“வணக்கம் தோழர், நான் பிரதீப்” என்று முதன்முதலாக அவர் அறிமுகமானபோது சுசிலா, ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸம்தான் அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ள காரணம். எனவே காரல்மார்க்ஸுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். சுசிலாவின் அப்பா கம்யூனிஸ்ட்டு கட்சி, தொழிற்சங்கம் என்று தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தவர். முற்போக்கான குடும்பச் சூழலில்தான் சுசிலா சிறுவயதிலிருந்தே வளர்ந்தார். எனவே அவர்களது வீட்டில் எப்போதுமே ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ கோஷம்தான். நிறைய தோழர்கள் வருவார்கள். காரசாரமாக அரசியல் பேசுவார்கள். போராட்டங்களை திட்டமிடுவார்கள். புரட்சிக்கு நாள் குறிப்பார்கள்.
ஆரம்பத்தில் பிரதீப்பிடம் சுசிலாவும் அரசியலையும் சமூகத்தையும் பற்றிதான் பேச தொடங்கினார். பேச்சு சுவாரஸ்யம் கவிதைக்கு நீண்டது. இலக்கியம் பேசி அலுத்து இளைப்பாறிய ஒரு பொழுதில்தான் பிரதீப், ‘ஐ லவ் யூ’ சொன்னார். சுசிலா அப்போது பதினொன்றாம் வகுப்பு. அரசியல், சமூகம், இலக்கியம் என்று அனைத்து ரசனைகளுமே ஒத்துப்போகும் இருவருக்கும் ஈர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியம் என்ன?
ஆனாலும் சுசிலாவுக்கு தயக்கம் இருந்தது.
“நான் இன்னமும் பள்ளிப்படிப்பைகூட முடிக்கவில்லை”
“நான் ஒழுங்காக பள்ளிக்கு கூட சென்றதில்லை. எனக்கும் நிரந்தரமான வேலையும் எதுவுமில்லை”
எதிர்காலத்தை அந்த வயதிலேயே திட்டமிட்டார்கள். சுசிலா, பட்டம் பெற வேண்டும். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த பிரதீப், குறைந்தபட்ச பொருளாதாரத் தன்னிறைவு அடையும் வரை திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அவர் அப்போது வாடகைக்கு ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார்.
சுசிலாவின் குடும்பச்சூழலும் வறுமையானதுதான். மூன்று குழந்தைகள். இவர்தான் மூத்தவர். ரேஷன் அரிசி சாப்பாடுதான். அவருக்கும் அவருடைய தங்கைக்கும் பள்ளிக் கட்டணத்தைகூட அப்போது நடிகர் விஜயகாந்த்தான் கட்டினார். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் மேற்படிப்பு படிக்க வழியில்லை. கிடைத்த ஒரு கல்லூரிப் படிப்பை படிக்க ஆறாயிரம் ரூபாய் கட்டணம் கட்டவேண்டும். அப்போது முடியாததால், தாம்பரம் மெப்ஸில் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வேலைக்கு போக ஆரம்பித்தார்.
நன்றாக படிக்கக்கூடிய பெண், வறுமையின் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு போவதை சகித்துக் கொள்ள முடியாத பிரதீப் உள்ளிட்ட அவரது இயக்கத் தோழர்கள் வற்புறுத்தி அவரை மதுரை சட்டக்கல்லூரியில் நுழைவுத்தேர்வு எழுதவைத்தார்கள். தேர்வில் வென்றவுடன் அங்கேயே தங்கி சட்டம் படிக்க ஏற்பாடு செய்தார்கள்.
“அஞ்சு வருஷத்துலே நான் லாயர் ஆயிடுவேன். நீங்க என்ன ஆவீங்க மிஸ்டர் பிரதீப்?” என்று சுசிலா கலாய்க்க, அவசர அவசரமாக திறந்தநிலை பல்கலைக்கழகம் ஒன்றில் எம்.ஏ., படிக்க விண்ணப்பித்தார். இப்படியாக ‘சூர்யவம்சம்’ சரத்குமார் – தேவயானி மாதிரி இருவரின் தனிமனித முன்னேற்றத்துக்கு ஒருவருக்கொருவர் காரணமாக இருந்தார்கள்.
பிரதீப்புக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் சொன்னார். “நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”. இருவீட்டிலும் லேசான எதிர்ப்பு இருந்தது. ஆனாலும், ஆறாண்டு காதல் கல்யாண இலக்கை கரெக்ட்டாக எட்டியது.
ஒரு கொடூர கொலை
ஏப்ரல் 18, 2002.
