கிறார்கள். அந்த ஐந்துப் பெண்களில் தலைவி மாதிரி இருக்கும் ஓவியாவின் ஆண் நண்பர், சைட் டிஷ்ஷாக ஹாஃப்பாயில் போட்டுக் கொடுக்கிறார்.

இம்மாதிரி குடியும் குடித்தனமுமான கூட்டங்களில் ஓவியாவும், அவரது குழுவினரும் முழுக்க பேசிக்கொள்வது ‘டபுள் மீனிங்’ அல்ல ‘டைரக்ட் மீனிங்’ வசனங்கள். குறிப்பாக பெண்களின் உடல் அங்கங்கள் குறித்த கேலியான வருணனை, பேச்சுலர் ரூம்களில் நடபெறும் டிரிங்ஸ் பார்ட்டிகளின் எல்லையையே கூட மீறுகிறது.

பெண்கள் தனியாக பேசும்போது இப்படித்தான் பேசுவார்களா என்று இந்தக் கட்டுரையை எழுதும் ஆணுக்குத் தெரியாது. எனினும், அவ்வாறுதான் பேசுவார்கள் என்றால் பெண்களுக்குள்ளேயே ‘ஆணாதிக்கம்’ இருப்பதாகதான் எண்ண வேண்டியிருக்கிறது.

படத்தில் ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட லெஸ்பியன் தம்பதியினர் காட்டப்படுகிறார்கள். ‘ஓரினச்சேர்க்கை சட்டத்துக்கு விரோதமானது அல்ல’ என்கிற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றன.

ஆனால் –

படம் முழுக்கவே அத்தம்பதியினர் குறித்த கேலியான பார்வையையே மற்ற பாத்திரங்கள் கொண்டிருக்கிறார்கள், பாலியல்ரீதியான நகைச்சுவை அவர்களை வைத்து உருவாக்கப்படுகிறது எனும்போது அம்மாதிரியான ‘முற்போக்கு’ சித்தரிப்பின் நோக்கமே பழுதுபடுகிறது.

படத்தின் மையப்பாத்திரமாக ஓவியா வருகிறார். ‘திருமணம்’ உள்ளிட்ட சமூகத்தின் எவ்விதமான கட்டுமானங்களிலும் தன்னை பொருத்திக்கொள்ள முடியாது என்கிற சுதந்திர மனப்பான்மை கொண்டவர். அவர் அவராக இருப்பது பிரச்சினையில்லை. அவருடன் பழகும் மற்றப் பெண்களையும் அவராகவே மாற்றும் முயற்சியில் அவரது பாத்திரம் படைக்கப்பட்டிருப்பது நெருடல். குடிக்கத் தூண்டுகிறார், கஞ்சா புகைக்க அழைத்துச் செல்கிறார், குடும்பத்தாரோடு அவரவருக்கு இருக்கும் முரண்களை தீர்க்க உறவுகளையே வெட்டிவிடும் தீர்வினைதான் முன்வைக்கிறார்.

‘அவரவர் அவரவருக்கு விருப்பப்பட்டவர்களோடு இருந்துக் கொள்ளலாம்’ என்கிற ஓவியா கொடுக்கும் பாதைதான் நம்முடைய குடும்பப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாக முடியுமா?

இக்கட்டுரையை எழுதுபவர் ஓர் ஆண் என்கிற அடிப்படையில் ஓவியா முன்வைக்கும் பெண்ணிய நியாயத்தை அவரால் முழுவதுமாக உணரமுடியாமல் கூட இருக்கலாம். எனினும், இப்படம் இளைய தலைமுறையினரின் சிந்தனைகளில் ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களை சுட்டிக் காட்டுவதற்கு அவர் ஆணாக இருப்பது நிச்சயமாக தகுதிக்குறைவு அல்ல.

