27 ஜனவரி, 2012

செய்தி, துயரம், மரணம்!

செய்தித்தாள் வாசிப்பது என்பது இயந்திரத்தனமான சம்பிரதாயமாக மாறிவிட்டது. ‘சதக் சதக்’ ‘கதறக் கதற’ மாதிரியான வார்த்தைகள் பழகிவிட்டன. இச்சொற்கள் முன்பு கொடுத்த உணர்வுகளை இப்போது தருவதில்லை. செய்தி என்பது இன்றைய தேதியில் வெறும் தகவலை மட்டும் சுமந்துவரும் வஸ்துவாக மாறிவிட்டது. இது செய்தியை தரும் ஊடகங்களின் கோளாறா அல்லது வாசிப்பவன், எச்செய்தியாக இருந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய மனோபாவத்துக்கு மாறிவிட்டானா என்கிற மிகப்பெரிய விவாதத்துக்கான புள்ளி.

அத்திப்பூத்தாற்போல எப்போதாவது ஒரு செய்தி அன்றைய தினத்தையே முழுவதுமாக பாதித்துவிடும். இன்று காலை தினகரன் நாளிதழில் வாசித்த ஒரு செய்தி உடனடியாக கண்களில் நீர் கோர்க்கச் செய்தது.

நீலகிரி மாவட்ட ஆயுதப்படை காவலர் முப்பது வயதான பாண்டியன். ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் பங்குபெற்ற குடியரசுத்தின கொண்டாட்டத்தின் இறுதியில் பாண்டியனின் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

ஒற்றைக்காலில் பைக்கில் நின்றவாறே வந்து மக்களுக்கு சல்யூட் அடிக்கிறார் பாண்டியன்.

அடுத்து பாய்ந்து, பறந்து வந்து கால்களால் ஓடுகளை அனாயசமாக உடைக்கிறார்.

கடைசியாக பதிமூன்று பேரை கடந்து பறந்துவருவது நிகழ்வில் அவரது கடைசி சாதனை. புவியீர்ப்புக்கு சவால் விட்டு அச்சாதனையையும் வெற்றிகரமாக செய்து முடித்தார்.

பாண்டியனின் சாகசங்கள் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைக்க, துரதிருஷ்டவசமாக இதுவே அவரது வாழ்வின் இறுதி சாதனையாகவும் முடிந்துவிட்டது. பதிமூன்றாவது ஆளை பறந்து கடக்கும்போது கை தவறுதலாக பட்டு, இவர் விழவேண்டிய மெத்தை நகர்ந்துவிட்டது. கழுத்து எலும்பு உடைந்து, மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தநாளம் அறுந்து சில நிமிடங்களிலேயே உயிரிழந்துவிட்டார் பாண்டியன்.

பாண்டியனின் மனைவி பெயர் சந்தியா. இத்தம்பதியினருக்கு நான்கு வயது ஆண் குழந்தையும், பதினோரு மாத பெண் குழந்தையும் உண்டு. பாண்டியனின் சாகசத்தை நேரில் காண அவரது மனைவியும் கைக்குழந்தையோடு வந்திருந்தார். சம்பவம் மொத்தத்தையும் அவர் நேரில் பார்த்தார்.

நொடியில் நடந்துவிடும் இதுபோன்ற விபத்துகள், பலியாகும் அப்பாவி உயிர்கள், விளைவாக வாழ்க்கை முழுக்க பாதிக்கப்படும் குடும்பம், குழந்தைகள்... கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்?

25 ஜனவரி, 2012

வேட்டை – கமர்சியல் கோட்டை

‘பப்பரப்பா’ பாட்டு தொடங்கும்போது ரைட் ஸ்க்ரீன் முழுக்க க்ளோசப்பில் காட்டப்படும் அமலாபாலின் பேரழகு தொப்புளை காண்பதற்காகவே இன்னொரு முறை சூரியன் தியேட்டரில் ஐம்பது ரூபாய் டிக்கெட்டுக்கும், இருபது ரூபாய் பைக் டோக்கனுக்கும், இருபத்தைந்து ரூபாய் வாயில் வைக்க சகிக்காத கண்ணறாவி காஃபிக்கும் அழலாம் போலிருக்கிறது.

தமிழ், ஆங்கிலம், சீனம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா என்று எல்லா மொழிகளிலுமே ஏறத்தாழ நூற்றி சொச்சமுறை படமாக்கப்பட்டுவிட்ட பயந்த அண்ணன், வீரம் செறிந்த தம்பி கதையை லட்சத்து சொச்சமாவது முறை படமாக்கியிருக்கும் லிங்குசாமியை, நண்பன் பாணியில் பேண்ட் அவுத்து சாஷ்டாங்கமாக காலில் விழுந்து ‘தலைவா கலக்கிட்டே!’ என்றுதான் பாராட்டித் தொலைக்க வேண்டும்.

