30 ஜனவரி, 2015

கிணற்றுத் தவளைகள்

காலைப்பொழுது விடிய இரண்டு நாழிகை இருக்கும்போது லாந்தாரோடு ஸ்வாமி தெரிசனத்துக்காக கிளம்பினான் கிருஷ்ணமூர்த்தி. தலையில் வெள்ளைப் பாகை. நெற்றியில் ஸ்ரீசூர்ணம்.
முழந்தாள் வரை நீண்ட வடநாட்டுப்பாணி நாகரிக உடுப்பு. மகா சப்தமெழுப்பிய பாதக் குறடு. அப்பாவின் காசு இவன் அலங்காரத்துக்காகவே தண்ணீரால் செலவாய் கொண்டிருந்தது. தெருமுனையில் ஸ்நேகிதன் நாராயணனும் இணைந்து கொண்டான். சில்வண்டுகளின் ரீங்காரம் தவிர்த்த ஸப்தம் ஏதுமில்லா ஏகாந்த விடிகாலை.
நெஜமாவே பிரேமிக்கிறீயா அவளை நாராயணின் ஸப்தம் அமைதியையும் இருளையும் ஒலிபாய்ச்சிக் கிழித்தது.
அப்படித்தான் நினைக்கிறேன். அவளையே விவாஹம் செய்யவேணுமாய் ஆசைப்படுகிறேன். பூர்வீக சொத்திருக்கு. என் பங்கே ஏழு தலைமுறையைக் காக்கும். மூனுவேளை போஜனம் எந்த கஷ்டமுமில்லாம நடக்கும். அப்பாவிடம் சொல்லி அனுமதி கேட்டு அவளோட பந்துக்களோட பேசவைக்கணும்.
பேசிக்கொண்டே நடக்கையில் கிருஷ்ணமூர்த்தியின் முகத்தை மாதிரியே கிழக்கும் வெளுத்தது. கால்மணிநேர நடைதூரத்தில் கோபுர தரிசனம். கையெடுத்து நமஸ்கரித்தார்கள்.
எம்மை மட்டுமல்ல இந்தப் பூமண்டலத்தையே எந்தப் பாதகமுமில்லாமல் காக்கணும் நாராயணா வாய்விட்டு ஸப்தம் எழுப்பிப் பிரார்த்தித்தான் நாராயணன்.
எந்த பிரச்சினையுமில்லாமல் சக்குபாயை மணம் முடிக்கணும் நாராயணா கிருஷ்ணமூர்த்தி மனசுக்குள் கிசுகிசுத்தான்.
சக்குபாயை கிருஷ்ணமூர்த்தி முதலில் கண்டது ஊர்ப் பொது கேணி பக்கத்தில். ஊரிலிருந்த ஒரே கேணியும் அதுதான். உடல் குளிக்க, சமையல் செய்ய, பாத்திரம் துலக்க எல்லாவற்றுக்கும் அந்தக் கேணியை ஊர் சார்ந்திருந்தது. நீர்மொள்ள பித்தளைத் தவலையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு வந்திருந்தாள். ஒடிந்திடும் போல இருந்தது அவள் இடை. புடவை கட்டியிருந்த அழகை வைத்துப் பார்த்தால், புதுசாகக் கட்டுகிறாள் என தெரிந்தது. வடநாட்டில் பம்பாயில் அவளது பால்யம் பாட்டனார் வீட்டில் நடந்ததாம். புஷ்பவதியாய் ஆனபின் வரன் பார்க்க சொந்தத்தில் ஊருக்கு அழைத்துக்கொண்டார் அவளது தகப்பனார். முதலாய் அவள் கேணிக்கு வந்ததும் அன்றுதான்.
வாலிபனான கிருஷ்ணமூர்த்தி அப்பாவுக்குத் தெரியாமல் சுருட்டுப் பிடிக்க கேணிக்குப் பின்னாலிருந்த பழைய வீட்டுக்கு ஸ்நேகிதர்-களோடு வருவான். அவ்வாறான ஒரு பொழுதில்தான் அவளைக் கண்டான்.
ஸ்ரீமான் இராமபிரானுக்கு சீதைப்-பிராட்டியைக் கண்டதும் வந்ததே காதல். அதுபோலவே மருண்டவிழி மானாம் சக்குபாயைக் கண்டதுமே கிருஷ்ணமூர்த்தியின் இதயம் அவன் வசமிழந்தது. இவளோடு விவாகம் செய்துதான் வம்சம் பெருக்குவேன் என்று சபதமிட்டான். அவள் வேறு ஸமூகம், இவன் வேறு ஸமூகமென்பதெல்லாம் அப்போது அவனுக்கு உள்ளத்தில் தோன்ற-வில்லை.
அடுத்தடுத்த நாட்களில் கிருஷ்ணமூர்த்தி கேணி பக்கமாக வந்தானென்றால், சுருட்டுப் பிடிக்க அல்ல. சக்குபாயைப் பார்க்க. அவளருகே நடந்து மெலிதாக உதடு பிரித்து ஸ்ருதி சேர்த்துப் பாடுவான். நின்னைச் சில வரங்கள் கேட்பேன்! அவை நேரே இன்றெனக்குத் தருவாய். அவன் உள்ளக்கிடக்கையை உணர்ந்தவளாய் சினேகமாய்ச் சிரிப்பாள். அவளுக்கும் அவன் மீது பிரேமம் உண்டென்று தெரியும் வண்ணமாய் பார்ப்பாள்.
கிருஷ்ணமூர்த்தியின் தகப்பனார் ரங்கபாஷ்யத்துக்கு பாதக்குறடு கொண்டு பளாரென முகத்தில் அடித்தது போலிருந்தது.
ஓய் நீரென்ன ஸமூகம், நாங்களென்ன ஸமூகம்? பெண்கேட்டு வெட்கம் கெட்டு வர்றீரே. ஆசைப்பட்டு சிறுபிள்ளையான உம் பிள்ளை அறிவுகெட்டுக் கேட்டானென்றால், வயசான உமக்கும் அறிவில்லையா?
ஸிங்கம் மானை விவாகிக்குமா? யோஸிக்க மாட்டீரா? சக்குபாயின் தகப்பன் பெருங்குரலெடுத்துக் கத்திப் பேசப் பேச தெரு கூடியது. திண்ணையில் அமர்ந்திருந்த ரங்கபாஷ்யத்துக்கு உடல் கூசியது. கையில் வைத்திருந்த வெத்தலச்செல்லத்தை இறுகப் பற்றினார். பதில் பேச நாகுழறியது. தெரு கூடியது. விஷயமறிந்து அவர் முகத்தில் காறி உமிழ்ந்தது. ஊரெதிரில் மானமிழந்த அவர் அன்று இரவே ஊருக்குத் தெற்கு எல்லையில் ஆலமரத்தில் கழுத்தில் கயிறு மாட்டிக் கொண்டு உயிரை மரித்தார்.
சிலநாள் கிரஹத்திலேயே அடைந்துகிடந்த கிருஷ்ணமூர்த்தி, மகாத்மா அழைப்பு விடுத்திருந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்து போராட வெளியூர் போனான். என்ன ஆனான் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது.
* * *
ண்ணீர் எடுக்க தன் வீட்டுப் பெண்கள் வாசல்தாண்டி குடத்துடன் ஆற்றுக்குச் செல்வது கோவிந்தராஜூக்கு சங்கடமாக இருந்தது. கொலுசு குலுங்க குடத்துடன் குதித்துக் கிளம்பும் பூரணியைப் பார்த்தார். வருஷம்தான் எப்படி ஓடுகிறது. காலம்தான் எப்படி மாறுகிறது. மரப்பாச்சிப் பொம்மைக்கு அலங்காரம் செய்து, அப்பா! என்னோட மீரா பாப்பா அழகாயிருக்காளா? என்று மழலை பேசிக் கொஞ்சியவள், எப்படி பூத்துக் குலுங்கிப் பேரழகுப் பெண்ணாய் ஆகிவிட்டாள். அழகான பெண்ணைப் பெற்ற அம்மாக்களுக்குதான் அடிவயிற்றில் நெருப்பு என்பார்கள். கோவிந்தராஜூ தன்னுடைய அடிவயிற்றில் அந்த வெம்மையை உணர்ந்தார்.
சீக்கிரமா நம்மோட கொல்லைப்புறத்தில் ஒரு கிணறு வெட்டலாம் பூர்ணிம்மா. அதுக்கப்புறம் நீ குடத்தோட இப்படி அல்லாட வேண்டியதில்லே.
அடுத்த வாரமே கிணறு வெட்ட வந்தான் ஒப்பந்தக்காரன் மதியழகன். சுண்டி விட்டால் இரத்தம் தெரியும் சிகப்பு. தும்பைப்பூ நிறத்தில் வேட்டி, சட்டை. நெஞ்சில் தொங்கும் மைனர் செயின் வெளியே தெரிவதற்காக சட்டையின் முதல் பொத்தானை அவிழ்த்திருந்தான். லாம்பெரட்டா ஸ்கூட்டர் வைத்திருந்தான்.
பட்டமெல்லாம் படிச்சி முடிச்சிட்டேன். ஆனாலும் கட்சி, கிட்சின்னு அலைஞ்சுக்-கிட்டிருந்தேங்க. அப்பாதான் ஏதாவது தொழிலைப் பாரு. இருக்குற சொத்தை அழிக்கா-தேன்னு திட்டினாரு. நம்ம சுத்துவட்டாரத்துலே இப்போ கிணறு வெட்டதான் ஏகத்துக்கும் கிராக்கி. அதனாலே இந்தத் தொழிலில் இறங்கிட்டேன் படபடவெனப் பேசினான். கோவிந்தராஜூ வெத்தலைப் பாக்கோடு தட்டில் வைத்துக் கொடுத்த முன்பணத்தைப் பவ்யமாக வாங்கினான்.
கிணறு தோண்ட நாலு பேரை அழைத்து வந்திருந்தான். ஜோசியக்காரர் ஒருவர் சொன்ன இடத்தில் கோலமாவு கொண்டு வட்டம் போட்டான். சம்பிரதாயத்துக்குக் கடப்பாரை கொண்டு முதலில் கோவிந்தராஜூ தோண்ட, வேலை மும்முரமாக வளர்ந்தது. காலை, மதியம், மாலை என்று ஒருநாளைக்கு மூன்று முறை வந்து வேலை சுத்தமாக நடக்கிறதா என்று பார்ப்பான் மதியழகன்.
பஞ்சுவைத்த சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டே ஒருநாள் பாதிவரை தோண்டிய கிணற்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். கொலுசுச் சத்தமும், வளையல் சத்தமும் இணைந்து புதுவிதமான இனிமையான சப்தம் கேட்டது. மதியழகன் இதுவரை கேட்டறியா சப்தமிது. சட்டென்று சிகரெட்டைக் காலில் போட்டு நசுக்கி, திரும்பிப் பார்த்தான்.
அம்மா மோர் கொடுக்கச் சொன்னாங்க தலைகுனிந்து காலில் வட்டம் போட்டுக் கொண்டு நின்றிருந்தாள் பூரணி.
நன்றிங்க டம்ளரை வாங்கிக் கொண்டே அவளது வட்டமான முகத்தைப் பார்த்தான். குறுகுறுப்பும் மகிழ்ச்சியும் துள்ளி விளையாடும் கண்கள். சிவந்த அளவான நாசி. இதழ்களில் குறும்பான புன்னகை. அவளும் அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். கிராப் வெட்டி எம்.ஜி.ஆர் மாதிரியிருந்தான். நெற்றியில் குங்குமம் இட்டு களையான முகம். அருகே எங்கோ வானொலியில் புதுப்பாடல் ஒலித்தது. தொட்டால் பூ மலரும்.... தொடாமல் நான் மலர்வேன்
கிணற்றில் ஊற்று வருவதற்கு முன்பாகவே அவர்களுக்குள் காதல் ஊற்றெடுத்துவிட்டது.
ஜாதியெல்லாம் இந்தக் காலத்துலே பிரச்சினை இல்லை பூரணி. கலப்புத் திருமணத்துக்கு அரசாங்கமே சட்டம் போட்டிருக்கு தெரியுமில்லே?
நீங்க நல்லமாதிரிதான் பேசறீங்க. ஆனா எங்காளுங்க வேறமாதிரி ஆளுங்க. சொந்த ஜாதியா இருந்தாக்கூட பொண்ணு கொடுக்க ஆயிரம் முறை யோசிப்பாங்க.
ஒரே வழிதான். ஓடிப்போயிடலாம். குழந்தை குட்டின்னு பொறந்தப்புறம் ஊருக்கு வரலாம். அதுக்கப்புறம் அவங்க நினைச்சாலும் நம்மைப் பிரிக்க முடியாது.
எங்காளுங்க மானத்துக்குக் கட்டுப்-பட்டவங்க. செத்துடுவாங்க. இல்லைன்னா நம்பளைத் தேடிச் சாகடிப்பாங்க.
அதெல்லாம் ஒன்னும் கிடையாது. நாலு நாளைக்கித் தேடிட்டு அப்படியே விட்டுடு-வாங்க. நாம ஒரு வாரம் கழிச்சி கடிதாசி போட்டு நமக்குக் கல்யாணம் ஆயிடிச்சின்னு சொல்லிக்கலாம். இன்னைக்கு ராத்திரி பன்னெண்டு மணிக்கு தெருமுக்குலே வேப்பமரத்துக்குக் கீழே நிக்கறேன். துணிமணி-யோடு வந்துடு.
ம்ம்ம்... அரைகுறை மனதோடு சம்மதித்தாள்.
மறுநாள் காலை மதியழகன் வெட்டிய அதே கிணற்றில் பூரணி மிதந்து கொண்டிருந்தாள்.
* * *
ல்.. ஓ.. வி.. ஈ..
திரும்பச் சொல்லு லவ்

ஏய் நித்யா. குழந்தைக்கு என்னடி சொல்லிக் கொடுக்கறே? அண்ணி சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள்.
ம்.. உம்பொண்ணுக்கு லவ் பண்ணச் சொல்லிக் கொடுக்கறேன் அண்ணி.

