10 நவம்பர், 2008
காதை மட்டும் கொண்டாங்க!
இரட்டை கும்மிப்பதிவர்கள் இருவரையும் அடிக்கடி பெரியார் திடல் பக்கம் பார்க்க முடிகிறதாம். அமாவாசைக்கும் அப்துல்காதர்களுக்கும் என்ன சம்பந்தம்? நாளைய வெற்றியை சரித்திரம் சொல்லும்... * - * - * - * - * - * - * - * - * - * - * அவர் பிரபல செய்தியாளர். அவ்வப்போது வலைப்பதிவும் செய்கிறார். எங்கு செல்ல வேண்டுமானாலும் அலுவலக மகிழுந்து தயாராக இருந்தாலும், ஒரு இருசக்கர வாகனம் வைத்திருக்கிறார். "PRESS" என்று வண்டிகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் யாரும் சென்னையில் ஹெல்மெட் அணிவதில்லை. இருந்தாலும் நம்ம ஆளு கவசகுண்டலத்தோடு கர்ணனைப் போல எப்போதும் ஹெல்மெட் அணிந்தே காட்சியளிக்கிறாராம். வண்டி ஓட்டும் நேரம் தவிர்த்தும் கூட மற்ற எல்லா நேரமும், பாத்ரூமுக்கு போகும்போதும் கூட ஹெல்மெட்டோடே எச்சரிக்கையாக செல்கிறாராம். ”சிக்னல்ல ஹெல்மெட் இல்லாம போறவங்களை கமிஷனர் ஆபிஸ்லே இருந்துக்கிட்டே மானிட்டர்லே பார்க்குறாங்க. வேலை விஷயமா அங்கே போறப்போ நீங்கள்லாம் கூடவா சார்னு கேட்குறாங்க. அதுனாலே தான்” என்று ஹெல்மெட்டுக்குள் இருந்து காரணம் சொல்கிறார். மனிதர் எப்போதும் ஹெல்மெட்டுக்குள் தலையை கொடுத்து விடுவதால் அவரது கைப்பேசிக்கு ஒரு ரூபாய் போனில் இருந்து முயற்சி செய்யும் அப்பாவி புதுப்பதிவர்கள் லைன் கிடைக்காமல் கடுப்பாகி டாஸ்மாக்குக்கு செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. சிங்காரி சரக்கு.. நல்ல சரக்கு.. * - * - * - * - * - * - * - * - * - * - * ஆசை ஆசையாக சினிமா ஃபீல்டுக்கு வந்த வலைப்பதிவர் அவர். சீனியர் போஸ்டில் இருப்பதால் தினம் தினம் மொக்கைப்படங்களாக ஓசியில் பார்த்து சினிமாவையே வெறுத்துவிட்டாராம். பதவியை ராஜினாமா செய்யும் மூடில் இருக்கிறாராம். கமல் ரசிகரான அவரின் அடுத்த அவதாரம் பத்திரிகையாளர் அவதாரமாக இருக்கக்கூடுமாம். புத்தாண்டில் புது அவதாரம் என்று காதைக்கடிக்கிறது அவருக்கு நெருக்கமான ஒரு சிட்டுக்குருவி. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து... * - * - * - * - * - * - * - * - * - * - * பெண் பெயரில் ஆ(சா)பாசமாக களமிறங்கி பல 'பெருசு' பதிவர்களிடம் காதல் கடிதம் பெற்றவர் அந்தப் பதிவர். பிரம்மச்சாரி வேடம் அலுத்துவிட்டதாம். அடுத்தாண்டு ஆரம்பத்தில் மாமன் மகளை கைப்பிடிப்பார் என்று மருதமலையில் பேசிக்கொள்கிறார்கள். முன்னோட்டமாக 'தனி வீடு கூட பார்த்தாச்சு' என்று சரவணா ஸ்டோரில் அவர் ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்தபோது சந்தித்த பதிவர் ஒருவரிடம் கிசுகிசுத்திருக்கிறார். ரகசியம் பரமரகசியம்! * - * - * - * - * - * - * - * - * - * - * வயது நாற்பதை நெருங்கினாலும் அஜித் கலரில், ஜே.கே.ரித்தீஷ் தோற்றத்தில் ‘நச்'சென்றிருக்கும் பதிவர் அவர். அவரை நாயகனாக்கி ஒரு படம் இயக்க இரட்டை இயக்குனர்கள் கதை தயார் செய்துக் கொண்டிருக்கிறார்களாம். குறைந்தபட்சம் ஒரு ‘மேட்டர்' படத்திலாவது அப்பதிவரை நாயகனாக்கி பார்க்க இரட்டை இயக்குனர்கள் தொடர் குண்டுவெடிப்பு தீவிரத்தோடு அலைகிறார்கள். தயாரிப்பாளர் தான் இதுவரை மாட்டவில்லை. பேசாமல் நாயகனையே தயாரிப்பாளராக்கி ‘அஜால் குஜால்' படத்தை அவசரமாக முடித்து ரிலீஸ் செய்துவிட திட்டம் தீட்டியிருக்கிறார்களாம். சிம்மா.. நரசிம்மா.... * - * - * - * - * - * - * - * - * - * - * பதிவர் சந்திப்புகளில் மட்டும் முன்பெல்லாம் கலந்துகொண்டவர் அவர். அவருக்கென்று