‘டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுன்னு சொன்னாங்க. மூணு ஹீரோ இருக்காங்களே பாஸூ’ என்று கூட படம் பார்த்த தோழரிடம் சொன்னபோது, ‘முட்டாள். அது ஹீரோயின், பேரு சமீராரொட்டி’ என்று கடிந்துக் கொண்டார். ஹீரோயினைக் கண்டதுமே ரசிகனுக்கு காதல் எழும்ப வேண்டும். அட்லீஸ்ட் தரையிலிருந்து காலாவது அரை இஞ்சுக்கு பரவசத்தில் மேலெழும்பவேண்டும். சமீராவைக் கண்டதுமே பக்கத்துவீட்டு விடலைப் பையனைக் கண்டது மாதிரி எரிச்சல்தான் மண்டிக்கொண்டு வருகிறது. இந்த அழகில் அம்மணிக்கு அஞ்சு செகண்டுக்கு ஒருமுறை குளோசப் வேறு. திட்டு திட்டான மேக்கப்பில் சமீராவை ஜூம் செய்துப் பார்த்த நீரவ்ஷாவுக்கு சிக்கன் குனியா வந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஏமி லேது.

மிகச்சரியாக பண்ணிரெண்டு வருடங்களுக்கு முன்பாக லவ்வர் பாயாக அறிமுகமான மாதவனைப் பார்த்தால் ‘அங்கிள்’ என்றுகூட சொல்லத் தோன்றவில்லை. அடுத்த ஆண்டு ‘தாத்தா’ என்றே கூப்பிடலாம் போல. குட்டி கமல்ஹாசன்னு பேரு எடுத்தா மட்டும் போதாது பாஸூ. காதல் இளவரசனை பாருங்க. அறுபது வயசானாலும் இளவரசனாகவே இருக்கிறார். இவரைவிட மருதமலை வடிவேலுக்கு போலிஸ் யூனிஃபார்ம் பாந்தமாக இருந்தது. ஆர்யாவின் அதே ஸ்டீரியோ டைப் நடிப்பு. முகத்தில் வராத உணர்ச்சிகளை டப்பிங்கில் சரிகட்டும் உலகின் ஒரே நடிகராக இவர்தான் இருக்கவேண்டும்.

தூத்துக்குடியில் தினம் தினம் தீபாவளிதான் போல. படம் ஆரம்பித்ததில் தொடங்கி எங்காவது யாராவது பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இருளான வானத்தைக் காட்டினாலே வானவேடிக்கைதான்.

மிக மிக பலவீனமான அல்லது ஆயிரம் முறை சலித்து, லட்சம் முறை அரைத்த அதே மாவை வைத்துக்கொண்டு சூடான சுவையான இட்லியை சுட்டுக் கொடுத்திருக்கிறார் லிங்கு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முழம் முழமாக காதில் பூ சுற்றி, ஒன்றரை சவரனுக்கு கம்மல் வாங்கி குத்தினாலும் சுவாரஸ்யமான படமாக்கலில் லிங்கு கிங்கு.

படத்தின் பட்ஜெட்டை விட குறைந்தது மூன்று மடங்கு அதிகம் வைத்து ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்கு பெரும் தொகைக்கு தள்ளிவிட்டதாக பேசிக் கொள்கிறார்கள். ஒருவேளை நியாயமான விலைக்கு விற்றிருந்தால், படத்தை வாங்கியவருக்கு கோடி கோடியாக கொட்டியிருக்கும். மாறாக வாங்கிய ரேட்டை நினைத்துப் பார்த்தால் இந்த கம்பெனியின் கதியும் தெருக்கோடிதானா என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

23 ஜனவரி, 2012

கயல்விழி

அவளிடம் இதை எப்படி கேட்பது என்பதில் நிறைய தயக்கம் இருந்தது. பிரம்மன் ஓவர்டைம் செய்து அவளை உருவாக்கியிருப்பான் போலிருக்கிறது. கயல்விழி என்ற பெயரைவிட அவளுக்கு பொருத்தமான வேறு ஒரு பெயர் இல்லவேயில்லை. கயலின் விழிகள் அலெக்சாண்டரின் போர்வாள் போல கூர்மையானது. பார்வையால் ஒரு வெட்டு வெட்டினாள் என்றால் எப்படிப்பட்ட ஆணும் இதயம் அறுந்து உயிரிழப்பான்.

அவள் வேலை பார்த்த கடையில் இருந்த எல்லாப் பெண்களுமே கொள்ளை அழகு தான். இருந்தாலும் நிலவோடு நட்சத்திரங்கள் போட்டியிட முடியுமா? அவளுடைய உயிர்த்தோழி ஒருத்தி டைட்டானிக் கேட் வின்ஸ்லட் மாதிரியே நல்ல கலர், செம்ம கட்டை. அவள் இவளை 'கைல்' என்று அழைப்பதே ஸ்டைலாக இருக்கும். அவளிடம்தான் முதலில் 'இதை' கேட்க நினைத்தான். ஆனாலும் கயலைப் பார்த்த பின் வேறு எந்தப் பெண்ணிடமும் 'இதை' கேட்க அவனுக்கு தோன்றவில்லை.

