கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஜனவரி, 2015

காதல் வழியும் கோப்பை

மெரீனா பீச்

“ஏண்டா லேட்டு?” என இன்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி தவடையில் இடமும், வலதுமாக நாலு அறை காட்டினால் தான் மனசு ஆறும். அப்படியும் திருந்துகிற ஜென்மம் இல்லை அவன்.

காதல் ‘ஓக்கே’ ஆகும் வரை ஐந்து மணிக்கு வரவேண்டிய இடத்துக்கு மூன்று மணிக்கெல்லாம் வந்து தேவுடு காக்கிறான்கள். காதலித்த பிற்பாடு ஏனோதானோவென்று சலிப்பாக ஏழு மணிக்கு வருவதே இந்த காதலன்களின் பிழைப்பாகி விட்டது.

காதலன்கள் சோம்பேறிகள். காதலிகள் கிள்ளுக்கீரைகள். ஆதாம் - ஏவாள் காலத்திலிருந்தே இதைதான் வரலாறு பதிவு செய்து வருகிறது.

கரையில் அமர்ந்து அலைகளை வெறித்துக் கொண்டிருந்தாள் அனிதா. ஸ்லீவ்லெஸ் மஞ்சள் கலர் சுடிதார். சிவந்த வாளிப்பான தோள்கள் கூடுதல் கவர்ச்சியை வெளிப்படுத்துவதாக தோன்றியதால், துப்பட்டாவை சால்வை மாதிரி போர்த்தியிருந்தாள். இவனை காதலிப்பதற்கு முன்பாக தோற்றம் குறித்த பெரிய கவனம் எதுவும் அவளுக்கில்லை. கைப்பையை திறந்து உள்ளங்கையளவு அகலம் கொண்ட கண்ணாடியில் முகம் பார்த்தாள். லேசாக கோணலாய் தெரிந்த நெற்றிப் பொட்டினை ‘சென்டர்’ பார்த்து நிறுத்தினாள். காதோர கேசத்தை சரி செய்தாள். கண்களை கசக்கித் துடைத்தாள்.

‘ஸ்ஸிவ்வென’ ஆர்ப்பரித்து பால்நிற நுரைகளோடு பொங்கி வரும் அலைகள், எதிர்பாராத நொடியில் அமைதியாகி, மவுனமாக பின்வாங்குவதை எத்தனை முறை பார்த்தாலும் சுவாரஸ்யம் குறைவதில்லை.

ஒரு காதல் படத்துக்கு ‘அலைகள் ஓய்வதில்லை’ என்பதைவிட பொருத்தமான பெயர் வேறு ஏது? ‘தொட்டுத் தொடரும் பந்தம்’ என்பது அலைகளுக்கும், கரைக்குமான சரியான உறவு. அலை காதலன். கரை காதலி. அலைக்காக கரை என்றுமே காத்திருப்பதில்லை. வரவேண்டிய நேரத்தில் மிகச்சரியாக வந்துவிடுகிறது. இந்த கிருஷ்ணா மட்டும் ஏன்தான் இப்படிப் படுத்துகிறானோ?

மணி ஆறரை. இருட்டத் தொடங்கியிருந்தது. தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தைக்கு ஐந்து ஆறு வயது இருக்கும். அப்பா அம்மாவுக்கு நடுவில் ஆளுக்கு ஒரு கையை கொடுத்து, அலைகள் வரும்போதெல்லாம் குதித்துக் கொண்டிருந்தாள். இந்த குழந்தை மனம் இனி தனக்கு வாய்க்க சாத்தியமேயில்லை என்கிற யதார்த்தம் புரிந்தது. இன்னும் ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து இதே குழந்தையும், அவளது காதலனுக்காக தன்னை மாதிரியே இதே கடற்கரையில் காத்திருக்கப் போகிறாள். ஓடிப்போய் அந்த குழந்தையிடம் ‘வளர்ந்து பெரியவ ஆயிட்டேனா, எவனையும் காதலிச்சி மட்டும் தொலைக்காதேடி செல்லம்’ என்று சொல்லலாமா என்று பைத்தியக்காரத்தனமாகவும் நினைத்தாள்.


பட்டினப்பாக்கம் டாஸ்மாக்

“மச்சி மணி ஆறு ஆவுது. அனிதா வெயிட் பண்ணிக்கிட்டிருப்பா. நான் கௌம்பறேண்டா” பைக்கில் வினோத்தை இறக்கிவிட்டு சொன்னான் கிருஷ்ணா.

“அடப்பாவி. ஃபிகருக்காக நட்பை முறிச்சிடுவியாடா நீயி”

“அப்படியில்லை மச்சான். குடிச்சிட்டுப் போனா ஓவரா பிகு காட்டுறாடாஞ்”

“டேய், சொல்றதை சொல்லிட்டேன். இப்பவே ஸ்ட்ராங்கா இருந்துக்கோ. அப்புறம் கல்யாணத்துக்கும் அப்புறம் ரொம்ப ஓவரா ஏறி மிதிப்பாளுங்க. நான் படுற பாட்டை பாத்துட்டாவது திருந்துங்கடா” பர்ஸில் இருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து, சரக்கு வாங்க கவுண்டரில் நீட்டினான் வினோத்.

“வீ.எஸ்.ஓ.பி. ஹாஃப்”

“எனக்கு வேணாம் மச்சான். அவளாண்ட பிராப்ளம் ஆயிடும்” கிருஷ்ணா கெஞ்சும் குரலில் சொன்னான்.

“அடப்பாவி. இவ்ளோ சொல்லிக்கிட்டிருக்கேன். அப்போன்னா நம்ம பிரண்ட்ஷிப் அவ்ளோதானா? ஆம்பளைங்களா நடந்துக்கங்கடா அப்ரண்டீஸுகளாஞ்” நக்கல் அடித்தான்.

“சரி மச்சி. சொன்னா கேட்க மாட்டேங்குறே. எனக்கு வோட்கா மட்டும் குவார்ட்டர் சொல்லு. ஸ்மெல்லு காமிச்சிக்காம சமாளிச்சிக்கலாம்”

“குவார்ட்டர் வீ.எஸ்.ஓ.பி., இன்னொரு குவார்ட்டர் வோட்கா. ரெண்டு கிளாஸு. ஒரு கோக்கு. ஒரு ஸ்ப்ரைட்டு”

இருவரும் ‘சீயர்ஸ்’ சொல்லிக்கொள்ளும்போது நேரம் ஆறரை.

“இதோ பாரு மாமா. பக்கத்து வீட்டுப் பொண்ணு. பார்த்தே. புடிச்சிடிச்சி. உன்னை அறியாம லவ் பண்ண ஆரம்பிச்சிட்டே. அதெல்லாம் சரிதான். லவ்வுக்காக உன்னை மட்டும் நீ எப்பவும் மாத்திக்காத. எந்தப் பொண்ணும் லவ்வருக்காக அவளை மாத்திக்கறதில்லை. இதே மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமாவும், டெய்லி சரக்கடிப்போம், தம் அடிப்போம். இதையெல்லாம் நீ கண்டுக்கக்கூடாது. அதே மாதிரி ப்யூட்டி பார்லர் போறது, ஆ வூன்னா அம்மா ஊட்டுக்கு போறது இதையெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். இப்படின்னு உடனே டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸை தெளிவா பேசிடு. இல்லேன்னா நாளை பின்னே என்னை மாதிரி நீயும் புலம்பிக்கிட்டிருப்பே. என் நண்பன் நீ நல்லாருக்கணும்டாஞ்” வினோத் போதையில் அட்வைஸிக்கொண்டே இருக்க, எரிச்சலும் டென்ஷனுமாக இருந்த கிருஷ்ணா, க்ளாஸை எடுத்து ஒரே கல்ப்பில் சரக்கை முடித்தான்.

“சரக்கடிக்கிறது நம்ம பிறப்புரிமைடாஞ் இவளுங்க என்ன அதை தடுக்கறது?” அவன் அடுத்த ‘பஞ்ச்’ அடித்தான்.

’ஆமாம் தானே?’ இந்த பாயிண்ட் கிருஷ்ணாவுக்கு பிடித்திருந்தது. என்னவானாலும் சரி. சரக்கடிக்கும் உரிமையை மட்டும் காதலுக்காக தாரை வார்க்கக்கூடாது என்று உடனடியாக முடிவெடுத்தான். தம் பற்றவைத்து, நன்கு உள்ளிழுத்து, முடியை கைகளால் கோதி, தலையை மேலாக்க தூக்கி கூரையைப் பார்த்து ஸ்டைலாக புகையை ஊதினான்.

“வீட்டுக்குப் போனா கரடி மாதிரி கத்துவா ராட்சஸி. நானென்ன குடிச்சிட்டு ரோட்டுலே உழுந்து புரண்டு எழுந்தா போறேன். என் லிமிட்டு எனக்குத் தெரியாது.. எவ்ளோ குடிச்சாலும் நான் ஸ்டெடி மாமா. வாசலிலே நான் உள்ளே நுழையறப்பவே குழந்தையப் போட்டு நாலு சாத்து சாத்துவா.. இதுதான் சண்டைய ஆரம்பிக்கிறதுக்கு அவளுக்கு ஸ்டார்ட்டிங் பாயிண்ட்” அவன் அவனுடைய தரப்பு சோகத்தை புலம்பிக் கொண்டேயிருந்தான். அவனுக்கும் லவ் மேரேஜ்தான். கல்யாணத்துக்கு முன்பு ரொம்பவும் விட்டுக் கொடுத்துவிட்டதால், இப்போது பயங்கர ‘ரப்ஸர்’ என்று தினம் தினம் அழுது வடிகிறான் வினோத்.


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

பயபக்தியோடு பிரகாரத்தை சுற்றிக் கொண்டிருந்தாள் அனிதா. பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, பொமரேனியன் நாய்க்குட்டி மாதிரியே அவளை பின் தொடர்ந்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.

“எத்தினி வாட்டி சொன்னாலும் திருந்த மாட்டேயில்லை” அவள் குரலில் ஏகத்துக்கும் அதிகாரமிருந்தது.

“இல்லைப்பா.. நான் சும்மா இருந்தாலும் ஃப்ரண்ட்ஸ் கூட்டிக்கிட்டுப் போயி ஊத்திடறானுங்க. பேசிக்கலி நான் ஒரு குடிகாரன் கிடையாதுங்கிறதை நீ புரிஞ்சுக்கணும்பா”

ஏதோ சிலையை தொட்டு வணங்கி, “குடியா, நானான்னு நீ இன்னிக்கே முடிவு பண்ணிடு கிருஷ்ணா. சீரியஸாவே சொல்றேன். என் குடும்பம் கெட்டதே எங்கப்பாவோட குடியாலதான். எங்கம்மா மாதிரி நானும் காலத்துக்கும் உன்னை கட்டிக்கிட்டு கஷ்டப்பட முடியாது”

“அவ்ளோதானா நம்ம லவ்வு?” அவன் குரல் அவனுக்கே பரிதாபமாய் தோன்றியது.

“அதென்னங்கடா.. நாங்க உங்க லவ்வை ஏத்துக்கற வரைக்கும் டீடோட்டலர் மாதிரி நடிக்கறீங்க. காஃபி, டீ கூட குடிக்கறதில்லைங்கறீங்க.. லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா, தைரியமா பக்கத்துலே உட்கார்ந்திருக்கறப்பவே சிகரெட்டு பத்த வைக்கறீங்க. தண்ணியடிச்சிட்டு வந்து உளறிக்கிட்டிருக்கீங்க.. தாலி கட்டினதுக்கப்புறமா மீதியிருக்கிற கெட்டப் பழக்கம்லாம் கூட வந்துடுமா உங்களுக்கெல்லாம்?” முன்கோபுர வாசலில் செருப்பு மாட்டிக்கொண்டே சீறினாள்.

செருப்புவிட வந்த இரண்டு தாவணிகள் நமட்டுச் சிரிப்போடு இவனைப் பார்த்தவாறே கடக்க, சுர்ரென்று கிளம்பிய ஈகோவை அடக்கியவனாய்.. “ப்ளீஸ் அனிதா. இனிமே தண்ணியே அடிச்சிருந்தாலும் சொன்ன நேரத்துக்கு, சொன்ன இடத்துக்கு கரெக்ட்டா வந்துடறேன்” சட்டென்று சொல்லிவிட்டு, நாக்கை கடித்துக் கொண்டான்.

“அப்போன்னா என்னை விட்டாலும் விட்டுடுவே.. தண்ணியை மட்டும் விடமாட்டே...”

“அப்படியில்லேப்பா. அது ஒரு பழக்கம். அவ்வளவு சுளுவா விட்டுட முடியாது. மாசாமாசம் ஆயிரக்கணக்குலே குடிக்காக செலவு பண்ணனும்னு எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா.. ஆறு மணியாச்சின்னா கை கால்லாம் தடதடன்னு ஆயிடுது தெரியுமா?” இப்போது அவளுக்கும் அவனைப் பார்க்க பரிதாபமாகவே இருந்தது.

“அச்சச்சோ... ரொம்ப பாவமாயிருக்கு.. நிறைய செலவு வேற ஆவுதா நான் வேணும்னா ஒரு ஐடியா சொல்றேன். கேட்குறீயா?”

“குடியை விட்டுருன்னு மட்டும் நொய்நொய்னு கழுத்தறுக்காம, வேற எந்த ஐடியான்னாலும் சொல்லு” இப்போது கொஞ்சம் தைரியமாகவே பேசினான்.

“ம்ம்... இப்போ சொல்ல மாட்டேன். நைட்டு கரெக்ட்டா பத்து மணிக்கு, செவுரு எகிறிக்குதிச்சி எங்க வீட்டுப் பின்னாடி இருக்குற கொய்யா மரத்தாண்ட வந்து ஒளிஞ்சிக்கிட்டிரு.. நானே வந்து சொல்றேன்”

“உன்னை பார்க்கணும்னா நரகத்துக்கு கூட வர்றதுக்கு ரெடியா இருக்கேன் செல்லம்!”


அனிதாவின் ஆபிஸ்

“அக்கா.. நீங்க சொன்ன ஐடியா ஒர்க்-அவுட் ஆயிடிச்சி. இப்போல்லாம் என் ஆளு தண்ணியே போடறதில்லை. ரொம்ப தேங்க்ஸ்க்கா” லஞ்ச் டேபிளில் உற்சாகமாக லதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் அனிதா.

