16 அக்டோபர், 2014

காமிக்ஸ் பெண் மீனு!

நான் யாருக்கும் குறைந்தவள் அல்ல. தெருமுனைகளில் சுற்றிக் கொண்டும், குட்டிச்சுவர்களில் அமர்ந்துக் கொண்டும் பெண்களை கேலியும் கிண்டலும் செய்யும் விடலைப் பையன்களை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்காகவும், என்னைப் போன்று டெல்லியில் வசிக்கும் மற்ற இளம்பெண்களுக்காகவும் உரத்து குரல் கொடுக்கும் தைரியம் எனக்கு இருக்கிறது. டெல்லி, பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும் என்றால் நாங்கள் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அந்த நிலைமை வரும் வரை நாங்களேதான் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருந்தாக வேண்டும்” என்கிறார் டெல்லியில் வசிக்கும் இருபத்தோரு வயதான இளம்பெண் மீனு ராவத்.


நிர்பயா சம்பவம் நடந்த டெல்லியில் இம்மாதிரி குரல்கள் ஆங்காங்கே ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. சமூகவலைத்தளங்களில் முணுமுணுப்பான ஸ்டேட்டஸ்களாக தொடங்கிய இந்த பெண்ணியச் சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக வலுபெறத் தொடங்கியிருக்கிறது.

உலகெங்கும் வாழும் பெண்களின் பிரச்சினைகளை அவர்கள் எப்படி கடந்துவர முடியும் என்கிற விழிப்புணர்வுக்காக ‘கிராஸ்ரூட்ஸ் கேர்ள்ஸ் புக் கிளப்’ என்கிற திட்டத்தை ஒரு தன்னார்வ அமைப்பு முன்னெடுத்தது. அந்த திட்டத்தில் வேறு வேறு ஆறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கதைகளை காமிக்ஸ் வடிவில் எழுதியிருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து எழுதியிருப்பவர் மீனு ராவத்.

நிர்பயா சம்பவம் போன்ற தேசிய அவமானங்களால் பெண்கள் வாழ தகுதியற்ற நகரம் என்று டெல்லியின் மானம், சர்வதேச அளவில் கப்பல் ஏறிக்கொண்டிருக்கும் சூழலில் மீனுவின் காமிக்ஸ் இந்தியப் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

மீனு எதிர்கால கனவுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான இந்திய இளம்பெண்களின் பிரதிநிதி. தன்னுடைய கனவுகளை எப்படி நனவாக்குவது என்பது குறித்த குழப்பம் அவருக்கு இருந்தது. ஃபெமினிஸ்ட் அப்ரோச் டூ டெக்னாலஜி என்கிற டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனத்தை அணுகிய பிறகு அவரது மனோபாவத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. தன்னுடைய கனவுகளை நிஜமாக்க என்னென்ன திறமைகளை தான் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவினைப் பெற்றார். தான் தன்னம்பிக்கை பெற்ற கதையைதான் ‘எ ட்ரூ ஸ்டோரி ஆஃப் கேர்ள் ஃபவர் இன் இண்டியா : மீனு’ என்கிற தலைப்பில் காமிக்ஸாக எழுதினார்.

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரான மர்ஜானே சத்ரபி ஈரானில் நிகழ்ந்த தன்னுடைய சிறுவயது அனுபவங்களை ‘பெர்ஸேபோலிஸ்’ என்கிற பெயரில் கிராஃபிக்நாவலாக எழுதினார். பிரெஞ்சில் வெளியான இந்த சித்திரநாவல், பின்னர் பல்வேறு மொழிகளிலும் (தமிழிலும்கூட) வெளியிடப்பட்டு வாசகர்களின் பரவலான கவனத்தை பெற்றது. மீனுவின் காமிக்ஸும் கூட அத்தகைய ஒரு முயற்சிதான்.

“நான் இப்போது தன்னம்பிக்கை மிகுந்தவளாக இருக்கிறேன். ஆனாலும் டெல்லியிலும், இந்தியா முழுக்கவும் பெண்கள் நான் ஒரு காலத்தில் இருந்ததை போல பயந்தாங் கொள்ளிகளாகதான் பெரும்பாலும் இருக்கிறார்கள். நாம் ஒருவருக்கொருவர்தான் உதவிக் கொள்ள வேண்டும். நமக்கு உதவ விண்ணிலிருந்தா தேவதை வரப்போகிறாள்?” என்று தன்னுடைய கதையை எழுதியதற்கான நியாயத்தை சொல்கிறார் மீனு.

மீனுவுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவருடைய தந்தை திடீரென மரணித்தார். மீனுவோடு சேர்த்து மொத்தம் ஆறு குழந்தைகள். நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள். அப்பா அரசு ஊழியராக இருந்ததால், அரசு ஊழியர் குடியிருப்பில் இருந்த வீட்டில் தொடர்ந்து வசித்தார்கள். உறவினர்களின் உதவி எதுவும் கிடைக்காத நிலையில் சொற்ப சம்பளத்துக்கு மீனுவின் அம்மா வேலைக்கு போனார். ஆனால் உபதேசம் செய்ய மட்டும் சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்கள்.

