1 ஆகஸ்ட், 2014

அழைத்தார் பிரபாகரன்

ஏப்ரல் 7. 2002. ஞாயிறு பிற்பகல். மதிய உணவுக்குப் பின்னான சோம்பலான வேளை. லேசான உறக்கத்தில் இருக்கிறார் வாப்பா அப்துல் ஜப்பார். தொலைபேசி ட்ரிங்குகிறது. எடுத்துப் பேசுகிறார். விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அழைக்கப்படுகிறார். தமிழீழத் தேசியத்தலைவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

நூலின் முதல் வரியிலேயே துவங்கிவிடும் வேகம் நாற்பத்தி எட்டாவது பக்கத்தில் முடியும் வரை சற்றும் குறையவேயில்லை. பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ‘ஸ்கூப்’ தகவல்களுக்கே உரிய பரபரப்பான ரிப்போர்ட்டிங் பாணியில் மிக எளிய மொழி கட்டமைப்பில் எழுதப்பட்டிருக்கிறது ‘அழைத்தார் பிரபாகரன்’. வாசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் நிச்சயம் ‘ஜிவ்’வென்று இருக்கும்.

பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அன்றைய நாட்களை எப்படி இவ்வளவு துல்லியமாக நினைவுக்கு கொண்டுவந்து ஜப்பார் எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சென்ற நாளிலிருந்து அவர் சந்திக்க நேர்ந்த மனிதர்கள், இடங்கள், உண்ட உணவு, அடைந்த உணர்வு என்று அனைத்தையுமே அங்குல அங்குலமாக நாமே நேரில் சென்று வந்ததைப் போன்ற உணர்வை தரும் விவரிப்பு. இன மேலாதிக்க மனோபாவ நாடுகளின் சதியால் முற்றிலுமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்டுவிட்ட ‘தமிழ் ஈழம்’ என்கிற தமிழர்களின் நாடு எப்படியிருந்தது என்பதற்கு வரலாற்று சாட்சியாக, ஆவணமாக இந்நூலை கொடுத்திருக்கிறார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தவற்றையெல்லாம் எழுதி பக்கத்தை கூட்டவில்லை. அதையெல்லாம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிகைகளில் நாம் வாசித்துவிட்டோம். தொலைக்காட்சியில் பார்த்துவிட்டோம். எனவே அதை மிகக்கவனமாக தவிர்த்திருக்கிறார். இந்நூலின் நாற்பத்தியெட்டு பக்கங்களுமே இதுவரை நாமறியாத சம்பவங்களை எக்ஸ்க்ளூஸிவ் தன்மையோடு கொடுக்கிறது.

அய்யாவுக்கு விருந்தோம்பல் செய்ய பணிக்கப்பட்ட பெண்புலி, ஊன்றுகோல் கொண்டு சிரமப்பட்டு நடந்தாலும் முகத்தில் நிரந்தரப் புன்னகையோடு வலம் வந்த தமிழ்ச்செல்வன், அய்யாவை ஆரத்தழுவி வரவேற்ற தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், அய்யாவை வழியனுப்பி வைக்க பணிக்கப்பட்ட இளைஞர் பவநந்தன் என்று அப்பயணத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அழுத்தமான சித்திரங்களை நம் மனதில் உருவாக்குகிறார்.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த பத்திரிகையாளர்களில் அய்யா ஜபாரை மட்டும் தனியாக அழைத்து பிரத்யேகமாக சந்தித்தார் பிரபாகரன். “உங்களுடைய ரசிகன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரோடு பிரபாகரன் நிகழ்த்திய உரையாடல்தான் நூலின் மையச்சரடு.

அந்த அற்புத நேரத்தை இவ்வாறாக விவரிக்கிறார்.

குழந்தையைப் போல ஓடிச்சென்று கடிப்பிடிக்க ஆசை. ஆனால் ஆயுதமேந்திய அந்த இளைஞர்கள் ஒரு கணம் என் எண்ணத்தில் மின்னி மறைந்தனர். என்னையும் எண்ணத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு சிலையாக நின்றேன். என்னை நெருங்க, நெருங்க அவருடைய நடையின் வேகம் கூடுகிறது. நெருங்கி வந்து அப்படியே கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்கிறார். அவரது தாடை என் தோளில். இன்னும் பிடி இறுகுகிறது. “நான் உங்கள் பரம ரசிகன் அய்யா” என்கிறார்.

உறவுகளிடம் விடை பெற்று நாடு திரும்பும்போது ஓர் இராணுவ அதிகாரியோடு அய்யாவின் உரையாடல்.

“பிரபாகரன் எப்படி இருக்கிறார்?”

“நன்றாக இருக்கிறார்”

“ஓ. நாங்கள் இலங்கையர். அதனால் சகோதரர்கள். ஆனால் விதியின் குரூரம் நாங்கள் எதிரெதிர் முகாம்களில் இருக்கிறோம்”

“ஆம். அப்படிதான்”

“உங்களுக்கு ஒன்று தெரியுமா, இஸ்ரேலின் மோஷே தயானுக்கு பிறகு ராணுவ திட்டமிடலில் பிரபா வல்லவர். அவரைப்பற்றி நான் பெருமைப்பட வேண்டும்”

அனேகமாக ராஜபக்‌ஷேவும்கூட இந்த அதிகாரியை போலதான் பிரபாகரனை மதிப்பிட்டிருப்பார். இதைவிட வேறென்ன பெருமை வேண்டும் நமக்கு?

நூல் : அழைத்தார் பிரபாகரன்
எழுதியவர் : சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
பக்கங்கள் : 48
விலை : ரூ.50
வெளியீடு : தமிழ் அலை, 80/24-B, பார்த்தசாரதி பேட்டை தெரு,
தேனாம்பேட்டை, சென்னை-600 086.
போன் : 044-24340200 மின்னஞ்சல் : tamilalai@gmail.com

நூல் வெளியீட்டு விழா 03-08-2014, ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்துக் கொள்ளலாம்.

1 கருத்து: