18 ஆகஸ்ட், 2009

என் இனிய மானிட்டரே!


என் இனிய மானிட்டரே..

நாம் இருவரும் சந்தித்துக் கொண்ட முதல் நிகழ்வை இப்போது நினைத்தாலும் மனம் குஜாலாக இருக்கிறது. ஒரு சனிக்கிழமை நைட்டு எட்டுமணிக்கு பாரெங்கும் பீரும், வாந்தியுமாக, அவனவன் அடித்த சரக்கில் நாறிக் கொண்டிருக்க.. டாஸ்மாக் கடைக்காரன் ஒரு குவார்ட்டர் பாட்டிலை உருவி ஒரு கட்டிங்கை மட்டும் காலி பாட்டிலில் ஊற்றி தந்தான். உனக்கு நினைவிருக்கிறதா..?

வாழ்க்கையில் என் சம்பாத்தியத்தில் நான் வாங்கிய முதல் கட்டிங் நீதான் என்ற வகையில் உன் மீது எனக்கு அதிகப் போதை உண்டு.

நல்லதொரு சைட் டிஷ்ஷுடன் தான் நீ வந்தாய். மிளகு அதிகமாக போடப்பட்ட பொடிமாஸ்.. மிக காட்டாக காரம் தூவப்பட்ட நெத்திலி.. தொட்டாலே விரல்கள் நாறும் சாதா கோல்டு ஃபில்டர் என்று உன் செட்டப்பே அன்று முதல் என் போதைக்கு ஊறுகாய் ஆனீர்கள்.

அன்று முதல் நீயும் நானும் ஜெயலலிதா, சசிகலாவாக உடன் பிறவா சகோதரிகளாக போதையும், வாந்தியுமாக ஜோதி தியேட்டருக்கு போனதை இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் காஜூ ஏறுகிறது..

என் கை நடுங்கியபோதெல்லாம் உன்னை ராவாக அடித்து ஸ்டெடி ஆன நாட்கள் எத்தனை? எத்தனை? எத்தனை ஆண்டுகள் உன்னை மிக்ஸ் செய்யாமலேயே அடித்திருப்பேன். அனைத்தையும் இப்போது நினைத்தால் நான் எடுத்த வாந்திகளே எவனோ எடுத்த வாந்தியாக தோன்றுகிறது.

அனாயசமாக ஒரே நாளில் நாலு காட்சியும் பிட்டு படங்களை ஜோதி, பானு, கெயிட்டி, எஸ்.கே. தியேட்டர்களில் பார்க்க 210 ரூபாய் செலவழிக்க வைத்தது மானங்கெட்ட மானிட்டரான நீ தான் என்பதை நான் மறுப்பதற்கில்லை.. வேளச்சேரி நூறு அடி ரோடு அம்மன் ஒயின்ஸ் பார் இன்றைக்கும் எனக்கும் போதைதரும் நினைவுகளாக இருக்கிறது.

காலை எழுந்தவுடன் பாத்ரூம் செல்லும் முன்பு, நேற்று அடித்து மிச்சம் வைத்த கட்டிங்கால் வாய்கொப்பளித்ததை ஒருநாளும் தவறவிட்டதில்லை. உனக்கே தெரியும்.

எனக்கு துன்ன சோறு இல்லையென்றாலும்கூட ஒரு நாள்கூட கட்டிங் அடிக்காமல் இருந்ததில்லை.. அம்மன் ஒயின்ஸில் மானிட்டர் ஸ்டாக் இல்லையென்றால் மனம் துடித்துப்போய் தி.நகர் நக்மா ஒயின்ஸுக்கு ஓடியிருக்கிறேன்.

வெறும் டபுள் எக்ஸ் பிட்டுகளையே பார்த்து காஞ்சி போயிருந்த என்னை குதூகலிக்க வைக்க அவ்வப்போது பல ‘த்ரிபிள் எக்ஸ்’களையும் சேர்த்தே நான் பார்த்துக்கொள்ள நீ தான் உதவினாய். யோசித்துப் பார்த்தாயா..? இதையெல்லாம் வெளியில் சொன்னால், எனக்கு என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பது உனக்குத் தெரியுமா? இருந்தாலும் ‘வரவிருக்கும் புகழை’ நான் சமாளித்துக் கொள்கிறேன். எனக்கு வேறு வழியில்லை. என்னை மன்னித்துவிடு மானிட்டரே..