பெண்ணியத்தை நாம் ‘90 ml’ ஓவியாவிடம் இருந்துதான் கற்க வேண்டுமா அல்லது அன்றாடம் நாம் காணும் பூக்கட்டி விற்பது, இட்லி சுட்டு விற்பது என்று குடும்பச்சுமைகளை சுகமாக கருதி தாங்கி, தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்றும் அமைப்புச்சாராத் தொழில் செய்யும் விளிம்புநிலை பெண்களிடமிருந்து கற்கவேண்டுமா?

(நன்றி : குங்குமம்)

25 பிப்ரவரி, 2019

அது ஒரு கொண்டாட்டமான காலம்!


“மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?”

“சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடிப் போகும்”

திரையில் நம்பியாரின் ‘பஞ்ச்’ டயலாக்குக்கு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ எம்.ஜி.ஆர் கவுண்டர் கொடுக்கிறார்.

மக்கள் ‘ஓ’ வென்று கத்துகிறார்கள். விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது.

மணல் பரப்பப்பட்ட தரையில் ஓம்பிரகாஷ் மாமாவின் மடியில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனான நான் அதிர்ந்து, முழித்து எதிரே வண்ணத்திரையில் கையில் வாளோடு ஜெயலலிதாவை நோக்கி புன்னகையும், நம்பியாரை நோக்கி ஆவேசமுமாக நின்றுக் கொண்டிருந்த வாத்யாரை கண்டு எல்லோரையும் போல ஆர்ப்பரித்தேன். சண்டைக்காட்சி முடிந்தவுடன் மீண்டும் மாமாவின் மடியில் தூக்கம்.

அதிகாலை ஒரு மணிக்கு படம் முடிய ஓம் பிரகாஷ் மாமா, பாலாஜி அண்ணா, செந்தில் அண்ணா, பிரபா அண்ணா என்று அனைவரும் மாறி மாறி என்னைத் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். வழிநெடுக வாத்யாரின் வாள்வீச்சு, நம்பியாரின் நரித்தந்திரம், ஆர்.எஸ்.மனோகரின் கம்பீரமான வில்லத்தனம், ஜெயலலிதாவின் அசரடிக்கும் பேரழகு என்று பேசிக்கொண்டே வந்தார்கள். அரைத்தூக்கத்தில் அவர்களது பேச்சு கொடுத்த ஆர்வம்தான், இன்றுவரை என்னை சினிமாப் பைத்தியமாக வைத்திருக்கிறது.

என்னைப் போன்று நாற்பதைத் தொட்டுவிட்டவர்களுக்கு இதுபோல நிறைய பால்யகால நினைவுகளை டூரிங் கொட்டாய்கள் வாழ்நாள் முழுக்க விதைத்திருக்கிறது. மறக்க முடியாத இரவு. என் நாடி, நரம்பு, ரத்தம், சதையில் எல்லாம் சினிமாவை குளுகோஸாக ஏற்றிய இரவு.

பரபரப்பான சென்னை மாநகராட்சியின் அங்கமாகிவிட்ட மடிப்பாக்கத்தில் தனலட்சுமி என்றொரு டெண்டு கொட்டாய் இயங்கியது என்று சொன்னால், அங்கே வசிக்கும் இன்றைய இளையதலைமுறையினர் நம்பவே மாட்டார்கள். அந்த கொட்டாய் இருந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இப்போது டிடிஎஸ், க்யூப் டிஜிட்டல் புரொஜெக்ஷன், ஏசி உள்ளிட்ட நவீன வசதிகளோடு குமரன் என்கிற தியேட்டர் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தரை டிக்கெட் 50 காசு. பெஞ்ச் 75 காசு. இரும்பு சேர் 1 ரூபாய் என்பது கட்டண விவரம். சைக்கிள் டோக்கன் 25 காசு என்று நினைவு. எட்டணாவுக்கு ருசியான ரவி சோடா ஃபேக்டரின் ஜில்லென்ற சோடா கிடைக்கும். நிறைய வெங்காயம் போட்ட சமோசா நாலணாதான். முறுக்கு, அவித்த வேர்க்கடலை எல்லாம் ரொம்ப சல்லிசான ரேட்டு. ஒரு குடும்பமே வெறும் பத்து ரூபாயில் தனலட்சுமியில் சந்தோஷமாக படம் பார்க்கலாம்.