ஒரு வலைப்பதிவு கூட இருப்பதாக தெரியவில்லை. வெறுமனே வாசகர் என்று சொல்லிக் கொள்வார். குறிப்பாக 'மூத்த' வலைப்பதிவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் கண்டிப்பாக ஆஜராவார். கடந்த ஒரு வருடமாக ஆளைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பார்த்தாலாவது அருகில் இருக்கும் காவல்நிலையத்துக்கு தெரியப்படுத்துங்கள். பூபாளம் இசைக்கும்.... * - * - * - * - * - * - * - * - * - * - * இரண்டாண்டுகளுக்கு முன்பாக பலமான ‘திராவக' சிந்தனையோடு களமிறங்கிய பதிவர். அடித்து ஆடுவதில் வல்லவர். இடையில் குடும்பம், குழந்தை, குட்டி, வேலை என்று பிஸியாகிவிட்டதால் வலைப்பதிவுக்கு நீண்ட லீவ் விட்டிருந்தார். இப்போது அழகிகள் நிறைந்த அயல்நாட்டில் பணியாற்றுபவருக்கு சமையல் வேலையெல்லாம் முடித்தபினி நிறைய நேரம் மிச்சமிருக்கிறதாம். மீண்டும் வலைப்பதிய தொடங்கியிருக்கிறார். மெதுவாக டொக்கு வைத்து ஆடிக்கொண்டிருப்பவர் சந்தர்ப்பம் கிடைத்ததுமே பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாச ஆரம்பிப்பாராம். முன்பெல்லாம் பார்ட்னர்ஷிப்பில் அசத்திக் கொண்டிருந்தவர் இந்த முறை தனியாகவே கொளுத்து கொளுத்துவென்று கொளுத்த திட்டமிட்டிருக்கிறார். ஆடுங்கடா என்னை சுத்தி... * - * - * - * - * - * - * - * - * - * - * மொழிவாசனைக்குப் பிறகு பதிவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் திரட்டி அது. மொழிவாசனை கொஞ்சநாட்களாக அடிக்கடி காய்ச்சல் வந்து படுத்துக் கொள்வதால் இத்திரட்டிக்கு நாளுக்கு நாள் ஹிட்ஸ் டபுள் ஆகிறதாம். வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் திரட்டியின் உரிமையாளர் அடுத்ததாக ஆங்கிலத்தில் வலைப்பதியும் தமிழர்களுக்கான திரட்டி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறாராம். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்....
7 நவம்பர், 2008
குவாண்டம் ஆஃப் சோலஸ்!
முந்தைய பாகமான கேசினோ ராயலின் க்ளைமேக்ஸில் இருந்து அதிரடியாக தொடங்குகிறது குவாண்டம் ஆஃப் சோலஸ். படு பரபரப்பான கார் சேஸிங் ஓபனிங்கின் இறுதியில் வெற்றி வழக்கம்போல ஜேம்ஸுக்கே. முந்தைய பாகத்தில் கொல்லப்பட்ட ஜேம்ஸின் காதலி வெஸ்பரின் மரணத்துக்கு பழிதீர்க்க அடிபட்ட வேங்கையாய் குமுறிக்கொண்டிருக்கிறார் ஜேம்ஸ். அவரிடம் இருந்த ஒரே ஆதாரம் ஒயிட். ஒயிட்டை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே ஜேம்ஸ் குழுவில் இருக்கும் சகா மிட்சல் என்பவர் ஒயிட்டை தப்புவிக்க விசாரணைக்குழுவை சுட்டுவிட்டு தப்பி ஓடுகிறார். பின்னணியில் இருக்கும் குழு எத்தகைய தந்திரமிக்கது, செல்வாக்கானது என்பதை ஜேம்ஸ் உணருகிறார். அந்த குழுவின் பெயர் குவாண்டம் என்பதைத் தவிர்த்து அப்போதைக்கு வேறு க்ளூ எதுவுமில்லை. வழக்கம்போல ஓரிரு அழகிகளோடும், இரவுப்பொழுது சல்லாபங்களோடும் கொஞ்சம் சீரியஸாகவே இந்தமுறை விசாரணையை மேற்கொள்கிறார் ஏஜெண்டு 007. விசாரணைக்கு அரசாங்கரீதியான முட்டுக்கட்டைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, ஒரு கட்டத்தில் தன் பாஸையே கூட முறைத்துக்கொண்டு, க்ளைமேக்ஸில் பாண்டுக்கு வெற்றி. படம் முழுக்க கண்களில் கொலைவெறியோடு அய்யனார் போல ஆவேசமாக அலையும் ஜேம்ஸ் தன்னுடைய தனிப்பட்ட பழி தீர்ந்தபிறகே மலையேறுகிறார். இவ்வளவு ஆக்ரோஷமாக ஜேம்ஸை இதற்கு முந்தைய படங்களில் பார்த்திருக்க முடியாது. கதாநாயகிக்கும் ஜேம்ஸ் போலவே பழிவாங்கும் வெறி. அழகான, அசத்தல் கட்டையான அவரது கண்கள் மட்டும் நாகப்பாம்பை நினைவுறுத்துகிறது. ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரேக்குக்கு ரெண்டாவது படம். இதுவரை வந்த ஜேம்ஸ் பாண்ட்களிலேயே கட்டுடல் இவருக்குத்தான். ரீட் & டைலர் கோட் சூட் போட்டாலும் கூட உடல் கட்டு தெறித்துக்கொண்டு தெரிகிறது. பாண்ட் படங்களுக்கு ஹீரோயின்களை எங்கிருந்து பிடிப்பார்களோ தெரியவில்லை. உலக அழகிகளை விடவும் அழகாக இருக்கிறார்கள். அதிலும் டேன் செய்து உடலை மாநிறமாக்கியிருக்கும் அழகி கேமில் செம பீஸ். கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் சொல்லவேண்டிய கதையை காட்டுத்தனமான எடிட்டிங் மூலமாக ரெண்டு மணி நேரத்தில் சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தின் பின்னணி இசை இசையமைப்பாளர்களுக்கு பாடம். காட்சிக்கு இசையால் மட்டுமே கூட பரபரப்பை ஏற்படுத்தமுடியும் என்பதை படத்தின் பல காட்சிகள் நிரூபிக்கிறது. கடந்த வாரம் ஐரோப்பியநாடுகளில் வெளியான படம் இவ்வாரம் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. ஜேம்ஸை தரிசிக்கும் பாக்கியம் அமெரிக்கர்களுக்கு அடுத்த வாரம் தானாம். உலகெங்கும் நல்லபடியான விமர்சனங்களோடு வசூல்சாதனைகளை ஜேம்ஸ் மீண்டும் முறியடித்திருக்கிறார். வெகுவேகமான காட்சியமைப்புகள் இந்தியாவில் இப்படத்தின் வெற்றியை பாதிக்கக்கூடும். கண்டிப்பாக காண வேண்டிய படம்!
5 நவம்பர், 2008
சினிமா தீபாவளி 2008
எனக்கு நினைவு தெரிந்த ஒரு தீபாவளிக்கு மொத்தம் 19 படங்கள் வெளிவந்தது. அது 87 தீபாவளி. அவற்றில் 17 படங்களுக்கு இசை இளையராஜா என்பது குறிப்பிடவேண்டிய பொட்டிச் செய்தி. அதெல்லாம் அந்தக் காலம். ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ் இல்லாவிட்டால் அப்போதெல்லாம் தீபாவளியே இல்லை. மனிதன் - நாயகன், மாப்பிள்ளை - வெற்றிவிழா, தளபதி - குணா, பாண்டியன் - தேவர் மகன், முத்து - குருதிப்புனல் என்று தீபாவளிக்கு தீபாவளி சரவெடி தான். ரஜினி, கமல் படங்கள் மட்டுமன்றி விஜயகாந்த், சத்யராஜ் என்று அடுத்த நிலையில் இருப்பவர்களின் படங்களும், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த ஒப்புக்கு சப்பாணிகளின் படங்களும் அதிரடியாக களமிறங்கிய காலம். தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த டர்ன் ஓவரில் நாற்பது, ஐம்பது சதவிகித வசூலை தீபாவளியிலேயே எடுத்துக் கொண்டிருந்த காலம். ம்ம்.. எல்லாம் இப்போது கானல் நீர்! தமிழின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட் படமான ஹரிதாஸ் கூட 1944 தீபாவளி ரிலீஸ் தான். தீபாவளியில் அப்படியென்ன ஸ்பெஷல்? மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் மாதங்கள் இரண்டு. ஒன்று தீபாவளி வரும் அக்டோபர் அல்லது நவம்பர். கூடுதலாக ஒரு மாத சம்பளத்தை போனஸ் வாங்கியிருப்பார்கள், தாராளமாக செலவழிப்பார்கள். அடுத்தது பள்ளிகள் திறக்கும் காலமான ஜூன் மாதம், இம்மாதத்தில் கடனோ, உடனோ வாங்கி பிள்ளைகளின் கல்விச்செலவுக்கு தாராளமாக செலவழித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டாவது பணப்புழக்க மாதத்தில் சினிமாவுக்கு நோ சான்ஸ். ஆனால் அதற்கு முன்பாக ஏப்ரல் - மே மாதங்கள் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் விடுமுறை காலமென்பதால் ஏப்ரல் 14 ரிலீஸில் சினிமாக்காரர்கள் ஒரு காட்டு காட்ட