“ம்ஹூம்.. இதுகூட டெம்ப்ரவரி சொல்யூஷன்தான். கல்யாணத்துக்கப்புறம் ரொம்ப கேர்ஃபுல்லா இவனுங்களை வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கணும். டெலிவரி, கிலிவரின்னு நாம பிஸியாவுற நேரத்துலே மறுபடியும் வேலையைக் காட்டிடுவானுங்க”

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். அய்யோ.. இப்போ அவனை நெனைக்கவே எனக்கு ரொமான்ஸ் மூடு எகிறுது. முன்னாடியெல்லாம் ஆறு மணிக்கு பார்க்க வரச்சொல்லிட்டு ஏழரை, எட்டு மணிக்கு தள்ளாடிக்கிட்டே வருவான். எரிச்சலா இருக்கும். இப்போ அஞ்சு, அஞ்சரைக்கே எனக்கு முன்னாடி வந்து வெயிட் பண்ணுறான். பச்சத்தண்ணி கூட யோசிச்சி யோசிச்சிதான் குடிக்கிறான்”

“அப்படி என்னடி சொக்குப்பொடி மந்திரம் சொல்லிக் கொடுத்தாங்க இந்த லதாக்கா?” சங்கீதா கேட்டாள்.

“அக்கா சொன்னது ரொம்ப ஈஸி டெக்னிக்டி. என்னாச்சினாலும் சரி. டெய்லி நைட்டு பத்து மணிக்கு ஒருவாட்டி என்னை நேரில் பார்த்துட்டு குட்நைட் சொல்லிட்டு போகணும்னு கண்டிஷன் போட்டேன். அதுமாதிரி கஷ்டப்பட்டு அவன் வர்றதாலே போனஸா ஒரு லிப்-டூ-லிப் கிஃப்ட். டிரிங்ஸ் வாசனை வந்தா நோ கிஸ். இந்த கிஸ்ஸை வாங்குறதுக்காகவே அவன் தண்ணி போடறதை விட்டுட்டான். அதுக்கப்புறமா போயி சரக்கு அடிக்க நினைச்சாலும் பத்து மணிக்கு மேலே டாஸ்மாக்கும் மூடிடுவாங்கங்கிறதாலே என் ஆளு வேற வழியில்லாமே சுத்தபத்தமாயிட்டான்”

“அட நல்ல ஐடியாக்கா.. என் ஆளு சரக்கடிக்கிறதில்லை. ஆனா கூட்ஸு வண்டி மாதிரி எப்பம்பாரு சிகரெட்டு ஊதிக்கிட்டிருக்கான். எத்தனையோ முறை பேசிப் பார்த்துட்டேன். திருந்தறமாதிரி தெரியலை. இந்த உதட்டு வைத்தியம்தான் அவனுக்கும் சரிபடும் போல” சங்கீதாவும் உற்சாகமானாள்.

“ம்ம்... நீங்கள்லாம் இப்போதான் லவ் பண்ணுறீங்க. உங்களுக்கு நான் கொடுக்குற ஐடியா ஒர்க்-அவுட் ஆவுது. நான் லவ் பண்ண காலத்துலே இதுமாதிரி எவளும் எனக்கு ஐடியா கொடுக்கலையே?” புலம்பிக்கொண்டே தன் தாலியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள் லதா.


ட்விஸ்ட்

முன்பு, நாம் பட்டினப்பாக்கம் டாஸ்மாக்கில் பார்த்த வினோத்தின் மனைவிதான் இந்த லதா என்று கதையை முடித்தால் நல்ல ‘ட்விஸ்ட்’ ஆகத்தான் இருக்குமில்லையா? எனவே அப்படியே இங்கேயே ‘முற்றும்’ போட்டுக் கொள்ளலாம்.

இன்னொரு ‘ட்விட்ஸ்ட்’டும் வேண்டும் என்பவர்கள், கிருஷ்ணா எட்டு மணிக்கெல்லாம் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி ஸ்டாக் வைத்துவிட்டு, நைட்டு பத்து மணிக்கு அனிதாவிடம் கிஸ்ஸும் வாங்கிவிட்டு, பதினோரு மணிக்கு மொட்டை மாடி சென்று குடிப்பதாகவும் கதையை நீட்டி வாசித்து, ‘முற்றும்’ போட்டுக் கொள்ளலாம்.

(நன்றி : தமிழ்முரசு பொங்கல்மலர்)

23 அக்டோபர், 2014

ஜீன்ஸ்

“தீபாவளிக்கு நிலா பாப்பாவுக்கு என்ன டிரெஸ் வேணும்?” கிருஷ்ணா அவள் பேசுவது போன்ற தொனியிலேயே இழுத்து இழுத்து கொஞ்சலாக கேட்டான். டிவியில் ஏதோ பாடாவதி படம் ஓடிக் கொண்டிருந்தது. இரவு உணவு திருப்திகரமாக முடிந்ததால், குடும்பமே ரிலாக்ஸாக இருந்த நேரம் அது.
‘“ம்ம்ம்ம்…” என்று முப்பது நொடிக்கு யோசித்தவள் பட்டென்று சொன்னாள்.
“ஜீன்ஸ்”
“எப்போப் பார்த்தாலும் ஜீன்ஸுதானா? அங்கங்கே பொம்பளைக் கொழந்தைங்க அழகழகா கலர் கலரா பாவாடைச் சட்டை போட்டுக்கிட்டு போறதை பார்க்குறப்போ அவ்ளோ ஆசையா இருக்கு? இவ ஜீன்ஸைத் தவிர வேறெதையும் போட்டுக்க மாட்டேங்குறா” அனிதா நொடித்துக் கொண்டாள்.
“அவ இஷ்டத்துக்கு விடேன் அனிதா. பொண்ணுன்னா பாவாடை சட்டைதான் போடணுமா? அவ என்ன உன்னை மாதிரி பட்டிக்காட்டுலேயா பொறந்து வளர்றா?” கிருஷ்ணாவின் அம்மா, பேத்திக்கு சப்போர்ட் செய்தாள்.
“ஆமாம், நான் நைட்டியிலே இருந்தாலே உங்களுக்கு மூஞ்சி அப்படி போயிடும். ஆனா, பேத்தி மட்டும் ரொம்ப மாடர்னா இருக்கணுமோ?” வார்த்தைகளில் லேசாக அனல் காய்ச்சினாள் அனிதா. எப்போதுமே இப்படித்தான். ஜோவியலாக பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டென சுள்ளென்று விழுவது அவள் சுபாவம்.
“அம்மா, இந்த தீபாவளிக்கு நீயும் என்னை மாதிரியே ஜீன்ஸ் வாங்கிக்கோ” நிலா மழலையில் சொன்னபோது, மூவருமே வாய்விட்டு சிரித்து விட்டார்கள். போன விஜயதசமிக்குதான் நிலாவை ப்ரீ கேஜியில் போட்டிருந்தார்கள். ஸ்கூலுக்கு போய் ஒரு மாசத்திலேயே நன்றாக வாயடிக்க கற்றுக் கொண்டாள்.
“ப்பா…. உங்கம்மாவை அந்த கோலத்துலே நினைச்சாலே பகீருங்குது” என்றான் கிருஷ்ணா.
“உன் ஆத்தாக்காரி என்னா அனுஷ்காவா?” வேண்டுமென்றே மருமகளை வம்புக்கு இழுத்தார் மாமியார்.
குழந்தை ஏதோ தெரியாத்தனமாக பேசுவதை வைத்து கணவனும், மாமியாரும் நக்கல் அடிப்பது அனிதாவின் ஈகோவை தொட்டது. இவனை கல்யாணம் செய்துக்கொள்ளும் வரை அவள் நைட்டி கூட அணிந்ததில்லை. பாவாடை-தாவணி, புடவை என்று சினிமாவில் வரும் அம்மன் பக்தைகள் மாதிரிதான் உடுத்துவாள். இந்த பண்பாட்டு விஷயத்தில் அனிதாவின் பிறந்தவீடு அவ்வளவு கண்டிப்பு. கணவன் வற்புத்தி அவன் வசதிக்காக முதன்முதலாக ஆசையோடு வாங்கிக் கொடுத்த நைட்டியை உடுத்தவே அவ்வளவு தயங்கினாள். சுடிதார் அணியும் விருப்பமெல்லாம் புகுந்த வீட்டில்தான் அவளுக்கு சாத்தியமானது. மாமியாரும் பழம் பஞ்சாங்கம்தான். ஆனாலும், நகரத்தில் வசிப்பவர் என்பதால் இந்தகால பெண்களுக்கு இதெல்லாம்தான் வசதி என்கிற பரந்த மனப்பான்மைக்கு வந்திருந்தார். இப்போது அனிதா பிறந்து வளர்ந்த கிராமத்திலேயே பெண்களுக்கான உடை கட்டுப்பாடெல்லாம் ரொம்ப வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. சுடிதார் அணிந்துக்கொண்டு களை பிடுங்குகிற இளம்பெண்களை எல்லாம் அங்கே அடிக்கடி காண முடிகிறது.
“ஏன் நான் ஜீன்ஸ் போட்டுக்கிட்டா என்ன… உங்கப்பன் டைவோர்ஸ் பண்ணிடுவாரா.. இல்லைன்னா உங்க பாட்டி என்னை எங்கப்பன் வீட்டுக்கு துரத்திடுவாங்களா.. தீபாவளிக்கு நானும் உன்னைமாதிரியே ஜீன்ஸ்தான் செல்லம் போட்டுக்கப் போறேன்” குழந்தையிடம் உறுதியான குரலில் சொன்னாள்.
“சூப்பர்மா” என்றது குழந்தை.
“ஏய் அனிதா, சும்மா விளையாட்டுக்கு கலாய்ச்சா சீரியஸா எடுத்துக்கிட்டியா?”
“இதுலே என்ன விளையாட்டு? ஏன் பொம்பளைங்களும் ஜீன்ஸ் போடுறது சகஜமாதானே ஆயிக்கிட்டிருக்கு. நானும் போட்டுக்கிட்டு போறேன். என்னிக்காவது உனக்கு என்ன பிடிக்கும், என்ன வேணும்னு என்னை கேட்டிருக்கீங்களா? இல்லேன்னா நான்தான் இதுதான் வேணும்னு அடம் புடிச்சிருக்கேனா? இந்த தீபாவளிக்கு நான் ஜீன்ஸ்தான் போட்டுக்கப் போறேன். யார் ஒத்துக்கிட்டாலும் சரி, ஒத்துக்கலைன்னாலும் சரி” நிஜமாகவே அவள் சீரியஸாகதான் பேசினாள்.
“நிறைய மெகாசீரியல் பார்த்து கெட்டுப்போறே நீ”
போர்மேகம் சூழ்ந்ததை அடுத்து, புருஷனும் பொண்டாட்டியும் எப்படியாவது போகட்டும். நம்ம தலை உருளாமல் இருந்தால் சரியென்று மாமியார் டிவி வால்யூமை கூட்டத் தொடங்கினார்.
அனிதா பிடிவாதக்காரி. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம் பிடிப்பவள். அவளுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் இரவுகளில் தொடர்ச்சியாக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவாள் என்று கிருஷ்ணாவுக்கும் நன்றாகவே தெரியும். அரை மனதோடு சம்மதித்தான்.

“ஜீன்ஸ் வேணுங்க”
அவன் தூக்கிவைத்திருந்த குழந்தையைப் பார்த்துக்கொண்டே, “பாப்பாவுக்குதானே சார்?”
“ம்…. இந்த பீப்பாவுக்கும் சேர்த்துதான்” பக்கத்தில் நின்றிருந்த அனிதாவை காட்டினான்.
சேல்ஸ் கேர்ள் களுக்கென்று சிரித்தாள். இப்படிதான் பொது இடங்களில் திடீர் திடீரென ஏடாகூடமாக பேசுவான். எல்லா ஆண்களுமே மற்றவர்களை ஈர்க்க தங்கள் மனைவியை மட்டமடித்து ஜோக் அடிக்கும் அதே அரதப்பழசான டெக்னிக்கைதான் கையாளுகிறார்கள். இவன் மட்டும் விதிவிலக்காக இருந்துவிடுவானா என்ன? கிருஷ்ணாவை முறைத்துக்கொண்டே சொன்னாள்.
“வாயிலே ஏதாவது வரப்போவுது. நீ துணி எடும்மா”
“துணியாதான் வேணுமா மேடம். ரெடிமேட் வேணாமா?” இவளது நாட்டுத் தோற்றத்தை பார்த்துவிட்டு சேல்ஸ்கேர்ளும் அவள் பங்குக்கு விளையாடினாள்.
அனிதா பதட்டமானாள். இந்த நகரத்துக்கு வந்து நாலு வருஷம் ஆகிறது. ஆனாலும் இன்னும் அவளுடைய கிராமவாசனை போகவேயில்லை. இங்கிருக்கும் மனிதர்கள் அதை கண்டுகொண்டு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கேலி பேச தவறுவதேயில்லை. நகரங்களில் வசிப்பவர்கள்தான் நாகரிகமானவர்கள் என்கிறார்கள். ஆனால் இங்கே ஆண்-பெண், பணக்காரன்-ஏழை என்று வித்தியாசமில்லாமல் அத்தனை பேருமே அடுத்தவரின் மனசை புண்படுத்தாமல் பேச தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
மேலும் அனிதாவை நோண்டவேண்டாமென்று முடிவெடுத்து சேல்ஸ் கேர்ள், “சைஸ் என்ன மேடம்?” என்றாள்.
அனிதாவுக்கு அவளது பிரா சைஸ் மட்டும்தான் தெரியும். இடுப்பு சைஸ் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இதுவரை ஏற்பட்டதில்லை. பரிதாபமாக கணவனை பார்த்தாள். கொஞ்சம் விட்டால் அழுதுவிடுபவள் போல இருந்த அவள்மீது கிருஷ்ணாவுக்கு பரிதாபம் தோன்றியது.
“கிராமத்துப் பொண்ணு. இப்போதாங்க முதன் முதலா பேண்ட் போடப்போறா. இஞ்ச் டேப் வெச்சி நீங்களே சைஸ் பார்த்துக்கங்களேன்”
அவ்வளவு பெரிய கடையில் சுற்றிலும் ஆண்களும் பெண்களுமாக அத்தனை பேர் இருக்க, சேல்ஸ் கேர்ள் இவளது இடுப்பைச் சுற்றி டேப் வைத்து அளவு பார்ப்பது அவளுக்கு கூச்சமாக இருந்தது. ஏதோ ஒரு வேகத்தில் ஜீன்ஸ்தான் என்று பிடிவாதம் பிடித்தது தவறோ என்கிற எண்ணம் வந்தது.
மேஜை கண்ணாடியில் பரப்பப்பட்ட ஜீன்ஸ் பேண்ட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள். எல்லாமே ஒரே மாதிரியாகதான் இருந்தது.
“வேற வேற கலர், வேற வேற டிசைன் இல்லையா?”
“மேடம், ஜீன்ஸ் பொதுவா ப்ளூ கலர்தான். வேணும்னா ப்ளாக் கிடைக்கும். பார்க்குறீங்களா?”
“அய்யய்யோ.. பண்டிகைக்கு எடுக்குற துணி. கருப்புலே இருந்தா அத்தை திட்டுவாங்க” என்றாள்.
ஒரு வழியாக பர்ச்சேஸ் முடிந்தது.