யதேச்சையாக ஒரு நாள் கர்ச்சிப்பை மறந்துவைத்து விட்ட தினத்தில் தான் அந்த கடைக்கு கர்ச்சிப் வாங்க வந்தான் அவன். அப்போது தான் அவளைப் பார்த்தான். தினமும் அவள் வேலை செய்யும் துணிக்கடையை தாண்டிப் போகும்போதெல்லாம் அவளிடம் வெட்கத்தை விட்டு இதை கேட்டுவிட வேண்டும் என்று நினைப்பான். ஒரு நாகரிகமான பணியில் இருக்கும் கணவானான அவன் இதை நாலு பேர் எதிரில் கேட்டு அவள் ஏதாவது சொல்லி.. பொது இடத்தில் பிரச்சினை ஏதாவது வந்துவிடுமோ என்று அச்சப்பட்டான். கடைமுதலாளி வேறு பயில்வான் ரங்கநாதன் மாதிரி க்ரிப்பாக இருந்தார்.

அந்த பிரச்சினைகளை எல்லாம் பார்த்தால் 'இதை' தள்ளிப் போட்டுக் கொண்டே போகவேண்டும். எப்படியிருந்தாலும் இதை வேறு யாரிடமாவது கேட்கத்தான் போகிறோம், இவளிடமே கேட்டு விட்டாலென்ன? ‘அதை' அவளிடம் கேட்க ஒரு சுபமுகூர்த்த சுபதினத்தை குறித்துக் கொண்டான். காலண்டரில் நல்ல நேரம் பார்த்தான். மனதுக்குள் ‘தில்'லை லிட்டர் லிட்டராக ரொப்பிக் கொண்டான். அவனுக்கு பிடித்த கருப்பு - சிவப்பு டீஷர்ட்டை அணிந்துகொண்டான். பெண்கள் மையல் கொள்வார்கள் என்று சொல்லி விளம்பரப்படுத்தப்பட்ட நறுமண வஸ்துவை தாராளமாக உடலுக்கு உபயோகித்தான்.

நேராக கயல் வேலை பார்த்த அந்த துணிக்கடைக்கு போனான். அன்று கடையிலும் கூட்டம் குறைவு. கயலுக்கு பின்னால் கண்ணாடி அடுக்குகளில் அடுக்கப்பட்டிருந்த ‘அந்த' துணிவகைகளை வெறித்துப் பார்த்தான். கயலின் அந்த கேட்வின்ஸ்லட் தோழி குறும்பாக பார்த்தாள். கயலிடம் மெதுவாக ”ம்ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தொலைவுக்கு நகர்ந்தாள்.

கயலின் முகமும் லேசாக நாணத்தால் சிவந்திருந்தது போல தெரிந்தது.

“என்ன சார் வேணும்?” கோல்டன்பிஷ் வாய் திறந்து பேசினால் கயலைப் போலத்தான் பேசும்.

“ம்ம்... வந்து.. வந்து”

“சொல்லுங்க சார்!”

“கயல்.. நான் ஒரு எல்.ஐ.சி. ஏஜெண்ட். அன்னிக்கு ஏதோ பாலிசி போடணும்னு உங்க ஃப்ரெண்ட்ஸோட பேசிக்கிட்டிருந்ததை கேட்டேன்… என்கிட்டேயே பாலிசி எடுக்கலாமே?” கண்களைப் பார்த்து நேருக்கு நேராக, கடைசியாக ‘அதை’ கேட்டே விட்டான்.

(நன்றி : தினகரன் வசந்தம் 22-01-2012)

21 ஜனவரி, 2012

சாதி, வர்க்கம், சோஷலிஸம்

தெரியாத்தனமாக நண்பன் பார்த்துவிட்டேன். பார்த்துத் தொலைத்ததோடு விடாமல் ஏதோ ஒரு அறியாமையில் ‘விமர்சனம்’ மாதிரி எதையோ எழுதித் தொலைத்துவிட்டேன். ’உன்னைப் போல முட்டாளுக்கு படமெல்லாம் ஒரு கேடா?’ என்கிற அளவுக்கு நிர்வாண நண்டு என்கிற தோழர் பின்னூட்டத்தில் அறச்சீற்றத்தை கொளுத்திப் போட்டுவிட்டார். எனவே நேற்று மதுரை மாதிரி பற்றியெரிந்தது நம் இணையத்தளம்.

