7 ஆகஸ்ட், 2014

சதுரங்க வேட்டை

வானத்தின் கன்னம் கருத்திருந்திருந்தது. முணுக்கென்றால் பிரளயமாய் பெருமழை கொட்டிவிட தயாராய் இருந்த கருமாலைப் பொழுது. என்னைப் பார்க்க அலுவலகத்துக்கு நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு விருந்தோம்பல் செய்யும் பொருட்டு அலுவலக வாசலில் இருந்த தேநீர்க்கடைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். கடைக்குள்ளே நான்கைந்து திருநங்கையர் பஜ்ஜி, சமோசா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

டீ மாஸ்டர் அவர்களை ஏதோ பச்சையாக கலாய்த்துக் கொண்டிருக்க, அவர்களும் பதிலுக்கு கலகலப்பாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். இரண்டு தேநீர்க் கோப்பைகளோடு வெளியே வந்தோம். சற்று தள்ளிப்போய் நின்று ஜிகர்தண்டா, பின்நவீனத்துவம் என்று பேசிக்கொண்டே தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தோம்.

கடை வாசலில் திடீர் சலசலப்பு. திருநங்கையரில் சிலர் வெளியே நின்றிருந்தவர்களின் தலையில் கை வைத்து ஏதோ மந்திரம் மாதிரி முணுமுணுத்து காசு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் காசு கொடுத்து அவர்களை விரட்டினார்கள். வேறு சிலர் அவர்கள் தங்களை தொட்டுவிடக் கூடாதே என்று ஒருமாதிரியான அருவருப்பும் உணர்வோடு இருப்பது மாதிரி விலகி ஓடினார்கள். சிலர் அவர்களை கிண்டல் செய்து, வழக்கமாக அவர்களை வசைபாடும் வார்த்தைகளை கூறி ஆபாசமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு இருபது வயது பையன் ஒருவனை ஆசிர்வதித்து காசு கேட்க, அவன் நெருப்பை மிதித்தது போல பரபரவென்று வாகனங்களுக்கு இடையே ஓடி சாலையின் மறுபுறம் நோக்கி ஓடினான்.

அவனை துரத்திக்கொண்டு ஓடிய திருநங்கைக்கு நாற்பது வயது இருக்கும். கரேலென்று தாட்டியாக இருந்தார். சிகப்பு ஜாக்கெட். மஞ்சள் புடவை. நெற்றியில் பெரிய அளவில் வட்டமாக குங்குமம். பையன் தப்பித்துவிட்டதால் பரிதாபமாக நாங்கள் இருந்த பக்கமாக வந்தார். எங்களை நெருங்கியவர் சடாரென்று திரும்பிப் பார்த்து, சட்டென்று என் தலையில் கைவைத்து ஏதோ மந்திரம் சொல்லத் தொடங்கினார்.

“எம் மவன் நல்லா வரணும் நீயி” என்று சொல்லிவிட்டு கைநீட்டி காசு கேட்டார்.

அவர்களைப் பார்த்து பயந்து ஓடிய சராசரிகளை போல நானும் நடந்துகொள்ள முடியாது. ஏனெனில் நான் சராசரி அல்ல. முதன்மையாக இணையப் போராளி. ஃபேஸ்புக், ட்விட்டர், பிளாக்கர், லிங்க்ட் இன், ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ உள்ளிட்ட ஏராளமான இணையத் தளங்களில் எனக்கு அக்கவுண்டு உண்டு. தற்போது தமிழில் எழுதப்படும் இலக்கியங்களை படிக்கிறேனோ இல்லையோ எது எதுவெல்லாம் இலக்கியம், யார் யாரெல்லாம் இலக்கியவாதிகள் என்று தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். மாதாமாதம் சில இலக்கியப் பத்திரிகைகளை படிக்கிறேன். நண்பர்களோடு சாதாரணமாக எதையாவது பேசும்போது, “அயன் ராண்ட் இதைப்பத்தி என்ன சொல்றாங்கன்னு பார்த்தீங்கன்னா...” என்று ஆரம்பித்து, அவர்களை தாழ்வுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறேன். சகட்டுமேனிக்கு மார்க்ஸ், நோம்சாம்ஸ்கி, சீமான் தெ பொவார், ஜே.கிருஷ்ணமூர்த்தி, பெரியார் என்று பெயர்களை உச்சரிப்பதால் நான் கொஞ்சம் ஸ்பெஷல். எனவே நான் உண்மையாகவே அப்படி இல்லையென்றாலும், நான்கைந்து பேராவது என்னை இண்டெலெக்ச்சுவல் என்றோ அல்லது நிறைய வாசித்து பண்பட்ட தரமான இலக்கிய வாசகன் என்றோ மூடத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட நான் மற்ற சராசரிகளை மாதிரி அவரை அணுகுவது சரியல்ல என்று என் இலக்கிய மனதுக்கு பட்டதால், பாக்கெட்டில் இருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை எடுத்து, சுற்றும் முற்றும் பந்தாவாக நோட்டம் விட்டு அவரிடம் கொடுத்தேன். நான் எதிர்ப்பார்த்த மாதிரியே அங்கே இருந்த சராசரிகள் அசந்துவிட்டார்கள்.