உங்கண்ணன் காதுலே விழுந்ததுன்னா செருப்புப் பிஞ்சிடும்.
வெவ்வேவ்வ்வே அண்ணிக்குப் பழிப்புக் காட்டிவிட்டு தெருவுக்கு ஓடினாள் நித்யா. பத்தொன்பது வயது. பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு. வழக்கம்போல எல்லா கதாநாயகி-களையும் மாதிரி கொள்ளை அழகு.
தெருவில் ஒரு லாரி நின்றிருந்தது. விர்ர்ரென்று இரைச்சல் சத்தம்.
எல்.. ஓ... வீ.. ஈ... லவ்வு.. சொல்லு எல்.. ஓ.. வீ.. ஈ லவ் தன்னுடைய டயலாக்கையே யார் சொல்லிக் கொண்டிருப்பது என்று ஆச்சரியமாகப் பார்த்தாள். கூலிங் க்ளாஸ், டீஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் என்று கதாநாயக லட்சணங்களோடு தெருப்பையன்களோடு விளையாடிக் கொண்டிருந்தான் அவன்.
பேரு ஷரண். பக்கத்து ஊர் காலனிங்க. கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படிச்சேன். கவர்மெண்ட் வேலையே கிடைச்சிடிச்சி. நம்ம சுத்துப்பட்டுலே கிணறெல்லாம் வத்திப் போச்சில்லையா.. அதுக்காகதான் அரசாங்கம் போர்வெல் போடுது. இந்த வேலையைக் கண்காணிக்கிற வேலை என்னோடதுதான் என விவரம் கேட்ட ஊர்ப்பெருசு ஒருவரிடம் விலாவரியாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.
யூகித்திருப்பீர்கள். ஒருவருக்கொருவர் புன்னகைத்திருப்பார்கள். லேசாக வெட்கப்பட்டு அறிமுகப்படுத்திப் பேசிக்கொண்டிருப்பார்கள். செல்பேசி எண்கள் பரஸ்பரம் பரிமாறிக்-கொள்ளப்பட்டிருக்கும். இறுதியில் ஷரணுக்கும், நித்யாவுக்கும் அமரக்காதல் மலர்ந்திருக்கும் என்பதைத் தனியாக சொல்லவே வேண்டியதில்லை. வேறு வேறு ஜாதி. வீட்டுக்குத் தெரிந்து பிரச்சினை. ஷரணைக் கண்டதும் வெட்டுவேன் என்று நித்யாவின் அண்ணன் அருவாளைத் தூக்கிக்கொண்டு யமஹாவில் சுற்றிக் கொண்டிருந்தான்.
ஒரு சுபயோக சுபமுகூர்த்த தினத்தில் ரெஜிஸ்டர் ஆபிஸில் பதிந்து தம்பதியாய் ஆனார்கள். உயிர்பிழைக்க ஊரைவிட்டு பெங்களூருக்கு ஓடினார்கள். அங்கும் நித்யாவின் அண்ணனும், அவனுடைய நண்பர்களும் தேடிவந்தது தெரியவர மும்பைக்கு ரயில் ஏறினார்கள்.
மும்பையில் இறங்கியதுமே ஷரணுக்கு ஏதோ தப்பாகப்பட்டது. அப்பாவுக்கு போன் அடித்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. தம்பியின் போன் நாட் ரீச்சபிள். நண்பனுக்கு போன் அடித்தான். எதிர்முனையில் போனை கட் செய்த நண்பன் எஸ்.எம்.எஸ். அனுப்பினான். விஷயமே தெரியாதாடா உனக்கு.. உடனே பேப்பரைப் பாரு.
நியூஸ் பேப்பர் கடையில் தினத்தந்தி வாங்கினான். தலைப்புச் செய்தியே அவர்கள்-தான். காதல் திருமண தகராறு. இரு சமூகங்களுக்குள் வன்முறை. தர்மபுரி அருகே மூன்று கிராமங்கள் சூறை.

(நன்றி : உண்மை - தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழ், 2014)

27 ஜனவரி, 2015

காதல் வழியும் கோப்பை

மெரீனா பீச்

“ஏண்டா லேட்டு?” என இன்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி தவடையில் இடமும், வலதுமாக நாலு அறை காட்டினால் தான் மனசு ஆறும். அப்படியும் திருந்துகிற ஜென்மம் இல்லை அவன்.

காதல் ‘ஓக்கே’ ஆகும் வரை ஐந்து மணிக்கு வரவேண்டிய இடத்துக்கு மூன்று மணிக்கெல்லாம் வந்து தேவுடு காக்கிறான்கள். காதலித்த பிற்பாடு ஏனோதானோவென்று சலிப்பாக ஏழு மணிக்கு வருவதே இந்த காதலன்களின் பிழைப்பாகி விட்டது.

காதலன்கள் சோம்பேறிகள். காதலிகள் கிள்ளுக்கீரைகள். ஆதாம் - ஏவாள் காலத்திலிருந்தே இதைதான் வரலாறு பதிவு செய்து வருகிறது.

கரையில் அமர்ந்து அலைகளை வெறித்துக் கொண்டிருந்தாள் அனிதா. ஸ்லீவ்லெஸ் மஞ்சள் கலர் சுடிதார். சிவந்த வாளிப்பான தோள்கள் கூடுதல் கவர்ச்சியை வெளிப்படுத்துவதாக தோன்றியதால், துப்பட்டாவை சால்வை மாதிரி போர்த்தியிருந்தாள். இவனை காதலிப்பதற்கு முன்பாக தோற்றம் குறித்த பெரிய கவனம் எதுவும் அவளுக்கில்லை. கைப்பையை திறந்து உள்ளங்கையளவு அகலம் கொண்ட கண்ணாடியில் முகம் பார்த்தாள். லேசாக கோணலாய் தெரிந்த நெற்றிப் பொட்டினை ‘சென்டர்’ பார்த்து நிறுத்தினாள். காதோர கேசத்தை சரி செய்தாள். கண்களை கசக்கித் துடைத்தாள்.

‘ஸ்ஸிவ்வென’ ஆர்ப்பரித்து பால்நிற நுரைகளோடு பொங்கி வரும் அலைகள், எதிர்பாராத நொடியில் அமைதியாகி, மவுனமாக பின்வாங்குவதை எத்தனை முறை பார்த்தாலும் சுவாரஸ்யம் குறைவதில்லை.

ஒரு காதல் படத்துக்கு ‘அலைகள் ஓய்வதில்லை’ என்பதைவிட பொருத்தமான பெயர் வேறு ஏது? ‘தொட்டுத் தொடரும் பந்தம்’ என்பது அலைகளுக்கும், கரைக்குமான சரியான உறவு. அலை காதலன். கரை காதலி. அலைக்காக கரை என்றுமே காத்திருப்பதில்லை. வரவேண்டிய நேரத்தில் மிகச்சரியாக வந்துவிடுகிறது. இந்த கிருஷ்ணா மட்டும் ஏன்தான் இப்படிப் படுத்துகிறானோ?

மணி ஆறரை. இருட்டத் தொடங்கியிருந்தது. தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தைக்கு ஐந்து ஆறு வயது இருக்கும். அப்பா அம்மாவுக்கு நடுவில் ஆளுக்கு ஒரு கையை கொடுத்து, அலைகள் வரும்போதெல்லாம் குதித்துக் கொண்டிருந்தாள். இந்த குழந்தை மனம் இனி தனக்கு வாய்க்க சாத்தியமேயில்லை என்கிற யதார்த்தம் புரிந்தது. இன்னும் ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து இதே குழந்தையும், அவளது காதலனுக்காக தன்னை மாதிரியே இதே கடற்கரையில் காத்திருக்கப் போகிறாள். ஓடிப்போய் அந்த குழந்தையிடம் ‘வளர்ந்து பெரியவ ஆயிட்டேனா, எவனையும் காதலிச்சி மட்டும் தொலைக்காதேடி செல்லம்’ என்று சொல்லலாமா என்று பைத்தியக்காரத்தனமாகவும் நினைத்தாள்.


பட்டினப்பாக்கம் டாஸ்மாக்

“மச்சி மணி ஆறு ஆவுது. அனிதா வெயிட் பண்ணிக்கிட்டிருப்பா. நான் கௌம்பறேண்டா” பைக்கில் வினோத்தை இறக்கிவிட்டு சொன்னான் கிருஷ்ணா.

“அடப்பாவி. ஃபிகருக்காக நட்பை முறிச்சிடுவியாடா நீயி”

“அப்படியில்லை மச்சான். குடிச்சிட்டுப் போனா ஓவரா பிகு காட்டுறாடாஞ்”

“டேய், சொல்றதை சொல்லிட்டேன். இப்பவே ஸ்ட்ராங்கா இருந்துக்கோ. அப்புறம் கல்யாணத்துக்கும் அப்புறம் ரொம்ப ஓவரா ஏறி மிதிப்பாளுங்க. நான் படுற பாட்டை பாத்துட்டாவது திருந்துங்கடா” பர்ஸில் இருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து, சரக்கு வாங்க கவுண்டரில் நீட்டினான் வினோத்.

“வீ.எஸ்.ஓ.பி. ஹாஃப்”

“எனக்கு வேணாம் மச்சான். அவளாண்ட பிராப்ளம் ஆயிடும்” கிருஷ்ணா கெஞ்சும் குரலில் சொன்னான்.

“அடப்பாவி. இவ்ளோ சொல்லிக்கிட்டிருக்கேன். அப்போன்னா நம்ம பிரண்ட்ஷிப் அவ்ளோதானா? ஆம்பளைங்களா நடந்துக்கங்கடா அப்ரண்டீஸுகளாஞ்” நக்கல் அடித்தான்.

“சரி மச்சி. சொன்னா கேட்க மாட்டேங்குறே. எனக்கு வோட்கா மட்டும் குவார்ட்டர் சொல்லு. ஸ்மெல்லு காமிச்சிக்காம சமாளிச்சிக்கலாம்”

“குவார்ட்டர் வீ.எஸ்.ஓ.பி., இன்னொரு குவார்ட்டர் வோட்கா. ரெண்டு கிளாஸு. ஒரு கோக்கு. ஒரு ஸ்ப்ரைட்டு”

இருவரும் ‘சீயர்ஸ்’ சொல்லிக்கொள்ளும்போது நேரம் ஆறரை.

“இதோ பாரு மாமா. பக்கத்து வீட்டுப் பொண்ணு. பார்த்தே. புடிச்சிடிச்சி. உன்னை அறியாம லவ் பண்ண ஆரம்பிச்சிட்டே. அதெல்லாம் சரிதான். லவ்வுக்காக உன்னை மட்டும் நீ எப்பவும் மாத்திக்காத. எந்தப் பொண்ணும் லவ்வருக்காக அவளை மாத்திக்கறதில்லை. இதே மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமாவும், டெய்லி சரக்கடிப்போம், தம் அடிப்போம். இதையெல்லாம் நீ கண்டுக்கக்கூடாது. அதே மாதிரி ப்யூட்டி பார்லர் போறது, ஆ வூன்னா அம்மா ஊட்டுக்கு போறது இதையெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். இப்படின்னு உடனே டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸை தெளிவா பேசிடு. இல்லேன்னா நாளை பின்னே என்னை மாதிரி நீயும் புலம்பிக்கிட்டிருப்பே. என் நண்பன் நீ நல்லாருக்கணும்டாஞ்” வினோத் போதையில் அட்வைஸிக்கொண்டே இருக்க, எரிச்சலும் டென்ஷனுமாக இருந்த கிருஷ்ணா, க்ளாஸை எடுத்து ஒரே கல்ப்பில் சரக்கை முடித்தான்.

“சரக்கடிக்கிறது நம்ம பிறப்புரிமைடாஞ் இவளுங்க என்ன அதை தடுக்கறது?” அவன் அடுத்த ‘பஞ்ச்’ அடித்தான்.

’ஆமாம் தானே?’ இந்த பாயிண்ட் கிருஷ்ணாவுக்கு பிடித்திருந்தது. என்னவானாலும் சரி. சரக்கடிக்கும் உரிமையை மட்டும் காதலுக்காக தாரை வார்க்கக்கூடாது என்று உடனடியாக முடிவெடுத்தான். தம் பற்றவைத்து, நன்கு உள்ளிழுத்து, முடியை கைகளால் கோதி, தலையை மேலாக்க தூக்கி கூரையைப் பார்த்து ஸ்டைலாக புகையை ஊதினான்.