‘த்ரிபிள் எக்ஸ்’ ஒன்றா, இரண்டா? எதைச் சொல்வது..? இதோ பார் அந்த லிஸ்ட்டை..

மனிஷா கொய்ராலா என்ற பெயரில் எவனோ ஒரு கபோதி நூற்றி ஐம்பது ரூபாய் கறந்து ஒரு மொக்கை சிடி தந்ததை மறந்துவிட்டாயா?

ரிச்சா பலோட் ரியாலிட்டி ஷோ என்று கூறி ஒரு மொள்ளமாறி பத்தையாய் ஒரு நூறு ரூபாய் நோட்டை பிடுங்கி சென்றது கூடவா உனக்கு ஞாபகமில்லை?

லோக்கல் என்று கூறி ஒரு உராங் உடான் ஆப்பிரிக்காவின் கொடூர அனிமல் பிட்டு தந்தது உனக்கு நினைவில்லையா மானிட்டர் தம்பீ.. அந்தக் காலமெல்லாம் எங்கே போனது..?

இவை மட்டுமா? காண்டம் விட்டு காண்டம் வாங்குவது போல் பக்கத்து மாநிலமான கேரளாவில் போய் ‘சிட்டுக் குருவி லேகியங்களை’ சுட்டு வந்தேனே.. நினைவில்லை..

நாள் முழுவதும் குடித்து, குடித்து ஓடாய்த் தேய்ந்து போய் நானிருந்த வேளையில் குளிர் காற்றும், அதிக மழையும் எனக்கு ஒத்துக் கொள்ளாது என்பதனால் இரவில் உன்னை ராவாக மிளகு போட்டு அடித்து எனக்குப் பிடித்திருந்த சளியை விரட்டினேன். விடிந்த பின்பு மீண்டும் ஒரு பீர் அடித்து எனக்கு சளி பிடித்தது. மூக்கை உறிஞ்சி, உறிஞ்சி எனக்கு மூக்கே காணாமல் போனது. டாக்டர் செலவுக்காக அப்போது நான் ஆசை, ஆசையாக வாங்கி வைத்திருந்த மேட்டர் சிடிக்களை பிளாட்பாரத்தில் விரித்து மலிவுவிலைக்கு விற்றேனே..

இவ்வளவும் எதுக்காக? ஒரு கட்டிங் அடிக்கத்தான்.. “நான் ராவா ஃபுல் அடிச்சிடுவேனோன்னு பயமாயிருக்கு.. பீரை அப்படியே கல்ப்பா ஒரே கவுத்து கவுத்திடுவோனோன்னு பயமாயிருக்கு” என்று மணிரத்னம் பட டயலாக் போல நான் புலம்பி நிற்கவில்லை..

என் பலான வியாதிக்கு நான் மருந்தையும், மாத்திரைகளையும் வகை, வகையாக அருந்தினேன்.. ஒன்றா? இரண்டா? என்னைக் கழட்டிப் போட்டுவிட்டு கையில் பணம் கொடுத்தால்தான் ஆபரேஷன் என்று சொல்லி என்னை மிரட்டி நான் கட்டியிருந்த கோவணத்தையும் உருவிவிட்டானே அந்த ஜெயராஜ் தியேட்டருக்கு பக்கத்தில் இருந்த மருத்துவன்.. அந்தக் கண்றாவி காட்சியையும் பார்த்துவிட்டுத்தான் அந்த நிலையிலும் ஒரு கட்டிங் அடித்தேன்.. நானும் எனது வெட்கத்தை மறைத்து அதே கோலத்தில் ஒயின்ஷாப்புக்கு போயிருந்தேன். இதை எங்கே போய் சொல்வது?

