9 ஜூன், 2009

சில விளம்பரங்கள்!

டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம்.


வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை தொலைத்துவிட்டு அப்பெண் தேடும்போது அதை தேடிக்கொண்டுவரும். டை கட்ட மறந்து பள்ளி பேருந்தில் ஏறிவிடுவாள். டையை எடுத்துக்கொண்டு பேருந்தின் பின்னாலேயே நாய் ஓடிவரும். ஒவ்வொரு விளம்பரமும் ‘சேவை செய்வதில் மகிழ்ச்சி' என்ற வாசகத்தோடு நிறைவடையும்.

இந்த தொடர் விளம்பரங்களை சிந்தித்த கலைஞனின் படைப்புத்திறனை கண்டு வியந்திருக்கிறேன், பொறாமை கொண்டிருக்கிறேன். அன்றாட வாழ்வின் இயல்பான சம்பவங்களை முப்பது நொடி விளம்பரமாக மாற்றுவது மிக சவாலானது. பலரையும் கவர்ந்த விளம்பரங்கள் அவை.


ஆண்களின் உள்ளாடைகளுக்கான விளம்பரம் இது. ஒரு கட்டுடல் வாலிபன் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு வெளியே வருகிறான். அவன் வரும் அதே நேரத்தில் அதே அறைக்குள் அவனது பெண் நண்பி நுழைகிறாள். அவன் கட்டுடலை பார்த்து மயங்கினாளோ இல்லையோ, அவனது உள்ளாடையை கண்டு மயங்கி கண்களில் காமத்தை காட்டுகிறாள். அறைக்கதவு மூடப்படுகிறது.


ஒரு நவீன தொலைக்காட்சிக்கான விளம்பரம் ஒன்று. மிகப்பெரிய அந்த தொலைக்காட்சியின் திரையை நோக்கி அரைகுறை ஆடையுடன் ஒரு அழகி வருகிறாள். தொலைக்காட்சியில் ஒரு ஆணின் உருவம் ஒளிபரப்பப்படுகிறது. தொலைக்காட்சியை நெருங்கும் அந்த அழகி ஒரு காதலனை காண்பது போல விரகதாபத்தை உதடுகளில் தேக்கி அருகில் வருகிறாள். அருகில் வந்தவள் உடலை ஒரு மாதிரியாக முறுக்கி தன் வனப்பை காட்டுகிறாள். அதாவது அந்த தொலைக்காட்சியின் வடிவம் செக்ஸியாக இருக்கிறதாம், ஒரு ஆணின் கட்டுடலுக்கு நிகரானதாக இருக்கிறதாம். அதைக்கண்டு அவள் காமவசப்படுகிறாளாம்.


ஒரு இளம் மனைவி தன் கணவனின் பெயரை உச்சரித்தவாறே வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு அறையாக வருகிறாள். எங்குமே அவள் கணவனை காணவில்லை. தோட்டத்துக்கு முன்பாக இருக்கும் போர்டிகோவுக்கு வருகிறாள். ஒரு நாற்காலி தெரிகிறது. நாற்காலிக்கு பக்கவாட்டில் கணவனின் கையும், காலும் அலங்கோலமாக விரிந்து கிடக்கிறது. காப்பி கோப்பை சிதறிக் கிடக்கிறது. கிட்டத்தட்ட அவன் மரணித்துவிட்டதாக நினைத்து மனைவி ஓவென்று கதறியவாறே ஓடிவருகிறாள். கணவனோ வாக்மேனில் இசை கேட்டு மெய்மறந்திருக்கிறான். மனைவியின் கதறலை கேட்டு ஓடிவந்து அணைத்துக் கொள்கிறான். லைப் இன்சூரன்ஸ் செய்து தொலையுங்கள் என்பதற்கான விளம்பரம் இது.


மேற்கண்ட விளம்பரங்களில் வோடபோன் நிறுவனத்தின் விளம்பரம் மட்டுமே சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஒரு நாயை துன்புறுத்தி படம் பிடித்திருக்கிறார்கள் என்று யாரோ ஒரு விலங்குகள் நல ஆர்வலர் புகார் செய்ய, வோடபோன் நிறுவனத்துக்கு நோட்டிஸ் சென்றிருக்கிறது. வோடபோன் நிறுவனமும் எதுக்கு வம்பு? என்று தன் விளம்பரங்களை வாபஸ் வாங்கிக் கொண்டிருக்கிறது.

நன்கு பயிற்சி பெற்ற ஒரு நாய் துன்புறுத்தல் ஏதும் செய்யப்படாமல், நாய்க்கு எந்த ஆபத்தும் இல்லாத வகையில் நடித்துக் கொடுத்திருக்கும் விளம்பரத்துக்கே இந்த கதியென்றால் இனிமேல் இயக்குனர் ராமநாராயணன் படமென்று எதையும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக இம்சை அரசன் திரைப்படத்தில் குதிரைகள் பயன்படுத்தப் பட்டதால் படமே வெளிவரமுடியாத அவலநிலை ஏற்பட்டதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

