20 ஜனவரி, 2015

ஹண்ட்ரட் பர்சண்ட் ஹேப்பி

சமீபத்தில் சென்னை மயிலாப்பூர் தெற்குமாட வீதியிலிருந்த அந்த புத்தகக்கடைக்கு போயிருந்தோம். கார்த்திக் புத்தக நிலையம் என்று பெயர். நூற்றுக்கணக்கில் ரமணி சந்திரன் நாவல்கள். கூடவே கிட்டத்தட்ட முப்பது பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள்.

“இவ்வளவு பெண்கள் தமிழில் எழுதுகிறார்களா?” ஆச்சரியத்தோடு முணுமுணுத்தோம்.

நம்முடைய முணுமுணுப்பு கடைக்காரரின் காதில் விழுந்திருக்க வேண்டும்.

“ஆமாங்க. இவ்வளவு பேரு எழுதுறதைவிட அதை லட்சக்கணக்கானோர் படிக்கிறாங்க என்பதுதான் முக்கியம்” என்றார். அவருக்கு எண்பது வயது இருக்கும். ஆனாலும் வயதை மீறிய சுறுசுறுப்பு.

“தமிழில் இப்போ யாருமே படிக்கிறதில்லை. புத்தக வாசிப்பே குறைஞ்சிடிச்சின்னு சொல்றாங்களே சார்?”

“எதை வெச்சி சொல்றாங்கன்னு தெரியலை. இந்த கடையிலே புத்தகங்கள் விற்கிறதை வெச்சி சொல்றேன். முன்னைவிட நிறைய பேர் படிக்கிறாங்க. குறிப்பா பெண்கள் நிறைய படிக்கிறாங்க”

சொன்னதோடு இல்லாமல், சூடாக விற்றுக் கொண்டிருந்த சில புத்தகங்களை நம் கையில் திணித்தார். சமீபத்தில் நன்றாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் என்று சிலரை நமக்கு சிபாரிசும் செய்தார்.

“ஓசையில்லாமே ஓர் எழுத்தாளப் பரம்பரை தமிழில் உருவாகிட்டு வருது. மெயின்ஸ்ட்ரீமில் இதைப்பத்தி பெருசா யாரும் பேசுறதில்லைன்னாலும், அண்டர்கரெண்டில் ரொம்ப வேகமா இது நடக்குது. ரமணி சந்திரன் தான் அவங்க தலைவி. நாப்பத்தஞ்சி வருஷமா எழுதறாங்க. அவங்களை ஃபாலோ பண்ணி கணிசமான இளம் பெண்கள் எழுத வந்திருக்காங்க” என்று டிரெண்டை சொன்னார்.

நன்றி சொல்லி விடைபெறும்போது அவரது பெயரை கேட்டோம். பாலச்சந்திரன் என்றார். ஏதோ ஒரு பொறி தட்டவே, “சார், நீங்க” என்றோம்.

“நீங்க யூகிக்கிறது சரிதான். அவங்க என்னோட மனைவிதான். நான்தான் மிஸ்டர் ரமணிசந்திரன்” என்றார். லட்சக்கணக்கான தமிழ்ப் பெண்களின் ஆதர்ச எழுத்தாளரின் கணவர்.

“அவங்க வெற்றிக்கு பின்னாலே நான்தான்னு எல்லாம் சொல்ல மாட்டேன். கதைகள் எழுதும்போது அவங்களுக்கு தேவைப்படுகிற சில விவரங்களை கேட்பாங்க. அதை சேகரிச்சி கொடுத்திருக்கேன். அதைத் தவிர்த்து முழுக்க முழுக்க அவங்களோட தனிப்பட்ட வெற்றிதான் இது” என்று அடக்கமாக சொன்னார்.

ரமணி சந்திரன் 1938, ஜூலை பத்தாம் தேதி பிறந்தார்.