முடியும். சினிமாக்காரர்களுக்கு ஏப்ரல் 14 சின்ன தீபாவளி. தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் ஷிப்டிங் முறையிலும் சக்கைபோடு போடும் என்பது ஸ்பெஷலுக்கு இன்னொரு காரணம். உதாரணத்துக்கு செங்கல்பட்டில் ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். அது வெற்றிகரமாக ஐம்பது நாட்களை கடக்கும்போது பொங்கல் வந்து விடும். பொங்கலுக்கு புதுப்படம் ரிலீஸ் செய்யவேண்டும். அந்நேரத்தில் இங்கு ஐம்பது நாள் ஓடிய படம் உத்திரமேரூரில் இருக்கும் ‘பி' செண்டர் தியேட்டரில் செகண்ட் ரிலீஸ் செய்யப்படும். இதன் பெயர் தான் ஷிப்டிங். ரிலீஸின் போது நன்கு பேசப்பட்ட படமாக இருந்தால் ஷிப்டிங்கின் போதும் ஒரு அள்ளு அள்ளிவிடும் (87 தீபாவளிக்கு வெளியான மனிதன் 88 தீபாவளிக்கு நங்கநல்லூர் ரங்காவில் ஷிப்டிங்கில் ரிலீஸாகி ஹவுஸ்புல் ஆகி சாதனை படைத்தது). ஷிப்டிங் வசூல் முடிந்தப் பிறகும் கிராமங்களில் இருக்கும் ‘சி' செண்டர் தியேட்டர்களில் களமிறங்கி விநியோகஸ்தர்களின் பாக்கெட்டை நிரப்பும். இப்படியாக தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் சரக்கு கொஞ்சம் சுமாராக இருந்தாலே அடுத்த தீபாவளி வரை ஒரு வருடத்துக்கு அதை வைத்து வருமானம் பார்க்க முடியும். எனவே படவெளியீடுக்கு ஏற்ற சரியான தேதியாக தீபாவளி அமைந்திருக்கிறது. தீபாவளி தவிர்த்து மற்ற தேதிகளில் வெளியாகும் படங்கள் இந்த ரிலீஸ் - ஷிப்டிங் பிராசஸிங்கில் கொஞ்சம் அடிவாங்குவது உண்டு. பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே இதிலிருந்து தப்பிக்கும். 2007 தீபாவளிக்காவது 7 படங்கள் வந்தது. 2008க்கு மூன்றே மூன்று படங்கள். ஏகன், சேவல், மேகம். என்ன கொடுமை சார் இது? மூன்றே மூன்று படங்கள் தான் வந்திருக்கிறது என்பதால் மூன்றுமே நியாயமாகப் பார்க்கப் போனால் சூப்பர் ஹிட் ஆகியிருக்க வேண்டும். ஏகனும், சேவலும் ஓப்பனிங்கில் அசத்தி, படம் பார்த்தவர்களை அயர்ச்சியடைய வைத்து, போனால் போகட்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. மேகம் சொல்லவே தேவையில்லை. தமிழரசன், பி.ஏ., பி.எல்., என்பவர் தன்னை ஒரு ஹீரோவாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற கனவில் சில லட்சங்களை வீணடித்திருக்கிறார். கிட்டத்தட்ட மேகம் ஒரு மேட்டர் படம். தமிழ் திரையுலக வரலாற்றுக்கே மிக மோசமான தீபாவளி இது. தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும் துவண்டுப் போயிருக்கிறார்கள். ஈயடிக்கும் தியேட்டர்களில் 'காதலில் விழுந்தேன்' வேறு வழியின்றி ஷிப்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. நம்பிக்கையோடு தமிழ் சினிமாவில் முதலீடு செய்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கையைப் பிசைந்துக் கொண்டு நிற்கின்றன. முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்? வழக்கம்போல இந்த சோகமான சூழ்நிலைக்கு சினிமாக்காரர்கள் திருட்டு டிவிடியை காரணம் சொல்கிறார்கள். உண்மையில் சினிமாக்காரர்களின் பேராசை திருட்டு டிவிடியை விட மோசமானது. சின்னப்பா தேவர், ஏவிஎம், வாசன் போன்ற அந்தக்காலத்து தயாரிப்பாளர்கள் சினிமாவை ஒரு தொழிலாக பார்த்தார்கள். இன்றோ சூப்பர்குட் பிலிம்ஸ் போன்ற ஒரு சில நிறுவனங்களை தவிர்த்து மீதமுள்ள தயாரிப்பாளர்கள் இத்தொழிலை குதிரைப் பந்தயமாக பார்க்கிறார்கள். அஜித்தை வைத்து பண்ணிரண்டு கோடி செலவழித்தால் இருபத்து ஐந்து கோடியை எடுத்துவிடலாம் என்று