விலங்குகளுக்கு இவ்வளவு பரிவு காட்டும் இந்திய அரசு நம் கதாநாயகர்களால் மிக மோசமாக பந்தாடப்படும், பல மாடிக்கட்டிடங்களின் உயரத்தில் இருந்து தூக்கிவீசப்படும் வில்லனின் அடியாட்கள் என்று சித்தரிக்கப்படும் மனிதர்களின் மீது கொஞ்சமாவது பரிவு காட்டியிருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கவேண்டும். திரைப்படங்களில் மட்டுமல்லாது விளம்பரங்களிலும் மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் மனிதர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். விலங்குகள் நல ஆர்வலர்களும் நாயோ, பூனையோ பாதிக்கப்பட்டால் மட்டும் தான் புகார் அனுப்புவார்கள் போலிருக்கிறது. சமூக விலங்கான மனிதனுக்கு அவர்களது நேசிப்பில் இருந்து விதிவிலக்கு அளித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்து நான் குறிப்பிட்டிருக்கும் இரு விளம்பரங்களும் மிக மிக அபத்தமானது. விளம்பரப்படுத்தப்பட்ட பொருளை வாங்கும் வகையில் எந்த வகையில் இவ்விளம்பரங்கள் பார்வையாளனை ஊக்குவிக்கிறது என்று தெரியாமல் தாவூ தீர்ந்துக் கொண்டிருக்கிறேன். ஷகீலா பட போஸ்டர்களை கிழித்து, சாணம் அடிக்கும் பெண்ணுரிமைப் போராளிகள், எஃப் டிவிக்கு தடை விதிக்கக் கோரிய ஃபெமினிஸ்டுகள் கண்ணில் இந்த விளம்பரங்களெல்லாம் இதுவரை கண்ணில் படவில்லை போலிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இன்னமும் யாரும் இவ்விளம்பரங்களில் பெண்களும், அவர்களது உணர்வுகளும் கொச்சைப்படுத்தப்பட்டிருப்பது குறித்து எந்த கவலையும் படவில்லை.

கடைசி விளம்பரம் மிகக்கொடூரமானது. மனித உணர்வுகளோடு, மன பலகீனத்தோடு விளையாடுவது. இன்சூரன்ஸ் விளம்பரங்களுக்கு உலகளவில் ஒரு சட்டம் உண்டு. விளம்பரத்தை காணும் பார்வையாளரை இன்சூரன்ஸ் எடுக்கச் சொல்லி வற்புறுத்தாத அளவுக்கு விளம்பரம் அமைய வேண்டும். அதனால் தான் இன்சூரன்ஸ் விளம்பரங்களில் Insurance is the subject matter of solicitation என்ற வாசகம் கட்டாயமாக இடம்பெறுகிறது. மாறாக இவ்விளம்பரமோ மரணம் குறித்த அச்சத்தை மிக மோசமாக பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.

சிகரெட் மற்றும் மது விளம்பரங்களுக்கு நம் நாட்டில் தடையுண்டு. தொலைக்காட்சி விளம்பரங்களோ அல்லது ஹோர்டிங் மற்றும் பத்திரிகை விளம்பரங்களோ இவற்றுக்காக செய்யப்படக்கூடாது. ஆனாலும் நீங்கள் இவ்விளம்பரங்களை பரவலாக காணலாம். அதே பிராண்டிங்குக்கு, அதே பெயரில் விளம்பரம் செய்யப்பட்டாலும் அவை மியூசிக் சிடி என்றோ, மினரல் வாட்டர் என்றோ எனர்ஜி டிரிங்க் என்ற தயாரிப்புப் பெயரிலோ தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

எதற்கு தடை விதிப்பது? எதை அனுமதிப்பது? எதை யார் திடீரென்று எதிர்ப்பார்கள்? போன்றவை குறித்த தெளிவான மனநிலை இந்தியர்களுக்கு இல்லை. இந்த கோக்குமாக்கு மனநிலையை வெளிநாட்டவர்கள் மிக கேலியாக பார்க்கிறார்கள் என்பதையும் நாம் அறிவதில்லை. விளம்பர உலகின் தந்தை என்று அறியப்படுபவர் டேவிட் ஓகில்வி. இவர் எழுதிய ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' என்ற புத்தகம் உலகளவில் விளம்பர நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான பைபிள் என்று போற்றப்படுகிறது. அப்புத்தகத்தை வாசிக்காதவர்கள் யாரும் விளம்பரத்துறையில் முழுமையாக பணிபுரிய இயலாது. அந்தப் புத்தகத்திலேயே இந்தியா குறித்த நையாண்டி மறைமுகமாக இடம்பெற்றிருக்கிறது.

முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாரிஸ் நகரின் நெரிசல் மிகுந்த போக்குவரத்து சிக்னல் ஒன்றில் அந்த ஹோர்டிங் பலரின் கவனத்தையும் கவர்ந்தது. ஒரு பெண் நிற்கிறாள், அவளை பின்புறமாக படமெடுத்திருக்கிறார்கள். அவள் மேல்கச்சையும், கீழே ஒரு உள்ளாடையும் மட்டும் அணிந்திருக்கிறாள். “அடுத்த வாரம் இதே இடத்தை பாருங்கள். நான் இந்த ஆடைகளை கூட துறந்திருப்பேன்” என்றொரு வாசகம் அச்சிடப்பட்டிருக்கிறது.

அவ்விளம்பரத்தை கண்ட பலர் ஒருவாரம் காத்திருந்து, அடுத்த வாரம் அதே விளம்பரத்தை காண்கிறார்கள். சொன்னபடியே அந்த பெண் ஆடையில்லாமல் இருக்கிறாள். ஆனால் பின்புற அழகு மட்டுமே தெரிகிறது. மீண்டும் ஒரு வாசகம் “அடுத்த வாரம் பார்த்தீர்களென்றால் நான் திரும்பி நிற்பேன்”. பின்புறத்தையே பார்த்து சூடானவர்கள் முன்புறத்தை காண கொலைவெறியோடு ஒருவாரம் காத்திருக்க நேர்ந்தது.

அவர்கள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. விளம்பரம் மாற்றப்பட்டு அந்தப் பெண் ஆடையில்லாமல் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டு வாசகம் இவ்வாறாக அமைந்தது “நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை என்றுமே மீறுவதில்லை”. வாசகத்துக்கு கீழே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது.

