4 ஆகஸ்ட், 2014

காமிக்ஸ் காதல்


மிகச்சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பித்தது இந்த காதல்.

தினத்தந்தியிலும், வானொலியிலும் ராணி காமிக்ஸின் முதல் இதழான ‘அழகியைத் தேடி’க்கு அவ்வளவு விளம்பரங்கள். சன் பிக்சர்ஸ் அவர்களுக்கு படங்களுக்கு செய்த அதகளங்களை அப்போதே செய்துவிட்டார்கள் தினத்தந்தி குழுமத்தார். அப்பாவிடம் அடம்பிடித்து அழகியைத் தேடி வாங்கினேன். பளபள வார்னிஷ் அட்டையில் ரூ.1.50 விலையில் அழகி என்னை ஈர்த்துக் கொண்டாள்.

யாரும் பிரித்து பார்க்காதவண்ணம் ஸ்டேப்ளரால் ‘பின்’ செய்யப்பட்டு வந்த புத்தகத்தை அப்பாதான் பிரித்துக் கொடுத்தார். பிரித்ததோடு இல்லாமல் லேசாக புத்தகத்தை புரட்டிப் பார்த்தவர் புருவத்தைச் சுருக்கினார். உள்ளே அழகி உடைமாற்றும் கட்டங்கள் இருந்ததுதான் காரணம். அப்போதெல்லாம் குமுதம் நடுப்பக்கம் எடுக்கப்பட்டுதான் என்னுடைய வாசிப்புக்கு வரும். அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான சென்ஸார் அதிகாரியாக இருந்த அப்பாவுக்கு அழகிகள் அரைகுறை ஆடைகளோடு வரும் காமிக்ஸ், தன் மகனின் வெள்ளை உள்ளத்தில் நஞ்சை கலந்துவிடுமோ (இத்தனைக்கும் அப்போ ஆறேழு வயசுதான்) என்று சஞ்சலம். “இனிமே காமிக்ஸெல்லாம் வேணாம். பாலரத்னாவும், அம்புலிமாமாவும் போதும்” என்று முடிவெடுத்தார்.
ஏற்கனவே அண்ணாக்கள் வாசிக்கும் முத்துகாமிக்ஸால் கட்டம் கட்டமான சித்திரங்களின் வசீகரத்தில் ஈர்க்கப்பட்டுவிட்ட எனக்கு அது ஏமாற்றமான முடிவு. இன்னும் எத்தனை காலத்துக்குதான் விக்கிரமாதித்தன் தோளில் சுமந்துக்கொண்டு போகும் வேதாளத்தோடு மாரடிப்பதோ என்று சோர்ந்துப் போனேன். நல்ல வேளையாக ‘மாடஸ்டி’ காப்பாற்றினாள். ராணி காமிக்ஸ் மாதிரி படோடப விளம்பரங்கள் இல்லையென்றாலும், தரமான காமிக்ஸாக ‘லயன் காமிக்ஸ்’சும் அந்த மாதம்தான் விற்பனைக்கு வந்தது. லயன் காமிக்ஸின் ஆசிரியருக்கு அப்போது வயசு பதினேழுதான். ‘கத்தி முனையில் மாடஸ்டி’ தமிழ் சித்திரக்கதை உலகின் பொற்காலத்துக்கு வித்திட்டாள்.

‘காமிக்ஸ் வேண்டும்’ என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த எனக்கு ராணிக்கு பதிலாக மாதாமாதம் லயன் காமிக்ஸ் வாங்கித்தர ஆரம்பித்தார் அப்பா. அப்பாவுக்கு ஒரு பழக்கம். பரங்கிமலை ரயில்வே நிலையத்தின் புத்தகக்கடையில் தொங்கும் கிட்டத்தட்ட எல்லா புத்தகங்களையுமே வாங்கிவிடுவார். அதில் எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் துவக்கத்திலும் வெளிவந்த நிறைய காமிக்ஸ்களும் இருந்தது. நான் பிறந்த காலத்திலிருந்தே எதிர்காலத்தில் வளர்ந்து படிப்பேன் என்பதற்காக நிறைய காமிக்ஸ், குழந்தைகள் புத்தகங்களை வாங்கி பரணில் சேமித்துவைத்தவர் அவர். வேறு எந்த அப்பாவாவது மகனின் வருங்கால வாசிப்புக்கு கைக்குழந்தையாக இருந்தபோதே புத்தகங்கள் வாங்கி சேமித்திருப்பார்களா என்று தெரியவில்லை.