நேற்றும் வழக்கமாக ஒயின்ஷாப்புக்கு வந்து ‘கட்டிங்’ அடித்துவிட்டு பொடிமாஸ் சாப்பிட்டேன். பொடிமாஸ் சாப்பிட்டதால் வாந்தி வராது என்று தைரியமாக இருந்தேன்.

நான் கட்டிங் அடித்த சில நிமிடத்தில் பார் முழுக்க ஒரு கெட்ட வாடை; கும்பியும், குடலும் கருகுவது போல்.. அக்கம் பக்கம் தேடினேன்.. டேபிளை முகர்ந்துப் பார்த்தேன் புரியவில்லை; தெரியவில்லை. குனிந்து எனக்கு பின்னால் பார்த்தேன். அரண்டு போய்விட்டேன்.. வாந்தி.. அலைஅலையாய் வாந்தி.. சுனாமி என்பார்களே அது போல என் வாய்க்குள் இருந்து வாந்தியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது எனக்கு தெரியாமலேயே. அடுத்தவன் எடுப்பதைப் பார்த்தாவுடன் நக்கலாக சிரிக்கும் அந்த வாந்தியை, இப்போது நானே எடுத்தவுடன் பயத்துடன் அலறிவிட்டேன்..

பதட்டத்தில், சிக்கனை கடிப்பதற்கு பதிலாக பக்கத்துச் சீட்டுக்காரனின் உதட்டை கடித்துவிட்டேன். ஈராக் மாதிரி அதகளப் பிரதேசமாயிற்றே நம்ம பாரு. பக்கத்து சீட்டுக்காரனின் உதட்டைக் கடித்ததுமே அவனவன் என்னைப் பார்த்து பயந்து வாயை (உதட்டை) மூடிக்கொண்டு ஓட ஆரம்பித்தான், மறக்காமல் அவனவன் பாட்டிலை எடுத்துக் கொண்டு.

சுண்டல் போட்டுக் கொண்டிருந்த முனியப்பன் ஓடிவந்து விசாரித்தான் என்ன ஆச்சியென்று. சொல்ல முடியவில்லை.. உதடு கடிபட்டவன் திரும்ப வர வேண்டும்.. அவனுடைய கிழிந்த உதடுக்கு எத்தனை தையல் போட்டார்கள் என்ற பதைப்பில் இருந்த எனக்கு 2 மணி நேரம் கழித்து ஓடோடி வந்த அவனைப் பார்த்து கதறியேவிட்டேன். அவனுக்கு வாய் இருந்த இடத்தில் உதடே இல்லை. அந்த பொறம்போக்கு அப்போதும் கட்டிங் அடிக்க வந்திருந்தான்.

இதுநாள்வரையில் அவ்வப்போது கட்டிங், கட்டிங்காக மட்டுமே அடித்துக் கொண்டிருந்த நான் இனிமேல் குவார்ட்டர், குவார்ட்டராக அடித்து போதை ஏற்றிக் கொள்வேன். இதற்காக உதடிழந்தவனின் தியாகத்தினை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்.

ஷகீலா! இனி என் போதைக்கு நீயே ஊறுகாய்..!

போதையுடன்
காண்டு கஜேந்திரன்

எப்படி கேட்பது?


அவளிடம் இதை எப்படி சொல்வது.. எப்படி கேட்பது என்பதில் அவனுக்கு நிறைய தயக்கம் இருந்தது. பிரம்மன் ஓவர்டைம் செய்து அவளை உருவாக்கியிருப்பான் போலிருக்கிறது. கயல்விழி என்ற பெயரைவிட அவளுக்கு பொருத்தமான ஒரு பெயரை அவளது அப்பனால் தேர்வு செய்திருக்கவே முடியாது. அவளது விழிகள் அலெக்சாண்டரின் போர்வாள் போல கூர்மையானது. பார்வையால் ஒரு வெட்டு வெட்டினாள் என்றால் எப்படிப்பட்ட ஆணும் இதயம் அறுந்து உயிரிழந்துவிடுவான்.