படத்தில் காட்டப்படும் பொறியியல் மாணவனான ‘விஜய் வசந்த்’ பாத்திரம், frustration தாங்காமல் தற்கொலை செய்துக் கொள்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் சமீபத்திய சில வருடங்களில் மட்டும் 18 மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதை இக்காட்சி உருவகப்படுத்துகிறது என்று குறிப்பிட்டிருந்தேன். நண்பர் நண்டுவுக்கு இது ஏற்புடையதல்ல. ‘அப்பாத்திரம் தலித் என்கிற வசனம் இல்லாததால், நீயாக எப்படி தலித் என்று குறிப்பிடலாம்? படத்தில் இருப்பதை மட்டும் பேசு’ என்கிறார். நண்பர் குறிப்பிடுவது உண்மைதான். விஜய் வசந்த்தும், அவரது அப்பாவும் கருப்பாக இருப்பது மட்டும் தலித்துக்கான குறியீடல்ல. அவரது அப்பா ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்ப்பதால் மட்டுமே தலித் என்றும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதெல்லாம் சரிதான். ஆனால் திரைப்படம் என்பது சமூகத்தையும் பிரதிபலிக்கிறது என்கிற வகையில், சமகாலச் சூழல்தானே வெளிப்படும்? ஒருவேளை ஷங்கர் இயக்கிய படமென்பதால் இம்மாதிரியான தலித் ஆதரவு சித்தரிப்புக்கு வாய்ப்பேயில்லை என்று நண்பர் நண்டு கருதக்கூடும். இங்கே குறிப்பிடும் சமகாலச் சூழல் என்னவென்று புரியாத நண்பர்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.

நண்பன் திரைப்படம் வெறும் கல்விப் பாடத்திட்டப் பிரச்சினையைத் தாண்டி, சமூகப் பிரச்சினையையும் (இயக்குனருக்கு தெரிந்தோ தெரியாமலோ) தொட்டிருக்கிறது என்பது என் நம்பிக்கை. இதையே நண்பர் கிருஷ்ணபிரபுவும் அவரது பின்னூட்டத்தில் குறியீடாக சில பாத்திரங்கள் வருவதை குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இதை வெறும் சினிமாவாக விவாதிக்காமல், சமூகப் பிரச்சினையாகவும் விவாதிக்க அழைப்பு விடுத்திருந்தார். எப்போதும் விவாதித்துக் கொண்டிருப்பதுதான் என்றாலும், இம்மாதிரி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கொஞ்சம் தீவிரமாக விவாதித்துப் பார்ப்பதில் தவறேதுமில்லை. எத்தனை கோணங்கள், எவ்வளவு தீர்வுகள், எம்மாதிரியான பிரச்சினைகள் என்றெல்லாம் அறிந்துகொள்ள இவ்விவாதங்கள் உதவுகின்றன.

கிருஷ்ணபிரபுவின் சம்பந்தப்பட்ட பின்னூட்டத்தில் “பொருளாதாரத்தால், சமூகத்தால், சாதிப்பிரிவால் ஒடுக்கப்படும் எல்லோருமே தலித்துகள்தானே?” என்று கேட்டிருக்கிறார். சட்டென்று வாசிக்கும்போது ‘சரிதானே?’ என்று தோன்றக்கூடும். இப்படித்தான் இங்கே வெகுஜன கம்யூனிஸ்ட்டு கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இதில் சாதியும், வர்க்கமும் ஒரே பிரச்சினை என்கிற தொனி இருப்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுவோம். இரண்டும் சர்வநிச்சயமாக வேறு, வேறு. வர்க்க வேறுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவன், தன்னளவில் நேர்மையாகவோ அல்லது அநியாயமாகவோ எப்படியோ பொருள்சேர்த்து தன்னுடைய வர்க்கத்தை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் பொருள் சேர்ப்பதால் மட்டும் ஒரு தலித் தன் மேல் சுமத்தப்பட்ட சாதிய இழிவை துடைத்துக்கொள்ளவே முடியாது என்பதுதான் இங்கே யதார்த்தம். உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த ஒருவர் கூட, மற்றைய உயர்சாதி நீதிபதிகளால் அவமானப்படுத்தப்படுவது என்பது இங்கே நடைமுறை. நாட்டுக்கே குடியரசுத்தலைவராக தலித் உயர்ந்திருந்தாலும், ஒரு சாதாரண கோயில் கும்பாபிஷேகத்தில் கூட கோபுரத்தில் அமரமுடியாது என்பதுதான் நிதர்சனம். எனவே வர்க்கத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் ஒரே தட்டில் நிறுத்தி விவாதிக்க முடியாது என்று கருதுகிறேன்.