ஐந்து, ஆறு வயதில் கூட்டி கூட்டி தமிழ் வாசிக்க ஆரம்பித்தபோது பாடப்புத்தகங்களை தவிர்த்து நான் படித்து முடிக்க மூட்டை மூட்டையாக என் வீட்டில் புத்தகங்கள் இருந்தது. இதனாலேயே வழக்கமான குழந்தைகள் மாதிரி சேட்டை செய்யாமல் சமர்த்தாக எப்போதும், எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். பையன் பெரிய ஐ.ஏ.எஸ்.ஸா வருவான் போலிருக்கு என்று வீட்டில் மூடத்தனமாக நம்பினார்கள். இந்த வாசிப்பு பிற்காலத்தில் விரிவடைந்து மருதம், விருந்து, திரைச்சித்ரா, சரோஜாதேவி ரேஞ்சுக்கு என்னுடைய டீனேஜில் மாறியது.

பழைய கந்தாயங்களை விடுங்கள். காமிக்ஸுக்கு வருவோம். என்னிடம் இருந்த பழைய காமிக்ஸ்களும், குழந்தைகளுக்கான இதழ்களும் நாங்கள் வீடுமாறியபின், முன்பிருந்த குடிசைவீட்டில் கட்டுக்கட்டாக சேகரிக்கப்பட்டிருந்தது. ஒரு தீவிபத்தில் அந்த குடிசைவீட்டோடு சேர்த்து பொக்கிஷங்கள் மொத்தமாக தீக்கிரையானது. கலைமகள், கல்கி, விகடன், அமுதசுரபி என்று எவ்வளவு தீபாவளி மலர்கள். சிகப்புநாடா மாதிரி எவ்வளவு அரிய இதழ்கள். அத்தனையும் காலி. அதற்கு பின்பு வீட்டில் இதழ்களை சேகரிக்கும் பழக்கமே எங்கள் வீட்டில் விட்டுப்போயிற்று. படித்துவிட்டு மாதாமாதம் கடைகளுக்கு போட்டுவிடுவார்கள்.

அப்போதெல்லாம் மடிப்பாக்கம் கூட்ரோடில் இருந்த டி.என்.எஸ். வேஸ்ட் பேப்பர் மார்ட், அரசு நூலகத்தைவிட அரிய சேவைகளை பகுதி மக்களுக்கு செய்துக் கொண்டிருந்தது. படிக்க தவறிய ராணி காமிக்ஸ்களை அங்கேதான் வாசித்தேன். நான், ஆனந்த் அண்ணா, பிரபா அண்ணா மூவரும் கூட்டணி. ஆளுக்கு இருபத்தைந்து காசு போட்டு டி.என்.எஸ். வேஸ்ட் பேப்பர் மார்ட்டில் ஒரு அக்கவுண்ட் துவக்கினோம். ஒரு புத்தகம் எடுத்துப்போக எழுபத்தைந்து காசு. வாசித்துவிட்டு திரும்பித் தந்தால் மீதி ஐம்பது காசு கொடுத்துவிடுவார்கள். கூடுதலாக இருபத்தைந்து காசு டாப்-அப் செய்தால், இன்னொரு புத்தகத்தை எடுத்துவரலாம். பாலாஜி அண்ணா இந்த பார்ட்னர்ஷிப்பில் இல்லை. அவர் சொந்தக் காசில்தான் புத்தகம் எடுப்பார். எங்களுக்கு இலவசமாகவே படிக்க கொடுப்பார். இப்படியாகதான் ராணி காமிக்ஸின் முதல் நூறு இதழ்களையும் படித்தோம்.

