மே 3, 1913. பாம்பேவின் காரனேஷன் சினிமாட்டோகிராப் அரங்கில் ‘ராஜா ஹரிச்சந்திரா’ திரையிடப்படுகிறது. தாதாசாகேப் பால்கே தயாரித்து இயக்கியிருந்தார். மராத்தி படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், மவுனப்படத்துக்கு மொழி ஏது. பொய்யே அறியாத அரிச்சந்திரனின் கதை இந்தியர்கள் யாவருக்கும் மனப்பாடம் என்பதால் திரையில் நகர்ந்த காட்சிகளோடு ஒன்றிப் போனார்கள். படம் முடிந்ததும் அழுகை, ஆனந்தம் என்று வரையறையில்லாத உணர்வுகளோடு திரும்பினார்கள். ஒரே ஒரு பிரிண்டு போடப்பட்டு திரையிடப்பட்ட ‘ஹரிச்சந்திரா’ வெறும் சினிமா அல்ல. இந்திய சினிமா வரலாற்றின் தொடக்கம்.
1895ல் லூமியர் சகோதரர்களால் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சினிமா அடுத்த ஆண்டே இந்தியாவுக்கும் வந்துவிட்டது. தொடர்ந்து ஹீராலால் சென் இயக்கிய குறும்படமான ‘பாரசீக மலர்’ 1898ல் வெளியானது. தாதாசாகேப் டார்னேவின் ‘ஸ்ரீ புண்டாலிக்’ மே 18, 1912லேயே அதே பாம்பே காரனேஷன் சினிமாட்டோகிராப் அரங்கில் திரையிடப்பட்டது. ஆனால் இந்தியாவின் முதல் சினிமா என்கிற கவுரவம் அதற்கு மறுக்கப்பட்டது. ஏனெனில் பிரபலமான ஒரு மராத்திய நாடகத்தை கேமிராவில் பதிவு செய்து, அப்படியே திரையிட்டிருந்தார்கள். எனவேதான் சினிமாவுக்கென்றே திட்டமிடப்பட்டு, படமாக்கப்பட்ட ‘ஹரிச்சந்திரா’, இந்தியாவின் முதல் சினிமா என்கிற பெருமையை பெறுகிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பெண்கள் யாரும் அப்போது சினிமாவில் நடிக்கத் தயாராக இல்லை. எனவே ஹரிச்சந்திராவின் மனைவியாக கூட ஒரு ஆணே, பெண் வேடம் போட்டு நடிக்க வேண்டியிருந்தது.
ஆரம்பத்தில் சினிமாவை ஒரு பொருட்டாக மேல்தட்டு வர்க்கம் நினைக்கவில்லை. நாடகம்தான் கலை. சினிமா வெறும் பொழுதுபோக்கு என்று நிராகரித்தார்கள். பணம் செலவழித்து நாடகம் பார்க்க முடியாத, அந்த கலைவடிவை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாத பாட்டாளி வர்க்கம்தான் சினிமாவின் எளிமையிலும், கவர்ச்சியிலும் மயங்கிப்போய் அதற்கு கை கொடுத்தது.
ஆனால் காலச்சக்கரத்தின் சுழற்சி சினிமாவுக்கு ஆதரவாகவே அமைந்தது. சினிமா பேச ஆரம்பித்த பிறகு நாடகங்களுக்கு மவுசு குறைந்தது. சினிமா வெறும் கலையாக மட்டும் வளராமல் மக்களிடையே பிரச்சாரம் செய்யக்கூடிய ஊடகமாகவும் வளர்ந்துவிட்டதால், ஆரம்பத்தில் அதை புறக்கணித்தவர்களும் கட்சிமாறி வந்து சினிமாவை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக 1940ல் தொடங்கி 1960 வரை இந்தியாவில் கோலோச்சிய நெம்பர் ஒன் துறையாக சினிமா பரிணமித்தது. இன்று இந்திய சினிமாவில் ஹிந்தி, மராத்தி, பெங்காலி, போஜ்புரி, அஸ்ஸாமி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கொங்கணி, ஒரியா, சிந்தி, பஞ்சாபி, துளு, படுகா, நேபாளி என்று எண்ணற்ற மொழிகளில் வருடத்துக்கு ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளிவருகின்றன. உலகளவில் சினிமாவை தங்கள் வாழ்வின் அங்கமாக கொண்டாடும் சமூகத்தை வேறெங்கும் காணமுடியாது.