ஜீன்சும், டீஷர்ட்டும் அணிந்துக்கொண்டு வெளியே வருவதற்கு அனிதா ரொம்பவும் வெட்கப்பட்டாள். பெட்ரூமிலிருந்து ஹாலுக்கு வருவதற்குள்ளாகவே நாணத்தில் உயிர் போய்விட்டது.

“பாட்டி, அம்மா ஜீன்ஸ் போட்டிருக்கா பாரு” என்று கத்திக்கொண்டே ஓடினாள் நிலா. அவள் கையிலிருந்த துப்பாக்கி ‘டப், டப்’பென்று வெடித்துக் கொண்டிருந்தது.

தலையை துவட்டிக்கொண்டே வந்த கிருஷ்ணா அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். “ஹேய், நல்லா தாம்பா இருக்கு”
சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்த மாமியார், “அனிதா, ஹேப்பி தீபாவளி” என்றாள். அடுத்து ஏதாவது சொல்வாளோ என்று மாமியார் முகத்தை கலவரமாகப் பார்த்தாள் அனிதா.
“டிரெஸ் நல்லாருக்கு. பூஜையறையிலே மல்லி வாங்கி வெச்சிருக்கேன் பாரு. தலையிலே வெச்சிக்கோ” என்று சொல்லிவிட்டு, மீண்டும் சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.
பெரிய நிம்மதி. புருஷனும், மாமியாரும் கிண்டலடித்தே சித்திரவதை செய்வார்களோ என்று பயந்துக் கொண்டிருந்தவளுக்கு அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டது திருப்தியாக இருந்தது. பீரோ கண்ணாடி முன்பாக போய் நின்றாள். அனுஷ்கா அளவுக்கு இல்லையென்றாலும் அவ்வளவு ஒன்றும் மோசமில்லையென்று அவளுக்கே தோன்றியது.
“அம்மா, பட்டாசு வெடிக்கலாம் வா” நிலா அழைத்தாள்.
“ஹேய். வேலை நிறைய இருக்கு. வரமுடியாது”
“அக்கம் பக்கத்திலே எல்லாம் கிண்டல் பண்ணுவாங்களோன்னு பயம், அதனாலேதான் வெளியே வரமாட்டேங்கிறா”
கிருஷ்ணா உசுப்பேற்றினான்.
“எனக்கென்ன பயம்? தாராளமா வெளியே வர்றேன்” தில்லாக சொன்னாலும், உள்ளுக்குள் கொஞ்சம் தயக்கம் இருந்தது. மூணாவது வீட்டு விஜயா மாமி ஏதாவது வம்புக்கு அலைந்துக் கொண்டே இருப்பாள். அவளது கழுகுக் கண்ணில் மாட்டிக் கொண்டால் போச்சு. தெரு முழுக்க தன்னுடைய தலை தான் உருளும்.
தெருவெங்கும் குழந்தைகள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்கள். நிலா ஒரு சரத்தை எடுத்துக்கொண்டு வந்து வாசலில் வைத்தாள். ஊதுபத்தி கொளுத்திவந்து அம்மாவிடம் நீட்டினாள்.
பக்கத்து வீட்டு அவினாஷ் பார்த்தான். கல்லூரி படிக்கும் பையன். அனிதாவுக்கு மீண்டும் வெட்கம். “ஆண்ட்டி. டிரெஸ் சூப்பர். காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரியே இருக்கீங்க”
அவினாஷின் அம்மாவும், அப்பாவும் கூட பார்த்தார்கள். “ஹேப்பி தீபாவளி. ஜீன்ஸும், டீஷர்ட்டும் உனக்கு ரொம்ப நல்லாருக்கு” என்று காம்ப்ளிமெண்ட் செய்தார்கள்.
விஜயா மாமி பட்டுப்புடவை சரசரக்க கையில் பூக்கூடையோடு கிளம்பினாள். அனேகமாக கோயிலுக்காக இருக்கும். யார் கண்ணில் படக்கூடாது என்று நினைத்தாளோ, அந்த மாமியே எதிரில் நிற்கிறாள்.
“அனிதா, பேண்ட் சர்ட் உனக்கு நல்லாதான் இருக்கு. பரவாயில்லையே, உன் மாமியார் இந்த டிரெஸ்ஸெல்லாம் போட அலவ் பண்ணுறா. நல்ல பிராட் மைண்ட் அவளுக்கு. அந்த கடைசி வீட்டு ஜான்ஸி இருக்காளே, கிறிஸ்டியனா இருந்தாலும் கூட தன் மருமகளை மாடர்னா டிரெஸ் பண்ண விட மாட்டா”
உஸ்ஸப்பா... மாமியிடமும் பாஸ் மார்க். இனி கவலையே இல்லை. அரை மணி நேரம் புருஷனோடும், குழந்தையோடும் பட்டாசு வெடித்து ஜாலியாக தீபாவளி கொண்டாடினாள். தெரு முழுக்க அவளது டிரெஸ்ஸை பாராட்டியது. யாருக்குமே உறுத்தவில்லை என்பது அனிதாவுக்கே ஆச்சரியமாக இருந்தது.

“டிவி பார்த்துக்கிட்டே தூங்கிட்டா” குழந்தையை தூக்கிவந்து பெட் மீது போட்டாள். படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்தான் கிருஷ்ணா.
அனிதா இன்று என்னவோ அவனுக்கு புதுசாகத் தெரிந்தாள். அவளுக்கு ஏழெட்டு வயது குறைந்துவிட்ட உற்சாகத்தோடு காலையில் இருந்து வலம் வந்துக் கொண்டிருக்கிறாள். நீல நிறப்புடவை அணிந்திருந்தாள். தலை நிறைய மல்லிகை. குப்பென்று அறை முழுக்க வாசம் பரவியது. கதவை தாளிட்டுவிட்டு வந்து அவன் மீது சரிந்தாள்.
“எங்கம்மாவுக்கு உன் மேலே எவ்ளோ ஆசை பாரு. பூ விக்கிற விலையிலே இவ்ளோ முழம் வாங்கி தந்திருக்காங்க”
“ம்ம்ம்... மாமியாருங்க மருமகளுங்களுக்கு பூ வாங்கிக் கொடுக்குறது அவங்க மேலே இருக்குற ஆசையிலே இல்லை. புள்ளைங்களோட சந்தோஷத்துக்குதான்”
“அதிருக்கட்டும். ஜீன்ஸ் உனக்கு நல்லாதானே இருந்தது. ஏன் அரை மணி நேரம் கூட போடலை”
“அய்யே. அந்த டிரெஸ்ஸை யாரு போடுவா. டைட்டா உடம்பை புடிச்சிக்கிட்டு கொஞ்சம் கூட ஃப்ரீயாவே இல்லை. புடவைதான் பெஸ்ட்டு
“அப்போன்னா ரெண்டாயிரம் ரூபா வேஸ்ட் தானா?”
“அப்படியெல்லாம் இல்லை. கொஞ்ச நேரம் போட்டிருந்தாலும் ஜீன்ஸ் எனக்கு கொடுத்த கான்ஃபிடெண்ட்தான் முக்கியம். என்னோட பர்சனல் ஃப்ரீடமுக்கு நான் போடுற சண்டை அது. என்னோட டிரெஸ்ஸை, என்னோட ஃபுட்டை, எனக்கான விஷயங்களை நானே டிசைட் பண்ணிக்கற உரிமையை கேட்டு வாங்குற போராட்டம் அது. எனக்கு ஒண்ணு பிடிக்குது, பிடிக்கலைங்கிறது வேற விஷயம். ஆனா நான் எதை தேர்ந்தெடுக்கணும்னு மத்தவங்க வற்புறுத்தக் கூடாது. அது புருஷனா இருந்தாலும்” அவள் தலையை, கிருஷ்ணாவின் தலை மீது இடித்தவாறே சொன்னாள்.

இவ்வளவு பேசுவாளா, அவளை ஏதாவது சீண்டலாமா என்று கிருஷ்ணாவுக்கு யோசனை வந்தது. இருந்தாலும் அந்த இரவு சண்டை இல்லாததாக, அப்புறம் ஏதோ சொன்னாளே, ஆங்.. அவள் ‘ஃப்ரீடம்’ உணருவதாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே லைட்டை ஆஃப் செய்தான்.

(நன்றி : தமிழ்முரசு - தீபாவளி சிறப்பு மலர் 2014)

7 ஆகஸ்ட், 2014

சதுரங்க வேட்டை

வானத்தின் கன்னம் கருத்திருந்திருந்தது. முணுக்கென்றால் பிரளயமாய் பெருமழை கொட்டிவிட தயாராய் இருந்த கருமாலைப் பொழுது. என்னைப் பார்க்க அலுவலகத்துக்கு நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு விருந்தோம்பல் செய்யும் பொருட்டு அலுவலக வாசலில் இருந்த தேநீர்க்கடைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். கடைக்குள்ளே நான்கைந்து திருநங்கையர் பஜ்ஜி, சமோசா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

டீ மாஸ்டர் அவர்களை ஏதோ பச்சையாக கலாய்த்துக் கொண்டிருக்க, அவர்களும் பதிலுக்கு கலகலப்பாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். இரண்டு தேநீர்க் கோப்பைகளோடு வெளியே வந்தோம். சற்று தள்ளிப்போய் நின்று ஜிகர்தண்டா, பின்நவீனத்துவம் என்று பேசிக்கொண்டே தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தோம்.

கடை வாசலில் திடீர் சலசலப்பு. திருநங்கையரில் சிலர் வெளியே நின்றிருந்தவர்களின் தலையில் கை வைத்து ஏதோ மந்திரம் மாதிரி முணுமுணுத்து காசு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் காசு கொடுத்து அவர்களை விரட்டினார்கள். வேறு சிலர் அவர்கள் தங்களை தொட்டுவிடக் கூடாதே என்று ஒருமாதிரியான அருவருப்பும் உணர்வோடு இருப்பது மாதிரி விலகி ஓடினார்கள். சிலர் அவர்களை கிண்டல் செய்து, வழக்கமாக அவர்களை வசைபாடும் வார்த்தைகளை கூறி ஆபாசமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு இருபது வயது பையன் ஒருவனை ஆசிர்வதித்து காசு கேட்க, அவன் நெருப்பை மிதித்தது போல பரபரவென்று வாகனங்களுக்கு இடையே ஓடி சாலையின் மறுபுறம் நோக்கி ஓடினான்.

அவனை துரத்திக்கொண்டு ஓடிய திருநங்கைக்கு நாற்பது வயது இருக்கும். கரேலென்று தாட்டியாக இருந்தார். சிகப்பு ஜாக்கெட். மஞ்சள் புடவை. நெற்றியில் பெரிய அளவில் வட்டமாக குங்குமம். பையன் தப்பித்துவிட்டதால் பரிதாபமாக நாங்கள் இருந்த பக்கமாக வந்தார். எங்களை நெருங்கியவர் சடாரென்று திரும்பிப் பார்த்து, சட்டென்று என் தலையில் கைவைத்து ஏதோ மந்திரம் சொல்லத் தொடங்கினார்.

“எம் மவன் நல்லா வரணும் நீயி” என்று சொல்லிவிட்டு கைநீட்டி காசு கேட்டார்.

அவர்களைப் பார்த்து பயந்து ஓடிய சராசரிகளை போல நானும் நடந்துகொள்ள முடியாது. ஏனெனில் நான் சராசரி அல்ல. முதன்மையாக இணையப் போராளி. ஃபேஸ்புக், ட்விட்டர், பிளாக்கர், லிங்க்ட் இன், ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ உள்ளிட்ட ஏராளமான இணையத் தளங்களில் எனக்கு அக்கவுண்டு உண்டு. தற்போது தமிழில் எழுதப்படும் இலக்கியங்களை படிக்கிறேனோ இல்லையோ எது எதுவெல்லாம் இலக்கியம், யார் யாரெல்லாம் இலக்கியவாதிகள் என்று தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். மாதாமாதம் சில இலக்கியப் பத்திரிகைகளை படிக்கிறேன். நண்பர்களோடு சாதாரணமாக எதையாவது பேசும்போது, “அயன் ராண்ட் இதைப்பத்தி என்ன சொல்றாங்கன்னு பார்த்தீங்கன்னா...” என்று ஆரம்பித்து, அவர்களை தாழ்வுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறேன். சகட்டுமேனிக்கு மார்க்ஸ், நோம்சாம்ஸ்கி, சீமான் தெ பொவார், ஜே.கிருஷ்ணமூர்த்தி, பெரியார் என்று பெயர்களை உச்சரிப்பதால் நான் கொஞ்சம் ஸ்பெஷல். எனவே நான் உண்மையாகவே அப்படி இல்லையென்றாலும், நான்கைந்து பேராவது என்னை இண்டெலெக்ச்சுவல் என்றோ அல்லது நிறைய வாசித்து பண்பட்ட தரமான இலக்கிய வாசகன் என்றோ மூடத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட நான் மற்ற சராசரிகளை மாதிரி அவரை அணுகுவது சரியல்ல என்று என் இலக்கிய மனதுக்கு பட்டதால், பாக்கெட்டில் இருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை எடுத்து, சுற்றும் முற்றும் பந்தாவாக நோட்டம் விட்டு அவரிடம் கொடுத்தேன். நான் எதிர்ப்பார்த்த மாதிரியே அங்கே இருந்த சராசரிகள் அசந்துவிட்டார்கள்.

இருபது ரூபாயை நோட்டை வாங்கியவர், அதை எடுத்து என் முகத்தை சுற்றி திருஷ்டி மாதிரி கழித்தார். முணுமுணுவென்று ஏதோ மந்திரங்களை உதிர்த்தார்.

“அய்யோ. எம் புள்ளைக்கு பணத்தோட அருமையே தெரியலையே?” என்று வேதனைப்பட்டு விட்டு, “எனக்கு இந்த காசு வேணாம். பத்து ரூபாய் மட்டும் இருந்தா கொடு” என்றார்.

