9 மார்ச், 2018

எதற்கு சினிமா ஸ்ட்ரைக்?

கடந்த இரு வாரங்களாக தமிழ் சினிமா உலகம் ஸ்ட்ரைக்கால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. புதிய படங்கள் வெளிவராததால், திரையரங்குகள் பழைய படங்களை போட்டு ஒப்பேத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், டிஜிட்டல் ஒளிப்பரப்புக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து இந்த வேலைநிறுத்தத்தை நடத்தி வருகிறார்கள்.

அதென்ன டிஜிட்டல் ஒளிப்பரப்பு?

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பிலிம் புரொஜெக்டர்களைதான் நம் தியேட்டர்களில் பயன்படுத்தி வந்தோம். பிலிம் பிரிண்ட், விலை மிகவும் அதிகம். தோராயமாக ஒரு பிரிண்டுக்கு 60,000 முதல் 80,000 வரை (பிலிமின் தரத்தைப் பொறுத்து விலை) செலவாகும்.

அதாவது நூறு தியேட்டர்களில் ஒரே நேரத்தில் ஒரு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமானால் (பகல் காட்சியாக மட்டும் இருந்தாலும் சரி, நான்கு காட்சிகளாக இருந்தாலும் சரி) பிலிம் செலவு மட்டுமே அறுபது லட்சம் ஆகும்.

எனவேதான் ரஜினி, கமல் திரைப்படங்கள் கூட நாற்பது முதல் ஐம்பது தியேட்டர்கள் வரைதான் ரிலீஸ் ஆகிக் கொண்டிருந்தது. தமிழ் சினிமாவில் முதன்முதலாக 100 பிரிண்டுகள் போடப்பட்டதே ‘தளபதி’ படத்துக்காகதான்.

படம் எல்லா ஊரிலும் நன்றாக ஓடி வசூலைக் குவித்தால் ஓக்கே. இல்லையேல் பிரிண்டுக்காக செய்யப்பட்ட செலவு அம்பேல்தான். இந்த பிரிண்டுகளை கெமிக்கலில் போட்டு பராமரிக்கவும் தனியாக செலவழிக்க வேண்டும்.

இந்த நிலை 2005 காலக்கட்டத்தில் மாறத் தொடங்கியது. பிலிம் தேவைப்படாமல் டிஜிட்டல் முறையில் ஒளிப்பரப்பும் தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய பிலிம் புரொஜெக்டர்களை நீக்கி, புதிய டிஜிட்டல் புரொஜெக்டர்களை நிறுவி, சாட்டிலைட் மூலமாகவோ அல்லது ஹார்ட் டிஸ்க்கில் சேமித்தோ படத்தை திரையில் ஒளிப்பரப்பும் முறைதான் டிஜிட்டல் சினிமா. யூஎஃப்ஓ, கியூப் போன்றவை டிஜிட்டல் சினிமாவை கையாளும் நிறுவனங்கள்.

இந்த முறையில் பிலிமுக்கான பழைய செலவு இல்லை. மாறாக ஒரு காட்சிக்கு ரூ.325 (வரிகள் தனி) ஒளிப்பரப்புக் கட்டணமாக சம்மந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனத்துக்கு கட்டவேண்டும். இந்த முறை வந்தபிறகு 100 பிரிண்டு, 200 பிரிண்டு என்று பார்த்து பார்த்து செலவு செய்துக் கொண்டிருந்த முறை மாறியது. பெரிய நடிகர்களின் படங்களை 500 அரங்குகளில்கூட ரிலீஸ் செய்ய முடிகிறது. முதல் மூன்று நாட்களில் படம் செல்ஃப் எடுக்காவிட்டால் தூக்கிவிடலாம், பிரச்சினையில்லை. முந்தைய பிலிம் முறையில் பிரிண்ட் போட கட்டிய காசு ஆத்தில் போட்ட மாதிரிதான்.

