பி.பி.எல். சான்யோவில் 'ராக்கம்மா கையத் தட்டுவை' எத்தனைமுறை ரீவைண்ட் செய்து கேட்டிருப்பேன் என்பதற்கு கணக்கேயில்லை. தளபதியோடு வெளியான 'குணா'வில் துரதிருஷ்டவசமாக 'கண்மனி' மட்டும்தான் சூப்பர்ஹிட்டு. மாறாக தளபதியில் ஒவ்வொரு பாட்டும் மெகாஹிட்டு. இளையராஜா கமலுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று நொந்துகொண்டேன். அப்போதெல்லாம் தீபாவளிக்கு தீபாவளி ரஜினி-கமல் அட்டகாசம் நிச்சயம். நாயகன் - மனிதன், வெற்றிவிழா - மாப்பிள்ளை, தளபதி - குணா, பாண்டியன் - தேவர்மகன், குருதிப்புனல் - முத்து என்று சிலவருட போட்டிகள் நினைவில் நிற்கிறது. போதாதற்கு விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் படங்களும் ரேஸூக்கு உண்டு.
அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் என்று காமெடி கமர்ஷியல் ரூட்டில் போய்க்கொண்டிருந்த கமலுக்கு, பழைய குருடி கதவைத் திறடியென, 91ஆம் ஆண்டு திடீரென்று 'வித்தியாச' மோகம் பொத்துக்கொண்டு வந்துவிட்டிருக்க வேண்டும். 'குணா' படத்தின் ஸ்டில்கள் அவ்வளவாக கவரவில்லை. மாறாக 'தளபதி' கலக்கிக் கொண்டிருந்தார். கேசட் கவரில் (லஹரி கேசட்?) அச்சடிக்கப்பட்டிருந்த ரஜினியின் 'சைட் போஸ்' ஸ்டில் இன்றும் மறக்க முடியாதது. கிளாஸ் ரூமில் செந்தில்தான் கமலை காரணம் காட்டி என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பான். கமல் ஏன் தான் போயும் போயும் பைத்தியக்காரனாக நடிக்கிறாரோ என்று நொந்துப் போயிருந்தேன்.
எப்படியும் செந்தில் முதல்நாளே தளபதியை பார்த்துவிட்டு, கிளாஸுக்கு வந்து திரைக்கதை சொல்லிக் கொண்டிருப்பான். நாம் 'குணா'வைப் பார்க்காவிட்டால் தலைவருக்கு எவ்வளவு கேவலம் என்று மனச்சாட்சி உறுத்தியது. துரதிருஷ்டவசமாக அந்தக் காலத்தில் என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் ரஜினி ரசிகர்களாக இருந்து தொலைத்தார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'ஒலியும், ஒளியும்' பார்க்கும்போது நான் பட்டபாடு இருக்கிறதே? உஸ்ஸப்பா...
பாடல்காட்சிகளில் கமல் கொஞ்சம் தாராளம், ஏதோ ஒரு பாட்டில் ஜட்டி போட்டுக் கொண்டு நீச்சல் குளத்தில் குளிப்பார். ரஜினியோ உடைவிஷயத்திலும் சரி, ஹீரோயினை காதலிக்கும் விஷயத்திலும் சரி. அநியாயத்துக்கு மிலிட்டரி கண்ணியம். இந்த 'பெண்' சகவாசத்தாலேயே கமலுக்கு கெட்டவன் என்ற இமேஜ் பெண்களிடமும் ஏறிவிட்டிருந்தது. இந்த இமேஜ் லாஜிக்படி பார்த்தால் கமலின் ரசிகனும் கெட்டவனாக, ஆம்பளை லோலாயியாக, இந்த எழவெடுத்த சமூகத்தில் பார்க்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.
இந்த ரசிகமனோபாவ லாஜிக்கில் இன்னொரு குளறுபடி ஒன்றினையும் நான் அப்போது கண்டுபிடித்திருந்தேன். எம்.ஜி.ஆரை ரசித்தவர்கள் நிறையபேர் கமலை ரசித்தார்கள். சிவாஜியை ரசித்தவர்கள் ரஜினி ரசிகர்களாக இருந்தார்கள். ஆக்சுவலாக, இது உல்டாவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ தலைகீழாக இருந்ததை பெரும்பாலான ரசிகர்களிடம் அறிவியல்பூர்வமாக இல்லாமல் வாய்வழியாக எடுத்த ஒரு கணக்கெடுப்பில் உணரமுடிந்தது.