“இரண்டு பையன்களை மட்டும் படிக்கவை, போதும். அடுப்பு ஊதப்போகும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? அவர்களுக்கு வரதட்சணை கொடுப்பதற்கு நீ பணம் சேர்ப்பதே அதிகம். அப்படியிருக்க படிப்புக்கு வேறு வீணாக செலவழிக்கப் போகிறாயா?” என்று அடிக்கடி மந்திரம் ஓதிவிட்டு போவார்கள்.

அப்போதுதான் மீனு ஆறாவது வகுப்பில் சேர்ந்திருந்தார். பள்ளியை விட்டு அவரை நிறுத்தும்படி உறவினர்கள் நச்சரிக்கத் தொடங்கினார்கள். ஆனால் மீனுவின் அம்மா உறுதியாக இருந்தார். அவர்களிடம் சொன்னார்.

“நிச்சயமாக பெண்களுக்கு கல்வி தேவை. இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்டு சொற்ப சம்பளத்துக்கு நான் மாடாய் உழைக்கவேண்டிய நிலைமை, எனக்கு கல்வி இல்லாததால்தான். என்னுடைய பெண்களுக்கு நல்ல கல்வியை தருவேன். சொந்த காலில் எப்படி நிற்பது என்பதை அவர்களே கற்றுக் கொள்வார்கள்”

படிக்காதவராக இருந்த போதிலும் அம்மா எடுத்த தைரியமான, முற்போக்கான இந்த முடிவால் மீனு தொடர்ந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தார். குழந்தை நிலையிலிருந்து டீனேஜில் நுழைந்தபோதுதான் உலகம் தான் நினைத்த மாதிரி இல்லை என்பது மீனுவுக்கு புரிந்தது. பள்ளியிலும், தெருக்களிலும் பெண்களை கிண்டல் செய்யவும், சீண்டவுமே ஏராளமான போக்கிரிகள் திரிகிறார்கள் என்பது தெரிந்தது. எனவே முடிந்தவரை வெளியே செல்வதை தவிர்த்தார். பக்கத்தில் இருந்த கடைக்கு போவதாக இருந்தால்கூட தம்பிகளைதான் அனுப்புவார். அல்லது அவர்களையும் அழைத்துக்கொண்டுதான் செல்வார். தனியாக போவது என்றாலே அவ்வளவு பயம். பள்ளிக்கு போகும்போது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் அவருக்கு இந்த அளவுகடந்த பயம் தோன்றியது. குறிப்பாக கல்லூரிக்குச் சென்றபிறகு பயம் பன்மடங்காக அதிகரித்தது. எப்போதும் முகத்தில் அச்சத்தை சுமந்துத் திரியும் தன்னுடைய மகளைப் பார்த்து வருத்தப்படத் தொடங்கினார் அம்மா.

இந்த கட்டத்தில்தான் ஃபெமினிஸ்ட் அப்ரோச் டூ டெக்னாலஜி (FAT) அமைப்பின் அறிமுகம் மீனுவுக்கு கிடைத்தது. அந்த அமைப்பில் பெண்களுக்காக நடத்தப்படும் ஆறுமாத இலவச கம்ப்யூட்டர் வகுப்பில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் வசிக்கும் பகுதியில் இருந்து தூரமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது என்பதால் சேருவதற்கு அஞ்சினார்.

அம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது. “எவ்வளவு நாளைக்குதான் தனியாக போக பயந்து பயந்து சாவாய்? கூட யாராவது ஒரு தோழியையும் சேர்த்துக்கொண்டு போய்விட்டுதான் வாயேன்” என்றார். இப்படியாகதான் கம்ப்யூட்டர் வகுப்புக்கு கொஞ்சம் அச்சமான மனநிலையில் போய் சேர்ந்தார் மீனு. 

கம்ப்யூட்டரும், இண்டர்நெட்டும் மீனுவுக்கு கொடுத்த சுதந்திரம் கொஞ்ச நஞ்சமல்ல. வகுப்புக்கு வந்த வேறு வேறு பகுதியைச் சேர்ந்த சக தோழிகள் மூலமாக டெல்லி எவ்வளவு பெரியது என்று அவருக்கு புரிந்தது. பயந்துப்போய் வீட்டோடு முடங்கிக் கிடந்தால், எதிர்காலத்தில் இப்பெரு நகரத்தில் எப்படி வாழமுடியும் என்று யோசிக்கத் தொடங்கினார். FAT அமைப்பு கம்ப்யூட்டரை மட்டும் அப்பெண்களுக்கு கற்றுத்தரவில்லை. இந்திய சமூக அமைப்பில் பெண்களின் நிலை, அவர்கள் மீது விதிக்கப்படும் தடைகளும், அழுத்தங்களும், அவற்றை எப்படி எதிர்கொண்டு வாழ்வது என்பதையும் சொல்லித் தந்தது.