புதிய டிஜிட்டல் முறையில் ஓர் அரங்கில் பகல் காட்சியாக ஒரு படத்தை ஒரு வாரத்துக்கு (அதாவது மொத்தம் 7 காட்சிகள்) ஓட்ட வேண்டுமென்றால் ரூ.2,275 கட்டினால் போதும். ஒரு நாளைக்கு 4 காட்சிகள் அடிப்படையில் வாரத்துக்கு 28 காட்சிகள் என்றால் ரூ.9,000. ஒரு தியேட்டரில் எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் ஓட்டிக் கொள்வேன், மொத்தமாக ஒரே தொகையை கட்டிவிடுகிறேன் என்றால் ரூ.22,500 கட்டிவிடலாம். இங்கு நாம் குறிப்பிட்டிருப்பது கியூப் நிறுவனத்தின் கட்டணம். வேறு சில நிறுவனங்களில் இது சற்றே வேறுபடலாம்.

அவ்வகையில் பார்க்கப் போனால் 500 தியேட்டர்களில் ஒரு படத்தை ரிலீஸ் செய்ய ஒளிப்பரப்புக் கட்டணமாக ஒரு கோடி ரூபாய் இருந்தால் போதும். பிலிமாக இருக்கும் பட்சத்தில் மூன்று கோடி ரூபாய் முதல் நான்கு கோடி ரூபாய் ஆகியிருக்கும். எக்ஸிபிஷனுக்கான கட்டணம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக டிஜிட்டல் ஒளிப்பரப்பு முறையால் குறைந்திருக்கிறது. பிலிமை ஒப்பிடுகையில் பளிச்சென்ற படமும், துல்லியமான இசையும் பார்வையாளர்களுக்கு கூடுதல் போனஸ்.

அப்படியிருக்க தயாரிப்பாளர்கள் ஏன் இந்த முறையை எதிர்த்து ஸ்ட்ரைக் செய்கிறார்கள்?

விளம்பர வருமானம்தான் காரணம்.

முன்பு பிலிம் முறையில் தியேட்டர்கள் இயங்கியபோது, உள்ளூர் தொழிலதிபர்களிடம் விளம்பரம் வாங்கி ஸ்லைடாக போட்டு சொற்பமாக கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

டிஜிட்டல் சினிமா வந்தபோது அதற்கான புதிய புரொஜெக்டர் உள்ளிட்ட செலவுகளை செய்ய தியேட்டர்கள் யோசித்தன. இந்த டிஜிட்டல் நிறுவனங்கள் அவர்களது செலவு சுமையில் பாதியை ஏற்றுக் கொண்டனர். அதாவது பத்து லட்ச ரூபாய் செலவாகிறது என்றால், தியேட்டர் ஐந்து லட்சம் கொடுத்தால் போதும். மீதி பணத்துக்கு அந்த தியேட்டரில் டிஜிட்டல் நிறுவனங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு இடைவேளையில் விளம்பரங்கள் போட்டு அவர்களே கட்டணம் வாங்கி சமாளித்துக் கொள்வார்கள் என்பது மாதிரி ஏற்பாடு. இந்த முறையில் பெரிய விளம்பரங்களை வாங்கி இந்தியா முழுக்க டிஜிட்டல் முறையில் படம் ஒளிப்பரப்பும் தியேட்டர்களில் விளம்பரங்களை ஒளிப்பரப்பினார்கள்.

அந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் புதிய ஒப்பந்தங்களை தியேட்டர்காரர்களோடு டிஜிட்டல் நிறுவனங்கள் செய்துக் கொண்டார்கள். விளம்பரத்தில் வரும் வருவாயை டிஜிட்டல் நிறுவனங்களும், தியேட்டர்காரர்களும் பகிர்ந்துக் கொண்டார்கள்.

இதுதான் தயாரிப்பாளர்களை உறுத்தியது. அந்த விளம்பர வருவாயில் தங்களுக்கும் பங்கு தேவை என்று உரிமைக்குரல் எழுப்பினார்கள். தயாரிப்பாளருக்கும், இடைவேளை விளம்பரங்களுக்கும் சம்மந்தமில்லை என்பது தியேட்டர் மற்றும் டிஜிட்டல் ஒளிப்பரப்பு நிறுவனங்களின் வாதம்.