இன்று அங்கேயே இருக்கும் குமரன் தியேட்டரில் பார்க்க வேண்டுமானால் பார்க்கிங், டிக்கெட் கட்டணம், Food & beveragesக்கு எல்லாம் சேர்த்து ஆயிரம் ரூபாயாவது மொய் வைக்க வேண்டியிருக்கிறது.

என்னுடைய அப்பா, வெறும் பத்து ரூபாயில் எங்கள் குடும்பத்துக்கு கொடுத்த சந்தோஷத்தை, நான் என் குடும்பத்துக்கு நூறு மடங்கு செலவழித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. வெறும் முப்பத்தைந்து ஆண்டுகளில் இப்படியொரு விலையேற்றம் வேறு எந்தத் துறையிலும் நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

மடிப்பக்கத்தில் மட்டுமல்ல. தமிழகம் முழுக்கவே பெரிய நகரங்களின் புறநகர், சிறுநகர், கிராமங்களில் எல்லாம் டூரிங் கொட்டாய்கள் சக்கைப்போடு போட்ட காலம் ஒன்று உண்டு. பழைய எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களோடு ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று எங்கள் கால ஹீரோக்களின் படங்களையெல்லாம் நாங்கள் நூற்றுக்கணக்கில் அங்கேதான் மகிழ்ச்சியாக குடும்பமாக கண்டுகளித்தோம். வாரத்துக்கு இரண்டு படம் மாற்றுவார்கள். ஒரு பழைய படம், வார இறுதிக்கு புதிய படம் என்று காம்பினேஷன். வாரத்தில் எல்லாக் கிழமைகளிலும் மாலை 6 மணிக்கு, இரவு 9 மணிக்கு என்று இரண்டு காட்சிகள். சனி, ஞாயிறு மட்டும் மதியம் 3 மணிக்கு சிறப்பு மேட்னி காட்சி உண்டு.

சினிமாவைத் தவிர்த்தால் எங்களுக்கெல்லாம் வேறென்ன பொழுதுபோக்கு இருந்தது?

அதே மடிப்பாக்கம் தனலட்சுமி, சில ஆண்டுகள் கழித்து கீழ்க்கட்டளை என்கிற ஊரில் இயங்கியது. டெண்டு கொட்டாய்களுக்கு, மற்ற நிரந்தர அரங்குகளுக்கு தருவதைப் போல பர்மணென்ட் லைசென்ஸ் கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு டெம்பரவரி லைசென்ஸ்தான் தருவார்கள். லைசென்ஸ் முடிந்தபிறகு ஏற்கனவே இயங்கிய இடத்திலோ அல்லது அருகில் வேறேதும் புதிய வசதியான இடத்திலோ மீண்டும் குடிசை போட்டு ‘புதுப்பொலிவோடு’ படம் ஓட்டுவார்கள். கடைசியாக, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கீழ்க்கட்டளை தனலட்சுமி தியேட்டரில் சிம்பு நடித்த ‘தம்’ பார்த்ததாக நினைவு. இப்போது தனலட்சுமி, அங்கே இல்லை.


‘நியூஸ் மினிட்’ ஆங்கில இணைய இதழில் வந்திருக்கும் கட்டுரை ஒன்று மீண்டும் டூரிங் கொட்டாய் நினைவுகளில் என்னை உலவச் செய்திருக்கிறது.

இப்போது டூரிங் கொட்டாய்களே தமிழகத்தில் இல்லையென்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

வேலூர் மாவட்டத்தின் புத்துக்காடு என்கிற ஊரில் கடந்த 1985ல் இருந்து இன்றுவரை ‘கணேஷ் திரை அரங்கம்’ என்கிற டூரிங் கொட்டாய் சிறப்பாக நடந்து வருகிறது என்று தகவல் கொடுக்கிறது ‘நியூஸ் மினிட்’.