“வீட்டுக்குப் போனா கரடி மாதிரி கத்துவா ராட்சஸி. நானென்ன குடிச்சிட்டு ரோட்டுலே உழுந்து புரண்டு எழுந்தா போறேன். என் லிமிட்டு எனக்குத் தெரியாது.. எவ்ளோ குடிச்சாலும் நான் ஸ்டெடி மாமா. வாசலிலே நான் உள்ளே நுழையறப்பவே குழந்தையப் போட்டு நாலு சாத்து சாத்துவா.. இதுதான் சண்டைய ஆரம்பிக்கிறதுக்கு அவளுக்கு ஸ்டார்ட்டிங் பாயிண்ட்” அவன் அவனுடைய தரப்பு சோகத்தை புலம்பிக் கொண்டேயிருந்தான். அவனுக்கும் லவ் மேரேஜ்தான். கல்யாணத்துக்கு முன்பு ரொம்பவும் விட்டுக் கொடுத்துவிட்டதால், இப்போது பயங்கர ‘ரப்ஸர்’ என்று தினம் தினம் அழுது வடிகிறான் வினோத்.


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

பயபக்தியோடு பிரகாரத்தை சுற்றிக் கொண்டிருந்தாள் அனிதா. பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, பொமரேனியன் நாய்க்குட்டி மாதிரியே அவளை பின் தொடர்ந்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.

“எத்தினி வாட்டி சொன்னாலும் திருந்த மாட்டேயில்லை” அவள் குரலில் ஏகத்துக்கும் அதிகாரமிருந்தது.

“இல்லைப்பா.. நான் சும்மா இருந்தாலும் ஃப்ரண்ட்ஸ் கூட்டிக்கிட்டுப் போயி ஊத்திடறானுங்க. பேசிக்கலி நான் ஒரு குடிகாரன் கிடையாதுங்கிறதை நீ புரிஞ்சுக்கணும்பா”

ஏதோ சிலையை தொட்டு வணங்கி, “குடியா, நானான்னு நீ இன்னிக்கே முடிவு பண்ணிடு கிருஷ்ணா. சீரியஸாவே சொல்றேன். என் குடும்பம் கெட்டதே எங்கப்பாவோட குடியாலதான். எங்கம்மா மாதிரி நானும் காலத்துக்கும் உன்னை கட்டிக்கிட்டு கஷ்டப்பட முடியாது”

“அவ்ளோதானா நம்ம லவ்வு?” அவன் குரல் அவனுக்கே பரிதாபமாய் தோன்றியது.

“அதென்னங்கடா.. நாங்க உங்க லவ்வை ஏத்துக்கற வரைக்கும் டீடோட்டலர் மாதிரி நடிக்கறீங்க. காஃபி, டீ கூட குடிக்கறதில்லைங்கறீங்க.. லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா, தைரியமா பக்கத்துலே உட்கார்ந்திருக்கறப்பவே சிகரெட்டு பத்த வைக்கறீங்க. தண்ணியடிச்சிட்டு வந்து உளறிக்கிட்டிருக்கீங்க.. தாலி கட்டினதுக்கப்புறமா மீதியிருக்கிற கெட்டப் பழக்கம்லாம் கூட வந்துடுமா உங்களுக்கெல்லாம்?” முன்கோபுர வாசலில் செருப்பு மாட்டிக்கொண்டே சீறினாள்.

செருப்புவிட வந்த இரண்டு தாவணிகள் நமட்டுச் சிரிப்போடு இவனைப் பார்த்தவாறே கடக்க, சுர்ரென்று கிளம்பிய ஈகோவை அடக்கியவனாய்.. “ப்ளீஸ் அனிதா. இனிமே தண்ணியே அடிச்சிருந்தாலும் சொன்ன நேரத்துக்கு, சொன்ன இடத்துக்கு கரெக்ட்டா வந்துடறேன்” சட்டென்று சொல்லிவிட்டு, நாக்கை கடித்துக் கொண்டான்.

“அப்போன்னா என்னை விட்டாலும் விட்டுடுவே.. தண்ணியை மட்டும் விடமாட்டே...”

“அப்படியில்லேப்பா. அது ஒரு பழக்கம். அவ்வளவு சுளுவா விட்டுட முடியாது. மாசாமாசம் ஆயிரக்கணக்குலே குடிக்காக செலவு பண்ணனும்னு எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா.. ஆறு மணியாச்சின்னா கை கால்லாம் தடதடன்னு ஆயிடுது தெரியுமா?” இப்போது அவளுக்கும் அவனைப் பார்க்க பரிதாபமாகவே இருந்தது.

“அச்சச்சோ... ரொம்ப பாவமாயிருக்கு.. நிறைய செலவு வேற ஆவுதா நான் வேணும்னா ஒரு ஐடியா சொல்றேன். கேட்குறீயா?”

“குடியை விட்டுருன்னு மட்டும் நொய்நொய்னு கழுத்தறுக்காம, வேற எந்த ஐடியான்னாலும் சொல்லு” இப்போது கொஞ்சம் தைரியமாகவே பேசினான்.

“ம்ம்... இப்போ சொல்ல மாட்டேன். நைட்டு கரெக்ட்டா பத்து மணிக்கு, செவுரு எகிறிக்குதிச்சி எங்க வீட்டுப் பின்னாடி இருக்குற கொய்யா மரத்தாண்ட வந்து ஒளிஞ்சிக்கிட்டிரு.. நானே வந்து சொல்றேன்”

“உன்னை பார்க்கணும்னா நரகத்துக்கு கூட வர்றதுக்கு ரெடியா இருக்கேன் செல்லம்!”


அனிதாவின் ஆபிஸ்

“அக்கா.. நீங்க சொன்ன ஐடியா ஒர்க்-அவுட் ஆயிடிச்சி. இப்போல்லாம் என் ஆளு தண்ணியே போடறதில்லை. ரொம்ப தேங்க்ஸ்க்கா” லஞ்ச் டேபிளில் உற்சாகமாக லதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் அனிதா.

“ம்ஹூம்.. இதுகூட டெம்ப்ரவரி சொல்யூஷன்தான். கல்யாணத்துக்கப்புறம் ரொம்ப கேர்ஃபுல்லா இவனுங்களை வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கணும். டெலிவரி, கிலிவரின்னு நாம பிஸியாவுற நேரத்துலே மறுபடியும் வேலையைக் காட்டிடுவானுங்க”

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். அய்யோ.. இப்போ அவனை நெனைக்கவே எனக்கு ரொமான்ஸ் மூடு எகிறுது. முன்னாடியெல்லாம் ஆறு மணிக்கு பார்க்க வரச்சொல்லிட்டு ஏழரை, எட்டு மணிக்கு தள்ளாடிக்கிட்டே வருவான். எரிச்சலா இருக்கும். இப்போ அஞ்சு, அஞ்சரைக்கே எனக்கு முன்னாடி வந்து வெயிட் பண்ணுறான். பச்சத்தண்ணி கூட யோசிச்சி யோசிச்சிதான் குடிக்கிறான்”

“அப்படி என்னடி சொக்குப்பொடி மந்திரம் சொல்லிக் கொடுத்தாங்க இந்த லதாக்கா?” சங்கீதா கேட்டாள்.

“அக்கா சொன்னது ரொம்ப ஈஸி டெக்னிக்டி. என்னாச்சினாலும் சரி. டெய்லி நைட்டு பத்து மணிக்கு ஒருவாட்டி என்னை நேரில் பார்த்துட்டு குட்நைட் சொல்லிட்டு போகணும்னு கண்டிஷன் போட்டேன். அதுமாதிரி கஷ்டப்பட்டு அவன் வர்றதாலே போனஸா ஒரு லிப்-டூ-லிப் கிஃப்ட். டிரிங்ஸ் வாசனை வந்தா நோ கிஸ். இந்த கிஸ்ஸை வாங்குறதுக்காகவே அவன் தண்ணி போடறதை விட்டுட்டான். அதுக்கப்புறமா போயி சரக்கு அடிக்க நினைச்சாலும் பத்து மணிக்கு மேலே டாஸ்மாக்கும் மூடிடுவாங்கங்கிறதாலே என் ஆளு வேற வழியில்லாமே சுத்தபத்தமாயிட்டான்”

“அட நல்ல ஐடியாக்கா.. என் ஆளு சரக்கடிக்கிறதில்லை. ஆனா கூட்ஸு வண்டி மாதிரி எப்பம்பாரு சிகரெட்டு ஊதிக்கிட்டிருக்கான். எத்தனையோ முறை பேசிப் பார்த்துட்டேன். திருந்தறமாதிரி தெரியலை. இந்த உதட்டு வைத்தியம்தான் அவனுக்கும் சரிபடும் போல” சங்கீதாவும் உற்சாகமானாள்.

“ம்ம்... நீங்கள்லாம் இப்போதான் லவ் பண்ணுறீங்க. உங்களுக்கு நான் கொடுக்குற ஐடியா ஒர்க்-அவுட் ஆவுது. நான் லவ் பண்ண காலத்துலே இதுமாதிரி எவளும் எனக்கு ஐடியா கொடுக்கலையே?” புலம்பிக்கொண்டே தன் தாலியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள் லதா.


ட்விஸ்ட்

முன்பு, நாம் பட்டினப்பாக்கம் டாஸ்மாக்கில் பார்த்த வினோத்தின் மனைவிதான் இந்த லதா என்று கதையை முடித்தால் நல்ல ‘ட்விஸ்ட்’ ஆகத்தான் இருக்குமில்லையா? எனவே அப்படியே இங்கேயே ‘முற்றும்’ போட்டுக் கொள்ளலாம்.

இன்னொரு ‘ட்விட்ஸ்ட்’டும் வேண்டும் என்பவர்கள், கிருஷ்ணா எட்டு மணிக்கெல்லாம் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி ஸ்டாக் வைத்துவிட்டு, நைட்டு பத்து மணிக்கு அனிதாவிடம் கிஸ்ஸும் வாங்கிவிட்டு, பதினோரு மணிக்கு மொட்டை மாடி சென்று குடிப்பதாகவும் கதையை நீட்டி வாசித்து, ‘முற்றும்’ போட்டுக் கொள்ளலாம்.

(நன்றி : தமிழ்முரசு பொங்கல்மலர்)

20 ஜனவரி, 2015

ஹண்ட்ரட் பர்சண்ட் ஹேப்பி

சமீபத்தில் சென்னை மயிலாப்பூர் தெற்குமாட வீதியிலிருந்த அந்த புத்தகக்கடைக்கு போயிருந்தோம். கார்த்திக் புத்தக நிலையம் என்று பெயர். நூற்றுக்கணக்கில் ரமணி சந்திரன் நாவல்கள். கூடவே கிட்டத்தட்ட முப்பது பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள்.

“இவ்வளவு பெண்கள் தமிழில் எழுதுகிறார்களா?” ஆச்சரியத்தோடு முணுமுணுத்தோம்.

நம்முடைய முணுமுணுப்பு கடைக்காரரின் காதில் விழுந்திருக்க வேண்டும்.

“ஆமாங்க. இவ்வளவு பேரு எழுதுறதைவிட அதை லட்சக்கணக்கானோர் படிக்கிறாங்க என்பதுதான் முக்கியம்” என்றார். அவருக்கு எண்பது வயது இருக்கும். ஆனாலும் வயதை மீறிய சுறுசுறுப்பு.

“தமிழில் இப்போ யாருமே படிக்கிறதில்லை. புத்தக வாசிப்பே குறைஞ்சிடிச்சின்னு சொல்றாங்களே சார்?”

“எதை வெச்சி சொல்றாங்கன்னு தெரியலை. இந்த கடையிலே புத்தகங்கள் விற்கிறதை வெச்சி சொல்றேன். முன்னைவிட நிறைய பேர் படிக்கிறாங்க. குறிப்பா பெண்கள் நிறைய படிக்கிறாங்க”

சொன்னதோடு இல்லாமல், சூடாக விற்றுக் கொண்டிருந்த சில புத்தகங்களை நம் கையில் திணித்தார். சமீபத்தில் நன்றாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் என்று சிலரை நமக்கு சிபாரிசும் செய்தார்.

“ஓசையில்லாமே ஓர் எழுத்தாளப் பரம்பரை தமிழில் உருவாகிட்டு வருது. மெயின்ஸ்ட்ரீமில் இதைப்பத்தி பெருசா யாரும் பேசுறதில்லைன்னாலும், அண்டர்கரெண்டில் ரொம்ப வேகமா இது நடக்குது. ரமணி சந்திரன் தான் அவங்க தலைவி. நாப்பத்தஞ்சி வருஷமா எழுதறாங்க. அவங்களை ஃபாலோ பண்ணி கணிசமான இளம் பெண்கள் எழுத வந்திருக்காங்க” என்று டிரெண்டை சொன்னார்.

நன்றி சொல்லி விடைபெறும்போது அவரது பெயரை கேட்டோம். பாலச்சந்திரன் என்றார். ஏதோ ஒரு பொறி தட்டவே, “சார், நீங்க” என்றோம்.

