அந்த கட்டவுட்டை பார்த்ததுமே எல்லாருக்கும் உடனடியாக பூஸ்ட் அடித்ததுமாதிரி ‘தன்னம்பிக்கை’ ஏற்பட்டது என்று சொன்னால் மிகையில்லை.
“இவனெல்லாம் ஹீரோ ஆயிட்டான். நாம ஆக முடியாதா?”
முப்பது அடி உயரத்துக்கு ஒல்லியான விஜய்யின் கட்டவுட். கீழே ‘அனைத்திந்திய விஜய் ரசிகர் மன்றம்’ என்று எழுதப்பட்டிருந்ததை கண்டவர்கள் காண்டு ஆனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
அறிமுகப் படத்திலேயே ‘அனைத்திந்திய ரசிகர் மன்றம்’ ட்ரெண்டினை கொண்டுவந்தவர் விஜய்தான். இன்று, ரஜத் (‘இயக்குனர்’ படத்தின் ஹீரோ கம் இயக்குனர் கம் ஒளிப்பதிவாளர், படத்தில் எட்டு ஹீரோயினாம்) என்பவருக்கு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்றால், 1992லேயே விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ.சி. செய்த அடாவடியான அமர்க்களங்கள்தான் காரணம். படம் வெளியான அரங்கங்கள் முழுக்க ‘ஸ்டார்’ டிசைனால் அலங்கரித்திருந்தார்கள். அப்போதெல்லாம் ரஜினிக்கு மட்டும்தான் ஸ்டார் அலங்காரம் (அவர் சூப்பர் ஸ்டார் இல்லையா?) என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது.
எக்சர்சைஸ் செய்து ஆர்ம்ஸ் காட்டி அறிமுகமாகும் விஜய்யை திரையில் பார்த்த அத்தனை பேரும் கை கொட்டி சிரித்தார்கள். ஒரு வகையில் பார்க்கப் போனால் வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷூக்கும், பவர்ஸ்டார் சீனிவாசனுக்கும் முன்னோடி இளையதளபதி விஜய்தான்.
அமெரிக்காவில் ஆக்டிங் படித்துவிட்டு வந்திருக்கிறார் மாதிரி பில்டப்புகள் எடுபடவில்லை. ‘நாளைய தீர்ப்பு’ அட்டர் ப்ளாஃப். விஜய்யின் அறிமுகம் கேலிக்குரியதாக ஆகிப்போனது.
கன்னி முயற்சியே படுதோல்வி எனும்போது, கொஞ்சம் ‘கேப்’ விட்டுதான் ஆடுவார்கள். ஆனால், விடாமுயற்சிக்கு பேர் போன எஸ்.ஏ.சி., எப்படியாவது மகனை தேற்ற விஜயகாந்திடம் சரணடைந்தார். ஏனெனில் தமிழ் சினிமாவில் அப்போதெல்லாம் தோல்வியடைந்தவர்களின் வேடந்தாங்கல் கேப்டன்தான். விஜயகாந்துக்கு திரையுலகில் அடையாளம் பெற்றுத் தந்தவர் எஸ்.ஏ.சி. அந்த நன்றிக் கடனுக்காக ‘செந்தூரப் பாண்டி’ தயார் ஆனது (பிற்பாடு இதே மாதிரி சூரியாவுக்கும் வாழ்வு கொடுக்க, கேப்டன் ‘பெரியண்ணா’ நடித்தார். ஆனால், அப்போது கேப்டனுக்கே வாழ்வு இல்லை என்பதால், அது backfire ஆகிவிட்டது).
‘செந்தூரப் பாண்டி’, ஆஹா ஓஹோவென்று சொல்ல முடியாவிட்டாலும் ‘ஹிட்’ ஆனது. யுவராணியோடு, விஜய்யின் கெமிஸ்ட்ரி கவர்ச்சியாக ‘கபடி’ ஆடியதில் பிக்கப் ஆனது. இந்த பாயிண்டை அப்படியே பிக்கப் செய்து, ‘ரசிகன்’ ஆக்கினார் எஸ்.ஏ.சி.
