9 ஜூன், 2015

வசூல் வேட்டை @ காக்கா முட்டை

‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் இறுதிக் காட்சி கம்யூனிஸ்டுகளுக்கும், ஏழைப் பங்காளர்களுக்கும், ஃபேஸ்புக் புரட்சியாளர்களுக்கும் கடுமையான கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம். பீட்ஸா கடையின் ஓனரான பாபு ஆண்டனி மிக தந்திரமாக பிரச்சினையை முடித்துக் கொண்டது முதலாளித்துவ பயங்கரவாதத்தின் தன்மைக்கு ஒரு துண்டு பீட்ஸாவாக எடுத்துக் காட்டப்பட்டிருப்பதாக நினைக்கலாம்.

மக்கள் தொடர்புத்துறையில் crisis management என்றொரு கூறு உண்டு. ஒரு நிறுவனம் பல்வேறு வகையிலான இழப்புகளை சந்திக்கும். பொதுமக்களிடம் ஒரு நிறுவனம் தன்னுடைய நல்ல பெயரை (goodwill) இழப்பது என்பது அந்நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய சவால். அப்போது அந்நிறுவனத்தின் மக்கள் தொடர்பாளர்கள் அந்த crisisஐ எப்படி handle செய்யப் போகிறார்கள் என்பதே crisis management.

‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் க்ளைமேக்ஸில் சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்கு சிம்புவுக்கு இணையான மரியாதை கொடுத்து, பீட்ஸா ஊட்டும் காட்சிக்கு தியேட்டரில் நல்ல சிரிப்பலை. உண்மையில் இதுபோன்ற பிரச்சினையில் ஒரு நிறுவனம் மாட்டிக் கொண்டால், இதைவிட சிறப்பான தீர்வு வேறெதுவுமில்லை. அனேகமாக இயக்குனர் மணிகண்டன் விளம்பர நிறுவனம் எதிலாவது பணியாற்றி இருப்பார். அதனால்தான் அவருக்கு இந்த நடைமுறையை இவ்வளவு துல்லியமாக காட்சியாக்க முடிந்திருக்கிறது.

சில பேர் இந்த காட்சி டிராமாவாக மாறிவிட்டதாக இணையத்தில் விமர்சிக்கிறார்கள். என்னுடைய பத்தாண்டு விளம்பரத்துறை அனுபவத்தில் மூன்றாண்டுகள் முழுக்க முழுக்க public relations நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். இப்படிப்பட்ட சிக்கலில் இருக்கும் பீட்ஸா கடை, இதைத்தவிர வேறெந்த முறையிலும் இந்த பிரச்சினையை கையாளாது. நாற்பத்தி ஐந்து ரூபாய்க்கு ‘மக்கள் பீட்ஸா’ ஐடியாவெல்லாம் பக்காவான PR activity.

எம்.எல்.ஏ.விடம் போவது, போலிஸுக்கு காசு கட்டி சரி செய்ய நினைப்பது, மீடியாக்கள் அச்சூழலை எப்படி கையாளக்கூடும் போன்ற சித்தரிப்புகள்தான் உண்மையில் dramatise செய்யப்பட்டிருக்கிறது. பாபு ஆண்டனி கேரக்டரின் வில்லத்தன்மைக்கு -அதாவது முதலாளித் தன்மைக்கு- கூடுதல் அழுத்தம் சேர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அவை சேர்க்கப்பட்டிருக்கலாம்.

Crisis management தொடர்பாக உள்ளூர், அயல்நாடுகளின் கேஸ் ஸ்டடிகளை பலநூறு கணக்கில் படித்திருக்கிறேன். Coca cola நிறுவனம் எதிர்கொண்ட சிக்கல்களை அவர்கள் தீர்த்துவைத்த முறையெல்லாம் படுசுவாரஸ்யமாக இருக்கும்.

ஆனால், கூடங்குளம் அணுவுலை பிரச்சினையை, நியூக்ளியர் ஃபவர் கார்ப்பரேஷன் ஆஃப் இண்டியா லிமிடெட் நிறுவனம் எப்படி கையாண்டது என்பதுதான் இதுவரை இந்திய அளவில் நானறிந்த crisis managementகளிலேயே மிகச்சிறந்தது. மிக சரியான விளம்பர நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, கச்சிதமான வழிமுறைகள் வாயிலாக இதுவரை கண்டிராத மாபெரும் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தார்கள். என்னென்ன செய்தார்கள், யார் யாரை குறிவைத்து எப்படி எப்படி வீழ்த்தினார்கள் என்று விலாவரியாக விளக்க ஆரம்பித்தால் ஏகப்பட்ட சேகுவேராக்களின் முகங்களில் அப்பிக்கொண்டிருக்கும் நீலச்சாயம் வெளுக்கும். ’காக்கா முட்டை’ படத்தில் வரும் ரமேஷ் திலக், அவரது அல்லக்கையான பன்னிமூஞ்சி வாயனெல்லாம் யாரை சித்தரித்து என்று நினைக்கிறீர்கள். நாமறிந்த பிரபலமான போராளிகளைதான் அவை குறியீடாக சொல்கின்றன.

‘காக்கா முட்டை’ திரைப்படம் எதையும் எதிர்ப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ எனக்கு தோன்றவில்லை. இது இது இப்படி இப்படி இருக்கிறது என்று பிரச்சினைகளை தொட்டுக் காட்டுகிறதே தவிர, ஏழைகள் மீதான பச்சாதாபத்தை ஏற்படுத்தவோ, புரட்சி பேசவோ அதன் இயக்குனர் முயலவில்லை.