எட்டாவது படிக்கும்போது மீண்டும் காமிக்ஸ்களை சேகரிக்க ஆரம்பித்தேன். முத்து, லயன், மினி லயன், ஜீனியர் லயன், ராணி, பொன்னி, மேத்தா, அசோக் என்று கணிசமான இதழ்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் சேகரித்து வைத்திருந்தேன். கட்டு கட்டாக கட்டி பாலிதீன் கவரில் ரசகற்பூரம் எல்லாம் போட்டு வைத்திருந்தேன். ஒருநாள் மதியம் பார்த்தபோது அந்த கட்டுகளில் பெரும்பாலானவை இல்லை. இதயமே வெடித்துவிட்டது. தங்கை, அந்த அரிய பொக்கிஷங்களில் மதிப்பு தெரியாமல் தெருமுக்கில் இருந்த ஒரு வேஸ்ட் பேப்பர் கடையில் எடைக்குபோட்டு, ஏதோ வாங்கி சாப்பிட்டு விட்டிருக்கிறாள். அந்த கடைக்கு போய் கூடுதல் பணம் கொடுத்து இதழ்களை திரும்பப் பெற்றாலும், நிறைய இதழ்கள் மிஸ்ஸிங். திரும்ப கலெக்ட் செய்யும் ஆர்வமே போய்விட்டது. வீட்டுக்கு வருபவர்களும் அவ்வப்போது இரவல் வாங்கிக்கொண்டு போவார்கள். திரும்பத் தரமாட்டார்கள். அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.

தொண்ணூறுகளின் இறுதியில் மீண்டும் லயன் காமிக்ஸ் புத்துணர்வு பெற்று அட்டகாசமான கதைகளை கொண்டுவந்தபோது மறுபடியும் சேர்க்க ஆரம்பித்தேன். என்னிடம் இல்லாத இதழ்களை எல்லாம் வெளியே நண்பர்களிடம் எக்ஸேஞ்ச் மூலமாகவும், ப்ரீமியம் விலையிலும் (87 தீபாவளி மலரை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். அசல் விலை பத்து ரூபாய்தான்) வாங்கிக் குவித்தேன். இன்றுவரை சேர்த்து வருகிறேன். இன்னும் சில இதழ்கள் தேவை. தேடிக்கொண்டிருக்கிறேன். என் நூலக சேகரிப்பில் ஒரு செல்ஃப் நிறைய காமிக்ஸ்கள் உண்டு. யாருக்கும் காட்டுவதும் கிடையாது. இரவல் கொடுப்பதும் கிடையாது. இடைபட்ட காலங்களில் என்னுடைய வாசிப்புரசனை வேறு தளங்களுக்கு நகர்ந்துவிட்டாலும், இன்றும் காமிக்ஸ்களுக்குதான் முன்னுரிமை.

இடையில் ராணி காமிக்ஸ் நின்றுவிட்டது. அதற்கு முன்பாகவே பொன்னி, மேத்தா, அசோக் மாதிரி காமிக்ஸ்கள் காலி. லயன், முத்து காமிக்ஸ்களும் சொல்லிக்கொள்ளும்படியாக வருவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘இரத்தப்படலம்’ மெகா கலெக்‌ஷனின் விளைவாக லயன் – முத்து மீண்டும் புத்துணர்வு பெற்று தற்போது தொடர்ச்சியாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் இதழிலும், மற்ற சகோதர இதழ்களிலும் முத்து-லயன் காமிக்ஸ்கள் தமிழக குழந்தைகளிடையே உருவாக்கிக் காட்டிய வாசிப்புசாதனைகளை கட்டுரைகளாகவும், செய்திகளாகவும் கொண்டுவர என்னால் முடிந்த முயற்சிகளை செய்திருக்கிறேன். என்ன செய்தாலும் என்னுடைய சிறுபிராயத்தை சுவாரஸ்யப்படுத்திய லயன் – முத்து குழுமத்தாருக்கு போதாது என்றாலும், சிறியளவிலான நன்றிக்கடன்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஓக்கே, நீண்ட இந்த காமிக்ஸ் புராணத்துக்கு இப்போது என்ன அவசியமென்ற சந்தேகம் வரலாம். லயன் காமிக்ஸ் வெற்றிகரமாக முப்பது ஆண்டுகளை கடந்துவிட்டது. முப்பதாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இரண்டு அதிரடியான நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