நாட்டில் அவ்வப்போது எவ்வளவோ பிரச்சினைகள் கிளம்பிக் கொண்டிருக்கலாம். எல்லாவற்றுக்கும் எதோ ஒருவகையில் தீர்வினை கண்டெடுக்க முடிகிறது. சாதிப்பிரச்சினைக்கு மட்டும் கண்ணுக்கெட்டும் தூரத்துக்கு எந்தத் தீர்வும் இருப்பதாக தெரியவில்லை. இதன் இந்துத்துவ கட்டுமானம் மிகவும் பலமானது. மனித மனங்களின் அடிப்படையில் சாதியம் இயங்குவதாலும், அது பரம்பரை பரம்பரையாக ஜீன்களின் வழியாக அறிவியல்பூர்வமாகவே கடத்தப்படுவதாலும் நவீன உலகிலும் பூதாகரமாக நமக்கு முன் வளர்ந்து நிற்கும் பிரச்சினையாக இருக்கிறது. மதம் மாறினாலும் சாதியம் மனதில் தங்குமளவுக்கு மிகப்பலத்த கட்டுமானம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்படியொரு பிரச்சினை இந்திய சமூகத்தில் இருப்பதைச் சொன்னால், ஏழை-பணக்காரன் என்கிற வர்க்கப் பிரிவினை மற்றும் ஒரு சில இன, மொழிப் பிரிவினைகளை மட்டுமே கேள்விப்பட்ட மேல்நாடுகளில் இதையெல்லாம் நம்பக்கூட மாட்டார்கள். கிட்டத்தட்ட நாலாயிரம் சாதிகள் இங்கே உண்டு. முற்படுத்தப்பட்ட சாதி எனப்படும் பார்ப்பனர்களிலேயே கூட ஐம்பதுக்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கின்றன.

‘எல்லோரும் சமம்’ என்கிற கருத்தியலைக் கொண்ட சோஷலிஸம் இதற்கு தீர்வாக தோன்றுகிறது. நேரு முன்நிறுத்திய போலி சோஷலிஸத்தை இங்கே நினைத்துக்கூட பார்க்க வேண்டாம். அது வெறும் வார்த்தையளவில் சொல்லப்பட்ட சித்தாந்தம். துரதிருஷ்டவசமாக சோஷலிஸத்தை இங்கே முன்னெடுக்கக்கூடிய வெகுஜன கம்யூனிஸ்ட்டு கட்சிகளோ வர்க்கத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடியவையாக இருக்கின்றன. ஐரோப்பாவில் எப்படி கம்யூனிஸம் அமல்படுத்தப்பட்டதோ, அதே மாதிரியை அச்சு அசலாக இங்கே இயந்திரம் மாதிரி பொருத்திப் பார்ப்பது நம்மூர் கம்யூனிஸ்டுகளின் பலவீனம். ஐரோப்பாவில் முதலாளி-தொழிலாளி என்று இரண்டே இரண்டு வர்க்கப் பிரிவு. மாறாக இந்தியாவில் நாலாயிரத்து சொச்சம் சாதிப்பிரிவுகள். இந்தியாவுக்கு ஏற்ற கம்யூனிஸ சிந்தனைகளை புதியதாக உருவாக்கியிருக்க வேண்டும். இந்தப் போதாமையின் காரணமாகதான் மார்க்ஸால், சேகுவேராவால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸப் பாதைக்கு வந்த இந்திய தலித்துகளும், பழங்குடியினரும் பிற்பாடு நக்சலியப் பாதைக்குச் சென்றார்கள்.

கம்யூனிஸ்டுகள் செய்யத் தவறியதை திராவிட இயக்கம் தனக்கான பலமாக உருவாக்கிக் கொண்டது. சோஷலிஸ கம்யூனிஸ்ட்டு சிந்தனைகளை ‘பிட்’ அடித்து, தென்னிந்திய சமூக சாதிப்பிரிவுகளை கணக்கில் கொண்டு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாகான புதிய சிந்தனைகளை உருவாக்கி மக்களிடம் பிரபலமானது. ஆனால் திராவிட இயக்கம் கூட சாதிப்பிரச்சினைக்கு தற்காலிகமான தீர்வினைதான் வழங்கியிருக்க முடிகிறது. பிற்படுத்தப்பட்டோரின் எழுச்சியை துரிதமாக்கி செயல்படுத்திக் காட்டிய இவ்வியக்கம், தலித்துகளின் முன்னேற்றம் குறித்த சிந்தனைகளில் ஈடுபாடு காட்டவில்லை. மாறாக திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளால் வளர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகளை நசுக்குவதை (முன்பு முற்படுத்தப்பட்ட சாதியினர் பிற்படுத்தப்பட்ட சாதியினரை செய்தது மாதிரி) வழக்கமாகிக் கொண்டார்கள். திராவிட இயக்கங்கள் வளர்ச்சி பெற்றதில் பக்க விளைவாக இன்றைய பிற்படுத்தப்பட்டவர் – தலித்துகள் சமூக மோதல் சூழலை நாம் சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம். எனினும் கூட மனுதர்மத்தை முழுமையாக செயல்படுத்தப்பட விடாமல் முட்டுக்கட்டையாக முன் நிற்பதால், திராவிட இயக்கத்தின் தேவை இன்றும், இன்னும் சில ஆண்டுகளுக்கும் அவசியமென்றே கருதுகிறேன். சாதியம் ஒட்டுமொத்தமாக ஒழிவதற்கான ஒளிக்கீற்று தெரியும் வரையாவது இங்கே திராவிட இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்தியாக வேண்டும்.