ஆதாரமேயில்லாமல் அபத்தமாக நம்புகிறார்கள். இவ்வளவு முதலீட்டுக்கு இவ்வளவு லாபம் போதுமென்ற மனம் இவர்களுக்கு இல்லை. ஓரிரு படங்களிலேயே அம்பானி ஆகிவிட முயற்சிக்கிறார்கள். இந்தியாவிலேயே ஊழலும், சுரண்டலும் பெரியளவில் இன்று நடைபெறும் தொழிலாக திரைத்தொழில் மாறிவிட்டது. தமிழ் திரையுலகம் இருப்பதிலேயே ரொம்பவும் மோசம். முதல் படத்துக்கு எழுபத்தைந்தாயிரம் சம்பளம் வாங்கி சூப்பர்ஹிட் படத்தை ஒரு இயக்குனர் தந்துவிட்டால், உடனே அடுத்த படத்துக்கு அவசர அவசரமாக முப்பது, நாப்பது லட்சம் சம்பளம் பேசுகிறார்கள். கதை கூட கேட்க வேண்டியதில்லை. ஒரு ஹீரோவின் படம் சுமாராக ஓடிவிட்டால் போதும், அவர் எவ்வளவு கேட்டாலும் தர தயாரிப்பாளர்கள் தயார். படம் ஓடுவது ஹீரோவுக்காக தான் என்று தயாரிப்பாளர்கள் நம்புவதை விட பெரிய காமெடி வேறு எதுவுமில்லை. சினிமா தயாரிக்க பணம் கூட இப்போது அவசியமில்லை. ஹீரோவின் கால்ஷீட் யாரிடம் இருக்கிறதோ அவர் தான் தயாரிப்பாளர். ”அந்த ஹீரோவோட கால்ஷீட் இருக்கு” என்று சொல்லியே பைனான்ஸ் வாங்கிவிடலாம். கதை இல்லாவிட்டால் பப்பு வேகாது என்ற உண்மை சராசரி சினிமா ரசிகனுக்கு கூட தெரிந்திருக்கும் நிலையில் இன்னமும் சினிமாவிலேயே பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு கூட தெரியாதது ஆச்சரியமாக தானிருக்கிறது. 2008ல் நிஜமாகவே வெற்றிபெற்ற சில படங்களைப் பார்த்தாலே புரியும், எதனால் படங்கள் வெற்றியடைகின்றன என்று. அஞ்சாதே, சுப்பிரமணியபுரம், தசாவதாரம் - இவற்றில் அஞ்சாதே, சுப்பிரமணியபுரம் படங்களில் ஹீரோவின் பங்கு என்ன? அழகிய தமிழ்மகன், குருவி, குசேலன் என்று சமீபத்தில் ஹீரோவை நம்பி பப்படமான படங்கள் உணர்த்தும் பாடமென்ன? அப்பா தயாரிப்பாளர் என்பதால் மட்டுமே இயக்குனராகிவிட்ட இயக்குனரின் சக்கரைக்கட்டி உணர்த்துவதென்ன? ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், என்று பிரபலங்கள் இருந்தாலே வெற்றி உறுதி என்று நினைப்பது மடத்தனமா இல்லையா? சிம்பு எத்தனை ஹிட் கொடுத்திருக்கிறார்? அவருக்கு கோடிகளை கொட்டி கொடுப்பதால் என்ன பயன்? 80 லட்சத்தில் எடுக்கப்பட்ட திருடா திருடி பதினைந்து கோடி வசூலித்துக் கொடுத்தது என்றால் அந்த படம் நன்றாக இருந்தது, மக்களுக்குப் பிடித்தது என்று பொருள். அது தனுஷ் நடித்ததால் மட்டுமே ஓடிவிடவில்லை. இவர்கள் பங்குபெறும் படங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே கடந்த காலங்களில் ஓடியிருக்கிறது என்பதை கூட அறியமுடியாத அளவுக்கு நம் சினிமாக்காரர்களுக்கு மூளை மழுங்கிவிட்டதா? இனியாவது சினிமாக்காரர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். போடும் முதலீட்டுக்கேற்ப நியாயமான லாபம் கிடைத்தால் போதுமென்ற மனத்துக்கு தயாராக வேண்டும். நட்சத்திரங்களை நம்பி நட்டாற்றில் இறங்கக் கூடாது. குறைந்த முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்க முயற்சிக்க வேண்டும். திரையரங்குகளில் கட்டணங்களை குறைத்தாலே திருட்டு விசிடியை ஒழித்துவிட முடியும். இன்னமும் தங்கள் தொடர்தோல்விக்கு திருட்டு விசிடி தான் காரணமென்று கூறி தங்கள் தரப்பு தவறுகளை தொடர்ந்து மூடி மறைத்துக் கொண்டிருந்தால், பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகத்தை பார்த்த கதையாகிவிடும். அடுத்த தீபாவளியாவது தமிழ் சினிமாவுக்கு உருப்படியான தீபாவளியாக அமையுமென்று எதிர்பார்ப்போம்.
4 நவம்பர், 2008
சிந்தக்கைலா ரவி!