பணத்தின் மீது எந்த பிரேமையும் சற்றும் இல்லாத அந்த திருநங்கை, எனக்கு ருஷ்ய பேரிலக்கிய நாவல் ஒன்றின் கதாபாத்திரம் மாதிரியே தோன்றினார். சிலிர்த்தமாதிரி தோளை குலுக்கிக் கொண்டு பெருந்தன்மையாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னேன்.

“பரவால்லக்கா. வேற காசு இல்லை. வெச்சுக்கங்க”

“அப்படின்னா எனக்கு இந்த காசே வேணாம். செவ்வாய்க்கிழமை அதுவுமா இவ்ளோ பெரிய மனசோட புள்ள கொடுத்திருக்கே. நீ நல்லா இருக்கணும். காலத்துக்கும் லஷ்மி உங்கூடவே இருக்கணும். உதவி செய்யுற இந்த மனசு சாகுறவரைக்கும் உனக்கு அப்படியே அமையணும்”

அக்கா எனக்கு சிண்ட்ரெல்லா மாதிரி தேவதையாக தெரிந்தார். இம்முறை நிஜமாகவே மெய்சிலிர்த்துவிட்டேன். பக்கத்தில் இருந்த நண்பரும் இதே மாதிரி மெய்சிலிர்த்தார். அவரும் இலக்கியவாதிதானே? சட்டென்று ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அக்காவிடம் நீட்டினார்.

“அம்மா செவ்வாய்க்கிழமை அதுவுமா மந்திரிச்சி கொடுக்கறேன். இந்த காசை செலவு பண்ணாமே பத்திரமா வெச்சிருக்கணும். காலத்துக்கும் உன் பர்ஸுலே காசு நிக்கும். பர்ஸை காட்டு, நானே வெச்சிடறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதோ மந்திரங்களை முணுமுணுக்க ஆரம்பித்தார்.

என்னதான் திராவிட இயக்கத்து பகுத்தறிவு நம் ரத்தத்தில் ஊறியிருந்தாலும், நாம் இதுவரை வாழ்க்கையில் சந்தித்தே இராதவர் அடுத்தடுத்து, நம்மை வள்ளல் ரேஞ்சுக்கு அவ்வளவு பேர் மத்தியில் ஒரு பொதுஇடத்தில் புகழ்ந்துக்கொண்டே இருந்தால் ‘ஜிவ்’வென்று இருக்கத்தானே செய்யும்? அனிச்சையாக பர்ஸை எடுத்தேன். பட்டென்று பிடுங்கினார். பர்ஸைப் பிரித்தார். உள்ளே நான்கு நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தது. கையில் எடுத்தார்.

திடீரென்று நிகழ்ந்துவிட்ட இந்த அசம்பாவிதத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. “காசை எடுக்காதே!” என்று கத்தினேன்.

“இரு மகனே. இதையும் மந்திரிக்கணும்” என்று சொல்லியவாறே, பர்ஸை என் கையில் கொடுத்துவிட்டு சட்டென்று மொத்த ரூபாயையும் (நாலு நூறு ரூபாய் நோட்டு, தலா ஒரு இருபது மற்றும் பத்து என்று மொத்தம் நானூற்றி முப்பது ரூபாய்) இரு கைகளுக்கும் நடுவில் வைத்து, கால்களை விரித்து தொடைகளுக்கு நடுவே வைப்பது மாதிரி வைத்து, “என்னோட யோனியில் (இலக்கிய அந்தஸ்துக்காக இந்த சொல்லை பயன்படுத்தினேன். அவர் உண்மையில் சொன்னது இந்த உறுப்பை விளிக்கும் கொச்சையான சொல்தான்) வெச்சிட்டேன். அம்மனுக்கு போயிடிச்சி. ஊர்லே மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம். கெடா வாங்கி விட்டிருக்கேன். அதுக்கு சரியா போச்சி இந்த காசு!” என்றார்.

இந்த உளவியல் தாக்குதலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. எப்படி எதிர்கொள்வது என்றும் தெரியவில்லை. கெஞ்ச ஆரம்பித்துவிட்டேன்.

“யக்கா. இன்னும் சம்பளம் கூட வரலை. செலவுக்கு இந்த காசுதான் இருக்கு. நூறு ரூபாய் எடுத்துக்கிட்டு மீதியை கொடுத்துடு”

அவர் கொடுப்பதாக தெரியவில்லை. நான் கொஞ்சம் குரலை உயர்த்தி பேச ஆரம்பித்தேன். அவரது சகாக்கள் வரிசையாக அவர் பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள். ஒரு கேங்ஸ்டர் படத்தில் ‘டான்’ ஓபனிங் சீன் மாதிரி இருந்தது அந்த காட்சி. என் குரல் தாழ்ந்து, மீண்டும் கெஞ்சல் தொடங்கியது.

என் கெஞ்சலை தாங்கமுடியாத மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, பெரிய மனசு வைத்து இருநூறு ரூபாயை மட்டும் திருப்பித் தந்தார். “டேய், அம்மனுக்கு காசுன்னு கேட்டாகூட முழு மனசா கொடுக்க மாட்டேன்றே பாடு!” என்று சொல்லிவிட்டு, வேறு சில வசைச்சொற்களை உதிர்த்தவாறே வேகமாக இடத்தை காலி செய்தார்கள்.

ஆக, என்னுடைய மனிதநேயத்தை காட்டிக்கொள்ள நேற்று நான் செய்த செலவின் குறைந்தபட்ச சில்லறை விலை (வசைகள் உட்பட) ரூபாய் இருநூறு மட்டுமே.

3 ஜூன், 2014

இடியாப்பச்சிக்கல் கதைகள்

சுரேஷ்
ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை சாத்திவிட்டு வாசலுக்கு வந்து அமர்ந்தான் சுரேஷ். இம்மாதிரி தனிமையை அனுபவித்து எவ்வளவு நாள் ஆகிறது? கல்யாணமாகி நான்கு மாதங்கள்தான். கவிதா கர்ப்பம் என்று காலையில்தான் உறுதி ஆனது. இந்நேரத்தில் கண்காணாத வடநாட்டில் ஏதோ பாடாவதி பிராஞ்சுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் தண்டனையாக வந்திருந்தது. எட்டு ஆண்டுகளாக மாடு மாதிரி எவ்வளவு உழைத்தாலும் நன்றியே இல்லாமல் நடந்துகொள்ளும் எம்.டி. யை கொலைசெய்தால் என்ன? கோயிலில் வரக்கூடாத நினைப்புதான். ஆனால் வந்துவிட்டது.
செல்போன் அடித்தது. ‘sandhiya calling’. “சுரேஷ்! இதுக்குமேலே பொறுத்துக்க முடியாது. ஏதாவது பண்ணு”. சந்தியா சுரேஷின் காதலி. அவனுடைய எம்.டி. ராமமூர்த்தியின் மனைவியும் கூட.

சந்தியா
சுரேஷின் callஐ கட் செய்தாள். “ம்ஹூம். கல்யாணமே பண்ணிக்கிட்டிருக்கக் கூடாது” எப்போதோ நடந்த கல்யாணத்துக்கு இன்று வருத்தப்பட்டாள் சந்தியா. ராமமூர்த்தி நல்லவன்தான். அன்பானவன். நினைத்தே பார்க்கமுடியாத வசதியான வாழ்க்கையை கொடுத்திருக்கிறான். ஆனால் அவனை பார்க்கும்போதெல்லாம் மரவட்டையைப் பார்ப்பதுமாதிரி அருவருப்பாக இருக்கிறது. கட்டாயத்துக்கு அவனோடு குடும்பம் நடத்தி.. ச்சே.. என்ன பிழைப்பு இது? காதலித்தவனை கைபிடிக்க முடியாததைவிட பெரிய அவலம் பெண்ணுக்கு வேறென்ன இருக்க முடியும்?
நர்ஸ் அவள் சிந்தனைகளைக் கலைத்தாள். “பாஸிட்டிவ் வந்திருக்கு சந்தியா. யெஸ் யூ ஆர் பிரெக்ணண்ட். கங்க்ராட்ஸ்”
நொடிக்கு நொடி வெறுத்துக் கொண்டிருக்கும் கணவனின் வாரிசு அவளது வயிற்றில். அவளே கொஞ்சமும் எதிர்பாராத ட்விஸ்ட். முதன்முறையாக ராமமூர்த்தியின் மீது ஏனோ அவளுக்கு காதல் பிறந்தது.

ராமமூர்த்தி
‘அப்பாவாகப் போகிறாய்’ என்று எஸ்.எம்.எஸ். வந்ததிலிருந்தே தரைக்கு மேலே ரெண்டு அடி மேலேயே பறந்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்விலிருந்தான் ராமமூர்த்தி. அடுத்தவாரம் அவளுடைய பிறந்தநாள் வேறு. அசத்திவிட வேண்டும். ஈ.சி.ஆர். ரோடில் இழைத்து இழைத்து ஒரு வீடு கட்டியிருந்தான். அவளுக்கு தெரியாமலேயே அவளுக்காக கட்டியிருந்த இந்த ‘வசந்தமாளிகை’தான் பிறந்தநாள் பரிசு. அவளோடும், பிறக்கப்போகும் குழந்தையோடும் அம்மாளிகையில் வாழப்போகும் வாழ்க்கையை நினைத்தால் இப்போதே கஞ்சா அடித்தது மாதிரி நெஞ்சு படபடக்கிறது. ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ செல்போன் ரிங்டோனியது. சந்தியா. சனியன், இவள் வேறு. “ராமு, நீ அப்பாவாகப் போற”. அப்படியே ஷாக்கானான். காலையில் கவிதாவின் எஸ்.எம்.எஸ் தந்த மொத்த மகிழ்ச்சியும் அலையில் அடித்துக்கொண்டு போனமாதிரி இருந்தது.

கவிதா
“இதுக்காக என்னை குத்தம் சொல்றீயே? அவன் மட்டும் யோக்கியம்னு நெனைச்சியா?” காஃபிஷாப்பில் இருந்தார்கள் கவிதாவும், லதாவும்.
“சத்தம் போட்டு பேசாதடி. எல்லாரும் நம்பளையே பார்க்கிறாங்க” என்றாள் லதா. இவளும், அவளும் ஒண்ணாவதிலிருந்தே இணைபிரியாத் தோழிகள். உடல் இரண்டு. உயிர் ஒன்று என்பது மாதிரி.
“என்னோட மேரேஜ் லைஃப் ஸ்மூத்தா போய்க்கிட்டிருக்கிறது மாதிரிதான் எல்லாரும் நெனைச்சுக்கிட்டிருக்கீங்க. ஆக்சுவலா சுரேஷ் ஒரு சைக்கோ. டிசைன் டிசைனா என்னை கொடுமைப்படுத்தறான். கல்யாணத்துக்கு முன்னாடி சந்தியான்னு ஒருத்தியை லவ் பண்ணியிருக்கான். இன்னும் அந்த அஃபயர் கண்டினியூ ஆகிட்டிருக்கு. இதனாலே பாதிக்கப்பட்ட நானும், அவளோட ஹஸ்பெண்டும் யதேச்சையா சந்திச்சோம். ஒருத்தருக்கு ஒருத்தர் இயல்பா ஈர்த்துக்கிட்டோம். இதுலே என்ன தப்பு?” என்றாள் கவிதா.

லதா
கவிதாவின் துக்கம் இவ்வளவு நாட்களாக தெரியாமல் இருந்ததற்காக கடுமையாக வருந்தினாள் லதா. ‘பாவி மக. அவ்ளோ க்ளோஸா இருக்குற எங்கிட்டேயே மறைச்சுட்டாளே?’
கவிதாவை மகாராணியாய் வளர்த்தார் அவரது தந்தை. நல்ல வேலையில் இருக்கிறான் என்று சுரேஷுக்கு தன் சக்திக்கு மீறி ஆடம்பரமாய் திருமணம் செய்து அனுப்பினார். ஆனால் இந்த படுபாவி சுரேஷ் தாலி கட்டிவிட்டான் என்பதற்காக எவ்வளவு சித்திரவதைகளைதான் அவள் எதிர்கொள்வாள். கவிதாவுக்கு ராமமூர்த்திதான் கரெக்ட். எப்பாடு பட்டாவது இருவரையும் சேர்த்துவிட வேண்டும். குறுக்கிலிருப்பது சுரேஷும், ராமமூர்த்தியின் மனைவி சந்தியாவும்தான். கருமம், இருவருக்கும் கள்ளக்காதல் வேறு. இவர்கள் செத்தொழிந்தாலும் பரவாயில்லை. பூமிக்கு பாரம் குறையும். ரமேஷுக்கு போன் அடித்தாள். லதாவின் காதலன். அதேநேரம் ப்ரொபஷனல் கில்லரும் கூட.

ரமேஷ்
இதுவரை பணத்துக்காகதான் கொலைகளை செய்திருக்கிறான் ரமேஷ். முதன்முறையாக தன்னுடைய காதலிக்காக தனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத இரண்டு பேரை கொல்லவேண்டும். லதா ரொம்ப பிடிவாதமாக இருக்கிறாள். இந்த வேலையை எடுத்துக் கொள்வதில் அவனுக்கு ஒப்புதல் இல்லை. பேசாமல் இந்த வேலையை கிருஷ்ணனிடம் ஒப்படைத்து விட்டால் என்ன?
கிருஷ்ணனை தேவி தியேட்டர் வாசலில் சந்தித்தான். “மச்சான். என்ன ஏதுன்னு கேட்காதே. ரெண்டு ஆட்டை அறுக்கணும். டீடெய்ல்ஸ் இந்த கவர்லே இருக்கு”
“வேற அசைன்மெண்டுக்கு ஒத்துக்கிட்டிருக்கேண்டா. வேணும்னா அதை நீ செஞ்சுடறியா? இதுவும் ரெண்டு ஆடுதான்”. பண்டமாற்று மாதிரி வேலையை மாற்றிக் கொண்டார்கள். கிருஷ்ணன் ஒரு கவரை கொடுத்தான். “உள்ளே போட்டோ, டீடெய்ல்ஸ் எல்லாமிருக்கு”

கிருஷ்ணன்
வெயிலில் பைக் ஓட்டிய களைப்பில் சோர்வாக வந்து சேர்ந்தான் கிருஷ்ணன். ஃபேன் ஸ்விட்சை போட்டான். கரெண்ட் கட். ரமேஷ் கொடுத்த கவரை பிரித்துப் பார்த்தான். இருபத்தைந்து வயது மதிப்புள்ள பெண்ணின் படம். சந்தியா என்று பெயர் எழுதியிருந்தது. அழகாக இருந்தாள். அதனாலென்ன? இதையெல்லாம் பார்த்தா ‘தொழில்’ நடத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்த படத்தை எடுத்தான். சுரேஷ். விழிகள் பிதுங்கி வெளியே விழுந்துவிடுமளவுக்கு அதிர்ச்சி. இவனை போய் ஏன் கொல்லவேண்டும்?
சுரேஷுக்கு போன் அடித்தான். ஸ்விச்ட் ஆஃப். ரமேஷுக்கு முயற்சித்தான். அதுவும் ஸ்விச்ட் ஆஃப்.. ரிங் போய்க்கொண்டே இருந்தது. உடனே செல்வியைப் போய் பார்க்க வேண்டும். தன்னைவிட சுரேஷை நன்றாகப் புரிந்தவள் அவள்தான். செல்வி கிருஷ்ணனுடைய தங்கை. சுரேஷ் அவனுடைய தம்பி.