பி.கே.கணேசன் என்பவர், இந்திய திரையரங்கை நடத்தி வருகிறார். புத்தூர், ‘பராசக்தி’யை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாளின் சொந்த ஊர். பெருமாள், உயிரோடு இருந்தவரை சிவாஜி வருடாவருடம் இந்த ஊருக்கு வருவாராம். எனவே, ஊர் முழுக்க சிவாஜி ரசிகர்கள் என்கிறார்கள்.


பெரிய திரையரங்குகளில் இடம்பெற்றிருப்பதை போல சிறப்பான வெண்திரை, கியூப் புரொஜெக்ஷன், டிடிஎஸ் ஒலியமைப்பு (7.1 சேனல்) என்றெல்லாம் இருந்தும் இன்னமும் பழமை மாறாமல் மணல் தரை வசதியோடு இந்த அரங்கம் நடந்துக் கொண்டிருக்கிறது.

நகரங்களில் இருக்கும் நவீன தியேட்டர்களில் வாரநாட்களில் ரசிகர்கள் இல்லாமல் அரங்கங்கள் காற்றாட, இன்னமும் நூற்றுக்கணக்கான ரசிகர்களின் ஆதரவோடு படங்கள் இங்கே திரையிடப் படுகின்றனவாம். விஜய், ரஜினி, அஜித் போன்ற ஹீரோக்களின் படங்கள் திரையிடப்படும் போதெல்லாம் 400, 500 டிக்கெட் கூட ஒரு காட்சிக்கு விற்கப்படுவதுண்டாம். தரை டிக்கெட் 25 ரூபாய், 30 ரூபாய் சேர் டிக்கெட், 40 ரூபாய் பாக்ஸ் டிக்கெட் என்று கட்டணம் நிர்ணயித்திருக்கிறார்கள்.

புத்தூர் ‘கணேஷ் திரை அரங்கம்’ போல தமிழகம் முழுக்க மலிவு விலையில் படம் காட்டக்கூடிய டெண்ட் கொட்டாய்கள் மீண்டும் உருவாக்கப்படுவதே, ‘தமிழ் ராக்கர்ஸ்’ போன்ற திரையுலகப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும். ஒவ்வொரு படத்துக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு குறைவாக கிடைத்தாலும், நிறைவாக நீண்டகாலத்துக்கு வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

திரையுலகம் இதைப்பற்றி யோசிக்க வேண்டும். அந்த பொற்காலம் மீண்டும் திரும்ப ‘சி’ சென்டர் தியேட்டர்கள் நிறைய பெருகுவதே ஒரே வழி.


(நன்றி : குங்குமம்)

7 ஜனவரி, 2019

போதையேறிப் போச்சி…

வரலாற்றுக்கு நல்லவர், கெட்டவர் பாகுபாடெல்லாம் இல்லை. அந்தந்த காலக்கட்டத்து சம்பவங்களை அது தன்னியல்பாகவே, எதிர்காலங்களுக்கான வரலாற்றுப் பெட்டகமாக பதிவு செய்துக் கொள்கிறது. அச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பதை காலம் முடிவு செய்துக் கொள்ளும்.

போதை உலகின் பேரரசனாக எண்பதுகளில் உலகை அச்சுறுத்திய பாப்லோ எஸ்கோபார், நல்லவனா, கெட்டவனா?

‘நாயகன்’ படத்தின் நாயகன் வேலுநாயக்கர் சொன்னதுமாதிரி, “தெரியலியேப்பா” என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

போதை கெட்டதுதான். மனிதகுலத்தை சிந்திக்க விடாமல் செயலிழக்கச் செய்வதுதான். குறைவான போதை, அதிகமான போதை என்றெல்லாம் இதில் பாகுபாடு பிரிப்பதெல்லாம் வெறும் சப்பைக்கட்டே.

சட்டவிரோதம் என்று அந்தக் காலத்தில் அமெரிக்கா சுட்டிக் காட்டிய எஸ்கோபாரின் செயல்பாடுகளை, பின்னாளில் அரசாங்கங்களே சட்டப்பூர்வமான வரையறைகளை செய்து நடத்திக் கொண்டிருக்கும் கூத்தை எங்கே போய் அடித்துக் கொள்வது?