முதலாளித்துவம் ஓரளவுக்கு சாதியத்தை மற்றுக்கக்கூடிய பண்பு கொண்டதாக தெரிகிறது. அறிவோ, பணமோ, ஆற்றலோ கொண்டவனாக இருந்தால், அவனையும் மேல்தட்டுக்கு ஈர்த்துக் கொள்வதில் இது சாதி பாகுபாடு எதையும் பார்ப்பதில்லை என்பதை ஒப்புக் கொள்ளலாம். அதே நேரம் முதலாளித்துவத்தின் முக்கிய விளைவாக வர்க்க வேறுபாடு அதிகரித்துக் கொண்டே செல்லுவது பெரும் ஆபத்தில் முடிகிறது. இந்தியா ஏழை நாடாக 90களுக்கு முன்பாக இருந்தபோது கூட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டதில்லை. வளரும் நாடாக, இன்னும் சில ஆண்டுகளில் வல்லரசு ஆகப்போகிறது என்றிருக்கும் சூழலில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இங்கே தொழில் செய்யமுடியாமல் கொத்து கொத்தாக தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். டங்கலின் காட் ஒப்பந்தம் வந்த காலக்கட்டத்தில் உறுதி கூறப்பட்ட விஷயங்கள் இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்தியாவில் நிறைய பணம் இருக்கும். லட்சாதிபதி கோட்டீஸ்வரன் ஆவான். ஏழை நடுத்தரவாதியாக உயர்வு பெறுவான் என்றெல்லாம் நாக்கில் தேன் தடவி சொன்னார்கள். இருபது ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர்கள் சொன்னதில் பாதி நிறைவேறியிருக்கிறது. இந்தியாவில் இப்போது நிறைய பணம் இருக்கிறது. லட்சாதிபதிகள் கோட்டீஸ்வரன்களாக மட்டுமல்ல, குபேரன்களாகவும் ஆகியிருக்கிறார்கள். ஆனால் ஏழைகளோ சிரமப்பட்டு வாழமுடியாமல் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். முதலாளித்துவத்துக்கு சொல்லிக் கொள்ளக்கூடிய சாதியப் பண்புகள் குறைவு என்பதற்காக, அதை வரவேற்றுவிட முடியாது. அதனுடைய மற்ற பக்கவிளைவுகள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை விட கொடுமையானதாக இருக்கிறது.

நாம் இப்போது வைத்துக் கொண்டிருக்கும் படு வீக்கான ஜனநாயகத்தைக் கொண்டு இந்த விஷயத்தில் புல்லு கூட புடுங்க முடியாது என்பதுதான் யதார்த்தம். ஸ்டாலின், மாசேதுங் மாதிரி யாரேனும் இரும்பு மனம் கொண்ட தலைவர் முற்போக்கு எண்ணங்களோடு கூடிய ஒரு சோஷலிஸ சர்வாதிகாரத்தை இங்கே அமல்படுத்தினால் மட்டுமே ஒட்டுமொத்தமாக இந்திய சமூகத்தின் சாதியப் பிரிவுகளை அடித்து நொறுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு இன்னும் ஒரு நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்குள் எல்லாம் நடந்து விடும் வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.

20 ஜனவரி, 2012

நண்பன்

மூன்று வருடங்களுக்கு முன்பு 3 இடியட்ஸ் வெளியானபோது ஊரே கொண்டாடிக் கொண்டிருந்தது. ‘இன்னும் 3 இடியட்ஸ் பார்க்கலயா?’ என்று கேட்பவர்களிடம் ‘இல்லை’ என்றபோது ஏதோ புழுவைப் பார்ப்பதுபோல பார்த்தார்கள். ஒரு படம் பார்க்காதது அவ்வளவு பெரிய குற்றமா என்று நொந்துக் கொள்வேன். இந்தியாவே கொண்டாடிய 3 இடியட்ஸை பார்க்காமல் கவனமாக தவிர்த்து வந்ததற்கு ஒரே ஒரு காரணம் அந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில், விஜய் நடிக்க தமிழில் தயாராகப் போகிறது என்பதை கேள்விப்பட்டதால்தான். ஒரு படத்தை ரீமேக்கில் பார்க்கும்போது ஒப்பிடுதல்கள் ஏற்படுத்தும் அசவுகரியம் எரிச்சலானது. ‘நண்பன்’ எரிச்சலை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதாலேயே இடியட்ஸைப் பார்க்கவில்லை. ஒருவழியாக WAIT IS OVER

