2 ஜூன், 2015

கொஞ்சம் மெய், நிறைய பொய்..

இந்தியா சுதந்திரம் வாங்கிய அதே ஆண்டில் அமெரிக்காவின் CBS ரேடியோவில் ஒலிபரப்பான candid microphoneதான் உலகின் முதல் ரியாலிட்டி கண்டெண்ட். அமெரிக்க குடிமகனான Allen funtதான் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்.

Candid microphone என்கிற வானொலி நிகழ்ச்சி 1950களில் Candid camera என்கிற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் ABC மற்றும் NBC தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. கேமிராவை மறைவான இட்த்தில் வைத்துவிட்டு சாதாரண மக்களின் அன்றாட சுவாரசியங்களைப் படம் பிடிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம். ஒரு தொகுப்பாளர் களத்தில் புகுந்து விசித்திரமாக நடந்துக் கொள்வதும் அதைப் பார்க்கும் பொதுமக்களின் விசேஷ ரியாக்‌ஷன்களை படம் பிடிப்பதே நோக்கம். முழுக்க முழுக்க நகைச்சுவை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி இது.

அமெரிக்க அதிபராக இருந்த ஹேரி ட்ரூமென் வீதியில் போகிறவர்களிடம், “மணி என்ன?” என்று கேட்கும்போது அதை வேடிக்கை பார்க்கும் பொது மக்களின் வினோத முகபாவங்கள் மிகப் பிரபலம்.

1950களில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு 2004ஆம் ஆண்டு வரை தொடர்ந்திருக்கிறது. 1960களில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் குடும்பங்களில் அன்றாட நிகழ்வுகளை படம் பிடித்து நிகழ்ச்சியாக்கும் பைத்தியம் பிடித்தது. The American Family என்ற நிகழ்ச்சியை ஒரு தொடக்கம் எனலாம். 1970களில் காவல்துறையின் நடவடிக்கைகளை நோக்கி ரியாலிட்டி கேமரா திரும்பியது. அதுவரை நகைச்சுவையை மட்டுமே மையப்படுத்திய ரியாலிட்டி தயாரிப்பாளர்கள் கொலை – கொள்ளை – விசாரணை என இன்னொரு மைதானத்தில் விளையாடத் தொடங்கினார்கள். பல மணி நேரம் படம் பிடிப்பதை எடிட்டிங் செய்வதுதான் பெரிய தலைவலியாக இருந்தது. 1980களில் கண்டறியப்பட்ட புதிய படத்தொகுப்பு தொழில்நுட்பங்கள் இந்தப் பணியையும் எளிமையாக்கின.

1990களில்தான் ரியாலிட்டி வட்டத்திற்குள் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் பிறந்தது. Pop idol என்ற talent reality நிகழ்ச்சி உருவாக்கிய பாட்டுப் போட்டி மேடையும் நாட்டாமை நடுவர்களும் ஆரவார பார்வையாளர்களும் இன்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்படும் வடிவமாகி விட்டது.

இந்த நிகழ்ச்சியைத் தயாரித்த Freemantle Media என்கிற தயாரிப்பு நிறுவனம், நரசிம்மராவின் புதிய பொருளாதார கொள்கையின் உதவியோடும் தனியார் தொலைக்காட்சிகளின் விஸ்வரூப வளர்ச்சியைப் பயன்படுத்தியும் 2004-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் Pop Idol என்கிற தங்கள் நிகழ்ச்சியின் இந்தியப் பிரதியான Indian Idolஐ தயாரித்து அரங்கேற்றியது. தனி நிறுவனமாக இல்லாமல் பல துணை தயாரிப்பு நிறுவனங்களின் உதவியோடு இதைச் செய்தது. தயாரிப்பு அவ்வப்போது கைமாறினாலும் Idol நிகழ்ச்சி வடிவத்தின் உரிமை அவர்களுடையதே. Indian Idol நிகழ்ச்சி வந்த அதே வழியில் India’s got talent நிகழ்ச்சியும் வந்தது. வட இந்திய ஊடகங்கள் உள்வாங்கிய வெளிநாட்டு நிகழ்ச்சி வடிவங்கள் விற்பனை மாறி ஒப்பனை மாறி சப்தஸ்வரங்கள், சூப்பர் சிங்கர், மானாட மயிலாட, தமிழகத்தின் சேம்பியன் என்று தமிழ் தொலைக்காட்சிகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது.