‘ரசிகன்’ படப்பிடிப்பில் இருந்தபோது, ஏதோ ஒரு சினிமா பத்திரிகையில் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர் ஒருவரின் பேட்டியை வாசித்திருந்தேன். அநேகமாக எஸ்.பி.ராஜ்குமார் என நினைவு. ‘இளைய தளபதி’ என்கிற வார்த்தையை முதன்முதலாக கேட்டது அப்போதுதான். ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் டூப் போடாமலேயே, இளைய தளபதி எப்படி ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார் என்பது அந்த பேட்டியில் விரிவாக பதிவாகி இருந்தது.
செந்தூரப் பாண்டியின் மூலமாக பட்டி தொட்டியெங்கும் அறிமுகமாகியிருந்த விஜய்க்கு, ‘ரசிகன்’ ஓபனிங் பெரிய சவாலாக எல்லாம் இல்லை. ஸ்யூர் ஹிட் ஸ்க்ரிப்ட். வைல்டான செக்ஸ். ஸ்ட்ராங்கான காமெடி. லேசான செண்டிமெண்ட். ‘பம்பாய் குட்டி, சுக்கா ரொட்டி’ பாட்டுக்கு தமிழ்நாடே டேன்ஸ் ஆடியது. விஜயின் புயல்வேக நடன அசைவுகளே அவரது தனித்துவமானது. ‘ஆட்டோ ராணி ஹாரனை கொஞ்சம் நானும் அமுக்கட்டுமா?’ பாடலில் ‘ஹாரனுக்கு’ சென்ஸாரில் தடா போட அதுவே பரபரப்பாகி படத்துக்கும் விளம்பரமாக அமைந்தது. சங்கவி, ஸ்ரீவித்யா, விஜயகுமார், மனோரமா, கவுண்டமணி, செந்தில், ‘மடிப்பு அம்சா’ விசித்ரா என்று பிரபலமான நட்சத்திரப் பட்டாளத்தை எப்படி ஒரே படத்தில் கட்டி மேய்ப்பது என எஸ்.ஏ.சி. பாடமே எடுத்திருந்தார்.
விஜய்யின் முகத்தை மோசமாக எழுதிய குமுதத்தின் விமர்சனத்தை எல்லாம் தவிடுபொடியாக்கி ‘ரசிகன்’ வெள்ளிவிழா கொண்டாடியதால், விஜய்க்கு ஏகப்பட்ட கிராக்கி. தன் மகனை மாஸ் ஹீரோவாக வடிவமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ரசிகன் டைப் ஸ்க்ரிப்டுகளையே தேர்ந்தெடுத்தார் எஸ்.ஏ.சி. ‘தேவா’, ‘விஷ்ணு’ போன்ற படங்கள் வசூலில் குறைவைக்கவில்லை.
ரசிகனில் ‘பம்பாய் குட்டி’ பாடலை விஜய்யே பாடியிருந்தார். பாடல் ஓடும்போது ‘இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்’ என்று உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக வித்தியாசமாக ஒரு டைட்டில் போட்டார் எஸ்.ஏ.சி.
பின்னணிப் பாடகராகவும் விஜய் (அவருடைய தாய்மாமா எஸ்.என்.சுரேந்தர், அவரும் சில படங்களில் விஜய்க்கு பின்னணி பாடியிருக்கிறார், அம்மாவும் நல்ல பாடகி) நிலைபெற்றுவிட, அடுத்தடுத்த படங்களில் விஜய்யையே பாடவைக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டினர். நல்ல குரல்வளம், நளினமான நடன அசைவுகள், காமெடி என்று வழக்கமான நடிப்பை தாண்டிய ப்ளஸ் பாயிண்டுகள் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் இமேஜை பெற்றுக் கொடுத்தது.