செல்வி
செல்வி ஒரு பாசமலர். இரண்டு அண்ணன்கள். சிறுவயதிலேயே அம்மாவும், அப்பாவும் விபத்தில் காலமாகி விட்டார்கள். அனாதையாக மூன்று பேரும் நடுத்தெருவில் நின்றபோது, சமூகத்துக்கு அவர்கள் மீது எந்த இரக்கமுமில்லை. அவர்களாகவே வளர்ந்தார்கள். பெரியவன் கிருஷ்ணன் ‘நிழலான’ தொழில்களில் ஈடுபட்டான். சின்னவன் சுரேஷ் ஓரளவுக்குப் படித்து சொல்லிக் கொள்ளும்படியான வேலையில் சேர்ந்தான். கிருஷ்ணனின் சட்டத்துக்குப் புறம்பான வேலைகள் அவனை உறுத்தியது. விட்டுவிட்டு வந்துவிடும்படி சொல்லி, கிருஷ்ணன் கேட்காமல் கடைசியில் செல்வியையும், கிருஷ்ணனையும் விட்டு தனியாக பிரிந்துப் போய்விட்டான்.
அப்படிப்பட்ட சுரேஷை கொல்ல சொல்லி கிருஷ்ணனிடமே இப்போது வேலை வந்திருக்கிறது. கொல்லுமளவுக்கு யாருக்கு சுரேஷ் மீது வன்மம் இருக்கும்? அன்பு மூலமாகதான் சுரேஷை காப்பாற்ற வேண்டும்.

அன்புசெழியன்
அன்புசெழியன் காவல்துறை இன்ஸ்பெக்டர். செல்வியின் காதலன். அடிக்கடி கிருஷ்ணனை கைது செய்ய போகும்போது செல்வியைப் பார்த்து காதலாகி கசிந்துருகி விட்டான். கிரிமினலின் தங்கையாக இருந்தாலும் சேற்றில் மலர்ந்த செந்தாமரை. அவளுடைய அண்ணன் சுரேஷை கொல்ல சொல்லி அசைன்மெண்ட் எடுத்த ரமேஷை பிடித்து உதைத்தால்தான் பின்னணி வெளிவரும்.
கடைசியாக கிருஷ்ணனை சந்தித்த ரமேஷ் எங்குபோனான் என யாருக்குமே தெரியவில்லை. அவன் கொல்ல ஒப்புக்கொண்ட கவிதாவும், ராமமூர்த்தியும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அப்படியிருக்க ரமேஷின் கதி?
திடீரென ஸ்டேஷனுக்குள் நுழைந்த ஒருவன், முதுகில் சுமந்து வந்த பையில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு தலையை எடுத்து டேபிளில் வைத்தான். ரமேஷின் தலை. “எம் பேரு ரவிச்சந்திரன்” என்று அவன் பேசத்தொடங்கினான்

ரவிச்சந்திரன்
லதாவை உயிருக்கு உயிராக காதலித்தான் ரவிச்சந்திரன். காதல் என்றால் அம்பிகாபதி-அமராவதி ரேஞ்சுக்கு தெய்வீகக்காதல். எப்படியும் லதாவை கைபிடித்து விடலாம் என்று ரவி நம்பினான். ஏனெனில் லதாவின் உயிர்த்தோழி கவிதா வேறு யாருமல்ல. ரவியின் சொந்த தங்கைதான். கவிதா சொன்னால் லதா கேட்பாள் என்று அவளிடம் சிபாரிசுக்கு போனான். ஆனால் லதா, ரமேஷ் என்று ஒருவனை காதலிப்பதாக கவிதா சொல்ல, மனசு உடைந்தான். காதல் தோல்வி அவனை கொலைவெறியனாக மாற்றியது. தனக்கு கிடைக்காத லதா ரமேஷுக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைத்தான்.
அவனைக் கொல்ல இது மட்டுமே காரணமில்லை. இன்னொரு காரணம் சித்ரா. இவள் யாரென்றால்?

சித்ரா
ராமமூர்த்தியின் ஆபிஸ் ரிசப்ஷனிஸ்ட் சித்ரா. சுறுசுறுப்பானவள். இவள் இல்லாமல் ஆபிஸே இயங்காது. அலுவலகத்தில் பணிபுரியும் சுறுசுறுப்பான எக்ஸ்க்யூடிவ்வான சுரேஷை ஒருதலையாக காதலித்தாள். ஒருநாள் அவளது ரூமில் தூக்கில் தொங்கினாள். தற்கொலை என்று போலிஸ் கேஸை ஊற்றி மூடினாலும், அது திட்டமிடப்பட்ட கொலை என்று சித்ராவின் அப்பாவுக்கு தோன்றியது. அவர் விசாரித்துப் பார்த்ததில் தேசவிரோதமான அலுவலக ரகசியம் ஒன்று சித்ராவுக்கு தெரிந்ததாகவும், அது போலிஸுக்கு போவதற்கு முன்பாக அவளை கொல்ல கூலிப்படை அமைக்கப்பட்டதாகவும் கண்டுபிடித்தார். அவர் ஒரு வாத்தியார். தன்னுடைய விசுவாசமான முன்னாள் மாணவனிடம் இதை சொல்லி அழுதார். அந்த மாணவன்தான் ரவிச்சந்திரன். சித்ராவை கொன்ற கூலிப்படைத் தலைவன் வேறு யாருமல்ல. ரமேஷ்தான்.

ராகவன்
இதுவரை வந்த எந்த கேரக்டர்களோடும் தொடர்பில்லாத மனிதர். ஆனால் அந்த கேரக்டர்களை உருவாக்கியவரே இவர்தான். மெகாசீரியல் ரைட்டர். தாய்க்குலத்தின் பேராதரவோடு பரபரப்பாக ஓராண்டு காலமாக ஓடிக்கொண்டிருந்த ‘நிர்மலா’ மெகாசீரியலின் சில காட்சிகளைதான் இதுவரை நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஏனோ தெரியவில்லை. இன்னும் ஐந்து எபிசோடுகளோடு சீரியலை முடித்துக் கொள்ளுங்கள் என்று சேனல் உத்தரவிட்டு விட்டது. என்ன செய்யலாம் என்று சீத்தலைச் சாத்தனார் மாதிரி பேனாவை எடுத்து மண்டையில் குத்திக் கொண்டிருந்தார்.
காலிங் பெல் கிர்ரியது. கதவைத் திறந்தார்.
சுரேஷ், சந்தியா, ராமமூர்த்தி, கவிதா, லதா, ரமேஷ், கிருஷ்ணன், செல்வி, அன்புசெழியன், ரவிச்சந்திரன், சித்ரா (இவள்தான் செத்துட்டாளே?) ஆகியோர் கும்பலாக நின்றிருந்தார்கள்.


(நன்றி : தினமலர் வாரமலர்)