ஸ்டாப்.. ஸ்டாப்.. ஸ்டாப்..

நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது விக்கிப்பீடியா தரும் விவரங்கள் அல்ல. ஒரு தமிழ் நாவலின் கதைப்போக்கில் கிடைக்கக்கூடிய தகவல்கள்.
நாவல் என்பது, சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள், சம்பவங்களை உள்ளடக்கிய நீண்ட கதை வடிவம் என்கிற நீண்டகால தமிழ்நாவல் மரபு உடைந்துக் கொண்டிருப்பதன் முக்கியமான அடையாளமாக கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ‘மெய்நிகரி’யை பார்க்கலாம்.

இன்றைய தலைமுறைக்கு கதை கேட்பதை/வாசிப்பதை காட்டிலும், தகவல்களை பெறுவதில் ஆர்வம் அதிகம். மெகாசீரியல்களுக்கு மவுசு குறைந்து ரியாலிட்டி ஷோ-க்கள் தொலைக்காட்சிகளில் பெருகிவருவதை இதன் நீட்சியாக பார்க்கலாம். தகவல்களை தெரிந்துக் கொள்வது என்பது வெறுமனே பரிட்சைக்கு படிப்பதாக இல்லாமல், பொழுதுபோக்கே அதுதான் எனக்கூடிய infotainment சூழல் தொடங்கியிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த மாற்றம் இயல்பானதுதான்.

‘காட்சி ஊடகம் பற்றிய கதை விவாதம்’ என்று ‘மெய்நிகரி’, அதை வாசிக்கும் வாசகர்களுக்கு முன்வைக்கப்படுகிறது.

காட்சி ஊடகம் என்று சொல்லக்கூடிய தொலைக்காட்சி துறை குறித்த சித்தரிப்பு தமிழ் நாவல்களில் மிகக்குறைவு. சமீபத்தில் விநாயக முருகன் எழுதி வெளிவந்திருக்கும் ‘சென்னைக்கு மிக அருகில்’ என்கிற நாவலில் ஒரு பகுதி காட்சி ஊடகத்தை பிரதானப்படுத்துகிறது. எனினும் அந்நாவலின் மையம் வேறு எனும்போது இப்பகுதி மிகக்குறைந்த அளவிலான வெளிப்பாட்டையே கொண்டிருக்கிறது.

விநாயக முருகன் நேரடியாக தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றியவர் அல்ல என்பதால் தான் கேள்விப்பட்ட, வாசித்த, யூகித்த விஷயங்களை புனைவாக்கி இருக்கிறார். ரியல் எஸ்டேட் விளம்பரங்களின் பின்னணி அரசியலை சாக்காக வைத்துக்கொண்டு அதில் சம்பந்தப்பட்ட பாத்திரங்களை நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறார். கூடுதலாக சில ஆண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக பேசப்பட்ட நித்யானந்தா வீடியோ விவகாரத்தை தன்னுடைய புனைவின் சட்டகங்களுக்குள் நுழைக்க முயன்றிருக்கிறார். அந்த வீடியோ ஏன் வெளிவந்திருக்கலாம் என்கிற தன்னுடைய யூகத்தை நாவலின் களத்துக்கு ஏற்புடையதாக மாற்ற முயன்றிருக்கிறார்.
‘மெய்நிகரி’ முற்றிலும் வேறான களத்தில் இயங்குகிறது. கபிலன் வைரமுத்துவுக்கே தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், அவருக்கு இத்துறை குறித்த துல்லியமான சித்தரிப்புகளை உருவாக்க முடிகிறது. ‘இடியட் பாக்ஸ்’ எப்படி கோடிக்கணக்கானவர்களை இடியட்டுகள் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்கிற தேவரகசியத்தை வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார். ஒருவகையில் சொந்த செலவில் சூனியம் என்றுகூட சொல்லலாம். சினிமா எப்படி எடுக்கப்படுகிறது என்பதைக் குறித்து சினிமா எடுக்கப்படுவதை எம்.ஜி.ஆர் அந்த காலத்தில் கடுமையாக எதிர்த்த சம்பவங்கள் ஏனோ நினைவுக்கு வருகின்றன.

