23 அக்டோபர், 2014

ஜீன்ஸ்

“தீபாவளிக்கு நிலா பாப்பாவுக்கு என்ன டிரெஸ் வேணும்?” கிருஷ்ணா அவள் பேசுவது போன்ற தொனியிலேயே இழுத்து இழுத்து கொஞ்சலாக கேட்டான். டிவியில் ஏதோ பாடாவதி படம் ஓடிக் கொண்டிருந்தது. இரவு உணவு திருப்திகரமாக முடிந்ததால், குடும்பமே ரிலாக்ஸாக இருந்த நேரம் அது.
‘“ம்ம்ம்ம்…” என்று முப்பது நொடிக்கு யோசித்தவள் பட்டென்று சொன்னாள்.
“ஜீன்ஸ்”
“எப்போப் பார்த்தாலும் ஜீன்ஸுதானா? அங்கங்கே பொம்பளைக் கொழந்தைங்க அழகழகா கலர் கலரா பாவாடைச் சட்டை போட்டுக்கிட்டு போறதை பார்க்குறப்போ அவ்ளோ ஆசையா இருக்கு? இவ ஜீன்ஸைத் தவிர வேறெதையும் போட்டுக்க மாட்டேங்குறா” அனிதா நொடித்துக் கொண்டாள்.
“அவ இஷ்டத்துக்கு விடேன் அனிதா. பொண்ணுன்னா பாவாடை சட்டைதான் போடணுமா? அவ என்ன உன்னை மாதிரி பட்டிக்காட்டுலேயா பொறந்து வளர்றா?” கிருஷ்ணாவின் அம்மா, பேத்திக்கு சப்போர்ட் செய்தாள்.
“ஆமாம், நான் நைட்டியிலே இருந்தாலே உங்களுக்கு மூஞ்சி அப்படி போயிடும். ஆனா, பேத்தி மட்டும் ரொம்ப மாடர்னா இருக்கணுமோ?” வார்த்தைகளில் லேசாக அனல் காய்ச்சினாள் அனிதா. எப்போதுமே இப்படித்தான். ஜோவியலாக பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டென சுள்ளென்று விழுவது அவள் சுபாவம்.
“அம்மா, இந்த தீபாவளிக்கு நீயும் என்னை மாதிரியே ஜீன்ஸ் வாங்கிக்கோ” நிலா மழலையில் சொன்னபோது, மூவருமே வாய்விட்டு சிரித்து விட்டார்கள். போன விஜயதசமிக்குதான் நிலாவை ப்ரீ கேஜியில் போட்டிருந்தார்கள். ஸ்கூலுக்கு போய் ஒரு மாசத்திலேயே நன்றாக வாயடிக்க கற்றுக் கொண்டாள்.
“ப்பா…. உங்கம்மாவை அந்த கோலத்துலே நினைச்சாலே பகீருங்குது” என்றான் கிருஷ்ணா.
“உன் ஆத்தாக்காரி என்னா அனுஷ்காவா?” வேண்டுமென்றே மருமகளை வம்புக்கு இழுத்தார் மாமியார்.
குழந்தை ஏதோ தெரியாத்தனமாக பேசுவதை வைத்து கணவனும், மாமியாரும் நக்கல் அடிப்பது அனிதாவின் ஈகோவை தொட்டது. இவனை கல்யாணம் செய்துக்கொள்ளும் வரை அவள் நைட்டி கூட அணிந்ததில்லை. பாவாடை-தாவணி, புடவை என்று சினிமாவில் வரும் அம்மன் பக்தைகள் மாதிரிதான் உடுத்துவாள். இந்த பண்பாட்டு விஷயத்தில் அனிதாவின் பிறந்தவீடு அவ்வளவு கண்டிப்பு. கணவன் வற்புத்தி