12 மே, 2014

தாய்வாசம்

ஓவியங்கள்: ம.செ.,

மூணு வயசுக் குழந்தைகிட்டே உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?'' - பாரதி, ஆச்சரியத்துடன் கேட்டாள்.
''ஆமாண்டியம்மா... ஷைலு எனக்குச் சக்களத்தி. அவ மேலே எனக்குப் பொறாமை. போடி... வேலையப் பார்த்துக்கிட்டு. உனக்கு ரெஸ்ட் கொடுக்காம எப்போ பார்த்தாலும் 'பாரதிம்மா... பாரதிம்மா...’னு ஓடிவந்து மடியிலே படுத்துக்கிட்டுத் தொல்லை கொடுக்குறாளேனு உன் மேல கரிசனப்பட்டா... வன்மமாம், வன்மம்!'' - அலுத்துக்கொண்டே சொன்னாள் புஷ்பவல்லி.
டி.வி. சீரியல்களில் வரும் பெண்கள் மாதிரி புஷ்பவல்லி அப்படியொன்றும் கொடுமைக்காரி கிடையாது. அவளுடைய நாத்தனார் பாரதி, 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கிறாள். அதனால் 'எப்போதும் பெட் ரெஸ்ட்டிலேயே இருக்க வேண்டும்’ என்று மருத்துவர் சொல்லிவிட்டார். கணவரின் செல்லமான தங்கச்சி, தலைப் பிரசவத்துக்காக பிறந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள். நியாயமான அண்ணியாக, பாரதியை
பூ போல்தான் தாங்குகிறாள் புஷ்பவல்லி. இருந்தாலும் இப்படி ஒரு கெட்ட பெயர்.
''பார்த்தீம்மா... எங்க இருக்கே?'' - மழலைக் குரலில் கொஞ்சிக்கொண்டே, வாத்து மாதிரி வித்தியாசமாக நடந்து வந்தாள் ஷைலு. எதிர் ஃப்ளாட் குழந்தை. ஜீன்ஸ் பாவாடையும், பிரௌன் கலர் டாப்ஸும் அணிந்துகொண்டு அமர்க்களமாக இருந்தாள். போன விஜயதசமிக்குத்தான் பிரி.கே.ஜி-யில் சேர்ந்தாள்.
சில மாதங்களுக்கு முன் அறிமுகமான பாரதி, அவளுக்கு உயிர். இத்தனை காலமாக, குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக அரசமரத்தைச் சுற்றி, இதற்காகப் பல லட்சங்களை டாக்டர்களுக்கு அழுத பாரதிக்கும், தன்னை 'அம்மா’ என்று அழைக்கும் ஷைலு என்றால் கொள்ள ஆசை.
''வந்துட்டா உன் வளர்ப்பு மக. அம்மாவும் பொண்ணும் ராத்திரி தூங்குற வரைக்கும்
கொஞ்சிக்கிட்டே இருங்க!'' - தலையைத் தினுசாக நொடித்துக்கொண்டு சமையல் அறைக்கு நகர்ந்தாள் புஷ்பவல்லி. எப்போதும் மென்சோகமாக வளையவரும் பாரதி, ஷைலுவைக் கண்ட பிறகுதான் கொஞ்சம் பிரகாசமாக இருக்கிறாள் என்பதில் அவளுக்கும் உள்ளூர மகிழ்ச்சிதான்.
''ஷைலு பாப்பா... பாரதி அம்மா எங்கே இருக்கேன் சொல்லு?'' என்று அறைக்குள் மறைந்துகொண்டு கொஞ்சலாகக் குரல் கொடுத்தாள் பாரதி.
''தோ...'' - கதவுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்த பாரதியைக் கண்டுபிடித்ததும் பரவசமாகக் கத்தினாள் ஷைலு. குழந்தையை ஆசையாக வாரி அணைத்து, உச்சிமுகர்ந்து எச்சில்பட முத்தங்கள் கொடுத்தாள் பாரதி.
''பாப்பா... இன்னைக்கு ஸ்கூல்ல என்னலாம் நடந்துச்சு? அம்மாகிட்ட சொல்லு பார்க்கலாம்!''
''ம்ம்ம்... ராகுல் என்னை அடிச்சான். நான் அவனைக் கடிச்சேன்!'' - ஷைலு சொல்லச் சொல்ல, ஆசையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் பாரதி. தன் வயிற்றில் பெறாத பிள்ளை ஒன்று, தன்னை 'அம்மா’ என்று அழைக்கிறது. இந்தக் கொடுப்பினை எத்தனை பேருக்குக் கிடைக்கும். எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ என்று நெகிழ்ந்துபோயிருந்தாள்.
''ரொம்பத் தொல்லை கொடுக்கிறாளா மேடம்?'' - கதவைத் திறந்துகொண்டு நுழைந்தான் ஆசிப். ''அப்பா...'' என்று அலறிக்கொண்டே ஷைலு ஓட்டமாக ஓடிவந்து ஆசிப் தோள் மீது பாய்ந்து ஒட்டிக்கொண்டாள்.
''சேச்சே... இல்லைங்க சார். ரொம்பச் சமத்தா நடந்துக்கிறா. எனக்கும் போர் அடிக்காம டைம்பாஸ் ஆகுது!'' - சொல்லிக்கொண்டே டி.வி. சத்தத்தை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தினாள் பாரதி.
''ஷைலு... டைம் டென். அப்பா இப்போ சாப்பிட்டுத் தூங்கினாதானே, காலையில கரெக்ட் டயத்துக்கு ஆபீஸ் போக முடியும்?'' - குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாவாறே சொன்னான் ஆசிப்.
''வாங்க ஆசிப் சார். சாப்பிடுறீங்களா?'' - டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சீனிவாசன் கேட்டார். பாரதியின் அண்ணன்.
''இல்லைங்க. அம்மா செஞ்சு வெச்சிருப்பாங்க. என்னோட சேர்ந்துதான் அவங்களும் வாப்பாவும் சாப்பிடுவாங்க!''
பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் ஆடிட்டர் ஆசிப். மாற்று மதத்துப் பெண்ணைக் காதலித்து மணம் புரிந்தவன். ஆரம்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக இரு வீட்டாரும் இவர்களது அன்பின் தீவிரத்தைப் புரிந்துக்கொண்டு கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டனர். உலகத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் ஆசிப்புக்குக் கொடுத்த அல்லாவின் கருணை, திடீரென்று ஒருநாள் தீர்ந்துவிட்டது. ஷைலு பிறந்த சில மாதங்களிலேயே மஞ்சள் காமாலை தாக்கி இறந்துவிட்டாள் அவனது மனைவி சபிதா.
புஷ்பவல்லி, தன் கணவருக்குப் பார்த்துப் பார்த்துப் பரிமாறிக்கொண்டிருந்தாள்.
''சார்... கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்கக் கூடாது. உங்க பர்சனல்தான். ஆனாலும் ஏதோ கேட்கணும்னு தோணுச்சு. வயசுல மூத்தவ. உங்களைத் தம்பியா நினைச்சு சொல்றேன்!'' - புஷ்பவல்லி பீடிகையோடு ஆரம்பித்தாள்.
சீனிவாசன், லேசான பதற்றத்தோடு மனைவியை ஏறிட்டார்.
''சொல்லுங்க மேடம். உங்களை நான் என் குடும்பத்துல ஒருத்தவங்களாத்தான் பார்க்கிறேன். எங்க அம்மா, அப்பாவை சொந்தப் பொண்ணு மாதிரி கவனிச்சுக்கிறீங்க. ஷைலுவும் உங்க வீட்லயேதான் இருக்கா. நீங்க சொல்லி நான் தப்பா எடுத்துப்பேனா?''
''உங்களுக்கு ரொம்பச் சின்ன வயசுதான். மிஞ்சிப்போனா 30 இருக்குமா? உங்களுக்காக இல்லேன்னாலும் குழந்தைக்காகவாவது இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லையா... உங்க மதத்துல இது சகஜம்தானே? தாய்ப்பாசத்துக்காக ஷைலு ஏங்குறதைப் பார்த்தா, சமயத்துலே எனக்கே அடிவயித்தைப் பொரட்டறது...''
''என்ன மன்னி நீங்க..?'' - பாரதி பதற்றப்பட்டாள்.
''அவங்க சொல்றதுல தப்பு ஒண்ணு இல்லீங்க!'' - பாரதியைப் பார்த்துச் சொன்ன ஆசிப் தொடர்ந்தான்.
''சபிதாவும் நானும் காலேஜ் படிக்கிறப்பவே காதலிக்க ஆரம்பிச்சிட்டோம். மலையாளத்துப் பொண்ணு. வேற மதம்னு சொல்லி பிரச்னை வரும்னு தெரியும். இருந்தாலும் அவங்க குடும்பத்துல என்னை ஓரளவாவது ஏத்துக்கணுமேனு மலையாளம் கத்துக்கிட்டேன்!
அல்லா கருணையாலே எல்லாம் நல்லபடியா முடிஞ்சு மூணு வருஷம் சந்தோஷமா வாழ்ந்தோம். அந்த வாழ்க்கை போதும்னு அல்லா முடிவு செஞ்சிட்டாரு போல. கடவுளோட தீர்ப்புக்குக் காரணம் இல்லாமலா இருக்கும்? என்னை நிக்காஹ் பண்ணிக்கச் சொல்லி ஃப்ரெண்ட்ஸ் மட்டுமில்ல, வீட்லயும் வற்புறுத்திட்டுத்தான் இருக்காங்க. ஷைலுவுக்குனு சாக்கு சொல்லி பண்ணிக்கிட்டாலும், என்னைக் கட்டிக்கிட்டு வரப்போற பொண்ணோட முழு மனசா வாழ முடியுமானு தெரியலை. அப்படி அரைகுறையா வாழ்றது இன்னொரு பொண்ணுக்குச் செய்ற துரோகம் இல்லையா?
மனசு முழுக்க சபிதா நிறைஞ்சிருக்கா. அவ எனக்குக் கொடுத்துட்டுப் போன பரிசா ஷைலு பொறந்திருக்கா. அம்மா முகம்கூடக் குழந்தைக்கு சரியா ரிஜிஸ்டர் ஆகலை. தாய்ப்பால் மறக்கிறதுக்கு முன்னாடியே சபிதா போய்ச் சேர்ந்துட்டா. அதை நெனைச்சாத்தான் ரொம்ப வருத்தமா இருக்கு.
என்ன... 10, 15 வருஷத்துக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அதுக்குள்ள ஷைலு வளர்ந்துடுவா. அவளை நல்லாப் படிக்கவெச்சு, நல்ல இடத்துலே கட்டிக்கொடுத்திட்டேன்னா இறைவன் கொடுத்த என் வாழ்க்கையும் ஒருவழியா நிறைவாயிடும்!'' - விழியோர ஈரத்தோடு பொறுமையாகச் சொல்லி முடித்தான் ஆசிப்.
அறையில் சகிக்க இயலாத மௌனம் சூழ்ந்தது. என்ன புரிந்ததோ தெரியவில்லை, சேட்டைக்கார ஷைலுவும் அமைதியாக அப்பாவின் முகத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.
பாரதியின் காதில் ஏதேதோ குரல்கள் வகைதொகை இல்லாமல் ஒலிக்கத் தொடங்கின.
'சரிங்க... நான் இப்போ ஒரு சார்ட் போடுறேன். இந்தச் சார்ட்ல சொன்ன மாதிரி டிரீட்மென்ட் எடுத்துக்கலாம்!’
'நங்கநல்லூர் ஆஞ்சநேயருக்கு 101 வடைமாலை சாத்துறேன்னு வேண்டிக்க!’
'மென்சஸ் ஆனதுல இருந்து சரியா 12-ம் நாள்ல ஸ்கேன் எடுத்து எக் சரியா வளர்ந்திருக்கான்னு பார்க்கணும். சரியா வளர்ந்து இருந்தா நோ ப்ராப்ளம். இல்லேன்னா அதுக்கு ஏத்த மாதிரி டிரீட்மென்டை மாத்திக்கணும்!’
'புட்லூரு புள்ளத்தாச்சி அம்மனைப் பார்த்து வளையல் போடுங்க. மூணாம் மாசம் ரிசல்ட் நிச்சயம்!’
'எக் ஃபார்ம் ஆகுறதுல கொஞ்சம் பிராப்ளம் இருந்தது. அதை மருந்து மூலமா சரிபண்ணிடலாம்!’
'இன்னுமா விசேஷம் இல்லை. எங்க ஓரகத்திப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆன மொத மாசமே நின்னுருச்சு!’
'இப்போ எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஏன் பிரெக்னன்ஸி ஆவலைனு தெரியலை. நூத்துலே
15  பர்சென்ட் பேருக்கு ஏன் இன்ஃபெர்ட்டிலிட்டினு காரணமே கண்டுபிடிக்க முடியாது!’
'குலதெய்வக் கோயிலுக்குப் பொங்கல் வெக்கிறதா வேண்டிக்கிட்டீங்களா?’
'ஸாரி. ஐ திங்க் பிராப்ளம் வித் யுவர் சைடு மிஸ்டர் சங்கர். தப்பா எடுத்துக்க மாட்டீங்களே? ஒரு கவுன்ட்டிங் எடுத்துப் பார்த்துடலாமா? நான் சொல்ற லேப்ல ரிப்போர்ட் எடுத்துடுங்க. அப்படியே டெஸ்டிஸையும் ஸ்கேன் பண்ணணும்!’
'ஐயப்பன் கோயில் ஜோசியர்கிட்டே ஜோசியம் பார்த்தீங்களா?’
'உங்க கவுன்ட்டிங்ஸ் பக்கா. பாரதிக்கு ஒரு ஹெச்.எஸ்.ஜி. டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாமா?’
'கருமாரியம்மன் கோயிலுக்குப் போயிட்டு வாங்க. எலுமிச்சம்பழம் கொடுப்பாங்க. வெறும் வயித்துல சாப்பிட்டா அப்படியே நிக்குமாம்!’
'ரெண்டு டியூப்லயும் ப்ராப்ளம்னு நினைக்கிறேன். அடுத்த வாரம் அட்மிட் பண்ணுங்க. லேப்ராஸ்கோபி பண்ணி சரிபண்ணிடலாம்!’
'இதுக்கெல்லாம் சித்தவைத்தியம்தான் கரெக்ட். டாக்டர் ஜமுனா எனக்குத் தெரிஞ்சவங்கதான். போய்ப் பார்க்கிறீங்களா?’
'லேப்ராஸ்கோபில சரியாகலை. டயக்னஸ்டிக் சென்டருக்கு எழுதித் தர்றேன். டயக்னஸ்டிக் பண்ணா, சான்ஸ் இருக்கு!’
'மாசத்துக்கு ஒரு முறை மலைவேம்பு அரைச்சுக் குடுங்க!’
'டயக்னஸ்டிக் பண்ணதுல ஒரு டியூப் ப்ளாக் கிளியர் ஆயிருச்சு. ஸோ, இனி பிரெக்னன்ஸிக்கு நிறைய சான்ஸ் இருக்கு!’
'ஷாலினி டாக்டரை பாருங்க. கைராசி டாக்டர்!’
'இன்னும் மூணு மாசம் பார்ப்போம். அப்புறமா ஐ.யூ.ஐ. பண்ணிப் பார்க்கலாம்!’
'நான் கல்யாணத்துக்கு வரலை. யாராவது எத்தனை குழந்தைனு கேட்டுர்றாங்க!’
'ஆறு மாசத்துக்கு ரெகுலரா ஐ.யூ.ஐ. பண்ணிப் பார்க்கலாம். உங்க ஸ்பெர்ம்ஸை எடுத்து கான்சன்ட்ரேட் பண்ணி உங்க ஒய்ஃபோட எக்ல இன்ஜெக்ட் பண்ணிடுவோம். கண்டிப்பா சக்சஸ் ஆகும். இதுவும் சரிப்படலைன்னா டெஸ்ட் டியூப்...’
'எனக்குத்தான் பிராப்ளம்ங்கிற மாதிரி டாக்டர் சொல்றாங்களே... நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’
'என்னன்னே புரியலை. இதுவரை என் பேஷன்ட்கள்ல யாருக்கும் மூணு முறைக்கும் மேலே ஐ.யூ.ஐ. பண்ணதில்லை’
ஐயோ... இடைவிடாமல் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்தக் குரல்களை எல்லாம் யாராவது ஆஃப் செய்து தொலையுங்களேன் என்றிருந்தது பாரதிக்கு.
த்து ஆண்டுகளில் எவ்வளவு வேதனை, எவ்வளவு சோதனை, எவ்வளவு செலவு, எவ்வளவு மருத்துவர்கள், எவ்வளவு அறிவுரைகள். எல்லாத் துயரங்களையும் கடந்து, இருளில் நம்பிக்கையாக வெளிச்சக் கீற்று கொடுத்தது அவளது கர்ப்பம். ஆனால், அந்த வெளிச்சமும் தொலைந்து சூன்யத்தில் நிற்பதுபோல் ஆகிவிட்டதே இப்போது! மார்பு, சுமையாகக் கனத்தது பாரதிக்கு. இருபுறமும் விண்விண்னென்று வலி.
அவளது கணவன் சங்கர், கால் மணி நேரத்துக்கு ஒரு முறை போன் செய்து ஆறுதல் சொல்லிக்கொண்டே இருந்தான். பாவம், அவன் சோகத்தை மறைத்துக்கொண்டு பாரதியைத் தேற்றுகிறான்!
'நமக்கு அப்படி என்ன வயசு ஆயிடுத்து? 40-க்கு மேலகூடக் குழந்தைப் பெத்துக்கிறவா இப்போலாம் சகஜம்... தெரியுமா?’ - ஒவ்வொரு முறை போனில் பேசும்போதும், மறக்காமல் திருவாசகமாக இதைச் சொல்ல சங்கர் மறப்பதே இல்லை.
ஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவந்து, மூன்று நாட்கள்தான் ஆகின்றன. பிரசவத்துக்கு முன்பே டாக்டர் சொல்லியிருந்தார், 'ரொம்ப கிரிட்டிக்கல். மேக்ஸிமம் டிரை பண்றோம். அனேகமா தாய், சேய் ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தரைத்தான் காப்பாத்த முடியும்னு தோணுது. குழந்தை உயிரோடு பிறந்தாலும் தீவிரமான கண்காணிப்பில் இருக்கணும்.’
குழந்தை, உயிரோடுதான் பிறந்தது. ஆண் குழந்தை. உருவத்தில் அச்சு அசல் சங்கரை அப்படியே உரித்து வைத்திருந்தது. பாரதியின் நிறம். கை, காலெல்லாம் நல்ல நீளம். முயல் குட்டி மாதிரி முழித்துப் பார்த்தது.
''பாரதி... பையன் பொறந்திருக்கான் பாரு. கண்ணை நல்லாத் திறந்து பாரு!'' - முழு மயக்கத்தில் இருந்தாலும், கறுப்பாக, தாட்டியாக இருந்த நர்ஸின் குரல் வெகுதூரத்தில் இருந்து அளக்க முடியாத ஆழத்தில் கேட்டது பாரதிக்கு. சிரமப்பட்டுப் பாதிக் கண்களைத் திறந்தாள்.
''என் குழந்தை. என் வயிற்றில் வளர்ந்த மகன். என் ரத்தம்...'' - உடலும் உள்ளமும் சிலிர்த்தன பாரதிக்கு. கடைசியாக மகனைப் பார்த்தது அப்போதுதான். இன்குபேட்டரில் வைத்து குழந்தையைப் பாதுகாக்கிறார்கள் என்று சொன்னார்கள். சுவாசிக்கத் திணறுகிறானாம். உயிர் பிழைக்க 50 சதவிகிதம்தான் வாய்ப்பாம். அவ்வப்போது, யாராவது நர்ஸ் வந்து தாய்ப்பாலை மட்டும் ஒரு கண்ணாடிக் குடுவையில் பெற்றுச் செல்வாள். இரண்டு நாட்கள். அதற்குள்ளாகச் சில லட்சங்கள் கரைந்த நிலையில், திடீரென்று 'குழந்தை இறந்துவிட்டது’ என்றார்கள். தவமாய்த் தவம் இருந்து கிடைத்த செல்வம்; மலடி என்ற அவலச்சொல் போக்கியவன்; பூமிக்கு வந்த சுவடுகூட இல்லாமல் மறைந்துபோனானே? ஆண்டவா... என் துக்கத்துக்கு முடிவே இல்லையா?
புஷ்பவல்லிக்கு, நாத்தனாரின் துயரத்தைச் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. பாரதிக்கு ஒரு பிள்ளை இல்லை என்பதுதான் அவர்களது குடும்பத்தில் இருந்த ஒரே சங்கடம். அதுவும் தீரப்போகிறது என்பதில் எல்லோரையும்விடப் புஷ்பவல்லிக்குத்தான் அதிக சந்தோஷம். சில நாட்கள்கூட நீடிக்காத மகிழ்ச்சியாக இது போய்விட்டதே என்று மாய்ந்துபோனாள். பாரதியைவிட மனரீதியாக இவள்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டாள். நான்கைந்து நாட்களாகச் சமைக்கக்கூட மறந்து, பிரமை பிடித்ததுபோல அமர்ந்திருந்தாள்.
''பார்த்தீம்மா... எங்க இருக்கே?'' - பள்ளிவிட்டு வழக்கமான குதூகலத்தோடு ஷைலு கத்திக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள்.
உளவியல் சமநிலை பாதிக்கப்பட்டிருந்த புஷ்பவல்லிக்கு என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று புரியவில்லை. ஷைலுவை இழுத்து முதுகில் நாலு சாத்துச் சாத்தினாள். பேய் மாதிரி கத்தத் தொடங்கினாள்.
''சனியனே... அவ என்ன உன்னைப் பெத்தெடுத்துப் பால் கொடுத்தவளா..? மகராசி, உன் தொல்லை இல்லாம உன் அம்மா போய்ச் சேர்ந்துட்டா. பெத்த புள்ளையைப் பறிகொடுத்து நிக்குறா என் பாரதி. இனிமே அவளை அம்மா, அம்மானு சொல்லி அவளை உயிரோட கொல்லாத'' - என்ன பேசுகிறோம், ஏது பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், எந்தக் கோபத்தை யார் மீது காட்டுகிறோம், எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. அப்படியே குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள்.
குழந்தைக்கும் எதுவும் புரியவில்லை. முதலில் மலங்க மலங்க விழித்தாள். எதிர்வீட்டு ஆன்ட்டி கொஞ்சம் முறைப்பாகத்தான் பேசுவாள். ஆனாலும் இப்படி அடித்து, கோபமாகக் கத்துவாள் என்றெல்லாம் அவள் நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. வீறிட்டு அழத் தொடங்கினாள். சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்த பாரதி, திகைத்தாள். ஒரு பக்கம் புஷ்பவல்லி அழுதுகொண்டிருக்கிறாள்; இன்னொரு பக்கம் ஷைலுவும் அழுதுகொண்டிருக்கிறது.
''என்னடா ஷைலு... ஏன் அழுவுற. நீ நல்ல குட்டியாச்சே?' - குழந்தையைச் சமாதானப் படுத்தும்விதமாக வாரி அள்ளிக்கொண்டு கேட்டாள்.
பாரதியைக் கண்டதுமே எதற்காக அழுகிறோம் என்பது ஷைலுவுக்கும் மறந்துவிட்டது. தன்னுடைய அழுகைக்கு ஏதாவது காரணம் கற்பிக்கவேண்டுமே என்பதற்காக, ''பால்... பால்...'' என்று அழுகைக்கு நடுவே நடுங்கிக்கொண்டே உச்சரித்தாள்.
பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்ததுமே, ஷைலுவுக்கு அவளது பாட்டி பால் காய்ச்சிக் கொடுப்பாள். சில நாட்களாக நேராக பாரதியைத் தேடி அவள் இங்கே வந்துவிடுவதால், புஷ்பவல்லிதான் காய்ச்சிக் கொடுப்பது வழக்கம். 'குழந்தை பால் கேட்டு, புஷ்பவல்லி மறுத்ததுதான் இத்தனை களேபரம் போலிருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டாள் பாரதி.
''மன்னி... நம்ம கஷ்டம் நமக்கு. குழந்தைக்கு என்ன தெரியும்? ப்ளீஸ், அவளுக்குக் கொஞ்சம் பால் காய்ச்சிக் குடுங்களேன்!''
எதுவும் பேசாமல் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள் புஷ்பவல்லி. மொத்தமாக அழுது தீர்த்துவிட்டதால் ஓரளவுக்கு இப்போது மனம் தெளிந்திருந்தது. கோபம் கண்ணை மறைக்க, சின்னக்குழந்தையைப் போட்டு அடித்துவிட்டதை எண்ணி குற்ற உணர்வு கொண்டாள். ஃப்ரிட்ஜைத் திறந்தாள். ப்ரீஸரில் பால் இல்லை.
''பாரதி... வீட்ல பால் இல்லை. கடைக்குப் போய் வாங்கிட்டு வந்துடுறேன். குழந்தையைக் கொஞ்சம் சமாதானப்படுத்தும்மா!'' - சொல்லிவிட்டு, செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.
ஷைலுவின் கேவல் அடங்கவே இல்லை. ''பால்ம்மா... பால்ம்மா...'' என்று சொல்லிக்கொண்டே அழுதாள். மூச்சு முட்டுவதைப் போல இழுத்து இழுத்துப் பெரிதாகச் சத்தம் வருமாறு மூச்சு விட்டாள். எப்படி இவளை சமாதானப்படுத்துவது?
பாரதிக்குத் தாங்கவில்லை. குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள். ஏதோ வேகத்தில் அனிச்சையாக நைட்டியை விலக்கி, தன் மார்புக்காம்புகளை ஷைலுவின் வாயில் திணித்தாள். என்ன ஏதுவென்று புரியாமல் திணறிய ஷைலுவுக்கு, சட்டென்று பாரதியின் நோக்கம் பிடிபட்டது. அழுகையை நிறுத்தியது. முட்டி முட்டிப் பால் குடிக்கத் தொடங்கியது. பாரதியின் மார்புக் கனம் குறைந்தது. வலி நீங்கியது. ஆதுரமாகக் குழந்தையின் தலையைத் தடவ ஆரம்பித்தாள். ஷைலு, தன்னுடைய நினைவுகளில் புதைந்துபோன தாய்வாசத்தை மீண்டும் சுவாசிக்கத் தொடங்கினாள்!