இப்படிப்பட்ட இந்திய சினிமாவுக்கு கடந்துப்போன மே 3 அன்றுதான் நூற்றாண்டு நிறைவு. சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடுவது. கொண்டாட்டம் என்றாலே, நமக்கு திருவிழாதான். சினிமாக்காரனுக்கு சினிமா எடுப்பதுதானே திருவிழா. எனவே இந்திய சினிமா நூற்றாண்டை கவுரவிக்கும் முகமாக ‘பாம்பே டாக்கீஸ்’ திரைப்படம் வெளியானது.
நம்மூர் சினிமா மீது அயல்நாட்டு விமர்சகர்கள் சில கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். டவுன்லோடு சிந்தனை கொண்ட நம்மூர் விமர்சகர்களும், அறிவுஜீவிகளும் அவற்றின் மீது எவ்வித ஆராய்ச்சியோ, அலசலோ செய்யாமல் அதே விமர்சனங்களை தாங்கள் கண்டுபிடித்தது மாதிரி அப்படியே வழிமொழிகிறார்கள்.
அவற்றில் சில முக்கியமான விமர்சனங்கள் :
காலாவதி ஆகிப்போன ஆதிகால புராணங்களையே, இந்தியர்கள் இன்னமும் வேறு வேறு வடிவங்களில் சினிமா ஆக்கிக்கொண்டு இருக்கிறார்கள். புதிய சமகால கதைகளை உருவாக்கும் திறன் இந்திய படைப்பாளிகளுக்கு இல்லை.
இந்திய சினிமாவில் பெண்களுக்கு தரப்படும் இடம் மோசமானது. காட்டு மிராண்டித்தனமானது. மார்புகளை குலுக்கி, தொடைகளை ஆட்டி, தொப்புளைக் காட்டும் கவர்ச்சிப் பதுமைகளாக மட்டுமே, இந்திய சினிமாக்களில் பெண்கள் இடம் பெறுகிறார்கள்.
இவர்களுக்கு சினிமாவின் வடிவமே தெரியாது. காட்சிகளால் சொல்ல வேண்டியவற்றை வசனங்களில் பக்கம் பக்கமாக ஒப்பிக்கிறார்கள். சினிமா என்பது காட்சி வடிவம் என்பதே, இந்திய சினிமா இயக்குனர்களுக்கு தெரியாது.
ஒரு ஹீரோ. ஒரு ஹீரோயின். ஒரு வில்லன். அம்மா. தங்கை. அப்பா. நாலு சண்டை. ஆறு பாட்டு. இவ்வளவுதான் இந்திய சினிமா. அரைத்த மாவையே நூறு ஆண்டுகளாக திருப்பித் திருப்பி அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களே நட்சத்திரங்களை உருவாக்கி அவர்களுக்கு கோயில் கட்டி தீபாரதனை காட்டுகிறார்கள். சினிமாவுக்காக கதை என்பது போய், நட்சத்திரங்களுக்காக கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பட்டியலை நீட்டித்துக்கொண்டே போகலாம். குறைந்தபட்சம் நூறு பாயிண்டுகளாகவது தேறும். நூறு ஆண்டு சினிமா அல்லவா.
நூற்றாண்டை கொண்டாடுவதோடு இல்லாமல், இந்த விமர்சனங்களுக்கும் பதில் தரவேண்டுமென்ற வெறி பாம்பே டாக்கீஸாருக்கு இருக்கிறது. எனவேதான் எதுவெல்லாம் இந்திய சினிமா என்று பொதுப்புத்தியில் பதிந்துப் போயிருக்கிறதோ, அதுவெல்லாம் இல்லாமல் ‘பாம்பே டாக்கீஸ்’ எடுத்திருக்கிறார்கள். இந்திய சினிமாவின் தற்காலப் போக்கினை தீர்மானிக்கக்குடிய நடிகர்களும், கலைஞர்களும் பங்களித்திருக்கிறார்கள்.