தான் பிறந்தநாளை அவரே, அவரது பாணியில் சொல்லியிருக்கிறார்.

“சில பவுர்ணமி நாட்களில், நிலவைச் சுற்றிலும் காம்பஸ் கொண்டு வரைந்தாற்போல, ஓர் ஒளி வட்டம் தென்படுவது உண்டு. நன்கு கவனித்தால், அந்த ஒளியில் வான வில்லின் ஏழு வண்ணங்களும் தெளிவற்று ஒளிர்வதைக் காணலாம். அதை நிலவுக்குக் கோட்டை கட்டியிருப்பதாக ஊர்பக்கம் சொல்வதுண்டு. அன்று, நான் பிறந்த அந்த நாளில், இன்னமும் அற்புதமாக, நிலவுக்கு அது போன்ற இரு கோட்டைகள் அமைந்திருந்தனவாம். முற்றத்தில் அமர்ந்து, இரண்டு கோட்டை கட்டிய நிலவை, அதிசயத்துடன் பார்த்துவிட்டுப் போய், என்னை பெற்றதாக, என் அம்மா சொன்னதுண்டு”

மேற்கண்ட பத்தியை வாசித்ததுமே ரமணிசந்திரனின் வாசகர்கள் கண்டு கொண்டிருப்பார்கள். அவரது கதைகளின் பெரும்பாலான நாயகிகள், ரமணிசந்திரனுடைய அம்மாவின் தன்மையை கொண்டவர்கள்தான்.

ரமணிச்சந்திரனின் வீட்டில் அக்கா தங்கைகள் ஐந்து பேர். கோயமுத்தூரில் இருந்த தங்கைக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். தங்கையின் கணவர் ஒரு வாரப்பத்திரிகை ஆசிரியர். யதேச்சையாக இவரது கடிதங்களை படித்த அவர், எழுத்தில் இருந்த வடிவ நேர்த்தியை கண்டு இவர் கதை எழுதலாமே என்று கேட்க ஆரம்பித்தார்.

“எனக்கு அதெல்லாம் ஒத்துவராதுங்க” என்று ஆரம்பத்தில் கூச்சமாக மறுத்துக் கொண்டிருந்தார்.

அவரோ ஒருமுறை அதிரடியாக இவர் கதை எழுதுவதாக பத்திரிகையில் விளம்பரப் படுத்திவிட்டார். வேறுவழியில்லாமல் முதன்முதலாக ஒரு நாவலை எழுதினார். நாவலின் பெயர் ‘ஜோடிப் புறாக்கள்’. 1970ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போதிலிருந்து வருடத்துக்கு சராசரியாக ஐந்து, ஆறு நாவல்களாவது எழுதிக் கொண்டிருக்கிறார். நாவல்களின் எண்ணிக்கையில் மட்டுமே இரட்டை செஞ்சுரியை தாண்டிவிட்டார். இது தவிர்த்து சிறுகதைகளின் கணக்கு தனி.

ரமணிச்சந்திரனின் அனைத்துக் கதைகளுக்கும் பொதுவான சில அம்சங்கள் உண்டு.

சாதி மற்றும் மதப்பிரச்சினை இருக்கவே இருக்காது. பிழியவைக்கும் சோகத்துக்கு வாய்ப்பேயில்லை. ரொம்ப சீரியஸாக கதையில் பாத்திரங்கள் யாரும் தத்துவம் பேசமாட்டார்கள். எல்லோருமே அன்பானவர்கள். எல்லோருமே மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள். தொடர்ச்சியாகவே இயங்கும் இந்த பாசிட்டிவ்வான அணுகுமுறைதான் அவரை மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.