நண்பன் – ஷங்கரின் படமுமல்ல, விஜய்யின் படமுமல்ல. அதனாலென்ன? ALL IS WELL

குஷி வந்து பண்ணிரெண்டு ஆண்டுகள் ஆகிறது. குஷியில் தெரிந்த விஜய்யைவிட நான்கைந்து வயது குறைந்த விஜய்யோ இவர் எண்ணுமளவுக்கு இளமை கொப்பளிக்கிறது விஜய்யின் தோற்றத்தில். பாபா தோல்வியால் மனமுடைந்துப் போயிருந்த ரஜினிக்கு அவரது கேரியரில் சந்திரமுகி எவ்வளவு முக்கியமான படமோ, அதே அளவுக்கு விஜய்க்கு நண்பன் முக்கியமான படம். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து பிளாக்பஸ்டர் ஹிட். பொங்கல் எப்போதும் இளையதளபதியை கைவிடுவதேயில்லை. தன்னை முழுமையாக ஒரு இயக்குனரிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு விஜய் நடிப்பார் என்பதை நம்பவே இயலவில்லை. விஜய்யின் டயலாக் டெலிவரி பல நேரங்களில் எரிச்சலூட்டும். வாயில் மாவா போட்டுக் குதப்பிக்கொண்டே உதட்டை மட்டும் அசைப்பது மாதிரி தெரியும். நண்பனில் இந்த ஸ்டைல் மிஸ்ஸிங் என்பது பெரிய ஆறுதல். பஞ்ச் டயலாக், ஓபனிங் சாங், எலும்புகளை நொறுக்கும் ஃபைட் சீனெல்லாம் இல்லாமல் விஜய் நடித்திருக்கிறார். இருந்தாலும் ஓபனிங்குக்கு மட்டுமாவது ஒரு அதிரடி ஃபைட் வைத்திருக்கலாமோவென்று தோணத்தான் செய்கிறது. அதனாலென்ன? ANIL IS WELL

கொழுக் மொழுக் அழகுப்புயலான அனுயாவை அக்கா ஆக்கிவிட்டு, ஈர்க்குச்சி இலியானாவை ஹீரோயின் ரோலுக்கு புக் செய்த ஷங்கரின் ரசனை என்ன ரசனையோ? அனுயா ரசிகர்கள் தியேட்டரில் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். ரவிதேஜாவின் ‘கிக்’கில் கிக் ஏற்றிய இலியானா ஏனிப்படி இளைத்துப்போனார் என்றே தெரியவில்லை. எப்படியிருந்த இலியான இப்படி சப்பிப்போட்ட மாங்கொட்டை மாதிரி ஆகிவிட்டிருக்கிறார். முகத்தைக் கண்டு அடையாளம் காண இயலாத அளவுக்கு தோற்றம் மாறிவிட்டிருக்கிறது. கடைசியாக இடுப்பைப் பார்த்துதான் இது இலியானா என்று தெரிந்துகொள்ள முடிந்தது. இடுப்பு சைஸ் இருபத்து நாலு இஞ்சாக இருக்கலாம். ILIYANA IS BAD

இந்தப் படத்தில் சத்யராஜை அனைவரும் பாராட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. வழக்கமான சத்யராஜின் பாடி லேங்குவேஜூம், டயலாக் டெலிவரியுமே அபாரமாக இருக்கும். சத்யராஜின் கேரியரிலேயே அவர் நடித்த படா மொக்கை கேரக்டரான வில்லாதி வில்லன் ‘பூ’வை மறுபடியும் ரீமேக் செய்து பிரின்சிபலாக நடித்திருக்கிறார். வாயை வேறு கவுரவம் சிவாஜி மாதிரி வைத்துக்கொண்டு குரல் மாற்றிப் பேசும்போது எரிச்சல் மண்டிக்கொண்டு வருகிறது. SORRY VIRUS

2002ல் ரோஜாக்கூட்டத்தில் பார்த்த ஸ்ரீகாந்த் பத்து வருடம் கழிந்தும் அப்படியேதான் இருக்கிறார். ஒரு இன்ச் கூட நடிப்பாற்றல் அவருக்கு வளரவேயில்லை என்பதுதான் சோகம். நல்லவேளையாக ஜீவாவும், சத்யனும் மாறி, மாறி அசத்துவதால், ஸ்ரீகாந்த் ரொம்ப உறுத்தவில்லை. குறிப்பாக கவுன்சலிங் காட்சியில் அடக்கி வாசித்து, சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களில் அசத்தும் ஜீவா.. க்ளாஸ்.. JEEVA IS TOO WELL