அவள் வேலை பார்த்த கவுண்டரில் இருந்த எல்லாப் பெண்களுமே கொள்ளை அழகு தான். இருந்தாலும் நிலவோடு நட்சத்திரங்கள் போட்டியிட முடியுமா? அவளுடைய உயிர்த்தோழி ஒருத்தி டைட்டானிக் கேட் வின்ஸ்லட் மாதிரியே இருப்பாள், நல்ல கலர், செம்ம கட்டை. அவள் இவளை 'கைல்' என்று அழைப்பதே ஸ்டைலாக இருக்கும். அவளிடம் தான் முதலில் 'இதை' கேட்க நினைத்தான். ஆனாலும் கயலைப் பார்த்த பின் வேறு எந்தப் பெண்ணிடமும் 'இதை' கேட்க வேண்டுமென்று அவனுக்கு தோன்றவில்லை.

யதேச்சையாக ஒரு நாள் கர்ச்சிப்பை மறந்துவைத்து விட்ட தினத்தில் தான் அந்த கடைக்கு கர்ச்சிப் வாங்க வந்தான் அவன். அப்போது தான் அவளைப் பார்த்தான். தினமும் அவள் வேலை செய்யும் துணிக்கடையை தாண்டிப் போகும்போதெல்லாம் அவளிடம் வெட்கத்தை விட்டு இதை கேட்டுவிட வேண்டும் என்று நினைப்பான். ஒரு நாகரிகமான பணியில் இருக்கும் கணவானான அவன் இதை நாலு பேர் எதிரில் கேட்டு அவள் ஏதாவது சொல்லி.. பொது இடத்தில் பிரச்சினை ஏதாவது வந்துவிடுமோ என்று அச்சப்பட்டான். கடைமுதலாளி வேறு பயில்வான் ரங்கநாதன் மாதிரி க்ரிப்பாக இருந்தார்.

அந்த பிரச்சினைகளை எல்லாம் பார்த்தால் 'இதை' தள்ளிப் போட்டுக் கொண்டே போகவேண்டும். எப்படியிருந்தாலும் இதை வேறு யாரிடமாவது கேட்கத்தான் போகிறோம், இவளிடமே கேட்டு விட்டாலென்ன? ‘அதை' அவளிடம் கேட்க ஒரு சுபமுகூர்த்த சுபதினத்தை குறித்துக் கொண்டான். காலண்டரில் நல்ல நேரம் பார்த்தான். மனதுக்குள் ‘தில்'லை லிட்டர் லிட்டராக ரொப்பிக் கொண்டான். அவனுக்கு பிடித்த கருப்பு - சிவப்பு டீஷர்ட்டை அணிந்துகொண்டான். பெண்கள் மையல் கொள்வார்கள் என்று சொல்லி விளம்பரப்படுத்தப்பட்ட நறுமண வஸ்துவை தாராளமாக உடலுக்கு உபயோகித்தான்.

அவன் குறித்து வைத்திருந்த நல்ல நேரத்திற்கு இன்னமும் அரைமணி நேரம் இருந்தது. டென்ஷனாக இருந்ததால் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். ஐந்து நிமிடத்தில் முடியும் கிங்ஸ், இவன் டென்ஷனில் உறிஞ்சு உறிஞ்சுவென்று உறிஞ்சியதால் மூன்றே நிமிடத்தில் காலியானது. ஸ்மெல் தெரியக்கூடாது என்று ஒரு மாணிக்சந்தையும் ஒரு பாஸ்பாஸ் பாக்கையும் வாங்கி மிக்ஸ் செய்து வாயில் நிரப்பிக் கொண்டான்.

நேராக கயல் வேலை பார்த்த அந்த துணிக்கடைக்கு போனான். நல்லவேளையாக பயில்வான் ரங்கநாதன் முதலாளி இல்லை. அன்று கடையிலும் கூட்டம் குறைவு. நேராக கயல் இருந்த கவுண்டருக்கு போனான். கயலுக்கு பின்னால் கண்ணாடி அடுக்குகளில் அடுக்கப்பட்டிருந்த ‘அந்த' துணிவகைகளை வெறித்துப் பார்த்தான். கயலின் அந்த கேட்வின்ஸ்லட் தோழி குறும்பாக பார்த்தாள். கயலிடம் மெதுவாக ”ம்ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தொலைவுக்கு நகர்ந்தாள்.