“நீங்க யூகிக்கிறது சரிதான். அவங்க என்னோட மனைவிதான். நான்தான் மிஸ்டர் ரமணிசந்திரன்” என்றார். லட்சக்கணக்கான தமிழ்ப் பெண்களின் ஆதர்ச எழுத்தாளரின் கணவர்.

“அவங்க வெற்றிக்கு பின்னாலே நான்தான்னு எல்லாம் சொல்ல மாட்டேன். கதைகள் எழுதும்போது அவங்களுக்கு தேவைப்படுகிற சில விவரங்களை கேட்பாங்க. அதை சேகரிச்சி கொடுத்திருக்கேன். அதைத் தவிர்த்து முழுக்க முழுக்க அவங்களோட தனிப்பட்ட வெற்றிதான் இது” என்று அடக்கமாக சொன்னார்.

ரமணி சந்திரன் 1938, ஜூலை பத்தாம் தேதி பிறந்தார்.

தான் பிறந்தநாளை அவரே, அவரது பாணியில் சொல்லியிருக்கிறார்.

“சில பவுர்ணமி நாட்களில், நிலவைச் சுற்றிலும் காம்பஸ் கொண்டு வரைந்தாற்போல, ஓர் ஒளி வட்டம் தென்படுவது உண்டு. நன்கு கவனித்தால், அந்த ஒளியில் வான வில்லின் ஏழு வண்ணங்களும் தெளிவற்று ஒளிர்வதைக் காணலாம். அதை நிலவுக்குக் கோட்டை கட்டியிருப்பதாக ஊர்பக்கம் சொல்வதுண்டு. அன்று, நான் பிறந்த அந்த நாளில், இன்னமும் அற்புதமாக, நிலவுக்கு அது போன்ற இரு கோட்டைகள் அமைந்திருந்தனவாம். முற்றத்தில் அமர்ந்து, இரண்டு கோட்டை கட்டிய நிலவை, அதிசயத்துடன் பார்த்துவிட்டுப் போய், என்னை பெற்றதாக, என் அம்மா சொன்னதுண்டு”

மேற்கண்ட பத்தியை வாசித்ததுமே ரமணிசந்திரனின் வாசகர்கள் கண்டு கொண்டிருப்பார்கள். அவரது கதைகளின் பெரும்பாலான நாயகிகள், ரமணிசந்திரனுடைய அம்மாவின் தன்மையை கொண்டவர்கள்தான்.

ரமணிச்சந்திரனின் வீட்டில் அக்கா தங்கைகள் ஐந்து பேர். கோயமுத்தூரில் இருந்த தங்கைக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். தங்கையின் கணவர் ஒரு வாரப்பத்திரிகை ஆசிரியர். யதேச்சையாக இவரது கடிதங்களை படித்த அவர், எழுத்தில் இருந்த வடிவ நேர்த்தியை கண்டு இவர் கதை எழுதலாமே என்று கேட்க ஆரம்பித்தார்.

“எனக்கு அதெல்லாம் ஒத்துவராதுங்க” என்று ஆரம்பத்தில் கூச்சமாக மறுத்துக் கொண்டிருந்தார்.

அவரோ ஒருமுறை அதிரடியாக இவர் கதை எழுதுவதாக பத்திரிகையில் விளம்பரப் படுத்திவிட்டார். வேறுவழியில்லாமல் முதன்முதலாக ஒரு நாவலை எழுதினார். நாவலின் பெயர் ‘ஜோடிப் புறாக்கள்’. 1970ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போதிலிருந்து வருடத்துக்கு சராசரியாக ஐந்து, ஆறு நாவல்களாவது எழுதிக் கொண்டிருக்கிறார். நாவல்களின் எண்ணிக்கையில் மட்டுமே இரட்டை செஞ்சுரியை தாண்டிவிட்டார். இது தவிர்த்து சிறுகதைகளின் கணக்கு தனி.

ரமணிச்சந்திரனின் அனைத்துக் கதைகளுக்கும் பொதுவான சில அம்சங்கள் உண்டு.

சாதி மற்றும் மதப்பிரச்சினை இருக்கவே இருக்காது. பிழியவைக்கும் சோகத்துக்கு வாய்ப்பேயில்லை. ரொம்ப சீரியஸாக கதையில் பாத்திரங்கள் யாரும் தத்துவம் பேசமாட்டார்கள். எல்லோருமே அன்பானவர்கள். எல்லோருமே மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள். தொடர்ச்சியாகவே இயங்கும் இந்த பாசிட்டிவ்வான அணுகுமுறைதான் அவரை மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.

ரமணிச்சந்திரனின் கதைகள் தமிழ்ப் பெண்கள் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளப்பறியாதது. நம் நண்பருக்கு திருமணம் நடந்திருந்த சமயம். அவரது மனைவிக்கும், அம்மாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே முட்டல் மோதல். மாமியார் மருமகள் பிரச்சினையால் குடும்பமே பிளவுபடக் கூடிய சூழல். அப்போதுதான் அந்த ‘ரமணி மேஜிக்’ நடந்தது. மாமியார் எதையோ படித்துக் கொண்டிருந்ததை யதேச்சையாக மருமகள் பார்த்தார். அது ஒரு ரமணிச்சந்திரன் நாவல். இவரும் ரமணிச்சந்திரனின் தீவிர வாசகி. இரண்டு ரமணிச்சந்திரன் வாசகிகள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளலாமா என்று இருவரும் அன்றிலிருந்து ராசியாகி விட்டார்கள். இன்றுவரை நண்பர் அச்சம்பத்தை சொல்லி சொல்லி ஆச்சரியப்படுகிறார்.

ரமணிச்சந்திரன் கதைகளில் வரும் வில்லன்களும், வில்லிகளும் பெரும்பாலும் ஆபத்தில்லாதவர்கள். உண்மையில் அவர்களுக்கு வில்லத்தனம் இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். எப்படி இந்தமாதிரி கேரக்டர்களை பிடிக்கிறார்?

“திருமணத்திற்குப் போனோம் என்றால், உண்மையான அன்புள்ளவர்கள், பெண் மாப்பிள்ளை, வீடியோவுக்கும், போட்டோவுக்கும் நன்றாக இருக்க வேண்டும் என்று, வேர்வை துடைத்துவிடுவார்கள். நெற்றியில் கண்டபடி பூசப்படும் திருநீரு குங்குமத்த்தைச் சீர் செய்வார்கள். தத்தம் ஜரிகை துணிமணிகளையும், நகைகளையும் காட்டி, போஸ் கொடுக்க மாட்டார்கள். உதவுகிரமாதிரி வீடியோவுக்குக் காட்சி கொடுப்போரும் உண்டு. இன்னும், ஒரிருவரைப் பின்னே தள்ளுவதும், தலையே நீட்டி, கேமராவுக்கு முன்னே, தோற்றம் அளிப்பதும், கவனித்தால், கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்... குணநலன்களை (அப்படி ஒன்று இருந்தால்) விளக்குவதாகவும் இருக்கும். இன்னும், வீடியோவின் பிளாஷ் லைட் தங்கள் பக்கம் வரும்போது, சிலர் அப்பாவி போல முகத்தை வைத்துக்கொள்வதைப் பார்க்கையில் சிரிப்பு வரும். கூடவே, நம் கதைக்கு வில்லியும் கிடைப்பாள். வில்லன்களும்தான்”

கதைகள் எழுத விரும்பும் ஒவ்வொருவரும் ரமணிச்சந்திரனின் மேற்குறிப்பிட்ட பத்தியை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். எப்படி எழுதுவது என்பதை ஒரே பாராவில் இவ்வளவு எளிமையாக வேறு யாரும் சொல்லியதில்லை. நாம் பார்க்கும் கேட்கும் விஷயங்கள்தான் கதைகள். இவை வானத்திலிருந்து குதிப்பதில்லை.

ரமணிச்சந்திரனின் கதைகள் எப்போதும் மகிழ்ச்சியாகவேதான் முடியும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எவ்வளவோ துயரங்கள் இருக்க, கதைகளிலும் அது தேவையா என்பதுதான் அவரது கேள்வி. வாசகர்கள் திணற திணற மகிழ்ச்சி என்பதுதான் அவரது வெற்றி.

(சூரியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ரைட்டர்ஸ் உலா’ நூலின் ஓர் அத்தியாயம்)

19 ஜனவரி, 2015

எம்.ஜி.ஆரும், ஜெயமோகனும்!

பெண்கள் விஷயத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றி ‘வாய்மொழி வரலாறாக’ எவ்வளவோ தகவல்கள் உண்டு. சில நம்பகமான மனிதர்கள்கூட அவர் குறித்த நெகட்டிவ்வான சம்பவங்களை, நாம் நம்பக்கூடிய ஆதாரங்களோடு சொல்லியிருக்கிறார்கள்.

எதையுமே நம்பமாட்டேன். அதாவது நம்ப விரும்பமாட்டேன். இந்த விஷயத்தில் பகுத்தறிவுக்கு எல்லாம் ‘லீவு’ போட்டுவிடுவேன். எம்.ஜி.ஆர் விஷயத்தில் மட்டும் நான் ஆத்திகன். அவர்தான் கடவுள்.

சினிமாவில் அவர் காட்டிய ‘ஒழுக்கப் பிம்பம்’ அவ்வளவு நேர்த்தியானது. அது உண்மையென்று நம்பக்கூடிய அளவுக்கு மனசுக்கு நெருக்கமானது.

அனேகமாக எட்டாவது வயதில்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ முதன்முறையாக பார்த்தேன். ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடல் முடிந்ததுமே, பேரழகியான அந்த தாய்லாந்து ஃபிகர் (14 வயது; தலைவரின் வயது அப்போது 55) நீச்சல்குளத்தருகே ஓடிவந்து தன் காதலை தெரிவிப்பார். ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக பாடலில் இஷ்டத்துக்கும் புகுந்து விளையாடிய தலைவரோ, அசால்டாக வலக்கையில் (வாத்தியார் இடதுகைப் பழக்கம் கொண்டவர்) அந்த காதலை நிராகரிப்பார். கூடுதல் அதிர்ச்சியாக ‘தங்கச்சி’ என்று விளிக்க, தாய்லாந்து அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீர் உகுக்க, சட்டென்று படம் ‘பாசமலர்’ ரேஞ்சுக்கு காவியமாகி விடும். கடந்த முப்பது ஆண்டுகளாக அந்தப் படத்தை கிட்டத்தட்ட நூறுமுறை பார்த்தாகிவிட்டது. பைத்தியம் மாதிரி ஒரே படத்தை ஏன் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றால், எம்.ஜிஆர் தாய்லாந்திடம் காட்டிய அந்த ‘ஆண்மையான’ ஒழுக்கம்தான். சந்திரகலாவுக்காக மட்டுமே தன் கற்பை போற்றிப் பாதுகாப்பதும், தன் காதலன் என்று நினைத்து மஞ்சுளா கட்டியணைக்க ஓடிவரும்போது, ‘அண்ணீ, நான் ராஜூ. முருகனோட தம்பி’ என்று பதறிவிலகுவதுமாக… ‘மனுஷன்னா இவன்தான்யா…’ என்று அந்த வயசிலேயே தோன்றியது.

பெண்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று சுயக்கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாத்திரங்கள்தான் ரோல்மாடல் ஆனது.

தனிப்பட்ட ரசனை அடிப்படையில் கமல்ஹாசனையும், சாருநிவேதிதாவையும் பிடிக்குமென்றாலும் ‘பெண்கள்’ விஷயத்தில், அவர்களை எவ்விதத்திலும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. ஒருவேளை இந்த பிற்போக்குத்தனமான, தாலிபானிஸ மனநிலையால்கூட ‘பெ.முருகன் கருத்துச்சுதந்திர’ விவகாரத்தில் பெரும்பான்மை தமிழிலக்கிய அறிவுஜீவிகளின் கருத்துக்கு நேரெதிர் கருத்து எனக்கு உருவாகியிருக்கலாம். ஆனாலும் சாகும்வரை சினிமா எம்.ஜி.ஆராகவே இருக்க விருப்பம்.

எனவேதான் நிஜவாழ்வில் பெண்களை எதிர்கொள்ள நேரும்போதெல்லாம் நட்புபாராட்டவோ, நெருக்கமாக பழகவோ கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை ‘வாலண்டியராகவே’ தவிர்த்துவிடுவேன். அம்மா, சகோதரி, மனைவி தவிர்த்து (எம்.ஜி.ஆர் ஸ்டைல்தான்) மற்ற பெண்களிடம் “நல்லாருக்கீங்களா? ஊர்லே மழையெல்லாம் நல்லா பெய்யுதா?” ரேஞ்சுக்கு மேல் எதுவும் பேச நமக்கு சங்கதி இருப்பதில்லை. சமூகவலைத்தளங்களில் கூட வேண்டுமென்றே பெண்களிடம் சண்டை இழுத்து, ‘இரும்புத்திரை மனிதன்’ ஆக இமேஜை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதுண்டு.

‘சரோஜாதேவி’யெல்லாம் சும்மா. அப்பப்போ ஆல்டர் ஈகோவை திருப்திபடுத்திக்கொள்ள.