அரசாங்கமே மது விற்கிற மாநிலத்தில் இருந்துக்கொண்டு, பாப்லோ எஸ்கோபாரை கெட்டவன் என்று கண்ணை மூடிக்கொண்டு முத்திரை குத்திட முடியவில்லை.

உலகப்போர்கள், மனிதக்குலத்தின் சாபக்கேடு. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த முதல் உலகப்போரும் சரி, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து நடந்த இரண்டாம் உலகப்போரும் சரி. இன்றுவரையில் அவற்றுக்கு தொடர்பே இல்லாத மனிதர்களிடம்கூட அவர்களே அறியாதவகையில் தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இனிமேல் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும்கூட அந்த தாக்கம் இருக்கத்தான் போகிறது.

குறிப்பாக இரண்டாம் உலகப்போரை சொல்லலாம். அந்தப் போரின் இறுதியில் பெரும்பாலும் அரசர்கள் இல்லாமல் போனார்கள். பல நாடுகளில் ஜனநாயகம் மலர்ந்தது. தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டுமென மக்களே முடிவெடுக்கக்கூடிய சுதந்திரம் கிடைத்தது என்றெல்லாம் ஆயிரத்துச் சொச்சம் நற்பலன்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இதே அளவுக்கு எதிர்பலன்களும் உண்டு என்பதுதான் கொடுமை.

போதை என்பது மனிதன் தோன்றிய நாளிலிருந்தே இருந்துக்கொண்டுதான் இருந்தது. மறுக்கவில்லை.

ஆனால் –

அபரிதமான வளம் கொழிக்கும் போதைத்தொழில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால்தான் கார்ப்பரேட் வழிமுறைக்கு வந்தது. உண்மையைச் சொல்லப்போனால் மற்றத் தொழில்கள் கார்ப்பரேட்மயமாவதற்கு ஒருவகையில் வழிகாட்டியதே போதைத்தொழில்தான். அதில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித்துறையை (R & D) எல்லாம் உருவாக்கி கச்சிதமாக தொழில் செய்தவர் பாப்லோ எஸ்கோபார்.

கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். இதற்கெல்லாம் பின்னணியில் நிச்சயம் பெரிய தலைகள் இருப்பார்கள் என்பதை நாம் புதியதாக உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

அமெரிக்காவும், ரஷ்யாவும் குடுமிப்பிடிச்சண்டை போட்ட பனிப்போர் காலக்கட்டத்தில் அரசியல் நிலையற்ற நாடுகளில் ஏராளமான புரட்சிகர குறுங்குழுக்கள் தோன்றின. இவை இந்த பெரும் வல்லரசுகளின் ஜால்ராவுக்கு ஏற்றமாதிரி தாளம் தட்டின.

ஒருக்கட்டத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் சில ஒப்பந்தங்களுக்கு உடன்படும் போதெல்லாம் அவர்கள் உருவாக்கிய குழுக்களை அப்படியே அனாதையாக விட்டன. இவர்களை நம்பி தொழிலுக்கு வந்தவர்கள், சொந்த அரசுகளை பகைத்துக்கொண்டு அமைப்பை தொடர்ந்து நடத்தமுடியாமல் கைவிட்டார்கள். அல்லது சட்டத்துக்கு விரோதமான தொழில்களில் இறங்கி, தங்கள் இலட்சியத் தாகத்தை கைவிட்டு சமூகவிரோதிகள் ஆனார்கள்.