கயலின் முகமும் லேசாக நாணத்தால் சிவந்திருந்தது போல தெரிந்தது.

“என்ன சார் வேணும்?” கோல்டன்பிஷ் வாய் திறந்து பேசினால் கயல் பேசியது போலவே இருக்கும்.

“ம்ம்... வந்து.. வந்து”

“சொல்லுங்க சார்!”

“கயல்.. என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா?”

17 ஆகஸ்ட், 2009

சிறுகதை எழுதுவது எப்படி?


“சிறுகதை எழுதுவது எப்படி?”

இந்த கேள்வியை யாராவது பெருசுகளிடம் கேட்டால், “சுஜாதா புக் எழுதியிருக்கிறார். வாங்கிப்படி!” என்கிறார்கள். உண்மையில் அந்தப் பெருசுகள் அப்புத்தகத்தை படித்திருக்க வாய்ப்பேயில்லை என்று கருதலாம். ‘சிறுகதை எழுதுவது எப்படி?' என்பதே ஒரு சிறுகதைதான். அந்த சிறுகதை அடங்கிய சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புக்கு சூட்டப்பட்ட பெயர் அது.

”சுஜாதா சிறுகதை எழுத சொல்லித் தருகிறார்!” என்று யாராவது சொன்னால் பரலோகத்தில் இருக்கும் சுஜாதாவே அதை மன்னிக்க மாட்டார். சிறுகதை எழுதுவதை பாடமாக எல்லாம் சொல்லித்தர முடியாது என்று நம்பியவர் அவர். ஆனால் ஒரு தேர்ந்த வாசகன் நிறைய சிறுகதைகள் வாசிப்பதின் மூலமாக சிறுகதைகளை எழுதும் ஆற்றலை பெற்றிட முடியும். குறிப்பாக சுஜாதாவின் சிறுகதைகளை நிறைய வாசிக்கலாம்.

சுஜாதா எழுதிய காலத்தில் அவரை ஒரு கமர்சியல் ரைட்டராகவும் ஏற்றுக் கொள்ளப் படாமல், இலக்கிய எழுத்தாளராகவும் ஒத்துக் கொள்ளப்படாமல் திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்வின் பெரும்பகுதியை வாழ்ந்திருக்கிறார். உண்மையில் அவருக்கு இலக்கிய அந்தஸ்து என்பது கடைசிக்காலத்தில் தான் கிடைத்தது என்று நம்புகிறேன். அதிலும் ஒரு தலைமுறையே, ”தங்களை சுஜாதா பாதித்திருக்கிறார்” என்று ஒட்டுமொத்தமாக சொன்னதின் பின்னால்தான் வேண்டாவெறுப்பாக ஒப்புக் கொள்ளப்பட்டார். அதிர்ஷ்டவசமாக சுஜாதாவுக்கு வாழும் காலத்திலேயே இந்த அந்தஸ்து கிடைத்துவிட்டது. சாண்டில்யன் எல்லாம் ரொம்ப பாவம். இப்போதும் கூட அவரை சரோஜாதேவிரக எழுத்தாளராகவே பல இலக்கிய விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

எதையோ பேசவந்து எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன். எதை பேசவந்தேன்? ஆங்.. சிறுகதை எழுதுவது எப்படி?