டெரன்ஸ் பால், மெய்நிகரியின் நாயகன். மாடப்புறா தொலைக்காட்சியில் எடிட்டராக பணியாற்றியவன். டயரி எழுதுவதை போல தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை காட்சித் தொகுப்பாக ஆவணப்படுத்தி பத்திரப்படுத்தும் பழக்கம் கொண்டவன். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவன் எடுத்த புகைப்படங்கள், செல்போன் வீடியோக்களை எடிட் செய்து அடுக்குகிறான். இந்த படத்தின் பின்னணியாக தன்னுடைய voice over மூலம் வருணனை தருகிறான். டெரன்ஸ் பாலின் குரலாகவே ‘மெய்நிகரி’ வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாடப்புறா தொலைக்காட்சி ஒரு புதிய ரியாலிட்டி ஷோவை உருவாக்க முயற்சிகளை முன்னெடுக்கிறது. அதன் பொறுப்புகளின் ஒரு பகுதி டெரன்ஸிடம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் பணியாளர்களை பயன்படுத்தாமல், இதற்கென்று ஒரு புதிய குழுவை டெரன்ஸ் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நேர்முகத்தேர்வு நடத்தி ராகவன், பெனாசிர், மானசா, நிலாசுந்தரம் ஆகியோரை தேர்ந்தெடுத்து தனக்கான குழுவை உருவாக்குகிறான்.

இந்த குழு புதிய ஷோவுக்கான ஐடியாக்களை உருவாக்குவதில் தொடங்கி, அது தொடர்பான நிர்வாகத்தின் சம்பிரதாயங்கள் முடிந்து, நிகழ்ச்சியை வடிவமைப்பது, பின்னணி பணிகள், படப்பிடிப்பு, எடிட்டிங் என்று ஒரு ரியாலிட்டி ஷோ எப்படி உருவாகிறது என்பதன் முழுமையான செய்முறையே மெய்நிகரி நாவல்.

இதற்கிடையே டெரன்ஸுக்கு, அந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் பெனாசிர் மீது ஏற்படும் காதல். ராகவனுக்கும், டெரன்ஸுக்கும் நடக்கும் சண்டை. குழுவிலேயே உள்கை ஒன்று செய்யும் துரோகம். பொதுமக்கள் அரசல் புரசலாக கேள்விப்பட்டு பேசிக்கொள்ளும் தொலைக்காட்சித் துறை பாலியல் சுரண்டல்கள். நிறுவன உரிமையாளர்களுக்கு இடையேயான ஈகோ மோதல். அல்லக்கைகளின் ஆட்டம் என்று நாவலின் ஒவ்வொரு பக்கமும் கதையின் போக்கில் தகவல்களை அள்ளித் தெளித்துக்கொண்டே போகிறது.

சர்வதேச அளவிலேயே படைப்பாளிகளுக்கும், மார்க்கெட்டிங் ஆட்களுக்குமான மோதல்தான் இன்றைய உலகின் அறிவிக்கப்படாத மூன்றாம் உலகப்போர். எல்லா துறைகளிலும் கிரியேட்டிவ்வாக சுதந்திரமாக சிந்திப்பவர்களுக்கும், கூவி கூவி சந்தையில் விற்பவர்களுக்கும் நடக்கும் சண்டை மீடியாவில் சற்றே அதிகம்.

நிகழ்ச்சியின் தலையெழுத்தை மட்டுமின்றி, அதை உருவாக்கிய கிரியேட்டர்களின் விதியையும் இன்று மார்க்கெட்டிங் தயவுதாட்சணியமின்றி தீர்மானிக்கும் போக்கினை தகுந்த சம்பவங்களின் துணையோடு மிக எளிமையாக முன்வைக்கிறார் கபிலன். Programs are effective support systems for the sponsor economy என்பதுதான் இன்று தொலைக்காட்சிகளை ஆளக்கூடிய கருத்தாக்கம் என்றால் படைப்பாளியின் இடம் இங்கே எதுவென்று நாமே புரிந்துக்கொள்ள வேண்டியதுதான்.

‘டி.ஆர்.பி’ என்கிற சொல் அதன் அர்த்தம் புரிந்தோ, புரியாமலேயோ இன்று அனைவராலும் உச்சரிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதன் தொடர்பிலான TAM குறித்த விளக்கமும் மிக விரிவாக இந்நாவலில் வாசிக்க கிடைக்கிறது.