ரமணிச்சந்திரனின் கதைகள் தமிழ்ப் பெண்கள் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளப்பறியாதது. நம் நண்பருக்கு திருமணம் நடந்திருந்த சமயம். அவரது மனைவிக்கும், அம்மாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே முட்டல் மோதல். மாமியார் மருமகள் பிரச்சினையால் குடும்பமே பிளவுபடக் கூடிய சூழல். அப்போதுதான் அந்த ‘ரமணி மேஜிக்’ நடந்தது. மாமியார் எதையோ படித்துக் கொண்டிருந்ததை யதேச்சையாக மருமகள் பார்த்தார். அது ஒரு ரமணிச்சந்திரன் நாவல். இவரும் ரமணிச்சந்திரனின் தீவிர வாசகி. இரண்டு ரமணிச்சந்திரன் வாசகிகள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளலாமா என்று இருவரும் அன்றிலிருந்து ராசியாகி விட்டார்கள். இன்றுவரை நண்பர் அச்சம்பத்தை சொல்லி சொல்லி ஆச்சரியப்படுகிறார்.

ரமணிச்சந்திரன் கதைகளில் வரும் வில்லன்களும், வில்லிகளும் பெரும்பாலும் ஆபத்தில்லாதவர்கள். உண்மையில் அவர்களுக்கு வில்லத்தனம் இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். எப்படி இந்தமாதிரி கேரக்டர்களை பிடிக்கிறார்?

“திருமணத்திற்குப் போனோம் என்றால், உண்மையான அன்புள்ளவர்கள், பெண் மாப்பிள்ளை, வீடியோவுக்கும், போட்டோவுக்கும் நன்றாக இருக்க வேண்டும் என்று, வேர்வை துடைத்துவிடுவார்கள். நெற்றியில் கண்டபடி பூசப்படும் திருநீரு குங்குமத்த்தைச் சீர் செய்வார்கள். தத்தம் ஜரிகை துணிமணிகளையும், நகைகளையும் காட்டி, போஸ் கொடுக்க மாட்டார்கள். உதவுகிரமாதிரி வீடியோவுக்குக் காட்சி கொடுப்போரும் உண்டு. இன்னும், ஒரிருவரைப் பின்னே தள்ளுவதும், தலையே நீட்டி, கேமராவுக்கு முன்னே, தோற்றம் அளிப்பதும், கவனித்தால், கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்... குணநலன்களை (அப்படி ஒன்று இருந்தால்) விளக்குவதாகவும் இருக்கும். இன்னும், வீடியோவின் பிளாஷ் லைட் தங்கள் பக்கம் வரும்போது, சிலர் அப்பாவி போல முகத்தை வைத்துக்கொள்வதைப் பார்க்கையில் சிரிப்பு வரும். கூடவே, நம் கதைக்கு வில்லியும் கிடைப்பாள். வில்லன்களும்தான்”

கதைகள் எழுத விரும்பும் ஒவ்வொருவரும் ரமணிச்சந்திரனின் மேற்குறிப்பிட்ட பத்தியை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். எப்படி எழுதுவது என்பதை ஒரே பாராவில் இவ்வளவு எளிமையாக வேறு யாரும் சொல்லியதில்லை. நாம் பார்க்கும் கேட்கும் விஷயங்கள்தான் கதைகள். இவை வானத்திலிருந்து குதிப்பதில்லை.

ரமணிச்சந்திரனின் கதைகள் எப்போதும் மகிழ்ச்சியாகவேதான் முடியும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எவ்வளவோ துயரங்கள் இருக்க, கதைகளிலும் அது தேவையா என்பதுதான் அவரது கேள்வி. வாசகர்கள் திணற திணற மகிழ்ச்சி என்பதுதான் அவரது வெற்றி.

(சூரியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ரைட்டர்ஸ் உலா’ நூலின் ஓர் அத்தியாயம்)

3 கருத்துகள்:

  1. சிறப்பான எழுத்தாளரை பற்றிய சிறப்பான அறிமுகம்! நூல் பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. இக்கட்டுரையில் திரு. அ. மா. சாமி அவர்களின் பெயரையே காணவில்லை?

    பதிலளிநீக்கு