சுஜாதா கருதியதைப் போல யாரும் விரல் பிடித்தெல்லாம் சொல்லித் தந்துவிட முடியாது. ஆனால் இப்போது பத்திரிகைகளில் எழுதி பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்களை விட பல திறமையான கதை சொல்லிகள், தங்கள் திறமையை அறியாமலேயே ஆயா வடை சுட்டக் கதையை தினுசு தினுசாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி வருகிறார்கள். நேரமும், வாய்ப்பும் வாய்த்தவர்கள் இன்று இணையங்களில் எழுதுகிறார்கள். எதை எழுதவேண்டும் என்று தெரிந்தவர்கள் கூட எப்படி எழுதுவது என்று தெரியாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு என்னையே எடுத்துக் கொள்ளலாம். நான் ஒரு நல்ல கதைசொல்லி கிடையாது என்பது எனக்கே தெரியும். அப்படிப்பட்ட நான் கூட தைரியமாக கதை என்று எதையோ எழுதி, இணையங்களில் சில பரிசுகளை கூட வாங்கிவிட்டேன். ஒரு சில கதைகள் பத்திரிகைகளிலும் பிரசுரம் ஆகிவிட்டது என்பதெல்லாம் பெருங்கொடுமை. இப்பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் என்னைவிட மிகத்திறமையான கதைசொல்லியாக இருக்கலாம். உங்களிடம் நிறைய தீம் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட ஒரு கதையை எந்த வடிவில் எழுத்தில் வழங்கலாம் என்பதில் மிகப்பெரிய குழப்பம் உங்களுக்கு மட்டுமல்ல, பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் பலருக்கும் இருக்கிறது.

ஒரு நல்ல காஃபியில் டிக்காஷனும், பாலும் சரியான விகிதத்தில் கலந்திருக்க வேண்டியது அவசியம். அது போலவே ஒரு நல்ல சிறுகதையில் கதையின் உள்ளடக்கமும், அந்த உள்ளடக்கத்தை நல்ல முறையில் வாசகனுக்கு கையளிப்பதற்கான பொருத்தமான வடிவமும் மிக முக்கியமானது.

தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக சுயநலமானவர்கள். தாங்கள் கற்ற வித்தைகளை, அனுபவத்தில் அறிந்த நுணுக்கங்களை அவ்வளவு சுலபமாக மற்றவர்களிடம் பகிர்ந்துவிட மாட்டார்கள். அரிதிலும் அரிதாக ஒருசிலர் பகிர்ந்துக் கொள்வார்கள். தமிழின் மிக முக்கியமான நான்கு எழுத்தாளர்கள் சிறுகதைப் பட்டறை ஒன்றினில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை, தாங்கள் கற்றவைகளை, அடிபட்டு தெரிந்துகொண்டவைகளை பகிர்ந்துக்கொள்ளப் போகிறார்கள் என்பது எவ்வளவு அருமையான விஷயம்?

தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவரான சுகுமாரன் உலகச் சிறுகதைகள் குறித்தும், தான் எப்படி சிறுகதைகள் எழுதுகிறேன் என்று சிறுகதை மற்றும் நாவலாசிரியரான யுவன்சந்திரசேகரனும், சிறுகதைகளுடனான தனது அனுபவங்கள் குறித்து சிறுகதை ஆசிரியரும், சினிமா வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தியும், 'சிறுகதை எழுதுவது எப்படி?' என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளரும், கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியருமான பா.ராகவனும் பேச இருக்கிறார்கள்.

இந்நிகழ்வுக்காக சுஜாதாவின் ‘சிறுகதை எழுதுவது எப்படி?' கதையில் வருவதைப் போலவே இதற்காகவே ஒரு பட்டறையை நடத்த 'உரையாடல் கலை இலக்கிய அமைப்பு' முன்வந்திருக்கிறது. ஆனால் சுஜாதா கதையின் இறுதியில் வருவதைப் போல உங்கள் வீட்டு அண்டா, குண்டாவையெல்லாம் உரையாடல் அமைப்பினர் ஆட்டை போட்டுக் கொண்டு போக மாட்டார்கள் என்பதற்கு நான் நூறு சதவிகித உத்தரவாதம் தருகிறேன்.

சிறுகதைப் பட்டறை குறித்த முழுவிவரங்கள் பைத்தியக்காரன் அவர்களின் இப்பதிவில் இருக்கிறது. க்ளிக்கிப் பார்த்து, மறக்காமல் உங்களது பெயரை முன்பதிவு செய்துக் கொள்ளவும். இப்போது கந்தசாமி படத்தின் முன்பதிவை விட இந்த சிறுகதைப் பட்டறைக்கான முன்பதிவே பரபரப்பாக நடந்து வருகிறது.