இருபது ரூபாயை நோட்டை வாங்கியவர், அதை எடுத்து என் முகத்தை சுற்றி திருஷ்டி மாதிரி கழித்தார். முணுமுணுவென்று ஏதோ மந்திரங்களை உதிர்த்தார்.

“அய்யோ. எம் புள்ளைக்கு பணத்தோட அருமையே தெரியலையே?” என்று வேதனைப்பட்டு விட்டு, “எனக்கு இந்த காசு வேணாம். பத்து ரூபாய் மட்டும் இருந்தா கொடு” என்றார்.

பணத்தின் மீது எந்த பிரேமையும் சற்றும் இல்லாத அந்த திருநங்கை, எனக்கு ருஷ்ய பேரிலக்கிய நாவல் ஒன்றின் கதாபாத்திரம் மாதிரியே தோன்றினார். சிலிர்த்தமாதிரி தோளை குலுக்கிக் கொண்டு பெருந்தன்மையாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னேன்.

“பரவால்லக்கா. வேற காசு இல்லை. வெச்சுக்கங்க”

“அப்படின்னா எனக்கு இந்த காசே வேணாம். செவ்வாய்க்கிழமை அதுவுமா இவ்ளோ பெரிய மனசோட புள்ள கொடுத்திருக்கே. நீ நல்லா இருக்கணும். காலத்துக்கும் லஷ்மி உங்கூடவே இருக்கணும். உதவி செய்யுற இந்த மனசு சாகுறவரைக்கும் உனக்கு அப்படியே அமையணும்”

அக்கா எனக்கு சிண்ட்ரெல்லா மாதிரி தேவதையாக தெரிந்தார். இம்முறை நிஜமாகவே மெய்சிலிர்த்துவிட்டேன். பக்கத்தில் இருந்த நண்பரும் இதே மாதிரி மெய்சிலிர்த்தார். அவரும் இலக்கியவாதிதானே? சட்டென்று ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அக்காவிடம் நீட்டினார்.

“அம்மா செவ்வாய்க்கிழமை அதுவுமா மந்திரிச்சி கொடுக்கறேன். இந்த காசை செலவு பண்ணாமே பத்திரமா வெச்சிருக்கணும். காலத்துக்கும் உன் பர்ஸுலே காசு நிக்கும். பர்ஸை காட்டு, நானே வெச்சிடறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதோ மந்திரங்களை முணுமுணுக்க ஆரம்பித்தார்.

என்னதான் திராவிட இயக்கத்து பகுத்தறிவு நம் ரத்தத்தில் ஊறியிருந்தாலும், நாம் இதுவரை வாழ்க்கையில் சந்தித்தே இராதவர் அடுத்தடுத்து, நம்மை வள்ளல் ரேஞ்சுக்கு அவ்வளவு பேர் மத்தியில் ஒரு பொதுஇடத்தில் புகழ்ந்துக்கொண்டே இருந்தால் ‘ஜிவ்’வென்று இருக்கத்தானே செய்யும்? அனிச்சையாக பர்ஸை எடுத்தேன். பட்டென்று பிடுங்கினார். பர்ஸைப் பிரித்தார். உள்ளே நான்கு நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தது. கையில் எடுத்தார்.