சமீபத்தில் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய புள்ளிராஜா ரக விளம்பரங்களுக்கெல்லாம் முன்னோடி இந்த விளம்பரம். இவ்வகை விளம்பரங்களை teaser ads என்பார்கள். நம் வசதிக்காக தமிழில் 'சீண்டல் விளம்பரங்கள்' என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம். இவ்விளம்பரத்தை உருவாக்கியவர் ஓகில்வி. இவ்விளம்பரம் சம்பந்தமாக ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பவர் “இதுபோன்ற விளம்பரங்களை என்னால் உலகின் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வெளியிடமுடியும், ஒரே ஒரு நாட்டைத் தவிர, அந்நாடு இந்தியா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போது தடைகோரப்பட்ட வோடபோன் நாய் விளம்பரத்தை எடுத்த விளம்பர நிறுவனம் ஓகில்வி உருவாக்கிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஓக்கே சீரியஸ் போதும், சமீபத்தில் என்னைக் கவர்ந்த விளம்பரங்களுள் ஒன்றை சொல்கிறேன். சன் டிடிஎச்-காக எடுக்கப்பட்டிருக்கும் விளம்பரம் தொழில்நுட்ப அளவிலும், உள்ளடக்க அளவிலும் மிக தரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. “வீட்டுக்கு வீடு சன் டைரக்ட்” என்ற வரிகளோடு தொடங்கும் கலக்கல் பீட் பாடல் சூப்பராக இருக்கிறது. பதிவு செய்த குரலை அப்படியே ஒலிபரப்பாமல் கம்ப்யூட்டரில் ஏதோ தில்லாலங்கடி வேலை செய்திருப்பதால் குரலில் கஞ்சா தடவிய போதை இருக்கிறது. தமன்னா இவ்வளவு அழகா? என்று வியக்க வைக்கிறது இவ்விளம்பரம். சினிமாவில் கூட யாரும் தமன்னாவை இவ்வளவு அழகாக காட்டியதில்லை. நடனம் இசைக்கு ஏற்றவாறு ஜாடிக்கேத்த மூடி மாதிரி செம ஃபிட் ஆக இருக்கிறது. விளம்பரத்தில் திருஷ்டி படிகாரம் மாதிரி பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகையான ரேணுகா வருகிறார். அவர் சம்பந்தப்பட்டவற்றை மற்றும் அகற்றி, இன்னமும் கொஞ்சம் தமன்னாவை எக்ஸ்ட்ராவாக காட்டினால் செம சூப்பராக இருக்கும்!!

இதுமாதிரி நிறைய விளம்பர டெக்னிக்குகளையும், விளம்பரங்களையும் பற்றி தமிழில் முழுமையாக அறிந்துகொள்ள “சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்” நூலை வாங்கி பயனடையுங்கள் :-)

8 ஜூன், 2009

குறிகள்!


பசுமரங்கள் சூழ்ந்த, நீலநீர் நிறைந்த அழகான ஏரி. நடுவில் ஒரே ஒரு இல்லம். அந்த இல்லத்தில் வசிப்பது ஒரு வயதான குருவும், குழந்தைப் பருவ சீடனும்.

குழந்தைப் பருவம் குதூகலப் பருவம். ஞானத்தை கற்பவனாக இருந்தபோதிலும் குழந்தைப் பருவத்துக்கே உரிய குதூகலம் அந்த சீடனுக்கும் இருந்தது. ஓடையில் ஓடும் ஒரு மீனைப் பிடிக்கிறான். அதன் உடலை கயிறால் கட்டி, கயிறின் மறுமுனையில் ஒரு கல்லை கட்டுகிறான். மீண்டும் ஓடையில் விடுகிறான். கல்லை இழுத்துச் செல்ல மீன் சிரமப்படுவதை கண்டு கைக்கொட்டி சிரிக்கிறான். இதே கதி ஒரு தவளைக்கும், ஒரு பாம்புவுக்கும். சீடனின் சேட்டைகளை மறைந்து நின்று கவனித்துக் கொண்டிருக்கிறார் குரு.

இரவானதும் சீடன் தூங்கிக் கொண்டிருக்கிறான். ஒரு பெரிய கல்லை எடுத்து சீடனின் முதுகோடு சேர்த்து கட்டி வைத்து விடுகிறார் குரு. காலையில் எழும் சீடக்குழந்தை கல் தனக்கு பாரமாக இருப்பதாகவும், கழட்டும்படியும் குருவிடம் கேட்கிறான். நேற்று நீ பாம்புக்கும், தவளைக்கும், மீனுக்கும் எதை செய்தாயோ, அது எவ்வளவு சிரமமானது என்பதை உணர்கிறாயா? அந்த மூன்று உயிரில் எது மரணித்தாலும் இன்று நீ முதுகில் சுமக்கும் கல்லை, இதயத்தில் வாழ்நாள் முழுக்க சுமக்க நேரிடும் என்கிறார்.

- நேற்று, வலைப்பதிவர்களுக்காக சென்னையில் திரையிடப்பட்ட ’ஸ்ப்ரிங், ஸம்மர், பால், விண்டர் அண்ட் ஸ்ப்ரிங்’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளில்...

* - * - * - * - * - * - * - *

ஏற்கனவே பலமுறை நாம் கேட்ட, வாசித்த நீதிதான் இது. எதை விதைக்கிறோமோ, அது வளரும். குரு அந்த சீடனுக்கு சாதாரண கல்லை தான் கட்டினார். நம்மைப் போன்றவர்கள் முதுகில் நியாயமாகப் பார்க்கப் போனால் பல்லாவரம் மலை அளவுக்கான பெரிய பாறையை வாழ்நாள் முழுக்க சுமக்க வேண்டும்.

ஒரு காமிக்ஸை வாசிப்பது மாதிரி இப்படம் சொல்லவரும் விஷயத்தை மிக எளிமையாக சொல்லிவிடுகிறது. அதையும் தாண்டி படத்தில் குறியீடுகள் இருக்கிறது, பனுவலியல் அராஜகத்துக்கு எதிரான காட்சிகள் இருக்கிறது, விஷயங்களை கட்டுடைக்கிறது என்று படம் பார்த்தவர்கள் ஏதேதோ சொல்கிறார்கள். பிரச்சினையில்லை.