தெலுங்கில் கூட இதுமாதிரி படம் வருமா என்பது ஆச்சரியம். குத்துப்பாட்டு இல்லாமல், இரத்தம் தெறிக்கும் ஆக்சன் இல்லாமல் ஒரு ரொமாண்டிக் லவ் ஸ்டோரி. சில ஆண்டுகளுக்கு முன் தேசிக்களை (என்.ஆர்.ஐ) கவரும் வகையில் ஷாருக்கான் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தது. தெலுங்கு என்.ஆர்.ஐ.க்களை குறிவைத்து வந்திருக்கும் சிந்தக்கைலா ரவி அமெரிக்காவில் மட்டுமன்றி இந்தியாவிலும் சூப்பர் ஹிட். ஏகப்பட்ட இந்திப்படங்களை கலந்து காக்டெயில் அடித்திருக்கிறார்கள். சிந்தக்கைலா ரவி என்பது ஒரு பெயர். செந்தழல் ரவி மாதிரி. நம்ம செந்தழல் ரவியை பார்த்து தான் இந்த கேரக்டரையே டைரக்டர் உருவாக்கியிருப்பாரோ என்ற அளவுக்கு சிந்தக்கைலாவுக்கும், செந்தழலுக்கும் அவ்வளவு ஒற்றுமை. நியூயார்க்கில் இருக்கும் சைபர் வேவ் என்ற பாரில் சீஃப் பார் டெண்டராக சிந்தக்கைலா ரவி (வெங்கடேஷ்) பணிபுரிகிறார். அவரது அப்பா கடன் வாங்கி சாப்ட்வேர் படிக்க அமெரிக்காவுக்கு ரவியை அனுப்பி வைக்கிறார். தவிர்க்க இயலாத ஒரு சம்பவத்தால் மனிதநேயம் கொண்ட ரவி அப்பணத்தை ஒரு உயிரைக் காப்பாற்ற செலவழித்து விடுகிறார். பணமில்லாததால் பாரில் பார் டெண்டராக பணிபுரிகிறார். ஊரைப் பொறுத்தவரை அவர் அமெரிக்காவில் பில்கேட்ஸே மதிக்கும் பெரிய சாப்ட்வேர் என்ஜினியர். இவரது அம்மா சேஷாம்பாள் (லட்சுமி) தன் மகன் சாப்ட்வேர் என்ஜினியர் என்று பந்தா விட்டு பெரிய இடத்து பெண்களாக தன் மகனுக்கு தேடிக்கொண்டிருக்கிறார். தான் பாரில் பணிபுரிவதாக தெரிந்தால் அம்மா உயிரையே விட்டுவிடுவார் என்பதால் தனது பொய்முகத்தை தொடர்கிறார் ரவி. பெரிய வீட்டுப் பெண்ணான லாவண்யாவை (மம்தா) ரவிக்கு பெண்பார்க்கிறார் சேஷாம்பாள். லாவண்யா அமெரிக்காவில் இருக்கும் தன் நண்பி சுனிதா (அனுஷ்கா) மூலமாக மணமகனைப் பற்றி விசாரிக்கிறாள். சில பல குழப்பங்களுக்கு பிறகு ரவி ஒரு பார்டெண்டர் என்று தெரிந்து கல்யாணம் நின்றுவிட இடைவேளை. இடைவேளைக்குப் பிறகு தன் திருமணத்தை நிறுத்தும் சுனிதாவை துரத்தி துரத்தி கலாய்க்கிறார் ரவி. சுனிதாவை பார்க்க வரும் மாப்பிள்ளைகளை பொய்சொல்லி விரட்டியடிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ரவியின் மனிதாபிமானமும், நல்ல குணங்களையும் உணரும் சுனிதா ரவியை காதலிக்கிறாள். ரவிக்கும் அவள் மீது ஈர்ப்பு வந்துவிடுகிறது. இதே நேரத்தில் ஊரில் இருக்கும் லாவண்யா குடும்பத்துக்கு ரவியைப் பற்றிய உண்மையான விவரங்கள் தெரிகிறது. ஒரு உயிரைக் காப்பாற்றிய அவரது மனிதாபிமானம் அவர்களை கவர மீண்டும் ரவி - லாவண்யா திருமணம் ரவியின் அம்மா ஏற்பாட்டில் நடைபெறுகிறது. லாவண்யா ரவியை காதலிக்க, ரவி சுனிதாவையும், சுனிதா ரவியையும் காதலிக்க குழப்ப முடிச்சுகளை அழகாக க்ளைமேக்ஸில் அவிழ்க்கிறார் இயக்குனர். படம் முழுக்க நொடிக்கொரு முறை சிரிக்க வைக்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தமாதிரியே வெங்கடேஷ் இன்னமும் இளமையாக இருக்கிறார். "சுனிதா எம்.பி.ஏ., நேனோ பி.ஏ.ன்னியே மூடு முறை தெங்.." என்று வெங்கடேஷ் நிறுத்தும் போது தியேட்டர் அதிர்கிறது. ஆங்காங்கே லைட்டாக இதுபோல இரட்டை நெடி காமெடிகள் தூவப்பட்டிருந்தாலும் ரசிக்க வைக்கிறது. வெங்கடேஷும், அனுஷ்காவும் கணவன் மனைவியாக நடிக்கும் காட்சி ஹம் தும்மில் பார்த்தமாதிரி ஞாபகம். அந்த ஒரு நிமிட காட்சியின் இறுதியில் இருவருக்கும் மவுனமாக காதல் பூப்பது அழகு. க்ளைமேக்ஸ் காட்சிகள் ஹம் ஆப்கே ஹைன் கோன்-ஐ நினைவுபடுத்துகிறது. இரட்டை கதாநாயகிகள் மம்தா - அனுஷ்கா என்று தீபாவளி டபுள் ஷாட். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிறைவான ஒரு தெலுங்குப் படம்!