“காத்திரு. வந்து கூட்டிச் செல்கிறேன்” என்று சொல்லியிருந்தார் பிரதீப்.
அவருக்காக கடைவாசல் ஒன்றில் காத்திருந்தார். சொன்ன நேரத்துக்கு பிரதீப் எப்போதுமே வந்ததில்லை. கடுமையான கோபம் சுசிலாவுக்கு. அப்போது கடையில் இருந்த டெலிபோன் கிணுகிணுத்தது. போனை எடுத்த கடைக்காரர், “சுசிலாம்மா... உனக்குதான் போன்” என்றார்.
ரிசீவரை காதில் வைத்ததுமே பாட்டு கேட்டது. “நான் உன்னை நெனைச்சேன். நீ என்னை நெனைச்சே”
“ஏய், எவ்வளவு நேரம்பா ‘வெயிட்’ பண்ணிக்கிட்டிருக்கிறது? நீயான்னா எங்கியோ இருந்து பாட்டு பாடிக்கிட்டிருக்கே?” என்று சுசிலா கத்தினார்.
யாரோ முதுகை தொட்டது மாதிரி இருக்க, ‘ஷாக்’ ஆகி திரும்பிப் பார்த்தால் சிரித்த முகத்தோடு பிரதீப்.
இருவரும் சுசிலாவின் வீடு வந்தார்கள். அன்று ஏனோ வழக்கத்தைவிட கூடுதல் உற்சாகமாய் இருந்தார் பிரதீப். “எல்லாரும் பீச் போகலாமா?” கேட்டார். பதிலை எதிர்ப்பார்க்காமல், ஏதோ சினிமா பாட்டுக்கு விசிலடித்தபடியே ஆட்டோ பிடிக்க சாலைக்கு விரைந்தார்.
‘தட்’. தலையில் இடி விழுந்த மாதிரி சப்தம் கேட்டது. கண்ணில் பூச்சி பறந்தது. இரு கைகளாலும் பின்னந்தலையை பிடித்தபோது கைகளில் பிசுபிசுப்பாக இரத்தம். உச்சந்தலையில் ‘விண்’ணென்று உயிர்போகும் வலி. உடலை திருப்ப முயற்சித்தபோது காலில் ஒரு வெட்டு. அப்படியே மரம் மாதிரி சாய்ந்தார். அவர்கள் யார், எதுவென்று தெரியவில்லை. மாறி மாறி தாக்க ஆரம்பித்தார்கள். அரிவாள் கொண்டு காட்டுமிராண்டித்தனமாக வெட்ட ஆரம்பித்தார்கள். வெட்டிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் பிரதீப்பை அடையாளம் கண்டுவிட்டு சொன்னான். “டேய், இந்த அண்ணனையாடா கொல்ல வந்தீங்க? வேணாம்டா”. அவனுடைய வேண்டுகோள் பலனளிக்கவில்லை. இரத்த ஆற்றில் பிணமாய் வீழ்ந்தார் பிரதீப். கொன்ற கூட்டம் நொடியில் பறந்தது. கூட்டம் வழக்கம்போல வேடிக்கை பார்க்க கூடியது. “நல்ல பையன். அநியாயமா கொன்னுட்டானுங்க. காப்பாத்துங்கன்னு ஒரு குரல் கூட கொடுக்கலையே” கும்பல் உச்சு கொட்டியது.
ஓடிவந்து பார்த்த சுசிலா சிலையாய் நின்றார். ஒரு சில நிமிடங்களில் அவருடைய வாழ்க்கையே தலைகீழானது. எல்லாமே அவருக்கு சடுதியில் நடந்துவிட்டது. கண்கள் இருட்டிக்கொண்டது. பிரதீப்பை போய் யாராலாவது கொலை செய்ய முடியுமா?
சாகும்போது அவரது வயது இருபத்தெட்டு. அதுவரை இருபத்தெட்டு முறை இரத்ததானம் செய்திருந்தார். இருபத்தைந்து காதல் திருமணங்களை முன்னின்று நடத்தியிருந்தார். அவர் வசித்த சென்னை தரமணியின் பகுதி பிரச்சினைகளுக்காக பதிமூன்று வயதிலேயே கொடியேந்தி போராடத் தொடங்கியவர். அருமையாக பாடுவார். சர்ச்சில் போல உணர்ச்சிகரமாகப் பேசுவார். கவிதைகள் புனைவதில் ஷெல்லி. அவரை சுற்றி எப்போதும் இருபது பேராவது இருப்பார்கள். பிரதீப் இருக்குமிடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. களரி கலையில் வல்லவர்.