அவன் வசதிக்காக முதன்முதலாக ஆசையோடு வாங்கிக் கொடுத்த நைட்டியை உடுத்தவே அவ்வளவு தயங்கினாள். சுடிதார் அணியும் விருப்பமெல்லாம் புகுந்த வீட்டில்தான் அவளுக்கு சாத்தியமானது. மாமியாரும் பழம் பஞ்சாங்கம்தான். ஆனாலும், நகரத்தில் வசிப்பவர் என்பதால் இந்தகால பெண்களுக்கு இதெல்லாம்தான் வசதி என்கிற பரந்த மனப்பான்மைக்கு வந்திருந்தார். இப்போது அனிதா பிறந்து வளர்ந்த கிராமத்திலேயே பெண்களுக்கான உடை கட்டுப்பாடெல்லாம் ரொம்ப வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. சுடிதார் அணிந்துக்கொண்டு களை பிடுங்குகிற இளம்பெண்களை எல்லாம் அங்கே அடிக்கடி காண முடிகிறது.
“ஏன் நான் ஜீன்ஸ் போட்டுக்கிட்டா என்ன… உங்கப்பன் டைவோர்ஸ் பண்ணிடுவாரா.. இல்லைன்னா உங்க பாட்டி என்னை எங்கப்பன் வீட்டுக்கு துரத்திடுவாங்களா.. தீபாவளிக்கு நானும் உன்னைமாதிரியே ஜீன்ஸ்தான் செல்லம் போட்டுக்கப் போறேன்” குழந்தையிடம் உறுதியான குரலில் சொன்னாள்.
“சூப்பர்மா” என்றது குழந்தை.
“ஏய் அனிதா, சும்மா விளையாட்டுக்கு கலாய்ச்சா சீரியஸா எடுத்துக்கிட்டியா?”
“இதுலே என்ன விளையாட்டு? ஏன் பொம்பளைங்களும் ஜீன்ஸ் போடுறது சகஜமாதானே ஆயிக்கிட்டிருக்கு. நானும் போட்டுக்கிட்டு போறேன். என்னிக்காவது உனக்கு என்ன பிடிக்கும், என்ன வேணும்னு என்னை கேட்டிருக்கீங்களா? இல்லேன்னா நான்தான் இதுதான் வேணும்னு அடம் புடிச்சிருக்கேனா? இந்த தீபாவளிக்கு நான் ஜீன்ஸ்தான் போட்டுக்கப் போறேன். யார் ஒத்துக்கிட்டாலும் சரி, ஒத்துக்கலைன்னாலும் சரி” நிஜமாகவே அவள் சீரியஸாகதான் பேசினாள்.
“நிறைய மெகாசீரியல் பார்த்து கெட்டுப்போறே நீ”
போர்மேகம் சூழ்ந்ததை அடுத்து, புருஷனும் பொண்டாட்டியும் எப்படியாவது போகட்டும். நம்ம தலை உருளாமல் இருந்தால் சரியென்று மாமியார் டிவி வால்யூமை கூட்டத் தொடங்கினார்.
அனிதா பிடிவாதக்காரி. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம் பிடிப்பவள். அவளுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் இரவுகளில் தொடர்ச்சியாக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவாள் என்று கிருஷ்ணாவுக்கும் நன்றாகவே தெரியும். அரை மனதோடு சம்மதித்தான்.