அவ்வகையில் தென்னமெரிக்க நாடுகளில் கலகக்காரர்களில் கணிசமான பகுதியினர் பின்னாளில் போதைத்தொழில் செய்யத் தலைப்பட்டனர். அமெரிக்காவின் ஒரு தலைமுறையையே போதையால் சீரழித்தனர். ஒருகாலத்தில் தங்களுக்கு அல்லக்கையாக இருந்தவர்களே, தங்கள் நாட்டை சூறையாடத் தொடங்கிவிட்டனரே என்கிற கோபத்தில் அமெரிக்கா துப்பாக்கியை தூக்கியது. சிலர் அடங்கிப் போனார்கள். சிலர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் மாவீரர்களாக தங்களை கட்டமைத்துக் கொண்டார்கள்.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் பாப்லோ எஸ்கோபாரை நாம் கவனிக்க வேண்டும். அவர், முக்கியத்துவம் பெறுவதும் இந்த வரலாற்றுக் காலக்கட்டத்தில் வாழ்ந்தவர் என்பதால்தான்.

தினகரன் குழுமத்தில் நான் பணிக்குச் சேர்ந்த சமயத்தில், வெவ்வேறு விதமான பணிகளை செய்ய என்னை பணிப்பார் எங்கள் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர். அவர்கள். இதையெல்லாம் நமக்கு ஏன் கொடுக்கிறார் என்று நான் குழம்பியதுண்டு. பின்னாளில் எனக்கு சில பெரிய பொறுப்புகளை கொடுப்பதற்கான பயிற்சியாகதான் அவற்றையெல்லாம் தந்திருக்கிறார். ஒரு பத்திரிகையாளன், எல்லாத்துறை குறித்த அறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு.

திடீரென ஒருநாள், “பாப்லோ எஸ்கோபார் பற்றி, ‘குங்குமம்’ வார இதழில் ஒரு தொடர் எழுது” என்று பணித்தார்.

“கொலம்பியா பற்றியோ, பாப்லோ எஸ்கோபார் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாதே?” என்று தயங்கினேன்.

“அதெல்லாம் தெரியாது. நீதான் எழுதுகிறாய்..” என்று சொல்லி பார்க்கவேண்டிய படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், வாசிக்க வேண்டிய நூல்கள் ஆகியவற்றை அவரே எடுத்துச் சொன்னார்.

தொடர் எழுதுவதற்கு நான் தயாராவதற்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்தார். அன்றிலிருந்து எஸ்கோபாருக்குள் மூழ்கினேன். stockholm syndrome என்பார்களே, அந்தப் பிரச்சினைக்கு உள்ளாகிவிட்டேன். அந்நாட்களில் பாப்லோ, எனக்கும் காட்ஃபாதர் ஆகிவிட்டார். அவருக்கு வெறித்தனமான ரசிகன் ஆகிப்போனேன். மூன்றே மாதங்களில் தயாராகி எம்.டி.யிடம், “ஆரம்பிக்கிறேன் சார்” என்றேன்.

பெரிய எழுத்தாளர்களுக்கு செய்வதைப் போல தமிழகமெங்கும் சினிமாப் படங்களுக்கு ஒட்டுவதை போல ‘காட்ஃபாதர் : போதை உலகின் பேரரசன்’ தொடரின் அறிவிப்புக்கு பிரும்மாண்டமான போஸ்டரெல்லாம் ஒட்டி, இந்த எளியப் பத்திரிகையாளனை கவுரவப் படுத்தினார் எங்கள் எம்.டி. அவருக்கு வெறுமனே நன்றி சொல்லியெல்லாம் நன்றிக்கடனை தீர்த்துவிட முடியாது.

ஏற்கனவே சில தொடர்களை பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன்.

ஆனால் –

‘காட்ஃபாதர்’ ஸ்பெஷல். ஏனெனில் 70 வாரங்களுக்கு நீளக்கூடிய மெகாத்தொடரை என்னாலும் எழுதமுடியும் என்று என்னை நானே எனக்கு நிரூபித்துக்கொள்ளக் கூடிய வாய்ப்பை இது வழங்கியது.

