6 மார்ச், 2018

கமலும், ரஜினியும் திமுகவுக்கு தடைக்கல்லா?

நியாயமாக பார்க்கப் போனால் ரஜினியையும், கமலையும் எதிர்க்க வேண்டியவர்கள் திமுகவின் பரமவைரிகளான பார்ப்பனர்களும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான பாஜகவும், திமுகவுடன் பங்காளிச் சண்டை போடும் அதிமுகவினரும்தான்.

ஆனால் -

எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் திமுகவினர்.

அரைநூற்றாண்டுக் காலமாக தமிழக வாக்கு அரசியலின் களநிலவரம் என்ன?

திமுகவுக்கு என்று சராசரியாக எப்போதும் 30% வாக்கு வங்கி உண்டு. கூட்டணி பலத்தாலோ அல்லது சூழல்களின் காரணமாகவோ மேலே 10 முதல் 20 சதவிகிதம் வரை கூடுதலாக வாங்கும்போதெல்லாம் திமுக ஆட்சியை கைப்பற்றும்.

திமுக எதிர்ப்பு (குறிப்பாக கலைஞர் எதிர்ப்பு) வாக்கு வங்கி என்றும் ஒன்று உண்டு. அது திமுக வாக்கு வங்கியைவிட எப்போதும் கூடுதல். அந்த வங்கி சிதறாமல் consolidate ஆகும்போதெல்லாம் அதிமுக வெல்லும்.

இதை எம்.ஜி.ஆரும், ஜெ.வும்தான் நன்கு உணர்ந்தவர்கள். திமுகவுக்கு என்று இருப்பதை போன்ற முரட்டுத்தனமான தொண்டர்படை விசுவாசம், அதிமுகவுக்கு இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள். தங்களுடைய இந்த பலவீனம், திமுகவின் அந்தந்த தேர்தல்கால பலவீனங்களைவிட குறைவான பாதிப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மட்டுமே அவர்களுடைய தேர்தல் strategy.

அதிமுக எப்போதாவது இதை செய்தோம், அதை செய்தோம், இதை செய்யப் போகிறோம் என்று வாக்கு கேட்டு பார்த்திருக்கிறீர்களா? சம்பிரதாயத்துக்கு என்றுதான் ஒரு தேர்தல் அறிக்கையையே சமர்ப்பிப்பார்களே தவிர, வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லாத மரக்கட்டை மாதிரியான இயக்கம் அது. தமிழகத்தில் தேர்தல் அறிக்கை என்பதை சீரியஸாக எடுத்துக் கொண்டு தயாரிக்கும் இயக்கங்கள் திமுகவும், பாமகவும் மட்டும்தான்.

இப்போது ரஜினி, கமலுக்கு வருவோம்.

திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் செய்ய வேண்டுமானால் திமுக எதிர்ப்பு வாக்குகள் யாருக்கோ consolidate ஆக விழவேண்டும். அப்படி பெறுவதற்கான வாய்ப்பு சசிகலா தலைமையிலான அதிமுகவுக்குதான் இருந்தது. பாஜகவின் சித்து விளையாட்டால் அந்த வாய்ப்பு பறிபோனது. எடப்பாடி - ஓபிஎஸ் அணியினர், தினகரனைவிட கூடுதல் வாக்கு வாங்கதான் மெனக்கெட முடியுமே தவிர திமுகவை எதிர்க்குமளவுக்கு செல்வாக்கு கொண்டவர்கள் இல்லை. தேமுதிகவை பொறுத்தவரை அது 6 முதல் 8 சதவிகிதம் என்று தனக்கான அதிகபட்ச வரையறையில் சிக்கிக் கொண்டது. கடந்தகால தேர்தல் கூட்டணிகளால் விளைந்த கசப்பான அனுபவங்களால் தேமுதிகவின் வளர்ச்சி அப்படியே நின்றுவிட்டது.

தினகரனை பொறுத்தவரை சிந்தாமல் சிதறாமல் அதிமுகவை கைப்பற்றி இருந்தால் மட்டுமே, கிராமக் கிளை அளவிலும் நிர்வாகப் பலம் கொண்ட திமுகவை எதிர்த்து நிற்க முடியும்.

கம்யூ., பாஜக உள்ளிட்டவர்களெல்லாம் இங்கே ஒப்புக்குச் சப்பாணிகள். பாமக, தனி ஆவர்த்தனம். பாமகவால் வடமாவட்டங்களில் கணிசமான தொகுதிகளில் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியும், ஆனால்- அது neck to neck தேர்தல்களில்தான்.