“ஜீன்ஸ் வேணுங்க”
அவன் தூக்கிவைத்திருந்த குழந்தையைப் பார்த்துக்கொண்டே, “பாப்பாவுக்குதானே சார்?”
“ம்…. இந்த பீப்பாவுக்கும் சேர்த்துதான்” பக்கத்தில் நின்றிருந்த அனிதாவை காட்டினான்.
சேல்ஸ் கேர்ள் களுக்கென்று சிரித்தாள். இப்படிதான் பொது இடங்களில் திடீர் திடீரென ஏடாகூடமாக பேசுவான். எல்லா ஆண்களுமே மற்றவர்களை ஈர்க்க தங்கள் மனைவியை மட்டமடித்து ஜோக் அடிக்கும் அதே அரதப்பழசான டெக்னிக்கைதான் கையாளுகிறார்கள். இவன் மட்டும் விதிவிலக்காக இருந்துவிடுவானா என்ன? கிருஷ்ணாவை முறைத்துக்கொண்டே சொன்னாள்.
“வாயிலே ஏதாவது வரப்போவுது. நீ துணி எடும்மா”
“துணியாதான் வேணுமா மேடம். ரெடிமேட் வேணாமா?” இவளது நாட்டுத் தோற்றத்தை பார்த்துவிட்டு சேல்ஸ்கேர்ளும் அவள் பங்குக்கு விளையாடினாள்.
அனிதா பதட்டமானாள். இந்த நகரத்துக்கு வந்து நாலு வருஷம் ஆகிறது. ஆனாலும் இன்னும் அவளுடைய கிராமவாசனை போகவேயில்லை. இங்கிருக்கும் மனிதர்கள் அதை கண்டுகொண்டு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கேலி பேச தவறுவதேயில்லை. நகரங்களில் வசிப்பவர்கள்தான் நாகரிகமானவர்கள் என்கிறார்கள். ஆனால் இங்கே ஆண்-பெண், பணக்காரன்-ஏழை என்று வித்தியாசமில்லாமல் அத்தனை பேருமே அடுத்தவரின் மனசை புண்படுத்தாமல் பேச தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
மேலும் அனிதாவை நோண்டவேண்டாமென்று முடிவெடுத்து சேல்ஸ் கேர்ள், “சைஸ் என்ன மேடம்?” என்றாள்.
அனிதாவுக்கு அவளது பிரா சைஸ் மட்டும்தான் தெரியும். இடுப்பு சைஸ் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இதுவரை ஏற்பட்டதில்லை. பரிதாபமாக கணவனை பார்த்தாள். கொஞ்சம் விட்டால் அழுதுவிடுபவள் போல இருந்த அவள்மீது கிருஷ்ணாவுக்கு பரிதாபம் தோன்றியது.
“கிராமத்துப் பொண்ணு. இப்போதாங்க முதன் முதலா பேண்ட் போடப்போறா. இஞ்ச் டேப் வெச்சி நீங்களே சைஸ் பார்த்துக்கங்களேன்”
அவ்வளவு பெரிய கடையில் சுற்றிலும் ஆண்களும் பெண்களுமாக அத்தனை பேர் இருக்க, சேல்ஸ் கேர்ள் இவளது இடுப்பைச் சுற்றி டேப் வைத்து அளவு பார்ப்பது அவளுக்கு கூச்சமாக இருந்தது. ஏதோ ஒரு வேகத்தில் ஜீன்ஸ்தான் என்று பிடிவாதம் பிடித்தது தவறோ என்கிற எண்ணம் வந்தது.
மேஜை கண்ணாடியில் பரப்பப்பட்ட ஜீன்ஸ் பேண்ட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள். எல்லாமே ஒரே மாதிரியாகதான் இருந்தது.
“வேற வேற கலர், வேற வேற டிசைன் இல்லையா?”
“மேடம், ஜீன்ஸ் பொதுவா ப்ளூ கலர்தான். வேணும்னா ப்ளாக் கிடைக்கும். பார்க்குறீங்களா?”
“அய்யய்யோ.. பண்டிகைக்கு எடுக்குற துணி. கருப்புலே இருந்தா அத்தை திட்டுவாங்க” என்றாள்.
ஒரு வழியாக பர்ச்சேஸ் முடிந்தது.