லயன் மேக்னம் ஸ்பெஷல் – 1 (விலை ரூ.400)
லயன் மேக்னம் ஸ்பெஷல் – 2 (விலை ரூ.150)

(மொத்தம் 900+ பக்கங்கள்)

இரண்டு ரூபாய்க்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காமிக்ஸ் வாங்கி படித்தவர்கள், இப்போது ஐநூற்றி ஐம்பது ரூபாய்க்கு காமிக்ஸா என்று வாய்பிளக்கலாம். விலை ஒரு பிரச்சினையே இல்லை. புத்தகத்தை புரட்டிப் பாருங்கள். புரிந்துக் கொள்வீர்கள்.

லயன் முத்து குழுமத்தார் மாதாமாதம் குறைந்தது இரண்டு, மூன்று இதழ்களை இப்போது தொடர்ச்சியாக கொண்டு வருகிறார்கள். ரூ.60/- மற்றும் ரூ.100/- விலையில் பளபள ஆர்ட் பேப்பரில், சர்வதேச தரத்தோடு வெளிவரும் இதழ்களுக்கு இந்த விலை ரொம்பவும் குறைவுதான்.

காமிக்ஸ் இதழ்களை தொடர்ந்து வாங்குபவர்கள், லயன் காமிக்ஸ் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். பெரும்பாலான வாசகர்கள் இப்போது சந்தா முறையில்தான் வாங்குகிறார்கள். முன்பு போல புத்தகக் கடைகள் மூலமாக வினியோகம் செய்வதில்லை.

Prakash Publishers,
No 8/D-5, Chairman P.K.S.S.A Road, Amman Kovil Patti, Sivakasi, 626189
Phone : 04562 272649, Cell : 98423 19755

சென்னையில் இருப்பவர்கள், கே.கே.நகர் டிஸ்கவரி புக்பேலஸ் மூலமாகவும் காமிக்ஸ் வாங்கலாம். உரிமையாளர் வேடியப்பனுக்கு போன் செய்து சொன்னால், உங்களுக்கு எத்தனை புத்தகங்கள் தேவையோ அதை எடுத்து வைத்துவிடுவார். நண்பர்களுக்கும் சேர்த்து அவரிடம் புக்கிங் செய்துக் கொள்ளலாம் (முந்தைய இதழ்கள் சிலவும் அவரிடம் உண்டு). ‘லயன் மேக்னம் ஸ்பெஷல்’ அவரிடம்தான் ‘அட்வான்ஸ் புக்கிங்’ செய்திருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் கிடைத்துவிடக்கூடும்.

Discovery Book Palace
No. 6, Mahaveer Complex, First Floor,
Munusamy salai, K.K.Nagar,
Chennai – 600 078 (Near Pondicherry Guest House)
Vediyappan Cell : 9940446650

13 கருத்துகள்:

  1. பழைய ஞாபகம் பேராண்டி................