படத்தின் ஒரு ‘பிட்’டில் உணர்ச்சிவசப்பட்டு படம் பார்த்துக்கொண்டிருந்த ஆசிஃப் அண்ணாச்சி, “அடடே. அருமையா படம் பிடிச்சிருக்காடே!” என்று மனமாரப் பாராட்டினார். அதே காட்சியை, அவருக்கு அடுத்த இருக்கையில் இருந்து பார்த்த ஹரன்பிரசன்னா, “அபச்சாரம். சிவ. சிவா” என்று தன்னுடைய (அ)திருப்தியை வெளிப்படுத்தினார். ஒரே காட்சிக்கான நேரெதிர் எக்ஸ்ட்ரீம் கார்னர்களில் வெளிப்படுத்தப்பட்ட ‘அபாரம்’, ‘அபச்சாரம்’ சொற்கள்தான் எனக்கென்னவோ இப்படத்துக்கான முக்கியமான குறியீடாகப் படுகிறது.

பிரதி நேரடியாக சொல்ல வரும் விஷயம், அதை உள்வாங்குபவனுக்கு, பிரதியை உருவாக்கிய ஆசிரியன் சிந்தித்த வகையிலேயே புரிந்தால் போதுமானது. மறைமுகமாக அழகியலோடு உணர்த்தப்படும் குறியீடுகள் உள்வாங்குபவனின் மனநிலைக்கும், கொள்கைக்கும் ஏற்ப வேறு வேறு வகைகளில் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே குறியீடுகள் ஏதும் தேவைப்படாமலேயே உள்வாங்குபவனை புரியவைக்கும் வகையில் எடுக்கப்படும் படம் உலகப்படம் என்பதாக எடுத்துக் கொள்ளலாம். பிரதியும் சாகவேண்டாம், ஆசிரியனும் சாகவேண்டாம், வாசகனும் செத்துத் தொலைக்க வேண்டாம்.

* - * - * - * - * - * - * - *

இப்பதிவின் தலைப்பில் ஏதோ வார்த்தைப்பிழை இருப்பதாக புத்தி சொல்கிறது. மனசு மறுக்கிறது.

அரசியல்!


ந்தக் காலத்தில் அவர் அதிரடியான பெயர் பெற்ற அரசியல்வாதி. பருவமழை பொய்த்து அந்த ஆண்டில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் வரலாற்றுப் பிரசித்திப் பெற்றது. அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்ததால் அவர் தொகுதி மக்கள் தினமும் அவர் வீடு தேடி வந்து தண்ணீருக்காக தாங்கள் படும் பாட்டை புலம்பிவிட்டு செல்வார்கள்.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசிப்பார்த்தார். முடிஞ்சவரைக்கும் தண்ணியை மக்களுக்கு கொடுக்கறோம். இதுக்கு மேல இருந்தாதானே தரமுடியும்? என்றார்கள். உடனே தன் சொந்தப் பணத்தை செலவு செய்து தொகுதி முழுக்க லாரிகளில் தினமும் சப்ளை செய்தார் அவர். ஒருநாள் இருநாள் அல்ல. அடுத்து மழைக்காலம் வந்து தண்ணீர் சப்ளை சீராகும் வரை கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு இந்தப் பணியை செய்துக் கொண்டிருந்தார்.

அரசாங்கத்தாலேயே முடியாத வேலையை தனிநபராக செய்த அவர் இன்றளவும் அப்பகுதி மக்களால் தெய்வமாக போற்றப்படுகிறார்.


முன்னாள் முதல்வர் அப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவரது முயற்சியில் கட்டப்பட்ட காய்கறி மார்க்கெட் அது. மார்க்கெட் வந்துவிட்டாலே அதைசார்ந்து நடைபாதை வியாபாரிகளும் உருவாகிவிடுவது வழக்கமான ஒன்று. அந்த மார்க்கெட்டை சுற்றிலும் நூற்றுக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் உருவாகிவிட மார்க்கெட்டில் கடை வைத்திருந்த கடை முதலாளிகள் பிரச்சினை செய்ய ஆரம்பித்தார்கள்.

மார்க்கெட்டை கட்டித் தந்த அந்த சட்டமன்ற உறுப்பினர் அப்போது முதல்வராக இருந்தார். நடைபாதை வியாபாரிகள் முழுக்க அவரது கட்சிக்காரர்கள் என்பதால் மார்க்கெட் முதலாளிகளால் இவர்களை அரசியல்ரீதியாக அசைக்க முடியவில்லை. அரசியல் செயலிழக்கும் நேரங்களில் அதிகாரிகளே முதலாளிகளுக்கு துணை. அப்பகுதி காவல்நிலைய அதிகாரிகளோடு பேசினார்கள். தரவேண்டியதை தந்தார்கள். இதைத் தொடர்ந்து தினமும் நடைபாதை வியாபாரிகள் மீது அதிகாரப்பூர்வமான வன்முறை தொடர ஆரம்பித்தது.

ஐந்துக்கும், பத்துக்கும் தினமும் நடைபாதைகளில் கூவிக்கூவி விற்பவர்கள் அனாதைகள் ஆனார்கள். முதல்வரோ அயல்நாட்டு சிகிச்சைக்கு சென்றிருந்தார். எதிர்பாராவிதமாக இவர்களுக்கு ஆதரவாக காவல்துறையை எதிர்த்து போராட்டம் நடத்த வந்தவர் அப்பகுதியில் இருந்த பிரபலமான எதிர்க்கட்சிக்காரர்.

பல பேரை சந்தித்தார். நடைபாதை வியாபாரிகளின் அவலத்தை கோட்டை வரை எதிரொலித்தார். காவல்துறை மேலதிகாரிகளை தினமும் பார்த்து பேசினார். ஒருவழியாக நடைபாதை வியாபாரிகளுக்கு நீதி கிடைத்தது. மார்க்கெட்டிற்குள் இருக்கும் கடைகளின் வியாபாரத்தை பாதிக்காதவாறு அவர்களுக்கு போதிய இடம் மார்க்கெட்டை சுற்றி வழங்கப்பட்டது.