எங்கள் வீட்டிலேயே எனக்கு ஒரு ஜென்மவிரோதி இருந்தாள். என்னுடைய தங்கை. ஜோதி தியேட்டரில் வெளியான எல்லா ரஜினி படத்தையும் வெளியான ரெண்டு நாளிலேயே அப்பா அவளை அழைத்துப்போய் காட்டிவிடுவார். நான் மட்டும்தான் அனாதை. நானாகவே முயற்சி எடுத்துப் போய் கமலை திரையில் பார்த்தால்தான் உண்டு. (அப்பா எம்.ஜி.ஆர். வெறியர் என்றாலும், அரசியல் காரணங்களால் சிவாஜி ரசிகராக கன்வெர்ட் ஆகி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தது. எனவே சிவாஜி - ரஜினி என்ற தொடர்ச்சியான ரசிக மனோபாவம்). பிற்பாடு தளபதி பார்த்துவிட்டு அப்பா அடித்த கமெண்ட் "ஒவ்வொரு ஃபிரேமுக்கும் கலக்கியிருக்காண்டா. சிவாஜியை மிஞ்சிட்டான்!"
ஆன்லைன் புக்கிங்கெல்லாம் எதிர்காலத்தில் நடக்குமென்ற சாத்தியத்தையே திரையரங்குகள் அறியாத தீபாவளி அது. மூன்று நாட்களுக்கு முன்பாக ரிசர்வேஷன் தொடங்கும். என் பிரெண்டு (கம்) பங்காளி ஒருவனோடு உதயம் காம்ப்ளக்ஸுக்கு சைக்கிளில் போயிருந்தேன். அவனுக்கு தளபதி, எனக்கு குணாவென்று ஒப்பந்தம். கையில் தாராளமாக 50 ரூபாய் இருந்தது. பால்கனி டிக்கெட்டே பண்ணிரண்டோ, பதினைந்தோ என்பதாக நினைவு (உதயத்தில் அப்போது பால்கனி இருந்தது).
வளாகம் முழுக்க மனிதத்தலைகள். 'தளபதி' ஸ்டில் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகளில் ரஜினி ரசிகர்கள் வளைய வந்து கொண்டிருந்தார்கள். 'குணா' டிஷர்ட் எங்கேயாவது கிடைக்குமாவென்று விசாரிக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டேன். இடதுபுறம் (பெட்ரோல் பங்கையொட்டி) ரஜினியின் கம்பீர மெகா கட்டவுட். வலதுபுறம் சன்னியாசி வேடத்தில் கமல் கட்டவுட், அய்யகோ. முகப்பில் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் சிறிய அளவுகளில் விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக்குக்கு எல்லாம் குட்டி குட்டி கட்டவுட். ரிலீஸ் தேதியன்று ரஜினி-கமல் கட்டவுட் இருதரப்பு ரசிகர்கள் மோதலால் இங்கேதான் எரிந்தது.
மடிப்பாக்கம் தவிர்த்த வெளியுலகில் ரஜினியின் நிஜமான மாஸை நான் நேரில் பார்த்த நாள் அதுதான். பத்து மணி ரிசர்வேஷனுக்கு எட்டு மணிக்கு போயிருந்தோம். எங்களுக்கு முன்பாக வரிசையில் குறைந்தபட்சம் 750 பேராவது நின்றிருந்தார்கள். ரிசர்வேஷன் கவுண்டரையே திறக்காமல், ரிசர்வேஷன் சார்ட்டில் முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் 'ஹவுஸ்ஃபுல்' போட்டிருந்தார்கள். சந்திரனில் வெளியாகிய 'குணா'வுக்கு பெரிய வரவேற்பில்லை. அந்த கவுண்டர் ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான கூட்டம்தான். தளபதி டிக்கெட் கிடைக்க வாய்ப்பேயில்லை என்று தெரிந்ததும் பங்காளி நொந்துப்போனான். இதனால் எனக்கும் 'குணா'வை ரிசர்வ் செய்யும் எண்ணம் போய்விட்டது. ஏற்கனவே பெரியதாக ஆர்வம் இல்லை என்பதும் வேறொரு காரணம்.