அமைப்பாளர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு பலதரப்பட்ட விஷயங்களை இணைத்து தொகுப்பாக வழங்குவதாக கூறியிருக்கிறீர்கள். இந்தத் தொகுப்போடு தமிழர் தந்தை ஆதித்தனார் எழுதிய ‘இதழாளர் கையேடு' நூலையும் வழங்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

16 ஆகஸ்ட், 2009

ரகசிய சிநேகிதியும், கள்ளக்காதலனும்!


"ஹலோ யாரு பேசுறது"

"ஹலோ எங்கிட்டே பேசிக்கிட்டிருக்கிறது ரகசிய சிநேகிதியா?"

"ஆமாங்க நான் ரகசிய சிநேகிதி தான் பேசுறேன். நீங்க யாரு"

"என் பேரைச் சொல்ல விரும்பலீங்க. என் ப்ரெண்ட்ஸ்ஸெல்லாம் என்னை தோஸ்த்துன்னு கூப்பிடுவாங்க. நீங்களும் அப்படியே கூப்பிடுங்க"

"சரி தோஸ்த். உங்க காதலி பேரு என்ன? எவ்வளவு நாளா காதலிக்கிறீங்க. இப்போ உங்க காதல் எந்த கண்டிஷன்லே இருக்கு?"

"என் காதலியோட பேரை சொல்ல விரும்பலீங்க. அவங்களுக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆயிடுச்சி"

"ஸோ பிட்டி. என்ன ஆச்சி? எப்படி பிரிஞ்சீங்க? ஏன் பிரிஞ்சீங்க?"

"என் காதலியோட அப்பா ஒரு அரசியல் கட்சி பிரமுகர். எந்தக் கட்சின்னு சொல்ல விரும்பலை மேடம். அவரால என் உயிருக்கு ஆபத்து வருமுன்னு என் காதலியே என்னை பிரிஞ்சி வேற கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க"

"அடப்பாவமே. உங்க காதலியை கடைசியா எப்போ பார்த்தீங்க?"

"இப்பக்கூட அவங்க கூட தியேட்டர்லே தான் இருக்கேன் மேடம். கல்யாணத்துக்கு அப்புறமா கூட எங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்கு"

"அய்யய்யோ. இது அவங்க ஹஸ்பெண்டுக்கு தெரியுமா?"

"அது எப்படிங்க தெரியும்? எனக்கு என்ன வருத்தம்னா அவங்க எனக்கு கிடைக்காம போயிட்டாங்களேங்கிறது தான். அப்படியும் சொல்ல முடியாது. இப்பவும் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சிக்கிட்டு தான் இருக்கோம்"

"இண்ட்ரஸ்டிங்.... உங்களுக்குள்ளே வேற என்னவெல்லாம் இருக்குன்னு சொல்ல முடியுமா?"

"அதெல்லாம் வெளிப்படையா சொல்ல முடியாதுங்க"

"உங்களுக்கு எப்போ கல்யாணம்"

"எனக்கும் கல்யாணம் சீக்கிரமா நடக்கப் போவுதுங்க. பொண்ணெல்லாம் கூடப் பார்த்தாச்சி"

"தேங்க்ஸ் பார் யுவர் காலிங் தோஸ்த். உங்க காதலியோட நீங்க லைப்பை என்ஜாய் பண்றதுக்கு இந்த ரகசிய ஸ்நேகிதியோட வாழ்த்துக்கள். இப்போ உங்களுக்கு புடிச்ச ஒரு லேட்டஸ்ட் சாங் வந்துக்கிட்டே இருக்கு"

- வெட்டியாக இருந்த பொழுதில் ஏதோ ஒரு எஃப்.எம்.மில் எப்பொழுதோ கேட்டது!

15 ஆகஸ்ட், 2009

பொக்கிஷம்!