(நன்றி : ஆனந்த விகடன் 07 மே, 2014)

25 செப்டம்பர், 2013

உன் ஏரியா எங்கேன்னு சொல்லு!

இரவு ஒன்பதரை இருக்கும். உலகிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் பிஸியாக இருக்கும் நந்தனம் சிக்னலில் நத்தையாக ஊர்ந்துக் கொண்டிருந்தேன். ‘பொட்’டென்று பொன்வண்டு சைஸுக்கு ஒரு மழைத்துளி. தலையில் குட்டு மாதிரி விழுந்தது. கொஞ்சநாட்களாக மழையின் வடிவமே மாறிவிட்டது. நமக்கு முன்னெச்சரிக்கை தரும் விதமாக மிதமான தூறல், ஊதக்காற்று எல்லாம் மிஸ்ஸிங். டைரக்டாக அடைமழைதான்.

சிக்னலை கடப்பதற்குள்ளாகவே தொப்பலாகி விட்டது. உள்ளாடைகள் கூட நூறு சதவிகிதம் நனைந்து, குளிரில் ஜன்னி வந்தது போலாகி விட்டது. மவுண்ட்ரோட்டில் மழைக்கு ஒதுங்க ஒரு பள்ளிக்கூடம் கூட இல்லை. பாலைவனமே பரவாயில்லை. கை, கால் உதறலெடுக்க ஒண்டிக்கொள்ள ஏதாவது இடம் கிடைக்குமாவென்று, மெதுவாக செகண்ட் கீரில் உருட்டிக்கொண்டே வந்தேன்.

பெரியார் மாளிகை எதிரில் ஃபயர் ஸ்டேஷன். உள்ளே நுழைந்துவிடலாம் என்று பார்த்தால், கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்த தீயணைப்பு வீரர் ஒருவர், “இங்கெல்லாம் வரக்கூடாது” என்று மழையில் நனைந்துக்கொண்டே விரட்டிக் கொண்டிருந்தார். கொஞ்சதூரம் தள்ளியிருந்த நிழற்குடையில் சுமார் நூற்றி ஐம்பது பேர் கரும்புக்கட்டு மாதிரி நெருக்கியடித்து நின்றார்கள். வாளிப்பான சில ஆக்டிவா ஆண்டிகளும் அந்த கூட்டத்தில் இருந்ததைக் கண்டு சோகத்துக்கு உள்ளானேன். ஜோதியில் கலந்துக் கொள்ளலாமா என்று வண்டியை மெதுவாக்கியபோது, அந்த எறும்புப் புற்றுக்குள்ளிருந்து ‘சவுண்டு’ வந்தது. “யோவ். இங்க இருக்குறவங்களுக்கே இடமில்லாம நனைஞ்சுக்கிட்டிருக்கோம். வேற இடத்தைப் பாரு”. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.

மழை சனியன் குறைந்தபாடில்லை. குளிரில் பல்லெல்லாம் கிடுகிடுக்க ஆரம்பித்துவிட்டது. சைதாப்பேட்டைக்கு முன்பாக பேன்பேட்டை அருகே எதிர்வாடையில் ஒரு டீக்கடை தென்பட்டது. கூட்டமும் குறைவாக இருக்கவே, நமக்கொரு புகலிடம் நிச்சயமென்று ‘யூ டர்ன்’ அடித்துத் திரும்பினேன். கடைக்காரர் கலைஞரின் இலவசத் தொலைக்காட்சியை, வாடிக்கையாளர் சேவைக்காக வைத்திருந்தார்.
“தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வந்து பாரு”

“உன் ஏரியா எதுன்னு சொல்லிட்டுப் போ”

ஏதோ ஒரு காமெடி சேனலில் ‘நகரம் மறுபக்கம்’ காமெடி ஓடிக்கொண்டிருந்தது. அங்கேயிருந்த பதினைந்து, இருபது பேருமே வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பக்கத்தில் நின்றிருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் சிரித்து மாளாமல், வயிற்றைப் பிடித்துக்கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். ஆனந்தச் சிரிப்பால் அவரது கண்களிலும் நீர் தாரையாக பொழிய ஆரம்பித்தது. வடிவேலு நடிக்காதது நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு?

“ஆனா... இப்படியெல்லாம் நிஜமா நடக்க சான்ஸே இல்லை. சினிமாலே மட்டும்தான் நடக்கும்” என்று பொத்தாம்பொதுவாக என்னைப் பார்த்துச் சொன்னார்.

“இல்லைங்க. நெஜமாவே நடந்திருக்கு. என் ஃப்ரெண்டுக்கே இதுமாதிரி ஆச்சி” என்றேன்.

“நெசமாவா” என்றவரிடம், கதை சொல்ல தயாரானேன்.

இதற்குள் மழையின் வேகம் குறைந்துவிட அந்த தற்காலிக கூட்டிலிருந்து பறவைகள் திசைக்கொன்றாக கிளம்பிவிட்டன. என்னிடம் கதை கேட்க இருந்தவரும், அவருடைய பஜாஜ் எம்.எய்ட்டியை உதைத்துக் கொண்டிருந்தார். வசமாக சிக்கிய ஆடு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டால் கசாப்புக் கடைக்காரனுக்கு எப்படியிருக்கும். அந்த மனநிலைக்கு உள்ளாகி விட்டேன்.

நோ பிராப்ளம். நமக்குதான் ‘ப்ளாக்’ இருக்கே. இங்கே ஆடுகளுக்கும் பஞ்சமில்லை.

அந்த கதை என்னவென்றால்...?

‘வரவனையான், வரவனையான்’ என்றொரு ப்ளாக்கர் இருந்தார். இயற்பெயர் செந்தில். திண்டுக்கல்லில் வசித்து வந்தார். 2006-07களில் தமிழ் இணையத்தளங்களில் இயங்கிவந்த தீவிரவாதிகளில் ஒருவர். ஓட்டுப் பொறுக்கி அரசியலைப் புறக்கணித்து இணையத்திலேயே இயங்கி வந்த அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) என்கிற அரசியல் கட்சியில் நாங்களெல்லாம் மெம்பர்கள்.

திராவிடப் பாரம்பரிய மணம், குணம் நிரம்பிய வரவனையானுக்கு கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே கேலியும், கிண்டலும் பீரிட்டுக் கிளம்பும். தோழர்களை ‘டவுஸர் பாண்டிகள்’ என்று விமர்சித்து எழுதுவார். ஒரிஜினல் டவுஸர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸார் என்பதை நினைவில் கொள்க. தோழருக்கு ஆர்.எஸ்.எஸ். காரர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைவதான தோற்றம் தெரிந்ததோ என்ன எழவோ தெரியவில்லை. இவர்களையும் அதே பட்டப்பெயரில் எழுதி வந்தார்.

எவ்வளவு திட்டினாலும் சொரணையே இல்லாமல் ரியாக்ட் செய்யாமல் இருப்பதற்கு தோழர்கள் என்ன திமுகவினரா அல்லது அதிமுகவினரா. மார்க்சிஸ ஏங்கலிஸ லெனினிய மாவோயிஸ நக்ஸலிய பின்னணி கொண்ட தோழர் ஒருவர் (சுருக்கமாக ம.க.இ.க) தொடர்ச்சியான இவரது விமர்சனங்களை கண்டு ‘டென்ஷன்’ ஆனார். உண்மையில் வரவனையானின் குறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். ஏனெனில் அப்போது அவர்கள்தான் அம்மாவுக்கு சிறப்பாக பஜனை செய்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நம் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடுக்கு குத்துமதிப்பாக தங்கள் இயக்கத்தைதான் குறிவைத்து வரவனை அடிக்கிறார் என்று தோன்றியிருக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் புயலாக எழுந்தார்.

திண்டுக்கல்லில் இருந்த வரவனையானுக்கு போன் வந்தது. போனை எடுத்து ‘ஹலோ’ சொன்னார். பதிலுக்கு ‘ஹலோ’ சொல்லுவதை விட்டு விட்டு க்ரீன் க்ரீனாக அர்ச்சனை விழுந்திருக்கிறது. மேலும் ஒரு பகிரங்க நேரடி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

“நீ எங்கே இருக்குன்னு சொல்லுடா. நேர்லே வந்து உன்னை தூக்கறேன்”

“நான் திண்டுக்கல்லே இருக்கேன் தோழர்”

“திண்டுக்கல்லுன்னா எங்கேன்னு கரெக்டா சொல்லு”

“பஸ் ஸ்டேண்டுலே ஒரு ‘பார்’ இருக்கும். அங்கே வந்து செந்தில்னு கேட்டீங்கன்னா சொல்லுவாங்க தோழர்” நம் தோழர் வரவனையான் அப்போது ‘பார்’ நடத்திக் கொண்டிருந்தார்.

“தோ வரேன். ரெடியா இரு”

தோழரை வரவேற்க நம் தோழரும் அவரிட்ட ஆணைப்படி ரெடியாகதான் இருந்திருக்கிறார். டாஸ்மாக் வாசலையே பார்த்து, பார்த்து கண்கள் பூத்ததுதான் மிச்சம்.

மறுநாளும் போன்.

“திண்டுக்கல்லே எங்கே இருக்கே?”