ஏதோ ஓர் அநீதியை இவர் தட்டிக்கேட்டு அடக்கியிருந்த வகையில், சில பேரின் பகையை சம்பாதித்திருந்தார். விளைவு, அந்த வயதிலேயே மரணம்.
ஒரு போராட்டம்
“நமக்காக குரல் கொடுத்தவனை கொன்றிருக்கிறார்கள். அநியாயத்தை தட்டிக் கேட்பவனுக்கெல்லாம் மரணம்தான் பதில் என்றால், இந்த உலகமே மனிதர்கள் வாழ தகுதியற்றதாகி விடும். பிரதீப்பை கொன்றவர்களை சட்டப்படி தண்டிப்போம். சட்டம் தயங்கினால் நாம் போராடி நெருக்குதல் தருவோம்”
மொத்த கூட்டமும் சுசிலாவின் பேச்சை ஏற்றுக் கொண்டது. கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை வற்புறுத்தத் தொடங்கினார்கள். எல்லா கேஸையும் போல, பிரதீப் கொலை கேஸும் ஆமைவேகத்தில்தான் நடந்தது. ஆனால், காவல் நிலையம் தொடங்கி நீதிமன்றம் வரை ஒவ்வொரு படியாக ஏறி இறங்கத் தொடங்கினார் சுசிலா. இயக்கத் தோழர்களோடு இணைந்து தெருவில் இறங்கி போராடினார். அப்போது சென்னை கமிஷனராக இருந்த விஜயகுமாரை ஒருமுறை சந்தித்து, தன்னுடைய கதையை சொன்னார். உடனே, விஜயகுமார் வேகமாக நடவடிக்கைகள் எடுத்து கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர். வழக்கினை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கிடையே சுசிலாவின் சட்டப்படிப்பும் முடிந்திருந்தது. அரசுத் தரப்பில் வழக்கை நடத்திய வழக்கறிஞருக்கு இவரே தன்னார்வத்தோடு உதவத் தொடங்கினார். சட்டக் குறிப்புகள் எடுப்பது, சாட்சிகளின் பதிவுகளை ஆவணமாக்கி வரிசைபடி வழக்கறிஞருக்கு சமர்ப்பிப்பது என்று, அந்த கொலைகேஸை விரைவாக முடிக்க என்னென்ன வேலைகளை செய்யவேண்டுமோ, அது அத்தனையையும் செய்துக் கொடுத்தார்.
சட்டம் வென்றது. கொலையாளிகள் தண்டிக்கப்பட்டனர். இத்தனைக்கும் கொலையாளிகளின் சார்பாக ஆஜரான வக்கீல், ஏதேனும் கேஸை எடுத்தாலே வெற்றிதான் எனுமளவுக்கு வெற்றிகரமாக இருந்தவர். சுசிலா துல்லியமான ஆதாரங்களை கொடுத்திருந்ததால், கொலையாளிகளால் தப்பிக்க முடியவில்லை.
தீர்ப்பு வந்த நாளன்று நீதிமன்றத்தின் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தபோதுதான் சுசிலாவுக்கு பிரதீப் இல்லாத வெறுமை பளிச்சென்று உரைத்தது. இதுபோல முன்பு எத்தனையோ பேருக்கு, எத்தனையோ விஷயங்களில் பிரதீப் உதவியிருக்கிறார். அவரை கொலைசெய்த கொலையாளிகளை துணிச்சலோடு பிடித்து சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனையை பெறக்கூடிய தைரியம் சுசிலாவுக்கு இருந்ததென்றால், அதெல்லாம் பிரதீப் கொடுத்த தைரியம்தான்.
சுசிலா வக்கீலாக பார்கவுன்சிலில் பதிவு செய்யவேண்டும். கருப்பு கோட்டு வாங்க வேண்டும். எப்படியும் நாலாயிரம் ரூபாய் செலவாகும். கைப்பையில் எவ்வளவு காசு இருக்கிறதென்று பார்த்தார். வீட்டுக்கு ஆட்டோவில் போகக்கூடிய அளவுகூட காசில்லை.