இம்மாதிரி எம்.ஜி.ஆர்களை நிஜவாழ்வில் சந்திக்க நேரும்போது, ‘அட நம்மாளு’ என்பது மாதிரி மனநெருக்கம் ஏற்படுகிறது. முடிந்தவரை கமல்ஹாசன்களிடமிருந்து விலகி வெகுதூரமாக ஓடிவிடுகிறேன் என்பது என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்த விஷயம்தான். கமல்ஹாசன்களும் நிரம்பியதுதான் உலகம் என்றாலும், அவர்களிடம் சேர்ந்துப் பழக என்னுடைய அந்தரங்கமான எம்.ஜி.யாரிஸ கொள்கை அனுமதித்துத் தொலைக்க மாட்டேன் என்கிறது.

எதையோ பேசவந்து எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன்.

நண்பர் சரவணகார்த்திகேயனின் ‘தமிழ்’ மின்னிதழ் வெளிவந்திருக்கிறது.

அதில் ஜெயமோகனின் பேட்டி கிட்டத்தட்ட ஐம்பது பக்கங்களுக்கு விரிகிறது. ஜெமோ ஏற்கனவே பலமுறை விடையளித்துவிட்ட அலுப்பூட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கேள்விகள். ஆனாலும் தன்னுடைய சுவாரஸ்யமான வெளிப்பாட்டுத் தன்மையால் அந்த சுமை வாசகனுக்கு ஏற்படாமல் தோள் மீது தாங்கியிருக்கிறார்.

பேட்டியில் வழக்கமான இடதுசாரி துவேஷம், தமிழ் கிண்டல், நித்ய சைதன்யபதி, இந்து, ஆன்மீகம், நாத்திகம், இந்திய ஞானமரபு, சுரா, விஷ்ணுபுரம் என்று பலமுறை ஜல்லியடித்து ஜெமோ கான்க்ரீட் கட்டிடம் எழுப்பிய விஷயங்களை தாண்டி, அவருடைய எம்.ஜி.ஆர்த்துவம் இறுதியில் பளிச்சென்று வெளிப்படுகிறது. ஜெயமோகனை என் மனதுக்கு மிக அருகிலான ஆளுமையாக உணர்வது, அவர் தன் குடும்பத்தை பற்றி பேசும்போதுதான்.

பேட்டியின் இறுதிப்பகுதியில் ஜெயமோகன் பேசும் இந்திய குடும்பச்சூழல் வன்முறை மாதிரியான விஷயங்கள் முழுக்க ஏற்றுக்கொள்ளத்தக்கவையே.

இன்று சைதன்யா தன்னுடைய அப்பா ஜெயமோகன் பற்றி வைத்திருக்கும் மதிப்பீட்டை, என்னுடைய ஐம்பத்து மூன்று வயதில் என்னுடைய மகள்களும் என்மீது வைத்திருக்க வேண்டும் என்று உளமாற விரும்புகிறேன்.

நெகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தை தந்ததற்கு நன்றி ஜெமோ & சரவணகார்த்திகேயன்.

13 ஜனவரி, 2015

ரைட்டர்ஸ் உலா : என்னுரை

‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று சொல்லதான் ஆசை.

இறைவன் இருந்திருந்தால் நன்றாகதான் இருந்திருக்கும் என்று வாழ்வியல் சிக்கல்கள் நெருக்கும்போது மட்டும் நினைத்துக் கொள்ளும் நாத்திகன் நான். இயற்கை நிகழ்வுகளை தவிர்த்து உலகின் எல்லா செயல்களுக்கும் மனிதன்தான் காரணமாக இருக்கிறான்.

அந்தவகையில் இந்நூல் உங்கள் கைகளில் தவழ காரணமாக இருப்பது இருவர். ஒருவர், ‘தினகரன்’ நாளிதழின் நிர்வாக மேலாளரான திரு ஆர்.எம்.ஆர். அடுத்தவர், ‘தினகரன்’ இணைப்பிதழ்களின் முதன்மை ஆசிரியரான கே.என்.சிவராமன்.

வெறும் இணைப்பிதழ்தானே என அலட்சியப்படுத்தாமல் தனி இதழுக்கான தன்மையுடன் ‘தினகரன்’ இணைப்பிதழ்களை இவர்கள் இருவரும் உருவாக்கி வருகிறார்கள். புதுப் புது வடிவங்களில் வித்தியாசமான சிந்தனைகளோடு கூடிய பேட்டிகளும், கட்டுரைகளும் அமையவேண்டும் என்று மெனக்கெடுகிறார்கள். அப்படி ‘தினகரன்’ ஞாயிறு இணைப்பிதழான ‘வசந்தம்’ இதழில் இவர்கள் வடிவமைத்த பகுதிதான் ‘ரைட்டர்ஸ் உலா’. எழுதியது மட்டுமே நான்.

இலக்கியத்தில் பெண்களின் பங்கு குறித்து ஒரு விவாதம் அப்போது தமிழ்ச் சூழலில் பரவலாக நடந்துக் கொண்டிருந்தது. சமகால தமிழ் பெண் படைப்பாளிகளின் படைப்புத் தரம் குறித்த கேள்வியும் வெகுவாக எழுந்தது. இதைப் பற்றியெல்லாம் சிவராமனும், நானும், நரேனும் தேநீர்க்கடையில் சூடுபறக்க உரையாடினோம்.

அந்த விவாதத்தின் நீட்சியே ‘ரைட்டர்ஸ் உலா’.

நிலவரைவியல், மொழி மாதிரி எந்த வரையறைகளையும் வைத்துக் கொள்ளாமல் மனம் போன போக்கில் வாராம்தோறும் ஒரு பெண் எழுத்தாளரை உரிய முறையில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம்.

‘தொடர்’ என்று அறிவித்துக் கொள்ளாமல் தனித்தனி கட்டுரையாக வாராவாரம் வந்தபோது ‘தினகரன் வசந்தம்’ வாசகர்களின் பெருவாரியான வரவேற்பு தந்த நெகிழ்ச்சிக்கு அளவேயில்லை. குறிப்பாக சகோதர இதழாளர்களை மனம்விட்டு பாராட்டுவதையே தன்னுடைய ஆதார குணமாகக் கொண்டிருக்கும் ‘நக்கீரன்’ வாரம் இருமுறை பத்திரிகையின் முதன்மை துணை ஆசிரியர் கோவி.லெனின், தமிழில் வரும் கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளையும் சுடச்சுட வாசித்துவிட்டு சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு தன்னுடைய கருத்தை விரிவாக தொலைபேசியில் பகிர்ந்துக்கொள்ளும் நண்பர் உளுந்தூர்ப்பேட்டை லலித்குமார் ஆகிய இருவரும் இத்தொடர் முழுக்க கூடவே பயணித்த தோழர்கள்.

இப்புத்தகத்தில் முக்கியமான எழுத்தாளர்கள் பலரின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. நன்கு பிரபலமானவர்களை மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்திக் கொண்டே, தெரிந்த தகவல்களையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது வாசகர்களுக்கு சலிப்பைத் தரலாம் என்கிற எண்ணத்தாலேயே இது நடந்தது. அவர்கள் அறியாத புதிய தகவல் ஒன்றையாவது ஒவ்வொரு கட்டுரையிலும் தேடித்தரவேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதியதால் எந்த வரிசையையும் நாங்கள் அமைத்துக் கொள்ளவில்லை.

தமிழைப் பொறுத்தவரை வை.மு.கோதை நாயகி, லட்சுமி, ஆர்.சூடாமணி, அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், அனுராதா ரமணன் உட்பட அனைவரையும் சிறப்பிக்க ஆசைதான். ஆனால், மறைந்தும் மறையாமல் எழுத்துகளால் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பற்றி எழுத ஒருவார அறிமுகக் கட்டுரை போதாது. தனித்தனி புத்தகங்களாகவே எழுத வேண்டும். எனவேதான் இந்த நூலில் இவர்கள் இடம்பெறவில்லை.

நம்மோடு வாழ்ந்து, இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த தமிழ் படைப்பாளிகளான ரமணி சந்திரன், சிவசங்கரி ஆகியோரின் சிறப்புகளை சிறிய அளவிலாவது வாசகர்களுக்கு நினைவுபடுத்தியே ஆகவேண்டும் என்கிற எண்ணத்திலேயே அவர்கள் குறித்த கட்டுரைகளை சேர்த்திருக்கிறோம். சிவசங்கரி, நன்றிக் கடிதம் எழுதி பாராட்டியிருந்தார். கூச்சத்தோடு அவர் தந்த கவுரவத்தை ஏற்கிறோம்.

பெண் எழுத்தாளர்களை குறித்து ஓர் ஆண் எழுதுவது, வாசகர்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் இருந்தது. எனவேதான் என்னுடைய இளைய மகள் ‘தமிழ்நிலா’வின் பெயரில் எழுதினேன். ஆனால், இக்கட்டுரை குறித்த வாசகர்களின் எண்ணங்களை நேரடியாகவும், தொலைபேசி & கடிதங்கள் & மின்னஞ்சல்கள் மற்றும் சமூக இணையதளங்கள் வாயிலாகவும் அறிந்தபோது எங்களது சந்தேகம் அர்த்தமற்றது என்றுதான் தோன்றுகிறது. எழுதுகிறவரின் பெயரைவிட எழுதப்படும் விஷயத்துக்குதான் வாசகர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.

கதை சொல்வதில் கைதேர்ந்த நம் பெண்கள் கதை எழுதுவதில் அவ்வளவு நாட்டம் செலுத்துவதில்லை. எழுத்துலகில் ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவாகவே இருக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் எனும்போது எத்தனை ஆண் எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ, அத்தனை பெண் எழுத்தாளர்களும் இருக்கவேண்டும் என்பதுதானே நியாயம்?

இந்த நூலை வாசிக்க நேரும் ஒரு சில பெண்களாவது எழுத்துத்துறைக்கு வருவார்களேயானால், அதன் இலக்கை இப்புத்தகம் எட்டிவிட்டதாக அர்த்தம்.

இக்கட்டுரைகளை வாராவாரம் அழகான முறையில் வடிவமைத்துக் கொடுத்த வடிவமைப்பாளர்களுக்கும், தவறுகளை திறம்பட திருத்திய பிழை திருத்துனர்களுக்கும், கட்டுரைகளை சிறப்பாக தொகுத்து அருமையான நூலாக உங்கள் கைகளில் தவழவிட்டிருக்கும் சூரியன் பதிப்பகத்தாருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

அன்புடன்
யுவகிருஷ்ணா


நூல் : ரைட்டர்ஸ் உலா
விலை : ரூ.150/-
வெளியீடு : சூரியன் பதிப்பகம்

12 ஜனவரி, 2015

தமிழ்மகன் : இரு நூல்கள்

‘பத்திரிகையாளர்களுக்கு இலக்கியம் எழுதவராது’ – பொதுவாக தமிழ் இலக்கியவாதிகளுக்கு இருக்கும் மூடநம்பிக்கை இது. நவீன தமிழிலக்கியத்தின் பிதாமகனான பாரதியாரே கூட பத்திரிகையாளர்தான். கடந்த நூறாண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் கணிசமாக பங்காற்றியிருக்கும் பத்திரிகையாளர்களின் பட்டியல் மிகப்பெரியது.

வெகுஜனப் பத்திரிகைகள் என்றாலே ஒருமாதிரி ஒவ்வாமையோடு அணுகிவந்த இலக்கியவாதிகள் சமீபகாலமாக இப்பத்திரிகைகளில் பணியாற்ற முட்டி மோதிக்கொண்டு வருகிறார்கள் என்பதே ஆரோக்கியமான மாற்றம்தான்.

அவ்வப்போது ஏதேனும் ஒரு பத்திரிகையாளர் தன்னுடைய இருப்பை உறுதியாகவே பதிவு செய்தாலும், இலக்கியவாதிகள் முடிந்தவரை அவரை இருட்டடிப்பு செய்வது வாடிக்கை. அம்மாதிரி தொடர்ச்சியாக இருட்டடிப்பு செய்யப்படுபவர்களில் முக்கியமானவர் தமிழ்மகன்.

இவரது ‘வெட்டுப்புலி’ நாவலை வாசகர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஆதரித்தார்களோ, இலக்கியவாதிகள் அவ்வளவுக்கு அவ்வளவு பதட்டம் அடைந்தார்கள். தனிப்பட்ட சந்திப்புகளில் ‘வெட்டுப்புலி’ குறித்து உயர்வாக பேசிய இலக்கிய ஜாம்பவான்கள் கூட, பொதுவில் அதுபற்றி ஒரு அபிப்ராயமும் தெரிவிக்காமல் தங்கள் நாகரிகத்தை வெளிப்படுத்தினார்கள்.

இருபத்தைந்து ஆண்டு காலமாக ‘நாவல்’ எழுதிவரும் தமிழ்மகன், தொழில்நிமித்தமாக வெகுஜன பத்திரிகைகளில் பணியாற்றுகிறார். சத்தமில்லாமல் தொடர்ச்சியாக இலக்கியம் படைத்து வருகிறார்.
அவருடைய முதல் நாவலான ‘மானுடப் பண்ணை’யே இதற்கு சாட்சி. தன்னுடைய 21வது வயதில் 1984ல் எழுதத் தொடங்கிய இந்நாவலை 25வது வயதில் 1989ல் முடித்திருக்கிறார். 1994ல் முதல் பதிப்பு வெளியாகியிருக்கிறது. 1996ல் தமிழக அரசு விருதும் பெற்றிருக்கிறது.