கட்சி பாகுபாடு பார்க்காமல் தங்கள் வாழ்வாதாரத்துக்கு வகை செய்த அந்த எதிர்க்கட்சிக்காரருக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்ற ஆவலில் வியாபாரிகள் சிலர் அவரிடம் கேட்டார்கள். “அண்ணே உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க. செய்யுறோம்”. அவர் பதிலளித்தார். “ஃபில்டர் வைக்காத ஒரே ஒரு சிகரெட்டு மட்டும் வாங்கிக் கொடுங்கப்பா. ஒரு வாரமா பேசிப்பேசி தொண்டை வரளுது”.


ன்றைய துணைமுதல்வர் அவர். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வேளச்சேரி பகுதி மக்களுக்கு அவர் பக்கத்து வீட்டுக்காரர். வேளச்சேரி செக்போஸ்ட் அம்மன் கோயிலை தாண்டி அவரது கார் வந்துகொண்டிருக்கிறது. கன்னிகாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் சாவு விழுந்திருக்கிறது. வாசலில் பிணத்தை வைத்து உறவினர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். கார் கண்ணாடி வழியாக அவர் பார்க்கிறார். பால்மணம் மாறா குழந்தைகள் இருவரும் ஒரு இளம்பெண்ணும் கதறுவதை கண்டதுமே இறந்தவரின் மனைவியும், குழந்தைகளும் என்பதை உணர்கிறார். உடனே காரை நிறுத்தச் சொல்கிறார்.

அந்த சாவு வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொன்னவர் அந்த இளைஞரின் திடீர் மரணம் பற்றி கேட்டறிகிறார். விதவையான அப்பெண்ணுக்கு அவர் மேயராக இருந்த மாநகராட்சியில் பணி உறுதி கொடுக்கிறார். தன்னுடைய உதவியாளரிடம் சொல்லி உடனடி பண உதவியும் தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்கிறார். இறந்தவர் வீட்டு வாசலில் பறந்து கொண்டிருந்தது எதிர்க்கட்சிக் கொடி.


டந்த மாதம் செய்தித்தாள்களில் நீங்கள் வாசித்திருக்கலாம். ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் இருந்து 96 பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். இவர்களில் 21 பேர் எஸ்.சி/எஸ்.டி வகுப்பை சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இத்தேர்வில் வெல்லுபவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள். திடீரென எப்படி இது சாத்தியம்?

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெல்ல இலவசப் பயிற்சி மையம் ஒன்றினை ஒரு அரசியல்வாதி, கட்சி/சாதி/வர்க்க பாகுபாடு எதுவுமின்றி நடத்திவருவதே இதற்கு காரணம். இதே அரசியல்வாதி சென்னை வேளச்சேரி பகுதியில் தன் கட்சித்தலைவி பெயரில் ஒரு தரமான இலவச திருமண மண்டபத்தையும் மக்களுக்காக நடத்தி வருகிறார். இந்த திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணங்களில் பெரும்பாலும் அவருடைய எதிர்க்கட்சியை சார்ந்தவர்களுடையது. முதல் பத்தியில் நாம் சொன்ன அதே அரசியல்வாதி இவர்தான்.


ம் பதிவுகளில் மெசேஜ் இல்லை, மெசேஜ் இல்லையென்று நிறைய பேர் குறைபட்டுக் கொள்கிறார்கள். இந்தப் பதிவு சொல்லவரும் மெசேஜ் : அரசியல் உட்பட எதையுமே கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தியின் ஒற்றைப் பார்வையில் மட்டுமே அணுகக் கூடாது.

31 மே, 2009

புதுப்பேட்டை!


செல்வராகவன் இயக்கிய படமல்ல. சென்னையின் டெட்ராய்ட். அண்ணாசாலையிலிருந்து தாராப்பூர் டவர்ஸ் அருகே லெஃப்ட் அடித்து நேராக போனால் சிந்தாதிரிப்பேட்டை. பாலத்தில் இடதுபக்கமாக திரும்பினால் புதுப்பேட்டை. இருசக்கர வாகன நட்டு போல்ட்டிலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் காரின் ஸ்பேர் பார்ட்ஸ் வரை கிடைக்குமிடம்.

கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் மார்க்கெட் இது என்கிறார்கள். ஆயிரம் கடைகள் இருக்கிறது. எல்லாக் கடைகளுமே இரும்புக் குப்பைகளால் நிரப்பப் பட்டிருக்கிறது. இந்த பகுதிக்கு ‘ஆட்டோ நகர்' என்று பெயர் வைக்க வேண்டுமென்பது இப்பகுதி வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கை. கடை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ‘பாய்'கள். ஆங்காங்கே ‘இன்ஷா அல்லா' அதிகமாக கேட்கமுடிகிறது.

பொதுவாக இந்த இரண்டு பத்திகளையும் வாசிப்பவர்களுக்கு விவகாரமாக எதுவும் தெரிந்திருக்காது. பொல்லாதவன் படத்தில் தனுஷின் பைக் தொலைந்துவிடும் அல்லவா? உடனே தனுஷ் போய் தேடும் இடம் புதுப்பேட்டை. மண்ணில் புதைக்கப்பட்ட பல்சர் ஒன்றை காட்டுவார்களே? அந்த இடம் தான் புதுப்பேட்டை. சென்னையிலும், புறநகரிலும் எந்த பைக் தொலைந்தாலும் எல்லோரும் ஓடிப்போய் தேடுவது புதுப்பேட்டையில் தான். தேடிய எவருக்குமே இதுவரை பைக் திரும்ப கிடைத்ததாக சரித்திரமில்லை. பத்தே நிமிடத்தில் ஒரு பைக்கை பார்ட் பார்ட்டாக பிரித்து போடக்கூடிய வல்லுநர்கள் நிறைந்த இடம் இது.

சீப்பாக காருக்கும், டூவீலருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது வேண்டுமென்றால் தாராளமாக புதுப்பேட்டைக்கு போகலாம். செகண்ட் ஹேண்டில் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விலைக்கு எதுவேண்டுமானாலும் கிடைக்கும். அந்த காலத்து பேபி ஸ்கூட்டருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் கூட இன்னமும் இங்கே கிடைக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிற்கான கார் ஆடியோ செட்டை நம் நண்பர் ஒருவர் இங்கே இருபதாயிரத்துக்கு முடித்துக்கொண்டு வந்தார் என்றால் நம்ப கடினமாக தானிருக்கும்.