    பதிலளிநீக்கு
  2. லயன் முத்து காமிக்ஸ் படித்தது இல்லை! ராணிக்காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ் வாசித்தது உண்டு. நானும் சில நூறு இதழ்களை சேகரித்து பின்னர் என் தம்பிக்கு கொடுத்து இப்போது ஒன்றும் இல்லை! மீண்டும் களத்தில் இறங்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்

    புதிய புத்தகம் பற்றி அறிமுகம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. தமிழில் காமிக்ஸ் இன்னும் பரவலாகப் போகாமல் இருந்ததற்கு இன்னொரு காரணம், இங்கே காமிக்ஸை ஆரம்பத்தில் அறிமுகம் செய்த சாதனைக்குரியவர்களேதான். மிக மட்டமான காகிதத்தில் அச்சடித்து அவற்றில் அதிக லாபம் சம்பாதிக்க ஆசைப்பட்டார்கள் என்பதையும் சேர்த்தே சொல்லவேண்டும். ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகும் இதழ்களின் காகித தரத்தை உயர்த்துவது ஒன்றும் கடினமானதல்ல. லாப மார்ஜின் சற்று குறைவாகும். ஆனால் அதை அவர்கள் அப்போது விரும்பவில்லை. இப்போது காலத்தின் கட்டாயத்தால், அவர்களும் தரமான தாட்களில் அச்சடித்தாக வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஞாநி சார்,

    உங்கள் கருத்தில் (வழக்கம்போல) மாறுபடுகிறேன்.

    தமிழில் காமிக்ஸின் அதிகபட்ச சர்க்குலேஷன் என்றால் அது முப்பதாயிரம்தான். ஆவரேஜாக பதினைந்தாயிரம் மாதிரிதான் விற்பனை ஆகியிருக்கிறது. விலையும் கூட நீங்கள் சொல்லும் அளவுக்கு ரொம்ப அதிகமாக எல்லாம் வைத்ததில்லை. ‘லாபம்’ பற்றி பேசும்போது காமிக்ஸ் நடத்தி லாபம் சம்பாதிக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் என் பதில். நாம் புத்தகங்களை பதிப்பிப்பது மாதிரி காமிக்ஸ்களை சுலபமாக பதித்துவிட முடியாது. ஏனெனில் அதற்கு ராயல்டி தொகை மிக மிக அதிகம். காமிக்ஸ் நடத்தியவர்கள் ஆர்வத்தின் பேரில்தான் நடத்தினார்களே ஒழிய, அதை லாபம் தரும் தொழிலாக நடத்தவில்லை. அவ்வாறு நடத்தியிருக்கவும் வாய்ப்பே இல்லை.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா6:02 PM, ஆகஸ்ட் 05, 2014

    //காமிக்ஸ் நடத்தியவர்கள் ஆர்வத்தின் பேரில்தான் நடத்தினார்களே ஒழிய, அதை லாபம் தரும் தொழிலாக நடத்தவில்லை. அவ்வாறு நடத்தியிருக்கவும் வாய்ப்பே இல்லை.//
    100 % true and same is the case for Sarojadevi books too.
    They don't even chase for advertisements like other magazines.

    -Sam

    பதிலளிநீக்கு
  7. நண்பர் சாம் அவர்களே, சரோஜாதேவி ரேட்டு கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. எனவே சேவை செய்தார்கள் என்று நம்ப இடமில்லை :(

    பதிலளிநீக்கு
  8. சிறந்த காமிக்ஸ் கதைப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  9. இந்தப் புத்தகம் பற்றி எழுத்தாளர் திரு. சின்னஞ்சிறு கோபு சார் நெற்று முன்தினம் சொன்னார். (ஃபோனில்).
    விரைவில் வாங்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  10. பாலரத்னா அல்ல ரத்னாபாலா என்று நினைக்கிறேன். நங்கநல்லூர் நேரு பள்ளிக்கு செல்லும்போது இந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டே போவதுண்டு. ஆர்வக் கோளாறில் சிறுவர் கதை எழுதி அனுப்பிவிட்டு மாதந்தோறும் பார்த்து ஏமாந்த கதை உண்டு.

    பதிலளிநீக்கு