இதே காலக்கட்டத்தில் விஜய்க்கு போட்டி நடிகர்கள் என்றால் அரவிந்த்சாமி, பிரபுதேவா, பிரசாந்த் போன்றவர்கள்தான். அஜித்தெல்லாம் அப்போது ஆட்டையிலேயே இல்லை. யாருமே எதிர்ப்பார்க்காமல் சட்டென்று பிக்கப் ஆன ஆல்டைம் வொண்டர் அஜித். அப்போதிருந்த விஜய்யின் சகப்போட்டியாளர்களுக்கு அவ்வளவு சமர்த்து போதாது என்பதும் அவரது அதிரடிப் பாய்ச்சலுக்கு உதவியது.
மசாலா ரூட்டிலேயே போய்க்கொண்டிருந்த விஜய்க்கு காதல் படங்களிலும் நடித்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனெனில் பிரசாந்தும், சில குட்டி நடிகர்களும் இந்த ஏரியாவில் ரவுண்டு கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அம்மாதிரி அவர் தேர்ந்தெடுத்த சில ஸ்க்ரிப்டுகள் ‘ராஜாவின் பார்வையிலே’ (அஜித்துக்கு துக்கடா வேடம்), ‘சந்திரலேகா’, ‘பூவே உனக்காக’, ‘வசந்தவாசல்’, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ போன்றவை.
இதில் ‘பூவே உனக்காக’ யாருமே எதிர்பாராத அதிரிபுதிரியான ஹிட் (இயக்குனர் விக்ரமனுக்கும் இது ரீபர்த்). நல்ல இயக்குனரிடம் மாட்டினால், விஜய்யும் நல்ல நடிகர்தான் என்பது புரிந்தது. இந்தப் படத்தில் நடிக்கும்போது போதிய ஆர்வம் காட்டாமல் ஏனோதானாவென்றுதான் விஜய் நடித்தார். இதன் வெற்றியிலும் அவருக்கு ஏகத்துக்கும் சந்தேகமிருந்தது. மாஸ் ஹீரோவான தனக்கு க்ளாஸ் சரிப்படாது என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.
ஆனால்-
அந்த ‘பூவே உனக்காக’தான் விஜய்யின் நடிப்புலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்த விஜய்யின் டெம்ப்ளேட் படமான ‘மாண்புமிகு மாணவன்’ (எஸ்.ஏ.சி. இயக்கம்) படுதோல்வி அடைந்தது. இனிமேல் விவரமான ஸ்க்ரிப்டுகளைதான் ஓக்கே செய்ய வேண்டும் என்று விஜய் முடிவெடுத்து விட்டதால், இயக்குனரான எஸ்.ஏ.சி.யின் திரையுலக வாழ்க்கையே ஆட்டம் கண்டது குறிப்பிடத்தக்கது. விஜய், கதையை நம்பி நடித்த ‘லவ் டுடே’வும் ஹிட்.
வசந்தின் ‘நேருக்கு நேர்’ பெரிய ஹிட் இல்லையென்றாலும், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் குறித்த அறிவினை விஜய் அறிந்துக்கொள்ள உதவியது. ‘காதலுக்கு மரியாதை’ தமிழ் திரையுலகில் தவிர்க்கவே முடியாத நடிகர் என்கிற அந்தஸ்தை அவருக்கு பெற்றுத் தந்தது.
அதன் பிறகு அவர் தேர்ந்தெடுத்து நடித்த இரண்டு ஸ்க்ரிப்டுகள் வெற்றி (நினைத்தேன் வந்தாய், பிரியமுடன்). அவருக்காக அப்பா ஓக்கே செய்திருந்த ‘நிலாவே வா’ படுதோல்வி அடைந்ததோடு, கே.டி.குஞ்சுமோன் என்கிற தயாரிப்பாளரை நிரந்தர வனவாசத்துக்கும் அனுப்பியது (இந்த அட்டர் ஃப்ளாபுக்கு பிறகு விஜய்யை வைத்து உடனடியாக இன்னொரு அட்டர் ஃப்ளாபையும் தயாரித்தார் குஞ்சுமோன், ‘என்றென்றும் காதல்’).