எமர்ஜென்ஸிக்கு பிறகு – உலகமயமாக்கலுக்கு முன்பு என்று யாராலும் அவ்வளவாக விவாதிக்கப்படாத மிக முக்கியமான அரசியல் சமூகச் சூழலை படம் பிடித்துக் காட்டியிருக்கும் நாவல் இது. குறிப்பாக இது பிற்படுத்தப்பட்டவர்களின் எழுச்சி தொடங்கிய காலம்.

நாவலின் நாயகன் பாலிடெக்னிக் முடித்த சிவில் என்ஜினியர். இன்று புற்றீசல்களாக பெருகிவிட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்ட காலம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவனுடைய சில நாட்களின் டயரிக்குறிப்பாக ‘மானுடப்பண்ணை’ விளங்குகிறது. திராவிட இனமான உணர்வு கொண்ட அவன் எதிர்கொள்ள நேரிடும் மார்க்சிய விவாதங்களோடு, தன்னுடைய கொள்கை சார்ந்த புரிதல்களை ஒப்பிட்டுக் கொள்கிறான். கொள்கைகளும், சித்தாந்தங்களும் லவுகீக வாழ்க்கைக்கு எவ்வகையிலும் உதவாத கையறுநிலையை இறுதியில் அடைகிறான். சாதியம் தமிழ் வாழ்க்கையில் எத்தகைய அதிகாரத்தை கட்டமைத்து வைத்திருக்கிறது என்பதை இலைமறை காய்மறையாய் சம்பவங்களின் ஊடாக நுழைத்திருக்கிறார் தமிழ்மகன்.

2009க்குப் பிறகு வானத்தில் இருந்து குதித்தவர்கள் திராவிடத்துக்கு ஏதேதோ அருஞ்சொற்பொருள் அகராதி தயாரித்து உளறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மண் எப்படி இருந்தது, திராவிடம் இங்கே என்ன சாதித்துக் கிழித்தது என்பதை அறிய ஆசை இருப்பவர்கள் ‘மானுடப்பண்ணை’ வாசிக்கலாம்.
‘ஆபரேஷன் நோவா’வுக்கு அறிமுகம் தேவையா?

‘ஆனந்தவிகடன்’ இதழில் வாராவாரம் ஆயிரக்கணக்கானோர் வாசித்து சிலிர்த்த தொடர்.

ஒரே நூலில் அவதார், இண்டர்ஸ்டெல்லார் இரு படங்களையும் பார்த்த அசாத்திய அனுபவத்தை தருகிறார் தமிழ்மகன்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் அல்ல. ஒவ்வொரு வரியிலுமே ‘ஆச்சரியங்கள்’ காத்திருக்கின்றன.

“சுஜாதாவுக்கு அப்புறம் யாரு சார் இண்டரெஸ்ட்டா எழுதறா?” என்று சலித்துக் கொள்பவருக்கு இந்த நாவல்தான் பதில்.

ஓர் எழுத்தாளனின் கற்பனை எந்தளவுக்கு உச்சத்தை எட்டமுடியும் என்பதற்கு ‘ஆபரேஷன் நோவா’வை உதாரணமாக காட்டலாம்.

* * * * * * * * * *

திராவிடனுக்கு இலக்கியமும் தெரியும், அதன் நெளிவுசுளிவுகளும் அத்துப்படி என்பதை பத்தாயிரத்தி ஒன்றாவது மனிதராக திரும்ப மீண்டும் நிரூபித்திருக்கும் ‘மக்கள் எழுத்தாளர்’ அண்ணன் தமிழ்மகனுக்கு வாழ்த்துகள்!

* * * * * * * * * *

இரு நூல்களையுமே உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

மானுடப்பண்ணை : விலை ரூ.130

ஆபரேஷன் நோவா : விலை ரூ.150

5 ஜனவரி, 2015

சுதந்திரக்கலவி தமிழகக்கலையா?

நம்முடைய முந்தையப் பதிவான ‘ஓவர் முற்போக்கு ஒடம்புக்கு நல்லதல்ல’ கட்டுரைக்கு நண்பர் ராஜன்குறை ஃபேஸ்புக்கில் எதிர்வினை ஆற்றி இருக்கிறார். அவருக்கு கிடைத்த அதிர்ச்சி நமக்கு கிடைக்கவில்லை.

ஏனெனில் முழுக்க மேற்கத்திய வாழ்க்கைமுறைக்கும், சிந்தனைகளுக்கும் முழுக்க ஆட்பட்டுவிட்ட ராஜன்குறைக்கு ‘சுதந்திரக் கலவி’ (நன்றி : பெருந்தேவி) மாதிரியான கலாச்சாரம் சாதாரணமானதாகவும், கேளிக்கைக்கு உரியதாகவும் தெரிவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தமிழகத்தில் வாழும் சராசரி நடுத்தரனான நாம் இன்னும் அந்தளவுக்கு பக்குவப்படவில்லை.

நாம் மிகவும் மதிக்கும் மானுடவியல் அறிஞர் பேராசிரியர் ராஜன்குறை. போலவே பெருமாள் முருகனும் நமக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்தான். எனவே இந்தப் பதிவையோ, முந்தையப் பதிவையோ இவர்களுக்கு எதிரான விரோதமான மனநிலையில் எழுதியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த இரு பதிவுகளுமே ‘மாதொரு பாகன்’ குறித்த சர்ச்சைக்கு மட்டுமே உரித்தானது.

ராஜன்குறையின் அதே ஃபேஸ்புக் திரியில் நண்பரும் அறிவுஜீவி என்று அவரை அவரே நம்பிக் கொண்டிருப்பவருமான ரோஸாவசந்த் எழுதியிருக்கும் பின்னூட்டமும் ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனெனில் உலகில் தனக்கு மட்டுமே அறிவு என்கிற ஆற்றல் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பவர் இப்படிதான் பின்னூட்டமிட முடியும். ‘ஸ்டேண்ட்’ என்பதை நண்பர் ரோஸாவஸந்த் ‘பஸ் ஸ்டேண்ட்’ என்பதாக புரிந்துக் கொண்டிருக்கிறார். சூழல்தான் ஒருவனது நிலைப்பாட்டை தீர்மானிக்கும். நிலைப்பாடு அவ்வப்போது மாற்றத்துக்குறிய ஒன்று என்பதை பெரியாரை வாசித்தாலே புரிந்துக்கொள்ள முடியும். மாற்றிக்கொள்ளும் நிலைப்பாட்டுக்கு ஒருவன் தரும் ஜஸ்டிஃபிகேஷன்தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா நிராகரிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும். இளையராஜாவின் இசையை கேட்டு ரசித்து ட்விட்டு போடுவதுதான் தமிழ் அறிவியக்க செயல்பாட்டின் உச்சக்கட்டமான நடவடிக்கை என்று நம்பிக்கொண்டிருக்கும், லிங்கா கட்டவுட்டுக்கு பால் ஊற்றும் ரஜினிரசிக மனப்பான்மைக்கு இணையான மனோபாவம் கொண்ட ரோசாவிடம் இதையெல்லாம் விவாதிக்க முடியாது. பிழைப்புக்கு போராளியாகவும், சந்தர்ப்பவசத்தால் இலக்கியவாதியாகவும் ஆகிவிட்ட சிலர் ரோசாவுக்கு ‘லைக்’ போட்டிருக்கிறார்கள். அவர்களுடைய நிர்ப்பந்தத்தையும் புரிந்துக்கொள்ள முடிகிறது.

ஓக்கே. பேராசிரியர் ராஜன்குறைக்கு வருவோம்.

“வாய்மொழி வரலாறு என்பதை அங்கீகரிக்கப்பட்ட அறிவுத்துறை என்று யுவகிருஷ்ணா ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று அன்புடன் அறிவுறுத்துகிறார்.

மானுடவியல் அறிஞர் ஒருவர் இவ்வாறு பேசுவதைவிட அபத்தமான விஷயம் வேறில்லை. எந்தெந்த வாய்மொழி தகவல்கள் வரலாறாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான சான்றுகளை ராஜன்குறை தரவேண்டும். இன்று செய்திகளுக்கே ஆதாரம் கேட்கப்படும் சூழலில், வரலாற்றுக்கு மறுக்கமுடியாத ஆதாரங்கள் தேவை. ஆவணரீதியிலான தரவுகள் நிறைந்திருக்கும் வரலாற்றுத் தகவல்களையே கேள்விக்குள்ளாக்கக்கூடிய இன்றைய சூழலில் இப்படிப்பட்ட கருத்தை ஒரு பேராசிரியர் முன்வைப்பது துரதிருஷ்டவசமானது. நிறைய தரவுகள் நிறைந்த ‘திராவிட இனம்’ என்கிற கருத்தாக்கத்தையே வரலாற்றின் மாறுபட்ட வேறு தகவல்கள் மற்றும் அறிவியல் அடிப்படையில் இன்று மறுப்பவர்களோடு நாம் உரையாடிக் கொண்டிருக்கிறோம். நரசிம்ம பல்லவன் வாதாபியை கொளுத்தினானா, சாளுக்கியனை வென்றானா என்பதற்கே இருவேறு வரலாறு இருக்கிறது. இரண்டுக்குமே அசைக்கமுடியாத கல்வெட்டு ஆதாரங்களும் இருக்கின்றன.

நிலைமை இப்படியிருக்கையில்-

‘மாதொருபாகன்’ நூலில் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போன்ற வாய்மொழி வரலாற்றினை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

‘ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை… அதனாலே’ என்று ராகத்தோடு பாடப்படும் (இப்போது விஜய்க்கும் அஜித்துக்கும் சண்டை என்று பரிணாமம் பெற்றுவிட்டது) வாய்மொழித் தகவல்களையும் வரலாற்றாக்கி விடலாமா. கிசுகிசு வரலாறு ஆகுமா. லட்சுமிகாந்தனும், கயிலைமன்னனும் பரப்பியதெல்லாம் வரலாறா?

தமிழ்நாட்டிலும் carnival உண்டு. ராஜன்குறை மொழியில் ‘வரம்பு மீறுவது’ ஆங்காங்கே ஒருசில மனிதர்களிடம் நடைபெற்றிருக்கலாம். நடைபெறுகிறது. இது individual ஆன விஷயம். ஆனால், ஒட்டுமொத்த திருச்செங்கோடுவாழ் சமூகமே ‘சுதந்திர கலவி’ திருவிழாவில் கலந்துக் கொண்டார்களா. நடந்திருந்தால் அது பிள்ளைப்பேறு இல்லாத மகளிருக்காக நடத்தப்பட்டதா என்பதுதான் இங்கே சர்ச்சைக்குரிய விஷயம். அப்படி இதற்கு ஆதாரமில்லாத பட்சத்தில் அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருப்பது திருச்செங்கோட்டுக்காரர்களை புண்படுத்தும் என்பது இயல்பானதுதான்.

எழுபதுகளின் துவக்கம் வரை சகஜமாக ‘சுதந்திர கலவி’ நடைபெற்றிருப்பதாக ராஜன்குறை அறிந்திருப்பதாக சொல்கிறார். ராஜன்குறை மட்டுமல்ல. நிறைய பேர் இப்படிப்பட்ட திருவிழாக்களை கண்களில் கனவு மின்ன ஆர்வத்தோடு சொல்கிறார்கள். இவர்களில் யாரேனும் அப்படிப்பட்ட திருவிழாக்களில் கலந்துக்கொண்டது உண்டா என்று கேட்டால், ‘கேள்விப்பட்டேன்’, ‘நண்பர் சொன்னார்’ ரீதியில்தான் சொல்கிறார்கள். கடந்த நூறாண்டுகளில் தமிழகத்தில் நடந்த பெரும்பாலான சம்பவங்கள் அனைத்தையும் ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன. இப்படிப்பட்ட திருவிழா ஒன்றினை ஏதேனும் ஊடகம் ‘லைவ் ரிப்போர்ட்டாக’ பதிவு செய்திருக்கிறதா என்று அறியவிரும்புகிறேன். ஏனெனில் ஊடகங்களுக்கு ‘ஹாட்கேக்’ ஆன மேட்டர் இதுவென்பதை, ஊடகத்தில் பணிபுரிபவனாக உணருகிறேன்.

அடுத்து,

“புனைவு என்பதை உண்மை என்பதாக புரிந்துகொண்டுவிடுவார்கள் என்பதற்காக புனைவுகளில் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விதமாகத்தான் எழுதவேண்டும் என்றெல்லாம் நிர்ப்பந்திக்கமுடியாது. இதையெல்லாம் விட முக்கியமான பிரச்சினை அப்படி என்ன கொலைகுற்றத்தையா பெருமாள் முருகன் எழுதிவிட்டார்?” என்கிற அதிமுக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் ராஜன்குறை.