3 நவம்பர், 2008
சுண்டக்கஞ்சி வித் பானு!
இன்று பிற்பகல் மூன்று மணியளவில் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலைக்கு எதிரே அஞ்சப்பருக்கு அருகில் இருந்த பாடாவதி பாரில் ஓல்டுமாங்க் கட்டிங் விட்டுக்கொண்டிருந்தபோது, பக்கத்தில் ராவாக கல்ப் அடித்தவர் என்னிடமிருந்த ஊறுகாயை ஒரு நக்கு நக்கிக்கட்டுமா என்று கேட்டார். நக்கிக்கொள்ள அனுமதித்தேன். அதற்கு நன்றிக்கடனாக நீலாங்கரை பானு கடையில் இன்று இரவு 9.30 மணிக்கு சுண்டக்கஞ்சி பார்ட்டி நடப்பதாகவும் திருவாளர் தூ சரக்கடித்து போதையேற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடப்பதாகவும் தெரியப்படுத்தினார். நான் பானு கடைக்கு சாதாரணமாக செல்வதில்லை. பானு கடை சரக்கில் சல்பேட்டா குறைவாக இருப்பதால் போதை ஏறாது. இருப்பினும் தூ கலந்துகொண்டு மப்பு ஏத்துவதால் சல்பேட்டா தூக்கலாக இருக்கும் என்று நானும் நீலாங்கரைக்கு சென்று போதையேற்றிக் கொள்ள முடிவு செய்தேன். குடிகாரனாக, முடிச்சவிக்கியாக, மொள்ளமாறியாக, பிக்பாக்கெட் திருடனாக பல அவதாரங்கள் எடுத்துள்ள தூ அவர்கள் எவ்வாறு சரக்கடித்து மட்டையாவார் என்ற எதிர்பார்ப்போடு பானு அவர்கள் ஒரு சொம்பு சரக்கை எடுத்துக் கொடுத்தார். தொட்டுக்கொள்ள கடம்பா தொக்கு. தூ அவர்கள் அந்த சொம்பை ஒரே மூச்சில் கல்ப்பாக அடித்து தான் பரம்பரை குடிகாரன் என்று தன்னை வகைப்படுத்தினார். குடிகாரர்கள் மத்தியில் இவரை பேட்டை பிஸ்தாவாக பார்த்திருக்கிறார்கள். பேட்டைக்காரர்கள் இவரை பிக்பாக்கெட் திருடனாக பார்த்திருக்கிறார்கள். பிக்பாக்கெட் ஆட்களோ இவரை முடிச்சவிக்கியாக பார்த்திருக்கிறார்கள். ஆக இவர் ஒரு ஒட்டுமொத்த கம்முனாட்டி என்று பானு கூற அது தான் தனது தனித்தன்மை என்று தூ கூறினார். தூ அவர்கள் மேலும் சரக்கு அடிக்கையில் போதை தலைக்கேறி தன்னுடைய தந்தை சாராயம் குடிப்பதில் செய்த சாதனைகளுக்காக பெற்ற சிறந்த குடிகாரன் விருதைப் பற்றி உளறினார். அந்த விருது இந்தியாவிலேயே இதுவரை இருவருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது என்று சொன்னார். அவரை பேர் சொல்லி யாரும் அழைத்ததில்லை. கட்டிங் கபாலி என்றுதான் அவரை குறிப்பிடுவார்கள் என கூறினார். அவருடைய நெருங்கிய குடிகாரர்கள் வீட்டுக்கு வந்தால் கூட "கட்டிங் கபாலி நிதானத்தில் இருக்கானா" என்றுதான் கேட்பார்கள் என்பதையும் தெரிவித்தார். நிதானத்தில் அவர் இருந்தால் வந்த நண்பர்கள் கட்டிங் ஊற்றி மீண்டும் போதை ஏற்றுவார்கள் என்பதையும் தெரிவித்தார். மொத்தத்தில் அவர் ஒரு நடமாடும் சாராயக்கடை என்று முத்தாய்ப்பு வைத்தார். தூ அவர்கள் தான் முதலில் என்னவாக வரவேண்டும் என்ற லட்சியம் வைத்திருந்தார் என சரக்கு ஊற்றியவாறே பானு வினவ, அவர் தனது வாழ்க்கையே ஒரு இலக்கில்லாத சரக்கு தேடல் என்று கூறினார். குடிகாரன், மொள்ளமாறி, முடிச்சவிக்கி என்று எல்லா அவதாரங்களும் சரக்கு அடித்த போதையின் பயனாக வந்தன என்று குறிப்பிட்டார். எல்லாவற்றையும் சரக்கு ஏற்றிக்கொண்டு போதையோடு அணுகுவது பற்றி பேசும்போது பல தருணங்களில் இந்த போதையால் தான் செருப்படிப்பட்ட சங்கடமான தருணங்களையும் நினைவுகூறினார். ஒரு குடம் சுண்டக்கஞ்சியை லைட் அவுஸுக்கு அருகில் பீச்சு மணலில் புதைத்து வைத்திருப்பதாகவும் அது சில நூற்றாண்டுகள் கழித்து வெளியே வரும்போது செம கப்பையும், போதையையும் (பிரெஞ்சுக்காரர்கள் வைன் பதப்படுத்தி வைத்திருப்பதை போல) தருமென்றும் கூறினார். 