‘துள்ளாத மனமும் துள்ளும்’ சூப்பர்ஹிட் படத்துக்கு பிறகு, விஜய் எதை தொட்டாலும் தோல்வி என்கிற நிலை ஏற்பட்டது. திரையுலகில் எல்லா பெரிய நடிகர்களுமே கடந்து வரவேண்டிய சோதனைக்காலம் இது. இத்தனைக்கும் ‘மின்சார கண்ணா’, ‘கண்ணுக்குள் நிலவு’ போன்ற படங்கள் கமர்ஷியலாகவும் ஹிட் ஆகக்கூடிய அம்சங்களை கொண்டிருந்தும் தோல்வி அடைந்தன. அப்பாவின் இயக்குனர் அந்தஸ்தை தக்கவைப்பதற்காக அவர் நடித்துக் கொடுத்த ‘நெஞ்சினிலே’, எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றியது.
எஸ்.ஜே.சூர்யாவின் முதல் படம் வாலி. அஜித்தின் இடத்தை தமிழில் நிரந்தரமாக்கிய திரைப்படம். அடுத்து, விஜய்க்கு சூப்பர்ஹிட் படம் வேண்டும் என்கிற வெறியில் ‘குஷி’யை இழைத்து இழைத்து இயக்கினார். சில தோல்விகளை அடுத்தடுத்து பெற்றிருந்த விஜய், இந்த படத்தில் “என்னை மட்டுமல்ல, என் இமேஜை கூட உன்னால அசைக்க முடியாது” என்று அஜித்துக்கு பஞ்ச் கொடுத்துப்பேச, படம் பற்றிக் கொண்டது.
குஷியை அடுத்தே விஜய் – அஜித் மோதல் திரையில் சுறுசுறுப்பானது. ஒரு கட்டத்தில் இந்த ஆடுபுலி ஆட்டம் வெறுத்துவிட, அஜித்தே தன்னை போட்டியில் இருந்து கழற்றிக் கொண்டு தன் பாதை தனிப்பாதை என்று போய்விட்டார். விஜய் இன்னமும் பொத்தாம் பொதுவாக வானத்தைப் பார்த்து பஞ்ச் அடித்துக் கொண்டிருக்கிறார்.
‘குஷி’யின் மெகாவெற்றியை தொடர்ந்து ‘பிரியமானவளே’, ‘ஃபிரண்ட்ஸ்’ என்று ஹாட்ரிக் வெள்ளிவிழா கொண்டாடினார் விஜய்.
ஆனால்-
விஜய்க்கு ஒரு ராசி. ஓராண்டு முழுக்க வெற்றி என்றால், அடுத்த ஆண்டு முழுக்க படுதோல்வி காண்பார். மீண்டும் ஒரே ஒரு வரலாற்று வெற்றியை எட்டி, அத்தனை தோல்வியின் சுவடுகளையும் துடைப்பார். இந்த தோல்வி காலத்தில் அவர் நடித்த நல்ல படங்களும் கூட ஓடாது என்பது என்னமாதிரியான டிசைன் தெரியவில்லை (‘வசீகரா’ இன்றும் டிவியில் பெருவாரியாக ரசிக்கப்படும் படம், ஆனால் விஜய்யின் வனவாச காலத்தில் வெளியாகி தோல்வி அடைந்தது).
2003 தீபாவளிக்கு வெளியான திருமலை அவருக்கு திருப்புமுனை. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ‘போக்கிரி’ வரை வெற்றிமழையிலேயே விஜய் நனைந்துக் கொண்டிருந்தார் (இடையில் ‘மதுர’, ‘ஆதி’யெல்லாம் திருஷ்டிபடிகாரங்கள்).