திடீரென்று நிகழ்ந்துவிட்ட இந்த அசம்பாவிதத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. “காசை எடுக்காதே!” என்று கத்தினேன்.

“இரு மகனே. இதையும் மந்திரிக்கணும்” என்று சொல்லியவாறே, பர்ஸை என் கையில் கொடுத்துவிட்டு சட்டென்று மொத்த ரூபாயையும் (நாலு நூறு ரூபாய் நோட்டு, தலா ஒரு இருபது மற்றும் பத்து என்று மொத்தம் நானூற்றி முப்பது ரூபாய்) இரு கைகளுக்கும் நடுவில் வைத்து, கால்களை விரித்து தொடைகளுக்கு நடுவே வைப்பது மாதிரி வைத்து, “என்னோட யோனியில் (இலக்கிய அந்தஸ்துக்காக இந்த சொல்லை பயன்படுத்தினேன். அவர் உண்மையில் சொன்னது இந்த உறுப்பை விளிக்கும் கொச்சையான சொல்தான்) வெச்சிட்டேன். அம்மனுக்கு போயிடிச்சி. ஊர்லே மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம். கெடா வாங்கி விட்டிருக்கேன். அதுக்கு சரியா போச்சி இந்த காசு!” என்றார்.

இந்த உளவியல் தாக்குதலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. எப்படி எதிர்கொள்வது என்றும் தெரியவில்லை. கெஞ்ச ஆரம்பித்துவிட்டேன்.

“யக்கா. இன்னும் சம்பளம் கூட வரலை. செலவுக்கு இந்த காசுதான் இருக்கு. நூறு ரூபாய் எடுத்துக்கிட்டு மீதியை கொடுத்துடு”

அவர் கொடுப்பதாக தெரியவில்லை. நான் கொஞ்சம் குரலை உயர்த்தி பேச ஆரம்பித்தேன். அவரது சகாக்கள் வரிசையாக அவர் பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள். ஒரு கேங்ஸ்டர் படத்தில் ‘டான்’ ஓபனிங் சீன் மாதிரி இருந்தது அந்த காட்சி. என் குரல் தாழ்ந்து, மீண்டும் கெஞ்சல் தொடங்கியது.

என் கெஞ்சலை தாங்கமுடியாத மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, பெரிய மனசு வைத்து இருநூறு ரூபாயை மட்டும் திருப்பித் தந்தார். “டேய், அம்மனுக்கு காசுன்னு கேட்டாகூட முழு மனசா கொடுக்க மாட்டேன்றே பாடு!” என்று சொல்லிவிட்டு, வேறு சில வசைச்சொற்களை உதிர்த்தவாறே வேகமாக இடத்தை காலி செய்தார்கள்.

ஆக, என்னுடைய மனிதநேயத்தை காட்டிக்கொள்ள நேற்று நான் செய்த செலவின் குறைந்தபட்ச சில்லறை விலை (வசைகள் உட்பட) ரூபாய் இருநூறு மட்டுமே.

9 கருத்துகள்:


  1. 'அவர்களைப் பார்த்து பயந்து ஓடிய சராசரிகளை போல நானும் நடந்துகொள்ள முடியாது. ஏனெனில் நான் சராசரி அல்ல. முதன்மையாக இணையப் போராளி' - யுவகிருஷ்ணா
    போராட்டம் நியாயத்தை நோக்கி நகரும் மாண்பு உயர்வானது .தொடருங்கள் .வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா8:35 AM, ஆகஸ்ட் 08, 2014

    OMG, உன் குத்தமா, என் குத்தமா , யாரை நானும் குத்தம் சொல்ல... இனிமே செய்வியா?செய்வியானு தலையிலே 4 குட்டு குட்டிகோங்க யுவா. :)

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா4:37 PM, ஆகஸ்ட் 08, 2014

    hahaha.. YUVA... just couldnt control my laugh..
    - B

    பதிலளிநீக்கு
  4. எனக்கும் இப்படி ஒருமுறை நடந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  5. நானும் இந்த அனுபவப்பட்டவன்தான். Mount road ல்.

    பதிலளிநீக்கு