படம் பார்த்த சில நண்பர்கள் இப்படம் மிக மோசமான அரசியலை முன்வைப்பதாக சொல்கிறார்கள். ஏனோ எனக்கு அப்படி எதுவும் உறுத்தவில்லை. அல்லது அம்மாதிரி அரசியல் பார்வையோடு படம் பார்க்கத் தெரியவில்லை. மாறாக நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் தற்கொலை செய்வதை, சிறப்பாக படம் பிடித்து காட்சியாக காட்டியதற்கு பாராட்டவே தோன்றுகிறது. ஜீவாவின் குடும்பப் பின்னணியை காட்டும் காட்சிகளில் ஏழ்மையை கேலி செய்வதாக ஒரு குற்றச்சாட்டு. போதுமான இரக்கம் கோரவில்லை என்பதைத் தவிர்த்து இதில் வேறு பிரச்சினை இருப்பதாக தோன்றவில்லை. ஏழ்மையை யதார்த்தமாக காட்டுவதாக சொல்லிக் கொள்ளும் சில படைப்புகள் மோசமான கருத்தியல் வன்முறையை உருவாக்கவல்லவை. கல்விமுறை மாறவேண்டும் என்கிற படத்தின் அடிநாதத்தில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். இது சேத்தன் பகத் எழுதிய ஏதோ ஒரு நாவலின் ‘தீம்’. அவருக்கு கிரெடிட் கொடுக்கவில்லை என்று சிலர் ஆதங்கப்படுகிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு மாலன் எழுதிய ‘தப்புக்கணக்கு’ என்கிற சிறுகதை ஒன்றும்கூட இதே தீமில் எழுதப்பட்டிருக்கிறது. என்ன, அதில் எல்.கே.ஜி. மாணவி. இதில் என்ஜினியரிங் மாணவன். தேடிப் பார்த்தால் இதே தீமை நிறையப் பேர் எழுதியிருக்கலாம். அரசியல்ரீதியாக ஷங்கரை திட்ட அவரது பழைய படங்களே போதுமானது. ஒப்பீட்டளவில் அவரது முந்தையப் படங்களோடு ஒப்பிட்டால் நண்பன் இந்த அரசியல் விஷயத்தில் ஓரளவுக்கு பெட்டர் என்றே கருதுகிறேன். I MAY BE BLIND IN THIS CASE


இந்தப் படத்துக்கு ஏன் இத்தனை பாடல்கள் என்றே புரியவில்லை. எல்லா பாட்டும் ஸ்பீட் பிரேக்கர் தான். படத்தில் இருக்கும் ஒரே உருப்படியான பாடலான ‘ஃப்ரெண்டை போல யாரு மச்சான்’ டைட்டில் பாடலாக வீணடிக்கப்பட்டு விட்டது. மற்ற பாடல்கள் எதுவும் திரும்பக் கேட்கக்கூடிய ரகமாக கூட இல்லை. ஷங்கரின் படங்களிலும் சரி. விஜய்யின் படங்களிலும் சரி. இதுதான் படுமோசமான இசை ஆல்பம். MUSIC IS WORST

பிரசவத்தில் ஷங்கருக்கு என்னதான் ஆர்வமோ தெரியவில்லை. முந்தையப் படத்தில் ரோபோ பிரசவம் பார்த்தது. இந்தப் படத்தில் அணில் பிரசவம் பார்க்கிறது. இந்தக் காட்சிக்கு இன்னும் டாக்டர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என்று தெரியவில்லை. இம்முறையில் பிரசவம் சாத்தியமா என்றும் புரியவில்லை. ஷங்கருக்கு ஹாலிவுட் ஃபேண்டஸி படங்களில் க்ளைமேக்ஸ்கள் ரொம்பவும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ‘நாம சாதிச்சிட்டோம்’ என்று கூறி கடைசியில் ஒருவரையொருவர் அமெரிக்கர்கள் கட்டிக் கொள்வார்கள். அதே பாணி காட்சிகள் இவரது படங்களில் தொடர்ச்சியாக வந்துக் கொண்டிருக்கிறது. முதல் பாதி முழுக்க இளையத் தலைமுறைக்கான அட்வைஸ் மழை கொட்டோ, கொட்டுவென்று கொட்டுகிறது. வசனம் எழுதியவர் அப்துல்கலாமா அல்லது இறையன்புவா என்று டவுட்டு வந்துத் தொலைக்கிறது. OVERDOSE


‘ஃபீல்குட் மூவிஸ்’ என்று சொல்லக்கூடிய வகை தமிழில் அருகிக்கொண்டு இருக்கிறது. முன்பெல்லாம் கடைசி காட்சியில் எல்லாப் பாத்திரங்களும் (வில்லன் உட்பட) வாய்நிறைய சிரித்துக்கொண்டு சுபம் போடுவார்கள். அரிதாகிவிட்ட இந்த க்ளைமேக்ஸ் கலாச்சாரம் நண்பனில் மீண்டும் மறுமலர்ச்சி பெற்றிருக்கிறது. குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு அடுத்த சில நாட்களில் மக்கள் படையெடுக்கப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி. ALL ARE FEELING VERY GOOD