ஏனெனில், ஒரு படம் என்பது ஒரு வாரமோ ஒரு மாதமோதான் தியேட்டரில் ஓடப்போகிறது. ஒரு வருடத்தின் 52 வாரங்களுக்கு வெவ்வேறு படங்களை தியேட்டர்களில் போடுகிறார்கள். சில படங்களுக்குதான் கூட்டம் வருகிறது. பெரும்பாலான படங்களுக்கு ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் நிலைமையில், ஏதோ நிவாரணத் தொகையாக எங்களுக்கு இந்த வருமானம் கிடைக்கிறது, அதில் மண்ணை போடலாமா என்று தியேட்டர் உரிமையாளர்கள் கொதிக்கிறார்கள்.

படத்துக்குள்ளேயே செய்யப்படும் விளம்பரங்களுக்கு (infilm ad, ஒரு காட்சியில் ஷாருக்கான் ஹ்யூண்டாய் கார் ஓட்டினால் அதற்கு கணிசமான கட்டணம்) தயாரிப்பாளர்கள் பெறக்கூடிய கோடிக்கணக்கான வருவாயை எங்களோடு பகிர்ந்துக் கொள்வார்களா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

தியேட்டர்காரர்களால் பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களை நேரடியாக பெறமுடியாது என்பதால், அதற்கான கட்டமைப்பையும் ஆற்றலையும் கொண்டிருக்கும் டிஜிட்டல் நிறுவனங்களோடு தங்களுக்கு கிடைக்கும் வருவாயை பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் பக்கம் நியாயமே இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. தியேட்டர்களுக்கு கிடைக்கக்கூடிய சொற்ப இடைவேளை விளம்பரங்களில் பங்கு கேட்கிறோம் என்று தெரிந்தால், மக்கள் காறி உமிழ்வார்களே என்றுதான் ‘டிஜிட்டல் கட்டணம் அதிகம்’ என்று உண்மைக்கு மாறான ஒரு தகவலை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் தரப்பால் தியேட்டர்களுக்கு ஏற்றப்படும் கடும் சுமையால் பல அரங்கங்கள் கல்யாண மண்டபங்களாகவும், ஷாப்பிங் மால்களாகவும் உருவெடுத்து விட்டன. போதாக்குறைக்கு மோடி அரசாங்கத்தின் ஜிஎஸ்டி, எடப்பாடி அரசின் உள்ளூர் வரி காரணமாக தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் குறைந்துக்கொண்டே வருகிறார்கள். சினிமாவை டிவியில் பார்த்துக் கொள்ளலாம் என்று தாய்மார்கள் ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து விட்டார்கள். தமிழ் நாட்டில் இப்போது 900 தியேட்டர்கள் இருந்தாலேயே அதிகம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை அப்படியே இரண்டு மடங்காக இருந்தது.

தியேட்டர்களுக்கு எதிரான தங்கள் செயல்பாடுகளால் சினிமாக்காரர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. எல்லா அரங்கங்களையும் மூடிவிட்டு, இவர்கள் எடுக்கும் படங்களை தெருவில் ஸ்க்ரீன் கட்டியா நமக்கு காட்டப் போகிறார்கள்?

2 கருத்துகள்:

  1. அருமையான அலசல்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. பிலிம் நெகடிவ் கட்டணம் 60000 ஆனது அந்த காலம்... இப்போ தான் டெக்னாலஜி வளர்ந்துட்டதே இப்பவும் ஏன்யா அதையே பேசிட்டு இருக்கீங்க...

    ஒரு படத்தை மாஸ்டரிங் பண்ண ஆகும் கட்டணம் மற்றும் பல வருடங்களுக்கு சர்வர்ல வச்சுக்க ஆகும் கட்டணத்த மட்டும் DSP வாங்கினால் தப்பேயில்லை, இதுல ப்ரொஜெக்டர் செலவு, பராமரிப்பு செலவு, பராமரிப்பு பண்ற qube technician யோட செலவையும் சேத்து தயாரிப்பாளர் தலையில கற்றது ரொம்ப பாவம் மை சன் ! தியேட்டர் ல இருக்குற equipments எதுவா இருந்தாலும் தியேட்டர் ஓனர்தான வாங்கணும் அதுக்கு தான வாங்குறீங்க துட்டு ?

    பதிலளிநீக்கு