முக்கியமாக ‘பாம்பே டாக்கீஸ்’ வழக்கமான வடிவிலான ஒரே முழுநீளக்கதை அல்ல. நான்கு இயக்குனர்கள் தனித்தனியாக எடுத்துள்ள நான்கு சிறுகதைகள். கரண் ஜோஹர், திபாகர் பானர்ஜி, ஸோயா அக்தர், அனுராக் காஷ்யப் என்று இந்தியாவின் டாப் இயக்குனர்கள் தலா அரைமணி நேர குறும்படமாக எடுத்த நாலு படங்கள்தான் ஒட்டுமொத்தமாக ‘பாம்பே டாக்கீஸ்’
கரண் ஜோஹரின் படம் ஓரினச்சேர்க்கை உறவை பற்றி எந்த நெருடலும் இல்லாமல் இயல்பாகப் பேசுகிறது. கோவலன் கண்ணகி கதைதான். மாதவியோடு குஜால் செய்த கோவலனை கண்ணகி ஏற்றுக் கொண்டாளா, இல்லையா? இந்தப் படத்தில் கோவலன் இன்னொரு ஆணோடு, கொஞ்சம் ‘லவ்’ ஆகிவிடுகிறான். உடனடியாக அருவருப்பாக உணர்ந்தாலும், உலகப் போக்கை உணர்ந்த நாயகி, “இதெல்லாம் இந்தக் காலத்தில் சகஜம்தான்” என்று இயல்பாகிறாள். ஓரினச் சேர்க்கையாளர்களை சைக்கோக்கள் மாதிரியும், காமவெறி மிருகங்களாகவும் இதுவரை சித்தரித்த இந்திய சினிமா, இந்த அரைமணி நேர குறும்படத்தில் அவர்களும் இயல்பானவர்களே. சொல்லப்போனால் வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள் என்கிற பிம்பத்தை அழுத்தமாக பதிவு செய்கிறது. இரண்டு ஆண்களுக்கு இடையே அமர்க்களமான, அழுத்தமான லிப்-டூ-லிப் முத்தக்காட்சியும் உண்டு.
திபாகர் பானர்ஜியின் படம் தோல்வியடைந்த ஒரு நடிகனின் ஒரு நாள் வாழ்வை சித்தரிக்கிறது. அவனது குழந்தைக்கு தினமும் ஒரு கதை சொல்ல வேண்டும். முந்தைய நாள் சொல்வதற்கு அவனிடம் கதை எதுவுமில்லை. அன்று அவனுக்கு ஒரு சினிமாவில் ஒரே ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. வசனமற்ற பாத்திரம். ஓரிரு நொடி ஃப்ரேமில் வந்துப்போகும் பாத்திரம். ஆனாலும் சினிமாவில் நடித்துவிட்டான். அன்று இரவு அவன் குழந்தையிடம் சொல்ல கதை கிடைத்துவிட்டது. தான் சினிமாவில் நடித்த கதையை திரைக்கதை வசனத்தோடு மிகைப்படுத்தி சிறப்பாக சொல்லி அசத்துகிறான். திரையில் பாத்திரங்கள் பேசும் வசனங்களில், ஒரு கதை நேரடியாக சொல்லப்படுகிறது. பின்னணிக் காட்சிகளில் நிறைய ஹைக்கூ கதைகள் மறைமுகமாக சொல்லப்படுகின்றன. பார்வையாளனே தனக்கேற்றாற் வகையில் அக்கதைகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்பது இப்படத்தின் சிறப்பம்சம்.
ஸோயா அக்தரின் படம் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சிறுவனின் ஆசையை காட்சிப்படுத்துகிறது. மகன் என்னவோ ஆகி, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்து அப்பாவின் கனவும். குழந்தைக்கு என்று ஆசையோ, கனவோ இருக்கக்கூடுமென்பது கூட, அவர்களுக்குத் தெரியாது. இந்திய நடுத்தர வர்க்கத்தை மறைமுகமாக கேலி செய்வதோடு, சுடும் யதார்த்தத்தை, சூப் போட்டு கொடுக்கிறார்கள். பையனுக்கு நடனக்கலையில்தான் ஆசை. அப்பாவோ அவனை வலுக்கட்டாயமாக விளையாட்டுகளில் ஈடுபடுத்தி, உடல் வலிமை இருந்தால்தான் பைலட் ஆக முடியும் என்கிறார். தன்னுடைய கனவை ரகசியமாக பையன் எப்படி தற்காலிகமாக நனவாக்கிக் கொள்கிறான் என்பதோடு படம் முடிகிறது.