தொடரின் முதல் அத்தியாயத்தில் தொடங்கி, கடைசி அத்தியாயம் வரை எனக்கு ஊக்கமும், தொடருக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதிலும் உற்றத்துணையாக இருந்தவர் ‘குங்குமம்’ வாரஇதழின் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன். இத்தொடர் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதற்கு எழுத்து மட்டுமல்ல, அண்ணன் அரஸ் அவர்களுடைய உயிரோட்டமான ஓவியங்களும் காரணம். பல வாரங்கள் அவருடைய ஓவியத்தை பார்த்துவிட்டுதான் அந்தந்த வாரத்துக்கான அத்தியாயங்களையே எழுதுவேன். அன்பான அண்ணன்கள் இருவருக்கும் நான் நன்றி சொல்லப்போவதில்லை. தம்பிக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமை இது.

தொடராக வந்தபோது வாராவாரம் ‘குங்குமம்’ இதழில், அயல்நாட்டுப் பத்திரிகைத் தொடர்களுக்கு இணையாக அழகுசெய்த அண்ணன் வேதா அவர்களின் வடிவமைப்புக் குழுவினருக்கு நன்றி சொல்ல இதையொரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்கிறேன்.

‘குங்குமம்’ இதழில் வாராவாரம் வாசித்தவர்களுக்கு, ஒட்டுமொத்த நூலாக வாசிக்கும்போது வேறுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். முதன்முறையாக இப்போது நூலாகதான் வாசிக்கப் போகிறீர்கள் என்றால் ஜெட் வேக பயணத்துக்குத் தயாராகுங்கள்.

Happy reading!

இந்நூலை என்னுடைய காட்ஃபாதர், எழுத்தாளர் பா.ராகவன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

அன்புடன்
யுவகிருஷ்ணா

5 ஜனவரி, 2019

சினிமாவுக்கு கதை எழுதுவது எப்படி?

“ஒரு ஊருலே ஒரு நரி. அதோட கதை சரி”

உலகின் மிக சிறிய கதை இதுதான். இந்த கதையை கடந்து வராதவர்கள் யாருமே நம்மில் இருக்க முடியாது. இதை சினிமாவாக எடுக்க முடியுமா?

முடியும்.

‘ஈ’யை வைத்தே ராஜமவுலி எடுத்திருக்கிறார். நரியை வைத்து நாம் எடுக்க முடியாதா?

அந்த நரிக்கு ஒரு நண்பன், ஒரு குடும்பம், ஒரு காதலி, ஒரு வில்லன், ஒரு பிரச்சினை என்று கூட்டிக்கொண்டே போனோமானால் ஐந்து பாட்டு, நாலு ஃபைட்டு வைத்து சுவாரஸ்யமாக இரண்டரை மணி நேரத்தில் ஒரு கதை சொல்லிவிடலாம் இல்லையா?

சினிமாவுக்கு அது போதும்.

இதுமாதிரி கதையை எழுததான் இந்த நூலில் கற்றுக்கொள்ளப் போகிறோம். “இதை எழுதும் நீ எத்தனை படங்களுக்கு கதை எழுதியிருக்கிறாய், உன்னுடைய தகுதி என்ன?” என்கிற நியாயமான கேள்வியை வாசிக்கும் நீங்கள் கேட்கலாம். அதற்கான முழுத்தகுதியும், உரிமையும் உங்களுக்கு உண்டு.

இதுவரை எந்தப் படத்துக்கும் நான் கதை எழுதியதில்லை. அதே நேரம், நான் எழுதி எந்தப் படமும் படுதோல்வி அடைந்ததில்லை என்று பாசிட்டிவ்வாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எழுதத் தெரிந்ததால் எழுதுகிறேன். வாசிக்கத் தெரிந்ததால் வாசிக்கிறீர்கள். எழுத்தோ, வாசிப்போ ஒன்றில் மற்றொன்று உயர்ந்ததோ, தாழ்ந்ததோ கிடையாது. ‘சினிமாவுக்கு கதை எழுதுவது எப்படி?’ என்கிற சூத்திரத்தை நாம் இருவரும் இணைந்தேதான் கற்றுக்கொள்ளப் போகிறோம். வகுப்பறையில் உங்களோடு பெஞ்சில் அருகே அமர்ந்திருக்கும் மாணவன்தான் நானும்.

அப்படியெனில் ஆசிரியர்?