இங்கே ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொன்று ஸ்பெஷல். டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க வெங்கடாச்சல நாயக்கன் தெரு. லைட், இண்டிகேட்டர், மீட்டர் போன்ற எலக்ட்ரிக்கல் சமாச்சாரங்களுக்கு வெங்கடாச்சல ஆசாரி தெரு. கார், வேன் ஸ்பேர்களுக்கு ஆதித்தனார் சாலை. ஒட்டுமொத்தமாக பாடியே (சேஸிங் வகையறாக்கள்) வேண்டுமானால் கூவம் சாலை.

புதுப்பேட்டைக்குள் நுழைந்ததுமே ‘இன்னா சார் வோணும்? சொல்லு சார். எதா இருந்தாலும் கொடுத்துடலாம்' என்று எதிர்படும் எல்லா கடைக்காரர்களுமே சொல்லி வைத்தாற்போல கேட்பார்கள். நான் போன அன்று இன் செய்த சட்டையை எடுத்து விட்டேன், தலையை கலைத்து விட்டுக் கொண்டேன். வாயில் ஒரு மாணிக்சந்த் போட்டு, இல்லாத கடுமையை ஒரு ‘கெத்'துக்காக முகத்தில் வைத்துக்கொண்டேன். மூஞ்சை பார்த்து ஏமாளி என்று முடிவுகட்டிவிடக்கூடாது இல்லையா?

“சிடி டான் டேங்க் வேணும்ணா. இருக்கா?”

”நேரா போய் ரெண்டாவது ரைட் அடி”

ரெண்டாவது ரைட்டு ரொம்ப குறுகலானது. டூவீலர் போவதே கடினம். இருபக்கமும் ஏராளமான வண்டிகள் கடைகள் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும். தெரியாத்தனமாக ஒரு ஆட்டோக்காரர் உள்ளே நுழைந்துவிட்டாலும் போதும். செம்மொழியில் அர்ச்சனை கிடைக்கும். “த்தா.. பிஸ்னஸ் அவர்லே எவண்டா மயிரு மாதிரி வண்டியை உள்ளே எட்தாந்தது?” என்பார்கள்.

ரெண்டாவது ரைட்டு அடித்தால் இருபுறமும் பெட்ரோல் டேங்குகள் தோரணமாக கட்டிவிடப்பட்டிருந்தன. பல்சர், யூனிகார்ன் என்று லேட்டஸ்ட் ப்ரீமியர் பைக்குகளின் டேங்குகளும் கிடைக்கிறது. அப்படியே புத்தம்புதுசாக ஒரிஜினல் பெயிண்டின் கருக்குலையாமல். ஒவ்வொரு கடையாக ”டாங்க் இருக்கா?” என்று கேட்டால் “எண்ணாண்டே டான் டேங்க் இல்லை, ஆனா ஆறாவது கடையிலே இருக்கும்” என்று தன் சகப்போட்டியாளர்களுக்கே பிஸினஸ் பிடித்துக் கொடுக்கிறார்கள். ஆறாவது கடையில் ஒரு பாய் உட்கார்ந்திருந்தார்.

”சிடி டான் டேங்க் வேணும்னா. இருக்கா?”

“இருக்குண்ணா”

வண்டியை விட்டு இறங்கவே கொஞ்சம் பயமாகதானிருக்கிறது.

“டேங்கு காட்டுண்ணா”

“எறங்கி வாண்ணா. மேல இருக்கு. மாடிக்கு போ எடுத்து கொடுப்பாங்க”

வண்டியை ஓரமாக நிறுத்தி, சைட் லாக் போட்டால், ”சைட் லாக் போடாதே” என்கிறார். கொஞ்சம் தயங்கியதுமே புரிந்துகொண்டவராக “புதுப்பேட்டைலே மட்டும் எவன் வண்டியும் திருடுபோவாது!” என்றார்.

தயங்கியபடியே வண்டியை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மாடிக்கு சென்றேன். தரையே தெரியாத அளவுக்கு வண்டிகளின் ஸ்பேர் பார்ட்ஸ். மேலேயும் ஒரு பாய்.

“சிடி டான் டேங்க் வேணும்னே”

“இன்னா கலரு”

“பிளாக்”

ஒரு பையனை அனுப்பி “சாருக்கு ஒரு டாங்க் எடுத்துக் கொடு!” என்றார்.

பையன் உள்ளே எங்கேயோ அழைத்துப் போனான். சில படிக்கட்டுகள் ஏறி, சில படிக்கட்டுகள் இறங்கி சந்து மாதிரி போய்க்கொண்டே இருக்கிறது. கீழே விட்ட வண்டி என்னாகுமோ என்ற பயம் வேறு. ஒரு அறைக்கதவை திறந்து லைட் போட்டான். உள்ளே குறைந்தபட்சம் நூறு, நூற்றி ஐம்பது பெட்ரோல் டேங்குகளாவது இருந்திருக்கும். கவரில் சுற்றிவைக்கப்பட்ட ஒரு டாங்கை கொடுத்து “போய் அண்ணன் கிட்டே ரேட் பேசிக்கோ!” என்றான் அந்தப் பையன்.

“என் வண்டிலே வயலட் ஸ்டிக்கரு. இது பிரவுனா இருக்கே?”

“இங்கல்லாம் அப்படித்தான். கிடைக்கிறதை (?) தான் கொடுக்க முடியும்”

வேறு வழியின்றி அண்ணனிடம் போய் ரேட் பேசினேன்.

“எவ்ளோண்ணா”

“கொடுக்குறதை கொடு”

“பரவால்லை ரேட்டு சொல்லிக்கொடுண்ணா” - வெளியே நின்ற வண்டி என்ன கதியோ?