ஆனால்-

படம் பார்த்தவர்களுக்கு குற்றவுணர்ச்சி தோன்றுகிறது. காக்கா முட்டைகளுக்கு பரிதாபப்படும் இவர்களில் ஒருவர் கூட, வாழ்க்கையில் இதுவரை ஒரே ஒரு காக்கா முட்டைக்கு பீட்ஸா என்ன.. பன்னும் டீயும் கூட வாங்கித்தராதவர்களாகவே இருப்பார்கள். உண்மையைச் சொன்னால் ஜீரணிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். உண்மையில் நமக்கு (அதாவது நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு) ஏழைகள் மீது பரிதாபமெல்லாம் எதுவுமில்லை. ‘காக்கா முட்டை’ மாதிரி சந்தர்ப்பங்களில், அவர்களுக்காக நெகிழ்வதெல்லாம் சும்மா நடிப்புதான். படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் முதலாளி பாபு ஆண்டனிக்கும், படம் பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் ஏழ்மையை கடைபரப்பி ஸ்டேட்டஸ் போட்டு லைக்கு அள்ளுபவர்களுக்கு வித்தியாசமெல்லாம் பெரிதாக எதுவுமில்லை. நாமும் பீட்ஸா கடை ஓனராக இருந்தால் இப்படிதான் நடந்துக் கொள்வோம்.

இந்த நடுத்தர வர்க்கத்தின் குற்றவுணர்ச்சியை மிகச் சரியாக அறுவடை செய்வதாலேயேதான் ஏழைகளை பற்றி பேசும் ஏழைப்படம் வசூலில் கோடி, கோடியாக கொட்டி குவிக்கிறது. முன்னூறு ரூபாய்க்கு பீட்ஸா வாங்கி சாப்பிட முடியாத நிலையில் இருப்பவர்கள் என்று இப்படம் சுட்டிக்காட்டும் விளிம்புநிலை காக்கா முட்டைகள் அண்ணாசாலை நெடுக வானுயர்ந்த கட்டிடங்களுக்கு பின்னால் அமைந்திருக்கும் சேரிகளில் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தங்களைப்பற்றி எடுக்கப்பட்ட இந்த படத்தைக் காண தேவியிலும், சத்யமிலும் நூற்றி இருபது ரூபாய் செலவு செய்கிறார்கள். ஒவ்வொரு திரையரங்கிலும் பத்து ரூபாய் டிக்கெட் குறைந்தது பத்து சதவிகிதம் தரப்பட வேண்டும் என்கிற விதியை காக்கா முட்டைக்கு மட்டுமாவது திரைத்துறையினர் கறாராக கடைப்பிடித்திருக்கலாம்.

ஏழ்மையை நல்ல பிசினஸாக மாற்ற முடியும் என்கிற சூத்திரத்தை காக்கா முட்டை கற்றுத் தந்திருக்கிறது. முன்பு, ‘வழக்கு எண் பதினெட்டு’க்கு இந்த விஷயத்தில் சுமாரான வெற்றிதான். விளிம்பு நிலைக் கதைகளை கையில் வைத்துக்கொண்டு அடுத்த ஓராண்டுக்கு வரிசை கட்டி படங்கள் வரப்போகின்றன. படம் பார்த்துவிட்டு உச்சு கொட்டவும், ஃபேஸ்புக்கில் ‘சாட்டையடி சகோதரி’ சமூக ஸ்டேட்டஸ்கள் போடவும் நிறைய சந்தர்ப்பங்கள் நமக்கு கிடைக்கும். அடுத்து கொஞ்ச காலத்துக்கு கார்ப்பரேட் நிறுவன பணியாளர்கள் CSR ஆக்ட்டிவிட்டிகளில் கூடுதல் முனைப்பாக ஈடுபடுவார்கள்.

5 கருத்துகள்:

  1. Dear Mr Krishna,
    Rightly said.
    You are among the few writers who convey without mincing the words.
    I like it.It is another story that I too belong the same category of slightly better middle class not caring for the real poor and needy.
    But, having said that, I also want to mention here that I was among the same category in my childhood. Always longing to get what the other cousins got. I was always the poor cousin tagging along. Only due to some positive steps like concentrating on studies and indulging in small, but legal activities, did I, to some extent come up. Poverty is NOT a curse, like darkness, it is only a state. Like how light dispels darkness, prosperity can wipe of poverty if approached properly. Like they say, only past poverty can be a status symbol, not in the present tense.
    Regards

    Shankar

    பதிலளிநீக்கு
  2. ’காக்கா முட்டை’ படத்தில் வரும் ரமேஷ் திலக், அவரது அல்லக்கையான பன்னிமூஞ்சி வாயனெல்லாம் யாரை சித்தரித்து என்று நினைக்கிறீர்கள். நாமறிந்த பிரபலமான போராளிகளைதான் அவை குறியீடாக சொல்கின்றன.

    Who are they?

    பதிலளிநீக்கு
  3. பாஸ் நீங்க எதுக்கு இந்த படத்த பாத்தீங்க. ஆந்திரா பொரி-னு ஒரு தெலுங்கு படம் வந்திருக்கு அந்த படத்த பாத்துட்டு விமர்சனம் எழுத வேண்டியது தானே. தமிழில் நல்ல படமே வருவதில்லை-னு புலம்ப வேண்டியது. யாராவது நல்ல படம் எடுத்தா நொட்ட சொல்ல வேண்டியது.

    பதிலளிநீக்கு