‘போக்கிரி’யின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு அடுத்த நான்காண்டுகள் சிரமதசை. இந்த காலக்கட்டத்திலும் கூட ஓரளவுக்கு தேறக்கூடிய படங்களான ‘வேட்டைக்காரன்’, ‘காவலன்’ போன்றவை போதுமான வெற்றியை ருசிக்க முடியவில்லை. ‘வேலாயுதம்’ வந்துதான் மீண்டும் இளையதளபதியின் ஆட்சி.
‘நண்பன்’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’யென்று சமீபவருடங்கள் ஆரோக்கியமாக தெரிந்தாலும் ‘தலைவா’, ‘ஜில்லா’வென்று அவ்வப்போது அவர் சறுக்கவும் தவறவில்லை.
சிம்புதேவன் இயக்கத்தில் புலி, அட்லி இயக்கத்தில் ஒரு படம், மீண்டும் பிரபுதேவாவுடன் இணைகிறார் என்று கிராப் உயர்ந்துக் கொண்டிருப்பது மாதிரிதான் தெரிகிறது.
எனினும் விஜய்யின் எந்த படத்தையுமே நிச்சயவெற்றி என்று உறுதியாக நம்ப முடியாத நிலை நீடிப்பதுதான் அவரது ஆகப்பெரிய பலவீனம். கிட்டத்தட்ட இதே நிலைதான் அவரது நேரெதிர் போட்டியாளரான அஜீத்துக்கும் என்றாலும், அஜித்தின் தோல்விப் படங்கள் வணிகரீதியாக பெரும் நஷ்டத்தை தருவதில்லை. ஓரளவுக்கு சமாளித்துக் கொண்டு, அடுத்து விட்டதைப் பார்த்துக் கொள்ளலாம் என்பது மாதிரி இருக்கிறது. ஆனால் விஜய்யின் ஒரு படம் தோல்வியுற்றால், அந்த செயினில் வரும் அத்தனை ஆட்களுமே தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்பது நிலை. எனவேதான் அஜித்தைவிட விஜய்யின் படங்களுடைய வெற்றி, தோல்வியை இண்டஸ்ட்ரி முக்கியமானதாக கருதுகிறது.
எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் என்று தலைமுறைகளாய் தொடரும் வரிசையில் கிட்டத்தட்ட அஜித், ரஜினியின் இமேஜை நெருங்கிவிட்டார். ஆனால் இன்னமும் விஜய்யால் அடுத்த கமல் என்கிற இலக்கில் பாதி தூரத்தை கூட கடக்க முடியவில்லை. (இங்கே ரஜினி-கமல் என்று இதை ஆளுமைரீதியாக லிட்டரலாக எடுத்துக் கொள்ளக்கூடாது, அந்த brand positionஐ சுலபமாக சுட்டிக் காட்டவே இந்த பெயர்கள்)
ரஜினி ஆவது கமல் ஆவதை விட ரொம்ப ஈஸிதான் என்றாலும்கூட-
மிகத் திறமையான கலைஞரான விஜய், இருபத்து மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக திரைத்துறையில் பணியாற்றுகிறார். இன்னமும் அவருக்கு இயக்கம் மாதிரியான நடிப்பு தவிர்த்த மற்ற தொழில்நுணுக்கங்களில் ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக கூட அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை. இத்தனைக்கும் அவரது அப்பாவே வெற்றிகரமான இயக்குனர்தான். ஆனால், அஜித்தோ சரண் போன்ற இயக்குனர்களிடம் பணியாற்றி இயக்கத்தின் அரிச்சுவடியை முறையாக கற்கிறார்.