சனிக்கிழமைகளில் அனைவரும் திரைப்படவிழா போன்ற நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார்கள். டெல்லியின் சேரிகளில் நாடகம் மாதிரியான கலைநிகழ்ச்சிகள் மூலமாக குழந்தை திருமணம், சிறுவயது கர்ப்பம், ஈவ்டீசிங், பெண்களுக்கான கல்வி குறித்த அவசியம் என்று பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இவை எல்லாவற்றிலும் மீனுவும் பங்குபெற்றார். இவற்றில் ஈடுபட அவரது அம்மாவும் மீனுவை ஊக்கப்படுத்தினார். இதன் மூலமாக குடும்பம் தவிர்த்து வெளிவட்டத்தில் பழக அவருக்கு இருந்த சங்கோஜமும், அச்சமும் சுத்தமாக அகன்றது.

மீனுவுக்கு படிப்பும் முடிந்தது. வேலை தேடத் தொடங்கினார். பத்திரிகையாளர், மாடல், ஒரு கிரிக்கெட் வீரரின் மனைவி என்று அவரது சிறுவயது கனவுகளின் ஆசைகள் ஏராளம். ஆனாலும் மீனு இப்போது யதார்த்தத்தை உணர்ந்த பெண். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக் கொள்ள தெரிந்த பெண். டெலிமார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ்வாக நல்ல சம்பளத்தில் கிடைத்த பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்தபிறகு அவருக்கு கிடைத்த வெளியுலக அனுபவங்கள் அத்தனையும் அவரை புடம் போட்டது. கூடுதலாக கிடைத்த பொருளாதார சுதந்திரம் மீனுவின் / அவரது குடும்பத்தாரின் வாழ்க்கைநிலையையும் உயர்த்தியது. தன்னுடைய சகோதரிக்கு ஊரும் உறவினரும் மெச்ச நல்லமுறையில் திருமணமும் நடத்தி காண்பித்தார். எந்த மீனுவை படிக்க வைக்க வேண்டாம் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்களோ, அதே மீனுவே குடும்பத்தை தாங்குமளவுக்கு உயர்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சியும் அடைந்தார்கள். 

இதுதான் மீனுவின் வெற்றிக்கதை. இந்த கதையைதான் அவர் எழுதி, சித்திரங்கள் வரைந்து காமிக்ஸ் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். தன்னுடைய கதையை சொல்லும்போதே, இடையிடையே ‘மானே தேனே’வென்று இந்தியப் பெண்களின் சமூகநிலை என்னவென்றும் சர்வதேச சமூகத்துக்கு படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் மீனு ராவத்.

உங்களிடமும் மீனுவிடம் இருப்பது மாதிரியான ஒரு வெற்றிக்கதை இருக்குமானால், இந்த கட்டுரையை வாசிக்கும் பெண்கள் யாரும் தங்களுடைய கதையையும் இம்மாதிரி பதிப்பிக்கலாம். நீங்கள் டேப்ளட் பயன்படுத்துபவராக இருந்தால் ‘காமிக் புக்’ அப்ளிகேஷனை நிறுவியோ அல்லது வெள்ளைப் பேப்பரில் ஓவியமாக வரைந்தோ உங்கள் சொந்தவாழ்க்கையை காமிக்ஸ் ஆக்கலாம். போட்டோக்களையும் பயன்படுத்தலாம்.

grassrootsgirls.tumblr.com என்கிற இணையத்தள முகவரியில் மேற்கொண்டு விவரங்களை பெறலாம். இதே இணையத்தளத்தில்தான் மீனு உள்ளிட்ட உலகின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த ஆறு பெண்களின் வெற்றிக்கதைகள் மின்புத்தகமாக பதிவேற்றப்பட்டிருக்கிறது. அந்த கதைகளை வாசிக்க விரும்பினால் நீங்கள் இணையத்திலேயே இலவசமாகவும் வாசிக்க முடியும்.

* உங்கள் கதையை உருவாக்குவதற்கு முன்பாக நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்:

* உங்கள் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் என்னென்ன?

* நீங்கள் அந்த சவால்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?

* பெண்கள் இம்மாதிரி சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக ஏதேனும் தன்னார்வ அமைப்புகள் உங்கள் பகுதிகளில் பணிபுரிகிறார்களா?

* நீங்கள் அடைந்த தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் மற்ற பெண்களுக்கும் கற்றுத்தர நீங்கள் என்ன செய்தீர்கள்?


இவ்வளவு போதும். ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு கதை உண்டு. அதை கேட்க உலகம் தயாராகதான் இருக்கிறது. நீங்கள் சொல்ல தயாரா?

(நன்றி : தினகரன் வசந்தம்)

3 கருத்துகள்:

  1. "பெண்கள் தன்னைக் காத்துக் கொள்ள, தானே முன்வரவேண்டும்" என்ற கருத்தை வெளிப்படுத்தியது மீனு ராவத்-தின் சொந்தக்கதை!

    பதிலளிநீக்கு
  2. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. Read my epic story
    http://vetrumurasu.blogspot.sg/

    பதிலளிநீக்கு