ஜீன்சும், டீஷர்ட்டும் அணிந்துக்கொண்டு வெளியே வருவதற்கு அனிதா ரொம்பவும் வெட்கப்பட்டாள். பெட்ரூமிலிருந்து ஹாலுக்கு வருவதற்குள்ளாகவே நாணத்தில் உயிர் போய்விட்டது.

“பாட்டி, அம்மா ஜீன்ஸ் போட்டிருக்கா பாரு” என்று கத்திக்கொண்டே ஓடினாள் நிலா. அவள் கையிலிருந்த துப்பாக்கி ‘டப், டப்’பென்று வெடித்துக் கொண்டிருந்தது.

தலையை துவட்டிக்கொண்டே வந்த கிருஷ்ணா அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். “ஹேய், நல்லா தாம்பா இருக்கு”
சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்த மாமியார், “அனிதா, ஹேப்பி தீபாவளி” என்றாள். அடுத்து ஏதாவது சொல்வாளோ என்று மாமியார் முகத்தை கலவரமாகப் பார்த்தாள் அனிதா.
“டிரெஸ் நல்லாருக்கு. பூஜையறையிலே மல்லி வாங்கி வெச்சிருக்கேன் பாரு. தலையிலே வெச்சிக்கோ” என்று சொல்லிவிட்டு, மீண்டும் சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.
பெரிய நிம்மதி. புருஷனும், மாமியாரும் கிண்டலடித்தே சித்திரவதை செய்வார்களோ என்று பயந்துக் கொண்டிருந்தவளுக்கு அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டது திருப்தியாக இருந்தது. பீரோ கண்ணாடி முன்பாக போய் நின்றாள். அனுஷ்கா அளவுக்கு இல்லையென்றாலும் அவ்வளவு ஒன்றும் மோசமில்லையென்று அவளுக்கே தோன்றியது.
“அம்மா, பட்டாசு வெடிக்கலாம் வா” நிலா அழைத்தாள்.
“ஹேய். வேலை நிறைய இருக்கு. வரமுடியாது”
“அக்கம் பக்கத்திலே எல்லாம் கிண்டல் பண்ணுவாங்களோன்னு பயம், அதனாலேதான் வெளியே வரமாட்டேங்கிறா”
கிருஷ்ணா உசுப்பேற்றினான்.
“எனக்கென்ன பயம்? தாராளமா வெளியே வர்றேன்” தில்லாக சொன்னாலும், உள்ளுக்குள் கொஞ்சம் தயக்கம் இருந்தது. மூணாவது வீட்டு விஜயா மாமி ஏதாவது வம்புக்கு அலைந்துக் கொண்டே இருப்பாள். அவளது கழுகுக் கண்ணில் மாட்டிக் கொண்டால் போச்சு. தெரு முழுக்க தன்னுடைய தலை தான் உருளும்.
தெருவெங்கும் குழந்தைகள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்கள். நிலா ஒரு சரத்தை எடுத்துக்கொண்டு வந்து வாசலில் வைத்தாள். ஊதுபத்தி கொளுத்திவந்து அம்மாவிடம் நீட்டினாள்.
பக்கத்து வீட்டு அவினாஷ் பார்த்தான். கல்லூரி படிக்கும் பையன். அனிதாவுக்கு மீண்டும் வெட்கம். “ஆண்ட்டி. டிரெஸ் சூப்பர். காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரியே இருக்கீங்க”
அவினாஷின் அம்மாவும், அப்பாவும் கூட பார்த்தார்கள். “ஹேப்பி தீபாவளி. ஜீன்ஸும், டீஷர்ட்டும் உனக்கு ரொம்ப நல்லாருக்கு” என்று காம்ப்ளிமெண்ட் செய்தார்கள்.
விஜயா மாமி பட்டுப்புடவை சரசரக்க கையில் பூக்கூடையோடு கிளம்பினாள். அனேகமாக கோயிலுக்காக இருக்கும். யார் கண்ணில் படக்கூடாது என்று நினைத்தாளோ, அந்த மாமியே எதிரில் நிற்கிறாள்.
“அனிதா, பேண்ட் சர்ட் உனக்கு நல்லாதான் இருக்கு. பரவாயில்லையே, உன் மாமியார் இந்த டிரெஸ்ஸெல்லாம் போட அலவ் பண்ணுறா. நல்ல பிராட் மைண்ட் அவளுக்கு. அந்த கடைசி வீட்டு ஜான்ஸி இருக்காளே, கிறிஸ்டியனா இருந்தாலும் கூட தன் மருமகளை மாடர்னா டிரெஸ் பண்ண விட மாட்டா”
உஸ்ஸப்பா... மாமியிடமும் பாஸ் மார்க். இனி கவலையே இல்லை. அரை மணி நேரம் புருஷனோடும், குழந்தையோடும் பட்டாசு வெடித்து ஜாலியாக தீபாவளி கொண்டாடினாள். தெரு முழுக்க அவளது டிரெஸ்ஸை பாராட்டியது. யாருக்குமே உறுத்தவில்லை என்பது அனிதாவுக்கே ஆச்சரியமாக இருந்தது.