“அதான் சொன்னேனே. பஸ் ஸ்டேண்ட் பார்லே இருக்கேன்னு”

“நான் அங்கேல்லாம் வரமுடியாது. வீட்டு அட்ரஸை சொல்லு”

வரவனையானும் சின்ஸியராக அட்ரஸை சொல்லிவிட்டார். “நேர்லே வர்றேன். ரெடியா இரு” என்கிற வழக்கமான பஞ்ச் டயலாக்கை சொல்லிவிட்டு அவரும் போனை வைத்துவிட்டார். மார்க்ஸியம் மீது இவ்வளவு பற்றும், ஈடுபாடும் கொண்ட தோழர் மீது நம் தோழருக்கு காதலே வந்துவிட்டது. தன்னை அஜித்குமாராகவும், தனக்கு போன் செய்த தோழரை தேவயானியாகவும் நினைக்க ஆரம்பித்துவிட்டார். தனக்கு ‘போன்’ வந்த எண்ணுக்கு இவரே மீண்டும் முயற்சித்திருக்கிறார்.

“ஹலோ தோழர்... கொஞ்ச நேரம் முன்னாடி இந்த நம்பரிலிருந்து பேசினது...”

“சார்.. இது ஒரு ரூவா காய்ன் பூத்து சார். யார் யாரோ வந்து பேசுறாங்க. யார் யாருன்னு குறிப்பா எனக்கு எப்படி தெரியும்?”

மூன்றாவது நாளும் போன் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக இருந்த, வரவனை இந்த கண்டிஷனில் கொஞ்சம் டென்ஷனாகி விட்டார். இம்முறை இவர் தோழர் மீது சொற்வன்முறையை பிரயோகித்திருக்கிறார்.

“வர்றேன், வர்றேன்னு டெய்லி உதார் விட்டுட்டு ஒரு ரூவா காய்ன் பூத்துலேருந்து பேசுறீயேடா வென்று. நான் வர்றேண்டா உன் ஏரியாவுக்கு. நீ எங்கிருக்கேன்னு சொல்லு. உன் அட்ரஸைக் கொடு. என்னத்தை பிடுங்கறேன்னு பார்த்துடலாம்”

க்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டதை உணர்ந்த தோழர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முன்வந்தார்.

“டாய். கம்யூனிஸ்டுகளை அசிங்கமா திட்டுற உன்னை விடமாட்டேன். ஆம்பளையா இருந்தா சென்னைக்கு வாடா.. ஒத்தைக்கு ஒத்தை மோதி பார்த்துக்கலாம்”

“சென்னையிலே எங்கே. அட்ரஸை சொல்லு”

“சென்னையிலேன்னா... ஆங்... பனகல் பார்க் வாசல்லே நாளைக்கு காலையிலே பதினோரு மணிக்கு”

வரவனையானுக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. எனக்கு போன் செய்து சொன்னார்.

“தலை... எவனோ காமெடி பீஸ் ஒரு ரூவாய் பூத்துலே இருந்து சும்மா உங்களை கலாய்க்கிறான். சீரியஸா எடுத்துக்காதீங்க. அப்படி நெஜமாவே இவனாலே ஏதாவது ஆவும்னு நெனைச்சீங்கன்னா லோக்கல் போலிஸ்லே நம்பரை மென்ஷன் பண்ணி, ஒரு கம்ப்ளையண்ட் கொடுத்துடுங்க” என்றேன்.

“அப்படில்லாம் ஒண்ணுமில்லை லக்கி. வேலை நேரத்துலே போனை போட்டு வர்றேன், வர்றேன்னு உதாரு விட்டுக்கிட்டிருக்கான். அவனை புடிச்சி நாலு காட்டு காட்டலாம்னுதான்” என்றார்.

மறுநாள் காலை பத்து மணி. அப்போதுதான் அலுவலகம் வந்திருந்தேன். வரவனையானிடம் இருந்து போன்.

“சென்னைக்கு வந்திருக்கேன் லக்கி”

“என்ன திடீர்னு”

“அந்த டவுஸர் பாண்டியை பார்க்கதான். பனகல் பார்க்குலே நிக்கிறேன்” என்றார்.

ஒரு ரூவாய் காய்ன் பூத் போன்காலை நம்பி திண்டுக்கல்லில் இருந்து ராவோடு ராவாக பஸ் பிடித்து சென்னைக்கு வந்த வரவனையானை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

“கொஞ்சம் வேலையிருக்கு. முடிச்சிட்டு வர்றேன் செந்தில். நடுவுலே அவன் வந்துட்டான்னா மட்டும் கொஞ்சம் ரிங் அடிங்க. உடனே ஓடியாந்துடறேன்” என்றேன்.

மதியம் லஞ்ச் டைமில் ஆபிஸில் லீவ் சொல்லிவிட்டு பனகல் பார்க்குக்கு விரைந்தேன். வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி பார்க் வாசலில் ஆடாமல், அசையாமல் கம்பீரமாக செந்தில் நின்றிருந்தார்.

“பதினோரு மணிக்கு வர்றேன்னு சொல்லியிருந்தான் லக்கி. இன்னும் காணோம்” அப்போதே நேரம் மூன்று மணியை தொட்டிருந்தது.

“இதுக்கு மேலேயும் வருவான்னு நம்பிக்கை இருக்கா தோழர்?”

“கம்யூனிஸ்ட்டு ஆச்சே.. சொன்ன சொல்லை காப்பாத்துவான்னு நெனைச்சேன்”

மேலும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தோழர் வருவதற்கு அறிகுறியே தெரியவில்லை.

“சரி. நான் இப்படியே கெளம்புறேன் லக்கி. கோயம்பேட்டுலே விட்டுடுங்க. ஒரு நாளை ஃபுல்லா வீணாக்கிட்டான், நான்சென்ஸ்” என்றார். அப்போது வரவனையைப் பார்க்க, ‘தண்டவாளத்துலே படுத்து தூங்கிட்டிருந்தேனா, அப்படியே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலு என் கழுத்து மேலே ஏறிப்போயிடிச்சி’ என்று கழுத்தில் ரத்தத்தோடு வடிவேலுவிடம் சொல்லும் கேரக்டர்தான் நினைவுக்கு வந்தது.
இந்த சம்பவத்துக்கு பிறகு ‘ஒரு ரூவா காய்ன் பூத்’தில் இருந்து ஏதேனும் சாதாரண கால்கள் வந்தாலே, பருத்திவீரன் க்ளைமேக்ஸ் பிரியாமணி மாதிரி “டேய் என்னை விட்டுடுங்கடா...” என்று அடுத்த சில நாட்களுக்கு வரவனை கதறிக் கொண்டிருந்தார். அந்த காலக்கட்டத்தில் இரவுகளில் அவருக்கு வந்த கனவுகளில்கூட நமீதா வந்ததில்லையாம். ஒரு ரூபாய் போன் பூத்துதான் அடிக்கடி வருமாம். ஆனால் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடிடமிருந்து அதற்குப்பிறகு போன் வந்ததே இல்லை என்பதுதான் வரலாற்று சோகம். பதிலுக்கு வரவனையின் ப்ளாக்கில் அனானிமஸ் கமெண்டாக “உன் ஏரியாவை சொல்லுடா, அட்ரஸை கொடுடா” என்று மட்டும் கொஞ்ச நாட்களுக்கு ரெகுலராக கமெண்டுகள் வந்துக் கொண்டிருந்தது.

17 செப்டம்பர், 2013

பலூன்

“அனாதையாய் சாலையில் பறந்துகொண்டிருக்கும் பலூன்களை கண்டிருக்கிறீர்களா. குறிப்பாக வாரயிறுதி இரவுகளில் வெள்ளை, மஞ்சள், ஊதா, சிகப்பு நிற பலூன்களை பார்க்கலாம். அவை கல்யாண வரவேற்புக்கோ, பிறந்தநாள் விழாவுக்கோ சென்று வந்த குழந்தைகளுக்கு பரிசளிக்கப்பட்டவையாக இருக்கக்கூடும். இரவு ஒன்பது மணிக்கு மேல் வீடு திரும்பும்போது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே சாண்ட்விச்சாய் அமர்ந்திருக்கும் குழந்தை தூக்கக்கலக்கத்தில் தவறவிடும் பலூன்களே அவை.

வீட்டுக்குப் போனதும், தூக்கம் களைந்த எரிச்சலிலும் பலூனை தொலைத்த கையாலாகத்தனத்தை எண்ணியும் குழந்தை எப்படியும் அழும். புது பலூன் வேண்டும் என்று அடம்பிடிக்கும். முன்னேற்பாடான பெற்றோர் என்றால் வீட்டிலேயே ஸ்டாக் வைத்திருக்கும் பலூனை ஊதிக்கொடுத்து சமாளிப்பார்கள். அல்லது அடம் பிடிக்கும் குழந்தை செம சாத்து வாங்கி, கேவிக்கொண்டே தூங்கும்.

ஒரு சப்பை மேட்டருக்கு இத்தனை ஆராய்ச்சி தேவையா என்று கேட்காதீர்கள். இனிமேல் இரவுப் பயணங்களில் இம்மாதிரி பலூன்களை பார்த்ததுமே நீங்களும் இப்படித்தான் என்னை மாதிரியே ஆராய்ந்து மன உளைச்சல் அடையப் போகிறீர்கள். ஏனெனில் உங்கள் கண் முன்னால் பறந்துப் போவது வெறும் பலூன் அல்ல. ஒரு குழந்தையின் தற்காலிக மகிழ்ச்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்”

நானே எதிர்ப்பார்க்காத அளவுக்கு செம கைத்தட்டல். நண்பரின் பொம்மைக்கடை திறப்புவிழா. திறந்துவைத்து பேச ஒப்புக்கொண்ட நடிகை, திடீரென்று ஏதோ ஷூட்டிங்குக்கு மும்பை போய்விட்டாராம். விழாவை ஒப்பேற்ற விருந்தினராக வந்த என்னை மாதிரி இரண்டு மூன்று பேரை பேசவைத்து சமாளித்தார் நண்பர். எதையாவது பேசவேண்டுமே என்பதால் திட்டமிடப்படாத இந்த திடீர் உரையை பேசினேன். உண்மையில் என் உரையில் அமைந்திருந்தது மாதிரி எனக்கு பெரிய பலூனாபிமானமோ, குழந்தைகள் மீது அக்கறையோ எதுவுமில்லை. வந்திருந்தவர்களை ஈர்க்க வேண்டுமே என்று வலிய திணித்த உணர்ச்சிகள் இவை.

நண்பர் அருமையான இரவு உணவை ஏற்பாடு செய்திருந்தார். சாப்பிடும்போது என்னை பாராட்டாத ஆளே இல்லை. எனக்கு கிடைக்கும் இந்த பெருமையை எல்லாம் பக்கத்தில் நின்று பார்க்க என்னுடைய மனைவியையும், மாமியாரையும் அழைத்துவரவில்லையே என்று நொந்துகொண்டேன். எல்லாம் முடிந்து கிளம்பும்போது நேரம் இரவு பத்தை தாண்டியிருந்தது. பல்ஸரை கிக்கி சீறவிட்டேன்.

இரவு பன்னிரெண்டுக்கும் கூட நெரிசலாக இருக்கும் அண்ணாசாலை ஏனோ அன்று வெறிச்சோடிப் போயிருந்தது. எழுபதில் வண்டி அனாயசமாக பறந்தது. முகத்தில் மோதிய காற்று உற்சாகமளித்தது. சைதாப்பேட்டையை தாண்டும்போது வானம் இருட்டத் தொடங்குவதாக உணர்வு. தூரத்தில் மின்னல் பளிச்சிட்டது. காற்றில் ஈரத்தை உணர, அடுத்த அரை மணி நேரத்தில் வானம் பிளந்து பேய்மழை கொட்டப் போகிறது என்று யூகித்தேன். லேசான ரம்மியமான மண்வாசனை. விரைவாக வீடு சேரும் அவசரத்தில் ஆக்ஸிலேட்டரை கூடுதலாக முறுக்கினேன். அடுத்த ஐந்தாவது நிமிடம் கிண்டியை தொட்டேன். பாலத்துக்கு அருகிலிருந்த நட்சத்திர ஓட்டல் வாசலில் கசகசவென்று போக்குவரத்து நெரிசல். பணக்காரர்களுக்கு பார்ட்டிக்குப் போவதைத் தவிர வேறு வேலையே இல்லை.

வீட்டுக்கு போக வேண்டிய அவசரத்தில் இருந்த நான் பாலத்தில் ஏறினேன். ஒரு சுற்று சுற்றி தாம்பரம் போகவேண்டிய வழியை அடைந்தேன். பாலத்தில் இருந்து இறங்கும்போதுதான் கவனித்தேன். வெள்ளை நிற பலூன் ஒன்று காற்றில் இங்கும் அங்குமாக அலைந்துக் கொண்டிருந்தது. ஏதோ இனம்புரியாத உணர்வு உள்ளத்தை உந்த, வண்டியின் வேகத்தை குறைத்தேன். இண்டிகேட்டரை இயக்கி பலூனுக்கு அருகாக வண்டியை ஓரங்கட்டினேன். அந்த பலூனை எடுத்து வழியில் எதிர்படும் முதல் குழந்தையிடம் கையளிக்க வேண்டும். அந்த பிஞ்சு முகத்தில் ஏற்படும் குதூகலத்தை ரசிக்க வேண்டும். இப்படியெல்லாம் நல்லவிதமாக வாழ்க்கையில் இதுவரை நான் யோசித்ததே இல்லை. ஒரே நாளில் ஏன் இப்படி மாறிவிட்டேன்?

அலைந்துக்கொண்டிருந்த பலூனை இரு கை நீட்டி தொட்டதுதான் தாமதம். தலை கிறுகிறுக்கத் தொடங்கியது. கால்கள் பிடிமானம் இல்லாமல் தரை நழுவியது. பாலம் இடிந்து விழுந்துக் கொண்டிருக்கிறதா. சென்னையில் பூகம்பமா. இல்லை, நான் மயங்கிக் கொண்டிருக்கிறேனா. எதுவுமே புரியவில்லை.

கண்விழித்து, மலங்க மலங்க நான் பார்த்தபோது வெள்ளைச்சட்டையும், நீலநிற பேண்டும் அணிந்திருந்த கருப்பான ஒருவன் என் எதிரில் நின்றிருந்தான். விகாரமாக சிரித்தான். முட்டைக்கண், தெத்துப்பல் என்று அவனை பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

“இப்படித்தாம்பா எனக்கும் ரெண்டு நாளைக்கு முன்னால போரூர் சிக்னலாண்ட ஆச்சி. நல்லவேளையா நீ தொட்டியா. நான் தப்பிச்சேன். உன்னையும் எவனாவது இளிச்சவாயன் தொடுவான். அதுவரைக்கும் வெயிட் பண்ணு” சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் பேய் மாதிரி ஓட ஆரம்பித்தான். அவன் சொன்னது எக்கோவாக திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது.

யெஸ். நம்பினால் நம்புங்கள். நானே பலூனாக மாறிவிட்டேன்.