திமுகவின் எதிர் வாக்குகள் ஏற்கனவே இப்படி பல தரப்பாக சிதறிக்கிடக்கும் நிலையில் புதியதாக ரஜினியும், கமலும் வருவது என்பது எதிர் திமுக வாக்குகளில் மேலும் சேதாரம் ஏற்படுத்தக்கூடுமே தவிர, அது திமுகவுக்கான பாதிப்பாக அமையாது.

மாறாக, திமுக பெரிய கூட்டணியை ஏற்படுத்த வேண்டிய அவசியமின்றி தன்னுடைய சொந்த வாக்கு வங்கி பலத்தாலேயே சுலபமாக வெல்லக்கூடிய வேலையைதான் ரஜினியும், கமலும் செய்கிறார்கள்.

நிலைமை அப்படியிருக்க, ரஜினிக்கும் கமலுக்கும் திமுகவினர் ஏன் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?

ஏனெனில், அதுதான் திமுகவினரின் பரம்பரைப் பண்பு.

ஈ.வி.கே.சம்பத் காலத்திலிருந்தே எந்த புதுக்கட்சி தொடங்கப்பட்டாலும் ‘எவனாயிருந்தாலும் வெட்டுவோம்’ பாணியில் எதிர்த்துக் கொண்டே இருப்பது திமுகவினரின் வாடிக்கை. திமுகவின் அடிப்படையான திராவிடக் கொள்கைகள், பெரும்பான்மையான மக்களுக்கு எதிரான sentimentகளை கொண்டிருப்பதால் தேர்தல் அரசியலில் குதித்ததிலிருந்தே ஒருமாதிரி பதட்டத்தில்தான் இருப்பார்கள்.

தமிழகத்தில் நடக்கும் சிறிய சிறிய சலசலப்புகளுக்கும்கூட, நம் இயக்கம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சிக்கொண்டே கடுமையாக ரியாக்ட் செய்வார்கள். குஞ்சுகளை கூட்டில் விட்டு விட்டு இறை தேடப் பறந்த தாய்ப்பறவையின் பதட்டம் எப்போதுமே திமுக தொண்டர்களுக்கு இருப்பதால்தான், ஒரு பிராந்திய இயக்கமாக இருந்தும்கூட கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இந்த இயக்கம் அசைக்க முடியாத செல்வாக்கோடு இங்கே விளங்குகிறது.

திமுக என்கிற கட்சியை ஆரம்பத்தில் அண்ணா கட்டிக் காத்தார், பின்னர் கலைஞர் காப்பாற்றினார் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அக்கட்சியின் தலைவர்களைவிட தங்கள் உள்ளங்கைகளுக்குள் வைத்து அவ்வியக்கத்தை பாதுகாப்பவர்கள் தொண்டர்களே. தொண்டர்களுக்கு மேலும் எவ்வித சுமையையும் ஏற்படுத்தாமல் கட்சிக்கு தாராளமான பொருளாதார வசதியும், துல்லியமான நிர்வாகக் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தியதே கலைஞரின் சாதனை.

‘நான் சூரியன் கட்சி’ என்று பெருமையாக சமூகத்தில் சொல்லிக் கொள்ளக்கூடிய பெருமிதத்தை உருவாக்கியது, அண்ணாவின் சிந்தையில் உதித்த சித்தாந்தப் பின்புலம். இதை தகர்க்க கமல், ரஜினியால் மட்டுமல்ல. மோடியும், அமித்ஷாவும் இங்கே வந்து அரசியல் செய்தாலும்கூட முடியாது.

4 கருத்துகள்:

  1. பெயரில்லா12:53 PM, மார்ச் 06, 2018


    அப்படிப்பட்ட திமுக தொண்டர்கள் எண்ணிக்கை மற்றும் வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது என்பதே உண்மை நிலை. அதனால் தான் 2016 தேர்தலுக்கு முன்னர் 2015 இல் 'நமக்கு நாமே ' பயணங்களில் ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆட்சியின் தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

    பதிலளிநீக்கு
  2. TN already suffered on ignoring DMK for 13 years. ADMK spoiled TN and screwed themselves because of lack of idealism and principles. TN people deserved for current situation and they are primary reason for their current situation.

    பதிலளிநீக்கு
  3. Very well written. Thoughts that actually make sense !!!!

    பதிலளிநீக்கு