ஒரு வாழ்க்கை
அடுத்த சில நாட்கள் வீட்டில் வெறுமனே முடங்கிக் கிடந்த சுசிலாவை மீட்க இயக்கத் தோழர்கள் முயன்றார்கள். ஒரு தோழரின் ஏற்பாட்டில் வக்கீலாக பதிவு செய்தார். பதிவு செய்த அன்றுதான் தோன்றியது. இனிமேல் எவனோ ஒருவன் பிரதீப் மாதிரி யாரையாவது கொன்றுவிட்டு தன்னிடம் வழக்கை எடுத்துக்கொள்ள சொல்லி வந்தால், தர்மப்படி அவனுக்காக வாதாடி ஆகவேண்டும். அவனும் தன்னுடைய கிளையண்ட்தான். பிரதீப்பை கொன்றவர்களுக்காக ஆஜரானவர் மனித உரிமைப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய வக்கீல். அவரே கூட கொலையாளிகளுக்கு ஆதரவாக வாதாட வேண்டிய நிலை வந்தது. இப்படிப்பட்ட ஒரு தொழிலை செய்யவேண்டுமா என்று சுசீலாவுக்கு குழப்பம். இதே குழம்பிய மனநிலையோடு சிறிது காலம் இருந்தார்.
அப்போதுதான் ‘சுனாமி’ வந்தது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சிதறின. குழந்தைகள் பெற்றோரை இழந்தார்கள். பெற்றோர் குழந்தைகளை இழந்தார்கள். தமிழக கடற்கரையோர ஊர்கள் மொத்தமும் மரண ஓலம். துன்பத்தில் வாடுபவர்களுக்கு உதவ கிளம்பினார். நிறைய தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பல்வேறு ஊர்களுக்கும் போனார். மக்களுக்கு உதவும் இந்த மகத்தான பணியை செய்துக் கொண்டிருந்தபோதுதான் அவருக்கு சமூகம் குறித்த முழுமையான புரிதல் ஏற்பட்டது. தன்னுடைய சொந்த துயர், சமூகத்தின் மற்ற துயரங்களை ஒப்பிடும்போது எவ்வளவு சிறியது என்று நினைத்தார் சுசிலா. கோர்ட்டுக்கு வெளியேதான் ஒரு வக்கீலுக்கு நிறைய வேலை இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டார்.
இடையே பிரதீப்பின் தாயாருக்கு சுசிலாவுக்கு மீண்டும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று தோன்றியது. பிரதீப்பின் நண்பரான விஜயானந்திடம் பேசி, சுசிலாவை திருமணம் செய்துக்கொள்ள முடியுமா என்று கேட்டார். பிரதீப் இறந்த அன்று இரவே தனக்கும் இம்மாதிரி தோன்றியது, ஆனால் சுசிலாவின் மனநிலை தெரியாமல் இதை பேசமுடியாது. அவருக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதமே என்றார்.
பிரதீப்பின் தாயாரும், நண்பர்களும் சுசிலாவிடம் இதுபற்றி பேசினார்கள். உடனடியாக ஒப்புக்கொள்ள முடியாதவர், தீவிரமாக யோசித்தார். இதே போல இளம் வயதில் கணவனை இழந்த தோழி ஒருவள் தனக்கு இருந்து இருந்தால், அவளுக்கு நாம் என்ன யோசனை சொல்வோம் என்று யோசித்தார். அதேதானே தனக்கும். ஒருவழியாக திருமணத்துக்கு சம்மதித்தார். இரு வீட்டாருக்குமே லேசான அதிருப்தி இருந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் பணியாற்றக்கூடிய மோகனாவின் ஏற்பாட்டின் பேரில் பழனியில் திருமணம் நடந்தது.
“என் வாழ்வில் நடந்தமாதிரியான சம்பவங்கள் ஒரு ஆணுக்கு நடைபெற்றால், சில நாட்களிலேயே அவன் இயல்புக்கு வந்துவிடுவான். பெண், அம்மாதிரி மீண்டும் வருவதில் இங்கு மரபுரீதியாகவே கலாச்சாரத்தடைகள் ஏராளம் இருக்கின்றன. எந்தவொரு சூழலிலும் ஒரு பெண்ணுடைய சுயம் தொலையாமல் இருப்பதுதான் முக்கியம். நான் என் வாழ்க்கையில் கடந்துப்போன துயரமான நாட்களில் என்னுடைய தனித்துவமான அடையாளத்தை மட்டும் இழக்காமல் பிரக்ஞையோடு இருந்திருக்கிறேன். அதனால்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். நாம் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் நாம் மற்றவர்களுக்கு எதை சொல்கிறோமோ அதை பின்பற்றக்கூடியவர்களாக நாமே இருக்க வேண்டும். நான் அப்படிதான் இருக்க விரும்புகிறேன்” என்கிறார் சுசிலா.
(நன்றி : தினகரன் வசந்தம்)