அனுராக் காஷ்யப் இயக்கிய படம் தான், இந்திய சினிமா நூற்றாண்டுக்கு நிஜமான ட்ரிப்யூட். நம் சினிமாவின் ஸ்டார் வேல்யூ என்னவென்பதை மிகைப்படுத்தாமல், யதார்த்தமாக காட்சிப்படுத்துகிறார். வாரணாசியில் வசிக்கும் பெருசு ஒருவருக்கு ஓர் ஆசை. குலாப் ஜாமூன் மாதிரி ஒரு ஸ்வீட்டை ஜாடியில் அடைத்து வைத்திருக்கிறார். இதில் பாதியை அமிதாப் பச்சன் கடிக்க வேண்டும். மீதியை தான் சாப்பிட வேண்டும் என்கிற உயரிய 2020 இந்திய வல்லரசுக் கனவு. இப்பவோ, அப்பவோ என்றிருக்கும் அப்பாவின் இந்த ஆசையை நிறைவேற்றினால், இன்னும் சில ஆண்டுகள் கூடுதலாக வாழ்வார் என்று மகனுக்கு நம்பிக்கை. குலாப் ஜாமூன் ஜாடியோடு, மும்பைக்கு ரயில் ஏறுகிறான். அமிதாப்பை பார்த்தானா. குலாப் ஜாமூனை கடித்தாரா என்பதை லேசான நகைச்சுவை மற்றும் அழுத்தமான உணர்வுகளாக காட்சிப்படுத்துகிறார் காஷ்யப்.
தனித்தனி இயக்குனர்கள், தனித்தனி நடிகர்கள், தனித்தனி தொழில்நுட்பக் கலைஞர்கள் தனித் தனியாக நான்கு படங்களை இயக்கியிருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கப்போனால், தொழில்நுட்பத் தரத்தில், ஒரே மாதிரியாக, சர்வதேசத் தரத்தோடே படங்கள் அமைந்திருக்கிறது. நான்குக்கும் இசையமைப்பாளர் மட்டும் பொதுவானவர். அமித் திரிவேதி. மேலை நாட்டு இசையும், சாஸ்திரிய சங்கீதமாக சரிபாதியாக பங்குபோட்டு, தமிழ் திரையிசையில் கோலோச்சிய காலத்தில், நம்மூர் தெம்மாங்கையும், தாலாட்டையும், ஒப்பாரியையும் திரையிசை வடிவத்துக்கு கொண்டு வந்து, ஒப்பற்ற சாதனை செய்தவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட அதே மாதிரி சாதனையை அமித் திரிவேதி இந்தியில் செய்துக் கொண்டிருக்கிறார். வடஇந்திய நாட்டுப்புற இசைக்கலைக்கு திரையில் உயிரூட்டிக் கொண்டிருக்கிறார்.
உள்ளடக்கம், தொழில்நுட்பத் தரத்தில் உலகின் எந்தவொரு சினிமாத்துறைக்கும், எங்களால் சவால் விட முடியுமென்று ‘பாம்பே டாக்கீஸ்’ மூலமாக இந்திய சினிமா அறைகூவல் விட்டிருக்கிறது.
ஆனால் நாங்கள் ஏன் அச்சுபிச்சுவென்று படமெடுக்கிறோம் என்கிற கேள்விக்கும் படத்துக்கு ‘எண்ட்’ கார்ட் போட்டுவிட்டு போனஸாக விடையளிக்கிறார்கள். இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாட ஒரு ரசிகனுக்கு அழைப்பு வருகிறது. பாம்பே டாக்கீஸ் என்கிற அரங்குக்கு போகிறான். ஆயிரம் இருக்கைகள் இருக்கும் அரங்கில் அவன் மட்டும் படம் பார்க்கிறான். இந்திய சினிமாவின் மைல் கற்களாக அமைந்த படங்களின் காட்சிகள் ஒரே பாடலில் மாண்டேஜ் காட்சிகளாக ஒளிபரப்பாகிறது. மேலும் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரில் தொடங்கி, நண்டு சிண்டு நட்சத்திரங்கள் வரை அவன் ஒருவனுக்காகவே, ஒட்டுமொத்தமாக விண்ணிலிருந்து மண்ணிறங்கி நடனம் ஆடுகிறார்கள். இந்த பாடலுக்கு வட இந்திய அரங்குகளில் எழுந்து நின்று தலைக்கு மேல் கையை தூக்கி தட்டுகிறார்கள் ரசிகர்கள். விசில் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. தங்கள் அபிமான நட்சத்திரம் தோன்றும்போது, ஒவ்வொரு ரசிகனும் கண்களில் நீர்க்கசிய ஓவென்று கத்துகிறான். “இதுதான் இந்திய சினிமா”வென்று கண்ணடிக்கிறார்கள் பாம்பே டாக்கீஸார்.