புனைவுகளில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் எல்லா நேரத்திலும் எழுதமுடியாதுதான். அப்படி யாரும் யாரையும் நிர்ப்பந்திக்கவும் முடியாதுதான். ஆனால் ராஜன்குறையின் இந்த ஸ்டேட்டஸுக்கு ‘லைக்’ போட்ட 100+ பேர்களை குறிப்பாக தொடர்புபடுத்தி, இம்மாதிரி புனைவு எழுதினால் அவர்கள் நூலை எரிப்பார்களா அல்லது கட்டிப்பிடித்து கொஞ்சி கருத்து சுதந்திரம் பேசுவார்களா?

யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் யாரைப்பற்றி வேண்டுமானாலும் எழுதிவிட்டு போகலாம் என்பதையெல்லாம் கருத்துச் சுதந்திரம் என்று பார்க்கமுடியாது. என்னுடைய கருத்துச் சுதந்திரத்தின் வரம்பளவு உங்களுடைய மூக்கின் அரை இஞ்சுக்கு முன்னால் முடிந்துவிடுகிறது அல்லவா. அப்படியில்லை. கருத்துவேறுபாடு கொண்டவரின் மூக்கை உடைப்பேன் என்றெல்லாம் விதண்டாவாதம் பேசினால் எந்த விவாதத்தையுமே நாம் நடத்த முடியாது.

ஒரு சமூகம் நல்லிணக்கத்தோடு சமதர்ம சமூகமாய் செயல்பட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்திருப்பது எவரையும் விட ஒரு படைப்பாளிக்கு அவசியமான அம்சமாகும். ஏனெனில் கலை என்பது மக்களை கரைசேர்க்கக்கூடிய கலங்கரை விளக்கம் என்கிற நம்பிக்கை மனித சமுதாயத்துக்கு இருக்கிறது. அவசியமற்ற கலகத்தை உருவாக்குவது படைப்பாளியின் பணியா?

புனைவு என்கிற கருத்துச் சுதந்திரம் பெருமாள் முருகனுக்கு மட்டுமா இருக்கிறது. இதே சுதந்திரத்தை ராஜன்குறை கனவிலும் எதிர்க்கும் இந்துத்துவர்களோ அல்லது வேறேதேனும் பிற்போக்குச் சக்திகளோ பயன்படுத்தினால் அதையும் அனுமதித்துவிடலாமா. மனு எதையோ எழுதிவிட்டு போய்விட்டான். அவனுடைய கருத்துச் சுதந்திரத்துக்கு நம்மால் அப்படியே மதிப்பளிக்க முடிகிறதா. கொளுத்துகிறோம் இல்லையா. நாளை ராஜன்குறையை சித்தரித்து அவதூறான புனைவு எழுதப்படுமேயானால் அதையும் அப்படியே அனுமதித்துவிடலாமா? அறிஞர் அண்ணா எழுதிய ‘தீ பரவட்டும்’ நூலை இங்கே பேராசிரியருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

ராஜன்குறைக்கு புரிகிறமாதிரி ஒரு சம்பவத்தை இங்கே எடுத்துச் சொல்கிறேன்.

அடிக்கடி சாருநிவேதிதா எழுதுவார். ‘ரெண்டாம் ஆட்டம்’ என்கிற அவருடைய மகத்தான நாடகத்தை நடத்தவிடாமல் மதுரையில் வன்முறை செய்தார்கள் என்று. புதிதாக அதை வாசிக்கும் வாசகர்களுக்கு கருத்துச் சுதந்திர உணர்வு பீறிட்டு எழும். ஆனால், தடுத்தவர்களும் முற்போக்காளர்களே, கருத்துச் சுதந்திரம் பேசுபவர்களே என்கிற உண்மை அப்படியே ‘வரலாற்றில்’ அமுங்கிவிட்டது. அவர்கள் ஏன் தடுத்தார்கள் என்பதற்கான நியாயமும், காரணமும் யாராலும் பரிசீலிக்க முடியாவண்ணம் மறைக்கப்பட்டு விட்டது.

வேறொன்றுமில்லை. எல்லாவற்றுக்கும் ‘இடம், பொருள், ஏவல்’ உண்டு என்பதுதான் emphasis செய்து இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

பெருமாள் முருகன் வெறும் புனைவாக மட்டுமே இதை முன்வைக்கிறார் என்கிற வாதத்தை நிறையபேர் பேசுகிறார்கள். திருச்செங்கோடு என்பதை திருச்செங்காடு என்றும் அவர் புனைந்துவிட்டிருந்தால் பிரச்சினை எழ என்ன வாய்ப்பு இருந்திருக்கும்?

ஆனால் அவரால் அப்படி செய்திருக்க முடியாது. ஏனெனில் பெங்களூரைச் சேர்ந்த ‘கலைகளுக்கான இந்திய மையம்’ – IFA (ரத்தன் டாட்டா அறக்கட்டளையின் ஓர் அங்கம்) நிறுவனத்துக்கு விண்ணப்பித்து, அவர்களது உதவியோடு (வேறென்ன பண உதவிதான்) ‘கள ஆய்வு’ மேற்கொண்டு, அதன் அடிப்படையில் இந்த நூலை பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார். எனவே ‘சுதந்திரக் கலவி’ என்பது ‘தமிழகக்கலைகள்’ என்றுதான் டாட்டா அறக்கட்டளையின் ஆவணங்களில் வரலாறாக –அதுவும் திருச்செங்கோட்டின் கலையாக- பதிவாகப் போகிறது. அப்படியிருக்க இதை வெறுமனே புனைவு, கருத்துச்சுதந்திரம் அளவுகளுக்குள் எப்படி அறிவுஜீவிகளும் சுருக்குகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரக் கலவியை தமிழகக்கலை என்று ஏற்றுக்கொள்ள ராஜன்குறைக்கும், அவருடைய திரியில் பின்னூட்டமிட்டிருக்கும் பெருந்தேவிக்கும் மனத்தடங்கல் இருக்காது என்று அவர்களது கருத்துகளில் தெரிகிறது. ஆனால் ‘லைக்’ போட்ட, ‘கமெண்ட்’ போட்ட மற்ற தமிழர்களும் இதை ஒப்புக்கொள்கிறார்களா என்பதைதான் அறிய விரும்புகிறேன்.

“இதை எதற்காக பெண்ணியவாதிகள் எதிர்க்கவேண்டும் என்று நினைக்கிறார் என்றும் புரியவில்லை” என்று பேராசிரியர் ஐயம் எழுப்புகிறார்.

இதுதொடர்பான என்னுடைய பதிவிலேயே திருச்செங்கோட்டை சேர்ந்த பெண் ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ராஜன் அதை வாசிக்கும்போது ஓரளவுக்கு அவருக்கு நிலவரம் புரிபடலாம்.

அந்தப் பின்னூட்டம் இதுதான் :

“இந்த நாவலை படித்தேன், ஒரு சில பக்கங்களை படித்தவுடன் மிகவும் அபத்தமாக தோன்றியது, நானும் திருச்செங்கோட்டில் பிறந்தவள் என்பதால் அல்ல ஒரு பெண் என்பதால் அதுவும் (being a late child of my parents), என் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன் குழந்தை பிறக்காதவர்களை இந்த சமூகம் எவ்வளவு மோசமக நடத்தும் என்று. ஒரு மாசம் முன்னாடி தான் எனக்கு கல்யாணம் முடிவு செய்தார்கள், இந்த எதிர்ப்பு பக்கத்தை பர்த்துவிட்டு அவர் கேட்டார் நீ கூட Late child தானே என்று கேட்டார் (because he is from chennai and he have no idea about my native, just see how much impact its creating for the people who didnt have idea of that place, may be author just taken this place to tell somthing but its affecting the people who are living there), விளையாட்டாக தான் கேட்டார் என்றாலும் எவ்வளவு அபத்தாமான கருத்தை இந்த எழுத்தாளார் மனதில் பதிக்கிறார் அவருடைய பொண்ன இப்படி யாரவது கேட்டிருந்தால் அவருக்கு எப்படி இருந்திருக்கும்.
என் பாட்டி சொன்னாங்க அந்த ஊர் அப்படி பட்ட ஊர் என்றால் எப்படி என் மகளை கல்யாணம் கட்டி கொடுத்திருப்பேன் என்று (சிந்திக்கபட வேண்டிய ஒன்று தான் இவர் சொல்வது போல இப்படி ஒன்று வழக்கத்தில் இருந்திருந்தால் எப்படி பெண் கொடுத்திருப்பார்கள்).

எழுத்து சுதந்திரம் மதிக்கபடவேண்டிய ஒன்று தான் ஆனால் அது அடுத்தவர்களைக் காயப்படுத்தாதவரை.

திரு பெருமாள் முருகன் அவர்களுக்கு ஒருவேளை குழந்தை இல்லாமலோ அல்லது ரொம்ப நாள் கழித்து குழந்தை பிறந்திருந்தால் இப்படி எழுதியிருக்க தோன்றியிருக்காது காரணம் இவர் மனைவியயும் இழிவு படுத்தபட்டிருப்பார் அல்லவா.

இதுக்கு எதிர்ப்பு இப்ப வருவதர்க்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ரொம்ப முன்னாடியே எதிர்க்கபட்டிருக்க வேண்டிய புத்தகம். என்ன மாதிரி ஒவ்வொருவரையும் ரொம்ப கஷ்டபடுத்திய புத்தகம்.

என் ப்ளாக்ல கூட என்னால இத எழுத முடியல, சில வக்கிர மனங்கள் எப்படி இத யோசிக்கும் என்று தெரிந்ததால். பெயர கூட சொல்லாமால் இதை இங்கு பகிர்கிறேன். இந்த புத்தகத்துக்கு support பண்றவங்க எங்க மன நிலையை யோசித்து பாருங்க.”


தாமதமான பிள்ளைப்பேறு அல்லது பிள்ளைப்பேறு இன்மை போன்ற சமூகப் பிரச்சினைகளில் தமிழகப் பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் கேள்விகளைக் குறித்து மானுடவியல் அறிஞரான ராஜன்குறை களஆய்வு செய்யவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

பின்னூட்டமிட்ட சகோதரியின் உணர்வை என்னாலோ, ராஜன்குறையாலோ முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில் நாங்கள் இருவரும் ஜஸ்ட் ஆண்கள். அதிலும் ராஜன் அறிவுஜீவி வேறு. பெண்ணாகவோ அல்லது குறைந்தபட்சம் அர்த்தநாரீஸ்வரராக இருந்தாலாவது அந்த பெண்ணின் வலியை உணரமுடியும்.

ராஜனின் பதிவில் பிரச்சினைக்கு தொடர்பில்லாமல் ஒரு வரி துருத்திக்கொண்டு நிற்கிறது.

“நவீன கால காம இயந்திரங்களில் மாட்டிக்கொண்டு சரோஜோ தேவி எழுதிக்கொண்டிருக்கும் இந்த இளைஞருக்கு கடந்த காலம் புரியாமல் போவதில் வியப்பில்லை”

ஒன்றுமில்லை. பேராசிரியர் நம்மை இடுப்புக்குக் கீழே அடிக்கிறாராம். ஒரு பெண்ணோட வலி இன்னொரு பெண்ணுக்குதான் தெரியும் என்பதைப் போல, ஒரு பேராசிரியரின் வலி இன்னொரு பேராசிரியருக்கு தெரிகிறது. ‘எங்களையெல்லாம் நோண்டுனா என்னாகும் தெரியுமில்லே?’ என்கிற அறிவுஜீவித்தனமான மிரட்டல் இது.

ஒண்ணும் ஆகாது சார்.
‘சரோஜாதேவி’ என்பது செய்திகள், சம்பவங்கள், கட்டுரைகள், கதைகள் வழியாக சுவாரஸ்யமான பாலியல் வெகுஜன வாசிப்பைக் கோரும் நூல். அதனுடைய target audienceஐ அது சரியாகவே திருப்திபடுத்துகிறது. எல்லாரும் சரோஜாதேவி எழுத்துகளை எழுதிவிட்டு உன்னத இலக்கிய அந்தஸ்து கோருகிறார்கள். நான் மிக சாதாரணமாக எழுதிய எழுத்துகளையே ‘சரோஜாதேவி’ என்று டைட்டிலிட்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

சுவாரஸ்யத்துக்கும் உங்களுக்கும் சற்றும் சம்பந்தமில்லை என்பதால், இது நிச்சயமாக உங்களோட cup of tea கிடையாது. எனவே நான் எழுதியிருக்கிறேன் என்கிற ஒரே காரணத்துக்காக உங்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லி சித்திரவதை எல்லாம் செய்யமாட்டேன். ஆனால் என்ன, ஏதுவென்று தெரியாத ஒரு விஷயத்துக்கு, நீங்கள் படிக்காத ஒரு புத்தகத்தை, உங்களுடைய குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு மாறுபாடாக இருப்பவனை இழிவுசெய்ய பயன்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்துகிறீர்கள். நீங்கள்தான் இதுபோன்ற விஷயங்களில் ஜெயமோகனை கண்டிக்கிறீர்கள். ஜெயமோகனை கண்டிப்பவர்களிடம் ஜெயமோகனைவிட பன்மடங்கு ஜெயமோகத்தனம் இருக்கிறது என்பதற்கு நீங்களே நல்ல உதாரணமாகி விட்டீர்கள். நன்றி. Intellectuals என்று அறியப்படுபவர்கள் தேவை ஏற்படும்போது, சாதாரணர்கள் என்று அவர்கள் கருதக்கூடியவர்களை எப்படி அறிவுத்தீண்டாமையோடு நடத்துவார்கள் என்பதை ஏற்கனவே அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சாதி, மதத்தின் பெயரால் நடப்பது பார்ப்பனீயம் என்றால்.. அறிவின் பெயரால் நடக்கும் இந்த கருத்து வன்முறைக்கு என்ன பெயர் வைப்பது?