கமலஹாசன் தன்னுடைய நாற்பதாவது வயதில் ‘மகாநதி’ செய்துக் கொண்டிருந்தார். விஜய்யோ ‘புலி’யில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாற்பதுக்குள் கமலஹாசன் பெற்ற விருதுகளும், செய்த சாதனைகளும் யாராலும் ஈடு செய்ய முடியாததுதான் என்றாலும், அவருடைய இடத்தை நிரப்பவேண்டிய இடத்தில் இருப்பவர், அதில் பாதியாவது செய்து முடித்திருக்க வேண்டாமா? அஜித்துக்கு நடக்கத்தான் வரும், நடிக்க வராது. நன்கு நடிக்கத் தெரிந்த விஜய் இன்னமுமா ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’யென்று பஞ்ச் டயலாக் அடித்துக் கொண்டிருப்பது?
திரையுலகில் தோல்விகள் சகஜம்தான். சில ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது அந்த தோல்விகள் கவுரவமான தோல்விகளாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு கமல்ஹாசன், 1991ல் பெற்ற ‘குணா’ தோல்வி. அதை அவரால் பெருமையாக திரும்பிப் பார்க்க முடியும். ‘அன்பே சிவம்’, ‘ஹேராம்’ என்று கம்பீரமான தோல்விகளை படைக்கவே பிறந்தவர் அவர். இன்றைய ‘உத்தம வில்லன்’ கூட இருபது ஆண்டுகளுக்கு பிறகு கமலின் புகழை பறைசாற்றுவதாகவே இருக்கும்.
விஜய்யின் தோல்விகள் அத்தகைய தன்மை கொண்டவையா? ‘தலைவா’ மாதிரி வெற்றிக்காக முயற்சித்து, அடையக்கூடிய தோல்விகள் அசிங்கமானவைதானே?
மாஸ் படங்கள் நடித்து வசூலை வாரிக்குவிக்க அஜித் போதும். முன்பு ரஜினி இருந்தார். ஆனானப்பட்ட ரஜினியே இப்போது கோச்சடையான், லிங்காவென்று அடுத்தடுத்து அதிர்ச்சி கண்டு, தன்னை தானே மறுபரிசீலனை செய்துக்கொள்ள முன்வந்திருக்கிறார்.
திரையுலகில் எத்தனை படங்கள் வெற்றிப் படங்கள் என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அப்படி பார்த்தால் சிவாஜியை இன்னேரம் நாம் முற்றிலுமாக மறந்திருக்க வேண்டும். எண்பதுக்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் – சிவாஜியின் படங்களை நினைவுகூறி எண்ணச் சொன்னால், பத்து படங்களுக்கு மேல் எம்.ஜி.ஆரின் படங்கள் தேறினால் யதேஷ்டம். ஆனால், சிவாஜியின் படங்களுக்கு நம்முடைய இரு கை, கால் விரல்களை இருமுறை எண்ணிய பிறகும் போதாது.
விஜய், சிவாஜி – கமல் வரிசையில் பொசிஸன் ஆகவேண்டிய நடிகர். திரைக்கு வெளியே உருவாகும் இமேஜ் அஜித்தை காப்பாற்றும். விஜய்யோ திரையில் உழைத்துதான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.
இன்று நாற்பதாவது பிறந்தநாள் காணும் விஜய், அடுத்த ஐந்தாண்டில்...
· ஒரு படமாவது இயக்கியிருக்க வேண்டும்.
· அவர் நடிப்பில் வெளிவந்த ஒரு படமாவது, நடிப்புக்காக தேசிய விருதுக்கு மோதியிருக்க வேண்டும்.
· தான் நடிக்காமல், இயக்காமல் (தனுஷ், ஷங்கர் மாதிரி) இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘காக்கா முட்டை’ மாதிரி பேசப்படக்கூடிய இரண்டு மூன்று படங்களையாவது தயாரித்திருக்க வேண்டும்.
வரலாற்றில் வாழவிரும்பினால் விஜய் இவற்றை பரிசீலிக்கலாம். வசூல்தான் டார்கெட், விசில்தான் லட்சியமென்றால் வழக்கமாக ஆடும் கபடியையே யூ கண்டினியூ விஜய்!