“டிவி பார்த்துக்கிட்டே தூங்கிட்டா” குழந்தையை தூக்கிவந்து பெட் மீது போட்டாள். படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்தான் கிருஷ்ணா.
அனிதா இன்று என்னவோ அவனுக்கு புதுசாகத் தெரிந்தாள். அவளுக்கு ஏழெட்டு வயது குறைந்துவிட்ட உற்சாகத்தோடு காலையில் இருந்து வலம் வந்துக் கொண்டிருக்கிறாள். நீல நிறப்புடவை அணிந்திருந்தாள். தலை நிறைய மல்லிகை. குப்பென்று அறை முழுக்க வாசம் பரவியது. கதவை தாளிட்டுவிட்டு வந்து அவன் மீது சரிந்தாள்.
“எங்கம்மாவுக்கு உன் மேலே எவ்ளோ ஆசை பாரு. பூ விக்கிற விலையிலே இவ்ளோ முழம் வாங்கி தந்திருக்காங்க”
“ம்ம்ம்... மாமியாருங்க மருமகளுங்களுக்கு பூ வாங்கிக் கொடுக்குறது அவங்க மேலே இருக்குற ஆசையிலே இல்லை. புள்ளைங்களோட சந்தோஷத்துக்குதான்”
“அதிருக்கட்டும். ஜீன்ஸ் உனக்கு நல்லாதானே இருந்தது. ஏன் அரை மணி நேரம் கூட போடலை”
“அய்யே. அந்த டிரெஸ்ஸை யாரு போடுவா. டைட்டா உடம்பை புடிச்சிக்கிட்டு கொஞ்சம் கூட ஃப்ரீயாவே இல்லை. புடவைதான் பெஸ்ட்டு
“அப்போன்னா ரெண்டாயிரம் ரூபா வேஸ்ட் தானா?”
“அப்படியெல்லாம் இல்லை. கொஞ்ச நேரம் போட்டிருந்தாலும் ஜீன்ஸ் எனக்கு கொடுத்த கான்ஃபிடெண்ட்தான் முக்கியம். என்னோட பர்சனல் ஃப்ரீடமுக்கு நான் போடுற சண்டை அது. என்னோட டிரெஸ்ஸை, என்னோட ஃபுட்டை, எனக்கான விஷயங்களை நானே டிசைட் பண்ணிக்கற உரிமையை கேட்டு வாங்குற போராட்டம் அது. எனக்கு ஒண்ணு பிடிக்குது, பிடிக்கலைங்கிறது வேற விஷயம். ஆனா நான் எதை தேர்ந்தெடுக்கணும்னு மத்தவங்க வற்புறுத்தக் கூடாது. அது புருஷனா இருந்தாலும்” அவள் தலையை, கிருஷ்ணாவின் தலை மீது இடித்தவாறே சொன்னாள்.

இவ்வளவு பேசுவாளா, அவளை ஏதாவது சீண்டலாமா என்று கிருஷ்ணாவுக்கு யோசனை வந்தது. இருந்தாலும் அந்த இரவு சண்டை இல்லாததாக, அப்புறம் ஏதோ சொன்னாளே, ஆங்.. அவள் ‘ஃப்ரீடம்’ உணருவதாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே லைட்டை ஆஃப் செய்தான்.

(நன்றி : தமிழ்முரசு - தீபாவளி சிறப்பு மலர் 2014)

5 கருத்துகள்:

  1. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. சமகாலப் பிரச்சனைக் கதை. //அந்த கடைசி வீட்டு ஜான்ஸி இருக்காளே, கிறிஸ்டியனா இருந்தாலும் கூட தன் மருமகளை மாடர்னா டிரெஸ் பண்ண விட மாட்டா”// :))))))

    பதிலளிநீக்கு
  3. //"கொஞ்ச நேரம் போட்டிருந்தாலும் ஜீன்ஸ் எனக்கு கொடுத்த கான்ஃபிடெண்ட்தான் முக்கியம். என்னோட பர்சனல் ஃப்ரீடமுக்கு நான் போடுற சண்டை அது. என்னோட டிரெஸ்ஸை, என்னோட ஃபுட்டை, எனக்கான விஷயங்களை நானே டிசைட் பண்ணிக்கற உரிமையை கேட்டு வாங்குற போராட்டம் அது. எனக்கு ஒண்ணு பிடிக்குது, பிடிக்கலைங்கிறது வேற விஷயம். ஆனா நான் எதை தேர்ந்தெடுக்கணும்னு மத்தவங்க வற்புறுத்தக் கூடாது. அது புருஷனா இருந்தாலும்”//

    நச்ச்சு.............

    பதிலளிநீக்கு