27 மார்ச், 2018

ராஜரதா!

ஓர் எழுத்தாளர் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார். சில அரசியல் கட்சி இளைஞர்கள் (சாதிக்கட்சி மாதிரி காட்டுகிறார்கள்) அவரை சந்தித்து, அவர் எழுதிய நாவல் ஒன்று குறித்து மிரட்டுகிறார்கள். அந்த நாவலில் தங்கள் இனம் அவமதிக்கப்பட்டிருப்பதாக கூறி, அவரிடம் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கடிதம் வாங்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் நிஜமாகவே நடந்த இந்த சம்பவத்தை கன்னடத்தில் ஒரு காட்சியாக படமாக்கியிருக்கிறார்கள். படத்தின் பெயர் ‘ராஜரதா’.

கன்னட சினிமாவின் நியூவேவ் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவராக போற்றப்படும் அனுப் பண்டாரியின் இரண்டாவது படம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ‘ரங்கி தரங்கா’, விமர்சகர்களால் ஆஹாஓஹோவென பாராட்டப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ஆகி வசூலிலும் சாதனை படைத்தது. விருதுகளும் குவிந்தன.

‘ரங்கி தரங்கா’வில் தன்னுடைய தம்பியா நிரூப் பண்டாரியை ஹீரோவாக அறிமுகம் செய்தார். இரண்டாவது படமான ‘ராஜரதா’விலும் அவர்தான் ஹீரோ. தம்பியுடையான் ஹீரோ கால்ஷீட்டுக்கு கவலைப்படான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப் பிரச்னையின் காரணமாக கே.பி.என். நிறுவனத்தின் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் கன்னட வெறியர்களால் கொளுத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘ராஜரதா’ எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வன்முறைக்கு நேரடியாக சம்மந்தப்படாத வேறு பின்னணி பிரச்சினை இருந்திருக்கலாம் என்று இயக்குநர் கணிக்கிறார். அதாவது ‘முதல்வன்’ படத்தில் இடம்பெறும் வன்முறையை, வேறொரு பிரச்சினையை திசைமாற்ற முதல்வரே உருவாக்குவது மாதிரி.

கன்னடத்திலேயே கன்னடர்களின் வன்முறையை கண்டித்து படமெடுத்திருப்பது துணிச்சலான முயற்சிதான். அதிலும் கிளைமேக்ஸ் காட்சியின் வன்முறை பின்னணி இசையில் ‘தமிழண்டா’ என்றெல்லாம் கோஷம் ஒலிக்கிறது.

‘ராஜரதா’ என்பது பேருந்தின் பெயர். பேருந்தே கதை சொல்வதை போன்று (புனீத் ராஜ்குமார் குரலில்) திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நம்மூர் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் பாதிப்பும் இயக்குநருக்கு நிறைய இருக்கிறது.

கேட்பதற்கு சூப்பராக தெரியும் இந்த கதை, திரைக்கதையை ஐரோப்பிய ரொமான்ஸ் காமெடி பாணியில் ரொம்பவும் சுமாராகதான் எடுத்திருக்கிறார் பண்டாரி. ஒருவேளை உலகப்பட சூனாகானாக்கள், ‘ஆரண்ய காண்டம்’ மாதிரி மெச்சிக் கொள்ளலாம்.

வழக்கமாக கன்னட சினிமா ஹீரோக்கள்தான் சுமாராக இருப்பார்கள். ஆனால், இதிலோ ஹீரோயின் அவந்திகா ஷெட்டி, ‘தேவுடா’ என்று ரசிகர்கள் தலையில் துண்டு போட்டுக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் வகையில் ஆயா லுக்கில் இருக்கிறார். படம் முழுக்க லெக்பீஸ் தெரியும் வண்ணம் அவர் கவர்ச்சி காட்டியிருந்தாலும், ரசிகனுக்கு இந்த கவர்ச்சி இனம் தெரியா அமானுஷ்ய உணர்வையே முதுகுத்தண்டில் ஏற்படுத்துகிறது. குளோஸப்பில் காஞ்சனா பேய் கணக்காக பயமுறுத்துகிறார். கன்னட காஞ்சனாவான ‘கல்பனா’வின் ஹீரோயின் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறாக ஹீரோ நிரூப் பண்டாரி, அம்சமான அமுல் பேபி லுக்கில் ரசிகைகளின் கனவுகளை ஆளக்கூடிய தோற்றத்தில் சுறுசுறுவென்றிருக்கிறார்.

படத்தின் ஹைலைட்டே, ஆர்யாதான். தமிழில் நடிக்கத் தெரியாத ஹீரோ என்று பெயரெடுத்திருக்கும் இவர், கன்னடத்தில் அனாயசமான தாதாவாக நடிப்பில் பின்னுகிறார்.

அரசியல் படங்களை எடுக்க சினிமாவின் தொழில்நுட்பம் மட்டும் போதாது. அடிப்படை அரசியலும், கிராம கிளைக்கழகத்தின் வார்டு நிலவரம் வரை அறிந்திருக்க வேண்டும். இல்லையேல் ‘அரசியல்வாதிகள் என்றாலே மோசம்தான்’ என்று அமெச்சூராக ‘ராஜரதா’தான் எடுக்க முடியும், ‘அமைதிப்படை’கள் சாத்தியமாகாது போகும்.

2 கருத்துகள்:

  1. நீங்கள் பல கட்டுரைகள் எழுதி கொண்டே இருப்பதால், உங்களுக்கு வாசகர் வட்டம் பெருகி கொண்டே வருகிறது. அப்படி இருக்கையில் நீங்கள் ஏன்? google Adsense-ல் பதிவு செய்து பணம் ஈட்டவில்லை.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் பல கட்டுரைகள் எழுதி கொண்டே இருப்பதால், உங்களுக்கு வாசகர் வட்டம் பெருகி கொண்டே வருகிறது. அப்படி இருக்கையில் நீங்கள் ஏன்? google Adsense-ல் பதிவு செய்து பணம் ஈட்டவில்லை.

    பதிலளிநீக்கு