கடைசியாக…

என்னுடைய பதிவில் பேசப்பட்ட மாதொருபாகனுக்கான ‘விளம்பர அரசியலை’ கவனமாக தவிர்த்தே பேராசிரியர் பேசியிருக்கிறார்.

ஏனெனில்…

அவருக்கே தெரியும். நடந்தது நல்ல நாடகம். ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரீஸ்வரர்’ வெளியான நாளில் ஹிந்து, தினமலர் பத்திரிகைகள் கொடுத்த முன்னோட்ட விளம்பரங்கள் இதற்கு நல்ல ஆதாரம்.

இந்த நாடகத்தில் கருத்துரிமைப் போராளிகள் அத்தனை பேரும் கோமாளிகளாகி விட்டார்கள். நாடகத்தை நடத்தியவர் அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருப்பார். அதை மறைக்க அல்லது திசைதிருப்ப இப்படிதான் ஏதாவது புள்ளைப்பூச்சியை போட்டு அடித்துக் கொண்டிருப்பார்கள். அல்லது சரக்கடித்துதான் இந்த அவலத்தை மறந்தாக வேண்டும்.

தட்ஸ் ஆல்.

2 ஜனவரி, 2015

கோணல் பக்கங்கள் வெர்ஷன் 2015

தினகரன் இணைப்பிதழ்கள் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு :

தலைப்பை பார்த்ததும் அதிகப்படியாக தோன்றலாம். கோபமும் வரலாம்.

ஏனெனில் 'கோணல் பக்கங்கள்' என்னும் தலைப்பு சாரு நிவேதிதாவுக்கு சொந்தமானது. அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் - பத்திகள் இந்த பொது தலைப்பின் கீழ்தான் மூன்று பாகங்களாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. மட்டுமல்ல, அவை விற்பனையிலும் இன்றுவரை சாதனை படைத்து வருகின்றன.

ஒருவகையில் இந்த 'கோ.ப'களை Trend Setter என்றும் குறிப்பிடலாம். காரணம், 2000க்கு பிறகான தமிழ் பத்தி / கட்டுரை எழுத்துக்களில் ஒரு மாற்றத்தை - பாய்ச்சலை ஏற்படுத்தியது இந்த மூன்று பாகங்கள்தான். எனவேதான் புது வாசகர்களின் ஆரம்பகால 'கைடாகவும்', அறிமுக எழுத்தாளர்களின் தமிழ் நடையை தீர்மானிக்கும் காரணியாகவும் இந்த மூன்று பாகங்களே விளங்குகின்றன.

அவ்வளவு ஏன், 'சாரு நிவேதிதா' என்று சொன்னதுமே நினைவுக்கு வருவது 'கோணல் பக்கங்கள்'தானே?

அப்படியிருக்க அந்த தலைப்பை யுவகிருஷ்ணாவின் புதிய கட்டுரை தொகுப்பான 'சரோஜாதேவி' குறித்த அறிமுகத்துக்கு பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று புருவத்தை உயர்த்துவம், சட்டையை பிடித்து கேள்வி கேட்க முற்படுவதும் இயல்புதான்.

இதற்கு ஒரே விடை, 45 கட்டுரைகள் அடங்கிய இந்த நூலை படித்துப் பாருங்கள் என்பதுதான்.

யெஸ்... 'கோணல் பக்கங்களை' வாசிக்கும்போது என்னவகையான வசீகரிப்பை உணர்ந்தீர்களோ அதை அப்படியே யுவகிருஷ்ணாவின் 'சரோஜாதேவி'யிலும் உணரலாம். அதே துள்ளல் நடை. நக்கல். நையாண்டி.

ஆனால் -

எந்த இடத்திலும் இவர் சாருவின் மொழியை, நடையை காப்பி அடிக்கவில்லை என்பது முக்கியம். அதாவது முழுக்க முழுக்க இது 'லக்கி' பாணி.

சாம்பிளுக்கு கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகும் 'சமையல் மந்திரம்' நிகழ்ச்சி தொடர்பான கட்டுரையை எடுத்து கொள்வோம். அதில் -

//சமையல் குறிப்பு முடிந்ததுமே ஆலோசனை நேரம். நேயர்கள் யாராவது சந்தேகம் கேட்கிறார்கள். அந்த கடிதத்தை நிகழ்ச்சி பார்க்கும் நாமே கூச்சப்படும் வகையிலான குரலில் கொஞ்சிக் கொஞ்சி தொகுப்பாளர் படிப்பார். டாக்டரும் அசால்டாக, சிவராஜ் சித்தவைத்தியரை மிஞ்சும் வகையில் பதில் சொல்வார். இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகள் ஒரே மாதிரியாகதான் அலுப்பூட்டும். ‘இருபது வருட கைவேலை, ரொம்ப சிறுத்திடிச்சி’, ‘கல்யாணம் முடிஞ்சி எட்டு மாசமாவது, இதுவரைக்கும் ஒண்ணுமே முடியலை’ ரேஞ்சு சந்தேகங்கள்தான்.

கேள்வியைப் படித்துக் கொண்டிருக்கும்போதே டாக்டர் குறுக்கிட்டு ஏதாவது கமெண்டு சொல்வார். “மெட்ரோ வாட்டர் பைப் மாதிரி யூஸ் பண்ணுவார் போலிருக்கே?” என்று டாக்டர் ஒரு போடு போட, கிரிஜா ஸ்ரீயோ ஒரு படி மேலே போய் “ஆமாம். அப்படித்தான் நானும் நினைக்கிறேன்” என்று புகுந்து விளையாடுகிறார். “இவருக்கு இன்னேரம் கைரேகையெல்லாம் அழிஞ்சிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்” என்று டாக்டர் சீரியஸாக கமெண்ட் செய்ய, “பின்னே.. கொஞ்ச நஞ்ச உழைப்பா” என்று டாக்டரையே காலி செய்கிறார் கிரிஜா.//

என்று நக்கல் அடித்துவிட்டு இப்படி முடித்திருக்கிறார்... //நிகழ்ச்சிக்கு பிரமாதமான வரவேற்பு இருப்பதால், நிகழ்ச்சி நேரத்தை கொஞ்சம் ‘நீட்டிக்க’ சொல்லி நிறைய நேயர்கள் கேட்கிறார்கள். கேப்டன்தான் மனசு வைக்கணும்//

இணையதளத்தில் சக்கை போடு போட்ட 'சவிதா பாபி' காமிக்ஸ் மற்றும் 'நேஹா ஆண்ட்டி' ஆகிய இரு 'ஏ'டாகூடமான கதைகள் / தளங்கள் குறித்தும் தனித்தனி கட்டுரை எழுதியவர் -

பெரிதும் வாசிக்கப்பட்ட 'மாலதி டீச்சர்' குறித்து எழுதாதது வருத்தமளிக்கிறது

'விர்ச்சுவல் விபச்சாரம்' கட்டுரை இணையத்தில் நடக்கும் மோசடி தொடர்பானது. சபலப் பேர்வழிகளை குறி வைத்து எப்படி சாட்டிங் மூலம் பணம் பறிக்கிறார்கள் என்று விவரித்திருக்கிறார்.

'Undie Party', ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கூத்தை சிரிக்க சிரிக்க சொல்கிறது. எப்படி என்கிறீர்களா?

//Undie Party என்பது என்ன?

இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளும் முதல் நூறு பேருக்கு தேசிகுவல் இலவசமாக ஆடைகளை அளிக்கும். அவர்கள் அறிவிக்கும் தேதியில், அறிவிக்கும் கடைக்கு வந்து திருப்பதி க்யூ மாதிரி வரிசையாக நிற்கவேண்டும். First come, First gift அடிப்படையில் பார்ட்டி நடக்கும். பார்ட்டியில் கலந்துகொள்ள ஒரே ஒரு நிபந்தனை உண்டு. ஆணாக இருப்பின் ஜட்டியோ அல்லது ட்ரவுசரோ மட்டுமே அணிந்து வரவேண்டும். பெண்களுக்கு கொஞ்சம் கூடுதல் சலுகை உண்டு. கீழாடையோடு, மார்க்கச்சையும் அணிந்து வரலாம்.

100 பேருக்குதான் இலவச ஆடை தரமுடியுமென்றாலும் தங்களுக்கும் 'டோக்கன்' (நம்மூர் இலவச டிவிக்கு கொடுப்பது மாதிரி கொடுக்கிறார்கள்) கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆயிரக்கணக்கில் மக்கள் 'ஆய் டிரெஸ்' போட்டுக்கொண்டு குவிந்துவிட Undie party நடந்த நகரங்களில் எல்லாம் திருவிழாக்கோலம் தானாம். பற்களை கிடுகிடுக்க வைக்கும் ஐரோப்பா குளிரிலும் அனல் பறக்கிறதாம். பார்ட்டியில் பங்குபெற ஐநூறு பேர் வந்தால்.. பார்வையாளர்கள் பத்தாயிரக் கணக்கில் குவிகிறார்களாம். ஆபிஸுக்கு லீவ் போட்டுவிட்டெல்லாம் நிறைய பேர் வந்து விடுவதால், விரைவில் அரசு பொதுவிடுமுறையாக Undie party தினம் அறிவிக்கப்படலாம்.//

இதே அதகளம்தான் -

'சரோஜாதேவி', 'போட்டுத் தாக்கு', 'சன்னி லியோன்', 'பிட்டு பார்த்தது ஒரு குற்றமா?', 'இந்தக் காதலுக்கு எத்தனை கோணம்?', 'பிரதி ஞாயிறு 9.00 மணி முதல் 10.30 வரை', 'தன்வி வியாஸ்', 'No Bra day', 'உலகின் முதல் அஜால் குஜால் 3டி படம்', 'ஹோல்டன்', 'அமலாபால்', 'நடுநிசி அழகிகள்', 'The Dirty Picture', 'இரண்டு முக்கிய செய்திகள்', 'தோழர் ஷகீலா', 'irony', 'பெண் ஏன் அழகாக இருக்கிறாள்?', 'அநாகரிகம்', 'நமீதா இட்லி ரெடி', 'சிலுக்கலூர்பேட்டை!', 'Hisss', 'என் கூட விளையாடேன்!', 'நிக்கி லீ!', 'அஜால் குஜால் டிவி', 'அடிக்கடி தொலையும் 'அந்த' மேட்டர்!', 'நல்லசிவம் செத்துட்டான் சதாசிவம் பொழைச்சிட்டான்!', 'முதல் பாவம்', 'மீசை!', 'ஷகீரா!', 'காண்டம்... காண்டம்...', 'ஒன்பது - ஒன்பது - ஒன்பது', 'ஆன்மீகம்', 'மிஸ் கிளாமர் வேர்ல்டு', 'வாணிகபூர்', 'எங்க சின்ன ராசா', 'கிராவிட்டி', 'தியேட்டர்லோ நல்குரு (தெலுங்கு)', 'கலகலப்பு', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'காஜல் அகர்வால்'

ஆகிய கட்டுரைகளிலும்.

மொத்தத்தில் பாலியல் சார்ந்த விவகாரங்களை அங்கதத்துடன் அனைத்து கட்டுரைகளிலும் யுவ கிருஷ்ணா பதிவு செய்திருக்கிறார். ஒருவகையில் இது நம் மரபின் நீட்சிதான். எப்படி கூத்துக்கலையில் கட்டியங்காரன் தீடீரென்று தோன்றி ஒரு சொல் அல்லது வாக்கியம் வழியாக ஆதிக்கத்தை கேள்வி கேட்டு நக்கல் செய்வானோ -

அப்படித்தான் இந்த நூல் முழுவதும் நையாண்டியுடன் இன்றைய உலகை எதிர்கொண்டிருக்கிறார்.

அதாவது, இந்தியாவில் உலகமயமாக்கல் அறிமுப்படுத்தப்பட்ட பிறகு பிறந்தவர்களின் உலகப் பார்வையை புரிந்து கொள்ள உதவியிருக்கிறார்.

சொல்வதற்கில்லை நாளை எழுத வரும் எழுத்தாளனுக்கு கோனார் நோட்ஸாக இந்த நூல் அமையலாம். அதனாலேயே இந்த பதிவுக்கு தலைப்பாக 'கோணல் பக்கங்கள் வெர்ஷன் 2015' என பெயர் வைத்திருக்கிறேன்.

வாழ்த்துகள் யுவ கிருஷ்ணா, நாளைய வாசகர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்கப் போவதற்கு.

நூல் : சரோஜா தேவி,
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
விலை : ரூ.100 / -

ஜனவரி 3, 2015 அன்று மாலை 5.30 மணிக்கு இந்த நூல் வெளியிடப்படுகிறது. இடம் : சென்னை புக்பாயிண்ட் அரங்கம்.



ஆன்லைன் மூலமாக நூலினை வாங்க...