300, 400 ஆண்டுகளுக்கு பிறகு சுண்டக்கஞ்சியை எல்லாம் தயார் செய்ய யாரால் இயலும் என்று போதை தலைக்கேறி குறிப்பிட்டார். பிறகு தான் சரக்கு உலகுக்கு வந்தது பற்றியும் குறிப்பிட்டார். பனைமரத்தில் இறக்கி பதினைந்து நாளான கள்ளை யாரும் குடிக்க முன்வராத நிலையில் தான் குடித்ததாகவும் கூறினார். பின்னர் அதனால் போதை தலைக்கேறி ஒவ்வொரு பனைமரமாக ஏறி கள்பானையை ஆட்டை போட்டதையும் குறிப்பிட்டார். தூ பார்களில் சரக்கு அடிக்க ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன்னால் வரை பாருக்கு வெளியே நின்று கேஷூவலாக கஞ்சா அடிப்பார் என்றும் கடம்பா மற்றும் நெத்திலி தொக்கு வாசனை பாருக்கு வெளியே வந்ததும் தானே உள்ளே போவார் என்றும் அங்கே சரக்கு அடித்துக் கொண்டிருந்த காவாலி குறிப்பிட்டார். தூ குறுக்கிட்டு தன்னுடைய இந்த சைட் டிஷ் வெறியே தன்னை பல பார்களில் சரக்கு அடிக்க விடாமல் செய்தது என குறிப்பிட்டார். தன்னுடைய ஆயா மண்டையைப் போட்ட சோகமான சந்தர்ப்பத்திலும் சரக்கு அடித்துவிட்டு மட்டையாகி, மீண்டும் போதை தெளிந்து தப்பாங்குத்து ஆடியது பற்றியும் குறிப்பிட்டார். இப்போது பானு அவர்கள் Sundakanji Award என்பதை பற்றி கூறினார். இந்த அவார்டு வழங்கப்படுபவருக்கு பானு கடையில் வாராவாரம் ஓசியில் சுண்டக்கஞ்சி குடிக்கலாம். தூ அவர்கள் அழுத்தம் திருத்தனமாக அந்த அவார்டை தனக்கே வழங்கிக் கொள்வேன் எனக் கூறினார். இந்த விஷயத்தில் தானே வாங்கி தானே சரக்கடிப்பது என்ற குடிகாரர்களின் கலாச்சாரத்தை பின்பற்றி, ஊரோடு ஒத்து குடித்து வாந்தியெடுப்பது கோட்பாட்டின்படி அவ்வாறு செய்வதாக கூறினார். தான் மட்டுமன்றி தன்னுடைய குடும்பமே குடிகார குடும்பம் என்பதையும் பெருமிதமாக குறிப்பிட்டார். இப்போது சுண்டக்கஞ்சி அவார்ட் தரும் நேரமும் வந்தது. பானு சுண்டக்கஞ்சி நிரம்பிய ஒரு குடத்தை எடுத்துவர, அதைப் பறித்துக்கொண்டு வீட்டுக்கு தூ ஓடினார். அவர் அன்றைய இரவு முழுவதும் சுண்டக்கஞ்சி அடித்தே சுருண்டு படுத்துக் கொள்வார் என்பதை அறிந்து அனைவரும் தள்ளாடியபடியே நடந்து சென்றனர். இந்த சரக்கடிக்கும் நிகழ்ச்சி பற்றி எனக்கு தகவல் அளித்த ஊறுகாய் நக்கிக்கு (ஏம்பா, சரக்கடிக்க வரும்போது ஊறுகாய் கொண்டுவரமாட்டீங்களா என்பது புரளி மனோஹர்). சரக்கடிக்கும் பார்ட்டியின் நடுவில் என்றென்றும் போதையுடன் மாலாவிடமிருந்து ஃபோன். அவரும் என்னைப் போலவே காசிமேட்டில் சரக்கு அடித்துக் கொண்டிருப்பதாகவும், போதை பத்தவில்லை. ஒரு ஃபுல்லோடு சைட் டிஷ் கொண்டு வர இயலுமா என்று கேட்பதற்காக போன் செய்துள்ளார். அவரிடம் ஏற்கனவே நான் சரக்கு தான் அடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். அவரும் அயோத்தியாக் குப்பத்துக்குப் போய் சுண்டக்கஞ்சி அடிக்கப் போவதாய் சொன்னார். அளவில்லாத போதையுடன் காண்டு கஜேந்திரன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)