தமிழ் சினிமாவை இவர்தான் தாங்கிப் பிடிக்கப் போகிறாராம். எவனுக்குமே படமெடுக்கத் தெரியாது. இவருக்கு மட்டும்தான் சர்வதேசத் தரத்தில் படம் எடுக்கத் தெரியுமாம். இவர் ஒருவர் தான் மேதாவி. மற்றவெனெல்லாம் வெத்து என்று கர்வமாகப் பேசித்திரியும் சேரனுக்கு அடுத்தடுத்து ஆப்பு அடித்துவிட்டார்கள் தமிழ் ரசிகர்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயக்கண்ணாடி. இப்போது பொக்கிஷம். பாவம், தயாரிப்பாளர் ஜபக்கின் லுங்கிதான் ஒட்டுமொத்தமாக உருவப்பட்டிருக்கிறது. பெரிய இயக்குனர் நடித்து, இரண்டு ஆண்டுகளாக பிரேம் பை பிரேமாக செதுக்கப்பட்டிருக்கும் படம் முதல்நாளே தியேட்டர்களில் காத்தாடுகிறது. படம் ஆரம்பித்ததில் இருந்தே ரசிகர்கள் ஒரு காட்சியைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் நெளிந்துக்கொண்டே இருக்கிறார்கள். இடைவேளையில் படத்தின் கோராமை தாங்காமல் ஓடியவர்களை பார்த்திருக்கிறோம். இடைவேளைக்கு முன்பே துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

சேரன் தன் காதலி பத்மபிரியாவுக்கு கடிதம் எழுதுகிறார். பத்மபிரியா பதிலுக்கு கடிதம் எழுதுகிறார். அந்த பதில் கடிதத்துக்கு சேரன் இன்னொரு பதில் கடிதம் எழுதுகிறார். பதில் கடிதத்துக்கு மறுபடியும் பதில். ஒவ்வொரு கடிதக் கருமத்தையும் முழுமையாக சேரனும், பத்மபிரியாவும் படிக்கிறார்கள். இப்படியாக ஒரு இருபது, முப்பது கடிதம் முழுமையாக படிக்கப்படுகிறது. இதுதான் படம். ஐம்பது ரூபாய் கொடுத்து படம் பார்க்க தியேட்டருக்கு வருபவர்கள் எல்லாரும் கேணைப்பசங்கள் என்று படமெடுக்கும் போதே சேரன் முடிவெடுத்து விட்டார் போலிருக்கிறது.

இந்த கருமாந்திரப் படத்துக்கு எதற்கு கல்கத்தா, எதற்கு 70 காலக்கட்டம், எதற்கு கம்யூனிஸ்ட், எதற்கு முஸ்லிம், எதற்கு மலேசியா என்று புரியாமலேயே சீத்தலைச் சாத்தனார் மாதிரி தலையை பிய்த்துக் கொண்டு சாக வேண்டியிருக்கிறது. தயாரிப்பாளரின் பணத்தில் சேரன் மஞ்சக் குளிக்க மலேசியா என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் படம் பார்க்கும் எந்தத் தயாரிப்பாளரும், 'சேரனை வைத்து இனி படமெடுக்க மாட்டேன்' என்று ஏ.வி.எம். பிள்ளையார் கோயிலில் சத்தியமாக சத்தியம் செய்வார்கள். 'ஆட்டோகிராப்' வெளிவந்தபோது உலகத்தரத்தில் ஒரு தமிழ்படம் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய தமிழ்ரசிகர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் அடுத்தடுத்து காறி உமிழ்ந்துக் கொண்டு வருகிறார் சேரன். சேரனுக்கு இப்போது உடனடித் தேவை இன்னொரு ‘வெற்றிக் கொடி கட்டு', ஆட்டோகிராப் பார்ட்-3 அல்ல என்பதை யாராவது அவருக்கு எடுத்துச் சொன்னாலும் ஆணவமும், அகம்பாவமும் நிறைந்த அவரது மனசின் ஈகோவுக்கு முன்பாக எடுபடப் போவதில்லை.

இந்தப் படம் பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவதை விட, பன்றிக்காய்ச்சல் வந்து செத்துப் போகலாம். படத்தை முழுவதுமாகப் பார்ப்பவர்களை ஆம்புலன்ஸில் அள்ளிப் போட்டுக் கொண்டுப் போகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.