இந்தியாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று கணக்கிடுவதற்கு தூர்தர்ஷன் ஆரம்பத்தில் ஏற்படுத்திய அமைப்பே DART – Doordarshan Audience Research Team. முப்பத்தி மூன்று நகரங்கள் மட்டுமே அதன் இலக்கு. தொழில்நுட்பம் வளராத அந்த காலக்கட்டத்தில் மனிதர்களை மனிதர்களே சந்தித்து நேரடியாக பேசி ஒரு கணக்கீடு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

1994ல் Indian National Television Audience Measurement என்கிற INTAM, 1997ஆம் ஆண்டு A.C.Nielsen துணையோடு உருவான TAM – என இரண்டு அமைப்புகள் TAM என்கிற பெயரிலேயே ஒருங்கிணைந்து பார்வையாளர்கள் எண்ணிக்கையை கணக்கிடும் தனிபெரும் தனியார் நிறுவனங்களாக வளர்ந்தது. இவர்கள் கணக்கீட்டுக்கு people meter என்கிற கருவியை பயன்படுத்தியே ஒரு நிகழ்ச்சியின் வெற்றி, தோல்வியை கணக்கெடுக்கிறார்கள். இவர்கள் அறிவிக்கும் முடிவை நம்பிதான் இந்தியாவில் தொலைக்காட்சி உலகமே இயங்குகிறது. தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் தருபவர்களும் இவர்களது கணக்கெடுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே பல்லாயிரம் கோடி ரூபாயை செலவிடுகிறார்கள். இது குறித்த முழுமையான வரலாற்றை இரண்டே பக்கங்களில் கதாபாத்திரங்கள் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளும் வசனங்களில் வாசகர்களுக்கு புரியவைக்கிறார் கபிலன்.

நாவலின் கடைசி ஒன்றரை பக்கம் பக்கா மங்காத்தா – இந்த ஒருவரி விமர்சனத்துக்கு அர்த்தம் புரியவேண்டுமானால் நீங்கள் நாவலை முழுக்க வாசித்துதான் ஆகவேண்டும்.
டிவி என்கிற துறை இன்று கனவுத்துறையாக மாறிக் கொண்டிருக்கிறது. வெறுமனே டிவி பார்த்து டிவியில் வேலை பார்க்க ஆசைப்படுகிறார்கள் நம் இளைஞர்கள். எப்படியோ அடித்து பிடித்து வேலைக்கு சேர்ந்தபிறகுதான் நினைத்த மாதிரியாக இல்லையே என்று நொந்துப் போகிறார்கள். அம்மாதிரி இளைஞர்களுக்கு ஒரு டிவி நிறுவனம் எப்படி செயல்படும் என்று பொறுமையாக தம்மும், டீயும் சாப்பிட்டபடியே கதையாக சொல்கிறார் கபிலன்.

இந்த நாவலுக்கு என்று எந்தவிதமான முஸ்தீபுகளும் செய்துக் கொள்ளாமல், நடையைப் பற்றியெல்லாம் ரொம்ப மெனக்கெடாமல், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பயன்படுத்தும் freakyயான தமிழையே பயன்படுத்துகிறார்.
தமிழிலும் சேத்தன் பகத்துகள் சாத்தியமே என்கிற நம்பிக்கை ஒளிக்கீற்றை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ‘மெய்நிகரி’ அளிக்கிறது.



நூல் : மெய்நிகரி
எழுதியவர் : கபிலன் வைரமுத்து
பக்கங்கள் : 152
விலை : ரூ.125
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
177/103, முதல் தளம், அம்பாள்’ஸ் பில்டிங்,
லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14
போன் : 044-42009603

குறிப்பு : இந்த நாவலுக்கென்றே ஒரு பிரத்யேக இணையத்தளத்தை கபிலன் உருவாக்கியிருக்கிறார். ஆர்வமிருப்பவர்கள் பார்க்கலாம் www.meinigari.com

(நன்றி : தமிழ் மின்னிதழ்)

2 கருத்துகள்:

  1. நூல் அறிமுகத்திற்கு நன்றி நண்பரே! - இராய செல்லப்பா, சென்னை

    பதிலளிநீக்கு
  2. முகநூலில் முகத்தை பாற்க முடியவில்லையே..பதிலை எதிர்பார்க்கிறேன் -வில்லவன்கோதை

    பதிலளிநீக்கு