“ரெண்டாயிரம் கொடு”

“புதுசே அவ்ளோ தாண்ணா”

“புதுசு மூவாயிரத்து இருநூறு இன்னிக்கு ரேட்டு. எங்களாண்டியேவா தம்பி?”

நான் ஐநூறில் ஆரம்பித்து ஆயிரத்து நூறுக்கு வந்தேன். அவர் நூறு, இருநூறாக குறைத்துக் கொண்டே வர நான் இருபத்தைந்து, ஐம்பதாக ஏறிக்கொண்டே வந்தேன். கடைசியாக ஆயிரத்து இருநூறில் முடிந்தது. அச்சு அசலாக புது டேங்க். ஷோருமில் வாங்கியிருந்தால் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் ஆகியிருக்கும்.

டேங்கை எடுத்துக்கொண்டு வேகவேகமாக தாவிக்குதித்து என் வண்டிக்கு ஓடினால்.. நல்லவேளை எதுவும் ஆகவில்லை. கீழே கடையில் இருந்த பாய் புன்னகைத்தார்.

”வேறு எது வேணும்னாலும் வாங்க. ஊடு எங்கேருக்கு?”

“நந்தனம்னே, நன்றி. கெளம்புறேன்”

வண்டியை வெளியே எடுத்துக் கொண்டுவரும்போது தெருமுனையில் ஒரு புது ஸ்பெளண்டரை அக்கு அக்காக பிரித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்காலத்தில் எவனுக்காவது ஸ்பெளண்டர் டேங்க் வேண்டுமென்றால் பாய் கடையில் சகாய விலைக்கு கிடைக்கும்.

30 மே, 2009

கிம்-கி-டுக்!


தான் எடுத்த முதல் படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காட்ட விரும்பினார் அந்த இயக்குனர். பத்திரிகையாளர் பலரையும் தானே போன் போட்டு அழைத்தார். மூத்தப் பத்திரிகையாளர்கள் சிலரை நேரில் சென்றும் அழைத்தார். சாமானியத் தோற்றம் கொண்ட அந்த இயக்குனரை ஏனோ பத்திரிகையாளர்கள் அவ்வளவாக மதிக்கவில்லை. பத்திரிகையாளர் காட்சிக்கு வந்தவர்களும் கூட படம் பற்றி சுமாராகவே எழுதினார்கள்.

ஆனால் அதே படம் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, ‘எங்கள் கிம்-கி-டுக்’ என்று கொரிய பத்திரிகைகள் கொண்டாடின. அந்தப்படம் 1996ல் வெளிவந்த க்ரோகோடைல். சியோலின் ஹான் ஆற்றின் கரையில் வாழும் ஒருவன் தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண்ணை காப்பாற்றுகிறான். அவளோடு வன்புணர்வு கொள்கிறான். மோசமாக நடத்துகிறான். ஒருக்கட்டத்தில் இருவருக்குமிடையே அன்னியோன்யம் ஏற்படுகிறது. உறவுகளுக்கு இடையேயான முரணை இப்படம் வெகு அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது.

கிம்-கி-டுக்-கின் முதல் படத்துக்கு கிடைத்த சர்வதேச வரவேற்பு, அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகளை வாரி வழங்கியது. வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களை குறைந்த செலவில் தரமாக எடுக்கத் தொடங்கினார். 2000மாவது ஆண்டு வெளிவந்த அவரது திரைப்படமான ’தி ஐல்’ (The Isle) வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட, ஐரோப்பா கிம்-கி-டுக்கை தத்தெடுத்துக் கொண்டது.

யார் இந்த கிம்-கி-டுக்?

1960ல் பிறந்த கிம், ஒன்பது வயதாக இருந்தபோது அவரது குடும்பம் தலைநகர் சியோலுக்கு இடம்பெயர்ந்தது. பதினேழு வயதாக இருக்கும்போது பள்ளிப்படிப்பினை நிறுத்திக் கொண்டவர் ஆலைகளில் பணியாற்றத் தொடங்கினார். அதன்பின்னர் வயிற்றுப் பாட்டுக்காக பல வேலைகளை கிம் செய்யவேண்டியிருந்தது. ஒருக்கட்டத்தில் பாதிரியாராகும் எண்ணத்தில் தேவாலயம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

இலக்கின்றி வாழ்ந்தவர் கிம். திடீரென ஒருநாள் அதுவரை தான் சேமித்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு பிரான்சுக்கு பறந்தார். சிறந்த ஓவியரான கிம் தான் வரைந்திருந்த ஓவியங்களை பாரிஸ் தெருக்களில் பரப்பி விற்பனைக்கு வைத்தார். சொற்ப வருமானம் வந்தது. அதைவைத்து வயிற்றுப்பசியை தீர்த்துக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் தான் வாழ்க்கையிலேயே முதன்முதலாக திரையரங்கம் சென்று படம் பார்த்ததாக பின்நாளில் பேட்டியொன்றில் குறிப்பிடுகிறார். சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ் படம் பார்த்தபிறகு தூக்கமின்றி அவதிப்பட்டாராம்.

போன பாராவில் இலக்கின்றி வாழ்ந்தவர் இந்த பாராவில் தனக்கொரு இலக்கினை நிர்ணயித்துக் கொண்டு கொரியாவுக்கு திரும்புகிறார். நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினார். ’ஏ பெயிண்டர் அண்ட் க்ரிமினல் கண்டெம்ட் டூ டெத்’ என்ற அவரது படைப்புக்கு 93ஆம் ஆண்டு ’எஜூகேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்க்ரிப்ட் ரைட்டிங்’ நிறுவனத்தின் விருது கிடைத்தது. இதையடுத்து 94ஆம் ஆண்டில் கொரிய தயாரிப்பாளர் கவுன்சிலிடம் ‘டபுள் எக்ஸ்போஷர்’ என்ற படைப்புக்காக மூன்றாவது பரிசும், 95ஆம் ஆண்டில் ’ஜேவாக்கிங்’ என்ற படைப்புக்காக முதல் பரிசும் வென்றார். கிம்-கி-டுக்-குக்கு கொரிய சினிமா கதவினை அகலமாக திறந்து காத்திருந்தது.