தீபாவளி அன்று காலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தேன். செந்தில் அண்ணா ப்ரெஷ்ஷாக சைக்கிளில் வந்தார். "குமாரு காலையில் 9 மணி ஷோ ஆல்பட்லே தளபதி இருக்கு. வர்றியா?" மனசுக்குள் சந்தோஷம். இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், "குணா இருந்தா சொல்லுண்ணா" என்று பிகு செய்தேன். செந்தில் அண்ணா கொஞ்சம் வித்தியாசமானவர். இன்றுவரை நான் பார்த்த மனிதர்களில் அவர் ஒருவர்தான் ஜெய்சங்கருக்கு தீவிர ரசிகராக இருந்தவர். "வர்றதுன்னா வா. வராங்காட்டிப் போய்க்கோ" என்று சட்டென்று அவர் சலித்துக்கொள்ள, 'பக்'கென்று ஆனது. ஓடிப்போய் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு செந்தில் அண்ணாவின் சைக்கிளில் ஏறினேன்.
ஆல்பட்டில் ரசிகர்மன்ற சிறப்புக் காட்சி. திருவிழாக் கோலம் என்று சொல்லமுடியாது. உண்மையில் அங்கிருந்த ரசிகர்கள் பூண்டிருந்தது போர்க்கோலம். தினேஷை புரட்டியெடுத்துக் கொண்டு ரஜினி அறிமுகமாகும் காட்சியில்... நம்பினால் நம்புங்கள்... தியேட்டருக்குள் தவுசண்ட்வாலா சரம் நிஜமாகவே வெடிக்கப்பட்டது. ரஜினி பேசும் ஒவ்வொரு டயலாக்குக்கும் தொடர்ச்சியான விசில் சத்தம். படத்தின் 75 சதவிகித வசனங்கள் புரியாமலேயே படம் பார்க்க நேரிட்டது. படம் முடிந்ததும் "என் தலைவன் ஜெயிச்சிட்டாண்டோய்...!" என்று கத்திக்கொண்டே வெளியேறிய வெறிக்கூட்டம். எனக்கு 'குணா'வின் வெற்றி குறித்து பெருத்த கவலை உண்டாயிற்று. எதிர்ப்பார்த்தபடியே குணா பப்படமாக, தளபதி வெள்ளிவிழா.
தீபாவளி லீவெல்லாம் முடிந்து பள்ளிக்கு போனபோது, செந்தில் வழக்கம்போல கேப்பே விடாமல் தளபதி புகழ் ஓதிக் கொண்டிருந்தான். அவனும் முதல்நாள் முதல் காட்சி பார்த்திருக்கிறான். அடுத்த ஒரு மாதத்துக்கு தினமும் தளபதி கதையை திகட்டாமல், ஒவ்வொரு முறையும் புதியதாக சில காட்சிகள் சேர்த்து சொல்லிக்கொண்டேயிருந்தான். மாணவர்கள் மத்தியில் மட்டுமன்றி மாணவிகள் மத்தியிலும் அவனுக்கு ஹீரோ அந்தஸ்து. எல்லோர் மத்தியிலும் 'தோத்தாங்குளி' ஆகிவிட்ட அவமானம். (ஆனால் ஓராண்டு கழித்து வந்த அடுத்த தீபாவளியில் நல்லவேளையாக தேவர்மகன் வெளியாகி, அதே ஹீரோ அந்தஸ்தை வெற்றிகரமாக என்னால் கைப்பற்ற முடிந்தது என்பது தனி வரலாறு)
சுதாகர் என்னிடம் சோகமாக கேட்டான். அவன் பார்ட்-டைம் கமல் ரசிகன். "குணா பார்த்தியாடா"
"பார்த்துட்டேண்டா. பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ. ஆக்டிங்குலே நம்ம தலைவருகிட்டே ரஜினியெல்லாம் வெறும் பச்சாடா!"
சுதாகரிடம் அப்பட்டமாக மனதறிந்தே பொய் சொன்னேன். அன்று மட்டுமில்லை. இன்றுவரை நான் முழுமையாக "குணா"வை பார்த்ததே இல்லை.