1906ல் வெளிவந்த உலகின் முதல் முழுநீளத் திரைப்படமான ‘தி ஸ்டோரி ஆஃப் த கெல்லி கேங்’கில் தொடங்கி, போன வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்களின் கதாசிரியர்கள் வரை நமக்கு லட்சக்கணக்கிலான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்துதான் நாம் சினிமாவுக்கு கதை எழுத கற்றுக் கொள்ளப் போகிறோம்.

உலகின் முதல் முழுநீளப் படத்தின் கதை ஏதேனும் சரித்திரக் கதையாகதான் இருக்குமென்று நீங்கள் கருதலாம். ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ மாதிரி அதுவொரு போலிஸ் படமென்று சொன்னால் உங்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருக்கும்.

1906ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியான அந்த திரைப்படம் சுமார் ஆயிரம் ஆஸ்திரேலிய பவுண்டுகளை பட்ஜெட்டாக கொண்டு எடுக்கப்பட்டு, இருபத்தையாயிரம் பவுண்டுகளை வசூலித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக உருவெடுத்தது.

நெட்கெல்லி என்கிற கேங்ஸ்டர் அந்த நாட்களில் ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலம். அவனும் அவனுடைய குழுவினரும் செய்யாத அட்டூழியங்களே இல்லை. பிற்பாடு அவன் தூக்கில் தொங்கவிடப்பட்டான். அவனுடைய வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட நாடகமே, சினிமாவாக ‘தி ஸ்டோரி ஆஃப் த கெல்லி கேங்’ என்று எடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படத்தில் மொத்தமே ஆறு காட்சிகள்தான். வன்முறையாளர்களை ஒடுக்க போலிஸ் திட்டமிடும் காட்சியில் தொடங்கும் படம், கிளைமேக்ஸில் நெட்கெல்லியோடு சண்டை நடந்து அவனை காலில் சுட்டு கைது செய்வதோடு முடிவடைகிறது.

முதலில் ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்ட இந்த மவுனப்படம், பின்னர் நியூஸிலாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து என்று நாடு விட்டு நாடு பயணித்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருந்ததாம்.

இந்தப் படம் வெளிவரும் வரை சினிமா என்பது கதை சொல்லும் ஊடகமாக இருந்தது இல்லை. டிரெயின் ஓடுவது, குதிரைப் பந்தயம் மாதிரி துண்டுக் காட்சிகளையும் நியூஸ் ரீல்களையும் வைத்து அதுவரை ஒப்பேற்றிக் கொண்டிருந்தவர்கள், நாடகத்தை போலவே சினிமாவிலும் கதை சொல்லலாம். செமத்தியாக கல்லா கட்டலாம் என்பதை கண்டறிந்தார்கள். சினிமா பொழுதுபோக்கு ஊடகமாகவும் உருவெடுத்தது அப்போதுதான்.

அடுத்த ஏழு ஆண்டுகளிலேயே தாதாசாகேப் பால்கே தயாரித்து, இயக்கிய ‘ராஜா ஹரிச்சந்திரா’, இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமாக வெளிவந்தது. இதிகாசங்கள், புராணங்கள் என்று பல நூற்றாண்டுகள் கதை சொல்லி, கதை கேட்டு வளர்ந்த இந்தியர்கள் வெகுவிரைவிலேயே சினிமாவுக்கு அடிமை ஆனதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்தியப் பாரம்பரியப் பெருமையை சினிமாவில் கதையாக சொல்லியே வெள்ளையர்களின் அடிமைத்தளையை உடைக்கவும் பயன்படுத்தினார்கள் என்பதெல்லாம் வரலாறு.

இந்த கதையை எல்லாம் ஏன் உங்களுக்கு மெனக்கெட்டு சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால், இதுமாதிரி நாம் நிறைய கதைவிட கத்துக்கணும். சினிமாவில் கதை எழுத இந்த ‘கதைவிடுற’ பண்புதான் அடிப்படை தகுதியே.

- ‘சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்’ நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து...