’தி ஐல்’ படத்துக்குப் பிறகு ஐரோப்பாவில் ஒரு முக்கியமான படைப்பாளியாக கிம் கருதப்பட்டாலும், அவரது தாய்நிலத்தில் விமர்சகர்கள் கிம்மினை குதறிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு விலங்கென்றும், சைக்கோவென்றும், தருதலை படத்தயாரிப்பாளர் என்றும் தூற்றப்பட்டார். பத்திரிகையாளர்கள் நேரடியாகவே தங்கள் பத்திரிகைகளில் இதுபோன்ற வார்த்தைகளில் விமர்சிக்க, “இனி எந்த கொரியப் பத்திரிகையாளனுடனும் பேசப்போவதில்லை” என்று காட்டமாக சபதமெடுத்தார் கிம். வெகுவிரைவிலேயே அந்த சபதத்தை வாபஸும் வாங்கிக் கொண்டார்.

கலைப்பட லெவலுக்கு எடுத்துக் கொண்டிருந்ததால் கொரிய ரசிகர்கள் கிம்மை கண்டுகொள்ளாமலேயே இருந்தார்கள். 2002ல் வெளிவந்த ’பேட் கை’ திரைப்படம் கிம்மையும் கொரியாவின் வசூல்ராஜா ஆக்கியது. வசூலில் வென்ற படம் என்றாலும் தரத்தில் எந்த குறையையும் வைக்கவில்லை கிம். பெர்லின் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

அடுத்தடுத்து வெளியான படங்கள் சர்வதேச அங்கீகாரங்களை வென்று குவித்தாலும், ஏனோ ’பேட் கை’ அளவுக்கு கொரியர்களை கவரவில்லை. சமூகத்தின் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கையை யதார்த்தம் குன்றாமல் படமாக்குவது கிம்மின் பாணி. அமெரிக்க மோகத்தில் அலையும் கொரியர்கள் எதிர்பார்க்கும் ஃபேண்டஸி அவரிடம் குறைவு. ’ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர்.. அண்ட் ஸ்ப்ரிங்’ என்ற அவரது திரைப்படம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. 2004ஆம் ஆண்டு ’சமாரிடன் கேர்ள்’ திரைப்படம் பெர்லினிலும், ’3-அயன்’ வெனிஸிலும் சிறந்த இயக்கத்துக்கான விருதுகளை அள்ளியது.

மிகக்குறைவான வசனங்களோடு, விஷூவலாகவே படங்களை எடுப்பதை கிம் பாணியாக கொண்டிருக்கிறார். வசனங்கள் குறைவு என்பதாலோ என்னவோ அயல்நாட்டு ரசிகர்களை கிம் மிக சுலபமாக அடைகிறார். சர்வதேசநாடுகளில் கொரியாவின் சிறந்த இயக்குனராக கிம்-கி-டுக் மதிக்கப்பட்டாலும், சொந்தநாட்டில் சர்ச்சைக்குரியவராகவே பார்க்கப்படுகிறார். அடிக்கடி ஏதாவது எடக்குமடக்காக அறிக்கை விட்டு மாட்டிக்கொள்வது கிம்மின் வழக்கம்.

“ஏராளமான சர்வதேச விருதுகளை குவித்ததற்குப் பின்னால் கொரிய ரசிகர்களை சர்வதேச ரசனைக்கு மாற்ற முரட்டுத்தனமாக முயன்றேன். மக்கள் இதற்காக என்னை மன்னிக்க வேண்டும்” - கிம் விடுத்த ஸ்டேட்மெண்டுகளில் ஒன்று இது. கிம் இப்போதும் சொல்கிறார். ”என்னுடைய அடுத்தப்படம் கொரியாவில் திரையிடப்படாவிட்டாலும், எனக்கொன்றும் கவலையில்லை!”

பின்குறிப்பு : உலகப்படங்கள் பற்றியும், உலகப்பட இயக்குனர்கள் பற்றியும் பேச அப்படங்களை பார்த்தவர்களால் மட்டும்தான் எழுதமுடியும், பேசமுடியும் என்ற நிலை இன்றில்லை. தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் உலகம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. தகவல்களை பெறுவது இன்றைய தேதியில் டீக்கடைக்கு போய் டீ வாங்கிக் குடிப்பதைப் போல சுலபமானது. உலகப்பட ரசிகர்கள், வெறியர்கள் என்று ஃபிலிம் காட்டிவரும் பலரும் எப்படி எழுதுகிறார்கள் என்ற பரிசோதனையை நானே செய்துப் பார்த்ததின் விளைவுதான் மேற்கண்ட கட்டுரை. நான் கிம்-கி-டுக்-கின் ஒரு படத்தை கூட பார்த்ததில்லை. உலகப்படங்கள் குறித்த அறிமுகத்தை தமிழ்வாசகர்களுக்கு பெருமளவில் தந்துவரும் சாருவின் மூலமாகவே அவர் அறிமுகம். உலகப்படங்களை பார்க்க வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும் பொறுமையும், சூழலும் அமைவதில்லை.

என்னைப்போன்ற அறிவிலிகளுக்காக சென்னைப்பதிவர்கள் மாதம் ஒரு உலகப்படம் திரையிடும் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். முதல் படமாக கிம்-கி-டுக்கின் ’ஸ்பிரிங், சம்மர், பால், விண்டர்... அண்ட் ஸ்பிரிங்’ திரைப்படம் ஜூன் 7, ஞாயிறு அன்று சரியாக மாலை நான்கு மணிக்கு திரையிடப்படுகிறது. இடம் : ஸ்ரீ பார்வதி ஹால், எல்டாம்ஸ் ரோடு, சென்னை.

மேலும் விபரங்களுக்கு :
பைத்தியக்காரன் அவர்களின் விரிவான பதிவு!